கள்ளம் கரவு திருட்டு மோசணம்

மூத்தோர் மொழிந்தனர் ‘களவும் கற்று மற’ என. களவு எனில் திருட்டு, கரவு, மோஷணம், சோரி. மோஷணம் மலையாளத்திலும் சோரி இந்தியிலும் புழங்கும் சொற்கள். சோரி எனில் கம்பனுக்குக் குருதி. சோரை எனில் மலையாளிக்கு இரத்தம். ஆண்பெண் ஒழுக்கத்திலும் கற்பொழுக்கம் களவொழுக்கம் உண்டு. சுருக்கமாகக் கற்பு, களவு என்பார்கள். சில சமயம் தோன்றும் எனக்கு – எதற்காக வேலை மெனக்கெட்டு களவைக் கற்க வேண்டும், பிறகு அதை மறக்க வேண்டும் என. என்றாலும் ஆன்றோர் கூற்று, அலட்சியப்படுத்தல் ஆகா!………..நாஞ்சில் நாடன்

மூத்தோர் மொழிந்தனர் ‘களவும் கற்று மற’ என. களவு எனில் திருட்டு, கரவு, மோஷணம், சோரி. மோஷணம் மலையாளத்திலும் சோரி இந்தியிலும் புழங்கும் சொற்கள். சோரி எனில் கம்பனுக்குக் குருதி. சோரை எனில் மலையாளிக்கு இரத்தம். ஆண்பெண் ஒழுக்கத்திலும் கற்பொழுக்கம் களவொழுக்கம் உண்டு. சுருக்கமாகக் கற்பு, களவு என்பார்கள். சில சமயம் தோன்றும் எனக்கு – எதற்காக வேலை மெனக்கெட்டு களவைக் கற்க வேண்டும், பிறகு அதை மறக்க வேண்டும் என. என்றாலும் ஆன்றோர் கூற்று, அலட்சியப்படுத்தல் ஆகா!

களவு குறித்தும் திருட்டு பற்றியும் நம்மிடம் ஏராளம் சொலவம் – சொலவடை – பழஞ்சொல் – பழமொழி உண்டு மக்கள் வழக்கில். அவை எவையுமே ஆராயாமல் மொழியப்பட்டவை அல்ல. ஆனால் கழுதை தேய்ந்து கட்டெறும்பும் ஆகும். துரும்பும் தூணாகும், தூண் தாடகைமலையும் ஆகும்.

‘கடுகு களவும் களவுதான், கற்பூரக் களவும் களவுதான்’ என்பதொன்று. அந்தக் கணக்கில் யாமும் கள்வனே கொலாம்! சிறியதாயினும் வலியதானாலும் களவு எனும் தத்துவத்தின் பார்வையில் களவுதானே! கறி தாளிக்கக் கடுகு இல்லாமற்போய் களவாண்டாலும், இறை வழிபாட்டுக்கான கற்பூரமே ஆனாலும் இரண்டும் களவுதானே கூத்தாண்டவரே!

சாலைச் சந்திப்பில் சீருடையில் நின்று கடந்து போகும் சரக்கு லாரிக்காரரிடம் கைநீட்டிக் கையேந்தி வாங்குவதும் களவுதான். நறவக் குப்பிக்குப் பத்து ரூபாய் சேர்த்து விற்றுப் பன்னூறு கோடிகள் மாதம் எற்றிச் சேர்ப்பதூஉம் களவுதான். தகப்பன் என்றும், போராளி என்றும், தியாகி என்றும், இறைத்தூதர் என்றும் ஏற்றிப் போற்றும் முன்னாள் தலைவர்க்கெல்லாம் இது உடன்பாடுதானா?

‘உளவில்லாமல் களவில்லை’ என்பது இரண்டாவது சொலவம். களவுக்கு முன்கூறு உளவு. ‘லேய்! சோணாசலம் பண்ணையாரு தோப்புல மாங்கா காச்சுக் கெடக்கு பாத்துக்கோ!’ என்று அச்சாரம் கொடுப்பதுவே உளவு. அது அலவலாதி மாங்காய், நெல்லிக்காய், கொய்யா, பப்பாளி திருட்டுக்கு, வயிற்றுத் தீ தணிக்க. ஆனால் தொழில் முறையாக எவர் வீட்டில் நகைப்பெட்டி, நோட்டுக்கட்டுக்கள் அடைப்பட்ட கோணிகள் இருக்கிறது, எவர் வீட்டைப் பூட்டிக் கொண்டு வெளியூர் சென்றுள்ளனர், எந்த வீட்டில் மூத்து நரைத்து சாவு காத்திருக்கும் கிழங்கள் வாழ்கிறார்கள் எனத் தகவல் சொல்வது உளவு. சுத்தத் தமிழில் உளவு எனில் வேவு, ஒற்றாடல்.

ஒற்றாடல் அதிகாரத்துத் திருக்குறள் உரைக்கும் –

“ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்

ஒற்றினால் ஒற்றிக் கொளல்”

என்று. ஒரே குறளில் நான்கு ஒற்று. ஒரே அரசவையில் அமைச்சாகப் பன்னிரு கள்வர் என்பது போல. ஒரு ஒற்றன் திரட்டித் தரும் தகவலை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் வேறோர் ஒற்றாடல் செய்து தெளிவதே ஒற்றாடலின் சிறப்பு என்பது உரை.

‘கும்பிடும் கள்ளர், குழைத்திடும் கள்ளர்’ என்பது மூன்றாம் சொலவம். திருடுபவர் ஆழ்ந்து தோய்ந்து இறைவன் சந்நிதியில் நின்று வணங்கவும் செய்வர், விபூதி குழைத்தோ சந்தனம் அரைத்தோ பயபக்தியுடன் அணியவும் செய்வர் என்பது பொருள். பெருந்தனக்காரப் பக்தர் பலரை எண்ணிப் பகர்ந்ததோ? இன்று மேலும் சொல்லலாம் – உள்ளேயும் அவர்கள், வெளியேயும் அவர்கள் என்று.

சாபம் போலச் சொல்வது நான்காம் சொலவடை. ‘பாம்பாட்டிக்குப் பாம்பிலே சாவு, கள்ளனுக்குக் களவிலே சாவு’ என்பது. ‘அரவம் ஆடேல்’ என்பது ஆத்திசூடி. ‘அரவம் ஆட்டேல்’ என்றும் பாட பேதம் உண்டு. நாகப்பாம்பைச் சீண்டிப் படம் எடுக்கத் தூண்டி விளையாட்டுக் காட்டிப் பிழைப்பவனுக்கு பாம்பினால்தான் சாவு என்பது ஒன்று. களவாடப் போகிறவனுக்கு நடுநிசி இருட்டில் தடுமாறிக் கை தவறி வீழ்ந்தோ, பிடிபட்டு மக்களிடம் தர்ம அடி வாங்கியோ, காவல் நிலையங்களில் சரியாகப் பங்கிடப்படாத காரணத்தால் மிதிபட்டோதான் சாவு என்பது இரண்டு.

‘வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை’ என்பதுவுமோர் பழமொழி. வெள்ளை என்றால் வெள்ளை நிறம் கொண்டவர் என்பதல்ல பொருள். வெள்ளையுள்ளம் கொண்டவர், வெள்ளந்தி மாந்தர், வெள்ளைச் சோளம், அப்புராணி மக்களுக்கு கள்ளத்தனமான சிந்தனை இருக்காது என்பது பொருள்.

‘கள்ளன் பிள்ளைக்கும் கள்ளப் புத்தி’ என்பதுவும் ஒரு பழஞ்சொல். ‘அப்பனுக்குப் பிள்ளை தப்பாமப் பிறந்திருக்கு’ என்பது போல. கண்டு, கேட்டு, பயன்களைத் துய்த்து வளரும் பிள்ளைகள் அந்தத் தொழிலுக்கு இலகுவில் ஈர்க்கப்படுவார்கள் என்பது சொலவத்தின் பொதுப்புரிதல். அரசியல்வாதிகளின் மக்கள் அரசியல்வாதியாகத்தானே முனைகிறார்கள் என்று எடுத்துக்காட்டும் சொல்லலாம். ஆனால் சேற்றில் முளைத்த செந்தாமரையும், சிப்பியின் வயிற்றில் முத்தும், கள்ளியில் விளைந்த கனியும் எனப் பலவற்றையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். எதையும் பொதுமைப்படுத்த இயலாது. ஐந்தாம் வகுப்பில் தோற்ற அப்பனின் மகனாக நானிதைச் சொல்ல உரிமை உண்டு.

மிகச் சுவாரசியமானதோர் சொல்லாடல், ‘அவுசாரி என்று ஆனைமேல் ஏறலாம், திருடி என்று தெருவில் வரலாமா?’ என்பது. இதை இருபாலருக்குமே துணிந்து கூற இயலும். உலகம் அறியப் பரத்தமைத் தொழில் செய்து பேரும் புகழும் செல்வமும் ஈட்டியவர்கள் செல்வாக்குப் பெற்று பெரும் பதவிகளை அடைந்து கம்பீரமாக ஆனை, குதிரை, சொகுசுக்கார், கப்பல், விமானம் எனப் பவனி வரலாம். இன்றும் நாம் பல எடுத்துக்காட்டுக்கள் தர இயலும். ஆனால் திருடி எனப் பரசியமாக அறியப்பட்டவள் தெருவில் இறங்கி நடமாட ஒக்குமா என்பது கேள்வி. ஆனால் இன்று அனைத்து அரசியல் தலைமைப் பிரமுகர் பாசறைகளிலும் இரு சாராரும் இருக்கிறார்கள்.

மற்றுமோர் சொலவம் –

‘தான் திருடி அசல் வீட்டை நம்பான்

கூத்திக் கள்ளன் பெண்சாதியை நம்பான்’

என்பது. திருடனாகத் தொழில் செய்து பிழைப்பவன், அண்டை வீட்டுக்காரனை நம்ப மாட்டான். கூத்தியார் வைத்துக் காமம் துய்ப்பவன் சொந்தப் பொண்டாட்டியை நம்ப மாட்டான் என்பது பொருள்.

‘கையை அறுத்து விட்டாலும் அகப்பை கட்டிக் கொண்டு திருடுவான்’ என்றும் ஒரு பழமொழி. இங்கு அகப்பை என்பது சிரட்டைத் தவி, மர அகப்பை, கல்லகப்பை, வெண்கல – பித்தளை – ஈயம் – இரும்பு – அலுமினிய அகப்பை எதுவானாலும். திருடுகிற கையைக் காயப்படுத்தி விட்டாலும் கூட, திருட்டுத் தொழில் நுட்பம் பயின்றவன், கையில் அகப்பையைச் சுற்றிக் கட்டிக் கொண்டு திருட முயல்வான் என்று பொருள். இன்று சட்டங்களின் கடுமை என்பது திருடனுக்கு கையை அறுத்து விடுவதுதான். குற்ற வழக்குகளும், தண்டனைகளும் அவ்வாறே! என்றாலும் மாற்று உபாயங்களைக் கையாண்டு கொள்ளைக்காரன், கடத்தல்காரன், அதிகாரி, அரசியல்வாதி திருடுவான் என்றும் பொருள் கொள்ளலாம்.

‘அதிகாரி வீட்டிலே திருடி, தலையாரி வீட்டிலே வைத்தது போல’ என்பதும் ஒரு பழமொழி. அதிகாரம் இருப்பவன் வீட்டில் திருடிய செல்வத்தை அவன் கீழ் ஊழியம் செய்யும் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஏவலாளி வீட்டில் மறைத்து வைப்பதுபோல் என்பது பொருள். அதிகாரி, தலைவர் எனப்படுபவர் தாமே திருடி சொந்தக்கார, நட்புப் பூண்ட அடிமை பினாமி பெயரில் சொத்து வாங்கி வைப்பது போல் என்று திரித்தும் பொருள் கொள்ளலாம்.

‘கண்ட இடத்தில் திருடன் கண் போகும்’ என்பதும் ஒரு பழமொழி. அது தொழில்நுட்பம் சார்ந்தது. யாவருமே ஒரு சம்பவத்துக்கு சாட்சியாக நின்றாலும், படைப்பாளியின் கண்ணோட்டம் வேறுபட்டு இருப்பதைப் போல், நம் பார்வை பொதுப்பார்வை. திருடன் பார்வை திருட்டுப் பார்வை. ‘கள்ளக் கண்ணு போட்டுப் பாக்கான்’ என்பார் ஊரில்.

இதுபோல் நூற்றுக்கணக்கான பழமொழிகள் ஒவ்வொரு மொழிக்குள்ளும், பிரதேச வாரியாக ‘கள்ளன் பெரிசா, காப்பான் பெரிசா?’

கள்ளம் எனும் சொல்லை முன்னொட்டாகக் கொண்ட எண்ணிறந்த பிரயோகங்கள் உண்டு. அகராதிகளில் தேடியதும், மக்கள் வழக்கில் நின்றும் நினைவுபடுத்தியதுமாக ஒரு பட்டியலே தரலாம்.

கள்ளம் எனும் சொல்லுக்குப் பேரகராதி தரும் முதற்பொருள் வஞ்சனை. திருக்குறள் காமத்துப்பாலில் பசப்புறு பருவரல் அதிகாரத்தின் குறள் ஒன்று –

“உள்ளுவன் மன் யான் உரைப்பது அவர் திறமால்

கள்ளம் பிறவோ பசப்பு

என்கிறது. ‘அவரையே நினைத்திருந்தேன். அவர் திறமே உரைக்கவும் செய்கின்றேன். பிறகேன் என் மேல் பசலை படர்கிறது? வஞ்சனையாலா, வேறு காரணத்தாலா?’ என்பது பொருள்.

கள்ளம் எனும் சொல்லுக்குத் தரப்பட்டுள்ள இரண்டாவது பொருள் பொய். திருஆரூர் பதிகத்தில் திருஞான சம்பந்தர், ‘கள்ள நெஞ்ச வஞ்சகக் கருத்தை’ என்பார்.

கள்ளம் எனும் சொல்லுக்குக் களவு என்று நேரடியாகப் பொருள் சொல்கிறது சூடாமணி நிகண்டு. குற்றம் என்றும் ஒரு பொருள் உண்டு. ஐந்தாவது பொருள் அவிச்சை, Spritual Ignorance. ஆறாவது பொருள் புண்ணில் மறைந்திருக்கும் கசடு. ஏழாவது பொருள் பாதகம்.

கள்ளம் சார்ந்த மேலும் சில சொற்களும் பொருளும்.

சென்னைப் பல்கலைக்கழகத்து லெக்சிகன் மேலும் சில சொற்கள் தரும். கள்தல் என்றொரு சொல் பட்டியலிடப்பட்டுள்ளது. கள்தல் – கள்+தல் = கட்டல். கட்டல் என்பது இன்று மலையாளத்தில் திருட்டைக் குறிக்கும் சொல். ‘கட்டோண்டு போயி’ என்றார் திருடிக் கொண்டு போனான் / போனாள் என்று பொருள்.

சமீபகாலமாக மலையாளத்தில் ஒரு பாடல் பிரபலமாயிற்று.

‘‘என்ற அம்மையுட ஜிமிக்கி கம்மல்

என்ற அப்பன் கட்டோண்டு போயி

என்ற அன்பன்ர பிரான்டிக் குப்பி

என்ற அம்மை குடிச்சுத் தீர்த்து”

என்பது முதல் பத்தி. என் அம்மாவின் ஜிமிக்கியையும் கம்மலையும் என் தகப்பன் திருடிக்கொண்டு போனான். விற்ற அந்தக் காசில் வாங்கிய பிராந்திக் குப்பியை என் அம்மை குடித்துத் தீர்த்தாள் என்பது சாராம்சம். இந்தப் பாடல் வரிகளில் எனது பார்வை ‘கட்டோண்டு போயி’ எனும் சொற்றொடரில். பொருள் திருடிக்கொண்டு போனான் என்பது. அதாவது கட்டுக் கொண்டு போயி. இவண் மலையாளத்தில் கட்டல் எனில் திருடுதல். கட்டல் எனும் தமிழ்ச்சொல் மலையாளத்தில் புழங்கும் விதம் வியப்பளிப்பது.

மோசணம் எனில் மலையாளத்தில் திருட்டு. மோட்டிச்சு எனில் திருடப்பட்டது என்பது பொருள். மோட்டிச்சு போயி எனில் கட்டோண்டு போயி, களவாண்டு போயி. ‘கள்ளம் பறையாதே’ என்றால் பொய் கூறாதே என்பது பொருள். ‘கள்ள இபிலீசின்ற மோனே’ என்பதோர் வசவு. வஞ்சகப் பிசாசின் மகன் என்று பொருள்.

கள்தல் எனும் சொல்லுக்கு லெக்சிகன் தரும் பொருள்:

  1. கட்டல் (மலையாளம்)
  2. களை பிடுங்குதல். To weed out. 

திருக்குறள் பொருட்பாலில் உழவு அதிகாரத்தின் குறள் –

“ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்

நீரினும் நன்று அதன் காப்பு”

என்று பேசுவதன் பொருள் – ஏர் உழுதல், எரு விடுதல், களைபறித்தல், தண்ணீர் பாய்ச்சுதல், காவல் காத்தல் ஆகிய செயல்கள் உழவுத் தொழிலில் ஒன்றைவிட ஒன்று சிறந்ததாகும் – என்பது. 

  1. பறித்தல் (சூடாமணி நிகண்டு) To Pluck.
  2. திருடுதல். 

சிலப்பதிகாரத்தில், புகார் காண்டத்தில், இந்திர விழா ஊரெடுத்த காதையில் –

‘கடைமுக வாயிலும் கருந்தாழ்க் காவலும்

உடையோர் காவலும் ஒரீஇய வாகிக்

கட்போர் உளரெனில் கடுப்பத் தலையேற்றிக்

கொட்பினல்லது கொடுத்த லீயாது

உள்ளுநர்ப் பனிக்கும் வெள்ளிடை மன்றமும்’

என்று வெள்ளிடை மன்றம் பற்றிப் பாடுகிறார் இளங்கோவடிகள்.

இங்கு கட்போர் எனில் களவு செய்பவர் என்று பொருள்.

  1. வஞ்சித்தல். To deceive.

கள் எனும் சொல்லின் பொருள் களவு என்கிறது சூடாமணி நிகண்டு. கள்வன் என்றால் யானை என்றும் பொருள் தரும் பிங்கல நிகண்டு. கள்வம் என்றால் திருட்டுச் செயல். நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில், நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழியில், ஒன்பதாம் பத்தின் ஆறாம் பிரிவான ‘உருகுமால்’ பகுதியின் ஐந்தாம்பாடல் –

‘திருவருள் செய்பவன் போல் என்னுள் புகுந்து

உருவமும் ஆருயிரும் உடனே உண்டான்

திருவளர் சோலைத் தென்காட்கரை என்னப்பன்

கருவளர் மேனி என் கண்ணன் கள்வங்களே

என்று பேசும். இங்கு கள்வங்களே என்றால் திருட்டுச் செயல்களே என்பது பொருள்.

கள்வன் எனும் சொல்லுக்கும் ஆறு பொருள் உண்டு.

  1. திருடன் 

திருஞான சம்பந்தர் தேவாரம், முதலாம் திருமுறை, திருத்தலம் – திருப் பிரம்மபுரம், நட்டபாடைப் பண்ணில் அமைந்த பாடல், பலரும் அறிந்தது, பின்வருமாறு:

‘தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண் மதிசூடிக்

காடுடைய சுடலைப் பொடிபூசி என் உள்ளங் கவர் கள்வன்

ஏடுடைய மலரான் முனைநாள் பணிந்தேத்த அருள்செய்த

பீடுடைய பிரமாபுரம் மேவிய பெருமான் இவனன்றே’

இது முழுப்பாடல். இங்கு கள்வன் என்பதற்குத் திருடன் என்றே உரை எழுதுகிறார்கள்.

  1. கரியவன் (பிங்கல நிகண்டு)
  2. Mediator. நடுச் சொல்வோன் (பிங்கல நிகண்டு)
  3. Lungoor. முசு (பிங்கல நிகண்டு)
  4. நண்டு

எட்டுத்தொகை நூல்களில் ஒன்று ஐங்குறுநூறு, ஐந்நூறு பாடல்கள். மருதத் திணை – ஓரம் போகியார், நெய்தல் திணை – அம்மூவனார், குறிஞ்சித் திணை – கபிலர், பாலைத்திணை – ஓதலாந்தையார், முல்லைத்திணை – பேயனார் என ஐந்து புலவர்கள் பாடியது.

இவற்றுள் மருதத் திணையின் 21-ம் பாடல் முதல் 30-ம் பாடல் வரை கள்வன் பத்து என்றழைக்கப்படும். உரையாசிரியர், பெருமழைப்புலவர் பொ.வே. சோம சுந்தரனார் குறிப்பிடுவதாவது – ‘அஃதாவது, கள்வன் என்னும் சொல் பாடல் தோறும் பயின்றுவரும் பத்துச் செய்யுளின் தொகுதி என்றவாறு. கள்வன் – நண்டு; நண்டு மருதக் கருப்பொருள்.

  1. Cancer. கர்க்கடகம் (திவாகர நிகண்டு)

சங்க இலக்கியங்கள் மிகப்பரவலாக கள்வன், கள்வரை, கள்வர், கள்வனால், கள்வனை, கள்வி, கள்வியை, கள்ளர் எனும் சொற்களை ஆண்டுள்ளன.

குறுந்தொகையில் பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடல் –

‘உள்ளார் கொல்லோ தோழி! கள்வர்

பொன் புனை பகழி செப்பம் கொண்மார்,

உகிர் நுதி புரட்டும் ஓசை போலச்

செங்காற் பல்லி தன் துணை பயிரும்

அங்காற் கள்ளி அம் காடு இறந்தோரே!’

என்று பேசும்.

தோழி! வழிப்பறி செய்யும் ஆறலைக் கள்வர், இருப்பால் செய்த தமது அம்பைத் தீட்டி கூர்மை பரிசோதிப்பதற்கு நகத்தின் நுனியில் வைத்துப் புரட்டுவார்கள். அப்போது எழும் ஓசை போன்று, செங்கால் பல்லி தன் துணையான பெண்பல்லியை அழைக்க ஓசை எழுப்பும். அழகிய அடித்தூரைக் கொண்ட கள்ளிகள் சூழ்ந்த காட்டைக் கடந்து செல்லும் தலைவன், பல்லி எழுப்பும் ஓசையைக் கேட்டால் நம்மை நினைக்க மாட்டாரா! – என்பது பாடலின் பொருள். ஆக இங்கு கள்வர் என்றால் திருடர்.

நற்றிணையில் முதுகூத்தனார் பாடல், ‘கள்வர் போலக் கொடியன் மாதோ’ என்னும். அகநானூற்றில் கயமனார் பாடல், ‘அந்தக் கள்வர் ஆ தொழு அறுத்தென’ என்று பேசும். வேறு வழியற்ற திருடர்கள் பசுக்களைத் தொழுவில் இருந்து திருடிச் சென்றதைப் போன்று என்பது பொருள். அகநானூற்றில் பரணர் பாடல், ‘கடி இலம் புகூஉம் கள்வன் போல’ என்று உவமை கூறும். காவலுடைய இல்லத்தில் புகும் திருடன் போலத் தனது காலடி ஓசை கேட்காமல், அஞ்சி பையப்பைய நடந்து செல்லும் திருடன் போல – என்பது பொருள்.

குறுந்தொகையில் கபிலர் பாடல், குறிஞ்சித் திணை

“யாரும் இல்லை; தானே கள்வன்;

தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ?

தினைத் தாள் அன்ன சிறு பசுங்கால

ஒழுகு நீர் ஆரல் பார்க்கும்

குருகும் உண்டு, தான் மணந்த ஞான்றே”

என்பது முழுப்பாடல்.

தலைவன் என்னுடன் களவு மணம் செய்த நேரத்தில் எவரும் சாட்சி இல்லை. கள்வனாகிய அவன் மட்டுமே இருந்தான். அவன் பொய்யுரைத்தால் என்னால் ஏது செய்யக் கூடும்? என்னுடன் அவன் கலவி செய்தபோது தினைச் செடியின் தாள் போன்ற சிறிய பசிய கால்களை உடைய குருகு மட்டுமே ஒழுகும் ஓடை நீரில் ஆரல் மீனின் வரவு பார்த்திருந்தது – இது பொருள். இங்கு காமக் களவு செய்த திருடன் தலைவன்.

நற்றிணையில் கோண்மா நெடுங்கோட்டனார் பாடல் –

‘நள்ளென் கங்குல், கள்வன் போல

அகன் துறை ஊரனும் வந்தனன்’

என்று நீளும். நள்ளென்று ஒலிக்கும் யாமத்தில் கள்வனைப் போலக் கலவி செய்ய வந்தனன் அகன்ற நீர்த்துறையை உடைய தலைவன் – இது பொருள்.

கள்வி எனும் சொல்லைக் குறுந்தொகைப் பாடலில் கபிலர் பயன்படுத்தினார். ‘இரண்டு அறி கள்வி நம் காதலோளே’ என்பது பாடல் வரி. நம் காதலி இரண்டு விதமாகச் செயல்படும் கள்ளத்தனம் உடையவள் என்பது பொருள்.

திருக்குறள் களவு பேசுகிறது.

‘களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்தது

ஆவது போலக் கெடும்’

என்பது கள்ளாமை அதிகாரத்துக் குறள்.

பிறர் பொருளைக் கவர்ந்து, களவாண்டு, திருடி, மோட்டித்து உருவாக்கும் செல்வம் பெருகி வளர்வது போல் தோன்றும். ஆனால் விரைந்து அதே வேகத்தில் அழியும் என்கிறார் குறளாசான். கொடுங்கோன்மை அதிகாரத்துக் குறள் ஐயம் திரிபு அற ஆணியடித்தாற்போல் உரைக்கும் –

‘அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே

செல்வத்தைத் தேய்க்கும் படை’

என்று. திருவள்ளுவருக்குப் படம் வைத்தலோ, குறளை சுவரில் எழுதி வைப்பதோ, சிலை எடுப்பதோ புறத்தே காட்டும் நடலை. அகத்தே காவலன் காத்தல் வேண்டும்.

‘வேலொடு நின்றான் இரு என்றது போலும்

கோலொடு நின்றான் இரவு’

என்பது அதே அதிகாரத்தின் குறள். மக்களிடம் எவ்விதத்திலேனும் பொருள் பறிக்கும் அரசன், கூர்வேல் கைக்கொண்டு கொள்ளைக்கு வருபவனைப் போன்றவன் – என்பது பொருள்.

கள்ளாமை என்ற சொல்லும் ஆள்கிறார் வள்ளுவர்.

‘எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்

கள்ளாமை காக்க தன் நெஞ்சு’

என்பது குறள். சமூகத்தால் இகழப்படாத வாழ்க்கையை விரும்புபவர் பிறர் பொருளை கவரக் கருதலாகாது என்பது பொருள். புறத்தே சமூக நீதியும் அகத்தே சமூக அநீதியுமாக இன்று வாழ்வாங்கு வாழ்கிறார்களே என்று என்னிடம் வினவிப் பயன் என்ன?

கள்ளத்தால் என்றும், களவின் கண் என்றும், களவறிந்தார் என்றும், களவல்ல என்றும், கள்வார்க்கு என்றும் சொற்கள் ஆண்ட குறட்பாக்கள் உண்டு.

நாலடியார் கள்ளம், கள்ளத்தால், கள்ளார் எனப் பேசுகிறது. திருவாசகத்தில் கள்வன், கள்வனே, கள்வனேனை, கள்ள, கள்ளத்து, கள்ளப்படாத, கள்ளமும், களவு எனும் சொற்கள் உண்டு. பெரியபுராணத்திலும் கள்வர், கள்வனேன், களவு போன்ற சொற்களைக் காணலாம்.

களவுக்கு இணையாக நாமின்று பயன்படுத்தும் சொல் திருட்டு. திருட்டு என்ற முன்னொட்டுக் கொண்ட அரசியல் வாசகம் ஒன்றுண்டு இன்று. அது நமக்கு வேலியில் போவதைப் பிடித்து வேட்டிக்குள் விடுவதைப் போன்றது. எனினும் பத்துப்பாட்டு எனப்படும் பத்து நூல்களும் எட்டுத்தொகை எனப்படும் எட்டு நூல்களும், சங்க இலக்கியங்கள், திருடன், திருட்டு, திருடி எனும் சொற்களை ஆளவில்லை.

திருக்குறளிலும் திருடன், திருட்டு, திருடி இல்லை. திருவாசகத்திலும் நாலடியாரிலும் இச்சொற்கள் இல்லை. ஏன் இல்லை என்பது பல்கலைக்கழக ஆய்வு மாணவர் கவலை. யாமோ நாயினம். பேரூரில் நொய்யல் நதி சிங்கிள் மால்ட் விஸ்கியாக ஓடினாலும் நக்கித்தான் குடிக்க இயலும்! என்றாலும் திருட்டு என்ற சொல்லுக்குக் கள்வன் என்று பிங்கல நிகண்டும் பொருள் உரைக்கும்.

திருடர், திருட்டு போன்ற சொற்களைப் பயன்படுத்திய இலக்கியச் சான்று ஏதும் மனப்பரப்பில் தென்படவில்லை. என்றாலும் பேரகராதியில் துழாய்ந்து நீராடியபோது சில சொற்கள் கிடைத்தன. அவற்றைத் தொகுத்துக் கீழே தருவேன்.

ஒருவேளை திருட்டு, திருடன் போன்றவை அயல்மொழிச் சொல்லாக இருக்கலாமோ என அயற்சொல் அகராதியில் தேடினேன். அயற்சொல் அகராதியில் அவ்வகைச் சொற்கள் இல்லை. எனவே இவை மாசு மறுவற்ற தமிழ்ச் சொற்கள் எனக் கொள்ளலாம். ஒருவேளை சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் சேர்ந்திருக்கலாம்.

களவுக்கு நிகரான பழந்தமிழ்ச் சொல் கரவு. ‘இயல்வது கரவேல்’ என்பது ஆத்திசூடி. ‘கள்ளம் கரவு அறியாதவன்’ என்பது மக்கள் வழக்கு. கரவு எனும் சொல்லுக்கு ஐந்து பொருள்.

  1. Concealment. மறைத்தல்
  2. Deceit. வஞ்சனை
  3. Theft. களவு (திவாகர நிகண்டு)
  4. False hood. பொய்
  5. முதலை

என்பன அவை. கள்ளாமை அதிகாரத்துத் திருக்குறள் பேசும் –

‘அளவறிந்தார் நெஞ்சத்து அறம்போல நிற்கும்

களவறிந்தார் நெஞ்சில் கரவு’

என்று. நெறியுடன் வாழ்வார் நெஞ்சத்தில் அறம் நிலைபெறும். களவு அறிந்தார் மனதில் வஞ்சகம் நிலைத்திருக்கும் – என்பது பொருள்.

கரவு எனும் சொற்பிறப்பில் மேலும் சில சொற்களைப் பேரகராதி தருகிறது.

சங்க இலக்கியம் பல பாடல்களில் கரவு பேசுகிறது. கரந்தானை என்கிறது கலித்தொகை. கரந்தான் என்றும் சொல்கிறது. கரப்பவன் என்றும், கரப்பன் என்றும், கரப்பென் என்றும், கரந்ததூ என்றும், கரந்தாங்கு என்றும், கரந்த என்றும், கரந்து என்றும் பேசுகிறது. கரந்து எனும் சொல்லை அகநானூறு, குறிஞ்சிப்பாட்டு, நற்றிணை, மதுரைக்காஞ்சி, மலைபடுகடாம் எனும் நூல்கள் ஆண்டுள்ளன.

கரப்ப எனும் சொல்லினை அகநானூறு, நற்றிணை, புறநானூறு, மதுரைக்காஞ்சி ஆண்டுள்ளன. கரப்பாடும் என்கிறது குறுந்தொகை. கரப்பார் என்கிறது பரிபாடல். கரப்பினும் எனப் பேசுகிறது புறநானூறு. கரவா என்கிறது பரிபாடல். கரவு என்னும் புறநானூறு. கரவாது என்கின்றன அகநானூறும் சிறுபாணாற்றுப்படையும் புறநானூறும். கரப்பு என்கின்றன நற்றிணை, புறநானூறு, பெரும்பாணாற்றுப்படை.

கரத்தல் அறிந்திருக்கின்றன அகநானூறும், நற்றிணையும். கரந்த எனும் சொல்லைப் பயன்படுத்தியுள்ளன அகநானூறு, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல். கரந்தன்ன எனக் குறுந்தொகையும், கரந்தனம் என்று அகநானூறும், கரந்தார் என்று குறுந்தொகையும் பதிவு செய்துள்ளன.

கராஅம் என்றொரு சொல் கண்டேன். அகநானூறு, நற்றிணை, பட்டினப்பாலை, புறநானூறு ஆகிய நூல்கள் ஆண்டுள்ளன. அனைத்துப் பாடல்களிலும் கராஅம் என்றால் முதலை என்றே பொருள்.

கலித்தொகையில் முல்லைக்கலி பாடிய சோழன் நல்லுருத்திரன் – ‘அரிமாவும் பரிமாவும் களிறும் கராமும்’  என்பார்.

சிங்கமும் குதிரையும் யானையும் முதலையும் என்பது பொருள். கபிலரின் குறிஞ்சிப்பாட்டில், ‘கொடுந்தாள் முதலையும் இடங்கரும் கராமும்’ என்பார். இடங்கர், கராம் எனில் முதலையின் இனங்கள் எனப் பொருளுரைத்துள்ளனர்.

இன்று  பொதுப்புத்தியில் பணமுதலைகள் போன்ற சொற்கள் செல்வாக்கில் உள்ளன. களவு செய்து, திருட்டுச் செயல் புரிந்து, கரவு செய்து, சேகரித்த காரணத்தால், கராம் – முதலை என்றார் போலும்.

எது எவ்வாறாயினும் களவு என்பது இன்று அங்கீகரிக்கப்பட்ட தொழிலாகிப் போனது போலும். அன்றேல் தலைவரும், அதிகாரியும், வணிகரும், கல்வித் தந்தையரும், மருத்துவத் தூதரும் செய்வதென்ன? அன்னாருக்கு ஓய்வூதியமும் அரசு வழங்கத்தானே செய்கிறது?

களவு கொடுத்தவனுக்கு இன்னல், துன்பம், வலி, இழப்பு. களவு எடுத்தவனுக்குக் கொண்டாட்டம், குதூகலம், செல்வாக்கு, பதவி, விழாக்கள், விருதுகள், விழுமியங்கள்.

ஒருவனிடம் களவு கொடுத்தாலும், கொடுத்தவன் வாய்ப்புக் கிடைக்கும்போது மற்றொருவனிடம் களவாடுகிறான். ஒருவரையொருவர் சுரண்டி, திருடி, வஞ்சித்து, கரந்து வாழும் சமூகமாகி விட்டோம் நாம்.

இன்றைய இந்த அவலத்தை எவரிடம் சென்றுரைப்போம்? சென்றுரைக்கப் போனால், உரைப்பதைக் கேட்பவரும் களவாணியாகத்தானே இருக்கிறார்.

விவிலிய வாசகம் ஒன்று நினைவுக்கு வருகிறது.

“God sent Noah the rainbow sign,

No more water, The Fire Next Time”

அதுவே நமது அச்சம்.

குடிமக்களில் பலருக்கும் இரத்தத்தில் களவும் கரந்து கட்டற்றுப் பாய்ந்தால் எவரிடம் சென்று முறையிடுவோம் யாம்?

நன்றி: https://solvanam.com/2024/01/14/

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக