கன்னியாகுமரி

நாஞ்சில் நாடன்
எந்தக் கடலும் பெருங்கடலும் அழகுதான்.
அதில் கன்னியாகுமரி தனியழகு.
திருச்செந்தூர் வேறு அழகு.
திருப்புல்லாணி இன்னோர் அழகு!
வைத்த கண் வாங்காமல் பார்க்கச் செய்யும் கவர்ச்சியும் அச்சமும்கொண்ட அழகு மூன்றெனச் சொல்வர் முன்னோர். ஓய்வின்றி அலையடிக்கும் சமுத்திரம்; காதடித்து நின்று அசைந்தாடும் யானை; படமெடுத்துப் பரக்கப் பார்க்கும் நாகப் பாம்பு!
கன்னியாகுமரியில் 60 ஆண்டுகளுக்கு முன்பு காந்தி நினைவு மண்டபமோ, விவேகானந்தர் நினைவுச் சின்னமோ, காமராசர் மண்டபமோ, ஐயன் திருவள்ளுவர் சிலையோ இல்லை. கடலைத் தொட்டபடி இன்றிருக்கும் பல கட்டடங்கள் இல்லை. வடக்கிலிருந்து செங்குத்தாக இறங்கும் சாலை தவிர, வேறு சாலைகளும் இல்லை.
கிழக்கில் வட்டக் கோட்டையும், தெற்கில் உபகார மாதா என்றும் அலங்கார மாதா என்றும் அழைக்கப்படும் ‘Lady of Ransom’ சர்ச்சும், நீலத் திரை கடல் ஓரத்திலே நின்று நித்தம் தவம் செய்யும் குமரி அன்னை பகவதி அம்மன் கோயிலும், கடலை நீந்திக் கடந்து சுவாமி விவேகானந்தர் அமர்ந்து தவம் செய்த பெரும்பாறையும், அதன் இணையாக இன்னொரு பாறையும், பகவதி அம்மன் கோயிலுக்குக் கிழக்கே புண்ணிய தீர்த்தம் ஆட திருவிதாங்கூர் மன்னர் கட்டிய சங்கிலித் துறையும், தொடர்ந்து மேற்கே கால்நடைத் தடமாகக் கோவளம் நோக்கிப் போகும் பாதையில் ஒரு மைல் நடந்தால் எதிர்ப்படும் மணல் தேரி என்றழைக்கப்பட்ட, கடல் அலைகளைத் தொட்டு எழும்பிய பெருமணற் குன்றும் மட்டுமே இருந்தன.
கடற்கரை மேட்டில் கீழ் மேலாக சற்று தூரம் கப்பிக்கல் சாலை இருந்தது. சாலைக்கு வடக்கே சில சங்குக் கடைகள் இருந்தன. பனை நுங்கும், பதனீரும், கொல்லாம்பழமும், மாம்பழமும், சில்லுக் கருப்பட்டியும் விற்கும் காது வடித்துப் பாம்படம் போட்ட மூதாட்டிகள் இருந்தனர். தொலைவில் ஆழியில் மரங்கள் நின்று அசைந்துகொண்டு இருக்கும். மரமெனில், கட்டுமரம். கடற்கரையிலும் கடல் அலைகளிலுமாக அம்மணமாகப் பரவர் சிறார் விளையாடிக்கொண்டு இருப்பார்கள்.
கன்னியாகுமரிக் கடலலைகள், திருச்செந்தூர் கடலலைகள் போலச் சாதுவானவை அல்ல. மதங்கொண்ட வேழம் போலப் புரண்டு மறிந்து ஓடி வருபவை. மேலதிகம் விவரம் வேண்டுவோர், ஜோடி குரூஸ் எழுதிய நாவல் ‘ஆழி சூழ் உலகு’ வாசியுங்கள்.
பத்து வயதுப் பிராயத்தில் அரையில் வார் நிக்கர் மட்டும் அணிந்தவாறு, பெரியவர் ஒருவர் கையைப் பிடித்தவாறு சற்றுப் பாதுகாப்பான சங்கிலித் துறையில் கடலாடியது நினைவிருக்கிறது.
பின்பு மார்கழி மாதத்தில் கொடியேறி, பொங்கலுக்கு முன்னால் நடக்கும் சுசீந்திரம் தேரோட்டம் அன்று, தேர் நிலைக்கு நின்ற பின், வில் வண்டியோ, சக்கடா வண்டியோ மறுபடியும் பூட்டி, கன்னியாகுமரிக்குப் போய், ஏதோ ஒரு சத்திரத்தில் வாழை இலைத் துண்டில் வைத்துத் தந்த கட்டுச்சோறு தின்றது நினைவிருக்கிறது. கட்டுச்சோறு என்பது நல்லெண்ணெயில் தாளித்த காயம் மணக்கும் புளித்தண்ணீர் காய்ச்சிச் சுடு சோற்றில் ஊற்றிக் கிளறி, ஈயம் பூசிய பித்தளைத் தூக்குப் போணியில் அடைத்தது. வாளியில் கழுத்து வரை சோறு அடைந்த பின் கடலை, கறுப்பு மொச்சை, வடகம், சேனை, முருங்கைக்காய், கத்திரிக்காய், அடமாங்காய் போட்டுச் செய்த தீயலைச் சுண்டவைத்து அதன் மீது வைத்து, அதற்கு மேல் மறுபடியும் புளித்தண்ணீர் தாளித்த சோற்றை வைத்து நிரத்தி மூடுவார்கள்.
சாப்பிட்டு சற்றுச் சாய்ந்து எழுந்ததும் சங்கிலித் துறையில் கடலாடல். நாகமாணிக்க மூக்குத்தி அணிந்த பகவதி அம்மன் தரிசனம். என்று கேட்டாலும் அலுக்காத நாக மாணிக்க மூக்குத்திக் கதை. அதைக் கலங்கரை விளக்கம் என்று நம்பி ஏமாந்து லீபுரம் கடற்கரையில் மணல் தட்டி உடைந்த கப்பல் பற்றிய கதை. வெயில் சாயத் துவங்கும்போது, மேற்கே மணல் தேரி நோக்கி நடை.
மணல் தேரி எனில் மணல் குன்று. அதாவது கடல் மட்டத்தில் இருந்து, கடலலை அடிக்கும் மணல்வெளியில் இருந்து மலர்ந்து சாய்ந்த கோணத்தில் இரண்டு பனை மர உயரத்தில் இயற்கையாக ஒரு மைல் நீளத்தில் அமைந்த மணல் மலை. அதன் குறு வடிவத்தை நீங்கள் பார்க்க வேண்டுமானால், கடலூர் மாவட்டத்தில் தியாகவல்லி கிராமத்துப் பக்கம் இன்றும் காணலாம். இன்றும் காணலாம் என்று எந்த உறுதியில் சொல்கிறேன் என்று தெரியவில்லை.
கடல்கொண்டு பின்பு கடல் மீண்ட சிவன் கோயில் இருக்கும் ஊரது. திருஞான சம்பந்தன் தேவாரம் பாடிய தலம்.
அதைவிடப் பன்மடங்கு வலியது நான் சொல்லி வரும் கன்னியாகுமரியின் மணல் தேரி. சுந்தர ராமசாமி 1975ல் எழுதிய, ‘கன்னியாகுமரியில்’ எனும் கவிதை, அந்த மணல் தேரி அனுபவம்தான்.
சிறு புற்பூண்டுகள் தவிர, வேறெதுவும் முளைத்திரா மணல் தேரியின் உச்சியில் மாந்தர் அமரலாம் எனில் காலடி கடலலை. மேலே இருந்து உட்கார்ந்தவண்ணம் சறுக்கி கடலுக்கு வந்து எழுந்து நிற்கலாம். கரும்பொன், செம்பொன் துகள்கள் மினுங்கும் கடற்புறத்துப் பூமணலை, கடலலைகள் அன்றி எவர் கொணர்ந்து சேகரித்துச் சேர்த்து உயர்த்தி வளர்த்திருக்க இயலும்?
எந்த மாலையிலும் கடற்புறத்தில் இருப்போர் எல்லோரும் சிறியதொரு பொதுக் கூட்டத்துக்குக் கூடுவதைப் போல மணல் தேரியில் சேர்வார்கள். கப்பிச்சாலை முடிவுறும் இடத்தில் தொடங்கும் மணல் மேடு. மொத்த மாந்தர் கூட்டமும் ஒரு கூட்டுப் பிரார்த்தனை போல் மெய்மறக்கும் தருணம் அது. சூரியன் முழுக்க மறைந்து மேற்கின் அடிவானில் குங்குமம் கலங்கும்போது மானுடர் நகரத் தலைப்படுவார்கள். கடலலைகளில் கால் நனைத்தும், முன்னகர்ந்தும், பின்னகர்ந்தும் குதூகலித்துக் களிக்கும் சிறுவர் மனமின்றிக் கரையேறுவார்கள். பெண்டிர், ஒரு நாள் சுதந்திரத்தை ஓர்மையின்றித் தொலைத்துவிட்டு, மறு நாள் கழுத்தில் நுகம் தாங்கும் சலிப்பு எதிர் மறிக்க, எழுந்து நின்று பின்புறத்தில் ஒட்டியிருக்கும் மணலைத் தட்டுவார்கள். குடும்பத் தலைவர்கள் பத்திரமாக வீடு கொண்டுசேர்க்கும் பொறுப்பின் கனம் உணர்ந்து பறத்துவார்கள்.
எவரையும் எதையும் பொருட்படுத்தாமல், கடலலைகள் எழுந்தடங்கும், பூந்தென்றல் ஈரமும் உப்பும் கலந்து வீசும். முடிந்து, பத்தாம் திருவிழா சப்தாவர்ணத்தின்போது, வெள்ளிக் குதிரை வாகனங்களில் வந்திருந்து, திரும்ப யத்தனிக்கும் குமாரகோயில் எனும் வேளிமலை முருகனையும் மருங்கூர் முருகனையும் பிரிய மனமின்றி கோயிலின் உள்ளும் வெளியுமாகத் தட்டழியும் தகப்பன் சாமி தாணுமாலயன் போல் மக்கள் தட்டழிந்து பெயர்வார்கள்.
அதி தேசபக்த இந்தியனால் மகாத்மா காந்தி கொல்லப்பட்ட பின் அவரது அஸ்திக் கலசமொன்று தென் இந்தியாவின் பங்காகக் கன்னியாகுமரிக்கும் வந்தது. கரைத்த இடத்தில் காந்தி மண்டபம் கட்டினர் முதன் முதலில். அஸ்திக் கலசம் வைக்கப்பட்டு இருந்த இடத்தில் அமைந்த சிறு மேடை மீது அக்டோபர் இரண்டாம் தேதி சூரிய ஒளி விழும்படியாக வானவியல் தேர்ந்த பொறியாளர் மண்டபக் கூரையில் சாய்வாகத் துவாரம் ஒன்றும் அமைத்தனர். பின்பு விவேகானந்தர் அமெரிக்கா செல்லு முன் கடல் நீந்தித் தபசிருந்த பெரும்பாறையில் திருப்பாத மண்டபமும் சிலையும் அமைத்தனர். சுற்றுலாப் பயணிகள் சென்று வர, கண்டு வர, வித்தாரமாக விசைப் படகுத் துறைகள், கடலலைக்குத் தடுப்புச் சுவர்கள், அரண்கள் இருவசத்தும் அமைந்தன. தொடர்ந்து வந்தது காமராசர் நினைவு மண்டபம். பின்பு நீச்சல் குளம். அடுத்து கடலில் கிடந்த இரண்டாவது பெரும்பாறையில் விவேகானந்தருக்குத் துணையாக ஞான குருவான ஐயன் திருவள்ளுவனுக்கு அவரது நூற்று முப்பத்து மூன்று திருக்குறள் அதிகாரங்களை நினைவுறுத்த இல்லாவிட்டால் மறந்துபோகும் நமக்கு 133 அடியில் உயரமான சிலை!
1986ல் எனது ‘மிதவை’ நாவலில், மும்பை நகரில் வானைத் துளைக்க முயன்று நெடிதுயர்ந்து நிற்கும் எண்ணற்ற நூற்பாலைப் புகை போக்கிகளை வானத்தைப் புணர யத்தனிக்கும் விரைத்த குறிகளுக்கு உவமை சொன்னேன்.
கிட்டத்தட்ட 1957 முதல் அறியாச் சிறுவனானவன் பார்வையில் பட்டுக்கொண்டிருந்த மணல் தேரி சில காலமாகக் கரைந்து கரைந்து இன்று காணாமற்போய்விட்டது. மணற்பரப்பே இல்லாத மெரினாவை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? லாரி லாரியாக வாரிக்கொண்டு போய் தேசத்தின் சின்னப் பிதாக்கள் விற்றும் தீராத குன்று அது. சன்னஞ் சன்னமாக அலையடித்து அலையடித்து கடல் கொண்டுவந்து சேர்த்த இயற்கைப் பண்டத்தை மறுபடி கடல் கவர்ந்து சென்றுவிட்டது.
இன்றைய இளம் பிள்ளைகளுக்கு கடல் இருக்கிறது, சாலை இருக்கிறது, கடற்காற்று இருக்கிறது, மணிமண்டபங்கள் உள்ளன, சூரிய அஸ்தமனம் உண்டு, கணக்கற்ற விருந்தினர் விடுதிகள் காணலாம், கடை கண்ணிகள் ஏராளம். ஆனால், மணல் தேரி இல்லை. இருந்த இடத்தில் கருங்கற் பாளங்கள் கொட்டப்பட்டு வேறேதோ கட்டுமானப் பணிகள் நடக்கின்றன.
கடலுக்கேன் மனித குலத்தின் மீது இப்படியோர் வெஞ்சினம் என்றுனக்குத் தோன்றலாம் தோழனே!
சென்ற முறை ஊருக்குப் போனபோது, மணல் தேரி இருந்த இடத்தில் கடலுக்குக் காவலாகக் கட்டப்பட்டிருந்த தடுப்புச் சுவரில் உட்கார்ந்து நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தபோது மணல் தேரி பற்றிப் பேச்சு வந்தது. எங்கள் பக்கம் உட்கார்ந்து பீடி புகைத்துக்கொண்டு இருந்த 80 வயது மதிக்கத்தக்க கிழவர் சொன்னார்…
”கேட்டேளா, மக்களே! சங்கதி அதுல்ல பார்த்துக்கிடுங்க… பாறைக்குப் போக போட் ஜட்டி கெட்டுதுக்கும் அலையடி மறிக்கதுக்கும் கடலுக்குக் குறுக்க கொஞ்ச தூரத்துக்குக் கல்லடுக்கிச் செவுரு வெச்சால்ல, அப்பம் தொடங்கினதாக்கும்… அலையடி மாறிப்போச்சுல்லா! நூறு வருசங்கொண்டு கரை சேத்த மணலைக் கடலு நெனைச்சா, மூணு வருஷத்துல கொண்டுக்கிட்டுப் போயிராதா? இனி ஊவன்னா போட வேண்டியதுதான். கடலு நமக்கு வேலைக்காரியா? வான்னா வாறதுக்கும் போன்னா போறதுக்கும்!”
உண்மையாக இருக்கலாம், கரையற்ற கற்பனையாகவும் இருக்கலாம். கட்டுமானப் பொறியாளர்களுக்கு எட்டியும் இருந்திருக்கலாம், எட்டாமலேயே போயும் இருந் திருக்கலாம்.
எதுவாயினும் நட்டம் யாருக்கு?
***********

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to கன்னியாகுமரி

  1. பாலா,சிங்கப்பூர் சொல்கிறார்:

    அருமையான பதிவு !

  2. rathnavel natarajan சொல்கிறார்:

    அருமையான பதிவு. ஆனால் கன்யாகுமரி கடற்கரையின் அழகை கெடுத்து விட்டார்கள். தற்போது திருவிழா கடைகளுக்குள் சென்ற மாதிரி தான் இருக்கிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s