அமீரகத் தமிழ் மன்றத்தின் இலக்கியக் கூடல் விழா: எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், ஜெயமோகன் கௌரவிப்பு

அமீரகத் தமிழ் மன்றத்தின் சார்பில் துபாயில் இலக்கியக் கூடல் விழா-2012 மிகச் சிறப்பாக நடைபெற்றது. கணினி வழியாகத் தமிழைப் பரப்பும் பணிகளில் கடந்த 12 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்து கொண்டிருக்கும் அமீரகத் தமிழ் மன்றம் இலக்கியம் சார்ந்த நிகழ்வுகளையும் நடத்தி வருகிறது.
அந்த வகையில் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் மற்றும் எழுத்தாளர் ஜெயமோகன் இருவரையும் பாராட்டும் வகையில் இலக்கியக் கூடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
துபாய் கராமாவில் அமைந்துள்ள சிவ்ஸ்டார் பவனில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமீரகத்தின் எழுத்தாளரான ஆப்தீன் முன்னிலை வகிக்க, அமைப்பின் செயலாளர் ஜெஸிலா ரியாஸ் வரவேற்புரை நிகழ்த்தினார்.
வரவேற்புரையின் போது,  துபாயில் இதுபோன்ற இலக்கிய விழாக்கள் குறைவாகவே நடைபெறுவதும், திரைத்துறை சார்ந்த நிகழ்வுகளுக்கே மக்களிடம் ஆதரவு இருப்பதும் வருந்தத்தக்கது என தெரிவித்த அவர், இதுபோன்ற நிகழ்வுகள் ஒரு மாற்றாக அமையுமென்று நம்பிக்கை தெரிவித்தார்.
எழுத்தாளர் நாஞ்சில் நாடனைக் குறித்த அறிமுகவுரைக்குப் பின்னர், பேச வந்த நாஞ்சில் நாடன் தமிழின் சொல் வளமையைக் குறித்து பேசினார். 1330 குறள்களில், குறைந்த பட்சம் 4000 தனித்துவம் நிறைந்த சொற்கள் உபயோகமாகி இருக்கும். கம்பராமாயணத்தில் 12,500 விருத்தங்களுக்கு அதே கணக்கை உபயோகித்தால் கம்பன் லட்சக்கணக்கான சொற்களை பயன்படுத்தியிருக்கலாம்.
கம்பன் உபயோகிக்காத வார்த்தைகளையும் சேர்த்தால் தமிழில் மில்லியன் வார்த்தைகள் இருக்கலாம் – ஆனால் எவ்வளவு பயன்படுகிறது?. பல்லாயிரக்கணக்கான சொற்கள் தமிழில் இருந்தும் நல்ல படைப்பாளிகள் கூட நாலாயிரம் சொற்களைத் தாண்ட முடிவதில்லை என்பதையும்,  சாதாரணமாக எழுதுபவர்கள் 200க்குள்ளேயே முடங்கிப் போவதையும் தனக்கேயுரித்தான ஆதங்கத்துடனும் நகைச்சுவையுடனும் விவரித்தார்.
கம்ப ராமாயணம் தொடங்கி தமிழின் பல்வேறு இலக்கிய நூல்களையும் அடிக்கோடிட்டு காணாமல் போன சொற்களின் பட்டியலை எடுத்துரைத்து, அவற்றையெல்லாம் தமிழில் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அழகுற எடுத்துச் சொல்வதாக அமைந்தது அவரது பேச்சு.
எழுத்தாளர் ஜெயமோகன் குறித்த அறிமுக உரையை சித்தநாத பூபதி வழங்க, அதனைத் தொடர்ந்து பேச வந்த எழுத்தாளர் ஜெயமோகன், சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை காப்பியங்களைக் குறித்து விரிவான உரை நிகழ்த்தினார்.
சிலப்பதிகாரத்தையும் மணிமேகலை சிந்தாமணியையும் பகுத்தறிவு சார்ந்து பார்ப்பதைவிட படிமங்களாகப் பார்ப்பது பற்றி ஆரம்பித்தார். மணிமேகலை சென்றடைந்த பளிங்கு மண்டபமும் கையில் இருந்த மாலையில் கண்ணீரும் பெண் நிலைமையை அன்றில் இருந்து ஏன், சிவனும் உமையாளும் ஆடிய ஆடு புலி ஆட்டத்தில் இருந்தே லா.ச.ராவின் ஆடு புலி ஆட்டம் வரை தொடர்கிறது என்றார்.
கண்ணகி எறிந்த இடது முலை எப்படி மணிமேகலையின் கையில் அட்சய பாத்திரமாக மாறுகிறதென்பதை மிகத் தெளிவாக விளக்கினார். முலை என்பது கருணையின் குறியீடாக இருப்பதாகவும் அதனை அறச்சீற்றம் கொள்ளும் கண்ணகி எறிந்த பின்னர் தொடர்கின்ற மணிமேகலைக் காப்பியத்தில் அதுவே அட்சய பாத்திரமாக, அள்ள அள்ளக் குறையாத கருணையாகப் பிரவாகம் எடுப்பதும் இரு காப்பியங்களுக்குமுள்ள நெருக்கமான முடிச்சு என்றார் அவர்.
தொடர்ந்த நிகழ்வில் நாஞ்சில் நாடனுக்கு அமைப்பின் பொருளாளர் நஜ்முதீன் பொன்னாடை வழங்கி கௌரவிக்க ஆசிப் மீரான் நினைவுப்பரிசு வழங்கினார். எழுத்தாளர் ஜெயமோகனுக்கு அமைப்பின் கலைச் செயலாளர் ஃபாரூக் அலியார் பொன்னாடை வழங்கி கௌரவிக்க அமைப்பின் செயலர் ஜெஸிலா நினைவுப்பரிசு வழங்கினார்.
தொடர்ந்து எழுத்தாளர்களிடம் அவர்களது எழுத்து குறித்தும், தமிழ் இலக்கியச் சூழல் குறித்தும் எழுப்பப்பட்ட வினாக்களுக்கு எழுத்தாளர்கள் இருவரும் விளக்கமான பதிலளித்தனர்.
விழாவின் நிறைவாக அமைப்பின் கலைச் செயலாளர் ஃபாரூக் அலியார் நன்றியுரை வழங்கினார்
வாசகர்களின் கருத்து
Tuesday, April 17,2012 05:10 PM, நாஞ்சில் 2144 said:04
தமிழை சுவாசித்து தமிழனை நேசித்து தமிழுக்காய் யாசிக்கும் இவர்கள்தான் நிஜமான தமிழ் இன தலைவர்கள்..! மற்றவர்கள் தமிழ் இனத்தின் நிழல் என்று கூட சொல்ல முடியாது..! இவர்களின் தமிழ் தொண்டு தொடர வாழ்த்துக்கள்..!
On Wednesday, April 18,2012 07:34 AM, அறிவிலார்க்காசிரியன் said :04

தமிழ் நாட்டில் இது போன்ற இலக்கிய விழாக்களுக்கு நடிகர்களை அழைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்,உண்மையாக இலக்கியத்தில் பற்றுள்ள நடிகர்களை அணுகி அவர்களிடம் நிதியுதவி பெற்று விழாக்களை சிறப்பாக நடத்தி எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் அதே நேரம் தமிழையும் வளர்க்க முடியும், இக்கருத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு சமர்ப்பணம்!

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா and tagged , , , , , , , , . Bookmark the permalink.

1 Responses to அமீரகத் தமிழ் மன்றத்தின் இலக்கியக் கூடல் விழா: எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், ஜெயமோகன் கௌரவிப்பு

  1. rathnavelnatarajan சொல்கிறார்:

    மகிழ்ச்சி. அருமையான செய்திகள்.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி.

rathnavelnatarajan -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி