ஔவியம் பேசேல்-1

nanjil2a
நாஞ்சில் நாடன்
ஈராண்டு முன்பு நவிமும்பை – பனுவேல் தமிழ்ச்சங்க ஆண்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினராகப் போயிருந்தேன். பத்து முந்நூறு தமிழ்க் குடும்பங்கள். என் தம்பி G.ரவி பிள்ளை தலைவராக இருந்தான். ஆண்டு விழாவில் சிறுவர் சிறுமியர் திருக்குறள், ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் சொன்னார்கள். பாரதியார் பாடினார்கள். சேவை மனப்போக்குடன், ஞாயிறு தோறும் ஒருவர் குழந்தைகளுக்கு, எந்த எதிர்பார்ப்பும் இன்றி தமிழ் பயிற்றுவித்தார். உறுப்பினர்களில் ஒருவர் மாற்றி ஒருவராக , சிறுவருக்கு சமோசா, வடாபாவ், வடை வாங்கிக் கொடுத்தார்.
நான் மேடையில் இருந்தபோது, தமிழ்ப் பாட்டுகள் சொன்ன பல சிறுவரில் என் தம்பி மகன் சபரீஷ் பிள்ளையும் ஒருவன். ஆத்திச் சூடி சொன்னான். அகரம் முதல் ஒளகாரம் ஈறாகப் பன்னிரண்டு. பன்னிரெண்டாவது எழுத்துக்கான ஒளவையாரின் ஆத்திச்சூடி, `ஒளவியம் பேசேல்`. இதை வாசிக்கும் நீங்கள், இந்த இடத்தில் நின்று, ஒளவியம் பேசேல் எனும் தொடருக்குப் பொருள் யோசித்துப் பாருங்கள். உண்மையில், நம்மில் பலரைப்போல, எனக்கும் பொருள் தெரிந்திருக்கவில்லை.
வீட்டுக்கு வந்த பிறகு, சபரீஷிடம் மராத்தியில் கேட்டேன்.
`ஒளவியம் பேசேல் என்றால் என்னடா சப்பு?`
`Don’t talk bad words about others`, என்றான்.
பள்ளியில் அவன் தமிழ் மாணவன் அல்ல. மராத்தி, இந்தி, ஆங்கிலம் அவனது மொழிகள்.
கோவை திரும்பிய பின், ஆத்திச்சூடிக்கு, நாவலர் மு.வேங்கடசாமி நாட்டார் உரை விளக்கம் எடுத்துப் பார்த்தேன். ஒளவியம் – பொறாமை வார்த்தைகள் என எழுதப்பெற்றிருந்தது. இந்த ஒளவியம் எனும் சொலில் சில நாட்கள் மனம் சிக்கிக்கொண்டு கிடந்ததால் இந்தக் கட்டுரை.
`எழுத்து எனப் படுவ
அகரம் முதல் னகரம் இறுவாய்
முப்பஃது என்ப`
என்பது தொல்காப்பிய நூற்பா. அதாவது எழுத்து எனப்படுவன, அகரம் தொடங்கி னகரம் ஈறாக முப்பது என்ப. தமிழில் உயிர் எழுத்துக்கள் 12, மெய் எழுத்துக்கள் 18, ஆக முப்பது. உயிரும் மெய்யும் புணர்ந்து, உயிர்மெய் 216 எழுத்துக்கள். ஆய்த எழுத்து எனப்படும் ஃ ஒன்று. எனவே, ஆக மொத்தம், தமிழ் எழுத்துகள் 247. இது பாலபாடம்.
மேலும், சில உச்சரிப்புகளைத் தமிழில் கொண்டுவருவதற்காக, ஏற்படுத்தப்பட்ட கிரந்த எழுத்துகள் க்,ஷ்,வ்,ஷ்,ஹ் எனும் ஐந்தும் பன்னிரு தமிழ் உயிருடன் புணர்ந்து, மொத்த கிரந்த எழுத்துகள் 65, அவற்றுடன் சிறப்பெழுத்து ஸ்ரீ சேர்ந்து ஆக 66. அரசியல் காரணங்களுக்காகவும் தூய தமிழ்க் காரணங்களுக்காகவும் இந்த எழுத்துகள் பாடத்திட்டத்தில் இருந்து இன்று நீக்கப்பட்டுவிட்டன. என் போன்ற மூத்த எழுத்தாளர்கள் மட்டுமே நஷ்டம், ஆஹா, ஜாங்கிரி, எஸ்ரா பவுண்ட், சுபஸ்ரீ, பஷி போன்ற சொற்களை அறிந்து வைத்திருக்கிறோம். இந்த கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்துவதா வேண்டாமா என்பது மொழி அரசியல். இராஜாஜி எனில் நமக்குக் கடுப்பு, இராசாசி என்றே அரசு ஆவணங்கள் சொல்லும். ஆனால் ஸ்டாலின் என்றால் உவப்பு, அது இசுடாலின் ஆகாது. இது நம் மொழி நேர்மை. ஆனால் கம்பன் தனது 10,368 பாடல்களில் எங்குமே இந்த எழுத்துகளைப் பயன்படுத்தவில்லை என்ற உண்மையை ஈண்டு குறித்துச் சொல்கிறேன்.
அது கிடக்கட்டும். கிரந்த எழுத்துகளின் பயன்பாட்டைப் பற்றி நாம் பேசும்போது, ஃ எனும் பாவப்பட்ட ஆய்த எழுத்தையும், ஒள எனும் இன்னொரு புறக்கணிக்கப்பட்ட எழுத்தையும் பற்றிப் பேச வேண்டும். எனது முந்திய கட்டுரையான, `அஃகம் சுருக்கேல்`, ‘ஃ’ பற்றி விரிவாகப் பேசியது. இப்போது ‘ஒள‘ வில் இருக்கிறோம்.
`ஒளகார இறுவாய்ப்
பன்னீர் எழுத்தும் உயிர் என மொழிப`
என்கிறது, தொல்காப்பிய எழுத்ததிகார நூற்பா. அஃதாவது அ முதல் ஒள வரை பன்னிரண்டு எழுத்தும் உயிர் எழுத்துக்கள் என்பதாம்.
`ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும்
அப்பால் ஏழும்
ஈர் அளபு இசைக்கும் நெட்டெழுத்து என்ப`
என்பதும் தொல்காப்பியம் தான். அதாவது குறில் எழுத்துக்கள் ஒலிக்கும் காலம் ஒரு மாத்திரைக்காலம் எனில், நெட்டெழுத்துக்கள் இசைக்கும் காலம் இரண்டு மாத்திரைக் காலம் ஆகும். எனிமும் ஐ எனும் நெட்டெழுத்துப் போல, ஒள எனும் நெடிலும் இரண்டு மாத்திரை கால அளவில் ஒலிப்பதாயினும், சில சந்தர்ப்பங்களில் மட்டும் ஒலியளவில் குறுகி ஒரு மாத்திரை கால அளவிலும் ஒலிக்கலாம். அதாவது இந்த இரு நெடில்களும் குறில்களாகவும் பயன்படும். இதனை இலக்கணம் ஐ காரக் குறுக்கம், ஒளகாரக் குறுக்கம் என்கிறது. மேலும் ஐ எனும் எழுத்தும் ஒள எனும் எழுத்தும் செய்யுளின் இலக்கண அமைதிக்காகவும் இசை அமைதிக்காகவும் அளபெடுத்து வரும் போது இ மற்றும் உ எனும் குறில்கள் முறையே இசை நிறைக்கும். அளபெடை என்றால் தெரியும் தானே! செய்யுளில் ஒரு எழுத்து, இலக்கணத்தை நிறைவு செய்ய, இசையை நிறைவு செய்ய, அளபெடுத்து வருவது அளபெடை.
உறா அர்க் குறுநோ யுரைப்பாய் கடலைச்
செறா அம் வாழிய நெஞ்சே
எனும் 1200 குறளில் உறார் எனும் சொல்லும் செறார் எனும் சொல்லும் உறா அர், செறா அர் என்று அளபெடுக்கின்றன.
பாடலின் பொருள் – மனமே! நின்னொடு பொருந்தார்க்குத் தூது விட்டு, உற்ற நோயைச் சொல்ல நினைக்கின்றாய்; அதனினும் நன்று நம்மை உறங்காமல் வருத்துகின்ற கடலைத் தூர்ப்பாய் ஆயின். [வ.உ.சி.]
மேலும் நெட்டெழுத்துக்களான ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ எனும் ஏழும், சொற்களாகவும் நின்று பொருள் தருவன. எடுத்துக்காட்டு, ஆ – பசு, ஈ – கொடு, ஊ – ஊன், ஏ – அம்பு, ஐ – தலைவன், ஓ – சென்று தங்குதல், மதகு தாங்கும் பலகை ஔ – உலகம், ஆனந்தம் என்மனார் புலவ.
இங்ஙனம் உயிர் எழுத்துக்களிலும், உயிர்மெய் எழுத்துக்களிலும் ஓர் எழுத்து ஒரு மொழியாகத் தமிழில் 42 உண்டு என்றும், 66 உண்டு என்றும் அறிஞர்கள் கருதுகின்றனர். எடுத்துக்காட்டு – கை, பை, மை, கா, தீ, பீ, சே எனப்பற்பல.
எழுத்துப் போலிகள் என இலக்கணத்தில் ஓர் இனம் உண்டு. இவற்றிற்கும் இலக்கியப் போலிகளுகளுக்கும் தொடர்பு இல்லை. எழுத்துப் போலிகளுக்கு எடுத்துக்காட்டாக, ‘அகர இகரம் ஐகாரம் ஆகும்’ என்றும் ‘அகர உகரம் ஔகாரம் ஆகும்’ என்றும் தொல்காப்பியம் கூறும். அஃதாவது வைரம் எனும் சொல்லை வயிரம் என்று கௌந்தியடிகள் எனும் சொல்லை கவுந்தியடிகள் என்றும் எழுதலாம். அது போன்றே,
‘அகரத்து இம்பர் யகரப் புள்ளியும் ஐ என் நெடுஞ்சினை மெய் பெறத் தோன்றும்’ என்கிறது தொல்காப்பியம். அதாவது ஐ எனும் எழுத்துக்கு மாற்றாக அய் என்று எழுதலாம். அவ்விதம் ஐயர் என்பது அய்யர் ஆகும். இதைத் தொல்காப்பியமே அனுமதிக்கிறது. ஆதலால் இவை ஈ.வே.ரா.வின் கண்டுபிடிப்புகள் அல்ல.
என்றாலும் இவை யாவுமே எழுத்துப் போலிகள் என்பதை மறந்துவிடலாகாது. மெய்யில் புழங்குவதா, அன்றிப் போலிகளில் புழங்குவதா என்பது அவரவர் தேர்வு.
செய்யுள் இயற்றும் போது, யாப்புக்கான வசதி குறித்தும், ஓசை கருதியும் குறுக்கங்களையும் போலிகளையும் பயன்படுத்தினார்கள். தமிழ் இலக்கியப் பரப்பில் இவற்றுக்கான எடுத்துக் காட்டுகள் ஏராளம் உண்டு. எனினும் நாமே ஒலித்துப் பார்த்தால் ஐ என்பதும் அய் என்பதும் ஒன்றல்ல என்பதும் ஔ என்பதும் அவ் என்பதும் ஒன்றல்ல என்பதும் அர்த்தமாகும். எனவே தான் எழுத்துப் போலி என்றனர் போலும்.
எடுத்துக்காட்டுக்கு ஒரு திருக்குறள் பார்ப்போம்.
‘அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்’
அழுக்காறு உடையானை, செய்யவள் அவ்வித்துத் தவ்வையைக் காட்டிவிடும் என்று கொண்டு கூட்டுகிறார் பரிமேலழகர். பிறர் ஆக்கம் கண்டு பொறாமை உடையவளை, திருமகள் தானும் பொறாது, தன் மூத்தவளான மூதேவியைக் காட்டி விடுவாள் என்பது பொருள். இங்கு அவ்வித்து என்றால், தானும் அழுக்காறு செய்து என்றே மணக்குடவரும் பொருள் கொள்கிறார்.
இந்தப் பாடலில் ‘அவ்வித்து’ எனும் சொல்லுக்கு அடுத்த அடியில் ‘தவ்வை’ எதுகை ஈண்டு ‘ஔவித்து’ எதுகை போட்டு செய்யுளைத் தொடங்கி, அடுத்த அடிக்கு ‘தௌவை’ என்று எதுகை போட்டாலும், தௌவை எனும் சொல்லுக்கு தமக்கை, மூதேவி என்ற பொருள் இருக்கிறது. ஒரு வேளை திருவள்ளுவர் ஓசை கருதினார் போலும்!
கம்ப ராமாயணத்தில், பால காண்டத்தில் திரு அவதாரப் படலத்தில், ‘அவ்வியம் நீத்து உயர்ந்த மனத்து அருந்தவனைக் கொணர்ந்து ஆங்கண் விடுப்பென்’ என்றும், அகலிகைப் படலத்தில், ‘அவ்வியம் அவித்த சிந்தை முனிவனை அற்றம் நோக்கி’ என்றும், மிதிலைக் காட்சிப் படலத்தில், ‘அவ்வியம் அவித்த சிந்தை முனிவனை ஆண்டுக் காணா’ என்றும் கம்பன் ‘அவ்வியம்’ பயன்படுத்தும் போது, அந்தச் சொல்லுக்கு பொறாமை முதலாய தீக்குணங்கள் என்றே வை.மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார் பொருள் காண்கிறார். ஈங்கெல்லாம் ஔவியம் எனும் சொல் அவ்வியம் ஆனது எதுகைக்கும் ஓசைக்கும் வேண்டித்தான் எனில், எழுத்துப் போலியை வாழ்விக்க நேர்ச்சொல்லை இழப்பது நியாயமா எனும் கேள்வி பிறக்கிறது.
இந்த ஔ எனும் ஆதித் தமிழ் எழுத்து, தொல்காப்பியம் வரையறுக்கும் எழுத்து, தொல்காப்பியருக்கு முந்தியே இம்மொழியில் தோன்றி வாழ்ந்திருந்த எழுத்து, இன்று போலிக்குள் பதுங்கிக் கொள்வது சங்கடமாக இருக்கிறது.
தமிழ் லெக்சிகன், ஔ வரிசையில் 37 பதிவுகளைக் கொண்டுள்ளது. முழுப் பட்டியலும் தரலாம் தான். வசதி கருதி சில சொற்களைத் தருகிறேன்.
  1. ஔ – தார இசையின் எழுத்து (திவாகர நிகண்டு)
  2. ஔகம் – இடைப்பாட்டு அல்லது பின்பாட்டு (சிலப்பதிகார உரை)
  3. ஔகாரக் குறுக்கம் – தன் மாத்திரையில் குறுகிய ஔகாரம் (நன்னூல்)
  4. ஔசனம் – உபபுராணம் பதினெட்டினுள் ஒன்று
  5. ஔசித்தியம் – தகுதி
  6. ஔடதம் – மருந்து
  7. ஔடவம் – ஔடவ ராகம் (சிலப்பதிகார உரை)
  8. ஔடவ ராகம் – ஐந்து சுரம் மட்டும் உபயோகிக்கப்படும் இராகம்
  9. ஔதா – அம்பரி
  10. ஔதாரியம் – உதாரணம்
  11. ஔபசாரிகம் – ஒன்றின் தன்மையை மற்றொன்றில் ஏற்றிக் கூறுவது
  12. ஔபாசனம் – காலை மாலைகளில் கிருகஸ்தர் ஓமத் தீ ஓம்பும் புகை
  13. ஔபாதிகம் – உபாதி சம்பந்தமுள்ளது
  14. ஔரச புத்திரன் – சொந்தப் பிள்ளை. சுவீகார புத்திரனின் எதிர்ப்பதம்
  15. ஔரசன் – சொந்தப் பிள்ளை
  16. ஔரிதம் – ஒரு தரும நூல் (திவாகர நிகண்டு)
  17. ஔலியா – அரபிச் சொல். ஞானிகள்
  18. ஔவித்தல் – பொறாது
  19. ஔவியம் – அவ்வியம், அழுக்காறு, Envy.
  20. ஔவுதல் – வாயால் பற்றுதல். அழுந்தி எடுத்தல். கன்று புல்லை ஔவித் தின்கிறது.
  21. ஔவை – அவ்வை, Mother, Matron, Old Woman
  22. ஔவை நோன்பு – Secret ceremony performed by some Velala women, twice a year on a Tuesday at midnight, when no males, even babies in arms are allowed to be present. செவ்வாய் நோன்பு.
  23. ஔவையார் – பழைய பெண்பால் புலவர்களில் ஒருவர்
ஒரு விநோதம், மேற்கண்ட பதிவுகளில், ஔ என்னும் எழுத்து, பல பதிவுகளில் திசைச் சொல் அல்லது வடசொற்களை புழங்க அனுமதிக்கப் பயன்படுத்தப் பட்டுள்ளது என்பது தெரிய வருகிறது.
திசைச்சொல் அல்லது வடசொல் செய்யுளில் அனுமதிக்கப் படலாம் என்கிறது தொல்காப்பியம்.
‘இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்று அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே’
என்பது சொல்லதிகார நூற்பா. இவற்றுள்
‘வடசொல் கிளவி வட எழுத்து ஒரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே’
என்பதும் ஒரு நூற்பா. அஃதாவது வடமொழி ஒலிகளை நீக்கி, தமிழ் எழுத்துக்களோடு அமைந்த சொற்கள் வடசொல் ஆகும்.
எடுத்துக்காட்டுக்கு பங்கஜம் பங்கயம் ஆவதும், ஸர்ப்பம் சர்ப்பமாவதும். இலக்கணத்துக்கு அடங்கி, தமிழுக்குள் வேற்றுமொழிச் சொற்கள் பிரவேசிப்பதன் தன்மை இதுதான். நான் சொல்ல வருவது, பல அரபுச் சொற்களும் வட சொற்களும் தமிழ்ச் சொல்லாக உருமாற்றம் பெறுவதற்கு ஔ எனும் இவ்வெழுத்து உதவி இருக்கிறது. அது மொழிக்குப் பெரிய தொண்டு என்று கருதலாம். ஆனால், ‘அப்ப அந்த மூதி மொழிக்குள்ளே என்னத்துக்கு? தூக்கிக் குப்பையிலே கடாசு’ என்றும் தனித்தமிழ்வாதி எவரும் உரைக்கக் கூடும்.
இனி ககர ஒற்று முதல் நகர ஒற்று ஈறாக, அதாவது க் முதல் ன் வாயிலான பதினெட்டு மெய்யெழுத்துக்களையும், ஔ எனும் பன்னிரண்டாவது உயிர் எழுத்து புணர்ந்து, மொழிக்குள் செயல்படும் சொற்களைப் பார்ப்போம். அதாவது கௌ, ஙௌ, சௌ, ஞௌ, டௌ, ணௌ, தௌ, நௌ, பௌ, மௌ, யௌ, ரௌ, லௌ, வௌ, ழௌ, ளௌ, றௌ, னௌ எனும் பதினெட்டு உயிர்மெய் எழுத்துக்கள் புழங்கும் வெளி.
கௌ எனத் தொடங்கும் 110 பதிவுகள் லெக்சிகனில் உண்டு. அவற்றுள் எனக்கு முக்கியமாகப் பட்ட சில சொற்களின் பட்டியல்:
  1. கௌ – காணம், கொள்ளு
  2. கௌசலம் – தந்திரம்
  3. கௌசலை – இராமனின் தாய், கவுசலை
  4. கௌசனம் – கௌபீனம், கோவணம், கோமணம், கௌபீகம்
  5. கௌசாம்பி – கங்கைக் கரையின் தொல் நகரம்
  6. கௌசிகம் – கூகை (பிங்கல நிகண்டு), பட்டாடை (பிங்கலம்), பண் வகை, விளக்குத் தண்டு
  7. கௌசிகன் – விசுவாமித்திர முனிவன்
  8. கௌசுகம் – குங்கிலியம்
  9. கௌஞ்சம் – கிரவுஞ்சப் பறவை
  10. கௌடா – வங்காள-ஒடிசா எல்லையில் அமைந்ததோர் நகரம். சாதிப்பெயர் (எ.கா.) தேவ கௌடா, மூலிகை
  11. கௌடிலம் – வளைவு
  12. கௌடில்யர் – சாணக்கியன். கௌடில்ய கோத்திரம் என்று ஒரு கோத்திரம் உண்டு
  13. கௌண்டர் – கவுண்டர்
  14. கௌணம் – முக்கியம் இல்லாதது
  15. கௌணியன் – கவுணியன்
  16. கௌத்துவக்காரன் – வஞ்சகன்
  17. கௌத்துவம் – அஸ்த நட்சத்திரம், பத்மராகம் எனும் நவமணிகளில் ஒன்று. பாற்கடல் கடைந்ததில் வந்த மணி. திருமால் மார்பில் அணிந்தது.
  18. கௌத்துவ வழக்கு – பொய் வழக்கு
  19. கௌதமன் – புத்தன், முனிவன்
  20. கௌதமனார் – முதற் சங்கப் புலவர்
  21. கௌதமி – ஒரு நதி, கோரோசனை
  22. கௌதாரி – பறவை – கவுதாரி
  23. கௌதுகம் – மகிழ்ச்சி
  24. கௌந்தி – வால் மிளகு, கடுக்காய் வேர், கவுந்தி அடிகள்
  25. கௌபீன சுத்தன் – பிற பெண்களைச் சேராதவன்
  26. கௌபீன தோஷம் – பிற பெண்களைச் சேரும் குற்றம்
  27. கெளமாரம் – இளம் பருவம், முருகனை வழிபடு சமயம்
  28. கெளமாரி – ஏழு மாதர்களில் ஒருத்தி, மாகாளி
  29. கெளமோதகி – திருமாலின் தண்டாயுதம் (பிங்கல நிகண்டு)
  30. கெளரம் – வெண்மை, பொன்னிறம்
  31. கௌரவம் – மேன்மை, பெருமிதம்
  32. கௌரவர் – கவுரவர்
  33. கௌரி – பார்வதி, காளி, எட்டு அல்லது பத்து வயதுப் பெண், பொன்னிறம், கடுகு, துளசி
  34. கௌரி கேணி – வெள்ளைக் காக்கணம்
  35. கௌரி சிப்பி – பூசைக்குப் பயன்படும் பெரிய சங்கு
  36. கௌரி மைந்தன் – முருகன்
  37. கௌரியம் – கரு வேம்பு
  38. கௌரி விரதம் – நோன்பு
  39. கௌல் – நாற்றம்
  40. கௌவாளன் – ஒரு வகை மீன்
  41. கௌவியம் – பசுவில் இருந்து பெறப்படும் பால், தயிர், நெய், கோசலம், கோமயம் இவற்றின் கூட்டு. பஞ்ச கவ்வியம்
  42. கௌவுதல் – கவர்தல், கவ்வுதல்
  43. கௌவுகண் – கீழ்ப் பார்வை
  44. கௌவுதடி – கவைக்கோல்
  45. கௌவை – வெளிப்பாடு,பழிச் சொல், அலர், துன்பம் (பிங்கல நிகண்டு), கள் (பிங்கல நிகண்டு), கவ்வை
  46. கௌளம் – இராக வகை, கேதாரகௌளம்
  47. கௌளி – கவுளி, பல்லி, குறி சொல்லுதல், ஒரு ராகம்
  48. கௌளி சாத்திரம் – பல்லி சொல்லும் பலன்
  49. கௌளி பத்திரம் – வெள்ளை வெற்றிலை
  50. கௌளி பந்து – ஒரு இராகம்
  51. கௌளி பாத்திரம் – மஞ்சள், இளஞ்சிவப்பு நிறத்திலான தேங்காய்
  52. கௌஸ்துபம் – திருமால் மார்பு ஆபரணம்
  53. கௌசிகம் – பாம்பு, வியாழன்
  54. கௌசிகாயுதம் – வானவில்
  55. கௌசிகேயம் – வெண் கிலுகிலுப்பை
  56. கௌஞ்சிகன் – பொன் வினைஞன்
  57. கௌதுகம் – தாலி (யாழ்ப்பாண அகராதி)
  58. கௌதூகலம் – மிதி பாகல்
  59. கௌபலக்காய் – மிளகாய்
  60. கௌமுதம் – கார்த்திகை மாதம்
  61. கௌரி – துளசி, பூமி, இராகவகை
  62. கௌரி லலிதம் – அரிதாரம்
  63. கௌரீ புத்திரர் – தெலுங்கு வைசியர் பிரிவு
  64. கௌரீ மனோகரி – மேள கர்த்தா ராகம்
  65. கௌலகம் – வால் மிளகு
  66. கௌவியம் – கோரோசனை
பட்டியல் எழுதுவதை எனக்கான மொழிப் பயிற்சி என்று கொள்கிறேன். எதிர்காலத்தில் இவற்றுள் சில சொற்களைப் பயன் படுத்துவேனாயில், எனக்கது பெருமிதமாக அமையும்.
இனி ‘கௌ’வுக்கு அடுத்த ஔகார உயிர்மெய் ‘ஙௌ’ பார்க்கலாம்,
(தொடரும்)

See more at: http://solvanam.com/

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in "பனுவல் போற்றுதும்", அனைத்தும், இலக்கியம், எண்ணும் எழுத்தும், சிற்றிலக்கியங்கள், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , . Bookmark the permalink.

1 Response to ஔவியம் பேசேல்-1

  1. பிங்குபாக்: எழுத்துச் சீர்திருத்தம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s