சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்-பள்ளும் குறமும் 2

http://solvanam.com/?p=16827
நாஞ்சில்நாடன்
 மத்தியானம் சாப்பிட்ட நெல்லரிசிச் சோற்றின் பெயர் தெரியாமற் போய் விட்டோமே நாம் இன்று? எங்கே போயின இந்த நெல்லினங்கள்? விதையாவது எங்கேயும் கருதப் பட்டிருக்குமா? நெல்வகை போக, மாட்டு வகை சொல்கிறான் பள்ளன்.
குடைக் கொம்பன் செம்மறையன் குத்துக் குளம்பன் மேழை
குடைச் செவியன் குற்றாலன் கூடு கொம்பன்
வடர்ப் புல்லை கரும்போரான் மயிலை கழற்சிக் கண்ணன்
மட்டைக் கொம்பன் கருப்பன் மஞ்சள் வாலன்
படப்புப் புடுங்கி கொட்டைப் பாக்கன் கருமறையன்
பசுக்காலன் அணிற்காலன் படலைக் கொம்பன்
விடர்த்தலைப் பூ நிறத்தான் வெள்ளைக் காளையும் இந்த
உண்டு ஆயிரமே!
பசுவையும் காளையையும் எருமையையும் எருமைக் கடாவையும் மாடு என்றழைக்கும் பருவத்துக்கு வந்து விட்டோம் நாம். இந்த யோக்கியதையில் மாட்டின் சுழிகள் பற்றியும் அவற்றுள் யோகச் சுழிகள் எவை, யோகமற்ற சுழிகள் எவை என்றும் சொன்னால் நமக்கு என்ன விளங்கும்? தாமணிச் சுழி, இரட்டைக் கவம், பாஷிகம் சுழி, கோபுரச் சுழி, நீர்ச் சுழி, ஏறு பூரான், லக்ஷ்மிச் சுழி, பட்டிச் சுழி, வீபூதிச் சுழி, ஏறு நாகம் என்பன நல்ல சுழிகள் என்றும் முக்கண் அல்லது அக்னிச் சுழி, குடைமேல் குடை, ஒத்தைக் கவம், விளங்குச் சுழி, பாடைச் சுழி, பெண்டிழந்தான் சுழி, இறங்கு பூரான், நாகபடம், அவற்றுள் முன்னாகம், பின்னாகம், தட்டுச் சுழி, துடப்பச் சுழி, விறிக்கட்டு அல்லது புட்டாணிச் சுழி, ஏழு கட்டுப் பாடைக் கட்டு, வால் முடங்கி, இறங்கு நாகம் என்பன தீய சுழிகள் என்றும் பள்ளனால் அடையாளம் கண்டிருக்க இயலும்.
சுழிகள் என்றால் என்ன, அவற்றின் இடம், இருப்பு, பயன்கள் என்ன என்று அறிய ஆவல் உடையவருக்கு இங்கு நான் ஒரு புத்தகம் அறிமுகம் செய்வேன்.
“The Kangayam Cattle- A Retrospective and Prospective Study,” by S. Panneerselvam and N. Kandasamy, Published by Tamilnadu Veterinary and Animal Sciences University, chennai – 600 051.
இனி நாம் முக்கூடற்பள்ளுவுக்குத் திரும்பலாம். பள்ளன் மனைவிகள் மூத்த பள்ளி, இளைய பள்ளி ஏசல் சுவாரசியமானது. ஏசி, ஏசி, தத்தம் எதிரிகளின் கடவுளரை வசை பாடுவதில் வந்து சேர்கிறது. ஒரு நினைவூட்டலுக்காக- மூத்த பள்ளி வைணவம், இளைய பள்ளி சைவம். கவி காளமேகம் பாடல் போல், ஏசலுகுள்ளே ஏழெட்டு புராணங்கள் பொதிந்து கிடக்கின்றன. புராணம் தெரியாதார், ஆர்வமிலாதார், தாண்டிப் போய் விடலாம். ஏனெனில் எனக்கு உரை சொல்லும் உத்தேசம் இல்லை.
மூத்தாள் : தான் பசுப் போல் நின்று கன்றைத்
தேர்க்காலில் விட்டுச்- சோழன்
தன் மகனைக் கொன்றான் உங்கள்
தாணு அல்லோடி
இளையாள்: வான் பழிக்கு உள்ளாய்த் தவசி
போல மறைந்தே- நின்று
வாலியைக் கொன்றான் உங்கள்
மாயன் அல்லோடி
மூத்தாள்: வலிய வழக்குப் பேசி
சுந்தரன் வாயால் அன்று
வையக் கேட்டு நின்றான் உங்கள்
ஐயன் அல்லோடி
இளையாள்: புலி போல் எழுந்து சிசு
பாலன் வையவே- ஏழைப்
பூனைபோல் நின்றான் உங்கள்
நீலன் அல்லோடி
மூத்தாள்: அடியனும் நாயனுமாய்க்
கோயில் புறகே – தொண்டன்
அன்று தள்ளப் போனான் உங்கள்
ஆதி அல்லோடி
இளையாள்: முடியும் சூடாமலே கை
கேசி தள்ளவே- காட்டில்
முன்பு தள்ளிப் போனான் உங்கள்
மூர்த்தி அல்லோடி
மூத்தாள்: சுற்றிக் கட்ட நாலு முழத்
துண்டும் இல்லாமல் – புலித்
தோலை உடுத்தான் உங்கள்
சோதி அல்லோடி
இளையாள்: கற்றைச் சடை கட்டி மர
உரியும் சேலைதான்- பண்டு
கட்டிக் கொண்டான் உங்கள் சங்குக்
கையன் அல்லோடி
மூத்தாள்: நாட்டுக்குள் இரந்தும் பசிக்கு
ஆற்ற மாட்டாமல் – வாரி
நஞ்சை எல்லாம் உண்டான் உங்கள்
நாதன் அல்லோடி
இளையாள்: மாட்டுப் பிறகே திரிந்தும்
சோற்றுக் கில்லாமல் – வெறும்
மண்ணை உண்டான் உங்கள் முகில்
வண்ணன் அல்லோடி
மூத்தாள்: ஏற ஒரு வாகனமும்
இல்லாமையினால்- மாட்டில்
ஏறியே திரிந்தான் உங்கள்
ஈசன் அல்லோடி
இளையாள்: வீறு சொன்ன தென்ன மாடு
தானும் இல்லாமல் – பட்சி
மீதில் ஏறிக் கொண்டான் உங்கள்
கீதன் அல்லோடி.
பள்ளுப் பாடல் இசைப்பாடல் என்று முன்பே சொன்னோம். ஒரு ஏசலில் பேசப்படும் புராணங்கள் எத்தனை? மேலும் நிந்தாஸ்துதி வகையிலான இந்த ஏசல் பாடல்கள் வாசிக்க சுகம் தருபவை.
நிந்தாஸ்துதிப் பாடல்கள் கேட்கப் பிரியப்படுகிறவர்கள் என்.சி. வசந்தகோகிலம் இசைக் குறுவட்டுகள் கேட்கலாம். உடனடியாக எனக்கு ஞாபகம் வரும் பாடல், “தந்தை தாய் இருந்தால் உமக்கிந்த குறை எல்லாம் வருமோ ஐயா,” எனத் தொடங்குவது.
குற்றாலக் குறவஞ்சி
குறி சொல்லும் மரபில் வந்த குறத்தி பாட்டு இது. குற்றாலம் என்பதுதான் பண்டைய தலப்பெயர். திரு எனும் முன்னொட்டு, சிறப்புக் கருதி வழங்கப்பட்டு, திருக்குற்றாலம் ஆயிற்று. மேலகரம் திரிகூட ராசப்பக் கவிராயரால் இயற்றப் பெற்றது.
காலம் 17-ம் நூற்றாண்டின் பிற்பகுதி, 18-ம் நூற்றாண்டின் முற்பகுதி என்பர். திரிகூட ராசப்பக் கவிராயர் தலபுராணம், கோவை, குறவஞ்சி, என 14 பிரபந்தங்கள் தந்தவர். யாவும் தமிழ் கொஞ்சும் பிரபந்தங்கள்.
தலைவன் உலாப்ப் போகும்போது தலைவி கண்டு அவன் மேல் கொள்ளும் காதல், அவளுக்கு குறத்தி குறி சொல்லுதல், குறவன்- குறத்தி காதல் என சுவாரசியமான பகுதிகள் கொண்டது.
வெண்பா, அகவற்பா, விருத்தப்பா, சிந்து, கண்ணி எனப் பல்வகைப் பாக்களும் பாவினங்களும் விரவி வரும் இதனுள்.
குற்றாலக் குறவஞ்சியில், வசந்தவல்லி பந்தாடும் பாடல், 14 வயதில் படித்தது, இன்றும் நெஞ்சில் நீங்காது இருப்பது. மொழியழகும் ஓசை நயமும் எதுகை மோனைச் சிறப்பும், பந்தடிக்கும் காட்சி மனக்கண்ணில் எழும் நேர்த்தியும் கொண்ட பாடல்.
செங்கையில் வண்டு கலின் கலின் என்று செயம் செயம்
என்றாட- இடை
சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு தண்டை
கலந்தாட – இரு
கொங்கை கொடும்பகை வென்றனம் என்று குழைந்து
குழைந்தாட – மலர்ப்
பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி
பந்து பயின்றாளே!
எங்காவது, என்றாவது வாய்ப்பு கிடைத்தால், எனது எட்டாவது வகுப்பு தமிழாசிரியர் வாசித்துக் காட்டிய விதத்தில் இந்தப் பாடலை உங்களுக்கு வாசித்துக் காட்ட மனம் அவாவுகின்றது. பந்தடிக்கும்போது சூடியிருந்த மலர்களில் அமர்ந்திருந்த வண்டுகள் பறந்து மீண்டும் அமர்ந்து இடைக்கு அனர்த்தம் செய்கின்றன, எனவே இடை இன்று சங்கதம் ஆகிவிடும் என இரங்கி, காற்சிலம்பு புலம்புகின்றது. ஆனால் கொங்கைகளோ இன்று தமது கொடும் பகையான இடையை வென்றனம் என்று குழைந்து குழைந்து ஆடுகின்றன என்பது பாடலில் ஏகதேசமான பொருள்.
பந்தடிக்கும்போது பாடலின் சந்தம், பந்து விளையாட்டின் வேகத்தைச் சார்ந்து மாறுகிறது.
மந்தர முலைகள் ஏசலாட, மகரக் குழைகள் ஊசலாட
சுந்தர விழிகள் பூசலாட, தொங்கத் தொங்கத் தொங்கத் தொம்மெனப்-
பந்தடித் தனளே, வசந்த சுந்தரி விந்தையாகவே
என்று வேகம் கொள்கிறது பாடல்.
பண்டு ‘குறவஞ்சி’ என்றொரு சினிமா வந்தது. மேகலா பிக்சர்ஸ் தயரிப்பில்.T.R.பாப்பா இசையில் இந்தப் பாடலை சிதம்பரம் எஸ்.ஜெயராமன் பாடியிருக்கிறார். உடன் பாடியவர்கள் A.P.கோமளா, P.லீலா மற்றும் T.V.ரத்தினம். வாய்ப்பிருந்தால் கேட்டுப் பாருங்கள்.
பெண்களைப் பாடுவதில் சிற்றிலக்கியப் புலவர்களுக்குத் திகட்டுவதே இல்லை. பாடிக் கேட்பவருக்கும் திகட்டுவதில்லை போலும். பேரின்பம் பாட வந்த கவிஞர்களும் சிற்றின்பம் பாடாமல் மோட்சம் பெறுவதில்லை போலும். மேலும், காட்சி ஊடகங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் செவி வழியாகவே சிற்றின்பம் பருகினார் போலும்.
கல்லும் பதித்த தங்கச் செல்லம் கடகம் இட்ட
செங்கையாள் – எங்கும்
கச்சுக் கிடக்கினும் தித்திச்சுக் கிடக்கும் இரு
கொங்கையாள்
ஒல்லும் கருத்தர் மனக்கல்லும் அழிக்கும் எழில்
உந்தியாள் – மீதில்
ஒழுங்கு கொண்டு உளத்தை விழுங்கு சிறிய ரோமப்
பந்தியாள்
கச்சு அணிந்திருந்தாலும் தித்தித்துக் கிடக்கும் இரு கொங்கையாள் என்று ஒரு பொருள். எங்கும் (உப்புக்) கைத்துக் கிடந்தாலும் (வியர்வையால்), தித்தித்துக் கிடக்கும் இரு கொங்கையாள் என்றும் ஒரு பொருள்.
“ஒரு வீமப் பாகம் பெற்ற காமப் பாலுக்கு ஒத்த சீனியாள்” என்றொரு வரி. சமையலில் நள பாகம், வீம பாகம் என இருவகை சிறப்புடையன. எனவேதான் உணவு விடுதிகள் நள விலாஸ் என்றும் பீம விலாஸ் என்றும் பெயர் பெற்றன. அறத்துப் பால், பொருட்பால், காமத்துப் பால் என மூன்றுண்டு. அதில் வீமபாகத்தினால் செய்யப்பட்ட காமப் பாலுக்கு சீனி போன்றவள் என்று பொருள்.
திரிகூட நாதர் உலா வரும்போது வசந்தவல்லி பந்தடித்துக் கொண்டிருந்தாள்.
நாகம் புயத்தில் கட்டி, நஞ்சு கழுத்தில் கட்டி
காகம் அணுகாமல் எங்கும் காடு கட்டி
பாகம் தனில ஒரு பெண் பச்சைக் கிளிபோல் வைத்து
மோகம் பெற ஒரு பெண் முடியில் வைத்தார்
வீதியுலா வரும்போது, அவரைக் கண்டு காமுற்று, மோகம் முற்றி வசந்தவல்லி விரகத் தீயில் வெதும்புகிறாள். அவளை தோழியர் உபசாரம் செய்கிறார்கள்:
முருகு சந்தனக் குழம்பு பூசுவார்; விரகத் தீயை
மூட்டி மூட்டி, விசிறி வீசுவார்;
கருகுதே உடல் உருகுதே என்பார்; விரித்த பூவும்
கரியுதே முத்தம் பொரியுதே என்பார்
அருகில் இருந்து கதைகள் நடத்துவார்; எடுத்து மாதர்
அணைத்து வாழைக் குருத்தில் கிடத்துவார்
பெருகு நன்னகர்க் குரும்பலாவினார் வசந்தமோகினி
பெரு நிலவினோடு கலாவினாள்
எனப் போகும் பாடல்.
வசந்தவல்லி தன் ஆற்றாமையைப் புலப்படுத்துவதும் அழகுத் தமிழில்தான்.
கங்கைக் கொழுந்து அணி தெய்வக் கொழுந்தை நான்கண்டு, குளிர்
திங்கள் கொழுந்தையும் தீக்கொழுந்து ஆக்கிக் கொண்டேனே
மன்றல் குழவி மதியம் புனைந்தாரைக் கண்டு, சிறு
தென்றல் குளவி தினம் கொட்டக் கொட்ட நொந்தேனே
மேலும் அவளது வருத்தம் கூறும் பாடல்கள் உண்டு.
பருத்த மலையைக் கையில் இணக்கினார்; கொங்கை ஆன
பருவ மலையைக் கையில் இணக்கிலார்
நஞ்சு பருகி, அமுதம் கொடுத்தவர்; எனது வாள்விழி
நஞ்சு பருகி, அமுதம் கொடுக்கிலார்
என.
பின்பு குறி சொல்ல வஞ்சி வருகிறாள். குற்றால மலையின் வளம் பாடுகிறாள் வசந்தவல்லிக்கு.
வானரங்கள் கனி கொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்,
தேன் அருவி திரை எழும்பி, வானின் வழி ஒழுகும்
செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும
காடு தொறும் ஓடி வரையாடு குதி பாவும்
காகம் அணுகா மலையில் மேக நிரை சாயும்
எனப் பற்பல விதமாய்.
இந்தப் பாடலையும் ‘குறவஞ்சி’ திரைப்படத்தில் பயன்படுத்தி உள்ளனர். இசை, பாடியவர்கள், தயரிப்பு முன்பே குறிப்பிட்டிருக்கிறோம்.
பறவை இனங்கள் பலவற்றையும் குற்றாலக் குறவஞ்சி பதிவு செய்கிறது.
குருகும் நாரையும் அன்னமும் தாராவும்
கூழைக் கடாக்களும் செங்கால் நாரையும்
– எனவும்,
காடை வருகுது, கம்புள் வருகுது
காக்கை வருகுது; கொண்டைக் குலாத்தியும்
மாடப்புறாவும் மயிலும் வருகுது
மற்றொரு சாரியாய் கொக்குத் திரள் எல்லாம் – எனவும்
வெள்ளைப் புறாவும் சகோரமும் ஆந்தையும்
மீன்கொத்திப் புள்ளும் மரங்கொத்திப் பட்சியும்
கிள்ளையும் பஞ்சவர்ணக் கிளிக் கூட்டமும்
கேகயப் பட்சியும் நாகணவாய்ச்சியும்
உள்ளானும் சிட்டும் வலியானும் அன்றிலும்
– எனவும்
இருபத்தாறு வகைப் பறவைகள் அறியக் கிடக்கின்றன.
குறத்தி தனது நாட்டுவளம் கூறும் பாடல்கள் நயம் மிக்கவை. தமிழ்நாட்டின் காடு, நீர்நிலைகள், மருத நிலம் எத்தகு வளமோடும் வனப்போடும் இருந்தன என்பதற்கான எடுத்துக் காட்டுகள். யார் கவர்ந்து சென்றார் இவற்றை? முன்னாள் வெள்ளை முதலாளிகளா இந்நாள் கருப்பு முதலாளிகளா எனக் கேள்வி கிளர்த்துவது.
சூழ மேதி இறங்கும் துறையில்
சொரியும் பாலைப் பருகிய வாளை
கூழை வாசப் பலாவினில் பாய,
கொழும் பலாக்கனி வாழையில் சாய,
வாழை சாய்ந்து ஒரு தாழையில் தாக்க,
வருவிருந்து உபசரிப்பார் போல்,
தாழை சோறு இட, வாழை குருத்திடும்
சந்திர சூடர் தென் ஆரிய நாடே
என்பன போன்ற இயற்கை வளங்கள்.
முக்கூடற்பள்ளுவில் “காயக் கண்டது சூரிய காந்தி” என்று தொடங்கும் பாடல் ஒன்று பார்த்தோம். அதே சந்தத்தில், பொருட் தன்மையில், குற்றாலக் குறவஞ்சியிலும் பாடல்கள் உண்டு.
நீங்கக் காண்பது சேர்ந்தவர் பாவம்;
நெருங்கக் காண்பது கன்னலில் செந்நெல்;
தூங்கக் காண்பது மாம்பழக் கொத்து;
சுழலக் காண்பது தீம் தயிர் மத்து;
வீங்கக் காண்பது மங்கையர் கொங்கை;
வெடிக்கக் காண்பது கொல்லையின் முல்லை
ஏங்கக் காண்பது மங்கல பேரிகை;
ஈசர் ஆரிய நாடு எங்கள் நாடே.
ஓடக் காண்பது பூம்புனல் வெள்ளம்;
ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்;
வாடக் காண்பது மின்னார் மருங்கு;
வருந்தக் காண்பது சூல்உளை சங்கு;
போடக் காண்பது பூமியில் வித்து;
புலம்பக் காண்பது கிண்கிணிக் கொத்து;
தேடக் காண்பது நல் அறம் கீர்த்தி
திருக்குற்றாலர் தென் ஆரிய நாடே
குறத்தி கூறும் நாட்டு வளம், தலமகிமை, கிளைச் சிறப்பு, குறிச் சிறப்பு, குறி சொல்லுதல், குறத்தி தெய்வம் வணங்குதல் என சிறப்பான பாடல்கள் பல.
தொடர்ந்து குறத்தி சிங்கியைத் தேடி சிங்கன் வருவது, சிங்கியை நினைந்து சிங்கன் ஏங்குவது, சந்தித்து உரையாடுவது யாவும் நகைச்சுவையும் காதல் சுவையும் பொங்கப் பாடப்படுவது. சிருங்கார ரசம் மிக்க பாடல்பல கொண்டது. இங்கு மேற்கோள் காட்டுவதை விடுத்து, நீங்கள் தேடிப் படிக்க விடுகிறேன்.
(தொடரும்)
.
 
 

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in "பனுவல் போற்றுதும்", அனைத்தும், இலக்கியம், எண்ணும் எழுத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Responses to சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்-பள்ளும் குறமும் 2

  1. Ambalavanan Balasubramaniam சொல்கிறார்:

    NANJIL NADAN HAS INDUCED MY NOSTALGY TO GO DOWN MEMORY LANE,WHEN AS A BOY IN HIGHER ELEMENTARY&HIGH SCHOOLS,THE “SARVAAL”TAUGHT THE POEMS OF MUKKOODALPALLU AND KUTRALAKURAVANJI.THEY SUNG THE POEMS WITH MELODY.TEREFORE WE HAVE NO PROBLEM WITH PRONONCING THR THREE TAMIL LTTERS OF “LA”,”ZHA”&ANOTHER “LA”.NOW-A-DAYS THE TAMILIANS HAVE PROBLEM IN PRONONCING THE ABOVE THREE LETTERS.THE GOVT.IN EDUCATION DEPT.SHOULD TAKE EARLY ACTION TO CORRECT THIS PROBLEM AT THE ELEMENTARY SCHOOL LEVEL ITSELF,BY TRAINING THE TEACHERS FIRST.KINDLY TREAT THIS MATTER IN YOUR NEXT ESSAY.

பின்னூட்டமொன்றை இடுக