காற்றின் சிறகினிலே… – சாரல் விருது விழா

ந.பாஸ்கர்
http://solvanam.com/?p=18831
“தன் சமூகத்தின் அடுத்த நூற்றாண்டைப் பற்றிச் சிந்திக்கும் எழுத்தாளனை இன்றைய தமிழ் சூழல் எப்படி நடத்துகிறது?” என்று கோபமாகக் கேட்டிருந்தார் நாஞ்சில் நாடன். அவன் அடையாளமற்றிருக்கிறான், அடித்தட்டில் நிற்கிறான். அரசு விருதுகள் பிரச்சினைக்குரியனவாகிவிட்ட நிலையில் வாசகர்களும் விமரிசகர்களும் வழங்கும் சாரல், விளக்கு, விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் போன்ற விருதுகள்தான் நம்பிக்கை தருவனவாக இருக்கின்றன. “ஒரு காய்கறிக் கடையில் உங்கள் அருகில் வண்ணநிலவன் நின்று கொண்டிருப்பார். பேருந்தில் உங்களருகில் அமர்ந்து கொண்டிருப்பார். சாலையில் உங்கள் எதிரில் வந்து கொண்டிருப்பார். ஆனால் நீங்கள் அவரைக் கண்டு கொள்ளாமல் செல்வீர்கள். இதுதான் எழுத்தாளனுக்கு இன்றுள்ள நிலை,” என்று நாஞ்சில் ஆதங்கப்பட்டார்.
“நீங்களும் நானும் அனைவரும் மறந்து போயிருந்த ஆ மாதவனுக்கு விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் விருதளித்து சிறப்பித்தது,” என்று நினைவு கூர்ந்த அவர், “இது போன்ற விருது விழாக்களுக்கு நான் செல்லும்போது, எனக்கு முன்னோடிகளாக இருந்தவர்கள், இது போன்ற விருதுகள் பெற்றுக் கொள்ளும் தகுதி கொண்டவர்கள் என்று குறைந்த பட்சம் இருபத்தைந்து பேரின் நினைவையும், அவர்கள் இன்னும் சரியான முறையில் அங்கீகரிக்கப்படவில்லை என்ற எண்ணத்தால் ஏற்படும் குற்ற உணர்வையும் என்னால் தவிர்க்க முடிவதில்லை. ஆண்டுக்கு ஒருவர் என்று அவர்களைச் சிறப்பித்தாலும், பலர் விருது பெறாமலேயே இறந்து விடுவார்கள். பாரதி மறைந்த பின் புகழ் பாடி பாரதிக்கு என்ன பயன்?” என்ற கேள்வியை எழுப்பினார்.
நாஞ்சிலின் கோபம் இப்படியொரு நீண்ட புறக்கணிப்புக்குக் காரணமான சாகித்ய அகாடமி போன்ற அரசு அமைப்புகளின் மேல் இருக்கிறது. “சாகித்ய அகாடமி, ஞானபீடம் போன்றவை அளிக்கும் சன்மானத்தைவிட அதிக தொகையை நீங்கள் அளிக்க வேண்டும். ஒரு எழுத்தாளன் அரசு சார்ந்த விருதுகளைப் பொருட்படுத்தாத, புறக்கணிக்கும் சூழலைத் தனியார் உருவாக்க வேண்டும்,” என்று அவர் ஆவேசமாகப் பேசினார். அந்த இருபத்தைந்து மூத்த எழுத்தாளர்களுக்கும் ஒருசேர ஒரு கணிசமான தொகையை விருதாக அளித்து கௌரவித்துவிட்டு, இன்று எழுதும் நாற்பது நாற்பத்து ஐந்து வயது சாதனையாளர்களுக்கு விருதுகள் தரலாம் என்று அவர் சொன்னார்.
இவ்வாண்டு சாகித்ய அகாதமி விருது ஒரு இளைஞருக்குத் தரப்பட்டிருக்கிறது என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்தான். இது தொடரவும் வேண்டும். ஆனால், இதுவரை புறக்கணிக்கப்பட்டுவிட்ட தேர்ந்த எழுத்தாளர்களை அப்படியே மறந்து விடப் போகிறோமா? நாஞ்சில் நாடன் இதற்குத் தந்துள்ள தீர்வை நாம் தீவிரமாக ஆலோசிக்க வேண்டும். குழு அடையாளங்களைத் தாண்டி அனைத்து இலக்கிய ஆர்வலர்களும் ஒருங்கிணைந்து இதைச் செய்தால் இன்றைய தமிழ் இலக்கிய சூழலில் அது ஒரு முக்கியமான திருப்பு முனை தருணமாக இருக்கலாம்.
ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என்பது சாரல் விருது வழங்கிய ஜேடி- ஜெர்ரி இயக்குனர்களில் ஒருவரின் பேச்சில் வெளிப்பட்டிருந்தது- “இதைவிட இன்னமும் கூடுதலான தொகையை விருதாக அளித்து சிறப்பிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். ஆனால் இலக்கியத்துக்கு ஒரு சிறிய ஸ்பான்சர்கூட கிடைப்பதில்லை,” என்று குறைபட்டுக் கொண்டார் அவர். பெருமளவு இளைஞர்கள் அரங்கை நிறைத்த எஸ் ராமகிருஷ்ணனின் இலக்கியத் தொடர் உரைக்கே எவ்வளவோ முயன்றும் வர்த்தக நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்ய மறுத்து விட்டன என்றார் அவர், தொலைக்காட்சி சேனல் எதிலாவது இலக்கிய உரைகள் ஒளிபரப்பாகின்றனவா என்பதே அவர்களின் கேள்வியாக இருக்கிறது.
நாஞ்சில் நாடன் உரையில் குறிப்பிடத்தக்க விஷயம் அவர் வண்ணநிலவனைப் புதுமைப் பித்தனின் நேரடி வாரிசு என்று அறிவித்ததுதான். “புதுமைப்பித்தனையும் கடந்து சென்றுவிட்ட எழுத்தாளர்கள் இருக்கிறார்கள், ஆனால் வண்ணநிலவன்தான் புதுமைப்பித்தனின் நேரடி வாரிசு” என்று அவர் குறிப்பிட்டார். வண்ணதாசனைப் பற்றி நிறைய எழுதிவிட்ட காரணத்தால் அன்றைய உரை முழுக்க முழுக்க வண்ணநிலவனுக்காக இருந்தது. “வண்ணநிலவன் இல்லையென்றால் நாஞ்சில் நாடன் என்ற நாவலாசிரியன் இன்று உங்கள் முன் நின்று கொண்டிருக்க மாட்டான்” என்று வண்ணநிலவனின் தாக்கத்தை வெளிப்படுத்தினார் நாஞ்சில்
முழுக் கட்டுரையையும் படிக்க: சொல்வனம்: http://solvanam.com/?p=18831

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், எழுத்தாளர்களின் நிலை, நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to காற்றின் சிறகினிலே… – சாரல் விருது விழா

  1. Naga Sree சொல்கிறார்:

    “இலக்கியத்துக்கு ஒரு சிறிய ஸ்பான்சர்கூட கிடைப்பதில்லை” வருந்தத்தக்க விசயம். 

  2. ஜோதிஜி திருப்பூர் சொல்கிறார்:

    அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.

    உங்கள் எழுத்தை வாசிக்கும் போது அந்த சில நிமிடங்களில் படிப்பவருக்கு கிடைக்கும் அந்த மகிழ்ச்சிக்கு ஆனந்த நிலைக்கு ஈடான வேறொன்றுமில்லை. இந்த அங்கீகாரம் உங்களுக்கு நேரிடையாக தெரியாது. உங்கள் காலம் முடியும் போது அப்போது வாசித்தவன் அனுபவிக்கும் மன (நரக) வேதனையை உங்கள் ஆத்மா உணரக்கூடும். எழுத்தாளர்களின் பலமே இது.

    நம் நாட்டில் பாரதிக்கு கிடைத்த அவமானங்களை விட இப்போதுள்ள எழுத்தாளர்களின் நிலை ஒப்பீட்டளவில் பரவாயில்லை தானே?

  3. rathnavelnatarajan சொல்கிறார்:

    அருமையான பதிவு.
    இந்த பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    எனது எண்ணங்கள் அனைத்தையும் எனது இனிய நண்பர் திரு ஜோதிஜி அவர்கள் அருமையாக சொல்லியிருக்கிறார்கள்.
    மிக்க் நன்றி ஐயா.

  4. இதைவிட இன்னமும் கூடுதலான தொகையை விருதாக அளித்து சிறப்பிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். ஆனால் இலக்கியத்துக்கு ஒரு சிறிய ஸ்பான்சர்கூட கிடைப்பதில்லை\\
    கிரிக்கெட்டுக்கு கோடிகோடியா கொடுக்குற ஊருல எப்படி எழுத்தாளருக்கு ஸ்பான்சர் கொடுப்பாங்ங. கிரிக்கெட் ஒழியனும். அப்பத்தான் நம்ம நாட்ல எதாவது நல்லது நடக்கும்.
    நாஞ்சிலின் உரை அருமை. பகிர்விற்கு நன்றி.

Naga Sree -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி