மலையாளத்தில் எழுதப்பட்ட தமிழ் நாவல்

மலையாளத்தில் எழுதப்பட்ட தமிழ் நாவல்
சங்க இலக்கியங்கள் எனச் சான்றோர் தனித்து அறிவிக்கும் 41 நூல்களில் பாட்டும் தொகையும் எனப்படும் பத்துப்பாட்டு எட்டுத் தொகையான பதினெட்டு நூல்கள் தொல் தமிழ் வாழ்க்கையின்            சத்தும் சாரமுமானவை. அவற்றின் ஊடாக H. G. Wellsன்Time Machine
இல் பயணப் பட்டு தமிழ்த் தொல்மரபின் சாட்சிங்களைக் கண்டடைவது போன்றதொரு அனுபவம், நிலம் பூத்து மலர்ந்த நாள்’ என்ற மனோஜ் குரூர் நாவல் வாசிக்கும்போது நிகழ்கிறது.
இஃதோர் மலையாள மூல நாவலின் தமிழ்ப் பெயர்ப்பு. மூலத்தில் இதன் தலைப்பு ‘நிலம் பூத்து மலர்ந்ந நாள்’ தமிழாக்கத்தில் கே.வி.ஜெயஸ்ரீ அளித்த தலைப்பு ’நிலம் பூத்து மலர்ந்த நாள்’ தலைப்பின் இயல்பான மொழிமாற்றம் போலவே, மொத்த நாவலின் மொழிமாற்றமும் எந்த நெருடலும் இன்றி, பூ உதிர்வது போல நடந்திருக்கிறது. தலைப்பு மிக வசீகரமானது. உங்களுக்குத் தோன்றும், பூத்த என்றாலும் மலர்ந்த என்றாலும் ஒன்றுதானே என்று. ஒன்றென்று உரைக்கின் ஒன்றேயாம், பல வென்றுரைக்கின் பலவேயாம்! மலர்ந்த எனும் சொல்லுக்குப் பொலிந்த என்று பொருள் கொண்டால் தலைப்பின் கவிதைச் சாயல் சுவையளிக்கும்.
ஈராயிரம் ஆண்டுகள் கடந்த காலத்தை ஊடறுத்து, அந்தக் கால வாழ்க்கையை உற்றுப் பார்ப்பது போல இருக்கிறது இந்த நாவலை வாசிக்கும் போது. மூல நூலாசிரியரின் பழந்தமிழ் இலக்கியப் புலமை வியப்பளிக்கிறது. சற்றுத் தீவிரமாக யோசித்துப் பார்த்தால், மலையாள மொழி பேசும் எழுத்தாளர் எழுதிய தமிழ் நாவலை வாசிப்பது போல் நீரோட்டமாக இருக்கிறது. அல்லது அவ்விதம் தோன்றும்படி கே.வி.ஜெயஸ்ரீ மொழியாக்கம் செய்துள்ளார். வழக்கமாக, மொழி மாற்றம் பெற்று வரும் இலக்கிய வடிவங்களை வாசிக்கும்போது தோன்றும் சலிப்பும் வறட்டுத்தன்மையும் கட்டுரைத்தனமும் தோன்றாவண்ணம் மிகத் துல்லியமான படைப்பு மொழியில் மாற்றுகிறார் மொழிபெயர்ப்பாளர்.
அதன் பொருள் இந்த நாவலை வணிக வார இதழின் தொடர்கதை போல வாசித்து விடலாம் என்பதல்ல. காப்பியத்தன்மை கொண்ட மொழியில் எழுதப்பட்டுள்ள, பெயர்க்கப்பட்டுள்ள இந்த நாவலை வாசிக்க கூர்ந்த கவனம் தேவைப்படும். சற்று நின்று, நிதானித்து, உட்சென்று, தோய்ந்து வாசிப்பது அவசியமாகிறது.
கதை நடக்கும் காலம் ஈராயிரம் ஆண்டுகள் முன்பென்று சொன்னோம். காலத்தைப் புலப்படுத்தும் மொழி கையாளப்பட்டிருக்கிறது. சங்க இலக்கியத் தமிழுடன் தோய்வும் பரிச்சயமும் உடைய எந்த வாசகராலும் இந்த நாவலைச் சிரமமின்றிப் படித்துச் செல்ல இயலும். அல்லாதவர் சற்று முனைய வேண்டும். ஏனெனில் நாவலின் களம் பாணர், கூத்தர், பொருநர் வாழ்வியல் மரபு. அந்தச் சித்திரங்களை இன்று நின்றுபேச எத்தனிக்கையில், வாசகக் கவனத்தை அது கோரி நிற்பது இயல்பானதே.
ஆற்றுப்படை நூல்கள் என்று பத்துப்பாட்டினுள் ஐந்து உள. திருமுருகு , பாண் இரண்டு, பொருநர் என நான்கும் மலைபடுகடாம் என்ற கூத்தராற்றுப் படை ஒன்றுமாக ஐந்து.
‘கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்
சென்று பயன் எதிரச் சொன்ன பக்கமும்’
என்கிறது ஆற்றுப்படைக்கான இலக்கணம் கூறும் தொல்காப்பியப் பொருளதிகாரப் புறத்திணையியல் நூற்பா. பாணர், இசைவல்லுனர்கள்; கூத்தர், கூத்து நிகழ்த்துவதில் வல்லவர்கள்; பொருநர், நடிப்பில் சிறந்தவர்கள்.
வறுமை களைய மன்னரை, புரவலரை நாடிச் சென்று கலைத்திறன் காட்டிப் பரிசில் வாங்கி வரும் மக்களின் வாழ்க்கைப் போக்கு குறித்து அகலப் பேசும் நாவல் இது. புரவலர்களின் வீரம், கொடை, புலமையையும் கலைத்திறனையும் ஆதரித்தல், வளம் என பற்பல பேசப்படுகின்றன. பாணரையும் கூத்தரையும் கதை மாந்தர்களாகக் கொண்டு, களவொழுக்கம், கற்பொழுக்கம், பகல் குறி, இரவுக் குறி, பிரிவு, உடன்போக்கு எனும் சம்பவங்களைக் கொண்டது. பாணர், கூத்தர் மட்டுமன்றி, வேடர், உழவர், பரதவர் என்போரின் வாழ்க்கை நெறிகளும் உணவும் பண்பாட்டுக் கூறுகளும் பேசுவது. கொலும்பன், சித்திரை, மயிலன் எனும் பிரதானக் கதாபாத்திரங்களின் பார்வையில் கூறப்படுவது. பெரும் கதை மாந்தர்களாகக் கபிலரும் பாணரும் ஒளவையாரும் நடமாடுவது. குறுநில மன்னர்களான பெண்கொலை செய்த நன்னனும், பறம்புமலைப் பாரியும், தகடூர் அதியமான் நெடுமான் அஞ்சியும், மூவேந்தர்களும் களமாடுவது. மன்னர்களின் வீரமும் கொடையும் கலை நாட்டமும் பாடல் தேட்டமும் பேசுவது. நாடுகளை மறவீரத்தினால், வெம்போர் வெற்றியினால் படைத்தது. மட்டுமல்லாமல் சதியினால், சூதினால் கொண்ட கதைகளையும் பேசுவது என்றாலும் விறுவிறுப்பான மர்ம முடிச்சுகள் கொண்ட வாசிப்பு அனுபவம் தருவது.
சங்கச் சித்திரங்களைக் கொண்டதோர் நாவல் எழுத வேண்டும் என்று மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட, மலையாள இலக்கியத்தில் முதுமுனைவர் பட்டம் பெற்ற, மாணவருக்கு மலையாள இலக்கியம் பயிற்றுவிக்கிற, ஒரு மலையாளப் படைப்பாளிக்குத் தோன்றியது வியப்பாகப் படுகிறது. காமமும் காதலுமன்றி வேறு பாடுபொருள் அற்றுப் போனோம் என்று தமிழ்ப் பெருமை பேசுகிற நாம். இருக்கவே இருக்கிறது அள்ள அள்ளக் குறையாத கூகுள் தரவிறக்கங்கள். நமக்கு மரபு சுமையாகத் தோன்றும். மரபு கட்டுடைக்கப்பட வேண்டிய காலாவதியான கட்டிடமும் ஆகும். எந்த இந்தியக் கூறும் அறியா மேலை நாட்டு எழுத்துகளைப் படியெடுக்க அலைவோம். தொல்லிலக்கியப் பயிற்சி இல்லாமல் நவீனப் படைப்பு வராதா என்று குதர்க்கமும் பேசுவோம்.
 உண்மையில் ’நிலம் பூத்த மலர்ந்த நாள்’ போன்றதொரு நாவலை எழுத எந்தத் தமிழனும் முயல வில்லை , துணியவில்லை இதுவரை. ஆனால் நமக்குத் தனித்த சுயம்பு தமிழ் எழுத்தாளன்; வடுக, கன்னட, மலையாளத்தான் என்று பிரித்துப் பேசத் தெரியும் கம்பன் பரிகசிக்கிறான், கம்பன் கூற்றாக,
‘பேசுவது மானம் இடை பேணுவது காமம்,
கூசுவது மானுடரை, நன்று நம் கொற்றம்’ என்று வருகிறது.
நம் மொழியில் பயின்று, பல லட்சங்கள் கையூட்டு கொடுத்துப் பணி நியமனம் வாங்கி, மாணவருக்கு இலக்கியம் பயிற்றுவிக்கும் பேராசிரியப் பெருந்தகைகள் பலருக்கும் இந்த நாவலின் மொழி, பேசு பொருள் கிரேக்கமும் இலத்தீனமும் சீனமுமாகத் தொனிக்கக்கூடும்.
மனோஜ் குரூர், மலையாளம் மூலமாகத் தமிழுக்குச் செய்த கொடையும் ஆற்றிய தொண்டும் இது. அந்தக் கொடையினை சிதையாமல், அலுங்காமல், குலுங்காமல், குன்றாமல், குறையாமல் தமிழுக்குக் கொணர்ந்து சேர்த்திருக்கிறார் கே.வி.ஜெயஸ்ரீ
மூல மலையாள நாவலுக்கான முன்னுரையில் ஜெயமோகன் குறிப்பிடுகிறார் – “வடிவமைப்பில் ஐரோப்பாவைப் பிரதியெடுக்கவும் தொடரவும் முயலும் மேலோட்டமான நூல்களே அதிகமாகக் கவனத்துக்கு வருகின்றன. என்னுடையது என்று தோன்றச் செய்யும், ஒரு வேளை எழுதியவரை விடவும் மேலதிக நெருக்கம் எனக்கிருக்கிறது என்று எண்ண வைக்கும் இது போன்ற நூல்கள் மிக அபூர்வம் தான்” என்று. எனக்கும் அது முழுக்க முழுக்க உடன்பாடான விடயம்.
சங்க காலத்துச் செய்திகள் துருத்தலில்லாமல் பேசப்படுகின்றன. ‘வென்றெறி முரசின் வேந்தர்களான சேர, சோழ, பாண்டியரின் சதியால் வீழ்ந்த பறம்புமலைப் பாரி, பெண் கொலை என்னும் இழிவு இன்றுவரைச் சுமக்கும் நன்னன், வீரத்தில் குன்றாத, ஆனால் போரில் தோற்றுப்போன அதியமான் நெடுமான் அஞ்சி, அவர்களைப் பாடிய கபிலர், பரணர், ஒளவையார் எனச் செய்திகள் ஊடுபாவாகக் கிடக்கின்றன.
மேற்சொன்ன புலவர்களின் பாடல் வரிகள் மணிமிடைப் பவளம் போலச் செழிப்பாகக் கையாளப்பட்டுள்ளன. பெருஞ்சித்திரனாரின் புறநானூற்றுப் பாடல் வரிகள்,
‘குப்பைக் கீரை கொய்கண் அகைத்த
முற்றா இளந்தளிர் கொய்து கொண்டு உப்பின்று
நீருலையாக ஏற்றி மோரின்று
அவிழ்ப்பதம் மறந்து பாசடகு மிசைந்து’
குமணனைப் பாடியது, உரைநடை வடிவம் பெற்று சரளமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுபோல் எத்தனையோ வரிகளை மேற்கோள் காட்ட இயலும். சங்க இலக்கியப் புலத்தினுள் பெருநடை பாவித்திரா விடின் இது சாத்தியமே இல்லை. மலையாளத்தில் மேற்கோள் இல்லாமல் கையாளப் பட்டிருந்த அந்த வரிகளுக்கு,  தேடிக் கண்டடைந்து, பொருத்தமாகப் பெயர்த்திருக்கிறார் கே.வி.ஜெயஸ்ரீ.
மொழியாக்கம் செய்தவர் மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர் என்பதும், நவீனத் தமிழ்ப் படைப்பு மொழியும் காப்பியத் தமிழ் மொழியும் கையாளத் தெரிந்தவர் என்பதும் சிறப்புகள். சில சொல்லாடல்கள், பண்டைத் தமிழ்ப் பாடல்களில் பழக்கம் இலாதவர்க்கு , மலையாளம் போலத் தொனிக்கும். ஆனால் உண்மை அதுவல்ல. எடுத்துக்காட்டாக ஒன்றேயொன்று சொல்வேன். Spying என்பது ஆங்கிலம். ஒற்றாடல் என்பது திருக்குறள் அதிகாரம் ஒன்றின் தலைப்பு. வேவு பார்த்தல் ஒற்றனின் தொழில். ஒற்று, ஒற்றலின், ஒற்றாது, ஒற்றி, ஒற்றிய, ஒற்றினும், ஒற்ற, ஒற்றுபு, ஒற்றும் எனும் சொற்களைச் சங்க இலக்கியங்கள் கையாண்டுள்ளன. ஒற்று வேலை செய்து கொடுத்தல், ஒற்று அறிந்து தெரியப் படுத்துதல் எனும் செயலை ஒற்றிக் கொடுத்தல் என்னும் சமகால மலையாளம். அவ்விதமே அச்சொல்லைக் கையாள்கிறார் கே.வி.ஜெயஸ்ரீ. ஆனால் தமிழ் வாசகனுக்கு மலையாளமே போலத் தொனிக்கும். ஆனால் அது ஆதித் தமிழ்ச் சொல்லே.
‘ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்’
என்கிறார் திருவள்ளுவர்.
எனக்கு மலையாளம் எழுத, வாசிக்கத் தெரியாது. பேசவும் பேசினால் அறிந்து கொள்ளவும் முடியும். என் அம்மை கொடு மலையாளக் குடியிருப்பில் பிறந்து வளர்ந்தவள் என்றாலும், என்னால் கற்றுச் செயல்பட இயலவில்லை . ஆனால் மலையாளம் என்பது ஆதித் தமிழே என்பதறிவேன். மலையாளச் சொற்களை, அதன் ஆதித் தமிழ்ச் சொற்களைக் கண்டெடுத்து மொழிபெயர்ப்பாளர் பயன்படுத்துவது இந்த நூலின் வலு. பொருள் தேடி ஆற்றுப்படுத்தப்பட்ட பெரும்பாணன் குடும்பத்தினருக்கு பரணர், நன்னனால் கொலை செய்யப்பட்ட பெண் கோயில் கொண்டுள்ள இடத்தைக் காட்டும் பகுதி நாவலின் உச்சமான பகுதிகளில் ஒன்று. அதுபோன்றே சூதினால் பாரி சதிக்கப்படும் காட்சியும் கவித்துவமானது. மகீரன், சித்திரை, மயிலன் பாத்திரப் படைப்புகள் வெகு நேர்த்தி. பல உவமைப் பிரயோகங்கள் சிறப்பாக உள்ளன. எடுத்துக்காட்டுக்கு பாறைக்கடியில் மரத்துப் போன கொடுமையைப் போல அசைவற்றிருக்கும் முதலை’ , ‘பொருளறியப்படாத எழுத்துகள் நிறைந்த சுவடிகளாக இருக்கலாம் நாங்கள்’ எனச்சில கூறலாம்.
நிறைவானதோர் தமிழ்நாவல் வாசித்த உணர்வு இருக்கிறது.
மூல நூலாசிரியருக்கும் சிறப்பாக அதனைத் தமிழில் தந்தவருக்கும் வாழ்த்துகள்.
மிக்க அன்புடன்
நாஞ்சில் நாடன்
கோயம்புத்தூர் – 641042
20.05.2016

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் and tagged , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக