ஓட்டுக்காக வருகிறார்கள்!

நாஞ்சில் நாடன்
அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள்…
குளிரூட்டப்பட்ட வெளிநாட்டு வாகனங்களில் வந்து இறங்கி, புழுதி பரந்திருக்கும், பாவிய கற்கள் பெயர்ந்திருக்கும், சாக்கடை தேங்கி இருக்கும், பன்றிகள் மேய்ந்திருக் கும், தெரு நாய்கள் வெயில் பொறாது நாத்தொங்க நீர் வடித்து, இளைத்து நிழல் ஒதுங்கிக் கிடக்கும் உங்கள் தெருக்களில், சந்துகளில், முடுக்குகளில், இரு கரம் கூப்பி, எப்பக்கமும் தொழுது, புன்முறுவல் தேக்கி, உடன்பிறந்தவளைப் பார்க்க வரும் தூர தேசத்துத் தமையன் போல…
அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள்!
பிள்ளை பிடிக்காரர்களைப் போல அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள். முதுகில் வலிய கோணிப்பை இருக்கிறதா என்று தேடாதீர்கள். அதை அவர்களைத் தொடர்ந்து வரும் மாமாக்கள் வைத்திருப்பார்கள், கண்ணுக்குத் தெரியாமல் கட்கங்களில் சுருட்டி!
‘பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக என
ஆதிரை இட்டனள் ஆருயிர் மருந்து’
என்று மணிமேகலை பாடும் ஆதிரையின் அட்சயப் பாத்திரம் போல அவர்கள் வாய் அமைந்துள்ளது. எதைக் கேட்டாலும் தரும்; எத்தனை கேட்டாலும் தரும்.
ஆயர்பாடிக் கண்ணன் வாய் அகலத் திறந்து காட்டினால் ஈரேழு பதினான்கு உலகங்களும் தெரியும் என்பார்கள். ஆனால், வந்துகொண்டு இருப்பவர் வாயோ எதையும் வழங்க வல்லது.
‘அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்’ எழுதிய அய்யன் திருவள்ளுவர் சிலை, 18 ஆண்டுகளாகக் கோணிச் சாக்கில் பொதியப்பட்டு பெங்களூரில் அமர்ந்துள்ளது. திறக்கப்பட வேண்டுமா? 30 ஆண்டுகளாகச் சொல்லி வரும் குளச்சல் துறைமுகம் விரிவாக்கப்பட வேண்டுமா? சேது சமுத்திரத் திட்டமா? ஒகேனக்கல் குடிநீர்த் திட்டமா? காவிரி நதி நீர்ப் பங்கீடா? முல்லைப் பெரியாறு அணை வழக்கா? நறும்புனல் ஓடும் நாவாய் ஓடும் கூவம் மணக்கும் திட்டமா? இந்திய நதிகளை இணைத்துக் காசியில் ஏறி, குமரியில் இறங்க வேண்டுமா கப்பல்களில்? 543 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பொறியியற் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, பொதுமருத்துவமனைத் திட்டமா? போக்குவரத்து நெரிசல் குறைக்க எல்லா மாநிலத் தலைநகர்களிலும் குழாய் ரயில் அல்லது பறக்கும் ரயில் திட்டமா? போத்தல்களில் அடைத்த சுத்தமான இலவசக் காற்றுத் திட்டமா… எது வேண்டும் உங்களுக்கு? வாரி வழங்குவார்கள், வாய் எனும் அட்சய பாத்திரம்கொண்டு! வாயில் எங்கிருந்து வாக்குறுதிகள் முளைத்துக் கிளைத்து வருகின்றன என்று முனிவனும் விஞ்ஞானியும் ஞானியும் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.
68 கிரிமினல் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளவர்கள் வருவார்கள். குற்றம் நிரூபிக்கப்படாத வரைக்கும் அவர்கள் நிரபராதிகளே என்கிறது சட்டம். இந்தியத் துணைக்கண்டத்தில் குற்றம் வெகு வேகமாக நிரூபிக்கப்பட்டுச் சிறை செல்லும் பாக்கியம் உடையவர்கள் பெரும்பாலும் ராப்பட்டினிக்காரர்கள். அவர்கள் நீதி வாங்கும், விற்கும் வக்கும் சிறுவாடும் இல்லாதவர்கள். அவர்களைப் பற்றி இங்கு நமக்குப் பேச்சில்லை. 20 கொலைகளில் குற்றம் சாட்டப்பட்டு என்கவுன்ட்டர் எனும் அதி நவீன நீதி வழங்கலில் கொலைப்பட்டவர்களின் இளம் விதவைகள் வருவார்கள், தமது அதி மேதாவிலாச அரசியல் அறிவுடன். ஊழல் குற்றம் நிரூபிக்கப்பட்ட, பதவி துறந்த தேசத் தலைவர்களின் மனைவிகள், மைத்துனிகள் வந்துகொண்டு இருக்கிறார்கள். பத்தாயிரம் கோடிகள் வரவு-செலவு செய்கிறவர்களுக்கு ஊழியம் செய்யும் முகவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள். இனத் துரோகிகள், மொழித் துரோகிகள், மக்கள் விரோதிகள், நாட்டு விரோதிகள் வந்துகொண்டு இருக்கிறார்கள். சாதியின், மதத்தின் பெயரால் கொலை செய்தவர்கள் வந்து நிற்பார்கள். 8 ரூபாய் பொருளை 88 ரூபாய்க்கு விற்கும், தேச நிர்மாணத்துக்கு உழைக்கும், தன்னலம் கருதாத வணிகர் வந்துகொண்டு இருக்கிறார்கள்.
சாலையில் குப்பை பொறுக்கும் 12 வயதுச் சிறுவர் போல, வாக்குப் பொறுக்குகிற மூன்றாவது இளைய தலைமுறையினர் வந்துகொண்டு இருக்கிறார்கள். ‘வாக்குப் பொறுக்கிகள்’ எனும் தலைப்பில் 1985-ல் வெளியான எனது சிறுகதைத் தொகுப்பு ஒன்று, பல்கலைக் கழகப் பாடத்திட்டத்தில் இருந்து தலைப்பு காரணமாக நீக்கப்பட்டது. வாக்கு என்பது பொறுக்கப்படுவது என்பது இன்று நிரூபணமாகிய ஒன்று.
ஆண்ட, ஆளுகிற வர்க்கத்தின் இளைய தலைமுறை அவர்கள். தியாகத் தழும்புகள் ஏற்றவர். இளைய இந்தியரின் உள்ளாடைகளை உருவி எடுத்துக் கொடிகளாக ஆட்டிக்கொண்டு, அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள்.
பாலம் கட்டிய ஊழல், பருப்பு இறக்குமதி ஊழல், சுடுகாடு கட்டிய ஊழல், மணற்கொள்ளை ஊழல், கற்குன்றுகள் களவாடிய ஊழல், மாட்டுத் தீவன ஊழல், வங்கிக் கடன் ஊழல், சிமென்ட் இறக்குமதி ஊழல், நிலக்கரி ஊழல், பங்குச் சந்தை ஊழல், தொலைத்தொடர்பு ஊழல் எனப் பட்டியல் போட்டால் ஆனந்த விகடனின் பக்கங்கள் தீர்ந்துபோகும். ஊழல் குற்றம் சாட்டப்பட்டவர் எல்லாம் பட்டாளக் காரர் போல் கால் வீசி, கை வீசி, கன கம்பீரமாக, இயந்திரத் துப்பாக்கிப் பாதுகாப்புடன் வந்துகொண்டு இருக் கிறார்கள்.
ஞாபகம் இருக்கிறதா, போபாலில் விஷவாயு கசிந்து ஆயிரக்கணக்கில் மக்கள் மரித்து நட்ட ஈடு கேட்டு, 30 ஆண்டுகளாக வழக்கு நடந்துகொண்டு இருப்பது?
ஞாபகம் இருக்கிறதா, பாரதப் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் வதைக்கப்பட்டு, இன்னும் குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் 25 ஆண்டுகளாக வழக்கு நடப்பது?
ஞாபகம் இருக்கிறதா… இனத்தை, மொழியை, பண்பாட்டை, வாழிடத்தைக் காக்க நமது உடன் பிறப்புகள் 25 ஆண்டுகளாக ஈழத்தில் ஆயிரமாயிரம் உயிர் ஈந்து போராடி வருவது?
எனினும், அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள்.
சீனாவில் தயாரிக்கப்பட்ட கட்சிக் கொடிகள் பட்டொளி வீசிப் பறக்க, பல வர்ணப் பதாகைகளோடு அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள்.
அவர்களில் ஐந்தாம் வகுப்பு தோற்றவர் இருப்பார், ஆர்வர்டில் பயின்றவர் இருப்பார். மருத்துவர், பொறி இயலாளர், வழக்குரைஞர், விஞ்ஞானியர், வியாபாரிகள், தொழில் முனைவோர் இருப்பார்கள்.
234 அரச குமாரிகளுக்கான சுயம்வரத்தில் பங்கேற்க 5,000 அரசிளங்குமரர்கள் வருகிறார்கள். வில்வித்தை கற்றதில்லை; ஆனால், சொல்வித்தை தெரியும்.
‘கும்பி எரியுது, குடல் கருகுது, குளுகுளு ஊட்டி ஒரு கேடா?’ என 45 ஆண்டுகளுக்கு முன்பு முழங்கியவர்கள் இன்று தாமே கொடைக்கானலாக, ஊட்டியாக, குலுமணாலியாக, சிம்லாவாக நடமாடி வருகிறார்கள்.
எல்லா இந்தியனுக்கும் வீடு, வீட்டுக்கொரு பால் மாடு, மாடு மேய இரண்டு ஏக்கர் தோட்டம், தோட்டந்தோறும் ஊறும் கிணறு, கிணறுகளுக்கெல்லாம் பம்புசெட், பம்பு செட்டுகளுக்கு எல்லாம் இலவச மின்சாரம் என சகல இலவசத் திட்டங்களோடும் அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள்.
ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் மிமிக்ரி செய்துகொண்டும் கலையுலக பழைய, புதிய கலைத் தளபதிகள் வந்துகொண்டு இருக்கிறார்கள். கள்ளப் பணம் வாங்குகிற, வரிகள் கட்டாத, ஏழை எளிய மக்கள் பைக்குள் கை விட்டுக் காசு எடுக்கிற புரட்சிகள், தளபதிகள், திலகங்கள், குரிசில்கள், குன்றுகள் யாவரும் அணியணியாக வந்துகொண்டு இருக்கிறார்கள். இந்தியக் குடி மக்களுக்கு சேவை சாதிப்பது ஒன்றே அவர்தம் சங்கல்பம். கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், சிலம்பாட்டம், துகிலுரிந்த இசைத்தட்டு நடனம் என அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள்.
ஈழத் தமிழனுக்கான ஆதரவுக் கோஷம் விண்ணைத் துளைக்க அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள்.
ஆடு வெட்டிப் பந்திவைக்க, சீமைச் சாரயப் பந்தல் நடத்த, ஊதா நிறக் காந்தித் தாட்கள் வழங்க, குடம், குத்துவிளக்கு, தாலி, தாம்பாளம், தட்டுமுட்டுச் சாமான்கள் தானம் தர அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள்.
இது மக்களாட்சி. ‘நான் ஆண்டேன், என் மகன் ஆள்கிறான், பின்பு அவன் மகன் ஆள்வான். நாடாள எனப் பிறந்த நற்குடியினர் நாங்கள்’. பிரியாணிப் பொட்டலத்துக்கும் கால் குப்பி மதுவுக்கும் கோஷம் போடப் பிறந்தவர் ஏனையோர் என்பது அவர்கள் தீர்மானம்.
கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியச் சிறைச்சாலை களில் மாண்டவர் 7,500. கடந்த 10 ஆண்டுகளில் தற்கொலை செய்த விவசாயிகள் 2 லட்சம் பேர். ஒரு இந்தியனின் சொத்து மதிப்பு 2,49,000 கோடிகள். ஆனால், 28 கோடி பேர் இங்கு இரவில் பசியோடு தூங்கப் போகிறார்கள். சுதந்திரம் பெற்ற 62 ஆண்டு களில் இந்நாட்டை ஒரு கட்சி 50 ஆண்டு காலம் ஆண்டுள்ளது. அதில் ஒரே ஒரு குடும்பம் 40 ஆண்டுக் காலம் ஆண்டது.
உலகின் சிறந்த ஆட்சித் தத்துவமான மக்களாட்சிக் கொடியேந்தி அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள். இட்ட அடி நோக, எடுத்த அடி கொப்பளிக்க, பொன் வட்டில் சுமந்து மருங்கே, தோளோ அசைய…
மிகப் பெரிய ஜனநாயக நாடு இது. மொத்த மக்கள்தொகை 112 கோடி. அதில் 8 கோடிப் பேர் சாலைகள், மின்சாரம், குடி தண்ணீர், கல்விச் சாலை, மருத்துவ வசதி இல்லாத காடுகளில் வாழ்கிற ஆதிவாசிகள். அதிகக் கல்வி பெற்ற, பெண் வாக்காளர் அதிகம் உள்ள கேரளாவில், கடந்த 57 ஆண்டுகளில் வெறும் ஏழே பெண்கள்தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள். நடப்பு நாடாளுமன்றத்தில் வெறும் 45 பேர்தான் பெண்கள். என்றாலும், கடையனுக்கும் கடைத்தேற்றம், பெண்களுக்குச் சம உரிமை என்று வாயகன்ற கூக்குரல்களோடு அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள்.
வந்தவுடன் தளர்ந்தது போல் குடிக்கத் தண்ணீர் கேட்பார்கள். சிலர் பழைய சோறு, கூழ் கேட்டு வாங்கிப் பருகுவார்கள். குழந்தைகளை வாங்கி, மூக்குச் சிந்தி முத்தம் கொடுப்பார்கள். கையில் 500, 1,000 தாள் கொடுப்பார்கள். மூதாட்டிகளைத் தோளோடு அணைத்துக்கொள்வார்கள். பருவப் பெண்களைப் பார்த்தால், நெஞ்சோடு சேர்த்துக்கொள்ள ஆசை அற்றவர்கள் அல்ல. ஆனால், இந்தியன் அதற்கு மேல் தாங்க மாட்டான் என்பது தெரியும். தலித்துகளைக் கூடப்பிறப்புகள் என்பார்கள். வெளியில் மட்டும் பார்ப்பன எதிர்ப்புக் காட்டு வார்கள்.
சாதனைகளை விளக்குவார்கள். பினாமி சொத்துக்கள், சுவிஸ் வங்கிக் கணக்கு பற்றிப் பேச மாட்டார்கள். அவர்களுக்கு நுனி நாக்கு ஆங்கிலமும் தெரியும்; குப்பத்துத் தமிழும் தெரியும்.
வழியெங்கும் அவர்களைக் கோவலனே, காவலனே, ஞானப் பிழம்பே, இனமானக் கீற்றே, சாக்ரடீஸே, அலெக்சாண்டரே என்று மதக் களிறு போல் நடந்து வரும் ஃப்ளெக்ஸ் போஸ்டர்கள் கட்டியம் கூறும். நன்னடை இல்லாதவன் நடந்து வரும் தோரணையில் கொம்பன் யானைகள் தோற்றுப் போகும். கம்பந் தோறும் கட்சிக் கொடிகள் மக்களை மிரட்டிக்கொண்டு இருக்கும்.
அன்று புலவர் பட்டினி போக்கப் பாடிப் பொருள் பெற்றனர். இன்று பளிங்கு மாளிகை, படகுக்கார் பாவலர்கள், நாப் பாவாடை விரிக்கின்றனர். பட்டங்களைக் கழுதை போல் சுமந்துகொண்டும், கந்தலாடைப் புலவர்களின் வாரிசு என்று சொல்லிக்கொண்டும் வருகிறவர்களுக்கு இது கொய்தல் காலம். உண்ணா நோன்பு இருப்பார்கள்; பேரணி நடத்துவார்கள்; மனிதச் சங்கிலி கோப்பார்கள். ஆளுக்கு நான்கு ஆஸ்கர் வாங்குமளவு நடிப்பதில் திறமைசாலிகள் அவர்கள்.
அவர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள்.
கூட்டம் கூட்டமாக, மந்தை மந்தையாக, சாரி சாரியாக, அணியணியாக, அலையலையாக!
பல்லும் நகமும் தவிர, வேற்று ஆயுதம் உண்டா நமக்கு? உண்டு. வாக்குச் சீட்டு என்பது. ஆனால், உடைவாள்கொண்டு முதுகு சொறிபவர் நாம். நாகாஸ்திரம், பாசுபதாஸ்திரம் கொண்டு புளியங்காய் அடிப்பவர் நாம். நமது ஆயுதத்துக்குத் தெரு நாய்கூட அஞ்சுவதில்லை.
ஆயுதங்களைப் பயன்படுத்த அறியாதவருக்கு ஆயுதம் எதற்கு? ஒரு வாக்கின் சராசரி இந்திய சந்தை விலை ஆயிரம் ரூபாய் என்பது உங்களுக்கும் தெரியும். அதைச் சேகரிக்க வருபவரின் பேராசைக் கண்களில் விரியும் பெரும் சாம்ராஜ்யங்களின் மதிப்பு என்னவாக இருக்கும்? உங்களால் மதிப்பீடு செய்யவும் இயலாது.
உங்களை யோசித்து முடிவெடுக்க நேரம் கூடத் தராமல் மூச்சுப் பிடித்து வேகமெடுத்து அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள். விற்பனைக்குத் தயாராக இருக்கும் உங்களை நம்பித்தான் வந்து கொண்டு இருக்கிறார்கள்.
ஆம்… வந்துகொண்டே இருக்கிறார்கள்!
**********************************************

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சிலின் தேர்தல் 2011 and tagged , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

16 Responses to ஓட்டுக்காக வருகிறார்கள்!

  1. Salemdeva சொல்கிறார்:

    ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்..!!

  2. Jayaprakashvel சொல்கிறார்:

    இந்த முறையாவது நமது வாக்காயுதத்தை சரியாகப் பயண்படுத்துவோம்.

  3. ramji_yahoo சொல்கிறார்:

    இந்த வரிகள் விடு பட்டு உள்ளனன.
    அந்த அரசியல் வாதிகள் பின்னால் , வாக்குகளை எட்டாயிரம் ரூபாய்க்கு வெட்கம் இல்லாமல் விற்று விடும் வாக்காளர்களாகிய நாமும் வந்து கொண்டு இருக்கிறோம்

  4. alagamperumal சொல்கிறார்:

    ஆதிரையோட அட்சயப் பாத்திரத்திற்க்கு அவனுக வாய compare பண்ணது தப்பா படுது… அதாவது பசிப்பிணி அறுக்கும்…
    கண்ணன் ஓகே…எல்லாத்தயும் கபளீகரம் பண்ணுவான்….[சினிமால பாத்ததுதான்]
    வாங்க அண்ணாச்சி! நம்மளும் ஜோதில கலப்போம்… ஏன் இப்படில்லாம் எழுதி டென்ஷனாகி உடம்ப கெடுத்துக்கீறீங்க…

  5. radhakrishnan சொல்கிறார்:

    oh,god,
    save us from these people.when? when? when?

  6. Ganpat சொல்கிறார்:

    வணக்கம்

    இந்த வலைதளம் பற்றி எனக்கு ஒரு ஐயம்!
    இதில் வரும் பதிவுகள் அனைத்தும் நா.நா
    எழுதியதா?
    உதாரணத்திற்கு “அரசியல்வாதிகள் வந்துகொண்டு இருக்கிறார்கள்”
    எழுதியது நா.நா. வா (அ) S.I.S ஆ?
    அருமையான வலைத்தளம் !நேரம் போவதே தெரிவதில்லை.

    நன்றி!

    • SiSulthan சொல்கிறார்:

      தலைப்பு, மற்றும் படங்கள் மட்டும் சுல்தானின் அலங்காரங்கள், மற்றபடி எந்த கட்டுரையிலும் சுல்தானின் எந்தவித இடை சொறுகலோ,திருத்தங்களோ கிடையாது, ஒரேஒரு நம்பரைதவிர? (??). அனைத்து எழுத்துக்களும் கட்டுரைகளும் நாஞ்சில்நாடன் எழுதியதும், அவரைப்பற்றி, அவரது எழுத்துக்களை பற்றி மற்றவர்கள் இணையத்தில் எழுதியதுமேயாகும். நான் செய்வதெல்லாம் அங்கிருந்து வெட்டி, இங்கு ஒட்டுவது மட்டுமே. சுல்தானாகிய நான் எந்த காலத்திலும் நாஞ்சிலின் கதை கட்டுரைகளினைபோலவோ, அல்லது யாரைபோலவுமோ ஒரு பக்கம் கூட எழுதும் திறமை வாய்த்தவனில்லை.

  7. durai@vidyashankar சொல்கிறார்:

    real moral angry. now most of the writters lost it-durai

  8. radhakrishnan சொல்கிறார்:

    dear sulthan,

    only because of your laudable efforts, many people like me(new entrants)could read up to date articles of nanjil.thank u very much for the same.

  9. இதை வாசிப்பதோடு விட்டுவிடாமல் நமது நண்பர்களுக்கு மின்னஞ்சலாக அனுப்பலாம். சரியான சமயத்தில் இதை எடுத்து இருக்கீங்க. தீதும் நன்றும் தொடராக வந்த போதே வாசித்து சிரித்துக்கொண்டும் யோசித்துக்கொண்டும் இருந்தேன். நன்றி.சுல்தான் அவர்களுக்கும் நன்றிகள் பல

  10. Rathnavel Natarajan சொல்கிறார்:

    நல்ல கட்டுரை.
    படிக்கும் போது இவர்களை நினைத்தால் மனசு கொதிக்கிறது.
    இங்கு ஸ்ரீவில்லிபுத்தூரிலும் தேர்தலுக்காக சில பிரச்னைகள் வைத்திருக்கிறார்கள்.
    அழகர் அணை திட்டம், கூட்டுறவு நூற்பாலையை மறுபடியும் திறப்பது, வத்திராயிருப்பு வழியாக வருஷ நாட்டிற்கு சாலை போடுவது, வத்திராயிருப்பு வழியாக சபரிமலைக்கு சாலை போடுவது.
    ஆனால் பிரச்னைகளை அப்படியே பராமரிக்கிறார்கள்.
    நன்றி ஐயா.

  11. Jeyakumar சொல்கிறார்:

    //எல்லா இந்தியனுக்கும் வீடு, வீட்டுக்கொரு பால் மாடு, மாடு மேய இரண்டு ஏக்கர் தோட்டம், தோட்டந்தோறும் ஊறும் கிணறு, கிணறுகளுக்கெல்லாம் பம்புசெட், பம்பு செட்டுகளுக்கு எல்லாம் இலவச மின்சாரம் என சகல இலவசத் திட்டங்களோடும் அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள்.//

    இதுதான் உறுதிமொழிகளிலேயே டாப்பு..

    //பல்லும் நகமும் தவிர, வேற்று ஆயுதம் உண்டா நமக்கு? உண்டு. வாக்குச் சீட்டு என்பது. ஆனால், உடைவாள்கொண்டு முதுகு சொறிபவர் நாம். நாகாஸ்திரம், பாசுபதாஸ்திரம் கொண்டு புளியங்காய் அடிப்பவர் நாம். நமது ஆயுதத்துக்குத் தெரு நாய்கூட அஞ்சுவதில்லை.
    ஆயுதங்களைப் பயன்படுத்த அறியாதவருக்கு ஆயுதம் எதற்கு? //

    எவ்வளவு உண்மையான கேள்விகள்.. நமது தராதரத்திற்கேற்பவே நம்மை ஆள்பவனும் கிடைப்பான்.

  12. Venkatramanan சொல்கிறார்:

    அன்பின் சுல்தான்!
    நல்லதொரு முயற்சி.
    “தேர்தல்-நாஞ்சில்-2011” (அல்லது அதுபோல ஏதோ ஒரு வகைமைக்குள்) இவற்றை வகைப்படுத்தலாம்.

    அன்புடன்
    வெங்கட்ரமணன்

  13. sid சொல்கிறார்:

    nicely written

  14. சு இளைய குமார் சொல்கிறார்:

    நெஞ்சைச் சுடும் நிஜம்…இன்று உண்மையிலேயே அரசியல் கட்சியின் இலவச அறிவிப்புகளில் நான்கு ஆடுகள், மாடு எல்லாம்…..எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?

    • ராமானுஜம் கோவி சொல்கிறார்:

      சுடும், சுட்டும் கருத்துக் கோர்வை.

      நடை தளராமல் கொஞ்சம், கொஞ்சமாகத் தந்தால்
      முழுவதும் உள் வாங்கலாம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s