சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – தூது

 
நாஞ்சில் நாடன்
தூது
கோவை, உலா இலக்கியங்களைத் தொடர்ந்து நாம் பார்க்க இருப்பது தூது. பிற இந்திய மொழிகளிலும் பல்வகைத் தூதுக்கள் உண்டு. வடமொழியில் இதனை சந்தேசம் என்பர். எடுத்துக்காட்டுக்கு, காளிதாசனின் மேக சந்தேசம். அதாவது மேகத்தைத் தூது விடுவது.
திருக்குறளில் 69ம் அதிகாரம் ‘தூது’ பற்றிப் பேசுகிறது. தூதுரைப்பவன் பண்புகள் பேசப்படுகின்றன.
அன்புடைமை, ஆன்ற குடிப்பிறத்தல் வேந்து அவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு
என்கிறார் வள்ளுவர்.மேலும்,
அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று
என்கிறார். மேலும்,
தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாந் தூது.
புராணங்கள், இதிகாசங்கள் தூது பற்றி நெடுகப் பேசுகின்றன. பாண்டவர்க்குத் தூது நடந்த பார்த்தனை ஆழ்வாராதிகள் பாடுகிறார்கள். சம காலத்து அரசியல் தூதர்கள் பலரைப் பார்க்கிறோம். அவர்களுள் புகழ் பெற்றவர் அமெரிக்க ஹென்றி கிசிஞ்சர், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் வாரந்தோறும் தூது போகிறார்கள். கொடுங்கொலைகார இலங்கையர் சுற்றுப்பயணம் வந்து போவது போல் இந்தியாவுக்குத் தூது வந்து போகிறார்கள். உலக ஐக்கிய நாடுகள் சபையின் அங்கங்கள் நம் தூதுவர்களைப் பிற நாடுகளில் நியமித்து வைத்துள்ளனர். இன்றெல்லாம் கலாச்சாரத் தூதுவர்களாக சினிமா நடிகையர் போய் வருகிறார்கள்.
ஆனால் சிற்றிலக்கியங்கள் பேசும் தூது வேறு வகைப்பட்டன. சிற்றிலக்கியங்கள் எனப் பேசப்படும் 96 வகைப் பிரபந்தங்கள் பற்றிய இலக்கணம் எதுவும் தொல்காப்பியத்தில் பேசப்படவில்லை. ஆனால் இவற்றுள் பல, பிற்காலத்தில் செல்வாக்குப் பெற்றிருந்தன.
சீவக சிந்தாமணியின் நாயகியர் எண்மரில், குணமாலை கிளியை சீவகனுக்குத் தூது விடுகிறாள். நள சரிதத்தில் அன்னம் தூது விடப்படுகிறது. இருக் வேதத்தில் சரமா எனும் பெயருள்ள நாயைத் தூது விட்ட செய்தி உளதென்பார்.
‘விரக தபத்தால் பலபடியாகப் புலம்பும் காமம் மிக்க கழி படர் கிளவி வகைகளுள் இதுவும் ஒன்று’ என்பார் மகாமகோபாத்யாய உ.வே. சாமிநாத ஐயர். எனவே இத்தகு தூதுகள் அன்று இயல்பாக விடப்பட்டுள்ளன.
சத்திமுற்றத்துப் புலவர் பசியிலும் குளிரிலும் வாடி, தன் நிலையை மனைவிக்கு அறிவிக்கும் வண்ணம் நாரையைத் தூது விட்ட பாடல் தமிழ் இலக்கியப் பரப்பில் அற்புதமானது.
நாராய், நாராய், செங்கால் நாராய்,
பழம்படு பணியின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்
என்று தொடங்கும் அந்தப் பாடலில் ஒரு முறை வாசித்தவர் வாழ்நாளில் மறக்க இயலாது. அதுவும், ‘கையது கொண்டு மெய்யது பொத்தி’ எனும் குளிரில் வாட்டும் அந்தப் பிரயோகம் வலிமையானது.
சங்க இலக்கியத்தில் நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு, தேவாரம், திவ்யப் பிரபந்தம் முதலியவற்றுள் தூதுப் பாடல்கள் உள்ளன.

பயிலரும் கலி வெண்பா வினாலே
உயர்திணைப் பொருளையும் அஃறிணைப் பொருளையும்
சாந்தியின் விடுத்தல் முந்துறு தூது
என்பர்.
எகினம், மயில், கிளி, மழை, பூவை, சகி, குயில், நெஞ்சம், தென்றல், வண்டு முதலிய பத்தும் தூது விடப்பட்டுள்ளன. இந்தப் பத்தினுள் மயில், பூவை, குயில் என்பன தூது போன இலக்கியங்கள் இன்று எல்லை என்கிறார்கள்.
மேற்குறிப்பிட்ட பத்தும் நீங்கலாக, அந்த வரையறைக்குள் அடங்காமல் பண விடு தூது, முகில் விடு தூது, தமிழ் விடு தூது, மான் விடு தூது, வசை விடு தூது, சவ்வாது விடு தூது, நெல் விடு தூது, விறலி விடு தூது, புகையிலை விடு தூதும்,வசை பாடிக் கழுதை விடு தூதும்கூட இருந்திருக்கின்றன.
திருமாலிருஞ்சோலை அழகர் மீது பாடப்பட்ட கிள்ளை விடு தூது தவிர்த்து, வேறு கிள்ளை விடு தூதுகள் கிடைத்திலது என்கிறார் பதிப்பாசிரியர் உ.வே.சா.
உ.வே.சா. பதிப்பித்த தூது இலக்கியங்கள் :
1. திருமாலிருஞ்சோலை கிள்ளை விடு தூது
2. கச்சியானந்த ருத்திரேசர் வண்டு விடு தூது
3. மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது
4. பத்மகிரிநாதர் தென்றல் விடு தூது
5. மான் விடு தூது
6. புகையிலை விடு தூது
முதலியன.
தமிழ் விடு தூது சிறப்பித்த இரு வரிகள் :
‘இருந்தமிழே உன்னால் இருந்தேன், இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் ‘
நினைவுக்கு வருகிறது.
திருமாலிருஞ்சோலை கிள்ளை விடு தூது………………………….
முழு கட்டுரையும் படிக்க:  சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – 2
செந்தமிழ்க் காப்பியங்கள்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in "பனுவல் போற்றுதும்", அனைத்தும், இலக்கியம், எண்ணும் எழுத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக