“தீதும் நன்றும்” (13) ‘நீரின்றி அமையாது உலகு!

“தீதும் நன்றும் (13) ‘நீரின்றி அமையாது உலகு!

மொரப்பூர் ரயில் நிலையத்தில் இருந்து 12 மைல் தொலைவில் மூக்கனூர்பட்டி. சின்னஞ்சிறு கிராமம். அங்கிருந்து பேருந்து ஏற இரண்டு மைல் நடக்க வேண்டும். இப்போது விருந்தாளி போல, சிற்றுந்து ஒன்று வந்து போகிறது. சிற்றுந்து ஓட்டுநருக்கும் நடத்துநருக்கும் மற்றும் சில பணிகள் உண்டு. வீட்டில் வெஞ்சன சாமான் ஏதும் தீர்ந்துபோனால், மருந்து வாங்க வேண்டுமானால், வந்த விருந்தாளிக்கு கோழிக் குழம்பு வைக்க வேண்டுமாயின், சிற்றுந்தில் காசு கொடுத்து அனுப்பினால், மறு திருப்பில் பொறுப்பாக வாங்கி வந்து தருவார்கள். அங்கு தங்கமணி என்று ஒரு நண்பர் எனக்கு. விவசாயி, பள்ளி ஆசிரியர், தீவிர இலக்கிய வாசகர். மஞ்சள், குச்சிக்கிழங்கு, முல்லைப் பூ, கறிவேப்பிலை, கொய்யா எனப் பயிரிடப்பட்டுள்ள வயல்களின் நடுவே வீடு. ஓயாத அலைச்சலும், நகரத்து இரைச்சலும், தூசியும், புகையும், செல்போன் மணியும் அலுத்துப் போகிறபோது இரண்டு நாட்கள் நண்பருடன் போய்த் தங்குவேன்.

வீட்டுக்கு வெளியே கூப்பிடு தூரத்தில், உழவுச் சாமான்கள் போட்டு வைத்திருந்த, முன்பக்கம் திறப்புள்ள சாளையில் படுத்துக்கொள்வோம். கோடைக் காலம், நல்ல நிலவொளி, பின்னிராக்காலம் வரை சகல திசைகளிலும் பேச்சு. அதிகாலையில் நல்ல பனங் கள், குளத்தங்கரைப் பனை மரங்களில் இருந்து இறங்கும். கள் என்பது உணவு, மருந்து, சிற்றுப் போதை. காலையில் கள் அல்லது பதநீர் குடித்தால் மதியம் வரை வேறு உணவு வேண்டாம்.

நண்பர் வாகனத்தில் தீர்த்த மலை போனோம். இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்ய சற்று அதிக தூரம்தான். ஏற்கெனவே கவிஞர் சிபிச்செல்வனின் ‘நம்ம ஊரு வண்டி’யின் பின்னால் உட்கார்ந்து சேலத்தில் புறப்பட்டு, மல்லசமுத்திரம் அருகில் இருக்கும் அவரது கிராமம் பெரிய கொல்லப்பட்டிக்குப் போய்த் திரும்பியதன் இடுப்பு வலி நினைவில் இருந்தது.

என்றாலும், வாழ்க்கை என்பது சபலங்கள் நிரம்பியது. நெடுஞ்சாலைப் பயணம், சாலையின் இரு மருங்கும் மரங்கள் அடர்ந்தும் இருந்தன. தீர்த்த மலை அடிவாரத்தில் வடிவாம்பிகையை வணங்கிய பிறகு, மலையை ஏறிட்டுப் பார்க்க மலைப்பாக இருந்தது. ஏற்கெனவே கரோனரி ஆர்ட்டரியில் 95 சதவிகித அடைப்புக்காக இதயத்தைச் சீர் பார்த்துக்கொண்டவன் நான். எனினும், அத்தனை எளிதில் செத்துப்போக மாட்டேன் என்று நம்பிக்கை உண்டு. மேலும், மலை ஏற மாட்டாதவன் என்ன மனிதன்?

எனது நண்பரோ பெரியார் பக்த வம்சாவளி நாத்திகர். அவர் கிராமத்துக்கே பெரியார் வந்து பேசி இருக்கிறார். எனக்காகத் தீர்த்த மலை ஏறத் தயாரானார். நல்ல வெயில் கொளுத்த ஆரம்பித்தது. வயிற்றினுள் குலுங்கிக்கொண்டு இருந்த கள் வியர்வையாக அதன் மணத்துடன் வெளியேற ஆரம்பித்தது. கையில் இரண்டு லிட்டர் தண்ணீர் போத்தல் இருந்தது.

தங்கமணி உழைப்பாளி; இளைஞர். அவருக்கே மூச்சு வாங்கியது. ‘எள் எண்ணெய்க்குக் காய்கிறது; எலிப் புழுக்கை என்னத்துக்குக் காய்கிறது?’ என்று கேட்டேன். அவர் பொருட்படுத்தவில்லை அந்த உவமையை. பாதி மலை ஏறி இருப்போம்… குரங்குகள் மலைப் பாதை ஓரம் குத்தவைத்துக்கொண்டும், பேன் பார்த்துக்கொண்டும், கிளைக்குக் கிளை தாவிக்கொண்டும், ‘கர்புர்’ எனச் சீறிக்கொண்டும் இருந்தன. எங்கள் முன்னால் நடந்த கிராமத்து விவசாயி கையில் இருந்த பையை மிக அனுசரணையாகக் குரங்கு ஒன்று வாங்கிக்கொண்டது. பொதிந்திருந்த துண்டு, வெற்றிலை-பாக்கு, ஊதுவத்தி, சூடம், தேங்காய், பழம் என்று எல்லாம் எடுத்து வெளியேவைத்தது. பழச்சீப்பை மட்டும் எடுத்துக்கொண்டு ஓடிப் போயிற்று.

அருணகிரியார் பாடிய தீர்த்தகிரீஸ்வரருக்குக் கொண்டுபோகும் அர்ச்சனைப் பொருட்கள் எச்சிலானதே என அவருக்கு எந்த ஆயாசமும் இல்லை. திருமூலர் படித்திருப்பார் போலும். நடமாடுகின்ற மனிதனுக்கு ஒன்று கொடுத்தால், அது படமாடும் பாம்பைச் சூடிய பரமனுக்குப் போய்ச் சேரும் என்று. வியந்து பேசியவாறு நாங்கள் வியர்வையில் நனைந்து நடந்தபோது, களைப்பாற நின்று தலைக்கு ஒரு வாய் தண்ணீர் குடித்தோம். போத்தலை மூடியபோது குரங்குகள் சூழ்ந்துகொண்டன. வளையத்தில் விரல் நுழைத்துப் பிடித்திருந்த தங்க மணியின் கையில் இருந்த போத்தலை, தாட்டைக் குரங்கு ஒன்று பற்றி இழுத்தது. அன்று கடல் தாவிய ஜாம்பவான் எனும் முதிய அறிவாளி வானரத்தின் வழியில் வந்ததாகக்கூட இருக்கலாம். மற்ற குரங்குகள் சற்று அஞ்சியும், சந்தேகப்பட்டு ஆர்வம் கொண்டும் அகல நின்றன.

”புடிச்சுக்கிட்டு விட மாட்டேங்குது, பாருங்கண்ணா?” என்றார் தங்கமணி.

”குடுத்திருங்க தங்கமணி” என்றேன்.

போத்தலை வாங்கி, மூடியைத் திருகித் திறந்து, வாய் வைத்துக் குடித்தது தாட்டைக் குரங்கு. போத்தலை மூடி எங்களிடம் திரும்பத் தரும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அதுவோ, நெருங்கி நின்ற மற்ற குரங்கிடம் தந்தது. எல்லாம் மாற்றி மாற்றி, வாய் வைத்து உறிஞ்சின. கால் பங்கு மிச்சம் இருந்தது. வைத்துவிட்டுப் போய்விட்டன.

15 ஆண்டுகள் முன்பு, குடும்பத்துடன் பழநி மலை ஏறியபோது, இப்போது சிதம்பரத்தில் பி.டி.எஸ். படிக்கும் தம்பி மகள் அஜிதா கைக்குழந்தை. அவள் கையில் இருந்த பால் குப்பியைக் குரங்கொன்று பறித்துக்கொண்டு ஓடி, ரப்பர் நிப்பிளை வாய் வைத்து உறிஞ்சியது ஞாபகம் வந்தது.

இதே அனுபவம் வாதாபி சமணக் குகைகளைக் காண ஜெயமோகன், தமிழினி வசந்தகுமார், மதுரை சண்முகசுந்தரத்துடன் மலை ஏறியபோதும் வாய்த்தது.

மழையற்ற கோடைக் காலங்களில் காடுகளில் விலங்கு கள் தாகமுடன் திரிகின்றன. தடுப்பணைகள் வற்றி, ஓடைகள் காய்ந்து, குட்டைகள் வறண்டுபோனால் யானையும், புலியும், மானும், காட்டுப் பன்றியும், காட்டு மாடும், சிங்கவால் குரங்கும், மலபார் அணிலும் என்ன செய்யும்?

சமீபத்தில் குடும்பத்துடன் பொள்ளாச்சி – ஆனைமலை வழியாக தூனக்கடவு, பரம்பிக்குளம் அணைக்கட்டுகள் பார்த்துவிட்டு, யானைகள் பராமரிக்கப்படும் கோழிக் கமுத்தி எனும் பழங்குடிக் கிராமத்துக்குப் போகும் வழியில், சாலையோரம் காட்டின் சரிவில் சிமென்ட் தொட்டிகள் கட்டி, நீர் நிறைத்து வைத்திருந்தனர், தாகமுடன் இருக்கும் விலங்குகள் வந்து பருக. அது இந்திரா காந்தி வன விலங்குகள் சரணாலயம்.

தேக்கு, ஈட்டி, மருது, வேங்கை, கோங்கு, அகில், சந்தனம், மூங்கில் என்று பலகைகளுக்கும், வாசனைக்கும், மரக்கூழுக்கும், காபி, தேயிலைத் தோட்டங்கள் போடவும் அழிக்கப்பட்ட காட்டில் விலங்குகள், பறவைகள் எதைக் குடித்து வாழும்? பெப்சியும் கோகோ கோலாவும், மாஸாவும், லிம்காவுமா?

காட்டு விலங்குகள், பறவைகள் பொறாமைப்படும் விதத்தில் இல்லை நகரத்துப் பறவைகளின், பிராணிகளின் நிலைமை. உதிரியாகத் திரியும் பசுமாடு சாக்கடை நீர் பருகுவது காணக் கொதிக்கிறது நமக்கு. கிராமத்தில் அவற்றுக்கு ஏதோ ஓர் நீர்நிலை கிடைத்துவிடுகின்றது. நகரத்தில் காகம், சிட்டுக்குருவி, தெரு நாய்கள், பூனைகள் எதைக் குடிக்கும், எங்கு குளிக்கும்?

தமிழ் இலக்கியத் திறனாய்வாளர், கலை-பண்பாடு என ஓயாமல் சிந்திக்கிறவர், 75 வயதான வெங்கட் சாமி நாதன், சென்னை மடிப்பாக்கத்தில் வாழ்கிறார். அந்தப் பக்கம் போனால், அவர் வீட்டுக்குப் போவேன். சாய்வு நாற்காலியில் சாய்ந்து, சன்னல் திண்டில் கால் தூக்கிப் போட்டு, வாசித்துக்கொண்டு இருந்தார். வாசலில் செம்பருத்தி, பவழமல்லி எனச் சில பூத்திருந்தன. பறந்தவாறு சின்னஞ்சிறு குருவிகள் மலர்களில் இருந்து தேன் பருகிக்கொண்டு இருந்தன.

”தேன் சிட்டு சார்” என்றேன், குதூகலத்துடன்.

”ரெண்டு மாசமா வந்துண்டிருக்கு. பேரு இப்பதான் தெரியும்” என்றார் வெ.சா.

அவர் தீவிரமாகப் பேசுகிறாரா, எள்ளல் செய்கிறாரா எனச் சமயங்களில் கண்டறிய முடிவதில்லை.

”எதுவா இருந்தா என்ன? வெயில் கடுமையா இருக்கு. சின்னச் சருவத்திலே கொஞ்சம் தண்ணி ஊத்திவெச்சிருக்கேன் பாரு” என்றார்.

குடிக்க மட்டுமல்லாமல், வெயில் தாங்காமல் குருவிகள் குளித்துக்கொள்ளவும் செய்யும். பல நண்பர்களிடம் கேட்பதுண்டு, ”கடைசியாக ஒரு சிட்டுக்குருவியை எப்போது பார்த்தீர்கள்?” என. நமக்கு அதுவா கவலை?

50 ஆண்டுகள் முன்பு, எல்லா ஊர்களிலும் பெரிய கல் தொட்டிகளில் தண்ணீர் நிறைத்து வைத்திருப்பார்கள். வண்டி மாடுகள் குடித்துக் களைப்பாற. கோடைக் காலங்களில் வழிப்போக்கருக்கு என மோர் மடங்கள், தண்ணீர்ப் பந்தல்கள், கஞ்சிப் புரைகள் இருந்தன. பதநீர் இறக்கும் பனை ஏறி, மரத்து மூட்டில் வழிப்போக்கர் பருகும் பதநீருக்குக் காசு வாங்கியதில்லை. நிலமுடையவர் இந்தச் சேவைக்கு என்றே வயல்கள் எழுதிவைத்தனர். வாரிசுகள் அவற்றை விற்றுக் காசாக்கிவிட்டனர்.

எந்த வழிப்போக்கனும் எவர் வீட்டு வாசலிலும் நின்று, குடிக்கத் தண்ணீர் கேட்டால், இரண்டு ஊறவைத்த காட்டு நெல்லிக்காயுடன் பழஞ் சோற்றுத் தண்ணீர் அல்லது கருப்பட்டித் துண்டுடன் குளிர்ந்த பனைத் தண்ணீர் தந்தனர் பெண்கள்.

பித்ருக்களுக்கு என்றோ, சனீஸ்வரனுக்கு என்றோ நினைத்து காகங்களுக்கு உணவளிப்பதை மூட நம்பிக்கை என்பதா, ஓர் உயிரினத்தின் மீது கொண்ட கரிசனம் என்பதா? வாசலில் அரிசி மாவில் இட்ட கோலம் எறும்புக்கு உணவு என்றால், வெள்ளைக் கல் மாவுப் பொடி கொண்டு இன்று இடும் கோலம் எவற்றுக்கான உணவு? மான்விழி என்று பகலில் பாட்டெழுதிவிட்டு, இரவு உணவுக்குச் சட்ட விரோதமாகப் பிடித்து வந்து, துள்ளும் மானைச் சமைப்பது என்பது ‘உயிர்கள் இடத்து அன்பு வேணும்’ என்று பாடியதன் பொழிப்புரையா? ‘காக்கை குருவி எங்கள் சாதி’ என்றான் பாரதி.

‘கொன்றால் பாவம், தின்றால் தீரும்’ என்பதும் தமிழ்ப் பழமொழிதான். ஆனால், தின்னவே போகாத ஒன்றை எதற்கு உணவும் தண்ணீரும் இன்றிச் சாகவிட வேண் டும்? ‘யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை’ என்பது திருமூலம்.

காட்டு யானைகளுக்கும் இன்ன பிற விலங்குகளுக்கும் கோடைக் காலத்தில் தண்ணீர் தேடி அலைவதே பெரும் பாடாக இருக்கிறது. நாட்டிலோ நாயும், பூனையும், காக்கையும், குருவியும் தண்ணீருக்கு அலைந்தவாறு உள்ளன. காட்டிக் குழந்தைகளுக்குச் சோறூட்ட அவை இல்லாமற் போய்விடும் தாய்மாரே! கதை சொல்வதற்குக் காகங்கள் இருக்க மாட்டா. எதிர்காலம் பாடம் செய்யப் பட்ட விலங்குகளையும் பறவைகளையும் அருங்காட்சி யகங்களில் காண்பதாக ஆகிவிடக் கூடாது.

எனவே, நகரவாசிகள் தங்கள் பால்கனிகளில், மொட்டை மாடிகளில், வராந்தாவில், வாசல் ஓரம் பாத்திரங்களில் தண்ணீர் ஊற்றிவைக்கலாம். குருவிகள் வந்து அதைக் குடிப்பதைக் குழந்தைகளுக்குக் காட்டலாம். நாசமாய்ப் போன நம்மைப் போலன்றி, நமது சந்ததிகள் விலங்குகள் பால், பறவைகள் பால் சற்று அன்பும் கனிவும் கொண்டு வளர வாய்ப்பாகும்.

இந்த உலகம் மனிதருக்கு மட்டுமே சொந்தமானதல்ல. ஊர்வன, பறப்பன, உயிர்வாழ்வன எனச் சகலருக்கும் உரிமை உடையது. விலங்குகள், பறவைகள் இல்லாத உலகில் மனிதனும் உயிர் தரித்து இருக்க இயலாது. இயற் கையின் சுழற்சி அதைத்தான் நமக்குக் கற்பிக்கிறது.

‘நீரின்றி அமையாது உலகு!’

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to “தீதும் நன்றும்” (13) ‘நீரின்றி அமையாது உலகு!

  1. Naga Rajan சொல்கிறார்:

    மிகவும் சிறந்த யோசனை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s