வண்ணதாசனின் “அன்பெனும் பிடி”

அன்பெனும் பிடி
——————–
சி. கல்யாணசுந்தரம் எனும் வங்கி அலுவலரை, கல்யாண்ஜி எனும் கவிஞரை, வண்ணதாசன் எனும் சிறுகதை ஆசிரியரை உங்களில் பலர் அறிந்திருக்க மாட்டீர்கள். முப்பதாண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் அவரை நவீனத் தமிழ் இலக்கிய உலகம் நன்கறியும். அவரது கவிதையை, சிறுகதையை அறிமுகப்படுத்துவதோ, சிபாரிசு செய்வதோ, பாராட்டுவதோ, திறனாய்வு செய்வதோ அல்ல இந்தக் கட்டுரையின் நோக்கம்.
பலரும் அறிந்திராத அவருடைய இன்னொரு ஆளுமை – ஒவியம். கறுப்பு இந்தியன் மை நிரப்பிய பேனாவால் கடிதங்களின் வெற்றிடங்களில் வரைந்த சில கோட்டோவியங்களை மட்டுமே நான் கண்டிருக்கிறேன். என்றாலும் எழுத்துக்கும் ஓவியத்துக்குமான அவரது ஒப்பீடு எனக்கு நிறையச்சேதிகளைச் சொல்லி இருக்கிறது.
‘அதிகப்படியான ஒரு கீற்று வர்ணத்தால் பூரணம் குறைந்துபோன வர்ணப் படங்கள் என் வரைவு அனுபவத்தில் உண்டு. மெருகும் மினுமினுப்புமாக, பித்தளை நிறை நாழியில் குவித்து வைத்த புது நெல் மணிபோல, திரண்டு வந்த ஒவியங்களை, மேலும் ஒரு துளி வர்ணம் திரட்டி ஒரத்தில் ஒரு தடவை தொட்டதால் அசிங்கமாக்கி, நிறை நாழி நெல்லைக் கிடங்கு விழும்படிசரியவைப்பது எனக்கு அடிக்கடி நிகழும். எந்த இடத்தில் பிரஷ்ஷையும் கைவிரல்களையும் துடைத்துக்கொண்டு எழுவது என்று பலதடவை மயங்கி இருக்கிறேன். உங்களுக்குச் சொல்வதும் அதுதான். தீர்மானமாக ஒரு கட்டத்தில் வர்ணங்களை பிதுக்குவதை நிறுத்துங்கள்.’
மேற்சொன்ன படைப்பு ஆளுமைகளைவிட, இங்கு நான் குறிப்பிட வருவது, அவரது அன்பு மயமான நட்பு ஆளுமை பற்றி. சில படைப்பாளிகள் நமது அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமான சீடப் பரம்பரையினரைமட்டும் பாசத்துடன் முதுகில் தட்டிக் கொடுப்பார்கள். மற்றவரைப் பொருட்படுத்தவும் மாட்டார்கள். செம்பொன் போலக் கருதிச் செலவிட மறுக்கும் கஞ்சன்கள் உண்டு. ஆனால் வண்ணதாசன் நண்பர், உறவினர், அந்நியர் என எந்தப் பாகுபாடும் அற்று நல்ல எழுத்தைக் காணும்போதெல்லாம் தேடிப்பிடித்து, முகவரி வாங்கி, கடிதம் எழுதி, முன்னிலைப்படுத்துபவர்.
அவரது சிறுகதைகள் எல்லாம் அன்பைப் போதிப்பவை, அன்பை யாசிப்பவை, அன்பைத் தேடி அலைபவை, அன்பைக் கடத்திப் போக முயல்பவை, அன்பு நடமாடும் இடங்களையெல்லாம் கூர்ந்து பார்த்துப் பகிர்ந்து கொள்பவை என்று – அன்பு செய்வதே அடாத செயல்போலும் எனும் கருத்தில் – விமர்சனக் குற்றச்சாட்டுகள் எழுந்தது உண்டு. ஆனால் பலரும் அறியாத அவரது இன்னொரு ஆளுமை, அன்பாக இருப்பதே அவரது இயல்பு என்பது. அதன் வெளிப்பாடுகளில் ஒன்றுதான் கடிதங்களின் மூலமும் நேரிலும் அவர் பயன்கருதாது தரும் ஊக்கம், உற்சாகம்.
1975-ல் இருந்து துவங்குகிறது எனக்கும் அவருக்குமான கடிதப் பரிமாற்றம். நீண்ட இருபது ஆண்டுகள். பின்பு அலுவல் காரணமாக, பிற தகவல் தொடர்பு சாதனங்கள் காரணமாக, கடிதம் எழுதுவது என்பது பொதுவாகச் சாத்தியமற்றுப் போனாலும் அவரது ஊக்கம் தரும் ஆளுமையை இன்றும் உணர்பவன் நான். இல்லையென்றால் முப்ப தாண்டுகளாக ஒன்பது வசிப்பிடங்கள் மாற்றியவன், அலாவுதீன் அற்புத விளக்கைப்போல எங்கும் வெளியாகாத கடிதக் கத்தையை எதற்குச் சுமந்து திரிய வேண்டும்?
தீபத்’தில் வெளியான இரண்டு கதைகளைப் படித்துவிட்டு 1975 நவம்பரில் அவர் எழுதிய இரண்டு கடிதங்களின் ஊக்கத்தால்தான் நான் நாவலாசிரியன் ஆனேன் என்பது சம்பிரதாயமான கூற்று அல்ல.
‘இரண்டு கதைகளைப் படித்த அளவிலேயே ஒரு நாவலாசிரியனுக்குரிய வியக்தி உங்களிடம் இருப்பதை எனக்கு உணர முடிகிறது. உடனடியாக ஒருநாவல் எழுதுங்கள். உங்களுக்குச்சுலபமாக அது முடியும்’ என்பது முதல் கடிதமானால், அதே மாதம் வந்த இரண்டாவது கடிதம், ‘நாவல் எழுதுவது மார்கழி மாதம் படித்துறையில் நிற்கிறமாதிரி. தண்ணீரில் இறங்குகிற வரைதான் குளிர் இறங்கின பிறகுதான்சுகம். எழுதுவது என்பது எப்போதும் நேரலாம். இதற்குள்ளே கூட நீங்கள் ஒரு முப்பது பக்கங்கள் எழுதி இருக்கலாம். கதவு திறப்பதுமாதிரி, ஒரு ஆரம்பத்தின் புள்ளியில் வெளிச்சப்படப் போகிற பேனாவின் குணங்கள் உங்களின் சிறுகதைகளில் தெரிகிறது என்பதால் சொல்கிறேன். நாவல் எழுதுங்கள்.’
இந்தக் கட்டுரைக்காக, கணக்கற்றதடவைகளில் ஒன்றாக, திரும்ப அவரது கடிதங்களை வாசிக்க நேரும்போது, எனக்குத் தோன்றுவது, 1998ல் ‘எட்டுத் திக்கும் மதயானை’க்குப் பிறகு நாவல் எழுதாத நான், உடனடியாக எனது’Magnum Opus ஐ எழுத ஆரம்பிக்க வேண்டும் என்பது.
அப்போதெல்லாம் நான் வண்ணதாசனைச்சந்தித்ததுகூட இல்லை. பிற்பாடு தெரிந்துகொண்டேன், அவர் என்னைவிட ஒன்றரை ஆண்டுகளே மூத்தவர் என்பதை. அவர்காலகட்டத்தில், எனக்கு முன்பே, எழுதிக் கொண்டிருந்த வசமான கைகள் நாலைந்து உண்டு. அவர்கள் எவருடனும் ஏற்பட்டிராத அன்னியோன்யம் எனக்கு வண்ணதாசனிடம் ஏற்பட்டது. அதே கடிதத்தின் இறுதியில் எனக்கு அவர் எழுதியது.
‘நான் நாஞ்சில் நாட்டான் இல்லை. பாண்டிக்காரன். உங்களின் சிறுகதைகளில் மனதுடன் ஒட்டுகிற ஒரு தூண்டுதல் இருந்ததால் உங்களுக்கு எழுதினேன். பூவைப் பார்க்கிறதுக்கு ஒரு சந்தோஷம். அது அரும்பைப் பார்ப்பதிலும் இருக்கும். துளிரைப் பார்ப்பதிலும் இருக்கும். இன்னும் புறத்தோல்கள் சுருங்கி ஒட்டிக்கொண்டிருக்கிற விதையிலை உதிராத முளைகளைப் பார்த்தாலும் இருக்கும். நீங்கள் பூக்கப் போகிற ஜாதி. உங்களுடைய வீரியம் இந்த இரண்டு முதல் இலைகளிலேயே தெரிகிறது.’
ஆறுமாதம் பொறுத்து மற்றுமொரு கடிதம்.
‘உங்களுடைய நாவல் அருமையானதாகவே இருக்கும். உங்கள் பேனா வாகே நாவல் எழுதுவதுக்காக கூர்மையாக்கப்பட்ட சுபாவமுடையதுதான். அகலமான கான்வாஸ்களை எடுத்துக்கொண்டு சித்திரம் வரைகிற முறை உங்களுடையது’ என்று.
இது என்னுடைய அனுபவம். சுய தம்பட்டத்துக்காக இவற்றை நான் சொல்லிச் செல்லவில்லை. என்னையொத்த அனுபவம் வேறு பலருக்கும் வாய்த்திருக்கலாம். கலாப்ரியா நிறையச் சொல்லலாம்.
சமகால எழுத்தாளர்களில் மற்றெவரும் இத்தனை உற்சாகத்தோடு சக எழுத்தாளர்களுக்குத் தெம்பு ஏற்றி இருப்பார்களா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
1985க்குப் பிறகு வெறுமையும் விரக்தியுமாக, எழுதுவதை ஏகதேசமாக மறந்துபோனேன். ‘மிதவை’தான் எனது கடைசி நாவலாகப் போயிருக்க வேண்டும். 1989ன் மத்தியில் நான் கோவைக்கு மாற்றலாகி வந்தேன். அப்போது வண்ணதாசன் தூத்துக்குடியில் இருந்தார். எனக்கு அங்கு அலுவல் இருந்தது. அவரை வீடு தேடிப்போய் முன்னிரவில் சந்தித்தேன். எழுதாமல் இருப்பதற்காகக் கடிந்துகொண்டார். அதற்கு முன்பும் பின்பும் அது போல் அவர் என்னிடம் கடுமையான வார்த்தைகளில் பேசியதில்லை. கோணங்கிக்கும் அத்தகைய அனுபவம் வாய்த்ததாகப் பிற்பாடு தெரியவந்தது. எனக்கானால் நான்கு நாவல்களும் இரண்டு சிறுகதைத் தொகுதிகளும் போதாதா என் பெயரைக் குறையக் காலத்துக்கு சொல்லி நிற்க என்றொரு கைத்த வேதாந்தம்.
ஆனால் ஏற்கனவே சில மாதங்கள் முன்பு அவர் எழுதி இருந்தது மறுபடியும் நினைவு வந்தது ‘மிகவும் அற்புதமாக இயங்கி வந்த உங்களின் இலக்கிய முகத்தை கொண்டிருக்கிற நம் ரசனையின் பசுமையை, நசுக்கூட்டான் அரித்த கொறுவாயுடன் பச்சையாக நிற்கிற செடிகொடி மாதிரி, நாம்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். நாஞ்சில் நாட்டின் வாழ்க்கையை உங்களைப் போல அடையாளம்காட்டியவர்.சமீபத்தில் யாரும் இல்லை. உங்களுடைய மனிதர்கள் அசலாகத் திரண்டு நடமாடியதைப் போல, வேறு யாரும் தெற்கே இருந்து நடமாட இல்லை. மறுபடியும் உங்கள் எழுத்துக்களைப் பார்க்கிற ஆவலுடன் இருக்கிறேன்.’
மறுபடியும் 1990ல் தூத்துக்குடிக்கு ‘உப்பு’ விற்கப்போனபோது அவருக்குச் சந்தோஷமாக இருந்தது. கடுமையான மூளைக்காய்ச்சல் வந்து, உயிருக்குப் போராடி, தப்பிப் பிழைத்து, பின்விளைவாக ஆஸ்த்துமாவில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த நேரத்திலும் புதிய படைப்புக்கள் மீது அவருக்கிருந்த அக்கறை என்னை நெகிழ்வுறச் செய்தது.
கோணங்கியின் ‘மதினிமார் கதை’ வெளியான நேரம், புதுமைப் பித்தன் எட்டியிருந்த வரைகளையெல்லாம் கோணங்கியும் ஜெயமோகனும் தாண்டிப் போய்க்கொண்டிருக்கிறார்கள் எனும் பெருமிதம் எனக்குள் விளைந்தகாலை. சிறுகதையில் அவர்கள் சாதனை எனக்குப் பொறாமை ஏற்படுத்துகிறது எனும் ரீதியில் எழுதி இருந்தேன் ஒரு கடிதத்தில். வண்ணதாசன் எனக்கு எழுதிய பதில் – ‘நான் என் எழுத்தைப் பிறவற்றுடன் ஒப்பிடுவதில்லை. அந்த அர்த்தத்தை மீறிய ஒரு அனுபவம்… பசுவய்யா சொல்கிறது போல, ‘பின்வாங்கல் அல்ல பதுங்கல்’ அது. சில நல்ல விஷயங்களைப் படிக்கையிலும், சில நல்ல அனுபவங்களை அடைகையிலும் இதுநான் எழுதியது என்று நினைத்துக் கொள்வதுண்டு, அது பிறர் எழுதியது என்றாலும். நான் நிமிர்ந்து பார்க்கிற எல்லா இடங்களும் என்னை அதைரியப்படுத்துவதில்லை. ஆனால் நான் ஒரளவு உயரத்தில் நிற்கிறேன் என்ற நினைப்பை அழிக்கிறது அது.’
மேலும், நேர்ப் பேச்சின்போது ஒரு சந்தர்ப்பத்தில் அவர் எனக்குச் சொன்னது, நாம் மட்டும் நன்றாக எழுதினால் போதாது; அதைவிட முக்கியமான பொறுப்பு, புதிதாக எழுதவரும் இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பது. வேணுகோபாலையும் கண்மணிகுண சேகரனையும் அழகிய பெரியவனையும் கோபாலகிருஷ்ணனையும் உமா மகேஸ்வரியையும் காணும்போது, தன்னையறியாமல் எனக்குள் ஒரு பாசம் பெருக்கெடுத்து வரும் என்கிற நம்பிக்கை எனக்குண்டு.
 
எப்போது சோர்வு ஏற்பட்டாலும், வண்ணதாசன் எழுதிய கடிதங்களை எடுத்து வாசிப்பேன். எனக்கது காருகுறிச்சி நாதசுரம் கேட்பதைப்போல. மிகுந்த தெம்பாக இருக்கும். உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும் எனும் பரபரப்பு ஏற்படும்.
 
‘இப்போது தோன்றுவதும், நான் யாரிடத்தோகூடச் சொன்னதும், மங்களுடைய எழுத்து ‘சதுரங்கக் குதிரை’யில் urbanised ஆகிவிட்டது என்பதுதான். ஆனாலும் மிக நுட்பமான இடங்களும், ஒரு இந்திய எழுத்தின் சாயலும் ததும்ப இருந்தது அது. நான் பைத்தியக்காரனைப் போல, உங்களை வெள்ளமடத்திலும் தாழக்குடியிலும் தேடி அலைந்து கொண்டிருப்பேன், பூதப்பாண்டியிலிருந்து வந்து எனக்கு ரெண்டு கிளாஸ் கீழே படித்த கிருஷ்ணபிள்ளையை இன்னும் தேடிக் கொண்டிருப்பதைப் போல.
சுந்தர ராமசாமிக்குள்ளோ, நீல. பத்மநாபனுக்குள்ளோ, கிருஷ்ணன் நம்பிக்குள்ளோ அடைபடாது, சுயம்புவாக மேலெழுந்து வந்த எழுத்து உங்களுடையது. சில சில சமயம் பளிர் பளிர் என்று புதுமைப்பித்தன்மாதிரி வீச்சு வீசும்போது பயமாக அல்ல, சந்தோஷமாக இருக்கும். ஜெயமோகன்கூட இது போன்ற ஜீவன் நிரம்பிய பகுதிகளைச் சிறுகதைகளில் அடையாளம் காட்டுகிறார். என்னை மாதிரி குறிப்பிட்ட ஒரே இடத்தில் நின்று போகாமல் சதா படம் விரித்துத் தலை திருப்புகிற நாகம் போல விறைப்பாகப் பின்சாய்ந்து, சூரியன் பார்க்கிற எழுத்துக்கள் பெருகும் காலம் சந்தோஷமானதுதானே!’
 
திறனாய்வுப் போக்கில் சிலசமயம் தோன்றும், எனது கிட்டத்தட்ட முப்பதாண்டுகால வண்ணதாசன் வாசிப்பில் ஒரு குறிப்பிட்ட பாணிக்குள் நின்றுகொண்டு அவர் கால்பறிக்க முடியாமல் அல்லது கால்பதிக்கப் பிரியப்படாமல் எழுதுகிறார் என்று. யோசித்துப் பார்க்கும்போது, பெரும்பாலும் எல்லோரும் அவரவர் பாணியால் சிறைப்பட்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. அசோகமித்திரன், சா.கந்தசாமி, ஆ. மாதவன், ஜானகிராமன், லா.ச.ரா என்று எவரும் விலக்கில்லை போலும். மனம் சென்று தோயும் புள்ளியிலிருந்து நகர மனம் வராதபோது, எத்தனை சொன்னாலும் தீராதபோது வேறு இடத்துக்கு நகர்வது எவ்விதம் சாத்தியம் என்றும் தோன்றுகிறது.
 
தான் ஆடும் பீடம் அவருக்கு நன்கு தெரிந்தே இருந்தது. ‘வெற்றி கரமான உரையாடல்களைச்சாதிக்கமுடிகிற பேனா உங்களுடையது. என் பாத்திரங்கள் பேச ஆரம்பிக்கும்போது நான் குப்புற விழுந்திருப்பது பலதடவை நேர்ந்திருக்கிறது. ‘புளிய மரத்தின் கதை’ ஆசான் பேசின பேச்சு எவ்வளவு உண்மையானதோ, அவ்வளவு தூரம் ஆட்கொள்ளும் உண்மையுடன் ‘ஜே. ஜே. சில குறிப்புகளின்’ டயரிக் குறிப்புகள் அமைந்திருக்கிறதை உணர இன்பமாக இருக்கிறது’ என்பது அவர் வாக்குமூலம்.
மேலும் சிலர் சொல்கிறார்கள், பல்லாண்டுகளுக்குப் பிறகு தனது கடிதங்கள் அவற்றின் ரசனைக்காகத் தொகுக்கப்படும் எனும் திட்டமிடலுடன், முன் எச்சரிக்கையுடன் – முப்பது ஆண்டுகள் சென்று நாஞ்சில் நாடன் கட்டுரை எழுதுவான் எனும் எதிர்ப்பார்ப்புடன் – அவர் செயல் பட்டிருக்கிறார் என்று.
பனைமரம் அறுபதடி உயரமாவது வளர்வது முளையிலேயே அதன் இலக்கைத்திட்டமிட்டதால் அல்ல. அதன் இயல்பு அது. இயல்பை வெளியும் புறமும் கற்பிக்கவியலாது.
பிடியானையை எதிர்காலத்தில் புணரும் கருத்தில் சிறுவயது முதலே தன் குறிக்கு எண்ணெய் தடவி நீவி நீளம் செய்ய யாரும் முயல்வதில்லை.
பத்தாண்டுகளுக்கு முன்பே எங்களுக்குள் கடிதத் தொடர்பு நின்று போயிற்று. எழுத எதுவும் இல்லாததனால் அல்ல. மனத்தாங்கல் அல்ல. சோர்வினால் அல்ல. தற்செயலாக நின்று போயிற்று. இனித் தொடராது என்றும் இல்லை. உடல்நிலை உற்சாகமூட்டுவதாக இல்லாதபோதும் அவர் எனக்கு 1994ல் எழுதிய கடிதம் இன்னும் பதில் கோரி நிற்கிறது.
‘எனக்கு யாராச்சும் அந்த ‘முள்ளெலித்தைலத்’தை வாங்கித்தந்தால் நன்றாக இருக்கும். இப்போதைக்கு வாகாக ஆபீசுக்கு பையில் போட்டுக் கொண்டு போகிற செளகரியத்துடன் அஸ்தானில் இன்ஹேலர் தான் இருக்கிறது. சொல்லி வச்சு அலாரம் அடிச்சது மாதிரி ஆளை எழுப்புகிற இந்தத் திணறலின் புண்ணியத்தில் நேற்று ராத்திரி படித்தது போக மீதி ஒன்பது கதைகளையும் இன்று அதிகாலை 4.30 யிலிருந்து படித்து இப்போதுதான் முடித்தேன்.’
இன்றைய முன்னணி எழுத்தாளர்கள் பலருக்கும் வண்ணதாசனின் இந்த உற்சாசப்படுத்துதலின் பங்கு கிடைத்திருக்கக்கூடும்.நான் முன் கூட்டிப் பதிவு செய்கிறேன், அவ்வளவுதான்.
நெகிழ்வு நிறைந்த இந்தக் கணத்தில் எனக்குத் தோன்றுவது, நல்லதோர் நாவல் எழுதி வண்ணதாசனுக்கு காணிக்கையாக்க வேண்டும்.
– ரசனை, அக்டொபர் 2004.
(நன்றி: தட்டச்சு உதவி:ஆனந்த் குமார்)

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to வண்ணதாசனின் “அன்பெனும் பிடி”

 1. J. Daniel சொல்கிறார்:

  வணக்கம் அய்யா.
  சக படைப்பாளிக்கு படைப்பூக்கமும் படைப்பாக்கமும் தருகின்ற தாராள மனசு உங்கள் வயதொத்த படைப்பாளிகளுக்கு இருந்தது.இருக்கின்றது. தற்போது அப்படியான மனங்கள் நிறைந்த படைபாளிகள் குறைவென்றே நினைக்கிறேன். அந்த காலத்தில் ஒரு ரூபாய்க்கு அரிசிவாங்கினேன். இந்த காலத்தில் முடியுமா என்பது போலதான் இன்றய வளரும் படைப்பாளிகளை ஒப்பிடமுடிகிறது. என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள், ஆனால் இப்போதுதான் எழுதத்தொடங்குகிறேன்.

 2. a.velupillai சொல்கிறார்:

  யாதும் ஊரே …….!யாவரும் கேளீர்….!எழுத்துலக,,,கணியன்,, வண்ணதாசனை,,,,,வர்ணிக்கவில்லை,,,வாசிக்க,ஆரம்பிக்கிறேன்.!

 3. harikarthikeyanramasamy சொல்கிறார்:

  நன்றி திரு. நாஞ்சில்நாடன் ,சமீபத்தில் கோவையில் நடந்த விஷ்ணுபுரம் சந்திப்பில் அவருடைய கதைகளின் உருவாக்கம்,களம் குறித்து பகிர்ந்துகொண்டார் வண்ணதாசனிடம் நேரடியாக பேசும் வாய்ப்பு கிடைத்தது ,அவர் புத்தகத்தில் கையெழுத்து இடும் புகைப்படமும் எடுத்துக்கொண்டேன்,மிகவும் சந்தோசமான தருணமாக இருந்தது, அவருடைய “நிலை” கதையை படித்தாலேபோதும், வண்ணதாசனை தெரிந்துகொள்ளலாம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s