கடி சொல் இல்லை

நாஞ்சில் நாடன்

‘கண்ணீரும் கம்பலையும்’ எனும் சொற்றொடரின் கம்பலை எனும் சொல் தேடிப் புறப்பட்ட போது, அது என்னைத் தொல்காப்பியம் வரை நடத்திச் சென்றது. கம்பலை எனும் தலைப்பில் முழுநீளக் கட்டுரை எழுதவும் தூண்டியது. அதுவே பிறகெனது கட்டுரைத் தொகுப்பு ஒன்றின் தலைப்புமாயிற்று.

அஃதே போன்று கருதித்தான் கால் பெயர்த்தேன் ‘கத்தி கப்படா’ எனும் சொற்றொடர் நோக்கி. பெரிய பன்னரிவாள், கொடுக்கரிவாள் மீசையைக் கப்படா மீசை என்றனர். எனவே கப்படா என்பதோர் அரிவாள் வகையாக இருத்தல் கூடும் என்று எண்ணத் தோன்றிற்று. கப்படா மீசை திருகித்தான் இன்று சிலரதைப் பக்கடா மீசையென்று புழங்குகிறார் போலும். சொல் மருவுதல், திரிதல், சிதைதல், தேய்தல் என்பது மங்கலவழக்கு; . குழூஉக்குறி, இடக்கரடக்கல் போன்றதல்ல.

பத்தாண்டுகள் முன்பு பொன்னீலன் அண்ணாச்சியைப் பார்க்க நாகர்கோயில் வடசேரி – தரிப்பிடத்திலிருந்து பேருந்து ஏறி, மணிக்கட்டிப்பொட்டல் போய்க்கொண்டிருந்தேன். யன்னலோர இருக்கை எனக்கு வாய்த்திருந்தது. புதியதாய் வாங்கிச் சென்னையில் ஓடிக் கழிக்கப்பட்டு, திருச்சியில் ஓடிக்கழிக்கப்பட்டு, மதுரையில் ஓடிக்கழிக்கப்பட்டு, நாகர்கோயில் பணியில் இருந்த பேருந்து போலும். மங்கலக் கொட்டு முழுக்குடனும் மசாஜ் பார்லர் போல் உடல் குலுக்கிக் கொடுத்துக்கொண்டும் ஓடியது பேருந்து. சாலையாரும் கிழடு பாய்ந்தே கிடந்தார். சாலையின் குண்டு குழி யென்பது எவன் வைப்பாட்டி வீட்டில் பொன்னணியாக உருப்பெற்றதோ? நல்லவேளை மழை பெய்யவில்லை.

எனது முன்னிருக்கையில் இரு ஆடவர், நாற்பது பிராயத்தவர் உரத்து உரையாடிக்கொண்டிருந்தனர். ஒற்றாடல் நமது நோக்கமில்லை என்றாலும் செவியில் வந்து விழுவதை என் செய? நல்ல வேளையாக உன்னதத் தமிழ் சினிமாவின் உயரிய செந்தமிழ்க் கவிதை வரிகள் மனம் மயக்கும் இசையுடன் வழிந்து காதில் சேற்றுப்புண் ஏற்படுத்தவில்லை .

முன்னிருக்கையில் உரையாடியவர் காற்றில் எறிந்த வாசகம் என் காதிலும் மோதிச் சிந்தியது, “அவன் சாதியிலே கூடுனவன் தெரியுமா?” என்பதந்த சொற்றொடர். எனக்குத் திடுக்கிட இருந்தது. நம்மை வெள்ளாள எழுத்தாளன் என்று உள்ளாடை அவிழ்த்துப் பார்த்துவிட்டார்களோ என்று. அதற்கு மார்க்கமும் இல்லை. சினிமா நடிகரை மட்டுமே அடையாளம் காணும் மேம்பட்ட, மரபுச் சிறப்புடைய, பண்டைய செவ்விலக்கியங்கள் உடைய இனமல்லவா?

இந்தக் காலத்தில் போய் சாதி பற்றிப் பேசுகிறார்களே என்றும் தோன்றியது! உண்மையில் சாதியொழிப்பும் சாதி மறுப்பும் நாடகக் காதல் சாதி மீறலும் செய்பவர்களே சாதியை அதிகம் பயன் படுத்திக்கொள்கிறார்கள் அரசியல் பதவி அனுகூலங்களுக்காக. மற்றவர்க்கெல்லாம் மறக்காமல் அவரவர் இனத்தை நினைவுறுத்திக் கொண்டும் இருக்கிறார்கள்.

மணிக்கட்டிப் பொட்டல் போய்விட்டு எனது சிற்றூருக்குத் திரும்பியதும் விவரம் தெரிந்த நாளில் இருந்து மரணம் வரை என் சேக்காளியாக இருந்த முத்தையாவிடம் சொன்னேன். அவன் சிரித்தான், “என்ன மயித்துக்குடா சிரிக்கே?” என்றேன். “அது சாதியிலே கூடுனவன் என்றால் முதலெழுத்தை மாற்றிப் போட்டுப் பாரு” என்றான். எனக்கது விளங்கவில்லை . மறுபடியும் சிரித்துவிட்டு அவனே சொன்னான். பெண்வழிச் சேரலுக்கான இடக்கர் அடக்கல் போலும். இவ்விதம் சொல்லின் முதலெழுத்தை மாற்றிப் போட்டு எழுதுவதும் பேசுவதும் ஒரு முறையெனப் பின்னர் தெரிந்து கொண்டேன்.

கப்படா மீசையைப் பக்கடா மீசை என்பது அது போன்றதா என்றும் தெரியவில்லை. எப்படிச் சொன்னால் என்ன, மக்கள் அறிந்துகொண்டால் போதாதா, என்றும் வாதம் உண்டு. தலைவர் என்ற சொல் இன்று உணர்த்தும் பொருள் என்ன என்று உணராதவரா நம் மக்கள்?

பண்டு சினிமா பார்த்துவிட்டு வந்து, முன்னிரவில் வீட்டுப் படிப்புரையில் அமர்ந்து கதை சொல்லும் அத்தையோ பெரியம்மையோ சொல்வாள், “அந்தால வீரப்பா கத்தியும் கப்படாவுமா வந்து நிண்ணான்” என்று.

இதில் கப்படா எனும் சொல் ஓர்ந்தே நமது விசாரம். அன்ன விசாரம் அதுவே விசாரம் என்றதைப் போல.

மேலும் அன்று பாடு பேசும்போது கேட்டிருக்கிறேன்.

“அவசரத்துக்கு ஒரு முக்கா ரூவா கைமாத்துக் கேக்கப் போனம்பா… அவன் கத்தியும் கப்படாவும் தூக்கீட்டு வாறான்…” என்று. கத்தி சரி! கப்படா என்றால் என்ன?

அகராதிகள் பல தேடியும் கத்தியோடு தொடர்புடைய எப்பொருளும் எமக்குக் கிட்டவில்லை – கப்படா எனும் சொல் குறித்து. ஆனால் ‘கண் ணீரும் கம்பலையும்’ போலத்தானே ‘கத்தியும் கப்படாவும்’ பயன்படுத்தியிருக்க வேண்டும்!

பல்லாண்டுகள் முன்பு, Roti Kappada Aur Makkaan’ என்றொரு இந்தி சினிமா வந்தது. தமிழில் எழுதினால் ‘ரொட்டி கப்படா அவுர் மக்கான்’, பொருள் – சோறு சீலை வீடு’. இஃதோர் அரசியல் கூப்பாடும்தான். என்றாலும் விடுதலை பெற்று முக்கால் நூற்றாண்டை நெருங்கும் காலத்தும் நாட்டின் சில கோடி மக்களுக்கு அவை இன்னும் அருளப்பெறவில்லை. கோஷங்கள், ப்ளெக்ஸ் பேனர்கள், அனைத்து நாளிதழ்களிலும் நான்கு பக்கம் விளம்பரங்கள், பொருளறியா சொற்களால் சில டஜன் யோஜனாக்கள் போதாதா நமக்கு?

கப்படா எனும் சொல்லை அகராதிகளில் தப்பிப் பார்த்தால் அது karpada என்ற சமற்கிருதச் சொல் என்றும், பொருள் 1.கந்தல் சீலை, 2.ஆடை என்றும் தகவல் கிடைக்கிறது. கப்படா எனும் வட சொல்லின் நேர் தமிழ்ச்சொல் கப்படம். யாழ் அகராதி கப்படம் என்றால் அரை என்கிறது. அரை எனும் சொல் இங்கு அரைக்கால் – கால் – காலே அரைக்கால் – அரை – அரையே அரைக்கால் – முக்கால் எனும் தொடரில் வரும் அரை அல்ல. Waist எனும் பொருளின் அரை. அதாவது இடுப்பு, இடை. சில பெண்களை ஏளனமாகக் குறிக்க மலையாளிகள் ‘அரை கொண்டாணு ஜீவிதம்’ என்பார்கள். நான் விரித்துப் பொருளுரைக்கப் புகவில்லை .

கப்படம் எனும் சொல்லுக்கு அரைக்கச்சை, வார் எனக் பொருள் தருகிறது தமிழ் – தமிழ் அகரமுதலி. கப்படம் ஆடை என்றும் பொருள் தருகிறது. அரபு மொழியில் கஃபன் என்றால் ஆடை என்றும், கதீன் என்றால் பழந்துணி என்றும் தகவல் தந்தார் கீரனூர் ஜாகிர் ராஜா.

சைவத் திருமறைகள் பன்னிரண்டில் பதினோராம் திருமுறையில் நம்பியாண்டார் நம்பி அருளிய பத்து நூல்களில் ஒன்று திருத்தொண்டத் திருவந்தாதி. அதில் ஒரு பாடலில், ‘சைவத்தார் அரையில் கூட்டும் அக் கப்படம் கோவணம் நெய்து கொடுத்தது’ என்று வரும். இதிலும் கப்படம் என்பதற்கும் ஆடை என்றேதான் பொருள் தருகிறார்கள். கோவணம் எனும் சொல் எவர்க்கேனும் நமைச்சலை ஏற்படுத்தினால் கௌபீனம் என்று பொருள் எழுதலாம். நமைச்சல் ஏற்படுவதன் காரணம் கௌபீன சுத்தம் இல்லாமற் போனதன் காரணமல்ல.

இவண் நாம் கவனம் செலுத்த வேண்டிய செய்தி, கோவணம் என்ற சொல் திருமுறைகளில் கையாளப்பட்டுள்ள சொல் என்பது. நாஞ்சில் நாட்டில் கோவணத்தைக் கோமணம் என்போம். ‘கோமணம் பீ தாங்குமா?’ என்றொரு சொலவமும் உண்டு.

தேவாரம் மூன்றிலும் திருவாசகத்திலும் திருமந்திரத்திலும் பெரிய புராணத்திலும் கோவணம் எனும் சொல்லுண்டு. நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் நான் தேடப்புகவில்லை.

முன் சொன்னது போல, கோவணம் குறித்த சில பழமொழிகள் உண்டு. ‘நடுப்புடைவையில் கோவணம் கிழிக்கிற மாதிரி’ என்பது ஒன்று. ‘தகப்பனுக்குக் கட்டக் கோவணம் இல்லை ; மகன் தஞ்சாவூர் மட்டும் நடை பாவாடை போடச் சொன்னானாம்.’ என்பது இன்னொன்று.

பத்துப்பாட்டிலும் எட்டுத்தொகையிலும் கோவணம் எனும் சொல் பயன்படுத்தப்படவில்லை. திருக்குறளில் இல்லை , கம்பனில் இல்லை , நாலடியாரில் இல்லை . எனவே பேராசிரிய அறிஞர் எவரும் கட்டுரை எழுதலாம் – சங்கத் தமிழன் கோவணம் கட்டவில்லை, எட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகே தமிழன் கோவணம் கட்டினான் என்று.

கப்படம் எனும் சொல்லே போன்று கப்பணம் என்றுமோர் சொல் தரப்பட்டுள்ளது அகராதிகளில். 1.ஒரு வகைக் கழுத்தணி 2.Iron collar for the neck worn by religious mandicants –

அரிகண்டம் 3.மதச் சடங்குகள் செய்யும்போது மணிக்கட்டில் கட்டப் பெறும் காவி நிறக் காப்பு நாண் 4.கொச்சக்கயிறு என நான்கு பொருள் கிடைக்கிறது லெக்சிகனில்.

தென் மாவட்டங்களில் சில பள்ளிகளில் மாணவர் தத்தம் சாதியின் தனித்துவம் காட்ட பல வண்ணக் கப்பணம் கட்டுகிறார்களாம் சமீப காலமாக, பெரியார் மண் என்பதால் இருக்கலாம்!

கப்பணம் எனும் சொல்லுக்குக் கை வேல் என்று பொருள் தருகிறது திவாகர நிகண்டு. கைவேல் எனும் சொற்றொடர் உடன்தானே,

‘கை வேல் களிற்றொடு போக்கி வருபவன் |

மெய் வேல் பறியா நகும்என்ற படைச் செருக்கு அதிகாரத்துக் குறளை நினைவுறுத்தும்.

பண்டைய ராஜா – ராணி சினிமாக்களில் இரு மன்னர், தளபதியர் அல்லது இளவரசர் மூர்க்கமாகப் பொருதும் போது அம்பு – வில் , வாள்-கேடயம், குறுங்கோடரி, கூர்ங்கத்தி போல இன்னாரு ஆயுதமும் பயன்படுத்துவர். இப்போது பார்த்தால் கோமாளித்தனமாக இருக்கும். தேங்காய் அளவில் உருண்டையான, நீண்ட கைப்பிடியுடன் ஓராயுதம் எடுப்பர். உருண்டையின் எல்லாப் பகுதியும் ஈரங்குல நீளத்தில் முள் முள்ளாக நீட்டிக்கொண்டிருக்கும். உங்களுக்கு வெள்ளை அல்லது நீல ஊமத்தைச் செடி தெரியுமானால் அதன் காயை உவமையாகச் சொல்லலாம்.

சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தின் அதிபதியான மக்கள் திலகம், புரட்சி நடிகர், பொன்மனச் செம்மல், தமிழகத்தின் நிரந்தர முதல்வர், பாரத ரத்னா எம்.ஜி.இராமச்சந்திரன் நாயகனாக நடித்த காலத்து அனைத்துப் பண்டைய ஆயுதங்களும் தாங்கி பி.எஸ்.வீரப்பா , எம்.என்.நம்பியார், ஓ . ஏ .கே .தேவர், ராமதாஸ் , ஆர்.எஸ்.மனோகர் போன்ற வில்லன் நடிகருடன் குதித்துக் குதித்துச் சண்டை போடுவார். அவ்வகை ஆயுதங்களில் ஒன்று கப்பணம்.

சீவக சிந்தாமணியில் நாமகள் இலம்பகத்தில் ஒரு பாடலில் ‘கப்பணம் சிதறினானே!’ என்று வரும். கப்பணம் எனும் ஆயுதத்தை நாற்புறமும் சுழற்றினான் என்பது உரை.

இதை எழுதிவரும் காலை எனக்குத் தோன்றுகிறது, ஆயுதங்களுடன் தொடர்பு படுத்திய சொல்லாகக் ‘கப்படா’ எங்கும் ஆளப்படவில்லை என்றாலும் ‘கத்தியும் கப்பணமுமாக வந்தான்’ என்று ஆகியிருக்கலாமோ என்று. என்றாலும் பல்கலைக்கழகங்களின் தமிழ்த்துறைத் தலைவர்கள், உயராய்வு மையங்களின் இயக்குநர்களின் சம்மதமில்லாமல் நம்மால் என்ன செய்ய இயலும் நாயன்மாரே!

கப்படி என்றொரு சொல்லும் கண்டேன். கொடுக்கு, Sting என்று பொருள். ‘கப்படியால் கொட்டினால் தேளின் குணமறிவார்’ என்றொரு பாடல் வரியும் எடுத்துக்காட்டாகத் தரப்பட்டுள்ளது. கொடுக்கினால் ஒரு கொட்டு வாங்கினால் தேளின் குணம் தெரியும் என்பது பொருள். ஒருவேளை தேளின் கொடுக்குப் போன்ற அரிவாள் ஒன்று கப்படி என்பது திரிந்து கப்படா ஆயிற்றா?

கப் எனும் சொல், உச்சரிப்பு Gup, உருது மொழி. தமிழில் கப்பு என்போம். அதற்கும் கப்படாவுக்கும் ஒட்டும் உறவும் இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் கப் எனும் உருதுச் சொல்லின் பொருள் Idle talk, Vain conversation, வெட்டிப் பேச்சு. கப்சா என்றாலும் உருதுதான். பொய்ச் சொல், பொய்யுரை, வெற்றுரை, வேண்டுமானால் அரசியலாளர்களின் வாக்குறுதி என்றும் சேர்த்துக்கொள்ளலாம்.

அருமையான பிறமொழிச் சொற்கள் இளக்காரமான, கேலியான, கொச்சையான, கீழ்த்தரமான, நக்கலான, சினிமாத்தனமான பொருளில் தமிழில் உலா வந்து கொண்டிருக்கும் அவலமும் உண்டு. எடுத்துக்காட்டுக்கு லோலன் எனும் சொல். பேராசிரியர் அருளி சொல்வார் இது சமற்கிருதம்+தமிழ் என்று . Lola+(அ)ன். விளையாடித் திரிபவன் என்பது பொருள். ‘முத்தலைச் சூலனே! லோலனே!’ என்பது அறப்பளீசுர சதுகத்தில் இருந்து மேற்கோள். மூன்று முனைகள் கொண்ட சூலம் ஏந்தியவனே, திருவிளையாடல் புரிபவனே என்பது

பொருள். |

இன்று லோலன் எனும் சொல் அநேகமாகப் பெண்பித்தன் எனும் பொருளிலேயே ஆளப்படுகிறது. குறிப்பாகப் பெண்கள் பின்னால் மணம் பிடித்துத் திரிபவன் எனும் பொருளில்தான் ஸ்த்ரீ லோலன் எனும் சொல். லோலம் எனும் சொல்லும் லோலா எனும் வடசொல்லின் தமிழ் வடிவம். லோலம் எனில் அலைவு. அவாப் பெருக்கம், மிகுதியுள்ள விருப்பம். லோல் என்ற சமற்கிருதச் சொல் – படுதல், திண்டாடுதல், தொங்கலாடுதல், அலைவுறுதல், Ruthless wandering என்றெல்லாம் பொருள் தரும். லோலாக்கம் என்றால் திண்டாட்டம். லோ லோ’ என்று அலைந்ததாகச் சலிப்புடன் சொல்வார்கள். திண்டாடித் திரிந்தேன் என்பது பொருள். ‘நானே லோல் பட்டுக்கிட்டுக் கெடக்கேன்’ என்பார்கள்.

தொங்கும் காதணிக்கு லோலாக்கு என்று பெயர். அது ஆடிக்கொண்டே இருப்பதால். மூக்கின் அடி நுனியில் குத்தித் தொங்கவிடும் அணிக்கும் புல்லாக்கு என்று பெயர். புல்லாக்கு எனும் சொல்லுக்கு மாற்றாகப் புலாக்கு என்றும் ஒரு சொல்லுண்டு பேரகராதியில்.

லோல் படுதல் என்பதையே லோலாய்ப் படுதல் என்றார் போலும்! செந்தமிழர், மறத்தமிழர், தனித் தமிழர், புறநானூற்றுத் தமிழர் இன்று லோலாயி, லோளாயி, ளோளாயி எனும் சொற்களை அமோகமாகப் புழங்குகின்றனர்.

அருணா சாயிராம் பாடிய பாடல் ஒன்றில் ஒரு வரி, ‘சாம கான லோலே’ என்று வரும். சாமகானத்தின் மீது விருப்பம் உடையவனே எனப் பொருள் கொள்ளலாம்.

லீலை – Lila – எனும் சமற்கிருதச் சொல்லும் தமிழில் மிகவும் பிரபலம் . விளையாட்டு, உல்லாச விளையாட்டு. லீலாவதி எனும் வடசொல்லின் பொருள் அழகி, கவினி, எழின் மகள் என்னும் அயற்சொல் அகராதி. பாஸ்கராச்சாரியாரால் வடமொழியில் எழுதப் பெற்ற ஒரு கணித நூலின் பெயர் லீலாவதி. லீலா மானுஷ் என்றால் லீலா மானுடன். God assuming human shape in sport TOT I பொருள். பக்தர்களுடன் விளையாட மானுட வேடதாரி ஆகும் கடவுள். ராஸ லீலா என்பது நாராயண பட்டத்திரி அருளிய நாராயணீயத்தில் ஒரு அத்தியாயம். எமது கம்பன் ஆசிரியர் ரா. பத்மநாபன் நாராயணீயத்தைத் தமிழாக்கம் செய்தார். நண்பர் சாரு நிவேதிதா எ ழு திய நவீன நாவலொன்றின் தலைப்பு ராஸலீலா.

ஜல்சா என்ற சொல்ல றியாத் தமிழனில்லை. இச்சொல் ஜல்ஸா எனும் அரபி மொழிச் சொல்லின் ஆக்கம். களி விருந்து எனப் பொருள் தருகிறார் அருளி.

தமிழரின் பல தந்தையரில் ஒருவர் நிறுவிய தினசரி இச் சொல்லை எப்பொருளில் பயன் படுத்தியது என்பதறிவோம். களி எனும் சொல் களிக்கின்ற எதனையும் குறிக்கும். காமமும் அதிலொன்று. களி எனில் காமம் மட்டுமே அல்ல. கம்பன் பல இடங்களில் களி எனும் சொல்லை வெவ்வெறு பொருள்களில் ஆள்கிறார். ‘களிக்கும் மஞ்ஞையை’, ‘களித்த கண் மதர்ப்ப’, ‘களித்தவர் கெடுதல்’, ‘களிப்படா மனத்தவன்’, ‘களிப்பன மதர்ப்ப ன’, ‘களியா உள்ளத்து அண்ணல்’, ‘களி யானையும்’, ‘களியுடை அனங்கக் கள்வன்’ என்று களியை முதலடியாகக் கொண்ட பாடல்களே எட்டு காணக் கிடைக்கின்றன.

திருவள்ளுவர் கள்ளுண்ணாமை அதிகாரத்துக் குறளில் மட்டும் களி என்னும் சொல்லை ஆள்கிறார். ‘ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச் சான்றோர் முகத்துக் களி’

என்பதந்தக் குறள். பெற்ற தாயே முகம் திரிந்து வெறுப்பாள் எனில் சான்றோர் முன் கள்ளுண்டு களித்துத் திரிவதை என் சொல என்பது பொருள்.

சிறுபான்மை அரசு – எந்த அரசியல் கட்சியானாலும் – தனது பெரும்பான்மையை மெய்ப்பிக்க, தமது அணி மாமன்ற உறுப்பினரை எங்காவது தனிக்காட்டு பங்களாவில் அடைத்து வைப்பார்கள். நீச்சல் குளம், சூதாட்டம், மதுச்சாலை மற்றும் மங்கையர். அவர்கள் அழகியருடன் ஜல்சா செய்வதாக ஊடகங்களே நமக்கு அறிவிக்கின்றன. ஜல்சாவுக்கு ஊடகங்கள் பயன்படுத்தும் மாற்றுச் சொற்கள் கேளிக்கை, உல்லாசம். அல்லால் நாம் என்னத்தைக் கண்டோம்?

அஃதே போல் இன்னொரு சமற்கிருதச் சொல் கீரீடை, Krita. பொருள் – விளையாட்டு, மகளிர் விளையாட்டு. ஜலம் எனில் நீர். எனவே ஜலக்ரீடை என்றால் நீர்விளையாட்டு. மகளிர் கூட்டுக் குளியல். இன்று ஊடகங்கள் ஜலக்ரீடை எனும் சொல்லைப் பயன்படுத்தும் பொருள் என்னவென்று நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டியதில்லை.

பொது நூலகத்தில் தினசரிகளுக்குக் காத்திருந்த பள்ளிப் பருவத்தில், ‘இரவுராணி’ எனும் சொல் மிகவும் கிளர்ச்சி தந்தது. அது பரத்தையரை

வேசியரை, விலை மகளிரை, பொருட் பெண்டிரை – மன்னிக்க வேண்டும் – பாலியல் தொழிலாளியைக் குறிக்கவே பயன்படுத்தினார்கள். ராத்ராணி எனும் சொல்லின் தமிழாக்கம் இரவு ராணி.

மராத்தியில் பவளமல்லியைக் குறிக்கும் சொல் ராத்ராணி . சோலாப்பூரில் இருந்து கோலாப்பூருக்கு இரவு ஒன்பது மணிக்குப் புறப்படும் மராத்திய அரசு விரைவுப் பேருந்தில் சில முறை பயணம் செய்திருக்கிறேன். அந்த இரவுப் பேருந்தின் பெயர் ராத் ராணி. நமது பொருள் இரவு ராணி என்றால் பாலியல் தொழிலாளி. அதுவே போல், பேருந்து நிலையத்தில் இரவு நான்கு அழகிகள் கைது என்று தலைப்பிட்டுச் செய்தி எழுதினார்கள். அழகி எனும் அருந்தமிழச் சொல்லைப் பெருமைப்படுத்தியதில் நாம் உவப்பு எய்தலாம்.

எம்மொழிச்சொல் எனும் போதம் இன்றியே நாம் பயன்படுத்தும் சொற்களின் மூலமறிய மகிழ்ச்சி உண்டு. எடுத்துக்காட்டுக்கு ஜுஜுபி என்ற சொல். 1989ஆம் ஆண்டின் பிற்பாதியில் மும்பையில் இருந்து கோவைக்கு மாற்றலாகி வந்தபோது, எமது சுருக்கெழுத்தாளர் அனீஷ் ராய்ச்சூரா அடிக்கடிப் பயன்படுத்திய சொல் அது. அவர் குஜராத்தி என்பதால் குஜராத்திச் சொல்லாக இருக்கலாம் என்றெண்ணினேன். நான் மும்பையில் வாழ்ந்த பதினெட்டு ஆண்டு காலத்தில் மராத்தி, இந்தியுடன் குஜராத்தியும் கொஞ்சம் அறிவேன். அங்கெனக்கு அச் சொல் அறிமுகமாகி இருக்கவில்லை .

ஆனால் பேராசிரியர் அருளி அட்டவணைப்படுத்தினார் அயற்சொல் அகராதியில். ஜுஜுபி – Jujube – ஆங்கிலம் என்று.

இன்று பல இடங்களில் ஜ – ஐ, ஜீ – ஜு போன்ற எழுத்துக்களில் குழப்பிக் கிடப்பதையும் காணலாம். ஒரு தகவலுக்காக சில ஜ வரிசைச் சொற்களையும் பொருளையும் மூல மொழியையும் காணலாம்.

எங்களூரில் வைரவன், புலைமாடன், கழுமாடன், பட்டன், பூவத்தான், தளவாய் கோயில்களில் கொடை கழியும்போது, ஆராசனை வந்து ஆட முனைவர் கோமரத்தாடிகள். ஆராசனை வந்தவுடன் சல்லடம், கச்சை எல்லாம் கட்டி அவரவர் ஆயுதங்களுடன் நிற்பார்கள், வாள், சுருட்டுவாள், ஈட்டி, குந்தம், சூலம், சங்கிலி எனப்பல. அவர்கள் அரையில் கட்டும் சல்லடம் தெலுங்கின் ஜல்லடம் எனும் சொல்லின் பிறப்பு, இன்று நவயுவர்களும் ஓய்வு பெற்ற பெருநகரத்துக் கிழவர்களும் விரும்பி அணியும் பெர்முடா எனப்படும் குறுங் காற்சட்டை சல்லடத்தின் திருத்தப்பட்ட வடிவமே!

ஜலதி எனும் சமற்கிருதச் சொல்லின் நேரான தமிழ்ச்சொல் பேராழி. தமிழில் சலதி என்று எழுதுவோம். ஆனால் சிலப்பதிகாரம் பயன்படுத்தும் ‘சலம் புணர் கொள்கை சலதியொடு ஆடி’ என்ற பாடல் வரியின் சலம் என்றால் பொய்மை, வஞ்சம். சலதி என்றால் பொய்யள், வஞ்சகி.

ஜாதி எனும் வடசொல்லின் தமிழ் வடிவமே சாதி. ஜாத் என்றாலும் ஜாதிதான். ஜாதி எனும் சொல்லின் பொருள் குலம் அல்லது இனம்.

ஜால்ரா என்ற சொல் சிங்கிடிகள், கைமணி

அடிப்பவர்கள், கால்கை பிடிப்பவர்கள் , வெண் ணெ ய் தடவுபவர்கள், எடுபிடிகள் முதலானோரைக் குறிக்கும் சொல் இன்று. ஜால்ரா இந்துஸ்தானி மொழிச் சொல். அச் சொல் குறிப்பது சல்லரி, தாளம், ஒத்துத் தாளம் போன்ற இசைக் கருவிகளை.

ஜோர் என்றொரு பாரசீக மொழிச் சொல்லையும் அடிக்கடி கையாள்கிறோம். ‘காபி வெகு ஜோர்’ ‘புடவை கன ஜோர்’ என்பர். ஜோர் எனும் சொல்லின் பொருள் பகட்டாரம், அழகு, எழில், நேர்த்தி, விறைப்பு, வலிமை என்பன.

இஃதோர் சின்ன அளவிலான பயிற்சி. மொழி முழுக்கத் தேடிப் பாருங்கள். அற்புதமான வேற்று மொழிச் சொற்கள் கிடை க் கு ம் . தொல்காப்பியத்தின் சொல்லதிகாரத்தின் எச்சவியல் நூற்பா சொல்லும் – ‘கடி சொல் இல்லை காலத்துப் படினே’ என்று. காலந்தோறும் மொழிக்குள் வந்து இணையும் சொற்கள் வந்து சேரும்போது நீக்கப்படும் சொற்கள் என்று எதுவும் இல்லை என்பது பொருள். அதனால்தான் எம்மொழி சீரிளமைத் திறத்துடன் உலகின் முதன் மொழியாக நின்று வாழ்கிறது

நன்றி: ஆவநாழி , ஏப்ரல்-மே 2021

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , . Bookmark the permalink.

1 Responses to கடி சொல் இல்லை

  1. தேவதாஸ், வே சொல்கிறார்:

    கப்படா என்பது அரையில் கத்தியை வைக்கும் தோல் உறையாக இருக்குமோ?

பின்னூட்டமொன்றை இடுக