சிற்றிலக்கியங்கள் 7(1) -அந்தாதி

நாஞ்சில்நாடன்
முன் பகுதிகள்: சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்
சொல்வனம் பனுவல் போற்றுதும்
சிவபெருமான் திரு அந்தாதி – 1
கபில தேவ நாயனார் அருளிச் செய்த அந்தாதி இது. இதும பதினோராம் திருமுறை, இவரது பிற ஊல்கள் – மூத்த நாயனார் திரு இரட்டை மணி மாலை, சிவபெருமான் திரு இரட்டை மணிமாலை என்பன.
மாலை ஒருபால் மகிழ்ந்தானை வன்கொன்றை
மாலை ஒருபால் முடியானை – மணல்
ஒளியானை உத்தமனை உண்ணா நஞ்சு உண்டற்கு
ஒளியானை ஏத்தி உளம்.
என்று ஒரு பாடல். இதில் ஒவ்வொரு மாலைக்கும் ஒவ்வொரு பொருள். திருமால், தோள்மாலை, மாலை நேரம் என.
சுவாரசியத்துக்காக ஒரு பாடல்.
ஊரும் அடு ஏற்றியூர், உண்கலனும் வெண்தலையே
உஊரும் விடை ஒன்று, உடை தோலே – ஊரும்
படநாகம் மட்டார் பணமாலை, ஈதோ
படநாகம் அட்டார் பரிசு.
சிவபெருமானது ஊர் திருவொற்றியூர், நான்முகனின் தலை கொய்து எடுத்த மண்டையோடு உண்ணுகின்ற கலம், ஊர்கின்ற காளை வாகனம், உடை தோல் (பொன்னார் மேனியனே, புலித்தோலை அரைக்கு அசைத்து – தேவாரம்), ஊர்ந்து கழுத்தில் படமெடுத்து நிற்கும் நாகம் மாலை, இதுவே தானோ யானையை சங்கரித்த உனது அழகு? நாகம் எனில் இங்கு யானை. முன்பு தூது எழுதும்போது எடுத்து ஆண்டிருந்தோம், “கண்ணில் நாகக் குருளையின் பரபரப்புக் காட்டினாள்” எனும் வரியை. நாகக் குருளை எனில் யானைக் குட்டி.
“படநாகம் அட்டார்” என்பதை “நாகம் பட அட்டார்” என்று கொண்டு கூட்டிப் பொருள் கொளல் வேண்டும்.
சிவபெருமான் திரு அந்தாதி – 2
இந்தத் திருவந்தாதி பரண தேவ நாயனார் அருளியது. இதுவும் பதினோராம் திருமுறைதான். வெண்பாவில் அமைந்த நூறு அந்தாதிப் பாடல்கள். யாவும் ஏற்றுவது சிவனையே!
நீரே எருது ஏறும் நின்மலனார் ஆவீரும்
நீரே நெடுவானில் நின்றீரும் – நீரே
நெருப்பாய தோற்றத்து நீள் ஆறும் பூண்டு
நெருப்பாய தோற்றம் நிலைத்து.
என்பதோர் ஏற்றும் பாடல்.
ஒரு சொற் பன்மொழிப் பாடல்கள் அனந்தம்.
வாழ்வார் மலர் அணைவார் வந்த வருநாகம்
வாழ்வார் மலர் அணைவார் வண்கங்கை – வாழ்வாய
தீயாட வானாள்வான் வார்கழல்கள் சேராதார்
தீயாட வானாளும் ஆறு.
போன்ற பாடல்கள்.
திரு ஏகம்பமுடையார் திரு அந்தாதி
இதுவும் பதினோராம் திருமுறையினுள் அடக்கம். பட்டினத்துப் பிள்ளையார் அருளியது. பிற நூலகள் – கோயில் நான்மணிமாலை, திருக்கழுமலை மும்மணிக் கோவை, திருவிடைமருதூர் மும்மணிக் கோவை, திருவொற்றியூர் ஒரு பா ஒரு பஃது. இவ்வந்தாதியும் சிவப்பெருமை புலம்பல்தான்.
நூறாவது பாடலில் ஒரு பிரயோகம் என்னைக் கவர்ந்தது. “புன் சொல் பனுவல்களும்” என்பதது. நாம் நன் சொல் பனுவல்களைப் போற்றினால் போதாதா?
பாக்கு என்று தமிழும் அடக்கா என்று மலையாளமும் (அடப்பம் எனில் தாம்பூலம்) கூறும் கமுகுன் முலையின் கைக்கு “செம்பழுக்காய்” என்றொரு சொல் இருப்பது அதேரிய வந்தது. “செம்பழுக்காய் நிறை கொண்ட யானைக் கமுகின் பொழில்” என்பது பாடல் வரி.
செம்பழுக்கா எனும் சொல்லை, பல மலையாளப் பாடல்களில் பொருள் தெரியாமலேயே நான் கேட்டும் அனுபவித்ததுண்டு. இப்போது செம்மையும் பழுப்பும் நிறங்கொண்ட பாக்குக் குலை கண்ணில் பரவுகிறது.
திருத்தொண்டர் திரு அந்தாதி
இதுவும் பதினோராம் திருமுறை நூல். நம்பியாண்டார் நம்பி அருளியது. இவரது பிற யாப்புகள் – திரு நாரையூர் வினாயகார் இரட்டை மணிமாலை, கோயில் திருப்பண்ணியர் விருத்தம், ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி, ஆளுடைய பிள்ளையார திருச் சண்பை விருத்தம், ஆளுடைய பிள்ளையார் மும்மணிக் கோவை, ஆளுடைய பிள்ளையார் திருவுலா மாலை, ஆளுடைய பிள்ளை திருக்கலம்பகம், ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை, திருநாவுக்கரசு தேவர் திருவேகாதசமாலை என்பன.
சைவத் தொண்டர்கள் மீது அந்தாதியாக, நூறு விருத்தப் பாக்களால் அமைந்த நூல் இது. திருத்தொண்டர்கள் பற்றிய செய்திகள் பேசும் பாடல்கள். எடுத்துக்காட்டுக்கு கண்ணப்ப நாயனார் பற்றிய பாடல் ஒன்று.
நிலத்தில் திகழ்திருக் காளத்தி
யார் திரு நெற்றியின் மேல்
நலத்தில் பொறிதரு கண்ணில்
குருதி கண்டு உள் நடுங்கி
வளத்தில் கருங்கணையால் தன்
மலர்க்கண் இடத்து நூப்பினான்
குளத்தில் கிராதன் நம் கண்ணப்ப
னாம் என்று கூறுவரே.
ஆளுடைய பிள்ளையார் திரு அந்தாதி
இதுவும் நம்பியாண்டார் நம்பி அருளியது. இந்நூலும் பதினோராம் திருமுறை. திருமுரைல பண்ணிரன்டினுள் இப்பதினோராம் திருமுரையினுள் மொத்தம் பன்னிரண்டு ஆசிரியர்கள் அருளிய, இருபத்தொரு வகை வீரபந்தங்களாக, நாற்பது நூல்கள் இடம் பெற்றுள்ளன. மொத்தம் 1400 பாடல்கள். பன்னிரு திருமுறைகளிலும் உள்ள ஒரே பெண்பாற் புலவர் காரைக்கால் அம்மையார் நூல்கள் இதனுள் அடக்கம். அதுபோல் பன்னிரு ஆழ்வார்களில் ஆண்டாள் ஒருவரே பெண்பாற் புலவர் என்று நாம் அறிவோம்.
நூறு பாக்கள் கொண்ட இவ்வந்தாதி ஆளுடைய பிள்ளையாகிய திருஞான சம்பந்தன் மீது பாடப் பெற்றது.
பன்னிரு திருமுறைகளையும் தொகுத்தவர் இந்த நம்பி ஆண்டார் நம்பி. அவை சைவ இலக்கியங்கள். வைணவ இலக்கியங்கள், பன்னிரு ஆழ்வார்களின் பாடல்கள் யாவும், நாலாயிரத் திவ்யப் பிரபந்தங்களாகத் ஹ்டோகுக்கப் பெற்றன. தொகுத்தவர் ஸ்ரீமத் நாத முனிகள்.
முதல் திருவந்தாதி
மேற்கண்டவை யாவும் சைவ அந்தாதிகள். இனி அசைவ அந்தாதிகளா எனக் கேட்காதீர்கள். சைவம் என்பது ஒரு மதம்; சைவம் என்பது ஒரு உணவுப் பழக்கமும் ஆம். இனி காணப்போவது வைணவ சமயத்து அந்தாதிகள்.
மொத்தம் ஐந்து திரு அந்தாதிகள் நாலாயிரத்தினுள் அடக்கம். அவற்றுள் முதலாயது முதல் திருவந்தாதி.
பன்னிரு ஆழ்வார்களில் முதல் ஆழ்வார் பொய்கை ஆழ்வார்.

காப்பு உன்னை உன்னக் கழியும்; அருவினைகள்
ஆப்பு உன்னை உன்ன அவிழ்ந்தொழியும் – மூப்பு உன்னைச்
சிந்திப்பார்க்கு இல்லை; திருமாலே! னின் அடியை
வந்திப்பார் காண்பர் வழி!
எனத் திருமாலை வழிபட்டவர்.
இவரது காலம் ஏழாம் நூற்றாண்டு. நூறு பாசுரங்கள் கொண்ட அந்தாதி இது. வைணவ இலக்கியத்தின் முதல் அந்தாதி. இந்நூலுக்கு முதலியாண்டான் அருளிய தனியன் சிறப்பானது.
கைதை சேர் பூம்பொழில் சூழ் கச்சிநகர் வந்துதித்த
போய்கைப் பிரான் கவிஞர் போரேறு – வையத்து
அடியவர்கள் வாழ அருந்தமிழ் நூற்று அந்தாதி
படி விளங்கச் செய்தான் பரிந்து.
எனும் வெண்பா அது. கைதை எனில் தாழை என்று பொருள்.
இந்தத் திரு அந்தாதியின் முதற்பாட்டே புகழ் பெற்றது.
வையம் தகளியா வார கடலே நெய்யாக,
வெய்ய கதிரோன் விளக்காக – செய்ய
கூர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர் ஆழி நீங்குகவே என்று.
காரைக்கால் அம்மையிடம் காண்பது போலவே, நிறைந்த சமயப் பொறியை நாம் பொய்கை ஆழ்வாரிடமும் காணலாம்.
நெறி வாசல் தாநேயாய் நின்றானை, ஐந்து
பொறி வாசல் போர்க்கதவம் சாத்தி – அறிவானாம்
ஆலமர நீழல் அறம் நால்வர்க்கு அன்று உரைத்த
ஆழம் அமர கண்டது அரண்.
எனும் பாடல் ஒன்றே போதும் என்றாலும் அடுத்த பாடல் அற்புதமான சமயப் பொறை நாட்டுவது.
அரன் நாரணன் நாமம்; ஆன் விடை புள் ஊர்தி;
ஆரை நூல் மறை; உறையும் கோயில் வரை நீர்;
கருமம் அழிப்பு அழிப்பு, கையது வெல் நேமி,
உருவம் எரி கார்மேனி, ஒன்று
என்றொரு பாடல்.
பெயர் – சிவன், நாராயணன்
ஊர்தி – எருது, பறவை
உரை – நூல், மறை
உறையும் கோயில் – மலை, நீர்
கருமம் – அழித்தல், வழங்கல்
ஆயுதம் – வேல், சக்கரம்
உருவம் – தீ, கார்.
என இருவரும் ஒன்றே என ஒப்பு நோக்குவது.
அரவம், அடல் வேழம், ஆன், குருந்தம், புள்வை,
குரவை, குடம், முலை, மல், குன்றம் – கரவு இன்றி
விட்டு, இறுத்து, மேய்த்து, ஒசித்து, கீண்டு, கோட்டு, ஆடி,
உண்டு, அட்டு, எடுத்த செங்கண் அவன்.
என்றொரு பாடல். ஏதும் விளங்குகிறதா? கொண்டு கூட்டிப் பொருள் கொளல் வேண்டும். அரவம் கரவு இன்றி விட்டு, ஆடம வேழம் இறுத்து, ஆன் மேய்ந்து, குருந்தம் ஒசித்து, புள்வாய் கீண்டு, குரவை கோத்து, குலம் ஆடி, முலை உண்டு, மல் அட்டு, குன்றம் எடுத்த செங்கண் அவன் என்று திருமாலின் சிறப்புச் செயல்கள் யாவும் தரம் தரமாய் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன, Match the following போல.
நயவேன் பிறர் பொருளை; நள்ளேன் கீழாரொடு;
உயவேன் உயர்ந்தவரோடு அல்லால் – வியவேன்
திருமாலை அல்லது தெய்வம் என்று ஏத்தேன்
வரும் ஆறு என் என்மேல் வினை?
என்கிறார் ஆழ்வார். நானோ, பிறர பொருளை நாயக்க மாட்டேன், கீழாரொடு நட்புப் பூணேன், உயர்ந்தவரோடு அல்லால் சேரேன், திருமாலை அல்லாது வேறு தெய்வம் ஏத்தேன், என் மேல் எவ்வழி வினை வந்து சேரும்? என்பது பொருள்.
ஏற்றான், புள் பறர்த்தான், எயில் எரித்தான், மார்வு இடத்தான்
நீற்றான், நிழல்மணி வண்ணத்தான் – கூற்று ஒருபால்
மங்கையான், பூமகளான், வார் சடையான், நீள் முடியான்,
கங்கையான், நீள் கழலான் காப்பு.
என்றொரு செய்யுள்.
ஏறுதனை வாகனமாகக் கொண்டவன், புள்ளின் மேல் ஊர்ந்தவன், முப்புரம் எரித்தவன், இரணியன் மார்பு பிளந்தவன், நீறணிந்தவன், நிழல் மணி வண்ணத்தவன், மங்கையை ஒரு கூராகக் கொண்டவன், பூமிகளை உடையவன், கங்கை அணிந்தவன், நீண்ட கழற்காலை அணிந்தவன் இவர்களே காப்பு என்பது செய்யுளின் பொருள்.
உளன் கண்டாய் நல் நெஞ்சே! உத்தமன், என்றும்
உளன் கண்டாய், உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
வெள்ளத்தில் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்தின் உள்ளான் என்று ஓர்.
என்றும் பாடுவது பொய்கை ஆழ்வார்.
இரண்டாம் திருவந்தாதி
இது பூதத்தாழ்வார் இயற்றியது. இவர் காலமும் ஏழாம் நூற்றாண்டு. நூறு பாசுரங்களைக் கொண்ட அந்தாதி இது. பொய்கை ஆழ்வார், “வையம் தகளியா வார்கடலே நெய்யாக” என்று எடுக்கும்போது பூதத்தாழ்வார்,
அன்பே தகளியா, ஆர்வமே நெய்யாக
இப்பு உருக்கு சிந்தை இரு திரியா – நன்பு உருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்.
என்று தொடுக்கிறார்.
பூதனை நச்சுப் பால் ஊட்டிய சம்பவத்தை நாடகமாக்குகிறார்.
உகந்து, உன்னை வாங்கி, ஒளி திறம் கொள் கொங்கை,
அகம் குளிர, உண் என்றாள் ஒளிதிறம் கொள் கொங்கை
முளை உண்பாய் போலே முனிந்து உண்பாய் நீயும்
அலை பண்பால் ஆனமையால் அன்று.
அத்தோடு நில்லாமல்,
அண்டு அது கண்டு அஞ்சாத ஆய்ச்சி உனக்கு இரங்கி
நின்று முளை தந்த இந் நீர்மைக்கு – அன்று
வரன் முறையால் நீ அளந்த மாகடல் சூழ் ஞாலம்
பெருமுறையால் எய்துமோ பேர்ந்து?
உகந்து, உனைத் தாய் போல் இரு கரங்களால் வாங்கி, ஒளி நிறம் கொள் கொங்கையை ஏந்தி, அகம குளிர உண்ணுவாய் என்றாள். பூதனை உகந்து முளை குடிப்பவன் போலே, சினந்து அவள் ஆவியையே உண்டாய் அன்று. அன்று அதைக் கண்டு அஞ்சாத ஆய்ச்சி, உனக்கு இரங்கி நின்று, முலை தந்த பெருமைக்கு மூவடியால் நீ அளந்த மா கடல் சூழ் ஞாலம் இணையாகுமா? என்று ஆய்ச்சியர் பெருமை பேசுகிறார் ஆழ்வார்.
நான் பலமுறை மேற்கோள் காட்டிய பாடல் ஒன்று.
யானே தவம செய்தேன், ஏழ் பிறப்பும், எப்பொழுதும்
யானே தவம உடையேன்; எம்பெருமான் – யானே
இருந்தமிழ் நல்மாலை இணை அடிக்கே சொன்னேன்
பெருந் தமிழன் நல்லேன், பெருகு.
நாம் பெருந்தலைவர் கேட்டதுண்டு; பேரறிஞர் கேட்டதுண்டு; பேராசான் கேட்டதுண்டு. ஆனால் தன்னைப் பெருந்தமிழன் என்று செம்மாந்து அறிவித்துக் கொண்ட முதல் தமிழன் பூதத்தாழ்வாராகவே இருக்க வேண்டும்.
ஆழ்வார்களின் தமிழ் அற்புதமான தமிழ். தொட்டு அனைத்து ஊரும் மணற்கேணி. அள்ளி உண்ணத் திகட்டாத தீந்தமிழ். ஆனால் பக்தி இலக்கியம் என்று பேதப்படித்து வைத்திருக்கும் பேதமை நமது.
பல பாடல்களில் இருந்து, சில பிரயோகங்களை எடுத்து திரைபடத் தருகிறேன் கீழே.
அடி மூன்றில் இவ்வுலகம் அன்று அளந்தான், அழகியதே நாகத்தின் தண்பள்ளி கொள்வான், ஒற்றைப் பிறை இருந்த செஞ்சடையான் பின் சென்றான், கடந்த ஏழ் உலகும் உண்டான், சென்றது இலங்கை மேல் செவ்வே, தன் சீற்றத்தால் கொன்றது இராவணனை, மனத்து உள்ளான் வேங்கடத்தான் மாக்கடலான், முன்பொருநாள் மாவாய் பிளந்த மகன், மண் கொண்டு, மண் உண்டு மண் உமிழ்ந்த மாயன், உணர்ந்தான் மறை நான்கும், ஓதினான் நீதி, மணந்தான் மலர் மகள், முலை சூழ்ந்த நஞ்சு உரத்துப் பெண்ணை நவின்று உண்ட நாவன், கடல் கடைந்த நீராழி வண்ணன், ஓர் பாதம் நிலம் புதைப்ப நின்றான் தோள் சென்று அளந்தது திசை எல்லாம், அடியால் முன் கஞ்சனைச் செற்றான், அமரர் ஏத்தும் படியான், கொடி மேல் புள் கொண்டான், நெடியான், வடி சங்கம் உடையான், கூந்தல் வாய் கீண்டான், கொங்கை நஞ்சு உண்டான், உலகு ஏத்தும் ஆழியான் என்றெல்லாம் பலபடியாகப் பாடுகிறார் இந்த அந்தாதியில் பூதம்.
அத்தியூரான், புள்ளை ஊர்வான், அணிமணியின்
துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான் – முத்தீ
மறை ஆவான், மாகடல் நஞ்சு உண்டான் தனக்கும்
இறை ஆவான் எங்கள் பிரான்
என்று நச்சென்றும் அடிக்கிறார் பூதம், இதில் கவனிக்க வேண்டிய வரி, மா கடல் நஞ்சு உண்டான் தனக்கும் இறை ஆவான் எங்கள் பிரான்’ என்பது.
மூன்றாம் திருவந்தாதி
(தொடரும்)
அனைத்து பனுவல் போற்றுதும் கட்டுரைகளையும் படிக்க:பனுவல் போற்றுதும்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in "பனுவல் போற்றுதும்", அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to சிற்றிலக்கியங்கள் 7(1) -அந்தாதி

  1. rathnavelnatarajan சொல்கிறார்:

    அருமை ஐயா.
    உங்களிடம் நிறைய தெரிந்து கொள்கிறேன்.
    நன்றி ஐயா.

  2. sruthi சொல்கிறார்:

    its so usefull for the students to get a notes

  3. meenatchisabapathy சொல்கிறார்:

    மிகச் சிறப்பான கட்டுரை. பாராட்டுகள்.
    மீனாட்சி, சிங்கப்பூர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s