படையும் பாடையும்

தமிழாசிரியர் என்றாலே பலருக்கும் இளக்காரம் என்று மனக்குறுகலுடன் நடந்தார். எல்லோருமா சீட்டுக் கம்பனி நடத்துகிறார்கள், பால் வியாபாரம் செய்கிறார்கள், வட்டிக்கு விடுகிறார்கள், புடவை வணிகம் செய்கிறார்கள், அரசியல்காரர்களுக்கு எடுபிடி வேலை செய்கிறார்கள்? நவீன இலக்கியம் வாசிக்கிற, பயணம் போகிற, மாணவர் நலனில் அக்கறை செலுத்துகிற நல்லாசிரியர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்? விருது கிடைத்தால்தான் நல்லாசிரியரா?………(நாஞ்சில்நாடன்)

கற்றாரே காமுறுவர்’ என்று எண்ணிக் கொள்வார். அவர் நடக்கும் அகலமுள்ள குறுக்கு வீதிகளில் இரு சாரியிலும் கால்பங்கு வீடுகள் பூட்டிப் புதர் மண்டிக் கிடக்கும். பருவ காலங்களில் காம்பவுண்ட் சுவரோரம் சுண்டைச் செடிகள் கொத்துக் கொத்தாய்க் காய்த்துக் கிடக்கும். பொழுது இருக்கும்போது, எவர் எதிர்ப்பும் இன்றி பறித்துப் பைக்குள் போட்டு வீட்டுக்குக் கொண்டு செல்வார். பச்சை சுண்டைக்காய் அவியல், பொரியல், தீயல் வைத்தது போகவும் மீந்தவை டப்பாக்களில் சுண்டைக்காய் வற்றலாகக் கிடக்கும். சிலசமயம் துவையல் அரைக்கவும், வடகம் போடவும் பிரண்டைச் செடி பிடுங்கிப் போவார். கொஞ்சம் துழாவினால் சுக்கட்டி என்றழைக்கப்படும் மணத்தக்காளிச் செடிகள் பிடுங்கிப் போனால் ஒரு துவரனுக்கோ கூட்டுக்கோ ஆகும். காம்பவுண்ட் சுவரோரம் நிற்கும் தென்னைகளில் இருந்து வீழும் நெற்றுக் காய்களும் சுவரோரம் கிடக்கும்.

இன்னும் கால் பங்கு வீடுகளில் வெளி விளக்கு மட்டும் இராப் பகலாக எரிந்து கொண்டிருக்கும், திருடர்களுக்குப் போக்குக் காட்ட. உரிமையாளர் எந்த நாட்டில் இருப்பாரோ? மிச்சம் வீடுகளில் தெருக்கதவைக் கொண்டி போட்டு, முன் வாசலையும் மூடி, உள்ளே அமர்ந்து குப்பை சினிமாக்களின்

 சண்டைக் காட்சிகளையோ அல்லது எவள் தாலியை அறுப்பதெனும் ஆராய்ச்சியும் இருக்கும் மெகா தொடர்களோ பார்த்துக் கொண்டிருக்கும் சத்தம் உரத்துக் கேட்கும்.

பிரதான சாலைகளிலும் நடப்பது தவிர்க்க இயலாதது என்பதால், எப்போதும் சோணாசலம் வாகனங்கள் எதிர்வரும் திசையில் நடப்பார். இரவுகளில் விளக்கொளி கண் கூசவே செய்யும். எதிர்த்திசையில் நடப்பதன் காரணம், வில்லனைத் துரத்தும் & நூற்றெண்பது கோடி படத்துக்கு சம்பளம் வாங்கும் கதாநாயகன் போல் பேய்த்தனமாக வரும் ஊர்திகளுக்கு

ஒதுங்கிக் கொள்ளலாம் என்பதே! மேலும் முதுகில் காயம்பட்டுச் சாவது வீரத் தமிழ் உணர்வுக்குப் பொருத்தமானதும் இல்லை.

வேகம், ஆரன் ஒச்சம், எவரையும் முந்தும் அவசர அலுவல், எந்தப் போக்குவரத்து விதியையும் மதிக்காத போக்கு என்பதுவே சமகாலப் பண்பாட்டுக் கூறு. தன் குறியே தனக்குதவி. இங்கு குறி எனில் குறிக்கோள் என்று பொருள். அறம் நீங்கிப் பொருள் கொளல் வேண்டா! எவன் எப்படிப் போனால் எமக்கென்ன எனும் மனோபாவம். செவி தைக்கும் உறுமலுடன் வேகமெடுத்துச் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள். அவர்கள் இளைஞர், படித்தவர், வேலை பார்ப்பவர், தமிழ்ப் பண்பாட்டு வரிசை காப்பவர் மக்கள். என் செயத் தகும் ஏமானே!

நான்கு நாட்கள் முன்பொரு சம்பவம். கல்லூரி மாணவர் ஆறுபேர், இரண்டு இருசக்கர மோட்டார் வாகனங்களில் முந்தியும் துரத்தியும் உறுமியும் சாலை முழுக்க ஓட்டிச் சென்றனர். ஓய்வு பெற்று, வாழ்நாள் நீட்டிக்க நடைப் பயிற்சி செய்யும் முதியவர் ஒருவர், ‘ஏம்பா! பாத்துப் போக மாட்டேளா? எதுக்கு இப்பிடி காட்டுத்தனமா வண்டி ஓட்டணும்?’ எனக் கடிந்தாராம். வண்டிகளை நிறுத்தி, அவரிடம் வாதமும் தகராறும் செய்து, வாய்ப்பேச்சு முற்றி, இளைஞன் ஒருவன் தன் தலையில் இருந்த ஹெல்மெட் கழற்றி அவர் செவளையில் அறைந்தானாம். வயசாளி தற்போது மருத்துவமனையில் வாசமாம்.

’எவன் பெண்டாட்டி எவனோடு ஓடினால் நமக்கென்ன? வாட்ஸ் ஆப்பில் போட்டால் போதாதா?’ என்றெல்லாம் எண்ணிக் கொண்டு நடந்து பிரதான சாலைக்கு வந்து விட்டார்

சோணாசலம். நான்கு பச்சை மிளகாயைக் கொதிக்கிற எண்ணெயில் போட்டு, உடனே எடுத்து, உப்புத்தூளில் புரட்டிப் போட்டால் வடாபாவுக்குக் கடித்துக் கொள்ள செமயாக இருக்கும் என்று எண்ணும்போதே சோணாசலத்துக்கு நாவூறியது. என்ன செய்ய? சினிமா வால்போஸ்டர் பார்த்தே நாவூறுகிறது நற்குடிப் பிறப்புகளுக்கு!

தமிழாசிரியர் என்றாலே பலருக்கும் இளக்காரம் என்று மனக்குறுகலுடன் நடந்தார். எல்லோருமா சீட்டுக் கம்பனி நடத்துகிறார்கள், பால் வியாபாரம் செய்கிறார்கள், வட்டிக்கு விடுகிறார்கள், புடவை வணிகம் செய்கிறார்கள், அரசியல்காரர்களுக்கு எடுபிடி வேலை செய்கிறார்கள்? நவீன இலக்கியம் வாசிக்கிற, பயணம் போகிற, மாணவர் நலனில் அக்கறை செலுத்துகிற நல்லாசிரியர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்? விருது கிடைத்தால்தான் நல்லாசிரியரா? தற்போதைய குடியிருப்பு வளாகக் காவல்காரனான சோணாசலம் &பொதுப்புத்தியில் வாட்ச்மேன்& ‘அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கு இல்லை’ என்றும் எண்ணிக் கொண்டார். குறுந்தொகைப் பாடல் வரி. யாத்தவர் ஆரிய அரசன் யாழ்ப் பரம தத்தன். பொருள் – தாம் அறிந்த சான்றை மறைத்துப் பொய் கூறுதல் ஆன்றோர்களின் இயல்பு இல்லை  என்பது. கரி எனில் சான்று என்று பொருள். திருவள்ளுவர் மூன்று குறட்பாக்களில் கரி எனும் சொல்லை, சான்று எனும் பொருளில் ஆள்கிறார்.

திருக்குறளைத் தாண்டி வடாபாவ் அவரை விரைந்து செலுத்தியது. நடையைச் சற்று எட்டிப் போட்டார். ’அம்மணங்குண்டி இராச்சியத்தில் கோமணம் கட்டியவன் பைத்தியக்காரன்’ என்று பாய்ந்தது சிந்தனை. சிந்தனை என்பது சிந்தா நதி. அவரெதிரே அதிவேகமாக மினி பஸ் ஒன்று பாய்ந்து வந்தது. அலுவலக ஊழியர்களை இறக்கி விட்டுவிட்டு வரும் வாகனமாக இருக்கலாம். தலை தெறிக்கும் வேகம். அவ்வாகனத்தின் இடது வசத்தில் வேகமாகவே வந்து கொண்டிருந்த வாகனத்தை முந்தும் வேகம். நேரே சோணாசலத்தின் நடு நெற்றியைக் குறிபார்த்து எய்யப்பட்ட அம்புபோல் பாய்ந்த வேகம். அம்பெனலாம், சரம் எனலாம். வாளி எனலாம், பகழி எனலாம், கோல் எனலாம், ஆவம் எனலாம், கணை எனலாம், யமன் எனலாமா?

நெஞ்சம் படபடத்து, திடுக்கிட்டு, இடப்பக்கம் இரண்டு காலடி ஒதுங்கியிரா விட்டால், பீர்க்கங்காய் துவையல் ஆகியிருப்பார். அவருக்கு எவர் இரங்கற்பா எழுதுவார்! சினிமா நடிகரா என்ன?

சினமும் ஆத்திரமும் வெப்ராளமும் பொங்க, உரக்க ஒலி எழுப்பி வைதார் சோணாசலம், ‘பாடையிலே போறதுக்கா இந்தப் போக்கு போறே!’ என்று. படபடப்பு அடங்காமலேயே நடந்தவர் திரும்பிப் பார்த்தார். அந்த மினிபஸ் அடுத்த குறுக்குச் சாலையில் திரும்பி ரிவர்ஸ் எடுத்துக் கொண்டிருந்தது.

முதுகுப் பக்கம் வாகனத்தின் அதிவேக இரைச்சல் அரவம், ஹாரன் ஒலி ஆவேசமாக. சாலையோரம் நின்ற சரக்கொன்றை மரமோரம் ஒதுங்கினார். பக்கத்தில் படர்ந்து கவிந்திருந்த ஆலமரத்தின் கிளையின் கூடுகளில் பறவைகள் அடையும் ஓசை. சனியன் போயொழியட்டும் எனத் தாமதித்தார்.

அவரை மோதுவது போல் வந்த அதே மினிபஸ்தான். பெயரும் எண்ணும் மனதில் பதிவாகி இருந்தாலும் பேரச்சம் காரணமாக சோணாசலப் புலவர் ஈண்டதைப் பதிய விரும்பவில்லை. அவரை அணைத்து வேகம் குறைத்து நிறுத்தினான் ஓட்டுநன். அவரைப் பார்த்து உரத்து, அரசியல்வாதியின் ஆவேசத்துடன் கத்தினான் ‘சங்கறுத்திருவேன் தாயோளி’ என்று.

சோணாசலத்துக்கு அவன் ஒன் லைன் அர்த்தமாயிற்று. அவர் உரத்துத் திட்டியது செவிப்பட்டு, வஞ்சத்துடன் வண்டியைத் திருப்பிக்கொண்டு வந்திருக்கிறான்.

ஒருவேளை சங்கையே அறுத்தாலும் சங்கரன் தோன்றிக் கேட்கப் போவதில்லை. அவன் குளோபல் ஸ்டார், கேலக்சி ஸ்டார், பிரபஞ்சப் பெரிய நாயகி ஸ்டார் போன்றோருக்கே ஆபத்பாந்தனாக, ஆம்னி ரட்சகனாக நிற்பான். பெற்று வரும் சிறிய ஓய்வூதியத்தின் அரைவீசம் மனைவிக்குக் கிடைக்கலாம். என்றாலும் சாவதானால் கூட,

வடாபாவ் தின்றுவிட்டுச் சாவோம் என்று தீர்மானித்து, கையிலிருந்த பையுடன் இருகரமும் கூப்பி அவனைத் தொழுதார்.

அவனைத் தொழுத கையினுள் எந்தப் படையும் ஒடுங்கியிருக்கவில்லை. உடனடியாகப் பாடையில் போய்ப் படுக்க வேண்டாம் என்ற பரிதவிப்பே பதுங்கி இருந்தது. முறைத்துக் கொண்டே வண்டியைக் கிளப்பிக் கொண்டு போனான்.

உடனடியாகக் குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல் ஒன்று அவரை வந்து அணைந்தது, ஆகிரி ராகத்தில்.

‘ஏதேது செய்திடுமோ, பாவி விதி ஏதேது செய்திடுமோ? தேவடியாள் வீட்டு நாயாகச் செய்யுமோ? தேவடியாளை என் தாயாகச் செய்யுமோ? ஏதேது செய்திடுமோ, பாவி விதி ஏதேது செய்திடுமோ?’

படபடப்பாக இருந்தாலும் அடுத்தவர்க்குத் தொந்தரவில்லாத குரலில் பாடிக் கொண்டே வீட்டுக்கு நடந்தார்.

*****

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள் and tagged , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக