சொல்லாழி

solvanam-1நாஞ்சில் நாடன்
http://solvanam.com/?p=47917
வில்லாளிக்கு அம்பு எத்தன்மைத்ததோ, அத்தன்மைத்தது புலவனுக்கு, எழுத்தாளனுக்கு சொல். சேமிப்பில் சொற்பண்டாரம் இன்றி எழுதப் புகுபவன், கையில் கருவிகளற்றுத் தொழிலுக்குப் போகிறவன். தச்சனோ, கொல்லனோ, குயவனோ, நாவிதனோ, உழவனோ எவராயினும் அது பொருந்தும். அரைகுறையாகக் கருவிகளைச் சுமந்து செல்கிறவன், துல்லியமற்ற, பொருத்தமற்ற கருவிகளைச் சுமந்து செல்கிறவன், திறம்படத் தொழில் செய்ய ஏலாது. 22/24 என்று கேட்கும் மெகானிக் கையில் 26/28 ஸ்பானர் கொடுத்தால் எப்படி?
பொருத்தமான இடத்து, பொருத்தமான சொற்களைப் பெய்கிறவனே சிறந்த எழுத்தாளன். இது கவிதைக்கு மாத்திரமான விதி அல்ல. பிறிதோர் சொல், அச்சொல்லைவெல்லாத சொல்லாக, சொல்லுக  சொல்லை   அது தானே திருக்குறள்.
பார்வைக்கு ஒரே மாதிரி இருக்கிற காரணத்தால் சீரகமும் பெருஞ்சீரகமும் ஒன்றல்ல. எலுமிச்சையும் நாரத்தையும் ஒன்றல்ல. ஒன்றைப் பயன்படுத்தும் இடத்து மற்றதைப் பயன்படுத்த இயலாது. எவரும் குதர்க்கமாகக் கேட்கலாம்- கேட்பார்கள்தானே! – ஏன், பயன்படுத்தினால் என்ன ஆகும் என்று. சர்க்கரை நோய்க்கான குளிகைக்கு மாற்றாக இரத்த அழுத்த நோய்க்கான மாத்திரையைப் பயன்படுத்த மாட்டோம் அல்லவா?
எனவே இலக்கியவாதிக்கு சொற்சேகரம் இன்றியமையாதது. சொற்களை அவன் எங்கிருந்து பெறுவான்? மக்கள் புழங்கும் மொழிக்குள் இருந்து.  ஏற்கனவே கையாளப்பட்ட இலக்கிய சொற் பயன்பாட்டில் இருந்து. நூறாண்டு காலம், ஆயிரம் ஆண்டு காலம் ஒரு வரி நின்று பேசப்பட வேண்டுமென்றால், அதற்கான தகுதி அந்த வரிக்கு இருத்தல் வேண்டும்.
எந்த மொழியும் ஒலி, சைகை, கோடுகள், சித்திரங்கள் தாண்டித்தான் சொல்லுருவம் பெற்று மொழியாக உருப்பெற்றிருக்கும். மொழி என்பது சொற்களின் கூட்டம், குவியல், பெருக்கம், கருவூலம். குகைகளளில், வனங்களில், மரப் பொந்துகளில், பாறைச் சரிவுகளில் வாழ்ந்திருந்த மாந்த இனம், ஆரம்பத்தில் பயன்படுத்திய சொற்கள் பின்பு போதாமல் ஆகிறது.
செம்மொழித் தமிழ் என்று 2010 ஆண்டு, தமிழ்ப் பல்கலை பதிப்பித்து வெளியிட்ட 41 இலக்கண இலக்கிய நூல்களில் தொல்காப்பியம், பத்துப் பாட்டு, எட்டுத் தொகை, பதிணென்கீழ்க் கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம், இறையனார் அகப்பொருள் என்பன அடங்கும். இவற்றுள் பத்துப் பாட்டு, எட்டுத் தொகை எனப்பட்ட 18 நூல்களில் பயன்படுத்தப்பட்ட சொற்களின் தொகை பற்றிய நூல்கள் இரண்டு என்னிடம் உண்டு. அவற்றில் A Word Index For Sangam Literature எனும் நூலை நான் அடிக்கடி பயன்படுத்துவதுண்டு.
முறையாகத் தமிழ் கற்றவன் இல்லை என்பதால் எனக்குள் சில ஐயங்கள் உண்டு. செம்மொழித் தமிழ் என வரையறுக்கப்பட்ட நூல்களின் காலம் எதில் தொடங்கி எதில் முடிகிறது என்பதொன்று. இரண்டாவது, இந்த 41 நூல்களும் எத்தனை சொற்களைப் பயன்படுத்தி இருக்கும் என்பது பற்றியது. அஃதோர் ஆயிரம் ஆண்டுக் காலம் என்று வைத்துக் கொண்டால், ஆயிரம் ஆண்டு காலத் தமிழ் இலக்கியங்கள், காணாமற் போக்கிய நூல்கள் நீங்கலாக, பயன்படுத்திய சொற்கள் எத்தனை? அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய சொற்கள் எவ்வளவு இருந்திருக்கக் கூடும்? இன்று நம் மொழிக்குள் புழங்கும் சொற்கள் எத்தனை இலக்கங்கள் இருக்கும்? இவற்றுள் நவீன படைப்பாளிகள் பயன்படுத்திய சொற்கள் எத்தனை இருக்கும்?
இந்த ஆய்வுகளை நீங்களும் நானும் செய்ய இயலாது. பல்கலைக் கழகங்கள் செய்யலாம். உங்களைச் சிரிப்பாணி மூட்டுவதற்காக இதை இங்கு நான் எழுதவில்லை.
சென்னைப் பல்கலைக் கழகத்துப் பேரகராதி தொகுத்த பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை தலைமையிலான அறிஞர் குழு, 1,24,000 சொற்களை அகர வரிசையில் அட்டவணைப் படுத்துகிறது. முதற்பதிப்பு 1924 இல் வெளியானது. நான் திரும்பத் திரும்ப பல கட்டுரைகளில், இலக்கிய அரங்குகளில் குறிப்பிட்ட செய்திதான் இது. என்றாலும் மற்றொரு முறை சொல்வதில் எனக்குத் தயக்கம் இல்லை. மக்கள் மத்தியில், பல பகுதிகளில் இன்னும் புழக்கத்தில் இருக்கும் பேரகராதியில் விடுபட்டுப் போன பல சொற்கள், கடந்த நூறு ஆண்டுகளில் மொழிக்குள் வண்டலாகப் படிந்த சொற்கள் என தொகுக்கப் புகுந்தால் நமக்குப் பல ஆச்சரியங்கள் காத்திருக்கும்.
ஆறு காண்டங்களில், 118 படலங்களில், 10, 368 பாடல்களில் இராமகாதை எழுதிய கம்பனுக்கு, குறைந்தது ஒரு லட்சம் சொற்கள் தேவைப்பட்டிருக்காதா?
ஆனால் நம் மொழியின் தீப்பேறு அல்லது சாபம், துணைவேந்தர் பதவிகள் பத்து கோடிகள் வரை ஏலம் போகின்றன. ஐம்பது இலக்கம் தந்து பேராசிரியப் பணி வாங்குகிறார்கள். ஐந்து இலக்கம் வாங்கிக் கொண்டு முனைவர் பட்ட ஆய்வேடுகள் எழுதித் தருகிறார்கள். இவர்களிடையே எங்கே நாம் மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர், மறைமலை அடிகள், திரு.வி. கல்யாண சுந்தர முதலியார், வையாபுரிப் பிள்ளை, கே. என். சிவராஜ பிள்ளை, E. புருஷோத்தம நாயுடு, வ.ஐ.சுப்பிரமணியம், தே.போ.மீ, கி.இலக்குவனார், மு.வ, தா.வே.வீராசாமி, ந.சுப்பு ரெட்டியார், ந. சஞ்சீவி, மா. இளைய பெருமாள், ம.வே.பசுபதி, இ.சுந்தரமூர்த்தி, தி.வே.கோபால ஐயர், தெ.ஞான சுந்தரம், அ.அ.மணவாளன் போன்ற அறிஞர்களைத் துழாவுவது?
மொழிக்குள் சொற்களைச் சேகரிக்கும்போது, உருவாக்கும்போது, புழக்கத்தில் விடும்போது, எந்தச் சொற்களை எப்படிச் சேர்க்கலாம், பயன்படுத்தலாம் என்பதற்கு விரிவான வழிகாட்டுதல் செய்கிறது தொல்காப்பியம் என்று நம் கையில் கிடைத்திருக்கிற தொல் இலக்கண நூல். அதன் காலம் இன்றிலிருந்து 2500 ஆண்டுகள் முதல் 7000 ஆண்டுகள் வரை தொன்மையானது என்கிறார்கள் கால ஆராய்ச்சி அறிஞர்கள். அந்த ஆய்வுக்குள் நுழைய எனக்கு எந்தத் தகுதியும் கிடையாது.
அந்தக் காலத்தில், அச்சு வடிவம் ஏற்பட்டிராத காலை. மனப்பாடமாகவும், ஓலைச் சுவடிகளாகவும், கல்வெட்டுக்களாகவும், செப்பேடுகளாகவும் இலக்கியங்கள் பதிய வைக்கப்பட்ட போது, தமிழ்ப்புலவன் எந்தச் சொற்களை எவ்விதம் பயன்படுத்தலாம் என்று அறிவுரை கூறப்பட்டிருக்கிறது. இலக்கணம் வகுக்கப் பட்டிருக்கிறது.
தொல்காப்பியச் சொல்லதிகாரத்தின் பெயரியல் பிரிவின் முதல் நூற்பா, ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்கிறது. அஃதாவது பொருளைக் குறிக்காமல் எந்தச் சொல்லும் இல்லை. அது ’காண்ட்’ ஆகிவிட்டான் என்று சொன்னாலும், ‘மெர்சல்’ ஆகிவிட்டான் என்று சொன்னாலும், ‘பிசுக்கோத்து’ என்றாலும், ’சங்கு தான்’ என்றாலும் இவை எலாம் தமிழ் சொற்களா அல்லது மொழிக் களஞ்சியத்தில் சேரும் குப்பைகளா என்ற விவாதம் தனியே செய்வோம். ஆனால் அவற்றுக்கும் பொருள் உண்டு என்பதை மறுக்க இயலாது. அரைகுறையாகத் தமிழ் வாசித்த சிலர் கேட்பார்கள், அசைச் சொல்லுக்குப் பொருள் உண்டா என. அது பற்றியும் தொல்காப்பியம் தெளிவு தந்து உரைக்கிறது.
எடுத்துக் காட்டுக்கு, ‘அம்ம’ எனும் சொல். அது அசைச் சொல் என்பதில் ஐயம் இல்லை. பல அசைச் சொற்கள் உண்டு மொழிக்குள். அன்றே, ஐயோ, அந்தோ, அம்மா, மன்னோ, மாதோ என்பன சில. தொல்காப்பியச் சொல்லதிகார, இடையியல் பகுதியின் நூற்பா, ‘அம்ம கேட்பிக்கும்’ என்கிறது. அம்ம எனும் சொல், பிறரைத் தன் முகப்படுத்தும் என்று உரை எழுதுகிறார்கள். ‘அம்ம, வாழி தோழி!’ , ‘உண்டால் அம்ம எவ்வுலகம்’ எனப் பழந்தமிழ் இலக்கியங்களில் இருந்து கணக்கற்றன சொல்லலாம். தொல்காப்பியம் அசைச் சொல்லுக்கு என்று பட்டியலே தருகிறது.
செய்யுள் இயற்றுவதற்கு எந்த வகையான சொற்களைப் பயன்படுத்தலாம் என்பதற்கான வரையறை உள்ளது. உண்மையில் அது வரையறையில்லை, சுதந்திரம். சொல்லதிகாரத்தில் எச்சவியல் எனும் பகுதியின் நூற்பா பேசுவது,
’இயற்சொல், திரிசொல், திசைச் சொல், வட சொல் என்று
அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே’
என்று. பொருள் உரைப்போமானால், இயற்சொல், திரிசொல், திசைச் சொல், வட சொல் என நான்கு வகையான சொற்களையும் செய்யுள் யாப்பதற்குப் பயன்படுத்தலாம் என்பது. அன்று செய்யுள் என்பதை இன்று நாவல், சிறுகதை, கவிதை, நாடகம், கட்டுரை என எடுத்துக் கொள்ளலாம். எனவே மேற்சொன்ன நான்கு வகையான சொற்களையும் எழுத்தாளன் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது தொல்காப்பியம் தரும் முன் அனுமதி.
’அவற்றுள்
இயற்சொல் தாமே
செந்தமிழ் நிலத்து வழக்கொரு சிவணித்
தம்பொருள் வழாமை இசைக்கும் சொல்லே’
என்பது அடுத்த நூற்பா. அதாவது தமிழ் கூறு நல்லுலகத்தே வழங்கும் சொற்கள் அனைத்துமே இயற்சொற்களே! கேட்டோர்க்குப் பொருள் வழுவாமல் தெரியவேண்டும். செந்தமிழ் நிலம் என்பது ஈழத்தையும் உள்ளடக்கித்தான்.
இயற்சொல் போலவே, திரிந்து வழங்கப் பெறும் சொல் திரிசொல். நான்கு திசைகளின் மொழிகளில் இருந்து வரும் சொற்கள் திசைச் சொல். வடபுலத்தில் பாலி, பிராகிருதம், சமற்கிருதம் போன்ற மொழிகளில் இருந்து வரும் சொற்கள், வட சொல். இவை நான்குமே செய்யுள் யாக்கும் சொற்களே!
வடசொல் எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என்பதற்கும் இலக்கணம் சொல்கிறது தொல்காப்பியம்.
‘வடசொல் கிளவி வட எழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே’
என்பது நூற்பா. வடமொழி எழுத்துக்களை நீக்கி, தமிழ் எழுத்துக்களோடு வட சொற்களையும் பயன்படுத்தலாம் என்பது பொருள். எடுத்துக் காட்டுக்கு, ப்ரயாண் எனும் சொல் பிரயாணம் என்றும், ரிஷி எனும் சொல் இருடி என்றும், லக்ஷ்மண் எனும் சொல் இலக்குவன் என்றும், ப்ரகலாத் எனும் சொல் பிரகலாதன் என்றும் சிதைந்து வரலாம்
‘சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்’
என்று மேலும் சொல்கிறார் தொல்காப்பியர். அதாவது நம் மொழி ஒலி வடிவம் ஏற்று, ஒரு சொல் சிதைந்து வரலாம், ஆனால் வட சொல்லானது வட எழுத்துடன் அப்படியே எழுத மாட்டார்கள்.
குங்கும் என்பது குங்குமம் என்றும், லோக் என்பது உலகம் என்றும், பங்கஜ் என்பது பங்கயம் என்றும் தஸம் என்பது தசம் என்றும் வருவது எடுத்துக் காட்டுகள். வட எழுத்துக்கள் பயன்படுத்தப் படாமல், ஒலியில் சிதைந்து வந்தால் அது குற்றம் இல்லை.
இது சரியா என்று கேட்பீர்கள்! தூத்துக்குடியை, ட்யூட்டிக் கோரின் என்பதும், கோழிக்கோட்டையை காலிகட் என்பதும், மும்பையை பாம்பே என்பதும் கொல்கொத்தாவை கேல்கட்டா என்றதும் சரியா?
எனக்குத் தோன்றுகிறது. செய்யுள் ஈட்டச் சொற்கள் என்று தொல்காப்பியம் வழங்குவது பெரிய சுதந்திரம் என்று.
இவ்விதம் மொழிக்குள், தமிழ் எழுத்துக்களால், தமிழ் மொழிச் சொல்லே போன்று ஒலி அமைதியுடன் காலந்தோறும் கேட்கும் சொற்களை, நாம் மொழித் தூய்மை என்ற பெயரால் களைய வேண்டுமா என்று கேட்டால், வேண்டாம் என்கிறார் தொல்காப்பியர். நூற்பா சொல்கிறது, ‘கடி சொல் இல்லை, காலத்துப் படினே’ என்று. காலந்தோறும் மொழிக்கு வந்து இணையும் சொற்களைக் கடிந்து நீக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது பொருள்.
‘பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல, கால வகையினானே!’
என்னும் நன்னூல் சூத்திரமும் எண்ணற்பாலது. ‘முற்காலத்துள்ள இலக்கணங்களுள் சில பிற்காலத்து இறத்தலும், முற்காலத்து இல்லாதன சில பிற்காலத்து இலக்கணமாய் வருதலும் குற்றம் அல்லவாம், கால வேற்றுமை அஃதாகலான்’ என்பது உரை.
காலம் நான்கு கால் பாய்ச்சலில் குதித்துச் செல்லும்போது, விஞ்ஞானமும் தொழில் நுட்பமும் எண்ணற்ற மாற்றங்களை மானுட வாழ்வில் கொண்டு செலுத்தும் போது, மொழி மாத்திரம் எந்த மாற்றமும் பெறாமல் இருந்து விட இயலாது.
ஆம்லெட் வேண்டும், பிரியாணி வேண்டும், புலாவ் வேண்டும், பரோட்டா வேண்டு, சென்னா மசாலா வேண்டும், பீட்சா வேண்டும், பர்கர் வேண்டும், ஆனால் அந்தச் சொற்கள் வேண்டாம் என்றால் நடக்கிற காரியமா? எல்லாச் சொற்களையும் மொழி மாற்றம் செய்வோமா?
சொற்களின் வேர் பற்றிய ஐயம் வரும்போதெல்லாம் வழிகாட்டியாக நான் கொள்ளும் நூல் ஒன்றுண்டு. பேராசிரியர் ப. அருளியின் அருஞ்சொல் அகராதி, 4 பாகங்கள். அந்த நூல் தலைப்புக்கு, ‘இவை தமிழல்ல’ எனும் முன்னொட்டு உண்டு. அதுவே நூலின் நோக்கத்தைக் குறிப்புரைக்கும். என்றாலும் நூலன் திறன் பெரும்பயன் தரும். நூலாசிரியர் ஆய்வறிஞர், தூய தமிழ்- சொல்லாக்க அகர முதலிகள் துறைத் தலைவர், தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர். (மற்றெங்கும் கிளைகள் இல்லை). முதற் பதிப்பு 2007- ல் வெளியானது. கிட்டத்தட்ட 1000 பக்கங்கள்.
நம் மொழிக்குள் புழங்கும் 20,000 த்துக்கும் மேற்பட்ட அயல்மொழிச் சொற்களின் பட்டியல்- 27 மொழிகளின் சொற்கள். அரபி, ஆங்கிலம், இசுப்பானியம் (Spanish), இந்தி, இந்துத்தானி, இலத்தீனம், உருது, எபிரேயம் (Hebrew), கன்னடம், கிரேக்கம், சமற்கிருதம், சப்பானியம், சிங்களம், சிரியாக்கு, சீனம், தச்சு (dutch), துருக்கி, துளு, தெலுங்கு, பாரசீகம், பாலி, பிரெஞ்சு, பிராகிருதம், போர்ச்சுகீசியம், மராத்தி, மலையம் (மலாய்), மலையாளம் முதலாய 27 மொழிகளின் 20,000க்கும் மேற்பட்ட சொற்கள்.
தொல்காப்பியர் கூறும் வட சொல் என்பது பாலி, பிராகிருதச் சொற்களே என்கிறார்கள் அறிஞர்கள். தொல்காப்பியத்தின் காலம் இதனைத் தீர்மானிக்கும்.
பேராசிரியர் அருளி எடுத்துக் காட்டாகத் தரும் திசை சொற்கள் நமக்குப் பெருவியப்பு ஏற்படுத்துகின்றன. அபின், குல்லா, சட்னி, சப்பாத்தி, தரப்பு, தராசு, நாதாரி, புதினா, பயில்வான், பாதாம், மைதானம், உருமால், சால்வை, சிதார், மோர்சிங்கு, சாதா, சாமான், சுமார் என்பன பாரசீகச் சொற்கள்.
அசல், இனாம், கசாப்பு, காகிதம், கைது, நக்கல், நகல், பாக்கி, மகால், ராசி, லாயக்கு, வக்கீல், வாரிசு, சலாம், சவால், சைத்தான், அல்வா என்பன அரபிச் சொற்கள்.
யாவருக்கும் தெரிந்த உண்மைதான். படையெடுப்புகள் நிகழும் போது மதமாற்றங்கள், உணவில் உடையில், இசையில், பிற கலைகளில் ஏற்படும் தாக்கங்கள், அணிகலன்கள் முதல் படைக்கலன்கள் வரை ஏற்படும் அறிமுகங்கள், மொழிக்குள் சேகரமாகும் சொற்கள் என்று எதையும் தவிர்க்க இயலாது. யவனம், சீனம், பாரசீகம் முதலாம் தேசங்களின் பயணிகள் சுமந்து வந்தவை, வணிகர் சுமந்து வருபவை….
எந்தச் சொல்லும் மக்கள் புழங்கும் வரை, மக்கள் அனுமதிக்கும் வரை, விரும்பும் வரை, மொழிக்குள் வாழவே செய்யும். அவை பிறமொழி எழுத்துக்கள் தவிர்த்து, தமிழ் போல் ஒலிக்குமானால், தமிழ் எழுத்துக்களால் தொல்காப்பியர் அனுமதித்த எல்லைகளினுள் நின்று எழுதப்படுமானால் அவை மொழிக்குள் நீடிக்கும். ஈழத்து இன அழித்தொழிப்புப் போருக்குப் பின் தமிழுக்குள் வந்து சேர்ந்திருக்கும் சொற்கள், ஈழதத் தமிழனின் புலம் பெயர்வுக்குப் பின் வந்து சேர்ந்திருக்கும் சொற்கள் நூற்றுக் கணக்கில் இருக்கும். சன்னம் என்றும் சமறி என்றும் இன்றும் வழங்கப் பெறும் இரு சொற்களை மட்டும் எடுத்துக் காட்டாகச் சொல்வேன்.
அகராதிகள் பட்டியலிடாத, தொல் தமிழ் இலக்கியங்கள் கையாளாத ஈழத்துத் தமிழ் சொற்களுக்கு என எவரும் முனைந்து ஒரு அகராதி தொகுத்தால் எத்தனை ஆயிரம் சொற்கள் மொழிக்குள் இணையுமோ? மொழி என்பதும், சொல் என்பதும், தூய்மை என்பதும் சில தமிழாசிரியர்கள் தீர்மானிக்கும் விஷயமா?
மேலும் இன்றளவும் எந்த அகராதியும் தொகுக்காத வசவுகள், இடக்கரடக்கல் என்று ஒதுக்கப்படும் சொற்கள் எத்தனை ஆயிரம் ஆண்டாகத் தமிழினுள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. மலம் எனும் சொல் பண்டைய இலக்கியங்களில் இல்லை என்கிறார் அருளி. நான் தேடியவரை திருக்குறளில் இல்லை, பத்துப் பாட்டிலும் எட்டுத் தொகையிலும் இல்லை. பீ என்ற சொல் பண்டைக் காலத்தில் வழக்கில் இருந்தது என்கிறார் அருளி. அதனை இடக்கரடக்கலாகப் பகர வீ என்றும், பவ்வீ என்றும் எழுதினார்கள் என்கிறார். சமய இலக்கியங்களின் ஆட்சி வந்த பிறகு மும்மலம் என்ற சொல் எந்தத் தடையும் இன்றிப் பயன்படுத்தப்பட்டது.
அதே சமயம், வேற்று மொழிச் சொல்லுக்கு மாற்றாக, நம்மிடம் ஆயிரம் ஆண்டுகள் வாழும் சொல் ஒன்று இருக்குமானால், அதைப் பயன்படுத்துவதுதானே நியாயம்? அதனை நாம் மறு புழக்கம் செய்வதை ஊக்குவிக்க வேண்டும். சனி என்பது வட சொல். நம்மிடம் மாற்றாகப் பழைய சொல் காரி இருக்கும்போது காரிக் கிழமை, காரிக் கோள் என்று சொல்வதை மறுக்கவோ, ஏளனம் செய்யவோ, உதாசீனப்படுத்தவோ செய்யலாகாது.
கூரியர் என்பது ஆங்கிலச் சொல். மொழி இலக்கணப்படி நான் எழுதியவாறே பயன்படுத்துகிறோம். ஆனால் தூதஞ்சல் எனும் சொல் புழக்கத்துக்கு வரும்போது மனத்தடைக் காரணமாக மறுப்பது சரியல்ல. நாவல் என்பது தமிழில் நாவல் மரம். ஆங்கிலத்தில் நாவல் என்பதோ இலக்கிய வடிவம். புதினம் என்றோர் சொல்லைப் பல்கலைக் கழகங்கள் கண்டு பிடித்து அவர்கள் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். நான் நாவல் என்றுதான் எழுதுகிறேன். நாவல் எனும் சொல் தமிழ் எழுத்துக்களைப் பயன்படுத்தும் சொல். தமிழ்ச் சொல் போலவே ஒலிக்கிறது. மக்கள் புழக்கத்தில் இருக்கிறது. ஒரு வேளை நெடுங்காலம் இருக்கப் போகிறது. அந்தச் சொல்லை என்ன செய்வது? மொழிக்குள் இருந்து களை போலப் பிடுங்கி எறிய வேண்டும் என்பார் தனித் தமிழ் ஆர்வலர்.  இது தனித்தமிழ் ஆர்வலர் மட்டுமே தீர்மானிக்கிற விஷயமா?
ஒரு காலத்தில் நமக்கு மணிக்கூர் கணக்கு இல்லை. ஒரு நாள் என்பது 24 மணி என்பது பின்பு தான் வந்து சேர்ந்தது. நமக்கோ அல்லும் பகலும் 60 நாழிகை. நமது நாள் சூரிய உதயத்தில் தொடங்கி மறுநாள் சூரிய உதயத்தில் முழுமை பெற்றது. இன்றோ நாள் என்பது நள்ளிரவு பன்னிரண்டு மணி முடிந்தவுடன் தொடங்கி விடுகிறது. நம்மிடம் கணம் உண்டு, நொடி உண்டு. மணி, நிமிடம் இருக்கவில்லை. Hour என்னும் சொல் மணி ஆயிற்று. மணித்தியாலம் என்றோம். Minute என்பது நிமிட், மினிட் என்று வடபுலத்தாரும் நிமிஷம் என்று நாமும் பயன்படுத்தலானோம். விஷயம் விடயம் ஆன இலக்கணப்படி நிமிஷம் நிமிடம் ஆயிற்று. நிமயம் என்கிறார்கள் தனித்தமிழர்கள். நிமயம் என்னும் சொல் அழகான தமிழ்ச்சொல் ஆகிவிட்டது. நிமிடம் அல்லது நிமயம் நமக்கு வேண்டுமா, வேண்டாமா? அது போல் second என்பது வினாடி அல்லது நொடி ஆயிற்று. கணம் என்பது மாற்றுச் சொல். ‘பொன்னவிர் மேனி சுபத்திரை மனதைப் புறங்கொண்டு போவதற்கே, என்ன உபாயம் என்று கேட்டால் அவன் இரு கணத்தே உரைப்பான்!’ என்று சொல்லவில்லையா பாரதி, கண்ணன் பாட்டில்! கம்பன் பயன்படுத்துகிறான் கணம் என்னும் சொல்லை. பூதகணம் என்னும் பொருளில் அல்ல. நொடி என்னும் பொருளில்.
நரசிங்கம் என்றால் எல்லோருக்கும் தெரியும். நரசிம்மம் என்றும் சொல்வோம். ஆழ்வார் ஒருவர் அதை ஆளரி என்னும் சொல்லால் குறிக்கிறார். ஆள் + அரி = ஆளரி. நரசிம்மம் அல்லது நரசிங்கம் எனில் ஆறு எழுத்து மூன்று அசைகள். புளிமாங்காய்ச் சீர். ஆளரி எனில் ஈரசை-கூவிளச்சீர். மொழிக்குள் செயல்படும் எழுத்தாளர்கள் ஓசை அமைதி கருதியும் சொல்லின் குறுக்கம் கருதியும் இதனை அறிந்து கொள்வதில் தவறொன்றும் இல்லை.
தொல்காப்பிய இலக்கணத்தின் படி ய என்னும் எழுத்து மொழி முன் வராது. அது போல் பிற எழுத்துக்கள் உண்டு. ழ, ள, ல, ர, ற, ண,ன, ங, ட, போன்று. கம்பன் வான்மீகியின் காண்டப் பெயர்களை அடியொற்றி, எந்த மீறலும் செய்யாமல் தானும் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என்று பெயர் வைக்கிறார். வால்மீகியை மீற இயலாத கம்பர், தொல்காப்பியத்தை மீறி, யுத்தம் எனும் சொல்லை எங்கும் பயன்படுத்தவில்லை என்கிறார்கள் கம்ப ராமாயண அறிஞர்கள். மேலும் வடமொழி எழுத்து எதனையும் அவன் பயன்படுத்தவில்லை. சொற்களை மொழிமாற்றம் செய்யும் போது தற்சமம் அல்லது தற்பவம் என்ற இலக்கண வரம்புகளுக்குள் நின்றே செயல்படுகிறார். கம்பனின் நெறி நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. எடுத்துக்காட்டிற்கு ஒன்று சொல்வேன். நாகம் என்னும் வடசொல்லை பயன்படுத்துகிறான் – பாம்பு, யானை, மலை மற்றும் புன்னை எனும் பொருள்களில். ஆயிரம் ஆண்டுகளாக மொழிக்குள் புழக்கத்தில் இருக்கும் நாகம் போன்ற ஆயிரக்கணக்கான சொற்களை என் செய?
இன்று தகசீலும் ஜில்லாவும் போன இடம் தெரியவில்லை. வட்டமும், மாவட்டமும் நிலைப்பெற்று விட்டன. பேருந்து, சிற்றுந்து என்பன மக்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டுவிட்டன. எனினும் கார், சைக்கிள் போன்ற சொற்கள் மறைந்துவிடவில்லை.
ஜில்லா கலக்டர் என்று புழங்கப்பட்ட சொற்களை மாவட்ட ஆட்சியர் என்றால் தமிழர் அனைவரும் புரிந்து கொள்கின்றனர். ஆட்சியர் என்னும் சொல் சமகாலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சொல் அல்ல. பத்தாம் நூற்றாண்டு கம்பன், சுந்தர காண்டத்தில் பயன்படுத்திய சொல். பிணி வீ ட்டுப் படலத்தில் அமைந்த பாடல் இது. பிரம்மாத்திரம் எனும் பாசத்தால் கட்டுண்டு நிற்கும் அனுமனை உற்று நோக்கி, இராவணன் வினவும் பாடல்.
‘நின்று இசைத்து உயிர் கவர் நீலக் காலனோ?
குன்று இசைத்து அயில் உற எறித்த கொற்றனோ?
தென் திசைக் கிழவனோ? திசை நின்று ஆட்சியர்
என்று இசைக்கின்றவர் யாருள், யாவன் நீ?’
நிலை நின்று தனது பாசக்கயிற்றால் கட்டி உயிர் கொள்ளும் நீலக் காலனோ நீ? கிரௌஞ்ச மலையை தனது வேலால் உட்புகும்படித் தாக்கிய முருகனோ? தென் திசைக்கு அதிபனான யமனோ? மற்ற திசைகளின் ஆட்சியர் என்று சொல்லப்படுகிறவர்களில் யாவன் நீ?’ என்று பொருள். இங்கு ஆட்சியர் என்னும் சொல் திரி சொல் அல்ல. திசைச்சொல் அல்ல.வடசொல்லும் அல்ல. செந்தமிழ் நாட்டு இயற்சொல். ஆயிரம் ஆண்டுகளாக கம்பனில் புதைந்து கிடந்த சொல், இன்று துலக்கம் பெற்று வாழ்கிறது. கலக்டர் என்ற சொல்லை விட மிகுந்த பொருளுடையது ஆட்சியர் என்ற சொல்.
Bible என்ற சொல்லுக்கு Book என்றே பொருள். நாம் பனுவல், நூல், புத்தகம் என்கிறோம்.
‘நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றுந்தன்
நுண்மை அறிவே மிகும்’
என்பது குறள். பனுவல் எனும் சொல், நூல் எனும் பொருளில் சங்க இலக்கிய நூல்களிலும் புழங்கிய சொல்
‘பனிவரை மார்பன் பயந்த நுண்பொருள்
பனுவலின் வழாஅப் பல்வேறு அடிசில்’
என்கிறது சிறுபாணாற்றுப் படை. ‘இமயமலை போன்று விரிந்த மார்பினை உடைய வீமன் யாத்த நுண்மையான சமையல் நூலிலிருந்து சற்றும் வழுவாதபடி சமைத்த பல்சுவை உணவு’ என்பது பொருள்.
சொல்வனம் இணைய இதழில் நானொரு கட்டுரைத் தொடர் எழுதினேன் ‘பனுவல் போற்றுதும்’ என்ற தலைப்பில். நண்பர்கள், வாசகனுக்கு அர்த்தமாகுமா என்று கேட்டார்கள். அர்த்தமாயிற்று. பிறகு அந்தத் தலைப்பில் கட்டுரைத் தொகுப்பும் ஆயிற்று. இன்று சென்னையில், தமிழ்ப் புத்தகங்கள் விற்கும் கடை ஒன்றின் பெயர் ‘பனுவல்’.
நான் சொல்ல வருவது, இலக்கண மரபின் வழி நின்று, மொழிக்குள் சொற்கள் சேகரமாகட்டும். ஆனால் தொல் தமிழ்ச் சொற்களை குப்பையில் வீசாதீர்கள் என்பதே!
108 வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்றாக திருப்பதிசாரம் நான் பிறந்த ஊருக்குத் தெற்கே ஒரு கல் தொலைவு. நம்மாழ்வாரின் தாயார் பிறந்த ஊர். நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் திருப்பதிசாரத்தை, திருவெண்பரிசாரம் என்கிறது. திருமாலின் பெயர் திருவாழி மார்பன். நம்மாழ்வார் பாசுரமே பேசுகிறது –
‘வருவார், செல்வார், வண்பரிசாரத்து இருந்த என்
திருவாழ் மார்வற்கு என்திறம் சொல்லார்; செய்வது என்
உருவார் சக்கரம் சங்கு சுமந்து இங்கு உம்மோடு
ஒருபாடு உழல்வான் ஓர் அடியானும் உளன் என்றே!’
சுசீந்திரத்தில் அறம் வளர்த்த நாயகி, திருப்பாதிரிப் புலியூரில் பெரிய நாயகி அம்மை, திருப்புடை மருதூரில் கோமதி அம்மன், வைத்தீசுவரன் கோயிலில் தையல் நாயகி, திருப்புகலூரில் கருந்தார்குழலி, திருமுருகப் பூண்டியில் முயங்கு பூண் வல்லியம்மை, பொன்வனமராவதியில் ஆவுடை நாயகி, குடுமியான் மலையில் அறுவடை மழை மங்கை நாச்சியார், திருவிடை மருதூரில் பெரு நல மாமுலையம்மன், திருவண்ணாமலையில் உண்ணாமுலையம்மன், திரு நல்லூரில் திருமலை சொக்கி என்று எத்தனை தமிழ்ப் பெயர்கள்!
துன்பம் என்னவெனில், சுட்ட கருவாட்டு வாசம் பிடிக்கின்ற எங்கலூர் சுடலை மாடன்கள் எல்லாம் தற்போது ஶ்ரீ சுடலை மாடன்கள். அவர்தம் கோயில்கள், தேவஸ்தானங்கள்.
கிறித்துவ வேதமான பைபிள் வாசித்தவர்கள் ‘NOAH’ வை அறிவார்கள். நோவா உருவாக்கியதுவே உலகின் முதல் மரக்கலம் என்பார்கள். நோவாவின் பெயரிலேயே நாவாய் எனும் தமிழ்ச்சொல் வந்தது, Navy எனும் ஆங்கிலச் சொல் வந்தது என்பார் கவிக்கோ அப்துல் ரகுமான். நாவாயை இந்தி நய்யா என்கிறது. நாவிகள் எனும் சமற்கிருதமும் தமிழும் கலந்த சொல்லுக்கு, கப்பற்காரன் என்று பொருள் தருகிறார் அருளி. கொங்கணக் கடற்புறத்து கோலி மொழி, துடுப்பு வலிப்பவனை நாக்பா என்கிறது. ‘வல்யொ ரே நாக்பா வல்லோ!’ என்றொரு பாடலும் உண்டு. வல்லோ என்றால் துடுப்பு வலித்தல். நௌ  என்றாலும் நௌகா என்றாலும் தமிழில் மரக்கலம்.
‘தீக்கடல் கடைந்த திருமதுரம்’ என்று தொல் தமிழில் தனது நாவழக்குப் பெயர் வைக்கிறான் மலையாளி. நாம் அன்றாட உரையாடலில் தமிழ் அறிந்திருந்தும், தமிழ்ச் சொற்கள் தெரிந்திருந்தும், பத்துக்கு நாலு சொல் ஆங்கிலம் பயன் படுத்துகிறோம். அது நமது மனோபாவம், போலியான மதிப்பீடுகள், ஆங்கிலச் சொற்கள் பயன்படுத்தினால் மட்டுமே மேன்மக்கள் எனக் கருதுவார் எனும் மாயை, அறியாமை, பகட்டு. அந்தத் தமிழ்ப் புத்திக்கும் தமிழில் பிறமொழிச் சொற்கள் இலக்கண வழிபாட்டு புழக்கத்தில் வருவதற்கும் தொடர்பில்லை. அது வேறு பிரச்னை, இது வேறு விடயம்.
எத்தனை சுலபமாக ஆங்கிலம் எனும் சொல் தெரிகிறது, English எனும் சொல்லுக்கு மாற்றாக. ஆங்கிலம் எனும் ஆங்கில வழித் தமிழ்ச் சொல்லைப் பறித்து எடுத்து விட்டால், பிறகு நமக்கு ஏது சொல் English எனும் மொழியைக் குறிக்க?
தென்னை அல்லது தெங்கு நமது தாவரம். குறைந்தது 3000 ஆண்டுகளுக்கு முந்திய இலக்கியங்கள் தெங்கு பற்றிப் பேசுகின்றன. தென்னை சார்ந்த சொற்கள் தமிழில் அறுபதுக்கும் குறையாமல் இருக்காதா? குடும்பை, கொச்சங்காய், கருக்கு, இளநீர், நெற்று, சவரி, தொண்டு, கதம்பை, சிரட்டை, வழுக்கை, துருவல், பல், கீற்று, தவண், கொப்பரை, நார், மடல், மட்டை, கீற்று, ஈர்க்கு, குண்டி மட்டை, கிடுகு, ஓலை, பாளை, கோஞ்சாட்டை, என..
உ.பி, பீகாரில் தென்னை எனும் தாவரம் இல்லை என்று கொள்வோம். அப்போது தென்னை எனும் சொல்லே இருக்காது. கேரளத்தில் இருந்து உ.பி, பீகாருக்கு தேங்காய் என நாம் வழங்கும் நாளிகேரம் போய்ச்சேரும்போது, அவர்கள் அதற்கு நாரியல் எனப் பெயர் வைத்து வழங்குகிறார்கள். அவர் மொழிக்கும் தென்னை சார்ந்த வேறு என்ன சொற்கள் வழங்கும்? வேண்டுமானால் நாரியல் பானி, நாரியல் காட் என தேங்காய்த் தண்ணீருக்கும் தென்னமரத்துக்கும் சொற்கள் இருக்கக்கூடும். மற்ற தேங்காய் சார்ந்த சொற்கள் இலா. அப்படித்தானே ஆப்பிள் என்ற சொல் நம் மொழிக்குள் வந்திருக்கும்? மக்கள் விரும்பும் வரை அந்தச் சொல் நீடிக்காதா? ஆப்பிள் எனும் சொல் மொழிக்குள் சேர்ந்தால் மொழி அழிந்து போகுமா?
ஆப்பிலுக்கு அரந்தை எனும் சொல் கண்டுபிடித்தார்கள் தமிழ்ப் பண்டிதர்கள். அரத்தம் எனில் இரத்தம். இரத்தம் எனில் சிவப்பு. சிவப்பாக இருப்பதால் ஆப்பிள் அரத்தை ஆயிற்று என்றனர். ஆப்பிள் பச்சை நிறத்தில் வருகிறது, மஞ்சள் நிறத்தும் வருகிறது, அவற்றைப் பரத்தை, மரத்தை என்போமா? அரத்தை எனக்கு நாரத்தை அல்லது நரந்தம் எனும் சொற்களை நினைவு படுத்துகிறது. நரந்தம் எனும் சொல் சங்ககால ஔவை, தகடூர் மன்னன் அதியமானைப் பாடப் பயன்படுத்திய சொல். பண்டிதர்கள் கண்டுபிடித்த அரத்தை எனும் சொல் ஏன் மக்களால் ஏற்றுக் கொள்ளப் படாமற் போயிற்று? எப்போது பழக்கடையில் சாதாரணத் தமிழன் போய் நின்று ‘ஒரு கிலே அரத்தை கொடு!’ என்று கேட்கும்போது கடைக்காரன் நிறுத்துத் தருகிறானோ, அப்போதுதான் மொழி அந்தச் சொல்லை ஏற்றுக் கொண்டுள்ளது என்று பொருள்! சொல் என்பது புழங்கவா, கண்ணாடிப் பேழைக்குள் உறங்கவா?
இந்தக் கட்டுரை நெடுக, நான் ஆங்கிலப் பயன்பாடு பற்றிப் பேசவில்லை. தொல்காப்பியம் அனுமதித்த விதிப்படி தமிழில் புழங்கும் சொற்களைப் பற்றி மட்டுமே உரையாடுகிறேன்.
Tomato நமது தாவரம் அல்ல. நம்மிடம் வந்து 400 ஆண்டுகள் இருக்கலாம். வட புலத்து மொழிகள் அதனை டமாட்டா, டொமாட்டோ, டமாட்டர், தம்பாட்டா என்று புழங்குகின்றன. நாம் தக்காளி என்ற பெயரில் ஏற்றுக்கொண்டோம். அதற்கு என்னால் இலக்கிய சான்று காட்ட இயலாது. அது பற்றி வழக்கும் இல்லை. கொங்கு நாட்டில் தக்கோளி என்கிறார்கள். ஆனால் அரத்தை ஏன் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று மொழியியலாளர்களும் தமிழ் வித்துவான்களும் ஆராய வேண்டும்.
Coffee எனும் சொல் Brazil மொழிச் சொல். அச்சொல் தரும் பொருள், பிரேசிலிய மொழியில் குளம்பு. குழம்பு அல்ல, குளம்பு. ஆட்டுக்குளம்பு அல்லது மாட்டுக் குளம்பு. காப்பிக்கொட்டையின் வடிவம் குளம்பினை ஒத்திருந்ததால் காப்பியை அவர்கள் குளம்பு என்று குறித்தனர். அந்த அடிப்படையில்தான் மொழி ஞாயிறு தேவநேய பாவணர் அதனை தமிழில் குளம்பி என்றார். நாம் சிரித்தும் ஏளனம் செய்தும் அந்தச் சொல்லை தோற்கடித்தோம்.
பாமரத்தனமாகப் புதிய சொல்லை ஏளனம் செய்யும் அரைவேக்காட்டுத் தமிழர் கூட்டம் இங்குண்டு. தமிழின்  தொன்மையை எப்போதுமே கேலிப்பொருளாக்கும் சூதர் கூட்டமும் உண்டு. அரைகுறை அறிஞர்களும் உள்நோக்கம் கொண்ட இருபிறப்பாளர்களும் புறக்கணிக்கத் தகுந்தவர்கள்.
சாய் எனும் சொல் பாரசீக மூலம். மலையாளம் அதனை சாயா என ஏற்றுக்கொண்டது. வட புலத்து மொழிகள் அதனை சாயா என்றே ஏற்றுக்கொண்டன. நாமோ Tea எனும் ஆங்கிலச் சொல்லிலிருந்து தே எனும் சொல் பெற்றோம். தேயிலை என்றோம். தேநீர் என்றோம். ஈழம் தேத்தண்ணி என்கிறது.
Pineapple எனும் சொல்லை அன்னாசிப்பழம் என்று ஏற்றுக்கொண்டது. மலையாளம் புருத்திச்சக்கை என்றது. கைதச்சக்கை என்றும் சொன்னது. சக்கை எனில் பலாவின் மாற்றுச்சொல். நாம் பலாப்பழம் என்பதை, நாஞ்சில் நாடு அடக்கம் மலையாளம் சக்கை என்று வழங்கும். சரி, எங்ஙனம் அன்னாசியை கைத என்றது மலையாளம்? சென்னைப் பல்கலைக் கழத்து லெக்சிகன், கைதல் எனும் சொல்லுக்கு Fragrant Screw pine என்று பொருள் தருகிறது. தமிழில் தாழை என்று பொருள் சொல்கிறது. எவரும் மலையாளத்து மலை பிரதேசங்களில் அன்னாசி செடி கண்டதுண்டா? அது ஒரு தாழை இனம் என்று பார்த்த உடனேயே புலப்படும். மூன்றடி உயரம் வரை வளரும். கற்றாழை போன்றிருக்கும். சரி, உம்மில் எவரும் தாழம்பூ பூக்கிற பருவகாலம் முடிந்து அதன் காயை, கனியைக் கண்டதுண்டா? தாழம்பழம் நாங்கள் பார்த்திருக்கிறோம். அமோகமாக இருக்கும் அதன் வாசனை. ஆனால் மனிதர் தின்பதில்லை. உடனே கேட்பீர்கள் தானே, தாழை என்பதுதான் கைதல் என்று எதன் அடிப்படையில் கூறுகிறேன் என்று. ‘கைதல் சூழ் கழிக் கானல்’ என்று சம்பந்தர் திருவேட்டக்குடி தேவாரப் பாடல் வரியை மேற்கோள் காட்டுகிறது அகராதி.
மறுபடியும் திருவேட்டக்குடி தேவாரத்தில் ஞானசம்பந்தர்,
‘பானிலவும் பங்கயத்துப் பைங்கானல் வெண்குருகு கானிலவு மலர்ப்பொய்கைக் கைதல்சூழ் கழிக்கானல்’
என்கிறார்.
தாழாங்காய் எனும் சொல்லுக்கு useless fruit of screw pine என்கிறது லெக்சிகன். பதிற்றுப் பத்தின் ஆறாம் பத்து பாடியவர் காக்கை பாடினியார் நச்சென்னையார். ‘கமழும் தாழைக்கானல் அப்பெருந்துறை’ முள் தாள் தாழையை. தாழை என்றால் தென்னை அல்லது தெங்கு என்றும் பொருள். புற நானூற்றில் குருங்கோழியூர் கிழார் பாடல் ‘குலை இறைஞ்சிய கோள் தாழை’ என்கிறது தென்னை மரத்தை. பழஞ் சொல்லான தாழை, கைதல் என்றும் வழங்கப்படும் போது, அன்னாசியை மலையாளம் கைத என்று கையாளும் போது, நாம் அன்னாசிப் பழத்தை கைதல் பழம் என்றால் அதில் இளிக்க என்ன உண்டு?
Apple-ஐ ஆப்பிள் என்றும் Cycle-ஐ சைக்கிள் என்றும் ஏற்றுக்கொண்டோம். இவற்றிற்கெல்லாம் ஆதி தமிழ்ச்சொற்கள் இல்லை. Pappaya-வை பப்பாளி என்றோம். Rubber-ஐ ரப்பர் என்றோம். Novel எனும் இலக்கிய வடிவத்தை நாவல் என்றே எடுத்துக்கொண்டோம். புதினம் என்ற சொல் நாவலுக்குப் பொருத்தமான தமிழாக்கம்தான். எனினும் பல்கலைக்கழக வளாகங்கள் மட்டுமே பயன்படுத்துகின்றன.
தனித்தமிழ் என்று கடும்’பிடித்தம்’ பிடிக்கிறவர்கள் தேவநேயன் எனும் மொழிஞாயிறின் பெயரை வசதியாக மறந்து போய்விடுவார்கள். பயபக்தியோடு Stalin என்று உச்சரிப்பார்கள். ஆனால் இசுடாலின் என்று எழுதுவார்கள். இசுடாலின் என்று எவரும் பேசிக்கேட்டது உண்டா?
மொழி என்பது எவரின் கையடக்கப் பதிப்பு அல்ல.
எனக்குள் எழும் சில ஐயப்பாடுகள், சில சொல்லாக்கங்களை ஏன் தமிழன் ஏற்றுக்கொள்கிறான்? வேறு சிலவற்றை ஏன் நிராகரிக்கிறான்? தொல்காப்பியர் தரும் சுதந்திரத்திற்கும் தனித்தமிழ்வாதிகள் கட்டும் வேலி வரம்புக்கும் இடையிலான நட்பென்ன, முரண் என்ன? ஆப்பிள், சைக்கிள், சிமெண்ட் போன்ற சொற்களை தமிழ்மொழி எத்தனை நூற்றாண்டுகள் இனிக் கையாளும்? அல்லது என்றேனும் நிராகரிக்குமா?
படைப்புத்தளத்தில் நாற்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக இயங்கும் ஒரு எளிய எழுத்தாளரின் இன்னொரு ஐயம்! ஏறத்தாழ பத்து இலக்கம் சொற்கள் இந்த மொழிக்குள் இருக்க வாய்ப்பு உண்டு. அட்டவணைப் படுத்தப்படாத சொற்கள் அடங்கலாக. அவற்றுள் இருபதினாயிரம் சொற்கள், 27 மொழிகளின் சொற்கள் புழங்குவதால் மொழி அழிந்துவிடுமா? அதாவது பத்து இலக்கத்தில் இருபதினாயிரம் என்பது இரண்டு சதமானம் அல்லது விழுக்காடு! இந்த இரண்டு சதமான சொற்கள் அழித்து விடும் அளவிற்கு நொய்மையானதா எம்மொழி? சொல்வார்கள், ‘சாற்றைக் கெடுத்த குருணி’ என்றும் ‘குடம் பாலுக்குத் துளி விடம்’ என்றும்.
எனில் தொல்காப்பியத்துக்குப் புதிய உரை எழுத வேண்டும்!
http://solvanam.com/?p=47917

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், இலக்கியம் and tagged , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக