என்பிலதனை வெயில் காயும் – சுபத்ரா விமர்சனம்

சுபத்ரா
http://subadhraspeaks.blogspot.com/2011/07/enbiladhanai.html
முதன்முதலாக ஒரு புத்தகத்தைப் பற்றி நான் எழுதியிருக்கும் பதிவு. சாகித்ய அகாடமி விருது பெற்ற நாஞ்சில் நாடன் அவர்கள் எழுதிய புதினத்தைப் பற்றியது.. இட்லிவடையில் வெளிவந்துள்ளது
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் எழுதி 1979-ல் வெளிவந்த புத்தகம் “என்பிலதனை வெயில் காயும்”. ஏதோ திருக்குறள் போல இருக்கிறதே என எண்ணிக் கொண்டே வாங்கினேன். படிக்கத் தொடங்கியதும் பாதியில் கீழே வைக்க முடியவில்லை. ஒரே ஸ்ட்ரெட்சில் படித்து முடித்து புத்தகத்தை மூடிக் கீழே வைக்கையில் தான் மீண்டும் அந்தத் ‘தலைப்பு’ கண்ணில் பட்டது. புத்தக அலமாரியில் இருந்த திருக்குறள் புத்தகத்தை வேகமாகப் புரட்டி அப்போதே எதையோ தேட ஆரம்பித்திருந்தேன்…
’விமர்சனம்’ என்று சொன்னால் அது மிகை. புத்தகம் படிக்கையில் எனக்குத் தோன்றிய உணர்வுகளைக் கருத்துகளாகப் பதிய விரும்பியே இந்தச் சிறு முயற்சி.
நான் படித்த நாஞ்சில் நாடனின் முதல் புத்தகம் இது. புத்தகம் முழுக்க ‘நாகர்கோவில்-தமிழ்’. நான் மணிமுத்தாறில் தங்கி வேலைப் பார்த்துவந்த போது என்னுடன் வேலை பார்த்த பெண்மணிகளில் பலர் நாகர்கோவில், சுசீந்தரம், வடசேரி பகுதிகளைச் சேர்ந்தவர்கள். அவர்களின் தமிழுக்குப் பழகியிருந்ததாலும் மேலும் எனக்கும் சொந்த ஊர் திருநெல்வேலி தான் என்பதாலும் புத்தகம் முழுவதையும் இயல்பாக என்னால் வாசிக்க முடிந்தது!
பப்படம் வறுக்கும் வாசனையுடன் மணமாக ஆரம்பிக்கும் கதை முழுக்க முழுக்க மண்வாசனை மற்றும் மழைவாசனையைக் கொண்டிருக்கிறது. சில கதைகள் ‘எப்படா ஊருக்குப் போய்ச் சேருவோம்’ என விடுமுறை நாட்களில் வீடுசெல்லத் தொடங்கும் பயணத்தைப் போல ‘எப்படா கதையின் முடிவு வரும்’ என ஏங்க வைத்துவிடும். பாக்கெட்டில் கொஞ்சம் பணத்தை வைத்துக் கொண்டு ஏதோ ஒரு பேருந்தில் ஏறி ஏதோ ஓர் ஊருக்கு டிக்கெட் எடுத்துக்கொண்டு பயணம் முழுக்க வெளியே சுற்றிப் பார்த்துவிட்டு அப்படியே வீடு திரும்புவது போல் படிக்கப் படிக்க அதன் போக்கிலேயே ரசிக்க வைப்பவை சில கதைகள். ‘என்பிலதனை வெயில் காயும்’ இதில் இரண்டாவது வகை.
கதையின் நாயகன் ஒர் ஏழைக் கல்லூரி மாணவன் சுடலையாண்டி. தாய் தந்தை இல்லாத அவனுக்கு ஒரு தாத்தாவும் பாட்டியும் மட்டுமே அவனுடைய சொந்தங்கள். ஊரிலிருந்து நடந்தே நாகர்கோவிலில் இருக்கும் கல்லூரிக்குச் சென்று வருகிறான். வகுப்பில் எப்போதும் முதலிடத்தைப் பிடிப்பவன். இரண்டாவது இடம் பெரும்பாலும் அவனது ஊரைச் சேர்ந்த ஆவுடையம்மாள் என்னும் பண்ணைவீட்டுப் பெண்ணுக்குத் தான். சிறப்பாகப் படித்து முதல் வகுப்பில் தேரி வெற்றிகரமாக பி.எஸ்.சி. கணிதம் பட்டம் வாங்கிவிட்டு வேலை தேடுகிறான். இதுவரை தன்னைப் பாடுபட்டுப் படிக்க வைத்த தாத்தாவுக்கும் பாட்டிக்கும் ஓய்வு கொடுத்து அவர்களைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்னும் அடிப்படை ஆசைதான் அவனுக்கு.
புத்தகம் முழுக்க சுவாரசியங்கள். ஒரு செயற்கை தன்மையற்ற இயல்பான மொழியில் இயற்கையாக அமைந்துள்ள எழுத்துநடை புத்தகத்தின் பலம். படிக்கப் படிக்கக் காட்சிகள் கண்முன்னே ஓடுகின்றன.
“ஊரிலேயே நாலைந்து பெண்கள் தான் சிவப்பு” எனப் பெயர்ப்பட்டியல் குறிப்பிடப்படுவதிலிருந்தே தொடங்குறது கதையின் ‘நாயகி’க்கான வழக்கமான நமது தேடல். கதை முழுவதும் சுடலையாண்டியும் ஆவுடையம்மாளும் பேசிக்கொள்பவை சொற்ப வார்த்தைகள் தான். அவளைப் பற்றி இவன் மனதுக்குள் விமர்சித்துக் கொள்வதும் ‘ஒட்டாமல்’ பழகும் விதமும் இருவருக்குள்ளும் ஒரு சம்பந்தத்தை ஏற்படுத்திப் பார்க்க நம்மை அனுமதிப்பதில்லை தான் என்றாலும் இருபத்து மூன்றாம் அத்தியாயத்தின் இறுதியில் ஆவுடையம்மாளுக்கு ஒரு கல்லூரியில் உதவிப் பேராசியராகப் பணிபுரியும் வேறொரு மாப்பிள்ளையுடன் திருமணம் முடிந்துவிடும் வேளையில்…
“ஏமாற்றம் அடைந்ததுபோல் சுடலையாண்டிக்கு ஒரு உணர்வு. ஏதோ இழக்கக் கூடாததை இழந்ததுபோல், எதை இழக்கிறோம் என்றும் நிச்சயமாகச் சொல்ல முடியாமல்…
அதைப் பற்றி எண்ணவே உள்ளம் கலவரப் பட்டது. ஒரு குறிப்பிட்ட நிலக்கு மேல் தாண்ட முயன்று, முடியாது தவித்த மனம். இது வேண்டாம். இது சரியில்லை… எண்ணிப் பார்க்க மகிழ்ச்சியாக, துயரமாக, வெறுப்பாக, கசப்பாக…”
என வரும் வார்த்தைகள் ஆவுடையம்மாளின் திருமணத்தை எண்ணி சுடலையாண்டியின் மனது கனப்பதைவிட படிப்பவரின் மனதைக் கனக்கச் செய்துவிடுகின்றன!
பள்ளிக் காலங்களில் பக்கத்தில் அமர்ந்திருக்கும் மாணவனிடம் ரப்பர், பென்சில் வெட்டும் பிளேடு, கடனாகப் பத்துச் சொட்டு மை, சில்லறை வரைபட உபகரணங்கள்… ஊரில் சடங்கு போன்ற விசேஷங்களில் முண்டியடித்துக் கொண்டு வாங்கப்படும் வெற்றிலை, சீனி, வாழைப்பழம்… சடங்கான பெண் பத்து நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு மீண்டும் பள்ளிக்கு மஞ்சள் பூச்சுடனும் மருதாணிச் சிவப்புடனும் மறுபடி மறுபடி பார்க்கத் தூண்டுவது போல் வருவது… கணிதப் பேராசியர்களின் “தேர்ஃபோர்”, “ஈஸ் ஈக்வல் டு”, “தோஸ் ஹூ ஆர் ஹோம் ஒர்க் செய்யலே வெளீல போங்கோ…” என்னும் ஆங்கிலச் சொல்லாடல்கள்… எல்லாம் நம்மைப் பின்னோக்கிப் பயணிக்க வைக்கின்றன.
“…கல்லூரியில் இருந்து புறப்படும் போதே பொழுது அடைந்து விடும். பிறகு நடை – வாழ் நாளையே நடந்து அளக்க முயல்வது போல்”,
“சரியாக இருக்கும்போது பெரு விரலின் இருப்பு கூடத் தெரிவதில்லை. கோளாறு வந்து விட்டால் அதுவே உடம்பாகி விட்டதுபோல்…”
“…தாய் மார்பென்று தடவித் தோல் பாய்ந்த கிழட்டு முலை சுவைத்த காலத்தில் சுரந்த கண்ணீரின் மிச்ச சொச்சங்கள் இன்னும் இருக்கின்றன.”
போன்ற இடங்கள் ‘சடன் பிரேக்’.
“…இவர்களின் வயல்களில் மணல் பாய்ந்தால் என்ன? வீட்டின் கூரை தீப்பிடித்து எரிந்தால் என்ன? இடிந்து சமுத்திரத்தில் ஆழ்ந்தால் என்ன? யார் யாருக்குப் பாதுகாப்பு? மக்களுக்காக மக்களே செய்யும் மக்களாட்சி… ……. …….. மக்களாட்சித் தலைவன்கள்”
“…மன்னர்கள் தங்கிய இடங்களில் வௌவால்கள் தலைகீழாய்த் தொங்குகின்றன. மக்களாட்சி வௌவால்கள்”
என்னும் இடங்களில் ‘மக்களாட்சி’ முறையைப் பற்றி அன்று முதல் இன்று வரை நிலவும் சாடுதல்கள் நினைவூட்டப்படுகின்றன.
புதினத்தின் பக்கங்கள் முழுவதும் கிராமத்து வளங்கள் செழித்துக் கிடக்கின்றன. ஆயினும் வறுமை எனும் கொடுமை மெல்லிய நூலிழைகளால் பின்னப்பட்ட சிலந்தியின் வலைபோல் கதை முழுவதிலும் பிணைந்து கிடக்கிறது. சமூக ஏற்றத் தாழ்வுகளை நினைக்கத் தூண்டிய பல இடங்களில் ‘செவ்வாழை’ கதை நினைவிற்கு வந்து செல்கிறது.
ஓரிரு இடங்களில் ஆசிரியர் படிகமாகக் கூறும் சில விஷயங்கள் புரிகின்ற போது ஒருவித பூரிப்பு! எந்த விஷயமானாலும் ‘அளவோடு’ சொல்வது ஆசிரியரின் சிறப்பு. பொதுவாக வாசிப்பவரின் புரிதலையும் போற்றும் தன்மையையும் பொறுத்துப் படைப்புகளின் தன்மை கூடும் அல்லது குறையும் என்றே தோன்றுகிறது.
சுடலையாண்டியின் பிறப்பைப் பற்றிய ரகசியத்தைக் காலப்போக்கில் அவன் அறிய முற்படுவதும்… எதற்கெடுத்தாலும் ‘அதை’யே ஊர்க்காரர்கள் அவன்மீது அம்பு போல் எய்துவதும்… அவற்றால் அவமானப் பட்டுத் தலைகுனியும் போதும்… தன்னைப் பெற்றெடுத்த தாயின் முகமே நினைவில் இல்லாத ஏக்கமும்… எல்லாவற்றுக்கும் உட்சபட்சமாக, இறுதியில், உயரிய பதவியில் இருக்கும் தன் தாய்மாமாவிடம் வேலை கேட்டு அது நிராகரிக்கப்படும் போதும் அவரிடம் தன் தாயின் முகச்சாயலைத் தேடும் பரிதாபமும் கதையை வாசிப்பவர் இதயத்தை வலிக்கச் செய்கிறது!
புதுப்புதுப் புத்தகங்கள் எண்ணிலடங்காமல் வந்து கொண்டிருக்கும் இக்காலக்கட்டங்களில் நாம் படிக்காமல் விட்ட இது போன்ற நல்ல பழைய புத்தகங்களைத் தேடிப் படிக்கையில் ‘கால எந்திர’த்தில் பயணித்துப் பின்னோக்கிச் செல்வது போன்ற ஒரு உணர்வு(nostalgia) ஏற்படுவதை ரசித்துப் பாருங்கள் நண்பர்களே!
– சுபத்ரா
எஸ் ஐ சுல்தான்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், இலக்கியம், என்பிலதனை வெயில் காயும், நாஞ்சில் நாட்டு கதைகள், நாஞ்சில்நாடனின் கதைகள், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to என்பிலதனை வெயில் காயும் – சுபத்ரா விமர்சனம்

 1. nathnavel சொல்கிறார்:

  ஒரு செயற்கை தன்மையற்ற இயல்பான மொழியில் இயற்கையாக அமைந்துள்ள எழுத்துநடை புத்தகத்தின் பலம்

  அருமையான விமர்சனம்.
  மிக்க நன்றி.

 2. meena சொல்கிறார்:

  very nice

 3. பொன்மலர் சொல்கிறார்:

  என் தோழி சுபத்ராவின் அருமையான பதிவு. கலக்குறே சுபத்ரா. இதனை வெளியிட்ட எழுத்தாளர் நாஞ்சில் நாடனுக்கு இனிமையான நன்றிகள்.

 4. ஜெகதீசன் சொல்கிறார்:

  சாகித்ய அகாடமி விருது அறிவிப்பை பார்த்து முதல் முறையாய் இலக்கியம் வாசிக்கலாம் என்று “சூடிய பூ சூடற்க” வாங்கினேன்.

  நிறைய நாள் எங்கோ ஒளிந்திருந்து, படிக்க ஏதுமில்லா தருனத்தில் தேடி எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன்…

  இங்கே குறிப்பிட்ட இதே நினைதான் எனக்கும். முதலில் தமிழ் புரியவில்லை எனக்கு !!!! தொடர்ந்து மூன்று முறை முழு புத்தக வாசிப்பு, பின் இரண்டொரு வாரங்கள் சுவாசித்தேன் எனலாம்.

  உடன் தேடியதில் கிடைத்தது “கள்வன் காவான் எனில்”. அன்றிலிருந்து உங்கள் எழுத்து இன்னும் எனக்கு இன்பம் அளிக்கிறது.

  முக்கியமாய் சொல்ல வேண்டுமென்றால், இப்போதுதான் தமிழ் கற்ற உணர்வு.

  என் முழு வாசிப்பு நேரமும் இப்போது நாஞ்சில் நாடன், ஜெயமோகன், லா.சா.ரா, எஸ்.ரா ஆகியோரின் இலக்கியத்துடன்.

  நன்றி ஐயா.

 5. ரவி சொல்கிறார்:

  தமிழைச் சற்று பிழையின்றி எழுதுங்கள்… தேறி யை தேரி என்று எழுதியுள்ளீர். இயல்பாக எழுதுங்கள்
  போலி எலக்கியத்தனமெல்லாம் வேண்டாம்…

  ரெபெல்ரவி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s