‘வட்டார வழக்கு என்ற சொல்லே கெட்டவார்த்தை’

“வட்டார வழக்கு என்ற சொல்லை முதலில் பயன்படுத்தியது  யாரென தேடிக்கொண்டிருக்கிறேன். வட்டார வழக்கு என்ற சொல்லை கெட்டவார்த்தைத் தனமான பிரயோகமென நினைக்கிறேன்” என்று கி.ரா விருது வழங்கும் நிகழ்ச்சியில் எழுத்தாளர் நாஞ்சில்நாடன் கூறினார்.

விஜயா வாசகர் வட்டம் முன்னெடுப்பில் கி.ரா விருது- 2020 நிகழ்ச்சி எழுத்தாளர் கி.ரா.வின் 98-வது பிறந்தநாளான நேற்று (16.09.2020) நடைபெற்றது. இதில் கி.ரா விருதை முதல்முறையாக எழுத்தாளர் கண்மணி குணசேகரன் பெற்றிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பல்வேறு ஆளுமைகள் பங்கேற்றனர். எழுத்தாளர் கி.ரா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் நாஞ்சில்நாடன் பேசும்போது, “கண்மணி குணசேகரன் அடிக்கடி ஒன்றை சொல்வார், “அம்மாசி இருட்டில பெருச்சாளி போற இடமெல்லாம் பாத தான்”, அதைப்போல படைப்பூக்கம் இருக்கக்கூடிய ஒரு எழுத்தாளன் எப்படி எழுதினாலும் அது படைப்பு தான். அவன் முன்னோடி எழுத்தாளர்களை பின்பற்றி எழுதவேண்டிய கட்டாயம் இல்லை, அவனே முன்னோடியாக இருக்கக்கூடியவன். அந்த வகையில் கிரா அவரது வழியில் ஒரு படைப்பூக்கமான வேலையை செய்தார். தமிழ் திரைப்படங்கள், ஊடகங்கள், கல்விபுலங்களில் மக்கள் மத்தியில் உடலுறவு என்று ஒரு சொல் உள்ளது. நூறு ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்ட, வையாபுரி பிள்ளை தலைமையில் அறிஞர்கள் தயாரித்த அகராதியில் இந்த உடலுறவு என்ற சொல் இல்லை. உடலுறவு என்றால் 8 கோடி தமிழர்களுக்கும் தெரியும், 10 வயதுக்கும் குறைவான குழந்தைகளை வேண்டுமெனறால் இந்த எண்ணிக்கையில் விட்டுவிடலாம்.

இப்போது வேறொரு பகுதியை சார்ந்த ஒரு எழுத்தாளன் உடலுறவுக்கு ஆதி சொல்லைத் தேடிச்சென்று புணர்ச்சி, கலவி போன்ற சொற்களை பயன்படுத்துவானேயானால் அது வட்டார வழக்கு என அறிவிக்கப்படும். உடலுறவு என்ற சொல்லைத் தேடியதுபோல நான் சமீபகாலமாக இந்த வட்டார வழக்கு என்ற சொல்லை முதலில் பயன்படுத்திய பேராசிரியன் அல்லது அறிஞன் அல்லது ஊடகவியலாளன் யாரென தேடிக்கொண்டிருக்கிறேன். வட்டார வழக்கு என்ற சொல்லை நான் கெட்டவார்த்தைத் தனமான பிரயோகமென நினைக்கிறேன். “மொழியில் கிடக்கும் இந்த சொற்கள் தப்புக்காய் அல்ல, இது உன்னுடைய வெள்ளாமை” என ஒரு கட்டுரையில் நான் குறிப்பிட்டிருகிறேன். இந்த வெள்ளாமையை நாம் தப்புக்காயாக மாற்றிவிட்டோம்.

கண்மணி குணசேகரனின் நடுநாட்டு சொல் அகராதியில் ‘அகவான்’ என்கிற ஒரு சொல்லை பயன்படுத்துகிறார். என்னுடைய பிரதேசத்தில் நான் ’அவயான்’ எனும் சொல்லை பயன்படுத்துகிறேன். இந்த இரண்டு சொற்களும் உங்களுக்கு தெரியாது, ஆனால் பெருச்சாளி என்று சொன்னால் தெரியும். மலையாளி பயன்படுத்துகிற பெருக்கான் என சொன்னால் தெரியாது. நேர்மையான, சீரான மொழியை எந்த பிரதேசத்தில் பேசுகிறார்கள்? அப்போது எது வட்டார வழக்கு? மாநிலங்கள் பிரிந்தபோது அதுவொரு வட்டாரம். மாவட்டங்கள் பிரிகிறபோது அதுவொரு வட்டாரம். என்னுடைய மாவட்டதிற்குள்ளேயே நான்கு மொழி பேசுகிறார்கள். இப்போது யானை என்பது பொதுச்சொல், யானை தொடர்பான 24 சொற்கள் மொழிக்குள் இருக்கின்றன, அதெல்லாம் வட்டார வழக்கு என்று சொன்னால் எப்படி? ஆகவே இந்த பார்வையிலிருந்துதான் கிராவுடைய பணியை நான் மிகச்சிறந்த பணியாக கருதுகிறேன்.

ஓர்மை என்கிற சொல் எங்களிடம் இருக்கிறது, கிராவும் பயன்படுத்துகிறார். ஆனால் இந்த ஓர்மை என்கிற சொல்லை அகராதியில் தேடினால் நான் பயன்படுத்தும் பொருள் அதில் இல்லை. ஒருமை, ஒற்றுமை என்கிற பொருள் கொடுக்கப்படுகிறது. 2016-இல் தமிழ் – மலையாளம் சொல்லகராதி ஒன்று தயாரிக்கப்பட்டது. அதில் ஓர்மை தொடர்பான சொற்கள் உள்ளன. சங்க இலக்கியங்கள் ஓர்த்து, ஓர்ந்து போன்ற சொற்களை பயன்படுத்துகிறபோது அதன் பொருள் நினைவு, ஞாபகம் என்ற பொருளில் பயன்படுத்துகிறார்கள். ஆனால் மொத்த தமிழ்நாடும் ஓர்மை என்கிற சொல்லை பயன்படுத்தாது. கிரா பயன்படுத்தினால் அது வட்டார வழக்கு. இதே பார்வை தான் கண்மணி குணசேகரன் மீது இருக்கிறது.

சுதந்திரம் பெற்ற பிறகு எத்தனை பேருக்கு பத்மஸ்ரீ, அதுக்கும் மேம்பட்ட விருதுகள் விருதுகள் வழங்கப்பட்டன? அதில் எழுத்தாளர் எத்தனை பேர் இருக்கிறார்கள் என பாருங்கள். இது என்னுடைய கோரிக்கை இல்லை. வைக்கம் முகமது பஷீர் ஒருமுறை சொன்னார், “அவரது வீட்டு வாசலில் ஒரு நாய் ஓடுகிறது, அதனை பரிசு கேடயத்தை எறிந்து அடிக்கிறார். அப்போது அருகில் இருந்த நண்பரிடம் சொல்கிறார், “இந்த நாய் இரண்டு விருது கேடயங்களால் அடிவாங்கியிருக்கிறது, ஒன்று மத்திய அரசு வழங்கியது மற்றொன்று மாநில அரசு வழங்கியது”. இதுதான் ஒரு எழுத்தாளன் விருதுகளுக்கு பட்டங்களுக்கு அளிக்கும் மரியாதை. ஆனால் நாம் செய்ய வேண்டியது என்ன, யாருக்கு பத்ம விபூஷன் கொடுக்கிறோம்? யாருக்கு பத்மஸ்ரீ கொடுக்கிறோம்? ஏன் கிராவுக்கு அந்த தகுதி இல்லையா? இப்போதுதான் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் இரண்டு எழுத்தாளர்களுக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கியிருக்கிறது.

ஒரு மொழிக்கு கிரா செய்துகொண்டிருந்த பணியை, தொடர்ந்து இப்போது கண்மணி குணசேகரன் செய்துகொண்டிருக்கிறார். தமிழ் இலக்கிய உலகில் பெண்களின் பாடுகள் பற்றி எழுதப்பட்டவை எனக்கு தெரிந்து இரண்டு நாவல்கள். யூமா வாசுகி எழுதிய ரத்த உறவு, கண்மணி குணசேகரனுடைய அஞ்சலை. இதற்கு இணையான நாவல் தமிழ்பரப்பில் இல்லை. நெடுஞ்சாலையை வாசித்தபிறகு நீங்கள் பயணம் செய்கிற பேருந்து ஓட்டுநர்களை வேறு கண்ணோட்டத்தில் பார்ப்பீர்கள். இப்படியான மகத்தான படைப்புகளை தந்தவர்  கண்மணி குணசேகரன். இதையும் தாண்டி கிராவைத் தொடர்ந்து அவர் செய்திருக்கிற முக்கியமான பணி, நடுநாட்டு சொல் அகராதி.

எனக்கு கிராவை 39 வருடங்களாக தெரியும். முதல் சந்திப்பிலேயே என்னிடம் ஒரு பேனாவையும் நோட்டையும் கொடுத்து நீங்கள் ஒரு சொல் அகராதியை எழுத தொடங்குங்கள், என் கண்முன்னாலேயே எழுதுங்கள் என்றார். என்னால் அப்போது அதை செய்ய முடியவில்லை. நான் சுமார் 1500 சொற்கள் சேகரித்து வைத்திருந்தேன், அதை அறிஞர் அ.கா. பெருமாளிடம் கொடுத்து நீங்களாவது செய்யுங்கள் என கூறிவிட்டேன். ஏனென்றால் என்னிடம் அப்பணியை செய்வதற்கான அமைதியும், முனைப்பும் இல்லை. ஆனால் கண்மணி செய்திருக்கிறார். இதை நான் பலமுறை கூறியிருக்கிறேன்.

திருநெல்வேலி புத்தக கண்காட்சியில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இப்படி பேசினேன், “புதுமைப்பித்தன் குறித்து பேசுகிறீர்கள். திருநெல்வேலியில் அவருக்கு ஒரு சிலை வைக்க முடியவில்லையா? எந்த பேருந்து நிலையம், சந்திக்கு சென்றாலும் எவனாவது ஒருவன் கையைத்தூக்கிக் கொண்டு நிற்கிறான். அவர்கள் செய்ததைவிட குறைவான பணிகளையா புதுமைப்பித்தன் செய்திருக்கிறார்” என்றேன். சமீபத்தில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கோவில்பட்டி பகுதியை சேர்ந்த சாகித்ய ஆகாடமி விருதுபெற்ற எழுத்தாளர்களை பாராட்டும்போது சொன்னேன், “ஏன் கிரா பெயரில் ஒரு விருது கொடுக்க முடியாது?” இதையெல்லாம் செய்வதற்கு நமக்கு நேரம் கிடையாது. எழுத்தாளனை கொண்டாடாத சமூகத்தில் வாழ்கிறபோது எழுத்தாளர் பெயரில் விருது கொடுப்பதை பெரிய வேலையாக பார்க்கிறார்கள். ஆனால் அப்பணியை சக்தி மசாலா துணையோடு விஜயா வேலாயுதம் அவர்கள் முன்னெடுத்து செய்கிறார்கள். இதில் சிறிய பங்களிப்பு செய்ய முடிந்ததில் எனக்கு பெருமகிழ்ச்சி.

‘மானங்கெட்டு’ என்று தமிழில் ஒரு சொல் இருக்கிறது. ‘மானங்கெட்டபய’ என்பார்கள். கிரா எழுதும்போது ’ஞானங்கெட்டு’ என்ற சொல்லை பயன்படுத்துகிறார். காட்சிப்பிழை எனும் சொல்லை பயன்படுத்தினார் பாரதி. நிறப்பிழை என்கிறார் கிரா. இதுபோல் பல எடுத்துக்காட்டுகளை சொல்ல முடியும். அவ்வளவு சொற்களும் நம் மொழிக்குள் வாழ்ந்தவையே. நமக்குதான் தெரியவில்லை. இதுதான் பொதுத்தமிழ் சொல், இது வட்டார வழக்கு என வரையறுக்கும் அதிகாரத்தை இவர்களுக்கு யார் அளித்தது? இதை மீறுகிற முயற்சியை செய்ததில் முதல் காலடியை எடுத்துவைத்தவர் கிரா. அதனை தொடர்ந்து செய்துக்கொண்டிருக்கிறவர் கண்மணி குணசேகரன். ஆகவே இந்த விருதுக்கு ஒரு பெருமையுண்டு, விருதை பெறுகிறவருக்கு இன்னொரு பெருமையுண்டு.

ஒரு புத்தகம் எழுதும் அளவுக்கு கிராவிடம் தனித்துவமான சொற்கள் உள்ளன. இமாலாயன் பிளெண்டர் என ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். உடனே தமிழில் இமாலயத் தவறு என்கிறார்கள். இதற்கு இணையான வான்பிழை எனும் சொல்லை கம்பர் பயன்படுத்தியிருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் நான் தேடிப்பார்த்தவரை வான்பிழை எனும் சொல் கம்பன் எழுத்துக்களில் இல்லை. ஆனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வில்லிபுத்துரார் எழுதிய வில்லிபாரதத்தில் வான்பிழை என்ற சொல்லை அவர் பயன்படுத்துகிறார். அப்படியிருக்க ஒரு எழுத்தாளன் வான்பிழை என்ற சொல்லை பயன்படுத்தினால் அதனை வட்டார வழக்கு என்று சொல்வீர்களா? இதைநாம் யோசித்து பார்க்க வேண்டும்.

படைப்பாளி என்ற அளவில் கிராவுக்கான முழுமையான அடையாளம் ஒருபக்கம் இருக்கட்டும், ஆனால் இந்த மொழிக்குள் அவர் வைத்தெடுத்த காலடியை இந்த சமூகம் மறந்துபோய் கிடக்கிறது. ஆகவே இந்த சூழலில் அவரது பெயரால் ஒரு விருது வழங்கப்படுவதும், அதை முதல்முறையாக கண்மணி குணசேகரன் பெறுவதும்  மனமகிழ்ச்சியை தருகிறது”. இவ்வாறு நாஞ்சில்நாடன் உரையாற்றினார். கி.ரா விருது பெற்ற எழுத்தாளர் கண்மணி குணசேகரன் பின்னர் இறுதியாக ஏற்புரை வழங்கினார்.

நன்றி: http://andhimazhai.com/news/view/naanjil-naadan-speech-in-kira-award-function.html

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக