“தீதும் நன்றும்” (19) காடு

“தீதும் நன்றும்” (19) காடு

காடுகள் நிறைந்து இருந்தது நம் நாடு!
‘மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடையது அரண்’

– என்பது திருக்குறள். மணி நீர் என்பதற்கு மணி போன்ற நிறத்தினை உடைய, எஞ்ஞான்றும் வற்றாத நீர் என்றும், அணிநிழற் காடு என்பதற்குக் குளிர்ந்த நிழலை உடைய செறிந்த காடு என்றும் பொருள் தருகிறார் பரிமேலழகர். ஆங்கிலேயர் வரவுக்கு முன் நம்மிடம் நிலப்பரப்பில் 35 சதவிகிதம் காடுகள் இருந்தன என்கிறார்கள் பூகோள அறிஞர்கள். 200 நெடிய ஆண்டுகள் நம்மை ஆண்ட ஆங்கிலேயர் தேசம்விட்டு ஓடியபோது, காடுகள் 26 சதவிகிதமாகக் குறைந்திருந்தது. இன்று நம்மிடம் இருக்கும் காடுகளின் பரப்பு 15 சதவிகிதமே!

ஆங்கிலேயர் 200 ஆண்டுகளில் அழித்த காடுகளின் பரப்பு ஒன்பது சதவிகிதம் எனில், சுதந்திர இந்தியாவில் 60 ஆண்டுகளில் அழிபட்ட காடுகள் மேலும் 11 சதவிகிதம். அதை பாகிஸ்தானிய தீவிரவாதிகள் வந்து அழித்துவிட்டுப் போகவில்லை. நமது ஆண்ட வர்க்கம், அதிகார வர்க்கம், வணிக வர்க்கம்தான் அழித்தது என்று சொல்லக் கூசுகிறது நமக்கு.

காடு அழிவது பற்றி இவ்வளவு கவலை எதற்கு?

காடு என்பது தேக்கு, ஈட்டி, வேங்கை, கோங்கு, மருது எனும் மரங்களைக் கதவுகளாகவும், நிலைகளாகவும், கட்டில்களாகவும், மேஜை நாற்காலிகளாகவும், மரச் சிற்பங்களாகவும் மாற்றிக்கொள்ளத் தருவது. அகில், சந்தனம் எனும் நறுமணங்கள் தருவது. யானைத் தந்தம், புலித் தோல், மான் தோல், புலிப் பல், மான் கொம்பு போன்றவை தருவது. தேன் தருவது. காபி, தேயிலை தருவது. ஏலம், கிராம்பு, குருமிளகு தருவது. கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இன்னும் எண்ணற்ற மூலிகைகள் தருவது. காடு என்பது பெண்பால் என்கிறார் கவிஞர் சக்தி ஜோதி. நமக்கு எதையாவது தந்துகொண்டே இருப்பது.

எல்லாவற்றுக்கும் மேலாகக் காடு என்பது மனித குலத்துக்குத் தண்ணீர் தருவது. ஆயிரக்கணக்கான மரம், செடி, கொடிகள், விலங்குகள் பறவைகள், பிற உயிரினங்கள், நுண்ணுயிர்கள் எனக் காபந்து செய்துவைப்பது காடு.

காடுகளில் மனிதர்கள் வாழ்கிறார்கள், காட்டைப் பேணிக்கொண்டும் பாதுகாத்துக்கொண்டும்! அவர்களைக் குறிக்க மெத்தப் படித்த நாகரிகர்களான நாம் பயன்படுத்தும் சொற்கள் காட்டாளன், காட்டு மனிதன், காட்டுமிராண்டி, காட்டான். ஆனால், அவன் காட்டைக் காத்தான்; நாம் அழித்துக்கொண்டு இருக்கிறோம்.

வற்றாத ஜீவநதி என்றும், உயிராறு என்றும், தாயினும் சாலப்பரிந்து பயிர் பச்சைகளுக்கும் மானுடருக்கும் தண்ணீர் வழங்கும் தாய் என்றும் ஆறுகளைப் போற்றிப் பெருமைகொள்கிறோம். ஆனால், ஆற்றுக்குத் தண்ணீர் எப்படி வருகிறது என்று யோசித்தோமா? ஒன்று, தானே ஆறு ஊறிப் பெருகிக் கொப்பளித்து வரவேண்டும் மண்ணுக்குள் இருந்து. அப்படி ஏதும் தெரியவில்லை. அல்லது பனிமலைகள் உருகிப் பெருகி வரவேண்டும் கங்கை போல. அங்ஙனம் உருகி வருவதற்குத் தென்னிந்தியாவில் எங்கும் பனிமலைகள் கிடையாது. ‘நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’ என்றான் கம்பன். என் கட்டுரைத் தொகுப்பு ஒன்றுக்கு அந்தச் சொற்றொடரைத் தலைப்பாக வைத்தேன். ஆற்றில் நல்ல தண்ணீர் வராமல் இருப்பது நதியின் குற்றம் அல்ல. ஆற்றுக்கு நல்ல தண்ணீர் எங்கிருந்து வருகிறது? அகத்தியன் எனப்படும் கும்பமுனியின் காகம் கவிழ்த்த கமண் டலத்தில் இருந்து பெருகி வருகிறதா? விரிசடைக் கடவுளின் உச்சியில் இருக்கும் கங்கை பெருக்குகி றாளா நன்னீர்? அல்லது, பாற்கடலில் துயில் பயிலும் நாராயணன் நம்பி அபயக்கரம் காட்ட அதிலிருந்து பாய்கிறதா பன்னீர் போல?

காடுகளில் இருந்து ஊறிப் பெருகி வருகிறது தண்ணீர். முழுமுதற் கடவுளர்களின் வேலையைக் காடு செய்கிறது உவப்போடு, ஓயாமல் ஒழியாமல். பெய்கின்ற மழையைக் காடு பிடித்து வைத்துக்கொண்டு சிற்றோடையாக, கால்வாயாக, ஆறாக, பெரு நதியாகக் கசியவிட்டுக்கொண்டு இருக்கிறது.

காடு எனில் பெருமரங்கள், குறுமரங்கள், தாவரங்கள், குற்றுச்செடிகள், புதர்கள், கொடிகள், பேரணிகள், பாசிகள், காளான்கள் கொண்ட சோலைகள், புல்வெளிகள், பல்வகைத் தாவர மடிப்புகள், அடுக்குகள் ஆகும். பெய்யும் மழையை அவை மண்ணில் தக்கவைத்துக்கொண்டு, காலம்தோறும் சன்னஞ்சன்னமாகக் கசியவிட்டுக்கொண்டு இருப்பது காடு. நீரின் வழித் தடங்கள்தான் ஓடைகள், ஆறுகள் என்பன. ஆறுகளின் குறுக்கே அணைகள் கட்டித்தான் நகர மக்களுக்குப் பிரித்து, பகிர்ந்து வழங்குகிறார்கள்.

ஆண்டுதோறும் மார்ச் 22-ம் நாள் ‘உலகத் தண்ணீர் தினம்’ எனக் கொண்டாடப்படுகிறது. கோவையில் ‘ஓசை’ என்ற அமைப்பு… அருந்தும் நீர், உண்ணும் உணவு, சுவாசிக்கும் காற்று போன்றவை அடுத்த தலைமுறைக்கும் தேவை என்பதை உரக்கச் சொல்லும் இளைஞர் இயக்கம். எழுத்தாளர்கள், ஓவியர்கள், செய்தியாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், இயற்கை விஞ்ஞானிகள் கொண்ட குழு ஒன்றை வனம் புகச் செய்தனர்.

கொங்குப் பகுதியின் வற்றாத ஜீவநதி பவானி. மேற்குத் தொடர்ச்சி மலையில், நீலகிரி மலை அடுக்குகளின் மேற்குப் பகுதியில் பிறப்பெடுத்து, தமிழ்நாடு விட்டு கேரளத்தினுள் 30 கி.மீ. பாய்ந்து, தமிழ் மக்களுக்கு உதவாமல் போகிறோமே எனும் பரிவு உணர்ச்சியால் திரும்பி, முள்ளி எனும் இடத்தில் மறுபடியும் தமிழ்நாட்டுக்குத் திரும்பி நுழைகிறது. பின்பு, அது சென்று சேர்வது காவிரியில்.

கோவையில் இருந்து புறப்பட்ட நாங்கள் மேட்டுப்பாளையம் சாலையில், அரங்கநாதன் அரசாளும் காரமடையில் இடது பக்கம் திரும்பி, தனவணிகர் குலம் காத்த குருந்த மலைக்குன்று உறையும் முருகன் கோயிலுக்குப் போகும் பிரிவு கடந்து, பல்லாண்டுகள் முன்பு வாழ்ந்து தமிழ் கூறும் நல்லுல கத்தாரால் அறியப்படாமல் மறைந்த தத்துவக் கவிஞர் ‘வெள்ளியங்காட்டான்’ வாழ்ந்த வெள்ளியங்காடு தாண்டி, அத்திக்கடவுப் பாலத்தில் இறங்கி, பவானி ஆற்றங்கரையோடும் ஒற்றையடிப் பாதையில் மரத்து வேர்களும், கற்குவியல்களும், புதர்களும் விலக்கி நடக்க ஆரம்பித்தோம்.

அந்தப் பகுதியில் மழை பெய்து நான்கு மாதங்கள் ஆகியிருந்தன. எனினும் பவானி, அசாவேரி ராகம் போல ஆடி அசைந்து, மரங்களின் பெருவேர்களும் பாறைகளும் குறுக்கிடும் இடங்களில் சலசலத்து, பள்ளங்களில் பாய்ந்து, பில்லூர் அணைக்கட்டு நோக்கிப் பெருகி வளர்ந்து வந்தது. தமிழகப் பசுமை இயக்கம் வெளியிட்டுள்ள ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ எனும் குறுநூல், இந்த மலைத் தொடரை கேரளம், தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், கோவா, மராத்தியம், குஜராத் என்னும் ஏழு மாநிலங்களின் சொத்து என்று குறிப்பிடுகிறது. தென்முனையில் இந்து மகா சமுத்திரம், வங்காள விரிகுடா, அரபிக் கடல் எனும் முக்கடல் பகுதியில் தலை தூக்கும் இந்த மலைத் தொடர், வடக்கே குஜராத்தின் வடக்கு முனையான ‘தப்தி’ நதியின் உற்பத்தி இடம் வரைக்கும் நீள்கிறது. 1,600 கி.மீ. நீளமும், சில இடங்களில் 70 கி.மீ அகலமும் ஆனைமுடி, தொட்டபெட்டா போன்ற 2,600 மீட்டர் உயரமுள்ள சிகரங்களும் கொண்டது. எத்தனை நதிகள் பெருகிப் பாய்ந்து மக்களுக்குப் பயன் தருகின்றன?

‘நீரவர் கேண்மை’ எனும் எங்கள் பயணம் காடுகளையும் ஆறுகளையும் அறிந்துகொள்ளும் முயற்சிதான். கேரளத்தில் பாய்ந்திருக்கும் பவானியின் குறுக்கே முக்காலி எனும் இடத்தில் தடுப்பணை கட்டி, பன்னாட்டு குளிர்பான நிறுவனத்துக்குத் தாரைவார்த்து, கோவை – திருப்பூர் மக்களின் தொண்டைத் தண்ணீரை அபகரிக்க முயன்ற தைச் சுற்றுச் சூழல் அமைப்புகள் முனைந்து போராடி முறியடித்தன.

இந்தக் காடுகளைத்தான் பொது நல நோக்கம் அற்று, சொந்த லாபம் மட்டுமே கருத்தில்கொண்டு அழித்து ஒழித்துக்கொண்டு இருக்கிறார்கள். தண்ணீரற்றுப் போய்க்கொண்டு இருக்கிறது இந்தக் கண்ணீர் தேசம்.

நாட்டில் சராசரி மழைக்குக் குறைவில்லை என்கிறார்கள் வானிலை ஆய்வாளர்கள். பிடித்து வைத்துக் கொள்ளும் குளம், குட்டை, வாவி, நீராவி, பொய்கை, தடாகம், ஏரி யாவும் தூர்ந்தும் ஆக்கிரமிப்புக்கு ஆட் பட்டும் கிடக்கின்றன. தண்ணீர் வழித் தடங்கள் சுருங் கிக்கொண்டும் மாய்ந்துகொண்டும் போகின்றன. 100 அடியில் கிடைத்த நிலத்தடி நீர் 800 அடிக்குக் கீழே போய்க்கொண்டு இருக்கிறது. மேல் வலிக்காமல் கடல் நீரைத் குடிநீராக்கும் திட்டம் என்று வாரிவிடுகிறார்கள் வாக்குறுதிகளை. அதில் ஒரு லிட்டருக்கான விலை பற்றி யாரும் பேசுவது இல்லை. பன்னாட்டு நிறுவனங்களின் ஏற்பாட்டில் வழங்கப்படும் தண்ணீருக்கு, திருப் பூரில் இன்று குடத்துக்கு ஒன்றே கால் ரூபாய

காடுகளை மரக் கூழுக்காகவும், தேயிலை, காபித் தோட்டங்களுக்காகவும், தட்டுமுட்டுச் சாமான்களுக்காகவும், உல்லாச வாசஸ்தலங்களுக்காகவும் அழித்துவிட்டு, நல்ல தண்ணீருக்கு நாக்கைத் தொங்கப்போட்டு நாய் போல எதற்கு அலைய வேண்டும் நாம்?

காடு, புல்வெளிப் பரப்புகள், சோலைகள் அழிந்தால் நீராதாரம் மட்டுமா அழிகிறது? எத்தனையோ நுண்ணுயிர்கள், பல்லுயிர்க் கோவைகள், புட்கள், விலங்குகள் யாவற்றின் இனங்கள் அழிகின்றன. ‘வேறெங்கும் காண இயலாத 16 பறவை இனங்களும், வரிக்கழுதைப் புலியும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே வாழ்கின்றன’ என்றார் ‘ஓசை’ காளிதாஸ்.

‘சிட்டு’ எனும் ஆவணப் படம் எடுத்த கோவை சதாசிவம், கிங்ஃபிஷர் எனப்படும் பெருமீன் கொத்திப் பறவையைக் காட்டித் தந்தார். எனக்கோ, அந்தப் பெயரில் இருக்கும் பீர் மட்டுமே தெரியும். பாரதியார் பல்கலைக்கழகத் தாவரவியல் பேராசிரியர் ராமச்சந்திரன் சிறுநீரகக் கற்கள் நோய்க்கு மருந்தான ‘கல்லுருக்கி’ மூலிகை பறித்து வந்து தின்னத் தந்தார். இதய நோய்க்கு மருந்தாகும் நீர்மருது மரத்தின் உட்பட்டை பெயர்த்துக் காட்டினார். அவர் சொன்ன மற்றொரு சுவாரஸ்யமான தகவல், ‘அந்த மரத்தில்தான் அர்ச்சுனன் வில் பயிற்சி பெற்றான்’ என்பது. காட்டு மா, நாவல், புங்கு, கல் உச்சிக் கொடி, நீர் அத்தி எனும் மரங்கள்காட்டி னார் ‘ஓசை’ அவைநாயகன். இலக்கியத்தில் படித்திருந்த, ஏராளம் கேட்டிருந்த, ‘அருகு உளது எட்டியே ஆயினும் முல்லைப் படர்கொடி படரும்’ என மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை பாடிய எட்டி மரத்தையும் அதன் பழத்தையும் காட்டித் தந்தார்.

பத்திரிகையாளரும் சுற்றுச்சூழல் பாதுகாவற் போராளியுமான செல்வகுமார், மிக அரிதான பறவையான ‘இருவாய்ச்சி’ என்று தமிழிலும், ‘வேழாம்பல்’ என்று மலையாளத்திலும் அழைக்கப்படும் மழைக் காடு களின் அடையாளமான பறவை பற்றிச் சொன்னார்.

பவானி ஆற்றங்கரை ஓரமாக தட்டுத்தடுமாறி, வேர்களில் கால் சிக்கிக்கொள்ளாமலும், ஆற்றில் சரிந்துவிடா மலும் நாங்கள் தளர்நடை செய்தபோது, தொடர்ந்து பறவைகள் ஒலி எழுப்பிக்கொண்டு இருந்தன. ஆள் நடமாட்டம் அறிந்து அரவம் செய்யும் அப்பறவைகளைக் ‘குக்குருவான்’ என்றும், ‘குக்குரு’ என்றும் சொன்னார்கள். அதிரடிப் படையினரின் நடமாட்டத்தை முன்னறிவிப்பு செய்தமையால், அவற்றுக்கு ‘வீரப்பன் தோழன்’ என்ற புதுப் பெயரும் உண்டு.

‘கனவு’ இதழாசிரியரும் நாவலாசிரியருமான சுப்ரபாரதி மணியன், சமீபத்தில் காலமான அவரது மனைவி சுகந்தி சுப்ரமணியன் நினைவுகளில் புதைந்து அடர் மௌனம் காக்க, ‘ஈரம் கசிந்த நிலம்’ நாவலாசிரியர் சி.ஆர்.ரவீந்திரன் இலக்கியக் கொள்கைகளைத் தாளித்து வந்தார். ஓவியர், சினிமாக் கட்டுரையாளர், புகைப்படக் கலைஞர் ஜீவா, எங்கும் எவற்றையும் கேமராவில்சுட்டுக் கொண்டு இருந்தார். சிறுகிணறு எனும் இருளர் குடி யிருப்பு… 15 வீடுகளும் 60 உறுப்பினர்களையும்கொண்டவை. அருகே, ஆற்றங்கரையின் தண்ணிழல் மணல் பரப்பில், கவிஞர் வேனில், ராகிக் களி உருண்டைகளை ‘ரக்ரி’ எனப்பட்ட காரசாரமான கீரைக் கடைசலில் தொட்டு, காய்ந்த மாடு கம்பில் பாய்ந்தது போல், வேகமாக விழுங்கிக்கொண்டு இருந்தார்.

காடு என்பது நகரத்து மனிதனுக்குத் தண்ணீர் வழங் கும் பேருயிர். தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வகை யற்று அழிகிறது. மகாத்மா காந்தி சொன்னார், ‘இயற்கை மனிதனின் தேவைக்கான அனைத்தையும் தரும். ஆனால், மனிதனின் பேராசையை ஈடுசெய்ய அதனிடம் எதுவும் இல்லை’ என்று.

மலரைச் சிதைக்காமல் தேனைச் சேகரிக்கும் தேனீ போல, காட்டை அழிக்காமல் பயன்பெற்று வாழ மனிதன் கற்றான் இல்லை. உல்லாசப் பயணங்கள் போய், காதலியுடன் கைகோத்து, நண்பர்களுடன் பீர் பாட்டில் உடைத்து, பாலிதீன் பைகள் வீசிக் கெடுப் பதற்கானவை அல்ல காடும் மலையும் என்பதை இளைய தலைமுறைக்கு நாம் கற்றுத்தர வேண்டும். விதைப் பைகளை அறுத்துப் பொரித்துத் தின்றுவிட்டு, இனவிருத்தி செய்ய இயலாது.

மே நாள், முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர், அணு விஞ்ஞானி, ஏ.பி.ஜே.அப்துல்கலாம்,

‘இயற்கை அழித்த கொடியோர் நாங்கள்
காற்றை விடமாய் மாற்றிய பாவிகள்
வளர்ச்சியின் பெயரால் வாழ்வை அழித்தோர்
நீரைக் கெடுத்த துரோகிகள்’

– என்று சுயம் இரங்கிப் பாடுகிறார்.

நாளை குடிக்கத் தண்ணீர் வேண்டுமானால், காடுகள் பெருகி வளர்ந்து, அவை காப்பாற்றப்படவும் வேண்டும் என்ற அடிப்படை விஞ்ஞானத்தைக் குழந்தைகளுக்குக் கற்றுத் தருவீர் பெற்றோரே!

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in “தீதும் நன்றும்” and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக