”மாரி வாய்க்க!”

“மாரி வாய்க்க!”

நாஞ்சில் நாடன்
பதிற்றுப் பத்து என்னும் நூலின் எட்டாம் பத்துப் பாடிய புலவர் அரிசில் கிழார் மட்டுமே பாட்டும் தொகையும் எனும் பதினெட்டு சங்க இலக்கிய நூல்களில் தகடூர் எனும் சொல்லை ஆண்டிருக்கிறார். அன்றைய தகடூர்தான் இன்றைய தர்மபுரி என்பதை நான் அறிந்துகொண்டேன். அதை அறிந்துகொள்ளக் காரணமாக இருந்தவர் கால் நூற்றாண்டுக்கு முன்பெனக்கு அறிமுகமாகிய தங்கமணி. அவர் மூக்கனூர்ப்பட்டி எனும் ஊரினர் என்றாலும் என் வீட்டிலும் நண்பர்கள் வட்டத்திலும் மொரப்பூர் தங்கமணி என்றே அறியப்படுகிறவர். ஏனெனில் மூக்கனூர்ப்பட்டி போகவேண்டுமானால் பன்னிரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் மொரப்பூர் இரயில் நிலையத்தில்தான் இறங்கவேண்டும்.
கோவையில் இருந்து இன்டர் சிட்டி எக்ஸ்பிரசில் போனால் திருப்பூர் – ஈரோடு – சேலம் – பொம்மிடி – மொரப்பூர். சென்னையில் இருந்து வந்தால் காட்பாடி – ஜோலார்பேட்டை – மொரப்பூர்.
மூக்கனூர்ப்பட்டி என்ற போதில் என் மனத்திரையில் ஆடுவது தங்கமணி, அவரது மனைவி சத்தியா, மகன் நேசமணி, மகள் நேத்ரா. அடுத்தபடியாக குளத்து மேட்டுப் பனங்கள், தங்கமணி மூலம் எனக்கும் நண்பர்களாகிய இராமமூர்த்தி, சேட்டு, அசோகன்…. தங்கமணியின் வீடு எங்களுக்கோர் வேடந்தாங்கல். எங்களுக்கு என்று நான் குறிக்கும்போது, என்னுடன் சேர்த்து எம்.கோபாலகிருஷ்ணன், க.மோகனரங்கன், கண்மணி குணசேகரன், கீரனூர் ஜாகிர்ராஜா போன்றவர் அடக்கம். கம்பன் கையாண்ட ‘எம்மனோர்’ எனும் சொல்லை ஈண்டு நானும் ஆளலாம்.
தங்கமணியும் சத்தியாவும் ஆசிரியர்கள். 2007 ஆம் ஆண்டு மூக்கனூர்ப்பட்டி போயிருந்தபோது, நண்பர் வெங்கடேசன், அவரது மகனுக்கு என்னைப் பெயர் சூட்டச் சொன்னார். பெயர் ‘க’ எனும் எழுத்தில் தொடங்கவேண்டும் என்பது கோரிக்கை என்பதால் பிறந்த குழந்தைக்கு கதிர்ச்செல்வன் என்று பெயரணிவித்தேன். இன்றவன் எட்டாம் வகுப்பில் வாசிக்கிறான்.
ஈராண்டுகளுக்கு முன்பு, தகடூரில் புத்தகத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டது. மூலகாரணம் தங்கமணியும் நண்பர்களும் தர்மபுரியின் தமிழ் ஆர்வலர்களும் சமூகப் பணியாளர்களும். நூலங்காடி என்றோர் புத்தகக் கடையும் நிரந்தரமாகத் தொடங்கப்பட்டது. இவை எனக்கு மிகவும் மகிழ்ச்சி தந்த விடயங்கள்.
பத்து வயதில் இருந்து புத்தகங்களை நேசிக்க ஆரம்பித்த பள்ளிச் சிறுவனின் மனநிலையிலேயே இன்னும் இருக்கிறேன். தகடூர் புத்தகத் திருவிழாவில் மக்கள் பங்கேற்பும் மக்கள் காட்டிய ஆர்வமும் புத்தக விற்பனையும் உற்சாகமூட்டுவதாக இருந்தது எனச் செவிப்பட்டேன். கல்வியில் மேம்பட்ட சில மாவட்டங்களில் புத்தகங்கள் விற்பனை ஆவதை விடவும் டில்லி அப்பளமும் மிளகாய் பஜ்ஜியும் அமோகமாக விற்பனையாகிறது என்பதையும் அறியாதவரல்ல நாம்.
புத்தகம் வாசிக்கும், புத்தகத்தை நேசிக்கும் எவரும் மதம், இனம், மொழி, நிலம் கடந்து நமக்குச் சுற்றம் ஆகிவிடுகிறார்கள், அவ்விதமே மொரப்பூர் தங்கமணி எனக்கு நெருங்கிய உறவினர். எப்படியோ வழி கண்டுபிடித்து, அவர் தோட்டத்துக் காய் கனிகள் எம் இல்லம் வந்து சேரும். என் பேரன்கள் அவர் தோட்டத்துக் காட்டு நெல்லிக்காய்க்கும் நாவற்பழத்துக்கும், மாங்கனிக்கும் அடிமைகள்.
தங்கமணி தீவிரமான ஈ.வெ.ராமசாமி பெரியார் ஆதரவாளர். அவர் ஊரின் தெருக்களில் பெரியார் நடந்திருக்கிறார். மனப்பக்குவம் இருந்தால் அல்தொன்றும் மனத்தடை இல்லை என்பதற்கு தங்கமணி ஓர் எடுத்துக்காட்டு. அவரது வாசிப்பு எந்தக் கொள்கை நெருக்கடிக்கும் கட்டுப்பாட்டுக்கும் மனக்கோட்டத்துக்கும் தளைப்படுத்தாமல் அவரைக் காக்கிறது. திராவிட இயக்க நடைமுறைகள் பற்றிய என் பார்வை அவர் அறியாததல்ல. என்றாலும் எமக்குள் நட்புச் சாயம் வெளிறியதே இல்லை .
களரி தொல்கலைகள், கலைஞர்கள் மேம்பாட்டு மையம் ஏற்பாடு செய்யும் வருடாந்திர நிகழ்ச்சிகளுக்கு , பன்னீராண்டு காலமாய் – ஒன்றிரண்டு ஆண்டுகள் தவிர்த்து – நான் தொடர்ந்து போய்க்கொண்டு இருக்கிறேன். ஏர்வாடி மு.ஹரிகிருஷ்ண னின் தீவிர ஆதரவாளன் நான். கோவையில் இருந்து ஏர்வாடிக்கு வழி எனக்கு – பவானி, மேட்டூர், மேச்சேரி. அங்கிருந்து நடந்தும் போகலாம் ஏர்வாடிக்கு அல்லது ஹரிகிருஷ்ணன் வாகனம் அனுப்புவார்.
சில ஆண்டுகள் முன்பு கோவையில் இருந்து இரயிலேறி மொரப்பூர் போய், அங்கிருந்து மூக்கனூர்ப்பட்டிக்கு மோட்டார் சைக்கிளின் பின்புறம் உட்கார்ந்து போய், தங்கமணி காரில் நண்பர்களுடன் ஏர்வாடி வந்தோம். இரவு இரண்டு மணிவரை அங்கு கட்டைப் பொம்மலாட்டம் பார்த்து விட்டு, திரும்புகாலில் தர்மபுரி – சேலம் நெடுஞ்சாலையில் தொப்பம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் சேலம் போகும் பேருந்தில் ஏற்றி அனுப்பினார்கள்.
காலையில் வயிறு நிறைய பனங்கள் பருகிவிட்டு, தங்கமணி மோட்டார் சைக்கிளின் பின்புறம் உட்கார்ந்து தீர்த்தமலை அடிவாரம் வரை சென்று, அங்கிருந்து மலை ஏறினோம் ஒரு முறை. ஆனந்த விகடனில் 2008-2009 கால கட்டத்தில், 42 கிழமைகள் ‘தீதும் நன்றும்’ என்றொரு தொடர் எழுதியபோது, எனது தீர்த்தமலை அனுபவங்களை எழுதி இருந்தேன். மலேசியா நாட்டின் பத்துமலை 2010ஆம் ஆண்டிலும், பினாங்கிலுள்ள தண்ணீர்மலை 2017ஆம் ஆண்டிலும் ஏறினேன். இவையெல்லாம் 2001ஆம் ஆண்டு இதயத்தில் 95% அடைப்புக்கு ஸ்டென்ட் வைத்துக்கொண்ட பிறகு – சொல்லப்போனால் எனக்கு இதயக்கோளாறு இருப்பதை வெளிபடுத்தியதே, செங்கோட்டைப் பக்கமுள்ள திருமலை. பண்புளி எனும் ஊரின் திருமலை எனும் குன்று. திருமலை ஆண்டவர் குறவஞ்சி என்று புலவர் பெயர் தெரியாத நூல் ஒன்றும் உண்டு. இந்த சந்தர்ப்பத்தில் நான் ஏறிய மலைக்கோயில்கள் பற்றி கட்டுரை ஒன்றெழுத ஆர்வம் ஏற்படுகிறது. சபரிமலை (ஏழு முறை), திருவேங்கடவன் மலை (நான்கு முறை) திருத்தணி மலை, திருப்பரங்குன்றம், திருச்செங்கோடு, திருஆவினன்குடி என்னும் பழனிமலை, திண்டுக்கல் மலை, திருச்சிராப்பள்ளி மலை, மற்றும் பல.
தகடூர் புத்தகப் பேரவை, கடந்த ஆறு மாதங்களாகச் சீரமைத்து நடத்திவரும் மாதமொரு நூல் அறிமுகக் கூட்டம் பாராட்டுக்குரியது. ஒவ்வொரு கூட்டத்திலும் இருபதுபேர் இருபது நூல்களை வாசித்து, தலைக்கு ஐந்து நிமிடங்கள் அந்த நூல் குறித்துக் கருத்துரைக்கிறார்கள். பேராசிரியர், ஆசிரியர், கல்லூரி மாணவர், பள்ளி மாணவர், பொறியாளர், அரசு ஊழியர், சிறு வணிகர் எனப் பலரும். சிறிய அளவில் புத்தகங்கள் விற்பனைக்கும் வைக்கிறார் நூலங்காடித் தோழர் சசி.
2020 பெப்ரவரியில் தகடூர் புத்தகப் பேரவைக்குச் சிறப்பு அழைப்பாளராகப் போயிருந்தேன். வாட்ஸ்ஆப்பில் பகிர்ந்து கொள்ளப்பட்ட அழைப்பிதழைப் பார்த்துச் சில நண்பர்கள் தகடூர் யாண்டுளது என்று என்னிடம் கேட்டார்கள். மற்றும் சிலர் நாணிக் கண் புதைத்திருப்பார்கள். எவ்வாறாயினும் தகடூர் எனும் ஊர்ப் பெயர் பரவலாகி வருகிறது.
தங்கமணியின் மூலமாகத்தான் எனக்கு மருத்துவர் இரா.செந்தில் அவர்களின் அறிமுகம் கிடைத்தது. அவர் மேனாள் பாராளுமன்ற உறுப்பினர். சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களின் புகழ்பெற்ற சிறுநீரக மருத்துவர். தர்மபுரியில் தங்கம் மருத்துவமனை நடத்துபவர். மேலும் புகழ்பெற்ற கல்லூரி ஒன்றின் தமிழ்த்துறைத் தலைவர் கோ.அசோகன், புகழ்பெற்ற மொழியாக்கங்கள் பல செய்த தோழர் சிசுபாலன், இராமய்யன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசியரியர் அசோகன், கவிதை – கட்டுரை – பயணம் எனப் பல்வகை நூல்கள் எழுதிய நெடுஞ்சாலைப் பொறியாளர் ப.நரசிம்மன், சார்பதிவாளர் அலுவலர் எம்.வேலு எனவும். மருத்துவர் பழனி குடும்பம் முன்பே அறிமுகம். மருத்துவர் இரா. செந்தில் அவர்களை நினைக்கும்போது எனக்கு புறநானூற்று ஒளவையார் தகடூர் மன்னன் அதியமானைப் பாடிய வரிகள் நினைவுக்கு வருகிறது, “சிறிய கட்பெறினே எமக்கீயும் மன்னே !’ என்று .
தகடூர் புத்தகப் பேரவையின் நூல் அறிமுகச் சிற்றுரைகளைச் செவிமடுத்தது சிறப்பான அனுபவம். எனது அனுபவங்களை நானும் உரைத்தேன். என்னுரை யூட்யூபில் இன்று பார்க்கவும் கேட்கவும் கிடைக்கிறது.
தர்மபுரி, அரூர் என மூன்று நாட்கள் தங்கி இருந்தேன், அரூரில் பெரியார் பல்கலைக்கழக உறுப்பு கலை அறிவியல் கல்லூரியில் எண்ணூறு மாணவ மாணவியருக்கு உரையாற்ற நேர்ந்தது. வாழப் போராடும் பெற்றோரின் பிள்ளைகளுக்குக் கல்வியே போராட்டம்தான், மாணவர் யாவரும் சட்ட புத்தகங்களில் மட்டுமே சமம். நடைமுறையில் அல்ல எனும் எண்ணம் வலுப்பெற்றது.
சிறப்பு ஏற்பாட்டின் பேரில் அரசுப் பள்ளியொன்றில் ஒன்பதாவது பயிலும் மாணவி வே  தனுஷ் பிரியா, ஜெயமோகனின் ‘நூறு நாற்காலிகள்’ எனும் சிறுகதை குறித்து ஆற்றிய சிற்றுரை மறக்க இயலாதது. அனைவரையும் கவர்ந்தது. கல்லூரியில் எனக்குப் போர்த்திய சால்வையை அச் சிறுமிக்குப் போர்த்தியது ஒன்றே என்னால் ஆன காரியம்.
அடுத்த நாள் பாப்பிரெட்டிப்பட்டியில், பெரியார் பல்கலைக்கழக உறுப்புக் கலை அறிவியல் கல்லூரி மாணவ மாணவியர் 2500 பேருடன் கல்லூரி விழா அரங்கில் உரையாடும் வாய்ப்பு. அரசுக் கலைக்கல்லூரியின் விழா அரங்கில் அனைத்து மாணவரும் நிலத்தில் சம்மணமிட்டு அமர்ந்து என்னுரை கேட்டனர். எல்லோரும் இந்நாட்டு மன்னர்.
தொடர்ந்து அன்று பிற்பகல் இராமைய்யன்பட்டி அரசு உயர் நிலைப்பள்ளி மாணவ மாணவியருடன். அறுபதாண்டுகளுக்கு முன்பு நான் வாசித்த அரசு நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளை நினைத்துக்கொண்டேன். 1961ஆம் ஆண்டு என் பள்ளியில் நான் நட்ட மருதமரம் போன்று, 2020ஆம் ஆண்டு இந்தப் பள்ளியில் வேங்கை மரம் ஒன்று நட்டேன்.
இரண்டு கல்லூரிகள், ஓர் உயர் நிலைப்பள்ளி மாணவ மாணவரியருடன் இரண்டு நாட்கள் இருந்தபோது எனக்கு ஏற்பட்ட வலுவான எண்ணம், சாதாரண வசதிகள்கூட இல்லாமல் கற்கும் இம்மாணவர் இந்நாட்டில் சகல வசதிகளுடனும் கற்கும் மாணவருடன் போட்டியிட்டுத்தானே வெல்ல வேண்டும் ? ஆனால் வாழ்க்கையில் கற்ற பாடங்கள் தெம்பு தந்தன. போராடும், பாடுபடும், உழைக்கும் துணிவும் ஆற்றலும் உடைய எம் மாணவரை உலகின் எத்தகு செல்வாக்குள்ள சக்தியும் தோற்கடிக்க இயலாது.
என்றுமே ‘உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில்’ எனும் கல்வி அதிகாரத்துக் குறள் பிரிவின் போது நினைவுக்கு வருவது. மூக்கனூர்ப்பட்டி பனங்கள் குடியாமலும் , பத்தாண்டுகளுக்கு முன்பு சந்தைப்பட்டி பள்ளியில் நான் நட்ட வேங்கை, வில்வம் கன்றுகளைப் பாராமலும், எப்படிப் பிரிவது? மேலும் தங்கமணி வீட்டில் சத்தியா எமக்காகத் தயாரித்து வைத்திருந்த வெல்லமிட்டு வேகவைத்து, தேங்காய்ப்பூத் தூவிய சிறு பயிறு மயக்கு உண்ணாமல் எப்படிப் புறப்படுவது! மரச்சீனிக் கிழங்கும் எலுமிச்சைப் பழமும் காணமும் நிறைக்கப் பெற்ற பதினைந்து கிலோ கட்டைப் பையை எடுக்காமல் எப்படி நகர்வது?
உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் ரயிலுக்குப் போவதை வழியனுப்ப வந்ததைப்போல நண்பர் குழாம்.
சென்னையில் இருந்து கோவைக்குப் போகும் ரயில் மாலை ஆறேகாலுக்கு மொரப்பூர் வந்தது.
அப்போதும் எனக்கு திருக்குறள்தான் நினைவுக்கு வந்தது.
 ‘புரந்தார் கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்து கோள் தக்கதுடைத்து’
மனதார வாழ்த்தினேன் . வேண்டிக்கொண்டேன், தர்மபுரியில், தகடூரில், “மாரி வாய்க்க! வளம் நனி சிறக்க!” என்று. அது ஐங்குறுநூற்றின் ஓரம் போகியார் எனும் புலவரின் வரி. எவர் வரியானால் என்ன? Great men think alike.
நன்றி: ஆவநாழி- மார்ச் 2021

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , . Bookmark the permalink.

1 Responses to ”மாரி வாய்க்க!”

  1. rajendranunnikrishnan சொல்கிறார்:

    ♥️ மாரி வாய்க்க, வளம் நனி சிறக்க

பின்னூட்டமொன்றை இடுக