சதகம் -சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் -1

நாஞ்சில் நாடன்
முந்தைய பகுதிகள்: https://nanjilnadan.com/category/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/
சதகம்
சதம் எனில் நூறு. சதம் எனும் சொல் சம்ஸ்கிருத மொழிச் சொல் என்கிறார் பேராசிரியர் அருளி. சதமானம், சதவீதம் எனும் சொற்கள் அதில் பிறந்தவை. நூறு வயதானவருக்கு சதாபிஷேகம் செய்வார்கள். தற்போது அது எண்பது வயதில் நடக்கிறது. ஒரே நேரத்தில் நூறு செயல்கள் ஆற்றுபவரை சதாவதானி என்பர். கோட்டாறு சதாவதானி செய்குத் தம்பி பாவலர் எனும் மேதையைச் செம்மொழித் தமிழ் கூறு நல்லுலகம் காணாமற் போக்கி விட்டது.
சதகம் எண்பது நூற்றகம் என்கிறார் அருளி ஐயா. நூறு பாடல்களைக் கொண்ட நூல் சதகம் என்றழைக்கப்பட்டது. சதம் எங்ஙனம் சதகம் ஆயிற்று என்பீர் உடன் தானே! இருங்கள், வருகிறேன்!
‘கொங்கு மண்டல சதகம்’ நூலின் உரையாசிரியர், முனைவர் ந. ஆனந்தி தனது முன்னுரையில் இது பற்றித் தகவல் தருகிறார். “சதம் எனும் சொல்லின் இடையில் -க- என்றொரு எழுத்துக் கூடி சதகம் என்றாகின்றது. இடையில் -க- எனுன்று ஓர் எழுத்து கூடி வருதலை, வடமொழியில் ‘கப்ம்பிரத்யயம் என்பர். ‘பாலன்’ எனும் சொல் ‘க’ப்பிரத்யயம் பெற்றுப் ‘பாலகன்’ என்று ஆனது போல், சதம் என்ற சொல்லும் ‘க’ப்பிரத்யாம் பெற்றுச் சதகம் என்றாகின்றது”.
எனக்கொன்று தோன்றுகின்றது. அப்பளம் எனும் தீந்தமிழ்ச் சொல்லை நாங்கள் பப்படம் என்போம். இரண்டும் சில தன்மைகளில் வேறுபட்டவை என்றாலும். மலையாளிகளும் பப்படம் என்பார்கள். சிலர் அதனையே பற்படம் என்பர். மேலும் சிலர் அதனை பற்படகம் என்பதுண்டு. இதே சூத்திரம்தானா என்று யாரேனும் ஆய்ந்து சொல்லலாம். அதுபோல் வடகம் எனும் சொல் திரிந்து வடாம் ஆயிற்றா அல்லது வடாம் எனும் சொல் ‘க’ப்பிரத்யயம் பெற்று வடகம் ஆயிற்றா என்பதனையும்.
‘உள்ள சோலியையே ஒழுங்காப் பார்க்க ஆளில்லை’ என்று யாரோ முனகுவதும் கேட்கிறது.
அகப்பொருள் அல்லது புறப்போருளை அடிப்படையாகக் கொண்டு, ஏதாவது ஒரு பொருள் மேல் நூறு பாடல்களால் அமைவது சதகம் என்பது பொது விதி. விதிகளும் மீறல்களும் இலக்கியத்துக்கு முரணானவை அல்ல.
தமிழில் சதகம் எனும் இலக்கிய வகை எழுவதற்குச் சில நூற்றாண்டுகள் முன்னரே, வடமொழியில் சதகம் எனும் இலக்கிய வகை தோன்றி இருந்தது. ‘வடமொழியில் உள்ள சதகங்கள் தர்மம், காமம், மோட்சம் ஆகிய பொருட்களை விளக்கி, நூறு சுலோகங்களால் தனித்தனியே அமைக்கப்பட்டவை. தர்மத்தைக் கோரும் சதகங்கள் நீதி சதகங்கள் என்றும் காமத்தைக் கூறும் சதகங்கள் சிருங்கார சதகங்கள் என்றும் மோட்சத்தைக் கூறும் சதகங்கள் வைராக்கிய சதகங்கள் என்றும் பெயர் பெற்று விளங்குகின்றன. பெருங்கவிஞன் பர்த்ருஹரி எழுதிய நீதி சதகமும் சிருங்கார சதகமும் வைராக்கிய சதகமும் கி.பி. ஆறாம் நூற்றாண்டாகும் என்கிறார் முனைவர் ச. ஆனந்தி.
மகாகவி பர்த்ருஹரி, காளிதாசனுக்கு இணையானவர். ஆனால் காளிதாசனைக் கேட்டிருக்கும் தமிழன் பர்த்ருஹரியைக் கேட்டதுண்டா என்று தெரியவில்லை. காளிதாசனின் ரகுவம்சம், மேக சந்தேசம், என்பனவற்றைத் தாண்டி எம்.கே.தியாகராஜா பாகவதரின் காளிதாஸ் எனும் திரைப்படமும் காரணமாக இருக்கலாம்.
பர்த்ருஹரியின் ‘சுபாஷிதம்’ எனும் நூல் 2005-ல் வடமொழியில் இருந்து தமிழுக்கு வந்துள்ளது. வெளியீட்டாளர், இது போன்ற நூல்களைத் தேடித் தேடிப் பதிப்பிக்கும் நண்பர் நடராஜன், சந்தியா பதிப்பகம். மொழிபெயர்ப்பாளர் ராஜபாளையத்தைச் சேர்ந்த கவிஞர் மதுமிதா. பன்மொழிப் புலவர் மூ.கு. ஜகன்னாத ராஜா அளித்துள்ள நுட்பமான தகவல்கள் கொண்டது. பர்த்ருஹரி எனும் தலைப்பில் மதுமிதா எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரை, காளிதாஸ் போன்று பர்த்ருஹரி என்று திரைப்படம் ஒன்று எடுக்கும் அளவுக்கு சுவாரசியமானது.
நீதி சதகம், சிருங்கார சதகம், வைராக்கிய சதகம் என மூன்று சதகங்கள், முன்னூறு பாடல்கள் கொண்டது ‘சுபாஷிதம்’. சுபாஷிதம் எனில் நல்மொழிகள் என்று பொருள் என்றும், சுபாஷித த்ரிசதி, சுபாஷித சதகத்ரயம் என்று இந்நூலுக்கு மாற்றுப் பெயர் உண்டென்றும் அறிகிறோம். சதகத்ரயம் எனில் மூன்று சதகங்கள் என அறியலாம். சித்தர் பாடல்களில் ‘பர்த்ருஹரியின் மெய்ஞானப் புலம்பல்’ பாடிய பட்டினத்தடிகளின் சீடரும் மகாகவி பர்த்ருஹரியும் ஒன்றல்ல என்கிறார் மதுமிதா.
வடமொழியில் இருந்து சமீபத்தில் மொழிபெயர்பாகித் தமிழில் வந்திருப்பதாலும், அந்த நூலின் முக்கியத்துவம் கருதியும், இந்தக் கட்டுரை சதக இலக்கியம் பற்றியது என்பதாலும் ‘சுபாஷிதம்’, நவீன வாசகர் அறிந்து கொள்ளுதல் நன்று என்பதாலும் சில பாடல்களை – மதுமிதா மொழிபெயர்ப்பில் – சொல்லிச் செல்லலாம்.
பர்த்ருஹரியின் பாடல் ஒன்று, சில பதிப்புகளில் நீதி சதகத்திலும் சில பதிப்புகளில் வைராக்கிய ச்தகத்திலும் காணப்படுவதாகக் கூறும் மதுமிதா, தன்னடைய மொழிபெயர்ப்பின் சதகங்களில் அந்தப் பாடலைச் சேர்க்கவில்லை என்று கூறி முன்னுரைக் கட்டுரையில் அதனைத் தனியாகத் தந்துள்ளார். பாடல் சுவாரசியமானது.

நான் எப்பொழுதும்
யாரை என்னுடையவளென
நினைத்துக் கொண்டிருக்கிறேனோ
அவள் என்னை விரும்பவில்லை
அவள் அதிகமாக
யாரை நேசிக்கிறாளோ
அவன்
வேறொரு பெண்ணை
விரும்புகிறான்
என்னிடம் மகிழ்ச்சி காண்கிறாள்
வேறொரு பெண்
இந்தப் பெண்ணையா
நான் விரும்பும் பெண்ணையா
அவள் விரும்பும் அவனையா
என்னையா
அல்லது மன்மதனையா
இதற்கு
யாரை
நொந்து நிந்திப்பது….!
பர்த்ருஹரி காலம்தொட்டு இன்றைய மெகாசீரியல் காலம் ஈறாக இதுதான் ஆண் பெண் சிக்கல் போலும்.
முழுக் கட்டுரையையும் படிக்க: http://solvanam.com/?p=20705

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in "பனுவல் போற்றுதும்", அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to சதகம் -சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் -1

 1. george singarajah சொல்கிறார்:

  its great.good reading.thanks.

 2. துளசி கோபால் சொல்கிறார்:

  அட! எங்க மது!!!!!

 3. rathnavelnatarajan சொல்கிறார்:

  அருமை ஐயா.
  நன்றி.

 4. N. Chandrakumar சொல்கிறார்:

  நல்ல பதிவு…. மேற்கண்ட கவிதைக்கு மூலகாரணம் அவர்தன் வாழ்க்கையே இருந்திருக்குமோ என்கிறபடியான தகவல் கீழே …..
  /// from http://www.sangatham.com/learning/subhashita-trishati-1.html
  பர்த்ருஹரி யார்?

  பர்த்ருஹரி நமது சரித்திரத்தில் ஒரு அரசராகவும், கவிஞராகவும், துறவியாகவும் காணப்படுகிறார். இவர் உஜ்ஜயினியை தலைநகராகக் கொண்டு அரசாண்ட சக்கரவர்த்தி விக்கிரமாதித்தியனின் மூத்த சகோதரர். உண்மையில் இவரே அரசனாக முதலில் இருந்தார். அப்போது இவருடைய ராணி பிங்கலை என்பவளிடம் பேரன்பு கொண்டு அவளுடனேயே எப்போதும் பொழுதை செலவிட்டு வந்தார். இந்நிலையில் இவருக்கு அபூர்வமான பழம் ஒன்று கிடைக்க அதைத் தன் ஆசை மனைவியிடம் கொடுத்தார். அவளுக்கோ அரண்மனையில் குதிரை லாயத்தில் இருந்த ஒருவனிடம் ஆசை. அவள் அவனிடம் கொடுக்க, அவனுக்கு ஒரு வேசியிடம் இச்சை. அவன் பழத்தை அவளிடம் கொடுத்து விடுகிறான். அந்த வேசி பழத்தை அரசனுக்கே அற்பணிக்கிறாள். இறுதியில் உலகியலில் வெறுப்புற்று பர்த்ருஹரி மகாராஜன் தன் பதவியை துறந்து, தம்பிக்கு முடிசூட்டி விட்டு துறவியாகி விடுகிறார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s