தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!

பாரதியின் அந்தப் பாடலை யதுகுல காம்போதி ராகத்தில் பாடுவார்கள். எட்டே வரிகள்தான் பாடலுக்கு.

“காக்கைச் சிறகினிலே நந்தலாலா – நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா!”

என்பன முதலிரண்டு வரிகள். இறுதி இரண்டு வரிகள் இறையனுபவத்தின் உன்மத்த நிலையைச் சுட்டிக்காட்டுவது-

“தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா – நின்னைத்
தீண்டும் இன்பம் தோன்றுதையே நந்தலாலா!”

என்பன. பாரதிக்கு இவை சாத்தியப்பட்டிருக்கின்றன.

 “நச்சை வாயிலே கொணர்ந்து நண்பர் ஊட்டு போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!”

என்பன அத்தனை இலகுவான வரிகள் அல்ல!

இஃதோர் ஆன்மீகக் கட்டுரை இல்லை என்பதாலும், அதற்கான முற்பிறப்பின் வரமும் முன்னோர் செய் தவமும் அருளப் பெறாததாலும், கவிதை நயத்துக்காகவே மேற்சொன்ன பாடல் வரிகளை எடுத்தாண்டேன். உ.வே.சாமிநாதைய்யர் திருவண்ணாமலை இரமண மகரிஷியிடம் கூறியதைப் போல தமிழனுபவமே நமக்கும் இறையனுபவம்!

காக்கையின் சிறகின் நிறத்தில் நந்தலாலாவின் நிறத்தைக் காண்கிறான் பாரதி. அது அண்டங்காக்கை. கருங்காகம், ஊர்க்காகம் என்றாலும் இறகின் நிறம் கருப்புதானே! கார்மேகத்தில் அவன் நிறம் கண்டு கார்மேக வண்ணன், கருமுகில் வண்ணன், மழை வண்ணன், நீல மேகச் சியாமள வண்ணன் என்றனர். அடர்ந்து செறிந்த கரிய மயிர்க்கற்றையின் வண்ணத்தால் ஈர்க்கப்பட்டு கார்குழல் வண்ணன் என்றனர். “மையோ, மரகதமோ, மழை முகிலோ, மறிகடலோ!” என்பார் கம்பர். தொண்டரடிப் பொடி ஆழ்வார், “பச்சை மாமலை போல் மேனி! பவளவாய், கமலச் செங்கண்” என்றார். கரிய செம்மல், அஞ்சன வண்ணன் என்பார் மேலும் கம்பர். அஞ்சனம் என்றாலும் மைதான். எல்லாரும் இந்த வண்ணங்களில் குறிப்பிடுவதையே காக்கைச் சிறகின் நிறத்துக்கு உவமை சொல்கிறார் பாரதி. காக்கை சங்க இலக்கியங்களில் அகநானூற்றிலும், ஐங்குறுநூறிலும், குறுந்தொகையிலும், நற்றிணையிலும், பரிபாடலிலும், புறநானூற்றிலும், பதிற்றுப் பத்திலும் பேசப்பட்ட பறவை.

எனக்குத் தோன்றுகிறது கண்ணனின் நிறத்துக்குக் காக்கையின் நிறத்தை உவமை சொன்ன புலவன் பாரதியாகவே இருக்க வேண்டும். நம்முடன் குடும்ப உறுப்பினர் போலக் கூடிக் கிடப்பதாலேயே காகம் மலிவான பறவையாக ஆகி விடாதல்லவா! சீதையின் முலையைக் கொத்த வந்த வீரமும் துணிவும் காக்காசுரனுக்குத்தான் இருந்தது என்றால் அது இராவணனின் மறம் அல்லவா!

பாரதி நந்தலாலாவின் நிறத்தைக் காக்கையின் கரிய நிறத்துக்கு உவமை சொல்கிறார். கருடனையும், செண்பகத்தையும், குயிலையும், மயிலையும், மைனாவையும், வால் நீண்ட கருங்குருவியையும், கிள்ளையையும் அவன் பேசவில்லை இந்த சந்தர்ப்பத்தில்.

பாரதியின் நந்தலாலாவைப் பரிச்சயம் கொண்டோம். நந்தன் எனும் சொல் சமற்கிருதம் என்கின்றன அகராதிகள். ஒலி அமைப்பில், எழுத்து அமைதியில் தமிழ்ச் சொல்லே போல ஒலிக்கும் சொல் அது. நந்தன் எனும் சொல்லின் பொருள் – கண்ணன், நந்த கோபாலன், இடையன்.

பாடலிபுத்திரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்ட அரச வம்சத்தினர் எனும் குறிப்பு தரப்பட்டுள்ளது. நந்தன் என்றால் மகன், புத்திரன் எனும் பொருள் தருகிறது இலக்கண அகராதி. நந்தன் எனும் சொல்லுக்குப் புத்திரன், கண்ணனின் பிதா என்கிறது இலக்கியச் சொல்லகராதி.

திரு நாளைப் போவார் நாயனாரின் இயற்பெயர் நந்தன். எளிய பாரதப் பிரதமராக இருந்த குல்ஜாரிலால் நந்தா என்பவரின் பெயர் யாருக்காவது நினைவிருக்குமா? திருநாளைப் போவாரின் வேறு நிலைப்பாட்டுப் பெயரே நந்தனார் என்பது. இசை முரசு எம். எம். தண்டபாணி தேசிகர் நடித்த ‘நந்தனார்’ எனும் திரைப்படத்தின் பாடல் கேட்டுப் பயனடையலாம்.

அக நானூற்றில் மாமூலனார் பாடலில் நந்தன் எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. நந்தன் வட நாட்டில் இருந்து படை கொண்டு தென்னாட்டுக்கு வந்த மௌரிய மன்னன் என்று உரை சொல்கிறார்கள். அகநானூற்றில் மற்றொரு பாடல் மாமூலனார் பாடியது, ‘பல் புகழ் நிறைந்த வெல் போர் நந்தர்’ என்கிறது. அந்தப் பாடலிலேயே பாடலி எனும் சொல் பாடலிபுரம் எனும் பொருளில் குறிக்கப்பட்டுள்ளது.

இப்படித்தான் ஈராயிரம் ஆண்டுகளுக்கும் முந்தைய வரலாற்றுக் குறிப்புகள் இலக்கியங்கள் மூலமாகவும் இன்று சான்றுரைக்கின்றன. காழ்ப்பற்ற, வஞ்சமும் சூதுமற்ற, வெளிப்படையான, தமிழ்ப்புலவன் வழி நெடு வரலாற்றை, மரபை, புராணங்களை விதைத்துச் செல்கிறான். அவனது அனுபவமும், ஞானமும், தெளிவும், படைப்பு ஆற்றலும் புரிதலும் வியப்பேற்படுத்துகின்றன.

சித்திரையில் பிறக்கும் புத்தாண்டின் வரிசையில் அறுபதனுள், நந்தன என்பது இருபத்தி ஆறாவது. நந்தனன் என்றால் குமரன் என்று பொருள் தருகிறது சூடாமணி நிகண்டு.

நந்தனின் பெண்பால் பெயர் நந்தினி. மகள் என்றும், தெய்வ ஆக் கன்று என்றும் பொருள் தரப்பட்டுள்ளது. ஆக் கன்று என்றால் பசுங்கன்று என்று பொருள். ஆ – பசு, ஆவினம் – பசுவினம், ஆவின் பால் – பசுவின் பால். பால்வள நிறுவனங்கள் எதைக் கலக்கித் தருகின்றன என்பதை நாம் அறிய மாட்டோம். குழந்தைகள் முதல் முதியோர் வரை வாங்கிக் குடிக்கும் பாலிலும் ஊழல் செய்யும் பண்பாடு நம் தேசத்தவர்க்கு. நந்தனோ, நந்தினியோ வந்து காத்தருள்வர் என்ற நம்பிக்கையும் செத்து விட்டது.

நிறுவனங்கள் மூலம் பால் பண்ணை வைத்து மக்களுக்குப் பால் விநியோகம் செய்யும் அமைப்புக்களின் பெயர்கள் – அமுல், மில்மா, நந்தினி, ஆவின்….

சென்ற கிழமையில் குடியிருக்கும் பகுதியில் நடைப் பயிற்சி போனபோது, புகழ் பெற்ற இந்தியப் பால் நிறுவனத்தின் முகவர் கடைக்குள் நுழைந்தேன். அந்த நிறுவனத்தின் மோர் பாக்கெட் கண்ணில் பட்டது. வடநாட்டில் சாஸ் என்றழைக்கும், நாம் வழக்கமாகப் பயன்படுத்தாத மசால் பொடி தூவிய மோர் மணக்க மணக்க இருக்கும். என் கண்ணில் பட்ட மோர் அந்த வகைப்பட்டது. ஆசைப்பட்டு இரண்டு பாக்கெட் வாங்கினேன். ஒரு லிட்டர் பாக்கெட் மோரின் விலை ஐம்பது பணம். வீட்டில் வந்து பார்த்தபோது, தயாரிப்பு மாதம் மார்ச் 2021 என்றிருந்தது. ஆகஸ்ட் மாதம் ஆகி விட்டதே எனும் பதற்றத்தில் பாக்கெட்டைத் திருப்பித் திருப்பிப் பார்த்தபோது ஆறு மாதத்திற்குள் பயன்படுத்துவது சிறப்பு என்ற தகவல் இருந்தது. எல்லாரும் குடித்தாலும், மனதிற்குள் ஒரு முணுமுணுப்பு, ஆறுமாதம் முன்பு கலக்கிய மோரைக் குடிக்கிறோமே என்று! நம்மையே நாம் நொந்து கொள்ளலாம்.

பாற்கடல் கடைந்தபோது வந்த காமதேனுப் பசுவின் மகள் நந்தினி என்பது புராணம். எந்தப் பசு எவர் உடைமை என்பது வேறு சங்கதி. ஆகவே நந்தினி என்ற சொல்லுக்கு தெய்வ ஆக் கன்று என்று பொருள்.

புதல்வி என்று பொருள் தரும் நந்தனை என்றும் ஒரு சொல்லுண்டு. யாழ்ப்பாண அகராதி, நந்தினி என்ற சொல்லுக்கு நந்தனை என்றே பொருள் தருகிறது. நந்தனன் என்றால் குமரன், மகன் என்று பொருள். யாழ்ப்பாணத்து சுன்னாகம் அ. குமாரசாமிப் பிள்ளை 1914 இல் வெளியிட்ட இலக்கியச் சொல்லகராதி, நந்தனன் என்றால் புத்திரன், மகிழ்விப்பவன் எனப் பொருள் தருகிறது.

நந்தன் எனும் பெயரிலேயே சில இசைப்பாடல் நூல்கள் உண்டு. நந்தனார் சரித்திரக் கீர்த்தனை என்று கோபாலகிருஷ்ணையர் 1915 இல் வெளியிட்ட நூலொன்று உளதாக அறிகிறேன். 19ஆம் நூற்றாண்டு நூலாகிய ‘நந்தன் கீர்த்தனை’ எனும் நூல் கோபால கிருஷ்ண பாரதி இயற்றியது. அது நாமறிந்த தகவல். நந்தன் கீர்த்தனை வரலாறு என்றொரு நூலும் இருந்ததாகத் தகவல். தமிழ் இலக்கிய அகராதி, 1953 ஆம் ஆண்டில் ந. சி. கந்தையா பிள்ளை தொகுத்தது, அந்த நூலை ஆக்கியோர் பெயர், வெளியான ஆண்டு போன்ற தகவல்களை அறியத் தரவில்லை.

ஆனால் அவர் 1894 ஆண்டு, ‘நந்த மண்டல சதகம்’ எனும் நூல் பற்றிக் குறிப்பிடுகிறார். நந்தன் எனும் அரசன் மீது பாடப் பெற்றது. ஆசிரியர் பெயர் அறியேம். பிரமபுரி திருவேங்கடம் பிள்ளை அந்த நூலுக்கு உரை எழுதியுள்ளார். எங்காவது நூலகங்களில் தேடினால் கிடைக்கக் கூடும்.

நந்த கோபாலன் குமரன் என்றால் கண்ணன் என்பதறிவோம். ஆண்டாள் அருளிய திருப்பாவை முப்பதின் முதற் பாடல் ‘மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்’ என்று தொடங்கும். இந்த முப்பது பாடல்களையும் எம். எல். வசந்த குமாரி பாடிய பதிவைப் பல முறை கேட்டிருக்கிறேன். முதல் திருப்பாவையின் இரண்டு அடிகள்,

“கூர்வேல் கொடுந்தொழிலன் நந்த கோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்”

என்று வரும்.

நந்த கோபாலன் என்றால் கண்ணன் என்றும், கண்ணனின் வளர்ப்புத் தந்தை என்றும் பொருள் தரப்பட்டுள்ளன. 18-ஆவது திருப்பாவையில் ஆண்டாள்,

“உந்து மதக் களிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்த கோபாலன் மருமகளே! நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலீ! கடை திறவாய்!”

என்று பாடுவாள்.

எதற்கு இவனுக்கு இப்போது நந்தன் பற்றிய சிந்தனையும் தேடலும் என்று எவர்க்கேனும் தோன்றலாம். சொல்வனம் 249 ஆவது இதழில் எனது ‘எதிர்ப் பை!’ எனும் கட்டுரைக்கு எதிர்வினையாக திரு. இலட்சுமி நாராயணன் ஒரு வினா எழுப்பி இருந்தார்.

‘நந்தவனம் என்ற சொல்லின் பொருள் பூக்காடு, பூந்தோட்டம் என்பது சரி! ஆனால் நந்தவனம் எனும் சொல்லை நந்தம்+ வனம் என்று பிரித்தால், நந்தம் என்ற சொல்லின் பொருள் என்ன? நந்தம் எனும் சொல்லுக்கு நந்து, சங்கு, நாரத்தை, சவ்வாது, கஸ்தூரி, காக்கை, பெருமுயற்சி, குபேரனின் பெரு நிதியங்களில் ஒன்று என்பன. நந்தா விளக்கு என்றால் அணையா விளக்கு! நந்துதல் என்றால் மெதுவாகச் செல்லுதல்!’ இது அவரது ஐயம் அல்லது தெளிவு.

நந்தவனம் எனும் சொல் நந்தம்+ வனம் என்று பகுபடுமா அல்லது நந்த+வனம் எனப் பகுபடுமா என்பது அறித்திருப்பேன் எனில் ஓய்வூதியமாக மாதம் 1418 பணம் பெற்றுக் கொண்டிருக்க மாட்டேன் பதினேழு ஆண்டுகளாக!

நந்தவனம் எனும் சொல் இருபெயரொட்டு எனும் பிரிவில் வரும் என்கிறார்கள். எடுத்துக் காட்டு – உபவனம், பூங்கா, உபவாசம் எனும் சொற்கள். கோயில் அல்லது அரண்மனை சார்ந்த பூந்தோட்டம், நந்தவனம் என்று வழங்கப் பெற்றது என்றும் சொன்னார்கள்.

பழைய ராஜா-ராணி சினிமாக்களில் கையில் பூங்கொத்து வைத்துக் கொண்டு காமம் பெருக்கும் பாடல்கள் பாடி, வரைவின் மகளோ என எண்ணும்படி உடலுறுப்புகளை அசைத்துக் காட்டி நாயகனும் நாயகியும் காதல் செய்த இடம் நந்தவனம்.

நந்தவனம் என்றால் பூந்தோட்டம் என்றும், அஃதோர் வட சொல்லின் தமிழ்ப் பிறப்பென்றும் கூறுகின்றன அகராதிகள். நந்தவனம் எனும் சொல் பத்துப்பாட்டு, எட்டுத் தொகை நூல்களில் இல்லை. திருக்குறளில் இல்லை, நாலடியாரில் இல்லை, திருவாசகத்தில் இல்லை.

நந்தனம் என்பது மற்றுமோர் சமற்கிருதச் சொல்லின் தமிழ் வடிவம். தற்சமம்- தற்பவம் இலக்கணங்களுக்குள் வரையறுக்கப்பட்டு, வட எழுத்து ஓரீ இ, தமிழில் புழங்குகிறது. பொருள் பூந்தோட்டம், நந்தவனம், மகிழ்ச்சி என்பன. தமிழ் நாட்டின் அரசியல் – அதிகாரம் – தரகு – சினிமா இவற்றின் தலைநகரமான சென்னையில் ஒரு பகுதி நந்தனம் என்று வழங்கப் பெறும். மகிழ்ச்சி! (மகிழ்ச்சி எனுமிந்தச் சொல் பல்லுலக நாயகன், இந்திய அரசால் பத்ம விபூஷன் விருதளித்துச் சிறப்புச் செய்யப்பட்ட நடிகர், பஞ்ச் டயலாக்காகப் பயன்படுத்திய சொல்.)

நந்தனம் எனும் சொல் வேறு பொருள்களில் வழங்கப் பெறும் தமிழ்ச் சொல்லுமாம்! நந்தனம் என்றால் நந்து, நத்தை என்கிறது சங்க அகராதி. தவளை என்கிறது யாழ்ப்பாண அகராதி. நண்பர் எதிர்வினையில் குறிப்பிட்டது போல, நந்தனம் என்றால் நாரத்தையும் ஆகும்.

நந்தனவனம் என்றொரு சொல்லும் கிடைக்கிறது. வடசொல் பிறப்பு. பொருள் தேவர்கோன் அதாவது இந்திரனது பூங்காவனம் அல்லது பூந்தோட்டம். சோலை என்று பொருள் சொல்லும் பிங்கல நிகண்டு, 

நந்தாவனம் என்ற சொல் ஒன்றும் கண்டேன். பொருள் நந்தவனமேதான். ‘நறுமலர் பொய்கையும் நந்தாவனமும்’ என்று பெருங்கதையின் பாடல்வரி மேற்கோளாகத் தரப்பட்டுள்ளது.

நந்தனுடைய வனம் எனவே நந்தவனம் என்றும் பொருள் சொல்கின்றனர். நந்தன் யாரென முன்பே பார்த்தோம். பிருந்தாவனம் என்றுமோர் சொல்லுண்டு. ‘பிருந்தாவனமும் நந்தகுமாரனும்’ என்பது அந்த காலத்தில் புகழ் பெற்றதோர் சினிமாப்பாட்டு. பிருந்தம் என்ற சொல்லுக்குத் துழாய் – துளசி என்று பொருள். பிருந்தா என நாமம் தரித்தவரின் பெயர்ப்பொருள் – துழாயம்மை, துளசியம்மை. பிருந்தை என்றாலும் துழாய்தான் பொருள். மற்றொரு பொருள் நெருஞ்சி. எனவே பிருந்தாவனம் என்றால் துழாய்க்காடு, துளசிக்காடு என்று கொள்ளலாம் – நெருஞ்சிக்காடு என்பதைத் தவிர்த்து விடலாம்.

சில தாவரங்களின் பெயர் நந்த என்று தொடங்குகிறது.

நந்தகாரி    – சிறுதேக்கு

நந்தமாலம்  – புன்கு  (திவாகர நிகண்டு)

நந்தகி      – திப்பிலி, சிறுதேக்கு  (யாழ்ப்பாண அகராதி)

நந்தாமணி  – வேலிப்பருத்தி

நந்திபத்தரி  – நந்தியாவட்டம்

நந்தியாவர்த்தம் – நந்தியாவட்டம் (திவாகர நிகண்டு)

நந்திவட்டம், நந்தியாவர்த்த தாமன் என்றால் நந்தியாவட்ட மாலை அணிந்தவன் – துரியோதனன் என்கிறது சூடாமணி நிகண்டு.

நந்திவட்டம்    – நந்தியாவட்டம் – ‘நந்திவட்டத்தொடு கொன்றை வளாவிய நம்பனையே!’ – தேவாரம்

நந்தி எனும் சொல்லுக்கு வழங்கப்பெறும் பத்து பொருள்களில் ஒன்று நந்தியாவட்டம். கபிலர் இயற்றிய குறிஞ்சிப்பாட்டு,

“வஞ்சி, பித்திகம், சிந்துவாரம்
தும்பை, துழாய், சுடர்பூந்தோன்றி
நந்தி, நறவம், நறும் புன்னாகம்
பாரம், பீரம், பைங்குருக்கத்தி ‘

எனும் வரிகளில் குறிப்பிடப்படும் நந்தி எனும்சொல்லுக்கு நந்தியாவட்டம் என்றே உரை எழுதுகிறர்கள். குறிஞ்சிப்பாட்டில் பாடப்பெற்றுள்ள மலர்களை மனப்பாடம் செய்து மேடை தோறும் சொல்லிக் கரவொலி வாங்கி அமைச்சரான ஆட்கள் இருந்தனர்.

நந்தி என்றால் மதகரி வேம்பு என்றும் நன்றாக விளையாத பூசணிக்காய் என்றும் பொருள் தரப்பட்டுள்ளன. சாம்பல் பூசணிக்காயை மலையாளம் நீற்றுப் பூசணி என்னும். அதன் இன்னொரு பெயர் நந்திப் பூசணி. பரங்கிக்காயை நாஞ்சில் நாட்டில் பூசணிக்காய் என்பர். கொங்குநாட்டில் அரசாணிக்காய், நாங்கள் இளவன்காய் அல்லது தடியன்காய் என்பதை மலையாளம் மத்தன்காய் என்பதை தமிழ்நாட்டின் பிறபகுதிகளில் பூசணிக்காய் என்பர். அதற்காக நாங்கள் தனிநாடு கோர இயலுமா?

நந்தகம் என்றொரு சொல் கேள்விப்பட்டதுண்டா? வாள் என்று பொருள் தருகிறது யாழ்ப்பாண அகராதி. திருமாலின் வாள் நந்தகம் எனும் பெயரில் வழங்கப் பெற்றுள்ளது. தெய்வங்களின் சங்குகளுக்கு, வில்களுக்குப் பெயர் இருப்பதைப் போன்று, நந்தகம் வாளின் பெயர்.

நந்தகன் என்றுமோர் சொல் உண்டு. பொருள் நந்தகோபன். பூந்தோட்டம் அமைத்தலை நந்தவனம் பிரதிஷ்டை என்று வழங்கியுள்ளனர்.

நந்தாவிளக்கு என்பது யாவரும் அறிந்த சொற்றொடர். கோவில் கருவறையின் அவியா விளக்கு, அணையா விளக்கு, வாடா விளக்கு, தூண்டா விளக்கு. திருத்தக்க தேவரின் சீவகசிந்தாமணி ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்று. அதன் முத்தி இலம்பகப் பாடலொன்று:

செந்தாமரைக்கு செழுநாற்றம் கொடுத்த தேங்கொள்
அந்தாமரையாள கலத்தவன் பாதம்  ஏந்திச் 
சிந்தாமணியின் சரிதம் சிதர்ந்தேன் தெருண்டார்
நந்தாவிளக்குச் சுடர் நன்மணி நாட்டப் பெற்றே’

என்பது. 

சீவகசிந்தாமணியில் 13 இலம்பகங்கள், 3145 பாடல்கள், அவற்றுள் மேற்சொன்ன பாடல் என்பது 3144-வது பாடல்.

சீவகசிந்தாமணியின் முதற்பதிப்பு, நச்சினார்க்கினியர் உரையுடன், உ.வே.சாமிநாதையர் பல சுவடிகளை ஒப்பு நோக்கி, 1887-ம் ஆண்டில் வெளியிட்டார். தமிழ்ப் பல்கலைக்கழகம் 1986-ல் ஒரு பதிப்பு வெளியிட்டது. அதெல்லாம் பொருட்டில்லை நமக்கு. ஆனால் உ.வே.சா வின் முழுப்பெயரை வசதிபோல் திருத்துவோம். சரி உரையைப் பார்ப்போம் – ‘செந்தாமரைக்கு நாற்றம் கொடுத்த அந்தாமரையென்றது, இறைவன் திருவடிகளை. அந்தாமரையை ஆளுகின்ற விரிந்த ஞானத்தை உடையவனென்றது சீவகனை. சிதர்ந்தேன் என்றது பரக்கக் கூறினேனென்றவாறு. அவியாத விளக்கு உள்ளே நின்று எரிகின்ற நன்மணி என்றது, குருக்களை.’

நந்தாவிளக்கு எனும் சொற்றொடரை ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்று ஆண்டுள்ளது என்பதைக் குறிக்கவே இத்தனை அதிகப்பிரசங்கம். ஆனால் தேடிக்கொண்டு போனபோது, பட்டினப்பாலை, நந்தாவிளக்கு எனும் சொற்றொடரை ஆள்வதை அறிந்தேன். கண்ணதாசன் ஒரு கவிதையில் சொல்வார் ‘நம்பிக்கை என்னும் நந்தாவிளக்கு உள்ள வரையில் உலகம் நமக்கு’ என்று. சின்னஞ்சிறுவயதில் வீரநாராயண மங்கலத்தின் தெக்கூரில், வேதக்கோயிலில், ஞாயிறு காலையில் ஒலிபெருக்கியில் கேட்கும் பாடல் –

‘தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும்
தேடுங்கள் கிடைக்கும் என்றார் – ஏசு
தேடுங்கள் கிடைக்கும் என்றார்’

என்பது. ஆயிரம் முறை கேட்டிருப்பேன். சும்மா கதைக்கிறேன் எனக் கருதல் வேண்டா. அந்து வயதில் இருந்து, ஊரில் வாழ்ந்த இருபத்தைந்து வயது வரை இருபதாண்டுகள் எனக் கணக்கில் கொண்டு பாருங்கள். 52 × 20 = 1040 ஞாயிற்றுக்கிழமைகள் வரும் உத்தேசமாக, அன்று கேட்டபாடல் ‘இளமையில் கல்’ எனப் பாரதியை நினைவு படுத்தும். அதுவே நம்பிக்கை என்னும் நந்தாவிளக்கு.

பட்டினப்பாலை பத்துப்பாட்டு நூல்களில் ஒன்று. சோழன் கரிகால் பெருவளத்தானை கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியது. அந்த நூலில்,

நீரின் வந்த நிமிர்ப் பரிப்புரவியும்,
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
குடமலை பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்,
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்”

என்று காவிரிப்பூம்பட்டினம் வந்தடைந்த பல்பொருள் வளங்கள் பேசும் பாடல் அடிகள் இவை. பொருளும் சொன்னால் பாடலின் அருமை அர்ததமாகும் என்பதால் அரங்கின்றி வட்டாடுகிறேன்.

கடல்மார்க்கமாக நிமிர்வும் விரைவும் உடைய குதிரைகள் வந்தன. நிலத்தின் வழி காளைமாட்டு வண்டிகளில் கரிய மிளகு மூடைகள் வந்தன. வடமலையில் தோன்றிய மாணிக்கங்களும் பொன்னும் வந்தன.குடகுமலை பிறந்த சந்தனமும் அகிலும் வந்தன. தென்கடல் கொற்கையில் பிறந்த முத்துக்கள் வந்தன. கிழக்குக் கடலில் இருந்து பவளங்கள் வந்தன. கங்கையாற்று வளத்தால் விளைந்தவையும் காவிரியாற்றுப் பயனும் வந்தன. ஈழத்தின் , கடாரத்தின் பண்டங்கள் வந்தன.

எத்திசையிலும் இருந்து தமிழ்நாட்டுக்குத் திரவியங்கள் வந்தது போலவே, 27 மொழிகளின் 20,000 க்கும் மேற்பட்ட சொற்களும் வந்தன. அவை போற்றப் பெற்றன, புழங்கப் பெற்றன, இதனையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

சரி! நந்தா விளக்குக்கு வருவோம்!

“கொண்டிமகளிர் உன்துறை மூழ்கி
அந்தி மாட்டிய நந்தாவிளக்கின்
மலரணி மெழுக்கும் ஏறிப் பலர் தொழ”

என்பன பட்டினப்பாலையின் பாடல்வரிகள்.

பகை நாட்டவரைப் போரில் வென்று சிறைப்பிடித்து வரப்பட்ட பெண்டிரைக் கொண்டி மகளிர் என்றனர். அவர்கள் திருக்கோயில்களில் பணிசெய்ய விடப்பட்டனர். அவர்கள் நீர் உண்டு கிடக்கும் துறைகளில் நீராடி, மாலைப்பொழுதுகளில் கோயில்களில் அணையாத விளக்குகளை ஏற்றினர். அவை இரவு முழுக்க எரிந்து கொண்டிருந்தன. தரை மெழுகி, மலர் தூவி இடப்பெற்ற அம்பலத்தில் ஏறிப் பலரும் தொழுதனர். இது பாடல் வரிகளுக்குப் பொருள்.

நந்தவனம் எனும் சொல் நந்தனின் வனம் என வடமொழிப் பொருள் சொல்லும்போது நந்துதல் என்றால் வளர்தல் எனத் தமிழ்மொழிப் பொருளில்  நந்தவனம் என்றால் செழித்து வளரும் வனம் என்று பொருள் தருகிறார்கள்.

நந்தம் என்ற சொல்லுக்கு சங்கு என்றும், பெருமகிழ்ச்சி என்று பொருளுரைக்கும் இலக்கியச் சொல்லகராதி. அதனைத் தொகுத்தவர் யாழ்ப்பாணத்து சுன்னாகம் எனும் ஊரினர், அ.குமாரசாமிப் பிள்ளை (1855-1922). இந்த அகராதி முதற்பதிப்பு கண்டது 1914-ல். மீள்பதிப்பை எந்த பல்கலைக் கழகமோ, உலகாய்வு உயராய்வு தமிழாய்வு மையமோ, மொழி வளர்ச்சிக் கழகங்களோ, பண்டார சந்நிதிகளோ செய்யவில்லை. ஆனால் பெரும் கரிசனத்துடன் 2009-ம் ஆண்டு சந்தியா பதிப்பகம் செய்தது. 

நந்துதல் எனும் சொல்லுக்கு இரு எதிர்மறைப் பொருள்கள். நந்துதல் என்றால் கெடுதல், சாதல், அவிதல், மறைதல், நிந்திக்கப்படுதல் என்பது ஒருவகை. நந்துதல் என்றால் வளர்தல், தழைத்தல், விளங்குதல், செருக்குதல், தூண்டுதல் என்பன இரண்டாம் வகை. விளக்கை நந்து என்றால் விளக்கைத் தூண்டு என்று பொருள். எனவே நந்தா விளக்கு என்றால் தூண்டாத விளக்கு என்று பொருள்.

நாலடியாரில் இல்லறவியல் பாடல் ஒன்று

“பெரியவர் கேண்மை பிறைபோல் நாளும்
வரிசை வரிசையா நந்தும்- வரிசையால்
வானூர் மதியம் போல் வைகலும் தேயுமே
தானே சிறியார் தொடர்பு”

என்பது முழுப்பாடல்.

பதுமனார் உரை எழுதினார், “பெரியோர் பிறரொடு கொண்ட நட்பு பிறை போல நாடொறும் முறைமுறையாக வளரும். சிறியார் பிறரோடு கொண்ட நட்பு விசும்பின் கண் செல்லும் மதியம் போல நாடோறும் முறைமுறையாய் ஓர் காரணமும் இன்றித் தானே குறையும்” என்று (காண்க: நாலடியார் உரைவளம், மூலமும் மூன்று பழைய உரைகளும் அடங்கியது. தஞ்சை சரசுவதி மகால் வெளியீடு, 1953.)

காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார்மகனார் நப்பூதனார் பாடிய பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான முல்லைப் பாட்டு, ‘கானம் நந்திய செந்நிலப் பெருவழி’ என்கிறது. சிவந்த நிலமாகிய பெருவழியில் காடுகள் தழைத்துச் செறிந்திருந்தன என்பது பொருள்.

பதிற்றுப் பத்து நூலில் ஏழாம் பத்து பாடியவர் கபிலர். அதிலொரு பாடல் வரி, “நால் வேறு நனந்தலை ஓராங்கு நந்த” என்கிறது. நால்வேறு திசைகளிலும் ஒன்றுபோல விளங்கிப் பெருக என்பது பொருள்.

நந்த என்றால் பொலிவிழக்க எனும் பொருளில் ஐங்குறு நூலும், தழைக்க எனும் பொருளிலும் செழிக்க எனும் பொருளிலும் கலித்தொகையும், பெருக எனும் பொருளில் பரிபாடலும் கையாண்டுள்ளன.

நந்தி எனும் சொல்லைப் பெருகி எனும் பொருளில் அகநானூறும், நிறைவு பெற்று எனும் பொருளில் கலித்தொகையும், மிகுதியாகி எனும் பொருளில் குறிஞ்சிப்பாட்டும், விளங்கி எனும் பொருளில் புறநானூற்றில் கபிலரும் ஆண்டுள்ளனர். நந்திய என்றால் பெருகிய என்ற பொருளில் கலித்தொகையும் பரிபாடலும், செழித்த எனும் பொருளில் பதிற்றுப்பத்தும் பயன்படுத்தியுள்ளன. நந்தியான் என்றல் மகிழ்ந்தான் என்று பொருள் உரைக்கின்றனர் கலித்தொகைப் பயன்பாட்டுக்கு. நந்தின் என்றால் குறைவுபட்டால் எனும் பொருளில் புறநானூறு கையாண்டுள்ளது.

நந்து எனில் சங்கு எனும் பொருளில் அகநானூறும், நத்தை எனும் பொருளில் புறநானூறும் பயன்படுத்தியுள்ளன. செம்மையான சங்கு எனும் பொருளில் பதிற்றுப்பத்து ஆண்டுள்ளது. முல்லைப்பாட்டு “நந்து தொறும்” என்கிறது. அவியும் பொழுதெல்லாம் என்பது பொருள். நந்தும் என்றால் அழியும் என்ற பொருளிலும், சிறந்து விளங்கும் என்ற பொருளிலும் இருவேறு பாடல்களில் புறநானூறு பேசுகிறது. பெருகும் என்ற பொருளில் ஆள்கிறது கலித்தொகை.

நந்துவள் என்றொரு சொல் கிடைக்கிறது நற்றிணையில், பொருள் உயிர்த்து இருப்பவள் என்பதாகும். நந்தல் என்ற சொல்லுக்கும் எதிர்ப்பதப் பொருளாக கேடு என்கிறது சூடாமணி நிகண்டு. கம்பராமாயணத்தில், பாலகாண்டத்தில், கோலங்காண் படலத்தில் சீதை மன்னர் வீற்றிருக்கும் மண்டபம் சேரும் காட்சியைச் சொல்லும் கம்பன், ‘நந்தல் இல் விளக்கம் அன்ன நங்கையும்’ என்பார். அணையாத விளக்குப் போன்ற நங்கையாகிய சீதையும் என்று பொருள்.

நந்தல் எனும் சொல்லுக்கு நிந்தனை என்று பொருள் தரும் யாழ்ப்பாண அகராதி. அதாவது நந்தல் என்றால்  scorn, disdain. எனவே நிந்தனைப்படாத, அணையாத, கேடற்ற விளக்குப் போன்றவள் நங்கை சீதை என்று கம்பன் உணர்த்துவதாகக் கொள்ளலாம்.

நந்தல் எனும் சொல்லுக்கு ஆக்கம் என்ற பொருள் தரப்பட்டுள்ளது. அதாவது increase, prosperity  என்ற பொருள். கலித்தொகையில் முல்லைக்கவி பாடும் சோழன் நல்லுருத்திரன்,

“முத்து உறழ் மணல் எக்கர் அளித்தக்கால், முன் ஆயம்
பத்துருவம் பெற்றவள் மனம் போல நந்தியாள்”

என்கிறார். முத்துப் போன்ற வெண் மணற் பரப்பின் சோலையில் தலைவனுடன் முயங்கியபோது, சூதில் ஈரைந்து தாயம் பெற்றவள் போல மனம் மகிழ்ந்தாள் என்பது பொருள்.

நந்து என்ற சொல்லின் முதற்பொருள் ஆக்கம். சங்கு என்று பொருள் தரும் திவாகர நிகண்டு. நத்தை என்கிறது பிங்கல நிகண்டு. பிங்கலமே, பறவை என்றும் வேறொரு பொருள் சொல்கிறது.

பதினெண்கீழ்கணக்குகளில் ஏழாவது ஆசாரக்கோவை. நூறு பாடல்கள். இய்ற்றியவர் பெருவாயின் முள்ளியார். அதன் 96-வது பாடல்

 “நந்து, எறும்பு, தூக்கணாம்புள், காக்கை என்றிவை போல்
தங்கருமம் நல்ல கடைபிடித்து, தம் கருமம் 
அப்பெற்றியாக முயல்பவர்க்கு ஆசாரம்
எப்பொறியானும் படும்.”

என்று உரைக்கும், நத்தை, எறும்பு, தூக்கணாங்குருவி, காக்கை எனும் இவற்றைப் போல தத்தம் கருமம் நன்றாகக் கடைப்பிடித்து, தமது கருமமே பெற்றியாகக் கருதி முயல்பவர்களுக்கு ஒழுக்கம், நெறி-முறை-வழி என்பன எந்த வகையினேனும் அமையும். இது பாடலின் பொருள்.

ஆசாரம் என்ற சொல்லின் முதற்பொருள் ஒழுக்கம். “அச்சமே கீழ்களது ஆசாரம்” என்பார் திருவள்ளுவர். கீழ்கள் என்று அவர் இனத்தைக் குறிக்ககவில்லை. கீழ்மையான குணம் உடையவர்களைக் குறிக்கிறார். “ஆசாரம் என்பது கல்வி” என்கிறது நான்மணிக்கடிகை. “அறியாத் தேயத்து ஆசாரம் பழியார்” என அறிவுறுத்தும் முதுமொழிக் காஞ்சி.

நந்துருணி என்றொரு சொல்லும் கண்டேன். புறங்கூறுவோன் என்பது பொருள். எங்களூரில் குண்டுணி என்பர். கோள் சொல்பவன், குண்டாமுட்டி சொல்பவன், குறளை சொல்பவன் என்னுமிவரை நந்துருணி எனலாம். “தீக்குறளை சென்றோதோம்” என்றார் ஆண்டாள், திருப்பாவையின் இரண்டாம் பாடலில். தீயதான புறங்கூறல் சொல்ல மாட்டோம் என்பது பொருள். ஆனால் பென்னம்பெரிய முனிவர் ஒருவர் தீக்குறளை என்பதற்கு திருக்குறள் என்று உரை சொன்னார்.

நந்துருணி என்றால் மதியீனன், அற்பன் என்றும் பொருள்.

நந்தை எனும் சொல்லுக்குப் பொருள் – 1. கலப்பையும், நுகமும் தொடுக்கும் கயிறு. 2. இலைகளற்ற ஒட்டுண்ணித் தாவரம். 3. கொற்றான் (மலையாளம்). 4. தேற்றா எனும் மரம். கலங்கிய நீரைத் தெளிய வைக்க செட்டி நாட்டில் தேற்றாங்கொட்டை போடுவார்கள். வழக்கில் அதனைத் தேத்தாங்கொட்டை என்பர்.

நந்தை என்பது வடமொழிச் சொல்லும் ஆகும். பொருள் –

1, பிரதமை, சஷ்டி, ஏகாதசி என்னும் திதிகள் (பிங்கல நிகண்டு)

2. கபிலை நிறப்பசு          

3. அருகக் கடவுளது சமவச் சரணத்தின் கீழ்திசையிலுள்ள தடாகம்.

நந்தையைத் தொடர்ந்து நந்திக்கும் போகலாம். வாய்க்கும்போது தனிக் கட்டுரையாக எழுத முயல்வோம்.

ஆக, நந்தவனம் என்றால் இருவகையான பொருள் கொள்ளலாம். கோயில் பக்கமுள்ள வனம் போன்று செழித்த பூந்தோட்டம். கோயில் என்றால் அது இறைவன் உறையும் இடம், மன்னர் வாழும் இடம். இரண்டாவது பொருள் நந்தனின் வனம்.

இன்று மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என அரசு அலுவலங்களால் பேணிப் பராமரிக்கப் படுவதாகச் செலவெழுதப்படும் புதரும் குப்பையும் மண்டிய பூங்கா எனப் பெயரிய இடங்களையும் நந்தவனம் என்று சொல்லலாம்.

வீரநாராயணமங்கலம் ஊரின் வடபக்கம் தேரேகால் தாண்டி இருக்கும் வயற்காட்டை நாங்கள் வடபத்து என்போம். வடக்குப் பத்தில் நாங்கள் பாட்டம் பயிர் செய்த வயலின் பெயர் நந்தவனத்தடி. வழக்கில் நந்தானத்தடி என்போம். தேரடி, கிணற்றடி என்பது போல நந்தவனத்தடி. ஒரு காலத்தில் அந்த வயலைத் தொட்டு நந்தவனம் இருந்திருக்கலாம். ஏனெனில் அந்த வயலுக்கு இரண்டு வயல்கள் வடக்கே சிறியதோர் பூவத்தான் கோவில் இன்றும் நிற்கிறது.

பாடல் ஒன்றுடன் இந்தக் கட்டுரையை நிறைவு செய்யலாம்!

“நந்தவனத்தில் ஓர் ஆண்டி அவன்

               நாலாறு மாதமாய் குயவனை வேண்டி – கொண்டு

வந்தான் ஒரு தோண்டி – அதைக்

               கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி!”

என்பது பாடல்.

ஆமாம்! நாமும் நந்தவனத்து ஆண்டியைப் போல, பல காலம் தவம் செய்து பெற்ற மொழியை, மரபை, இசையை, பண்பாட்டை, அறங்களை, ஒழுக்கத்தை, நெறிகளை, நீதியை, கலைகளைக் கூத்தாடிக் கூத்தாடி, போட்டு உடைத்துக் கொண்டிருக்கிறோம்!

தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!!
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!!!

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

கை இரண்டு போதாது காண்!

This gallery contains 8 photos.

More Galleries | பின்னூட்டமொன்றை இடுக

வியர்வையும் கூலியும்

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

நெஞ்சோடு கிளர்த்தல்

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் “சிவனணைந்த பெருமாளின் சிக்கல்கள்”

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் சிறுகதை “வந்தான்,வருவான்,வாராநின்றான்.ஒலி வடிவம், காணொளி: சரஸ்வதி தியாகராஜன்

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

உழவாரப் படையாளி | எழுத்தாளர் நாஞ்சில் நாடன் | சிறுகதை | வாசிப்பவர் மதுமிதா

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

பூனைக்கண்ணன் கடத்திய அம்மன்- ஆசிரியர்: நாஞ்சில்நாடன்

நாஞ்சில்நாடன் அவர்கள் எழுதி ஆனந்தவிகடன் இதழில் வெளி வந்த சிறுகதை: பூனைக்கண்ணன் கடத்திய அம்மன்

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

அரூ – இடமோ வலமோ – நாஞ்சில் நாடன்

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

ஆன்மாவும் புறத்தடங்களும்..

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

நீலம், நீலன், நீலி! | நாஞ்சில் நாடன் ஒலிக் கதை

https://anchor.fm/thaiveedu/embed/episodes/Dec-2021-e1bjks0

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

நாட்டுப் பற்று

நாஞ்சில் நாடன்

சினிமா சேவைக்கு எவரெலாம் வாங்கினர்
மாண்பமை பல்கலை மதிப்புறு முனைவர்?
பத்ம கலைமணி போர்த்தப் பெறாத
தாரகை உண்டா நம் தேயத்து?
சாகித்யக் குழுமம் நஞ்சென ஒதுக்கிப்
பகையெனச் செற்றுக் கொழு முறிபட்ட
முன்னேர் எத்தனை?
கலையும் மொழியும் உறவும் பெருக்கப்
பன்னாடு சென்ற அறிஞரும் கலைஞரும்
அரசியலாரின் அடிப்பொடி தானோ?
நாட்டை நடத்தும் மேன்மையர் மக்களில்
காவலர் எழுத்தர் அஞ்சல் ஊழியர்
பூ காய் கனியெனக் கூவி விற்பவர்
தள்ளு வண்டியில் சிற்றுண்டி செய்பவர்
புவனத்துண்டா?
இளமையின் வறுமையை மேடையில் பரப்பி
முட்டி உயர்த்தி முக்கிப் பேசி
இராப்பகலாகக் கடின உழைப்பால்
வியர்வை பெருக்கி மூத்திரம் சிந்தி
ஈட்டிய விமானம் கப்பல் மலைகள்
சுரங்கம் தீவு கடற்கரை காடு
சோலை அருவி பொன்னின் குவியல்
என்பனவற்றின் ஐந்தொகை என்ன?
அறம் ஒழுக்கம் பண்பு நேர்மை
உண்மை மரபென மொழியும்
மாட்சிமை யாவும் கனவில் வந்து
விந்து பீய்ச்சும் திரைக் காவியக்
காதல் காட்சியா?
வந்தே மாதரம் தேசீய கீதம்
ஜெய்ஹிந்த் மொழித்தாய் வாழ்த்து
சுதந்திரம் குடியரசுத் தினம்
என்பன எல்லாம் எம்மனோர் மட்டும்
நாட்டுப் பற்றைத் திறந்து காட்டவா?
02/02/2022

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

கருங்கோட்டுப் புன்னை

நாஞ்சில் நாடன்

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

இடமோ வலமோ?

நாஞ்சில் நாடன் 

நேற்று இறந்த பிணம் எரித்துச் சாம்பலான பின் இன்று காலை கரைப்பதற்கு எலும்பு பொறுக்கினார்கள். மிச்சம் கிடந்த சாம்பலைக் கூட்டிக் குவித்து, அதன்மேல் வெள்ளம் வடியவைத்த தென்னங்கருக்கை நிமிர்த்து நாட்டி வைத்து, அதன் திறந்த வாயில் விரிந்த தென்னம்பாளையைக் கொத்தாகச் செருகி இருந்தார்கள்.

செத்துப் போனது ஆணோ, பெண்ணோ, மூத்ததோ, இளையதோ, சுமங்கலியோ, கைம்பெண்ணோ, நோய்ப்பட்டதோ, திடமோ, கொலையோ, தற்கொலையோ, மூத்த பிள்ளையோ, குடியானவனோ எவராக இருந்தால் என்ன? கண் பஞ்சடைவதும், காலன் வருவதும் எவர் சம்மதத்தின் பேரில்? எரித்தால் எலும்பு பொறுக்கித்தானே ஆக வேண்டும்!

வரிசையாக ஏழெட்டுக் குழிகள் கிடந்தன. முற்படுத்தப்பட்ட, நடுப்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கானவை. எதிர்காலத்தில் காந்திய, மார்க்சிய, திராவிட, சநாதனக் குழிகள் எனப் பகுபடல் ஏற்படக்கூடும்.

முந்திய நாள் எரியூட்டிய உடலின் எலும்புகளை மறுநாள் காலையில் வந்து சாம்பரில் துழாய்ந்து பொறுக்கி, தலைவாழை இலையில் குவித்து, பால், தயிர், கருக்கு வெள்ளம், பன்னீர், களப சந்தனம் என அபிடேகங்கள் செய்து, பூ போட்டு, இலையோடு சுருட்டி அள்ளிப் பித்தளைச் சருவத்தில் வைத்து, முதல்நாள் கொள்ளிவைத்து மொட்டை போட்டவரின் தலையில் வடசேரி ஈரிழைத் துவர்த்து முண்டால் பரிவட்டம் கட்டி, அதன்மேல் எலும்புப் பொதியல் சருவத்தைத் தூக்கி வைத்து வீட்டுக்குப் போவார்கள். வீட்டு வாசலில் அதை வைத்து, பெண்கள் பாலூற்றித் தொழுதபின் கரைக்க வலுவான இருவர் கன்னியாகுமரிக் கடற்கரைக்குக் கொண்டு போவார்கள்.

எலும்புக் குவியல் அபிடேகத்துக்கு வெட்டிய தென்னை இளநீரின் வெள்ளம் வடிய வைத்தபின் காலியான இளம் தேங்காயைச் சுடுகாட்டுக் குழியின் சாம்பல் திட்டில் நிறுத்தி, அதன் வாயில் விரிந்த தென்னம்பாளைக் கதிர் செருகி வைப்பார்கள்.

அனைத்து மயானக் குழிகளையும் பொதுவாகக் காவல் காத்து நின்ற சுடலையின் பார்வையில் சமூக நீதி சுடர்விட்டது. மேட்டில் நின்ற சுடலையின் பீடத்துப் பரப்பில், அவர் காலடியில் நேற்று விரித்திருந்த தலைவாழை இலை வெயிலில் சுருண்டு கிடந்தது. செவ்வரளி, வெள்ளரளிப் பூக்கள் சிதறிக் கிடந்தன. வைத்திருந்த ஒரு சீப்புப் பேயன் பழத்தையும் மாடு மேய்ப்பவரோ, வழிப்போக்கரோ தின்றுவிட்டு, தோலை எறிந்திருப்பார்கள். உடைத்து வைத்த தேங்காய் முறிகளை மடியில் மறைத்து எடுத்துப் போயிருப்பார்கள். அல்லது பீடத்தின் அடுத்துக் கிடந்த துறுகல்லில் முறியை உடைத்துப் பருப்பைத் தின்றுவிட்டுச் சிரட்டையை வீசியிருப்பார்கள்.

வடக்குமலையில் உயிர்த்து மணக்குடிக்காயலில் கலக்கும் பழையாற்றின் மேலக்கரை அது. யாறுகள் அனைத்தும் புனிதமே! ‘வாங்கரும் பாதம் நான்கும் வகுத்த வான்மீகி என்பான்’ இன்னரு நீர்க்கங்கை யாற்றைப் பாடினான் என்றால், நாஞ்சில்நாடன் பழையாற்றைப் பாடினான்.

மேற்கு கிழக்காக ஓடும் சாலையில் இருந்து, இடதுவசம் திரும்பினால் பழையாற்றின் மேலக்கரை. சூதானமாக ஓட்டினால் சக்கடா வண்டி போகும். ஏர்மாடு போகலாம். முன்னிரண்டு பின்னிரண்டாக நால்வர் தோள் போட்ட பாடையும் போகலாம். அது சாதாரணப் பாடையோ, தேர்ப்பாடையோ!

வழித்தடத்தின் இருமருங்கும் திருகுக்கள்ளி, கொடிக்கள்ளி, சப்பாத்திக்கள்ளி, சதுரக்கள்ளி, எருக்கு, குருக்கு, நொச்சி, கடலாமணக்கு, காட்டாமணக்கு, காரை, பூலாத்தி, உண்ணி, பீ நாறி, அழிசு, உடை, மஞ்சணத்தி, தொட்டாவாடி, பிரண்டை, பூச்சிமுள், ஆவாரை, ஊமத்தை, ஊதா, கொழுஞ்சி, குறுந்தட்டி, நாயுருவி எனப் பல்வகைச் செடி கொடிகள் படர்ந்து பாதையை மறிக்கப் பார்க்கும். ஊரில் பிணம் விழுந்தால், இரண்டு பேர் மண்வெட்டியுடன், வெட்டுக்குத்தியுடன் போய் முன்பே பாடை போகும் தடத்தைச் சுத்தப்படுத்துவார்கள்.

ஆற்றங்கரையின் மயானக்குழிகளின் வரிசையின் கீழ்ப்புறம் பழையாற்று நீரோட்டத்துக்குச் செல்லும் கால்தடம் கிடந்தது. நீண்டு கிடந்த கால்தடத்தின் இருவசமும் நாணல், ஆனையறுகு, கோரை, நீர்முள்ளி எனப் பம்பிக் கிடந்தன.

சுடுகாட்டுத் தடத்தில் எழுபதுபோல் பிராயமுள்ள ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார். எங்கிருந்து புறப்பட்டு எங்கு போகிறார் என்று ஒரு கோளாறும் தெரியவில்லை. வடசேரி இறக்கத்தில் நடந்து, நெடுங்குளம் சாலை கடந்து, புத்தேரி கீழூர் வழியாகக் குளத்தங்கரையோரமாக வந்து, நொண்டிப் பாலத்தில் சாலையை மிதித்துக் கீழ்த்திசை நோக்கிப் பொடி நடையாக வந்து, பழையாற்றுப் பாலம் தொடங்குமுன் இடதுபுறம் பிரியும் தடத்தில் நடந்திருக்கலாம்.

அப்படியே மேற்கொண்டு நடந்து பூதப்பாண்டி போவாராக இருக்கும். பூதலிங்கசாமிக் கோயிலில் கொடியேறி ஐந்தாம் திருவிழா அன்று. அல்லது பூதப்பாண்டி நுழையுமுன் ஆண்டித் தோப்பை அடுத்த பழையாற்றுப் பாலத்தில் ஏறி, ஆற்றைக் கடந்து, வலப்பக்கம் திரும்பி, சீதப்பால் வழியாகத் தாழக்குடி போவாராக இருக்கும்.

நடந்து சுடுகாட்டு மேட்டை அடைந்தவர், சற்றுநேரம் கால் மடக்கி, ஆலமரத்து நிழலில் நின்ற சுடலைமாடன் காலடியில் அமர்ந்தார். இரு கைகளாலும் கால் முட்டுக்களையும், கறண்டைகளையும் தேய்த்து விட்டுக்கொண்டார். கையை உயரத்தூக்கி, சடைவு முறித்து நீட்டிப் படுத்து அறிதுயிலில் ஆழ்ந்தார். ஒரு நாழிகை சென்றபின் துயில் கலைந்து எழுந்து, சுடலைமாடன் பீடத்தின் வடக்கெல்லையில் நின்று மூத்திரம் பெய்தார். வில் போல் வளைந்து சென்று விழுந்த சிறுநீர்ப் பாய்ச்சலில் கட்டெறும்புக் கூட்டம் ஒன்று கலைந்து பரந்தது.

மயானக் குழியில் குவித்துப் போடப்பட்டிருந்த சாம்பல் மேட்டையும், அதில் நட்ட வாக்கில் நின்ற தென்னங்கருக்கையும், அதன் திறந்த வாயில் செருகப்பட்டிருந்த தென்னம்பாளையின் விரிந்த கதிரையும் பார்த்தார். என்ன மொழி என்று பகிர்த்து அறிய இயலாத கூவல் ஒன்று பிறந்தது அவர் தொண்டையில் இருந்து. ஏதோவொரு தேவபாடையாகவும் இருத்தலாகும். கூவலா அல்லது கேவலா என அவரே அறியவும் கூடும்.

பீடத்தில் இருந்து பைய இறங்கி, சமதளத்தில் உட்கார்ந்து நரங்கி, மயானக் குழியில் சரிந்து இளநீரையும் தென்னம்பாளையையும் நெஞ்சோடு சேர்த்தணைத்து, பிரயத்தனம் செய்து மேட்டுக்கு ஏறினார்.

பீடத்தின் மேலேறி நின்ற திருக்கோலத்தில் உலகத்துத் தீமையை எல்லாம் கணத்தில் கருக்கிவிடுவதைப் போன்று சினந்த விழிகொண்டு நின்ற சுடலையின் வாளேந்திய கரத்தில் கொண்டு தென்னம் கதிரைச் செருகினார். வெட்டப்பட்ட இளநீரினுள் உற்றுப் பார்த்தார். சுடலைமாடன் பீடத்தில் கிடந்த கற்பாளத்தில் கருக்கை மடார் மடார் என்று அடித்து உடைத்தார். கருக்குக்கு மாற்றாக வறண்டு செம்பட்டை பரந்து விரிந்து கிடந்த மண்டையை மோதி ஹாராக்கிரி செய்துவிடுவாரோ என சுடலை ஒருகணம் திடுக்கிட்டார்.

கருக்கு தொண்டோடு இரண்டாகப் பிளந்து உள்நின்ற அரை விளைச்சல் தேங்காப் பருப்பு இன்முகம் காட்டிற்று. சுடுகாட்டுச் சாம்பல் துகள்கள் இளம் தேங்காய்ப் பரப்பில் ஒட்டிக் கிடந்தன. சுற்றுமுற்றும் பார்த்து, சற்று நீங்கிக் கிடந்த காய்ந்த தேங்காய்ச் சிரட்டைத் துண்டை எடுத்து, இளந்தேங்காய்ப் பருப்பைக் கீறி அடர்ந்து எடுத்தார். நைவேத்தியமாக ஒரு கீற்று மாடனுக்கு வைத்துவிட்டு, மிச்சத்தை வயதான பற்கள் நோகாமல் ஒதுக்கி ஒதுக்கிச் சவைத்துத் தின்றார். வாயோரம் தேங்காய்ப்பால் வடிந்தது.

சுத்தமாகச் சுரண்டித் தின்று, இரு பாதிக் கதம்பைகளைத் தூக்கி எறிந்து, பழையாற்று வெள்ளம் பாயும் பள்ளத்துக்குப் போகும் ஒற்றையடிப் பாதையில் இறங்கிக் குனிந்து ஆற்றைக் குடித்தார்.

என்ன உட்குரல் ஒலித்ததோ, உடைகளைக் களையாமல் – உடை என்றால் என்ன? அழுக்கேறிய காவி நிறத்து வேட்டியும் தோள் துண்டும்தான் – அப்படியே இடுப்பளவு ஆழத்தில் இறங்கித் துழாய்ந்து நீராடினார்.

நாட்களோ, கிழமைகளோ, மாதங்களோ பஞ்சைப் பரதேசியாகத் திரிந்திருப்பார் போலும். நீராடப் புழைகள் இருந்தன. பல்துலக்க ஆலோ, வேலோ, வேம்போ, நாயுருவியோ கிடைத்தன. இரக்கப்பட்ட எவரோ நைந்து கிழிந்த அழுக்குத்துணி மாற்றச் சொல்லி, வேட்டியோ துண்டோ கொடுத்திருக்கலாம். அவரிடம் கட்டைப் பை, தோள் பை ஏதும் இல்லை. மடிசஞ்சி கூட இல்லை. எனவே கைநீட்டினால் பணம், அரிசி, பயிறுகள், காய்கள் கொடுத்தால் வாங்க மாட்டார் போலும். சமைத்த உணவு, மீந்த உணவு காப்பாற்றி வந்திருக்கலாம்.

பட்டினத்தடிகளோ, பதினெண் சித்தரோ, தாயுமானாரோ, இராமலிங்க வள்ளலோ, மஸ்தான் சாகிபுவோ அறிந்திருந்த சுவடுகள் இல்லை. எதைத் தேடுகிறார் என்றும் எதைக் கண்டடைந்தார் என்றும் யாரறிவார்? அறிந்தவருக்கே தான் எதைத் தேடினோம் என்றும் எதைக் கண்டடைந்தோம் என்றும் போதம் உண்டா?

தேங்காய் கருக்குத் தின்று, பழையாற்றில் நீராடி, ஈர வேட்டி துண்டுடன் நீர் சொட்ட சுடலைமாடன் சந்நிதியில் வந்து தொழுதார். இந்தக் கதாசிரியனுக்கு இப்போது சிவவாக்கியர் பாடல் ஒன்று இடைவெட்டுகிறது.

தீர்த்தம் ஆட வேணும் என்று தேடுகின்ற தீனர்காள்
தீர்த்தமாட எவ்விடம் தெரிந்து நீர் இயம்புவீர்
தீர்த்தமாட எவ்விடம் தெரிந்து நீர் அறிந்தபின்
தீர்த்தமாக உள்ளதும் சிவாய அஞ்செழுத்துமே!

காய்தல் உவத்தல் அற்றுக் கண்சிமிட்டால் கண்டு நின்றான் சுடலை. சந்நிதியில் ஆலமரத்து அடர் நிழலில், மேற்கே தலைவைத்துக் கிழக்கே கால்நீட்டி மல்லாந்து படுத்தவருக்கு, உறக்கமோ கிறக்கமோ அள்ளிக்கொண்டு போயிற்று. வரப்போ தலகாணி, வாய்க்காலோ பஞ்சுமெத்தை!

எந்தப் பரபரப்பும், பாசாங்கும், இனமானச் செருக்கும், கொள்கைத் தரிப்பும் இன்றிப் படுத்திருந்தவரைச் சொற்பம் கருணையுடன் பார்த்தார் சுடுகாட்டுச் சுடலை. தனது வாழ்நாளில் இந்தச் சுடுகாட்டின் தட்டகத்தில் எத்தனை அழுகை, ஆதாளி, ஒப்பாரி, நெஞ்சடிப்பு, கசிந்துருகல், புலம்பல், பிலாக்கணம், பொச்சரிப்பு, பொய் நடிப்பு, வெளிச்சோகம் – உட்காமம், கண்ணீர், கம்பலை, காலாட்டல், கருணை பார்த்திருப்பார்? வழக்கமாக அவர் கையில் கமுகம் பூம்பாளை செருகுவதே மரபு. விவரம் தெரியாமல் மயானச் சாம்பல் துகளில் ஆடிய தென்னம்பாளைக் குலையைச் செருகிய கோபம் சுடலைக்குச் சற்றே தணிந்தது.

‘ஊரேதோ, பேரேதோ, உறவேதோ? கட்டை இப்பிடிச் சுடுகாட்டு மேடையிலே கெடந்து ஒறங்குகு!’ எனச் சற்றுக் கனியவும் செய்தார்.

பழைய பாடல் வரி ஒன்றுண்டு.

பதிவிரதைக்கு இன்னல் வரும்; பழையபடி தீரும்,
பரமசிவன் அருள்புரிய வந்து வந்து போவார்”

என்றொரு பகடிப் பாடல். அதுபோல் சுடுகாட்டுச் சுடலையாண்டிக்குத் தனது காலடிக் கற்பாளத்தையும் பஞ்சணைபோல் பாவித்துப் பள்ளிகொண்டு யோகிபோல் துயிலும் இந்தப் பாவிக்குக் கொஞ்சம் அருள் சொரிந்தால் என்னவென்று தோன்றியது.

பாமரனுக்கு அருள்புரிய நாலு வேதம், ஆறு சாத்திரம், பதினெண் புராணம், ஆகமங்கள், வியாகரண வியாக்யான தத்துவார்த்த சநாதன சம்வாத தர்க்க சாத்திரங்கள் கரைத்துக் குடித்துக் கால்வழியே மோள வேண்டும் என்ற விதி உண்டா என்ன? சுடலையப்பனுக்கு ஆயுர்வேதம்கூடத் தெரியுமோ என்னவோ?

உடனே எடுத்த எடுப்பில் நீங்கள் கற்பனை செய்ய வேண்டாம். தமிழ் சினிமாக் கடவுளரின் சின்முத்திரைக் கையின் நடுவில் இருந்து ஒளிக்கீற்றொன்று புறப்பட்டு, படுத்துக் கிடந்தவரின் நெற்றியில் பாய்ந்து, அவர் உடல் சிலிர்த்து சர்வாலங்கார பூஷிதனாய் புத்தாடையும் புடைத்தெழுந்த சிக்ஸ் பேக் சதைத் திரட்சியுமாய் எழுந்து நின்று சுற்றுமுற்றும் கம்பீரமாய்ப் பார்ப்பது எல்லாம் நடப்பில்லாத காரியம்.

சுடலைமாடன் என்ன உலகை உண்டு இல்லை எனச்செய்யும் சக்திகள் கொண்ட பாலாழி பள்ளி கொண்டானோ, நச்சரவம் பூண்ட நஞ்சுண்டகண்டனோ அல்ல. அவனுக்குத் தங்கத்தேர், நவமணிப் பூண்கள், ஒரு லட்சத்து எட்டு வடைகளால் ஆன மாலை, எதுவும் வேண்டாம். கால் குப்பி வாற்றுச் சாராயமும் சுட்ட அயிலைக் கருவாடும் போதும். நாட்டுக்கோழி முட்டையும், கருஞ்சேவலும், ஒரு முறித் தேங்காயும், அரிசிப் பாயசமும், நான்கு பேயன் பழங்களும் என்பது விருந்து. சம்பாப் பச்சரிசியில் பொங்கலும் முற்றத்தில் வெட்டிய வெள்ளாட்டுக்கிடாவின் இறைச்சிக்கறியும் என்பது குடியரசுத் தலைவர் மாளிகை விருந்து.

ஆருத்ரா தரிசனமும் வைகுண்ட ஏகாதசியும் போன்ற மகத்துவங்கள் இல்லை. வேத கோஷங்கள் வேண்டாம், வில்லுப்பாட்டு போதும். வேணுகானம், வீணை இசை, சொகுசுகா மிருதங்க தாளமு வேண்டாம். நையாண்டி மேளம் போதும். பரதமுனி அடவு சொல்லிக் கொடுத்த நிருத்தம் வேண்டாம். கரகாட்டம், கணியான் கூத்து போதும். மேலும் சுடலைமாடன் தேவ பாஷை அறிந்தவரோ, பத்து சுலோகங்கள் மனனம் செய்து சொல்லி வித்வான், பண்டிட், விற்பன்னர் அடைமொழி கொண்டவரோ அல்ல. வட்டார வழக்கில் வர்த்தமானம் பேசுகிறவர்.

தனது ஆட்சி எல்லைக்குள் வந்து கிடப்பவரைப் பார்த்து, ‘சவத்துப் பயலை என்ன செய்யதுண்ணு தெரியலையே!’ என்று ஆயாசப்பட்டார்.

‘இவுனுக்கு என்ன செய்து நமக்கு என்ன ஆகப்போகுது? குவார்ட்டர் டாஸ்மாக் பிராந்திக்குப் போக்கு இருக்குமா? கிழிஞ்சு தொங்கும் சல்லடம் கச்சை மாத்தப் போறானா? பொங்கல் விட்டு, வெள்ளாட்டுக் கிடா வெட்டி படப்புச் சோறு போடப் போறானா?’ என்றும் ஆயாசப்பட்டார் சுடலை. தெய்வத்துக்கும் கட்டப் பஞ்சாயத்து ஆதாய நோக்கம் வந்துவிடும் போலும்!

“Fiddler on the roof” திரைப்பட நாயகன் “On the other hand” என்று மாற்றி யோசித்ததைப் போல, சுடலையும் கால் மாற்றிச் சிந்தித்தார். ‘நாம என்ன கட்சித் தலைவரா? என்ன செய்து கொடுத்தாலும் இருபத்திரண்டு சதமானம் கேக்கதுக்கு? செறுக்கி விள்ள நம்ம காலடியிலே வந்து பாவமாட்டு விழுந்து கெடக்கான். சரி! எந்திரிச்சு நம்மளை வேண்டிக் கும்பிட்டா அதைப்பத்தி ஆலோசிப்போம்’ என்று நினைத்தார். பேயாடு கானத்துப் பிறங்கு தழல் ஏந்தித் தீயாடும் சுடலைக்கு உடனே சிவவாக்கியர் பாடல் ஒன்று ஊடறுத்து ஓடியது.

மண் கிடாரமே சுமந்து மலையுள் ஏறி மறுகிறீர்
எண்படாத காரியங்கள் இயலுமென்று கூறுவீர்
தம்பிரானை நாள்கள் தோறும் தரையிலே தலைபடக்
கும்பிடாத மாந்தரோடு கூடி வாழ்வது எங்ஙனே!”

சித்தர் பாடல் என்பதால் உரை சொல்லத் தேவையில்லை. மேலும் சிறுகதைக்குள் பாடல் வரிகளுக்கு உரை சொல்வதைப் பவணந்தி முனிவரும் அனுமதிக்கவில்லை.

சுடலையின் கருத்தியலுக்குள், முன்னால் கிடப்பவரின் ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, பான் கார்ட், ஆதார் அட்டைப் பெயர் குருத்துப்போல் முளைவிட்டது. காசிலிங்கம்… பாஸ்போர்ட் எடுக்கும் நிர்ப்பந்தம் இல்லை அவருக்கு. தென்னம் பூக்குலையை எடுத்துவந்து கையில் செருகியதும் தென்னை இளநீர்த் தேங்காய்க் கீற்றைப் படைப்பதுபோல் வைத்ததும் மின்னலாய் வெட்டியது.

‘ஆமால்ல… சும்ம சொல்லப்பிடாது… கெழட்டு மூதிக்குத் தோணீருக்குல்லா… திருமூலர் சொல்லீருக்காரே 252-ம் திருமந்திரத்திலே!

யாவர்க்குமாம் இறைவர்க்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே!”

இதென்ன சாமானியமான பேச்சா? அப்பம் காசிலிங்கம் அவரால ஏன்றதை நமக்குச் செய்திருக்காரு… பெறவு அவுருக்கு ஒரு நல்லது செய்தா என்னா? கெட்டுக் குட்டிச்சுவராட்டா போயிருவோம்? இதுகூட இல்லேண்ணா நாமெல்லாம் ஒரு சாமிண்ணு என்ன மயித்துக்குக் கையிலே வெட்டுக்குத்தி தூக்கீட்டு முழிச்சு முழிச்சுப் பாத்துக்கிட்டு நிய்க்கணும்? கொள்ளாண்டே சொள்ளமாடா உமக்கு அருளு!’ என்றது மனசாட்சி.

கடவுளே ஆனாலும் அவருக்கும் ஒரு உள்மனது இருக்குமல்லவா? முன்னிற்பவர் பழவண்டி தள்ளுபவர் அல்லது பாராளுமன்ற உறுப்பினர் என்று பேதம் தெரியுமா? கடவுளுக்கு இல்லை என்றாலும் சாத்திரங்களின்படி, ஆகம விதிகளின்படி ஆராதனை செய்யும் அர்ச்சகர் அறிந்திருப்பார்தானே! சுடலைமாடனின் கொடுவாள் மீசைக்கு இடையில் சிற்றொளி நறுமுகை பாய்ந்தோடிற்று. ‘நானார் என் நெஞ்சங்களார்?’ என்றும், ‘உன்னையே நீயறிவாய்!’ என்றும், ‘தன்னையறிதலே தகவு’ என்றும் யோசிப்பதும் போதிப்பதும் ஞானியர்க்கே சாத்தியம். கடவுளர் தன்முன் நிற்கும் இவன் யார், இவன் யோக்கியதை என்ன என்றுதானே சிந்திப்பார்.

எல்லாம் அறிந்த, முக்காலமும் உணர்ந்த, திரிகரண சுத்தி என யோசிக்கிற இறைவனுக்குத் தெரியவேண்டும்தானே! முன்னிற்பவன் அரசாங்கத்துக்குக் கட்டிய வீடு பதினெட்டு ஆண்டில் இடிந்து விழுந்ததேன் என்று அறியாதிருப்பானா ஆண்டவன்! சொந்த வீடு நூறாண்டு நிற்கத்தானே செய்கிறது. இடியும் வீட்டைக் கட்டியவன், அனுமதி அளித்தவன், ஆய்வு செய்தவன் என்பவன்கள் அணிவிக்கும் நவரத்தின கண்டி, வைரக்கிரீடம், மார்புக்கவசம், தண்டை, சிலம்பு, காப்பு எல்லாம் அவர் கண்ணைப் பொத்திவிடுமா? கண்ணை மறித்தால் அவன் கடவுளா அமைச்சனா?

சுடலைமாடன் வெளிக்கண் மூடி, அகக்கண் சுடர்விட நின்றார். நின்றாரும் நின்றார் நெடுமரம் போல் நின்றாரில்லை. முன்கிடந்து உறங்குகிறவன் யாவன் என சிந்தித்தார். அவர் தீட்சண்யத்தில் சில மாதங்கள் முன் நிகழ்ந்த காட்சியொன்று விரிந்தது.

பின்னிரவு சரிந்து கொண்டிருந்தது. அதிகாலை மூன்றரை இருக்கலாம். மீனாட்சிபுரம் பேருந்து நிலையத்தில் விரைவுப் பேருந்து ஒன்று வந்து திரும்பி நின்றது. சென்னை – திருவனந்தபுரம் என முகப்பு காட்டியது. ஐந்தரை மணிக்கெல்லாம் கேரளத் தலைநகர் எய்திவிடும். ஓட்டுநரும் நடத்துநரும் இறங்கி எதிரே இருந்த காப்பிக்கடைக்கு சாயா குடிக்கப் போனார்கள். நாகர்கோயிலில் இறங்குபவர்கள் எல்லோரும் எந்தப் பரபரப்பும் இன்றி பெட்டி, தோள் பை, கட்டப்பை, குட்டிச் சாக்கு எனக் குடும்பம் குடும்பமாக சாவகாசமாக இறங்கினார்கள்.

தோளில் சிறிய பையுடன் ஒருவரும், அவரின் தோளைப் பற்றியபடி எழுபது வயது சொல்லத்தக்க ஒருவருமாய்ப் பதனமாக இறங்கினார்கள். வயதானவர் கையிலும் ஒரு ரெக்சின் பை இருந்தது. அதனுள் மாற்றுடை இரண்டு செட், துண்டு, சில நூறு ரூபாய் பணம், பற்பசை, பிரஷ், போர்வை இருந்தன. கழுத்தைச் சுற்றி மப்ளர் கிடந்தது. மூக்குக் கண்ணாடியும்.

மூத்தவர் பாங்கிழவன் இல்லை. தடுமாற்றம் இன்றி நடந்தார். பேருந்து நிலையத்தின் வடக்குக் கோடியில், இன்னும் திறக்காத கடையின் படிக்கட்டில் மூத்தவரை உட்கார்த்தி வைத்தார் அவர் மகனான இளையவர். இருவர் உடையிலும் உடற்கூறிலும் வறுமைச் சுவடேதும் இல்லை.

தகப்பனிடம் மகன் ஏதோ குனிந்து ஓசையின்றிச் சொல்லி நின்றார். தகப்பன் எப்பொருளுமின்றி வெறித்துப் பார்த்தார். தேநீர் வாங்கி வருகிறேன் என்றோ, ஆட்டோ பிடித்து வருகிறேன் என்றோ, முகவரி விசாரித்து வருகிறேன் என்றோ, மறைவாக ஒன்றுக்குப் போய் வருகிறேன் என்றோ கூறியிருக்கக் கூடும்.

சில நிமிடங்களில் ஓட்டுநரும் நடத்துநரும் வந்து விரைவுப் பேருந்தில் ஏறி, மெதுவாக வண்டியை உருட்டி ஒழுகினசேரி போகும் சாலையில் திருப்பினார்கள். பேருந்து திரும்பும் இடத்தில் மறைந்து நின்ற மகனார், பேருந்தைக் கை காட்டி ஏறிக்கொண்டார். பேருந்து ஒழுகினசேரி, வடசேரி, கிருஷ்ணன் கோயில் விலக்கு என வேகமெடுத்துத் திருவனந்தபுரம் சாலையில் விரையலாயிற்று. தகப்பனார் காத்திருந்து படிக்கட்டில் கால் நீட்டிச் சாய்ந்து உறங்கலானார்.

சுடலைக்கு யாவும் தெள்ளத் தெளிவாயின. தன்முன் படுத்துக் கிடப்பவருக்கு தன்னைப் பற்றிய பேதமில்லை, உறவு – நட்பு நினைவுமில்லை, அகமில்லை புறமும் இல்லை என்று. காசிருக்கும் வரை கடைகளில் கேட்டு வாங்கித் தின்றிருப்பார். தன் சொந்தப் பெயரேகூடத் தப்பிப் போயிருக்கும். பிறகென்ன, உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!

நினைப்பில் ஊர், முகவரி, உறவுகளின் பெயர்கள் யாவுமே கெட்டழிந்த நிலையிலேயே காணாமற் போக்கப்பட்டிருக்கிறார். காணாமற் போக்கியவருக்கும் அவர்க்கான நியாயங்கள் இருக்கலாம்!

சுடலைமாடனுக்கு இரு வினாக்கள் இருந்தன முன்னால். ஒரு சன்னப் பார்வையால் காசிலிங்கத்துக்கு உறக்கத்திலேயே விடுதலை வழங்கிவிடலாமா? இல்லை பிறழ்ந்த நினைவுப் பிலங்களின் பழங்கணக்குகளை வழங்கி, தனது உண்டியலையும் திறந்து சில்லறை காட்டி, சொந்த ஊருக்கே திரும்பிப் போக ஆற்றுப்படுத்திவிடலாமா?

உயிருக்கு விடுதலை வழங்குவது தனது அதிகார வரம்பினுள் இல்லை என்று தோன்றியது சுடலைக்கு. அது கூட்டு ஒருவனை வேண்டாக் கொற்றவன் கூற்றுவனின் ஆட்சிப்பணி. மாற்றாக மறதி நோயைக் குணப்படுத்தி, மறுபடியும் சாதாரண மானுடனாக்கி விடலாம் எளிதாக! ஆனால் பெற்ற மகனே கருதிக் கூட்டி அறிந்தே தொலைத்துவிட்டுப் போன பின்பு, அந்த மகன் இனி இவர்க்கு எதற்கு என்றும் தோன்றியது.

சுடுகாட்டுக் காவல் பணி ஆற்றும் சுடலைமாடனின் தீர்மானம் இடதுமாகலாம், வலதும் ஆகலாம்!

நன்றி: https://aroo.space/2022/03/05/இடமோ-வலமோ/

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

மேலும் சில சொற்கள்

நாஞ்சில் நாடன்

வேற்று மொழிச் சொற்கள் வேறெந்த மொழிக்குள்ளும் தன்னியல்பாகவோ, கண்ணியத்துடனோ, வல்லந்தமாகவோ நுழையும் காலை, அந்தந்த மொழிக்கான ஒலி வடிவம் எடுக்கும். திருவல்லிக்கேணி Triplicane ஆனதும் திருச்சிராப்பள்ளி Trichy ஆனதும் தூத்துக்குடி Tuticorin ஆனதும் அவ்விதம்தான். தமிழில் இன்று புழங்கும் இருபதினாயிரத்துக்கும் மிகையான சொற்களுக்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இலக்கண வரம்புகள் சமைத்திருக்கிறார் தொல்காப்பியர். அறிய விரும்புவோர், இதுவரை தொல்காப்பியத்துக்கு வந்துள்ள 138 பதிப்புகளில் ஏதேனுமொன்றைக் காண்க. தொல்காப்பியத்துக்கு 2000-க்கும் அதிகமான சுவடி வேறுபாடுகள் உண்டு. என்றாலும் இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், சேனாவரையர், தெய்வச் சிலையார், கல்லாடர் போன்ற உரையாசிரியர்கள் உதவியாக இருப்பார்கள். குறைந்தபட்சம் முனைவர் ச.வே. சுப்பிரமணியன் உரையையாவது பார்க்கலாம்.

‘கடி சொல் இல்லை காலத்து படினே’ என்பார் தொல்காப்பியர். அஃதாவது பிறமொழிச் சொல்லொன்றைக் காலங்காலமாக ஒரு மொழி ஏற்றுக்கொண்டால், அச்சொல் கடிந்து, வெறுத்து, ஒதுக்கப்பட வேண்டிய சொல் இல்லை என்பது பொருள்.

எடுத்துக்காட்டுக்கு, வராஹ (Varaha) என்பது வடமொழிச் சொல். வடமொழி என இங்கு நான் குறிப்பது சமற்கிருதத்தை. இந்தியை அல்ல. ஏனெனில் இந்தி என்றொரு மொழி தோன்றி ஐந்நூறு – அறுநூறு ஆண்டுகளே ஆகின்றன. இன்று அம்மொழி 139 கோடி மக்களையும் ஆள முயல்வது – நாகரீகமான மொழியில் சொன்னால் – பேராசை. வராகம் பற்றிப் பேச வந்தோம். வராகம் என்ற சொல்லை வராஹம் என்றும் எழுதலாம். பொருள் பன்றி என்பதுதான். வராகன் என்றால் திருமால் என்றும் பொருள், வராக அவதார காரணத்தினால். பூவராகன் என்றொரு அமைச்சரே இருந்தார் 1967-க்கு முன்பு. வராகன் என்றால் பொற்காசுமாகும்.

அதுவே போன்று ஔஷதம் என்பது வடசொல். அதனை ஔடதம் என்று தமிழில் ஆள்கிறோம். ஔவை என்ற பெரும்புலவர் அவ்வை ஆனதுபோல, மையம் எனும் சொல் மய்யம் ஆனதுபோல, ஔடதம் எனும் சொல் அவுடதம் என்றும் ஆளலாம்.

இங்ஙனம் ஆள்வதை எல்லாம் தற்சமம், தற்பவம் என்று வரையறைப்படுத்துகிறார் தொல்காப்பியர். தற்சமம், தற்பவம் என்றால் என்ன என்று முன்போர் கட்டுரையில் விளக்கமாகப் பேசி இருக்கிறேன். தொல்காப்பியமே வடமொழி இலக்கண நூலொன்றின் தமிழாக்கம் என நிறுவி, நூலொன்றினை எவரும் முனைந்து, வலிந்து எழுதிக் கரப்புணர்ச்சி செய்தால் அவருக்கு இங்கு ஒரு ‘பாரத ரத்னா’ உறுதி.

Doctor எனும் ஆங்கிலச் சொல்லுக்கு எத்தரத்திலும் குறைவுபடாத தமிழ்ச் சொற்கள் வைத்தியர், மருத்துவர், பண்டுவர். கலித்தொகை நூலில் நெய்தல் கலி பாடிய நல்லந்துவனார்,

“அன்னர் காதலராக, அவர் நமக்கு

இன்னுயிர் போத்தரும் மருத்துவராயின்

யாங்காவது கொல்? தோழி!”

என்ற பாடல் வரிகள் சொல்வது – காதலர் என்னிடம் கொண்ட அன்பால் தந்த நோய் இது. என்னால் தாங்க முடியாததாக இருக்கிறது. எனினும் என் உயிர் நீங்காது நிறுத்தும் மருத்துவர் அவர் ஒருவரே! – என்று. பழமொழியும், கம்ப ராமாயணமும், பெருங்கதையும், வில்லிபாரதமும், திருமந்திரமும், தேம்பாவணியும் மருத்துவர் எனும் சொல்லை ஆள்கின்றன. ‘கொடு மருத்துவர் கொல் விடம் கொல்லுவார்’ என்கிறது தேம்பாவணி. மருந்து எனும் சொல் திருக்குறளில் பத்து இடங்களில் வருகிறது.

எனினும் டாக்டர் என்ற சொல் தமிழில் வந்து நின்று பதற்றமில்லாது புழங்கிக்கொண்டிருக்கிறது. என் அப்பனைப் பெற்ற ஆத்தா, பறக்கை நெடுந்தெரு வள்ளியம்மை டாக்டரைக் குறிக்க தெரசர் என்பாள். அவள் காலத்துச் சொற்புழக்கம் அது. பின்பு நான் அனுமானம் செய்து கொண்டேன், Dresser – காயங்களுக்கு, புண்களுக்கு மருந்து வைத்துக் கட்டி, களிம்பு தடவிக் குணப்படுத்தும் டாக்டர், தெரசர் என்றே விளிக்கப்பட்டார் என்று. மலையாளம் Doctor எனும் சொல்லை டோக்டர் என விளிக்கும். டொக்டர் அல்லது டாக்குத்தர் என்னும் ஈழத்தமிழ். எனவே எவையும் கடிசொல் இல்லை.

என்னதான் மிதிவண்டி, துவி வண்டி, இருசக்கர வண்டி, உந்து வண்டி என்று சொன்னபோதிலும், சைக்கிள் மொழியில் இருந்து அஞ்சியோடி விட்டதா? தொடர்வண்டி, மின் தொடர்வண்டி, புகைவண்டி, புகையிரதம் என்று சொன்னாலும் இரயிலும், இரயில் வண்டியும் மாய்ந்து போனதா?

Potato என்பது ஆங்கிலச் சொல். பொட்டட்டோ என்கிறோம் அன்றாடம் தமிழில். உருளைக்கிழங்கு என நாம் கண்டுபிடித்த சொல்லும் வெகுவாகப் புழக்கத்தில் வந்துவிட்டது. வடநாட்டில் பட்டாட்டா என்பர். அன்றாடம் காந்தா – பட்டாட்டா எனும் குரல் கேட்கலாம் தெருக்களில். காந்தா என்றால் ப்யாஸ், ஆனியன், Onion. தமிழில் ஈருள்ளி, நீருள்ளி, ஈராய்ங்கம், ஈர வெங்காயம், வெங்காயம். சொல்லப்போனால் தமிழ்நாடு இன்று வெங்காய மண் என்றும் அழைக்கப்படுகிறது. உருளைக்கிழங்கினை வடநாடு ஆலு என்கிறது. பிறமொழிச் சொற்களுக்கு அந்தந்த மொழிகளில் தனித்தனிச் சொற்கள் உண்டு.

தமிழ்நாட்டில் சில பகுதிகளில் பொட்டி எனும் சொல் பயன்பாட்டில் உண்டு. கன்னடச் சொல் அது. பொருள் விலைமகள், பரத்தை. பொட்டி மகன் என்றால் கன்னடமும் தமிழும் கலந்த சொல், பொருள் பரத்தையின் மகன்.

தமிழில் பரத்தைக்கு, வேசி, விலைமகள், தேவடியாள், தாசி, கூத்தியாள், பொருட் பெண்டிர், விலை முலையாட்டி, வரைவின் மகளிர், பொதுமகள், தாதி எனப் பற்பல சொற்கள். அண்மையில் நாம் கண்டுபிடித்த சொல், பாலியல் தொழிலாளி. இவற்றுள் தாசி எனும் சொல் சமற்கிருதம், Dasi என்பார் பேராசிரியர் அருளி. பொருள் விலைமகள், அடிமைப் பெண், இரண்டாமூடு, மருதோன்றி, பணிப்பெண். ஆதாரம் – அயற்சொல் அகராதி. தாதி எனும் சொல்லுக்கு செவிலித்தாய், வேலைக்காரி, விலைமகள் என மூன்று பொருள்கள் அயற்சொல் அகராதியில். ஆனால் தாதி எனும் சொல் பிராகிருதம். Dhati என்ற உச்சரிப்பு. எல்லாச் சொல்லுமே இடமறிந்து பொருள் தரும்.

Hamam என்ற சொல் உலவாத இந்திய மொழி இல்லை. Brand name. தமிழில் ஹமாம் என்று எழுதினோம். தனித்தமிழ்ப் பிறப்பாளர்கள் கமாம் என்று எழுதுவார்கள். அஃதே போல் ஸ்வஹமாம் என்றெழுதும் தமிழரும் இருத்தல் கூடும்.

சோப்புத் தேய்த்துக் குளிப்பவர் பலரும் இப்பெயர் அறிவர். நான் முதன்முதலில் சோப்புத் தேய்த்துக் குளித்தபோது பதினைந்து வயதாகி இருக்கும். அப்போதும் துணி துவைக்கும் சோப்புக்கும் மேல் தேய்க்கும் சோப்புக்கும் வேறுபாடு தெரியவில்லை. சவுக்காரம், சவுக்காரக் கட்டி எனும் சொற்கள் நாஞ்சில் மொழியில் இல்லை. சோப் என்பதே முதலில் அறிமுகமான சொல். ஆனால் சோப் – Soap – என்பது ஆங்கிலம் என்பதறிவோம். இணையான தமிழ்ச்சொல் வழலை. மூன்றாம் வகுப்புக்குப் போகும் என் முதல் பேரனுக்கு இந்தச் சொல் தெரியும். சோப்பும் தெரியும்.

வழலை எனும் சொல்லுக்கு இலக்கிய மேற்கோளாக ஒரு பாடல் கிடைக்கிறது. பாலைத்திணைப் பாடல். ஆக்கியோன் பெயர் அறிந்தேமில்லை. பிரிவிடை வேறுபட்ட கிழத்திக்குத் தோழி சொல்லியது என்பது One line. இனி பாடல் –

“உள்ளார் கொல்லோ தோழி! துணையொடு

வேனில் ஓதிப் பாடுநடை வழலை

வரிமரல் நுகும்பின் வாடி, அவண

வறன் பொருந்து குன்றத்து உச்சிக் கவாஅன்

வேட்டச் சீறூர் அகன்கண் கேணிப்

பய நிரைக்கு எடுத்த மணிநீர்ப் பத்தர்,

புன்தலை மடப்பிடி கன்றொடு ஆர,

வில் கடிந்து ஊட்டின பெயரும்

கொல்களிற்று ஒருத்தல சுரன் இறந்தோரே?”

என்பது முழுப்பாடல்.

நற்றிணைக்கு என்னிடம் சில உரைகள் உண்டு. ஔவை. துரைசாமிப்பிள்ளை உரை; பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் உரை; முனைவர் கதிர். மகாதேவன் உரை; அறிஞர் ச.வே. சுப்பிரமணியன் உரை; டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் நூல் நிலையம் பதிப்புக்கு வித்துவான் H. வேங்கடராமன் எழுதிய பதவுரையும் உ.வே.சா. எழுதிய அரும்பத அகராதியும்.

பாடலை நான் புரிந்துகொண்ட விதத்தில் எனது விளக்கம் அமையும். தோழி! வருத்தமான நடையை உடைய ஓதி வளமில்லாத காலத்தில் வழலைப் பாம்புபோல் காட்சியளிக்கும். முதுவேனிற்காலம் ஆனபடியால் வரிகளைக்கொண்ட மரல் மரத்தின் இளம் மடல்கள் வாட்டமடைந்திருக்கும். வறட்சியுற்ற குன்றின் உச்சியில் இருந்த வேட்டுவச் சிற்றூரை நோக்கி களிறு ஒன்று தன் பிடியுடனும் கன்றுடனும் நடந்து செல்லும். சிற்றூரின் புறத்தே அகன்ற வாயுடைய கிணறு. அந்தக் கிணற்றில் இருந்து தமது பசுக்கூட்டத்துக்காக வேட்டுவர் தெளிந்த நீரைக் கோரி, தொட்டியில் நிறைத்து வில் பொறியால் மூடி வைத்திருப்பர். அந்தத் தொட்டியின் – பத்தரின் – மூடியை உடைத்துப் போட்டுவிட்டு, கொல்லும் தொழிலை உடைய ஆண்யானை பெண்யானைக்கும் கன்றுக்கும் நீரூட்டி அகன்று செல்லும். இத்தகு சுரத்தில் சென்று தங்கும் நம் தலைவர், அந்த இடத்திலும் நம்மை நினைக்கவில்லை போலும்! ஒருத்தல் – களிறு – ஆண்யானை, பிடி – பெண்யானை, ஓதி – ஓணான் – ஓதி – ஒடக்கான் – ஓந்தான், மரல் நுகும்பு – முற்றாத மரலின் இளமடல், வழலை – கருவழலைப் பாம்பு.

வழலை எனும் சொல் தேடிப் புறப்பட்டோம். அது நம்மைப் பிரிவாற்றாமையில் கொணர்ந்து நிப்பாட்டியிருக்கிறது. கருவழலைப் பாம்பிலும். வழலை எனும் சொல்லுக்கு ஒருவகைப் பாம்பு, ஒருவகை உப்பு, சவுக்காரம், புண்ணிலிருந்து வடியும் ஊனீர், கோழை, ஓர் மருந்து, எனப் பொருள் தருகின்றன அகராதிகள்.

சோப்பின், சலவைக் கட்டியின், சவுக்காரத்தின், வழலையின் Brand name ஒன்று Hamam என்றறிவோம் இன்று. அதனைத் தேய்த்துக் குளித்தாலும் மாற்று பிராண்ட் ஏதும் தேய்த்தாலும். நாம் நினைக்கலாம் Hamam  என்பது ஆங்கிலச் சொல் என்று. அன்று, அது அரபிச் சொல் என்கிறது அயற்சொல் அகராதி. சரி! அரபி மொழியில் Hamam என்ற சொல்லின் பொருள் என்ன? குளியலறை என்று பொருள் தருகிறார் பேராசிரியர் அருளி.

குளியலறையில் பயன்படுத்தப்படும் வழலைக்கு குளியலறை என்று பெயர் வைத்ததன் பொருத்தப்பாடு பற்றி தயாரிப்பாளர்கள் சிந்திக்காமல் இருந்திருக்க மாட்டார்கள். குளியலறையே இல்லாத, குளியலறையே பயன்படுத்தாத, முன்முற்றத்தில், புறவாசலில், ஆற்றங்கரை –குளத்தங்கரை, ஓடைப் படித்துறையில் குளிக்கும் பலரும் Hamam தேய்த்துக் குளிப்பவராக இருக்கலாம்.

அதுவே போல ஹர்த்தால் அல்லது அர்த்தால் என்று சொல்கிறோம் அல்லவா, அது Hartal எனும் ஆங்கிலச் சொல்லின் பிறப்பு. பொருள் கடையடைப்பு, கடையடைப்புப் போராட்டம். பலர் இதனை வடசொல் என்று நினைத்துக்கொண்டிருக்கலாம்.

ஹவில்தார் அல்லது அவில்தார் என்று காவல்துறையின் தொடக்கநிலை ஊழியரைச் சொல்கிறோம் இன்று. அந்தச் சொல் பாரசீக மொழிச் சொல். பொருள் படை அலுவலர். தொல்காப்பியரின் வழிகாட்டுதலின்படி Hartal எனும் சொல்லை அர்த்தால் என்றும் Havildar என்ற சொல்லை அவில்தார் என்றும் நீண்டகாலம் நம் மொழி பயன்படுத்துமேயானால் அச்சொற்கள் கடிசொல் இல்லை.

சென்னைத் தமிழுக்கும், சென்னையைத் தலைநகராகக் கொண்ட சினிமாத் தமிழுக்கும் எனப்பல சொற்கள் உண்டு. எவரேனும் அவற்றைத் தொகுத்து, அகர வரிசைப்படுத்தி, பொருளும் எழுதி வெளியிடலாம். சொந்தமாகத்தான் செய்ய வேண்டும். இதற்கெல்லாம் அரசு மானியம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தால், நீங்கள் ஆளுங்கட்சி ஆதரவாளராக இருத்தல் வேண்டும்.

பிஸ்தா என்றொரு சொல். நமக்குத் தெரிந்த பொருள் – விலையேறிய உலர் பருப்பு. சர்வ இயல்பாக, ‘அவனென்ன பெரிய பிஸ்தாவா?’ என்று கேட்கிறார்கள். அந்தச் சொற்றொடர் உணர்த்தும் பொருள் அயற்சொல் அகராதியிலும் இல்லை. ஆனால் அதே அகராதி, பிஸாத் எனும் சொல் இந்துஸ்தானி மொழிச் சொல், பொருள் – பயனற்றது, என்கிறது. நாஸ்தி எனும் சொல்லும் அயற்சொல் அகராதியில் காணக் கிடைக்கும். சமஸ்கிருதச் சொல், Nasti. பொருள் – இன்மை, அழிவு, நசிப்பு. ‘எல்லாத்தையும் நாஸ்தி பண்ணி வெச்சிருக்கான்’ என்றால் அதன் பொருள் புரிகிறது. ஆனால் நாஜுக் – நாசூக்கு என்றால் அது உருது மொழிச் சொல். பொருள் – அழகு, நயம், நேர்த்தி. மானுடரிடம் நாஸ்தியும் உண்டு, நாசூக்கும் உண்டு.

சரி கஸ்மாலம் எந்த மொழிச் சொல்? சமஸ்கிருத மொழிச் சொல், Kasmala. பொருள் – அருவருப்பு, அழுக்குக் கசண்டு, ஒழுக்கக்கேடு. சென்னைத் தமிழில் ‘பாடு’ என்றொரு வசவுச்சொல் கேட்டிருக்கிறேன். உச்சரிப்பில் அது Baad/Bhad/Bahd போன்று ஒலிக்கும். ஆனால் Baad, Bhad, Bahd போன்ற சொற்கள் ஆங்கில அகராதிகளில் இல்லை. வேறு எம்மொழிச் சொல்லாக இருக்கும்? பிணம் அல்லது சவம் எனும் பொருளில் Body –யைத்தான் பாடு என்கிறார்களோ என்றும் தோன்றியது. அயற்சொல் அகராதியிலும் ‘பாடு’ என்ற சொல் கண்டிலேன்.

சென்னை நண்பர்கள் பத்துப்பேருக்கு வாட்ஸ்ஆப் செய்தி அனுப்பினேன். ‘யாவரும்’ பதிப்பக உரிமையாளர், சிறுகதை ஆசிரியர், ஜீவ கரிகாலன் சொன்னார், Bawd எனும் ஆங்கிலச் சொற்பிறப்பே பாடு எனும் தமிழ்ப் பயன்பாடு என்று. பொருள் – பரத்தைத் தரகி, பரத்தைத் தரகர் என்கிறது சென்னைப் பல்கலைக்கழகத்து ஆங்கிலம், தமிழ்ச் சொற்களஞ்சியம். பதிப்பாசிரியர் டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியார். பதிப்பித்த ஆண்டு 1963. எனவே Bawd – பாடு என்றால் Pimp, மாமா வேலை பார்ப்பவன்.

எதற்கு பாடு என்ற சொல்லில் நின்று இடது பதம் தூக்கி நர்த்தனம் செய்து மனக்கசப்புடன் இந்தக் கட்டுரையில் நின்றும் வெளிநடப்புச் செய்ய வேண்டும்?

எனது பம்பாய் காலத்து நெருக்கமான நண்பர், கான்சாகிப் எனும் என் கதைக்கு ஆதாரமானவர், அசதுல்லா கான். அவர் ஞானபாநு எனும் புனைபெயரில் சென்னை வாராந்திரி ஒன்றுக்கு பம்பாய் செய்திகளும் கட்டுரைகளும் எழுதிக்கொண்டிருந்தார். இன்று பாநு எனும் சொல்லை அயற்சொல் அகராதியில் தேடியபோது எனக்கது கிட்டவில்லை. சென்னைப் பல்கலைக்கழகத்து Lexicon அந்தச் சொல்லைப் பதிவிட்டிருக்கவில்லை. ஆனால் திருப்புகழில் நாலைந்து இடங்களில் பாநு எனும் சொல்லைக் காணலாம். பதிப்புப் பிழையா அல்லது அச்சுப் பிழையா என்பதறியேன். திருவாசகத்தில், அச்சப்பத்து பகுதியில், மாணிக்கவாசகர், ‘புற்று வாள் அரவும் அஞ்சேன்’ என்பார். இன்றைய பதிப்புகள் ‘புற்று வாழ் அரவும் அஞ்சேன்’ என்று அச்சிடுகின்றன. மாணிக்கவாசகர் கருதிய வாளரவு என்பது விடமுள்ள பாம்பு. இன்று திருத்தி அச்சிடப்படும் வாழரவு என்பது வாழும் அரவு.

பாநுவுக்கு மாறாக அயற்சொல் அகராதியில் பானு என்ற சொல் கிடைக்கிறது. அயற்சொல் அகராதி, பானு எனும் சொல்லை சமற்கிருதம் – Bhanu என்கிறது. பொருள் – கதிரவன், அழகு, முதலாளி, தலைவன், அரசன்.

பானம் எனும் சொல்லும் சமற்கிருதம். பருகும் உணவு, மது எனப் பொருள்கள். பானுவாரம் என்றால் ஞாயிற்றுக்கிழமை. அன்று பானுவார் என்றிருந்ததைத்தான் இன்று ரவிவார் என்கிறார்கள். நாம் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்பதைத்தான் வடநாட்டவர் ரவிவார், சோமவார், மங்கல்வார், புத்வார், குருவார், சுக்ரவார், சனிவார் என்பார்கள். அவர்கள் தேவபாஷை, நாம் நீச்ச பாஷை! அவ்வளவுதான் வேறுபாடு!

பேரகராதி பானு எனும் சொல்லுக்குத் தரும் பொருள் ஆறு.

 1. Sun; சூரியன் (பிங்கல நிகண்டு)
 2. Brightness; ஒளி (பிங்கல நிகண்டு)
 3. Beauty; அழகு (யாழ் அகராதி)
 4. A treatise on architecture; சிற்ப நூல் வகை
 5. Master; எசமானன் (யாழ் அகராதி)
 6. King; அரசன் (யாழ் அகராதி)

பானுவை மேடுறுத்தி மேலும் சில சொற்கள் உண்டு.

பானு கம்பன்சிவகணங்களில் ஒருவன்
பானுகோபன்சூரபதுமன் மகன்
பானுபலைவாழை (யாழ் அகராதி)
பானு மத்தியம்மழை நிற்பதற்கு அறிகுறியாக சூரியன் புதனுக்கும் வெள்ளிக்கும் இடையில் நிற்கும் நிலை
பானு மைந்தன்சூரியனின் மகன். யமன், சனி, கர்ணன், சுக்கிரீவன்
பானு வாசரம்பானு வாரம், ஞாயிற்றுக்கிழமை, Sunday.

வேறுமொரு சொல் தமிழனுக்குத் தெரியும், ஆனால் அச்சொல் பேரகராதியில் இல்லை – சினிமா நடிகையின் பெயர். நல்ல நடிகை, நல்ல பாடகி, எழுத்தாளரும் ஆவார். எத்தனை ஆண்டுகள் கடந்து போனாலும் தமிழருக்கும் தமிழ் ஊடகத்தாருக்கும் திரைப்பட நடிகையின் பெயர், அவர் அபிநயித்த சினிமாக்கள், அவர் குறித்த சம்பவங்கள், பெற்ற விருதுகள், செய்துகொண்ட மணங்கள், மணமுறிவுகள், இரண்டும் இல்லாத வணிக – சமூக – அரசியல் களவொழுக்கங்கள் யாவும் சமய நூல் செய்திகள் போலிங்கே பேணப்படும், நினைவூட்டப்படும், கொண்டாடப்படும். படிதாண்டாப் பத்தினி – முற்றும் துறந்த முனிவன் எனும் உவமை இன்றும் பேரறிஞர் ஒருவரின் பெரும்புகழ் மங்கலமாக இதிகாசச் செய்திபோல் நினைவுகூரப்படுகிறது.

உலகில் எத்தனை ஆயிரம் மொழிகள், எழுத்துரு இருந்தும் இல்லாமலும்? அது அம்மொழி பேசுபவரின் உயிர்மொழி. அம்மனிதனின் மரபின், பண்பாட்டின், இசையின், தெய்வத்தின் மொழி! “எங்க அம்மா செய்யக்கூடிய வத்தக்குழம்பு / எரிசேரி / சொதி / பொரிச்ச கூட்டு / மொளகூட்டல் / சம்பல் / புளிசேரி போல் உலகில் எவராலுமே வைக்க முடியாது!” போன்ற கூற்றுக்களின் ஆதாரம் அறிவல்ல, உணர்வு. மொழியும் அவ்விதமே! மனிதன் பேசும் மொழி அனைத்துமே அவனவன் தேவனின் மொழிதான். ஹீப்ரு, அராமிக், இலத்தீன், கிரேக்கம், அரபி, உருது, சீனம், சமற்கிருதம், தமிழ் எனும் மொழிகள் அறிந்திருப்பவரே கடவுள் என்றால் அவர் என்ன கடவுள்? அம்மொழிகள் அறியா மானுடவர்க்கு அவர் வாடகைக் கடவுளா? குத்தகைக் கடவுளா?

https://tamizhini.in/2021/12/24/மேலும்-சில-சொற்கள்/
Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

பெட்டை, பெடை, பேடை, பேடு, பேடி

…..

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நேர்பு

நாஞ்சில் நாடன்

நேர் எனும் சொல் விரிவான பொருள்களைக் கொண்டது. நொச்சி நிலமங்கிழார் ஒரு பாடலில், பொன் நேர் புதுமலர் வேண்டிய குறமகள்’ என்பார். பொன் போன்ற புதுமலர் கொய்ய எண்ணிய குறமகள் என்பது பொருள். நக்கீரர் ‘மின் நேர் மருங்குல்’ என்பார். மின்னலை ஒத்த இடை என்று பொருள். மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார் பாடல் ‘பொன் நேர் பசலை பாவின்று மன்னே! என்கிறது. தலைவிக்குப் பொன்னிறம் ஒத்த பசலைநோய் பரவிற்று என்று பொருள். அம்மூவனார் பாடல் ‘நெல்லின் நேரே வெண்கல உப்பு’ என்று பேசும். உமணரின் மகள் கைவளை ஒலிக்க ஒரு கை வீசி நடந்து ஒருபடி நெல்லுக்கு ஒரு படி உப்பு என விற்கிறாள். சொல்லப்பட்டவை யாவும் அகநானூற்றுப் பாடல் வரிகள். பிற பாட்டும் தொகையும் நான் தேடப்புகவில்லை. மேற்கோள் சொன்ன பாடல்களில் நேர் என்றால் போல, போன்ற, ஒத்த, சமமான என்று பொருள்.

நேர் என்றால் முன்னால் என்பது இன்னொரு பொருள். எனக்கு நேருக்கு நேரே வரச்சொல்லு அவனை’ என்பார்கள். எனிக்கு அவன் நேரா? என்பர் மலையாளத்தில். பொருள் – எனக்கு அவன் சமமா? கரகரப்பிரியா இராகத்தில் தியாகய்யரின் தெலுங்குக் கீர்த்தனை ஒன்று ‘ராமா நீ சமானமெவரு? என்று தொடங்கும். இராமா உனக்கு நிகரானவன் எவருண்டு என்பது பொருள்.

ஊர்ப்புறங்களில் சாதாரணமாகச் சொல்வார்கள், ‘‘நமக்கிந்த கோண வழி குறுக்கு வழியெல்லாம் தெரியாது. நம்ம வழி நேரே வா, நேரே போ” என்று. இங்கு நேர் என்றால் Straight என்று பொருள். நேர்படப் பேசு என்றால் நேருக்கு நேராகப் பேசு, நியாயமாகப் பேசு, அச்சமின்றிப் பேசு, தயக்கமின்றிப் பேசு, உண்மையைப் பேசு என்று பொருள்.

குறுந்தொகையில் ஒரு சிறைப் பெரியன் பாடல் –

‘நனந்தலைக் கானத்து இனம் தலைப்பிரிந்த
புன்கண் மடமான் நேர்பட’

என்று பேசும். கொடிய கானகத்தில் தன் இனத்தைப் பிரிந்த இருமான்களுள் வருத்தமான கண்களையுடைய பெண்மான் முன்னால் நிற்கும்போது என்று பொருள். இங்கு நேர்பட என்றால் கண்முன்னால் என்று பொருள்.

நேர் எனும் சொல் ஒற்றைப் பரிமாணச் சொல் அல்ல என்பதால் சற்று விரிவாகப் பார்க்கலாம் என்று தோன்றியது.

எதிர் எனும் சொல் எதிர்ப்பொருள் என்றால் நேர் எனும் சொல் நேர்ப்பொருள். நேர் எனும் சொல்லுக்கு இருபத்தோரு பொருள்கள் தரப்பட்டுள்ளன அகராதிகளில். அறிந்து கொளல் அவசியம் எனக் கருதுவதால் அனைத்துப் பொருள்களையுமே பட்டியலிடுகிறேன்.

 1. Straightness, Directness, செவ்வை.

எவராகிலும் வழி கேட்டால், நேர் கிழக்காகப் போங்க” என்கிறோம் அல்லவா? அந்த நேர்.

 1. Rightness, Justness, Impartiality, நீதி.

நேர் எனும் சொல்லின் பிறப்புத்தானே நேர்மை எனும் சொல். நேர்மாறாகச் சொன்னான் என்றால் நீதிக்கும் உண்மைக்கும் புறம்பாகச் சொன்னான் என்றும் பொருள்.

 1. Morality, Virtue, Honesty, நல்லொழுக்கம்.
 2. Resemblance, Similarity, Comparison, உவமையாகச் சொல்லும் தன்மை.

திருவாசகத்தின் திரு அண்டப்பகுதியில் மாணிக்கவாசகர்,

‘தன் நேர் இல்லான் தானே காண்க’ என்பார். தனக்கு ஒப்பும் உவமையும் இல்லாதவன் என்பது பொருள்.

 1. Refinement, Nicely, திருத்தமான தன்மை. நேரிழை, நேரிழையாய், நேரிழையீர் எனும் சொற்கள் தொல்லிலக்கியங்களில் பரவலாக ஆளப் பெற்றுள்ளன.

மாணிக்கவாசகர் திருவெம்பாவையில்,

“பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல் நாம்
பேசும் போது! எப்போது இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய்! நேரிழையீர்” என்பார்.

 1. Opposition, மாறுபாடு.
 2. Length, Extension. நீளம் என்று பொருளுரைக்கும் சூடாமணி நிகண்டு.
 3. Row, Series, Regularly, வரிசை.
 4. Agreement, Consent, Settlement. உடன்பாடு என்று பொருளுரைக்கும் திவாகர நிகண்டு.
 5. Half, Moity, பாதி (திவாகர நிகண்டு)

எனவே நேர்ப்பங்கு என்றும், நேர்பாதி என்றும் சொல்கிறோம் போலும்.

 1. Gift. கொடை (சூடாமணி நிகண்டு)
 2. Minuteness, Smallness, Fineness, Slenderness, நுண்மை.

நேரிடையாள் எனும் சொல்லின் பொருள் சின்ன, நேர்த்தியான, நுண்ணிய இடையாள் என்பதுதானே! மாணிக்கவாசகர் அருட்பத்து பகுதியில், துடிகொள் நேரிடையாள் சுரி குழல் மடந்தை’ என்பார். துடி என்றால் ஒரு வாத்தியம், உடுக்கை போல. கன்னடத் திரைப்படம் ‘சோமன துடி’ அதன் பொருள் சோமனின் உடுக்கை போன்ற தோல் வாத்தியம் என்பது. வன்கண் கருந்துடி’ என்னும் புறநானூறு, உறையூர் மருத்துவன் தாமோதரனார் பிட்டம் கொற்றனைப் பாடிய பாடலில். துடி அடு நுண் இடை தொண்டை அம் செவ்வாய்’ என்னும் சீவகசிந்தாமணி. துடியை ஒத்த நுண் இடை, கோவைக்கனியொத்த செவ்வாய் என்று பொருள். கம்பர் பாலகாண்டத்தில், துடி இடை பணை முலை தோகை அன்னவர்’ என்பார். துடி ஒரு வாத்தியம் என்பதற்கு, கம்பர், யுத்தகாண்டத்தில், கம்பலி உறுமை, தக்கை, கரடிகை, துடி, வேய், கண்டை’ என வரிசைப்படுத்துவார்.

 1. Tendency, Course, Direction, கதி.

‘கதிக்கக் கிழக்கே’ என்று திசை சொல்வார் எம் நாட்டில். அஸ்வம் என்றால் குதிரை. குதிரையின் நடையை ‘அஸ்வ கதி’ என்பர்.

 1. Affirmative answer, உடன்பாட்டை நேரே குறிக்கும் விடை.

Direct, Straight answer. நேராகச் சொல்லும் விடை.

“கேட்டதுக்கு நேரா பதில் சொல்லு” என்பார்கள்.

 1. Solitariness, Solitude, தனிமை (திவாகர நிகண்டு)
 2. Firmness. உறுதியான நிலைப்பாடு
 3. Excess, Excessiveness, மிகுதி (திவாகரம்)
 4. Strength, வலிமை
 5. Verticality, செங்கோட்டு நிலை, நிமிர்வு நிலை, ஊர்த்துவ நிலை.
 6. Front, முன், முன்னால்
 7. நேரசை. கல்லூரி நாட்களில் வாசித்திருக்கிறோம் நேர் நேர், நேர் நிரை, நிரை நேர், நிரை நிரை என்று. எனவே நேர் என்றால் நேரசை என்றும் பொருள்.

நேர் எனும் சொல்லுக்கு நுட்பமான இருபத்தோரு பொருள் எனில் நேர் எனத் தொடங்கும் சொற்கள் எத்தனை கிடைக்கும் மொழிக்குள்? சரிக்கட்டுதல் என்றொரு பிரயோகம் உண்டு மொழிக்குள். ஏ! அவனை முதல்ல சரிக்கட்டுப்பா” என்பர். To Settle amicably. நேர்கட்டுதல் எனும் சொல்லுக்கு யாழ்ப்பாண அகராதி சரிக்கட்டுதல் என்று பொருள் சொல்லும். அதே அகராதி நேர்கடன் என்ற சொல்லுக்கு நேர்த்திக்கடன் அதாவது நேர்ச்சைக்கடன் என்று பொருள் தருகிறது.

சரி! நேர் காட்டுதல் என்றால் என்ன? சற்று ஆழமான பொருளுடைய சொல்லென அறிகிறோம். பதினோரு பொருள்கள் காணலாம்.

 1. To face, look forward, எதிர்பார்த்திருத்தல்
 2. To aim at, direct towards, ஒரு திசை நோக்கிச் செலுத்துதல்
 3. வரிசையாக வைத்தல்
 4. To Kill, Murder, கொல்லுதல். குழூஉக்குறிபோல் பயன்படுத்தி விடலாம் போல. ஏ! அவனை நேர் கட்டுப்பா! என்றால் ‘அவன் கணக்கைத் தீத்திரு, சோலியை முடிச்சிரு, சரியாக்கீரு, குழிச்சு மூடீரு’ என்ற பிரயோகங்களுக்கு இணையானது.
 5. To expose, as to beasts of prey. முன் காட்டுதல். வேட்டையின்போது, வேட்டையாட உத்தேசிக்கும் விலங்குக்கு அதன் இரையைக் காட்டுதல். தேர்தல் காலத்து பிரியாணி, கால் குப்பி மது போல.
 6. சரியாக மரத்தைப் பிளப்பதற்கு வெட்டிக் காட்டுதல்.
 7. நீர்க்கால் மாற்றுதல்
 8. சாகக் கிடப்பவரை மரணக் கிடையாகக் கிடத்துதல்
 9. ஏர் நடத்துதல்
 10. விழுங்குதல்
 11. நீட்டி நிமிர்ந்து படுத்தல்

நேர் காட்டுதலின் எட்டாவது பொருளுக்கு கவலும் காலம் அச்சமூட்டுவது. ஆனால் நேர் காற்று என்றால் அனுகூலமான காற்று, நேர் கூறு என்றால் சரிபாகம், நேர் கொடு நேரே என்றால் Directly, Openly, வெளிப்படையாக. நேர்கொண்டு இயங்கும் மேலும் பல சொற்கள் உண்டு நம் நேர்.

நேர்ச்சி

 1. Tendency, Direction, போக்கு
 2. Adaptation, Filtness, Appropriateness, தகுதி
 3. Consent, Agreement, Harmony, சம்மதம்
 4. Vow, பிரதிக்ஞை, சூளுரைத்தல்
 5. Friendliness, Amity, Love, நட்பு
 6. நேர்த்தி

நேர்சீர்

 1. ஒழுங்கு
 2. மன ஒற்றுமை
 3. தகுதிக்கேற்ப நடத்துதல்.

எனில் நாம் தலைவர்களை, நடிகர்களை, அறிஞர்களை நேர்சீராக நடத்தப் பயில வேண்டும்.

நேர் சோழகம் – நேர் தென்றல்

நேர்த்தரவு – குற்றம் பொறுத்தோம் என அதிகாரம் நேரில் கூறும் ஆணை.

நேர் தரவு என்றும் இச்சொல் காணப்படுகிறது.

நேர்த்திக்கடன் – இறைவனுக்கு அல்லது இறைவிக்கு நேர்ந்து கொள்ளும் பிரார்த்தனை. காவடி, பால்குடம், அலகு குத்துதல், மொட்டை, ஆடு, கோழி, மண்சோறு, அங்கப் பிரதட்சணம், கூழ் ஊற்றுதல், மரக்கன்று நடுதல், கண்மலர், கை, பாதம் செய்து வைத்தல், பட்டு வாங்கி சாத்துதல், பானகம் ஊற்றுதல், கஞ்சி ஊற்றுதல் என எண்ணிலடங்கா நேர்த்திக் கடன்கள் உண்டு.

நேர் தப்புதல் – நேர்மை தவறுதல்

நேர்த்தி

 1. Excellence, Elegence, சிறப்பு
 2. திருத்தமானது
 3. நேர்த்திக்கடன்
 4. நேர்ச்சி
 5. Effort, Labour, முயற்சி

நேர்ந்தபடி

 1. At random, முறையின்றி
 2. At pleasure, விருப்பப்படி
 3. முன் யோசனையின்றி

நேர்ந்த போக்கு – முரட்டுப் பிடிவாதம்

நேர்ந்தார் – Friends, நட்பினர் (பிங்கலம்)

சில சமயம் நண்பர்களுக்கு என் புத்தகங்களைக் கையெழுத்திட்டுக் கொடுக்கும்போது, பெயர் எழுதும் முன் ‘நெஞ்சம் நேர்ந்த’ என நான் எழுதியதுண்டு.

காப்புக் கட்டுதலுக்கு நேர்ந்து கட்டுதல் என்றும், வேண்டிக் கொள்ளுதலுக்கு நேர்ந்து கொள்ளுதல் என்றும், சம்பவித்தல் அல்லது மெலிதலுக்கு நேர்ந்து போதல் என்றும், நேர்ச்சைக்காகக் கோயிலுக்கு ஆடு கோழிகளை விடுதலை நேர்ந்து விடுதல் என்றும், வேண்டுதலுக்காக ஒரு பொருளை மாற்றி வைத்தலை நேர்ந்து வைத்தல் என்றும் சொன்னார்கள். அடுத்து இருக்கும் சித்தப்பா, பெரியப்பா அல்லது மாமா வீட்டுக்கு எடுபிடி வேலைகள் செய்து கொடுத்துத் தொண்டூழியம் புரியும் தன்வீட்டுப் பையனை இளக்காரமாக, அவனை அவ்வோ வீட்டுக்கு நேர்ந்து விட்டிருக்கு” என்று கேலி செய்வார்கள்.

நேர் நஞ்சு என்ற சொல்லுக்கு கல்மதம் எனும் விடம் என்று பொருளுரைக்கும் சங்க அகராதி. Rock alum என்பர் ஆங்கிலத்தில். நேர்நிலை வஞ்சி என்றொரு இலக்கணம் உண்டு என்பர். அதை விளக்கும் புரிதல் இல்லை எனக்கு.

மேலும் சில நேர் எனத் தொடங்கும் சொற்கள் காணலாம்.

நேர் நிற்றல் – சமமாக நிற்றல். சரிக்குச் சரியாக நிற்றல்.

To stand equal. பரிபாடல், குன்றொடு நேர் நிரந்து’ என்கிறது. குன்றுக்குச் சமமாக நின்று என்று பொருள்.

நேர் நிற்றல் – 1. எதிர் நிற்றல் 2. ஒழுங்காய் நிற்றல்

நேர் நிறை – 1. சரிபாகம் 2. நீதி 3. கற்பு

நேர்படுதல் – 1. சந்தித்தல் 2. நன்கு பயிலுதல் 3. சம்பவித்தல் 4. ஏற்புடையதாதல் 5. வாய்த்தல் 6. காணப்படுதல் 7. எதிர்ப்படுதல் 8. ஒழுங்குபடுதல் என ஒன்பது பொருள்கள் தரப்பட்டுள்ளன.

நேர்ப்படுத்துதல் என்றால் குணப்படுத்துதல், சுகப்படுத்துதல் என்று பொருள். அவன் சுகக்கேட்டை நேராக்கீரலாம்” என்பார் எங்களூர் நாட்டு வைத்தியர். நேர் பண்ணுதல் என்றால் ஒழுங்குபடுத்துதல், ஐக்கியப்படுத்துதல், ஆணையிடுதல் எனப் பொருள்கள் உண்டு. கணக்கை இப்பத்தான் நேர் பண்ணீட்டு வாறன்” என்பார்கள். நேர்ப்பு என்றொரு சொல் கண்டேன், நேர்த்தி எனும் பொருளில். செய்நேர்த்தி என்பதை செய்நேர்ப்பு என்றும் சொல்லலாம்.

நேர்பாடு செயற்பாடு என்றொரு சொற்றொடர் இருக்கிறது. வாய்ச்சொல் பலித்தல் என்பது பொருள். சிலர் ஒரு வார்த்தை சொன்னால் அது பலித்துவிடும். எங்கள் ஊரில் கருநாக்கு என்பார்கள். ஆனால் நேர்பாடு என்ற சொல் 1) தற்செயலான நிகழ்ச்சி 2) உபாயம் 3) சம்மதம் 4) நீதி 5) நீளம் 6) நேர்த்திக்கடன் என ஆறு பொருளில் வழங்குகிறது.

அஃதேபோல் நேர்பிடித்தல் என்றால் 1) நேர்வழி செலுத்துதல் 2) முடிவுக்குக் கொண்டு வருதல் 3) சரிப்படுத்துதல் 4) சமாதானப்படுத்துதல் 5) சுகமாதல் 6) சாதல் என ஆறு பொருள்கள்.

நேர் போதல் என்றால் இணங்குதல். இன்று நாம் அறிந்த சொல் நேர்முகம். அதன் மாற்றுச் சொற்கள் பேட்டி, செவ்வி, நேர்காணல், இன்டர்வியூ. யாழ்ப்பாண அகராதி நேர்முகம் என்றால் எதிர்முகம், அதாவது எதிரே காணும் முகம் என்கிறது. நேர் பாதையையும் நல்லொழுக்கத்தையும் குறிக்க நேர்வழி என்றொரு சொல்லை அறிகிறோம். நம்ம வழி நேர் வழி” என்றனர் முந்தைய தலைமுறையினர்.

நேர்பசை என்ற சொல் இலக்கணத் தொடர்பு உடையது. நேர்+பசை அல்ல. நேர்பு+அசை. குற்றியலுகரம் முற்றியல் உகரங்களோடு இசைந்து வரும் நேரசை என்று பொருள். நேர்பு என்ற சொல்லுக்கும் நேர்பசை எனும் பொருளே தரப்பட்டுள்ளது. தொல்காப்பியப் பொருளதிகார நூற்பா

‘‘இருவகை உகரமொடு இயைந்தவை வரினே
நேர்பும் நிரையும் ஆகும் என்ப”

என்று விளம்பும். குற்றியலுகரம், முற்றியலுகரம் எனுமிரு உகரங்களோடு இயைந்து வரின் நேர்பு, நிரைபு என அசைகள் அமையும் என்பது பொருள். நேர், நிரை இயலசை என்றும் நேர்பு, நிரைபு உரியசை என்றும் விளக்கமும் உண்டு. மீண்டும் அரிச்சுவடியில் ஏடு தொடங்கித் தமிழ் கற்க வேண்டும் என்று தோன்றுகிறது.

நேர்பு எனும் சொல்லுக்கு நேர்பு அசை எனும் பொருள் அல்லாது வேறு பொருள்கள் – நீளம் (சூடாமணி நிகண்டு), எழுச்சி (சதுரகராதி), சந்திப்பு, நிகழ்ச்சி, போக்கு என்பன. எதிர்பு எனும் சொல் எதிர்காலம் எனில், நேர்பு எனும் சொல் நிகழ்காலம் ஆகும்.

அன்றாடம் ஆயிரம் முறை நாம் செவிப்படும் சொல் நேர்மை. அகராதிகள் நேர்மைக்கு ஒன்பது பொருள் தருகின்றன.

 1. செம்மை, Straightness, Directness
 2. உண்மை, Faithfulness, Fidelity, Honesty
 3. நீதி, Impartiality, Justness
 4. அறம், Morality, Virtue
 5. நுண்மை, Fineness, Thinness, Minuteness
 6. திருத்தம், Accuracy, Exactness, Correctness
 7. சமம், Equivality, Uniformity
 8. இசைவு, Harmony, Agreement
 9. நன்னிலை, Good condition

என்ன அற்புதமான அறம் சார்ந்த பொருள்கள் தருகிற சொல்லாக இருக்கிறது நேர்மை! செம்மை, உண்மை, நீதி, அறம், நுண்மை, திருத்தம், சமம், இசைவு, நன்னிலை ஒன்பான் பொருள்களும் மேன்மையானவை. பாவநாசம் சிவன் எழுதிய கல்யாணி ராகப் பாடலில் ஒரு வரி ‘நீயே மீனாட்சி, காமாட்சி, நீலாயதாட்சி’ என்று வளரும். நேர்மை எனும் சொல்லை நினைக்கையில் சங்கரன் நம்பூதிரியின் குரலில் அந்த வரி காதில் நிறைக்கிறது. அச்சொல்மீது நமக்குக் கொதி ஏற்படுகிறது.

அந்தக்காலத்து கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் பாடுவார் – “எங்கே தேடுவேன்? பணத்தை எங்கே தேடுவேன்? என்று. பிற்காலத்தில் ஒரு சினிமாவில் “இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம்தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே! என்று வேறொருவர் இறைவனைத் தேடுவார்.

இன்று அந்தப் பாடல்வரிகளை நேர்மைக்கும் பொருத்திப் பார்க்கலாம். ஆன்மீக, கலை, அறிவு, அரசியல், அதிகார, சமூக வழிகாட்டிகளிடம் இருந்து தேடத்துவங்க வேண்டும். மிகச்சிலரிடம் நேர்மைக்கான தடயங்கள் இருக்கக்கூடும். அவை மரபணுக்களின் எச்ச சொச்சமாகவும் இருக்கலாம்!

கம்பர் கூறுவார் ஒரு பாடலில் – ஆரணிய காண்டம், அகத்தியப் படலம் –

‘இரக்கம் என்று ஒரு பொருள் இலாத நெஞ்சினர்,
அரக்கர் என்று உளர் சிலர்அறத்தின் நீங்கினார்’

என்று. அதேபோன்றே நேர்மையைத் தேடினாலும் நேர்மையில்லாதவர் என்போர் எவராயினும் அவர் அரக்கரே! அரக்கர் என்போர் கம்பராமாயணம் கூறும் இலங்கைக் குடிமக்கள் மட்டுமல்ல. உலகெங்கும் நிறைந்துள்ளனர். அடையாளம் கண்டாலும் நாம் காணாதவர் போல் நடிக்கிறோம். நேர்மை என்று ஒரு பொருள் இலாத நெஞ்சினர் என்று மாற்றி எழுதி விடலாம்.

எவரிடம் சென்று முறையிடுவது? மானவதி இராகத்தில் தியாகராசரின் தெலுங்குக் கீர்த்தனை ‘எவரிதோ நே தெல்புது ராம’ என்று பல்லவியில் தொடங்கும். ஆம்! எவரிடம், எங்கு சென்று முறையிடுவது?

இசைத்தமிழில் நேர்வளம் என்றொரு சொல் இருக்கிறது. பொருள் 1) செவ்வழி யாழ்த்திறம் 2) பாலை யாழ்த்திறம் என்பன.

ஒன்று இன்னொன்றை ஒத்திருந்தால், அதனைக் குறிக்க நேர்வாதல் எனும் சொல்லைப் பயன்படுத்தினர். சித்திரையைக் குறிக்கும் இன்னொரு சொல் நேர்வான். நேர் விடை என்றால் உடன்பாட்டை நேராகக் குறிக்கும் விடை என்பதாம்.

நேர்பு என்ற சொல்லைப் போல, நேர்வு என்றும் ஒரு சொல் இருந்திருக்கிறது. சம்பவம், உடன்பாடு, கொடுத்தல், வேண்டுதல், எதிர்கை, பொருதல், சரிந்து வீழ்தல் என ஏழு பொருள்கள் கொண்ட சொல்.

நேர எனும் சொல்லொரு உவமை உருபு. நேரதுடைத்து’ என்றால் அதற்கு இது நேர் என்பது பொருள். நேரசை என்ற இலக்கணக் குறிப்பும் அறிந்திருப்போம். குறிலோ நெடிலோ தனித்தோ ஒற்றடுத்தோ வரும் அசை நேரசை. க, கா, கல், கால் என்பன நேரசை. இதுவே போல் நிரையசைக்கும் இலக்கணம் தரப்பட்டுள்ளது. குறிலிணை, குறில் நெடில், தனித்தோ ஒற்றடுத்தோ வருவது பல, பலா, பலர், சிறார் என்பன நிரையசை.

எதிர் எனும் சொல் பற்றி ஒரு கட்டுரை எழுதி முடித்த பின்னர் நேர் எனும் சொல் பற்றிய கட்டுரை இது. இரண்டு கட்டுரைகளையும் எழுதி வரும் காலை எனக்கெழுந்த ஐயத்தை எவரேனும் தீர்த்து வையுங்கள். எதிர்மறை என்றொரு சொல்லுண்டு. பொருளும் அறிவோம். சமகாலத்தில் நேர்மறை என்றொரு சொல்லை, எதிர்மறைக்கு எதிர்ப்பதமாகப் பயன்படுத்துகிறார்கள் அறிஞர், புலவர், ஆசிரியர், எழுத்தாளர் எனப் பல வகையினரும்.

எனது ஐயம், நேர்மறை என்றால் என்ன?

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

செருப்பிடைச் சிறுபரல்!

நாஞ்சில் நாடன்

ஏழு மாதங்களாக, கனடாவின் டொரண்டோ மாநகரின் MACA  அமைப்புக்காக, கம்பன் சொல்லிக் கொண்டிருக்கிறேன். மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமையில். இத்தரத்தில் 2022 இறுதிக்குள் பூரணமாகக்கூடும்! அது சொற்பொழிவு அல்லது பேருரை அல்ல, பட்டிமன்றம் அல்ல, வழக்காடு மன்றம் அல்ல, மேல் முறையீட்டு வழக்காடு மன்றம் அல்ல, பாட்டு மன்றம் அல்ல. கதா காலட்சேபமோ, கதாப்ரசங்கமோ, கதா கஹனோ, கதை கூறலோ அல்ல. வகுப்பெனக் கொளலாமோ எனில் யாம் ஆறு இலட்சம் பணம் கொடுத்து முனைவர் பட்ட ஆய்வேடு எழுதி வாங்கியவனோ, அறுபது இலட்சம் பணம் கொடுத்து பேராசிரியர் பணி விலைக்கு வாங்கியவனோ அல்ல! கம்பனில் பெற்ற அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வது எனில் தகும்! 

எனது நோக்கம் கம்பனின் கவி ஆளுமை, மொழிப் பயன்பாடு, சொற்பெருக்கு, கற்பனை வளம், காட்சி அமைப்பு, உரையாடல் செறிவு இவற்றின் சிறப்பை எடுத்துரைப்பதேயாம். அவன் காப்பியத்தை எரிக்கச் சொன்னவரெல்லாம் எரியுண்டு போனார்கள்; ஆனால் படைப்பு வாழும் தமிழ் நின்று நிலவும் வரை.

2021-ம் ஆண்டின் செப்டம்பர் 11-ம் நாள் மூன்றாவது காண்டமான ஆரண்ய காண்டம் ஆரம்பித்து சொல்வது என் திட்டம். தொடங்கியதில் இருந்து எமது ஏழாவது அமர்வு அது. தோராயமாக இரண்டு மணி நேரம் நிகழ்ச்சி. ஒன்றரை மணித்தியாலம் எனது சொல்லல். அரை மணிக்கூர் உரையாடல் என அமைத்துக் கொண்டிருக்கிறோம். ஏறத்தாழ முப்பத்தைந்து அல்லது நாற்பது பாடல்கள் சொல்ல இயலும். அந்தப் பாடல்களை நானூறுக்கும் குறையாத பாடல்களை வாசித்துத் தேர்ந்தெடுப்பேன்.

கதைப் போக்கு, கதாபாத்திரங்களின் தனிச் சிறப்பின் வெளிப்பாடு, உணர்ச்சிப் பாங்கு, கவிதை நயம், சொற் பயன்பாடு, சந்தம், உவமைகள் முதலானவை எனது அளவுகோல்கள்.

ஆரண்ய காண்டத்தில் முதலைந்து படலங்கள் அன்றைய திட்டம். அதாவது சூர்ப்பணகைப் படலம் வரைக்கும். திரைத்தாரகை போன்ற தெய்வீக ஒப்பனைகளுடன் உருமாறிய சூர்ப்பணகை இராமனை வசீகரிக்க முயன்று தோற்றாள். சீதையின் இருப்பால்தான் தன்னைப் பொருட்படுத்த மறுக்கிறான் என்ற நினைப்பில், இராமன் நீர்த்துறையில் நிற்கும் நேரம் ஓர்ந்து, அவளைத் தூக்கிச் சென்று கரந்து வைக்கலாம் என்ற எண்ணத்துடன் சீதையை நெருங்குகிறாள். சோலையினுள் இருந்த இலக்குவன் அவளின் தீய நோக்கம் தெரிந்து, சூர்ப்பணகையின் முலைக்காம்புகளையும் மூக்கையும் செவிகளையும் துணிக்கிறான்.

பெருஞ்சோரிப் பெருக்கும் வலியும் துன்பமும் அவமானமும் மிக சூர்ப்பணகை ‘இராவணவோ, இராவணவோ’ என ஓலமிடும் பல பாடல்களில் ஒரு பாடல் –

“உருப்பொடியா மன்மதனை ஒத்துளரே ஆயினுமுன்

செருப்படியின் பொடி ஒவ்வா மானுடரைச் சீறுதியோ?

நெருப்படியில் பொடி சிதற நிறைந்த மதத் திசையானை

மருப்பொடிய பொருப்பிடிய தோள் நிமிர்ந்த வலியோனே!”

என்பது.

கால்களைப் பூமியில் பதித்து நடக்கும்போது எழும் துகள்களில் நெருப்புப் பொறி சிந்தும் வலிமை உடைய இராவணனே! மதம் பெருகிப் பொழியும் திசையானைகள் எட்டினையும் தந்தங்கள் ஒடிந்து போகும்படியாகவும் மலைகள் இடிபடவுமான இருபது நிமிர்ந்த தடந்தோள்களை உடையவனே! சிவனின் சினத்தால் நீறாக்கப்பட்ட மன்மதனைப் போன்றவர் இராம இலக்குவர். என்றாலும் உன் செருப்பின் கீழே உள்ள பொடிக்குக் கூட ஒப்பாக மாட்டார்கள். இந்த மானுடரைச் சினந்து சீற மாட்டாயா? – இது பாடலின் பொருள்.

பாடலை வாசித்துப் பொருளும் அறிந்து கொள்ளும் காலை, என் கவனம் ஈர்த்த சொல் செருப்பு. அயோத்தியா காண்டத்தில் பல பாடல்களில் பாதுகை, பாதுகம் எனும் சொற்கள் ஆண்டிருக்கிறார் கம்பர். அவை வடசொல்லின் தமிழாக்கம். அதுபோன்றே பாதரட்சை எனும் சொல்லும்.

செருப்பைக் குறிக்கத் தமிழில் பாதக்குறடு, பாதரட்சை, பாதுகை, பாதுகம், மிதியடி, காலணி என்ற சொற்கள் உண்டு. சப்பாத்து என்பது போர்த்துக்கீசியச் சொல் என்கிறது அயற்சொல் அகராதி. செருப்புக்கு மாற்றாக இன்று நாம் பயன்படுத்தும் சப்பல் எனும் சொல் எம்மொழிச்சொல் என்று தேடவேண்டும். சப்பல் எனும் சொல் இந்தி மூலம் என அறிகிறேன். Cappal என்று ஒலிப்பு. சில ஆங்கில அகராதிகள் Chappal எனும் சொல்லுக்கு Slipper என்று பொருள் தந்துள்ளன. சப்பல் எனும் சொல் செருப்பு எனும் பொருளில் தமிழின் எந்த அகராதியிலும் இல்லை. மலையாளம் செப்பல் என்றும் தெலுகு செப்பலு என்றும் புழங்குகின்றன. ஜுத்தா என்பது இந்தி. செருப்புக்கும் ஷுவுக்குமான பொதுச்சொல் அது. பாதுகா, பாதரக்ஷா எனும் ஆதி வடசொற்களை அன்றாட வழக்கில் இன்று பயன்படுத்துகிறார்களா என்பதறியேன்.

அகராதிகளில் தேடியபோது, காறொடு தோல், கழறொடு தோல் என இரு சொற்றொடர் கண்டேன்.  மிரண்டு நிற்கவேண்டிய அவசியம் இல்லை. கால்+தொடு+தோல் = காறொடு தோல். கழல்+தொடு+தோல்=கழறொடு தோல். செருப்பைக் குறித்த பழஞ்சொற்களே அவை. கொங்கு நாட்டில் இன்றும் ‘செருப்பைத் தொட்டுக்கிட்டுப்  போ’ என்பார்கள். பொருள் – செருப்பு அணிந்து போ என்பதுவே!

கம்பன் ‘செருப்பு’ என்றதுமே, எனக்கு முதலில் தோன்றிய வியப்பு அது ஆயிரமாண்டுப் பழஞ்சொல்லா என்பது. கம்பனுக்கும் முன்னால் அச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதா என சற்றுத் துழாய்ந்து பார்க்கலாம் என்று தோன்றியது.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான ஆசாரக்கோவை, பெருவாயின் முள்ளியார் எழுதியது. நூறு பாடல்கள் கொண்டது. 

“யாதொன்றும் ஏறார் செருப்பு, வெயில் மறையார்;

ஆன்றவிந்த மூத்த விழுமியார் தம்மோடு

ஆங்கோர் ஆறு செல்லும் இடத்து”

என்பன சில வரிகள்.

பலவும் கற்றுத் தேர்ந்து தெளிந்து அடங்கிய மூத்த ஞானியருடன் வழிப்பயணம் மேற்கொள்ளும்போது, அவருடன் செல்வோர் வாகனங்களில் ஏறமாட்டார், செருப்பு அணிய மாட்டார் வெயிலுக்கு நிழல் தேடி மரத்தடியில் ஒதுங்கமாட்டார் என்பது பொருள். இன்று அவ்விதமானதோர் தொண்டர் குழாம் அல்லது அடியார் திருக்கூட்டம் தொழுது பின்தொடரும் மாந்தர்கள் ஞானியரா அல்லது ஞான சூனியங்களா என எவரறிவார் எம்மானே!

ஆசாரக் கோவையில் இன்னொரு பாடல் –

“தலை உரைத்த எண்ணெயால் எவ்வுறுப்பும் தீண்டார்;

பிறர் உடுத்த மாசுணியும் தீண்டார், செருப்பு

குறை எனினும் கொள்ளர் இரந்து”

என்கிறது.

தலையில் எண்ணெய் தேய்த்த கையால் எந்த உறுப்பையும் தீண்ட மாட்டார்கள். பிறர் உடுத்துக் களைந்த அழுக்கு ஆடைகளைத் தீண்ட மாட்டார்கள். காலுக்குச் செருப்பு இல்லை என்றாலும் இரந்து வாங்கி அணிய மாட்டார்கள். இது பொருள்.

நாலடியாரிலும் ஒரு பாடல் செருப்பு பேசுகிறது.

“மைதீர் பசும்பொன் மேல் மாண்ட மணி அழுத்தி

செய்ததெனினும் செருப்புத்தான் காற்கேயாம்

எய்திய செல்வத்தார் ஆயினும் கீழ்களைச்

செய்தொழிலாற் காணப்படும்”

என்பது முழுப்பாடல்.

குற்றமற்ற பசும்பொன்னால் ஆக்கி, அதன்மேல் சிறப்பான நவமணிகள் அழுத்திக் கோர்த்துச் செய்யப்பட்டிருந்தாலும் செருப்பு என்பது கால்களுக்கே ஆகும். அதுபோல் திரண்ட செல்வத்தை உடையவராயினும் அவருடைய பண்பு நலன்கள் கீழ்மையானவை என்றால் அவர் செருப்புக்கு நிகரானவரே! இது பொருள். அஃதாவது ஒருவர் பதவியால், அதிகாரத்தால், கொள்ளையடித்துக் குவித்த சில்லாயிரம் கோடிகளால் மதிப்பிடப்படுவதில்லை, அவரது பண்புகளால் உணரப்படுவார் எம்மனார் புலவர்!

அப்பர் தேவாரம், திருவாசகம், பெரிய புராணம், வில்லி பாரதம் என பற்பல பாடல்கள் செருப்பு எனும் சொல்லினை ஆண்டுள்ளன. பாதுகை, பாதுகம் எனும் சொற்கள் கம்பன் ஆண்டிருக்கும் காரணத்தால் எனது 32-வது கும்பமுனிக் கதையின் தலைப்பு ‘செம்மொழிப் பாதுகம்!’ ஆவநாழி எட்டாவது இதழில் வெளியானது.

பாதுகம் என்றாலும், பாதுகை என்றாலும் ஐயம் திரிபற செருப்பேதான். தேவர்களும் தேவகுமாரர்களும் அணிந்தால் பாதரட்சை, பாதுகை, பாதுகம்; சாமான்யரான நாமணிந்தால் செருப்பு என்றும் பொருள் கொண்டால் அது மொழியின் குறைபாடு அல்ல. சொற்களை மேநிலையாக்கும் மானுடப் பண்பு. நிலக்கிழார் அணிந்தால் உத்தரீயம், அங்கவஸ்திரம், நேரியல்; சாமான்யன் போட்டிருந்தால் துண்டு, துவர்த்து என்பதைப்போலவே அதுவும்.

நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில், குலசேகர ஆழ்வார் அருளிய பெருமாள் திருமொழி ‘பரதனுக்குப் பாதுகமும் அரசும் ஈந்து’ என்கிறது. ‘அங்கண் நெடு மதிள்’ பகுதியின் பாடல் வரி அது. பதினோரு பாடல்களில் மொத்த இராமகாதையும் பேசும் பகுதி. தமிழ் செழித்துக் கொழிக்கும் பகுதி.

சந்தர்ப்பம் இதுவல்ல என்றாலும் எட்டுப் பாடல்களின் தேர்ந்தெடுத்த வரிகளை வரிசைப்படுத்தித் தரலாம் என்று தோன்றுகிறது.

“வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய்த் தோன்றி,

வந்தெதிர்ந்த தாடகைதன் உரத்தைக் கீறி,

செவ்வரி நற் கரு நெடுங்கண் சீதைக்காகிச் சின விடையோன் சிலையிறுத்து,

தொத்தலர் பூஞ்சுரிகுழல் கைகேசி சொல்லால் தொல் நகரம் 

துறந்து, துறைக் கங்கை தன்னை பத்தியுடைக் குகன் கடத்த,

வனம்போய்ப் புக்குப் பரதனுக்குப் பாதுகமும் அரசும் ஈந்து,

வலி வணக்கு வரை நெடுந்தோள் விராதைக் கொன்று,

வண் தமிழ் மாமுனி கொடுத்த வரிவில் வாங்கி,

கலை வணக்கு நோக்கு அரக்கி மூக்கை நீக்கி,

கரனோடு தூடணன் தன் உயிரை வாங்கி,

தன மருவு வைதேகி பிரியலுற்றுத் தளர்வெய்தி,

சடாயுவைக் குந்தத்தேற்றி,

வன மருவு கவியரசன் காதல் கொண்டு, வாலியைக் கொன்று,

இலங்கை நகர் அரக்கர் கோமான் சினமடங்க மாருதியால் சுடுவித்தானை,

எரிநெடுவேல் அரக்கரொடும் வேங்கை வேந்தன்

இன்னுயிர் கொண்டு, அவன் தம்பிக்கு அரசும் ஈந்து,

அம்பொன் நெடுமணிமாட அயோத்தி எய்தி, அரசெய்தி”

என்று சுருங்க உரைத்தார் குலசேகர ஆழ்வார். பொருள் சொலப் புகல மாட்டேன். கவியரசன் என்றால் காற்றின் வேந்தர்க்கு அஞ்சனை வயிற்றில் வந்தவன். நீங்கள் ஏதோ சினிமாப் பாட்டுக்காரரை நினைந்து கண்களில் நெகிழ்ந்து நில்லாதீர்!

பாதரட்சை என்றால் செருப்பெனச் சொன்னோம். பாதரட்சணம் என்றாலும் செருப்பேதான். பாதுகைக் கொட்டை எனும் சொல்லும் ஒன்றுண்டு. பாதரட்சையின் குமிழைக் குறித்த சொல் அது. பாதக்குறடு என்று சொன்னாலும் அது குமிழ் கொண்ட பாதரட்சை என்று பொருள் படும்.

இன்று நாம் வீட்டு வாசலில், குளிமுறி – கழிமுறி வாசலில் போடும் தடித்த துணி அல்லது இரப்பர் மெத்தையை மிதியடி என்கிறோம். ஆனால் திவாகர நிகண்டு மிதியடி எனும் சொல்லுக்கு பாதுகை, செருப்பு என்று பொருள் சொல்கிறது. மிதியடிக் கொட்டை என்றால் பாதக்குறடு, பாதுகைக் குமிழ் என்கிறது திவாகர நிகண்டு.

மலையாளம் காலணிகளைக் குறிக்க செருப்பு என்ற சொல்லையே பயன்படுத்துகிறது. செருப்புத் தைப்பவரை ‘செருப்புக் குத்தி’ என்பர்.

செருப்பை அடையாளப்படுத்தி ஏராளமான சொற்கள், சொற்றொடர்கள் உண்டு நம்மில். செருப்புக் கட்டை, செருப்புக் கடி, செருப்புத் தின்னி, செருப்பு நெருஞ்சி, செருப்பு பிஞ்சிரும், தேஞ்ச செருப்பு, பழஞ்செருப்பு, பிய்ந்த செருப்பு, ஒற்றைச் செருப்பு, ஜோடிச் செருப்பு என்பன.

செருப்பு எனும் சொல்லுக்குப் பேரகராதி தரும் முதற்பொருள் பாதரட்சை, Leather Sandals, Shoe. இரண்டாவது பொருள் பூழி நாட்டில் உள்ளதோர் மலை. பதிற்றுப்பத்தின் பாடல் வரி ஒன்றும் எடுத்துக்காட்டாகத் தரப்பட்டுள்ளது. ‘மிதிஅல் செருப்பின் பூரியர் கோவே’ என்பது மூன்றாம் பத்தின் பாடல் வரி. செருப்பு என்னும் பெயரை உடைய மலையின் பூழி நாட்டுக்குத் தலைவனே என்று உரை எழுதியுள்ளனர்.

பேரகராதி வரிசைப்படுத்தும் செருப்பு குறித்த வேறு சில சொற்கள் –

செருப்புக் கட்டை – தேய்ந்த செருப்பு

செருப்புக்கடி – செருப்பு அழுத்துவதால் ஏற்படும் புண்

செருப்பூசி – செருப்புத் தைக்கும் ஊசி

பதினொன்றாம் வகுப்பில், பொதுத்தேர்வில் மாவட்டத்தில் இரண்டாம் இடத்தில் தேறி, தென் திருவிதாங்கூர் இந்துக்கல்லூரி – நாகர்கோயிலில் புகுமுக வகுப்பில் இடம் கிடைத்தபிறகு, சித்தப்பா நாகலிங்கம் பிள்ளை கூட்டிக் கொண்டு போய் ஒரு ஜோடி செருப்பு வாங்கித் தந்தார். 1964-ம் ஆண்டு ஜுன் மாதத்தில். வாழ்க்கையில் முதன் முதலாக செருப்பணிந்து நடந்தது அன்றுதான். கல்லூரி திறந்தபிறகு பட்டப்படிப்பு பூர்த்தியாகும் வரை நான்காண்டுகள் NCC எனப்பட்ட தேசிய  மாணவர் படைப் பயிற்சி. அப்போது பயிற்சி சீருடையுடன் பெல்ட், தொப்பி, ஷு எல்லாம் தந்தனர். இன்றும் என் நடை NCC தந்தது. சினிமா நடிகர்களுக்கு சின்ன யானை நடையைத் தந்திருக்கும் எல்லாம். கம்பனிடம் கடன் வாங்கியதுதான். ‘நாகமும் நாகமும் நாண நடந்தான்’ என்பார் கம்பன் இராமனை. நாகம் என்றால் மலை, நாகம் என்றால் யானை.

செருப்பு குறித்து ஏராளமான உரையாடல்கள் உண்டு மக்கள் மொழியில்.

 1. “செருப்பை உள்ளே போடு, நாய் தூக்கீட்டுப் போயிரும்”
 2. கொஞ்சம் வசதி அடைந்தவனைக் குறித்து இளக்காரமாக – “அவன் இப்போ பெரிய ஆளுடே! செருப்பு போட்டுல்லா நடக்கான்”
 3. விருப்பமில்லாதவரைப் பற்றிப் பேச்சு வரும்போது – “சவத்துச் செருப்பை மூலைலே போடு”
 4. பிராது போல் நண்பரிடம் பேசும்போது – “ஒரு பத்து ரூவா கை மாத்து கேக்கப் போனேன்பா! நல்ல செருப்படி கெடச்சது!”
 5. சொன்ன பேச்சு கேட்காமல் அலையும் சிறுவனைப் பார்த்துத் தாய் – “வீட்டுக்கு வா! ஒனக்கு செருப்புப் பூசை இருக்கு”
 6. கொடுத்த கடனைத் திரும்பக் கேட்டுக் கிடைக்காமல் சலித்தவர் – “சவம் நடந்து நடந்து செருப்பு தேஞ்சு போச்சுப்பா!”
 7. உழைக்கும் வர்க்கம் – அவர்களின் பிரதிநிதிகள் அல்ல – மனக் குமுறலுடன் சொல்வது – “வேலை செய்த கூலி கேட்டா செருப்புத் தேய நடக்க வைக்கான்… இவனெல்லாம் ஒரு பெரிய மனுசன்!”
 8. மிகுந்த மிதப்புடன் தானமானக்காரர், தன் எதிராளியைக் குறித்து – “நான் செருப்பு விடுகிற இடத்துல கூட அவனுக்கு நிக்கப்பட்ட யோக்கியதை உண்டா?”

சமீப காலமாக அரசியல் மேடைகளில் கேட்கும் வசவு அடைமொழி விருது, “செருப்பு நக்கி!” தூலமாக இல்லாவிட்டாலும் மானசீகமாகப் பலரும் – தலைவர், அறிஞர், அறிவுஜீவி, கலாகாரர் என – செருப்பு நக்கியே செழித்து வாழ்கிறார்கள். செருப்பு நக்கும் இனத்துக்கு மொழி, மத, இன, பிராந்திய, பால் வேறுபாடுகளும் இல்லை.

சிலகாலம் முன்பு மோகன்லாலும் பிரபுவும் நடித்த திரைப்படம் ஒன்று வந்தது ‘காலா பானி’ எனும் தலைப்பில். அந்தமான் சிறைச்சாலை கொடுமைகள் பேசிய படம். அதில் ஆங்கிலேய அதிகாரி தனது ஷுவை நக்கித் துடைக்கச் செய்யும் காட்சி ஈரக்குலையைப் பதற வைக்கும்.

செருப்புக் களவாணி எனச் சிலர் தரித்திரத்தின் காரணமாகத் தூற்றப்படுவார்கள். அற்பத்தனம்தான் என்று அறிவோம். ஆனால் ஆயிரமாயிரம் கோடிகள் களவாங்கும் கொள்ளைக்காரர்களுக்கு நாம் தூபமும் தீபமும் காட்டி வணங்குவோம். அதற்குமேல் விரித்துப் பொருள் உரைக்க நமக்கு அண்டி உறைப்பு இல்லை.

கல்யாண வீட்டு வாசலில், கோயில் வாசலில், திருட்டுக்குப் பயந்து, செருப்புக்களைக் கழற்றிக் கையில் வைத்திருக்கும் மஞ்சள் பையில் திணித்துக்கொண்டே உள் நுழைபவர்களைப் பார்த்திருக்கிறேன்.

கோவைக்கு மாற்றலாகி வந்தபிறகு திருத்தணி, ரேணிகுண்டா எனப் பணி செய்து கிடக்கப் பஞ்சாலைகளுக்குப் போவேன். ஒருமுறை மதியமே அன்றைய வேலை முடிந்தபடியால், மறுநாளும் வேலை இருந்ததால், இரவில் வழக்கம்போல் விடுதியில் படுத்து உறங்குவதற்கு மாற்றாக, பேருந்து ஏறி திருப்பதியில் இறங்கி, அங்கிருந்து தேவத்தானப் பேருந்து பற்றி திருமலையில் இறங்கினேன். திருவேங்கடவனைக் கண்டு தொழ அன்று வலிய மக்கள் தொகை இல்லை. எனது பணி நிமித்தம் செல்லும் பயணங்களில் நான் ஷு அணிவது பதிவு. செருப்பும் கொண்டு போவதில்லை இடமும் எடையும் ஓர்ந்து.

கோபுர வாசலில் ஷுவைக் கழற்றினேன். எந்த வாசலில் நுழைந்து எந்த வாசலில் வெளியேறுவோம் என்ற உறுதியும் இல்லை. புதியதாய் வாங்கிய இணை வேறு. அடுத்தநாள் காலணியின்றி நூற்பாலைக்குப் போக இயலாது. குழப்பமாக இருந்தது. கழற்றிய பாதணிகளைத் தோளில் கிடந்த ஜோல்னாப் பையில் திணித்து மறைத்துவிட்டு வழிபடப் போனேன். பிழை பொறுப்பவன்தானே இறைவன்? அபராதம் வாங்கினால், தண்டித்தால், இலஞ்சம் பெற்றால் அவன் போலீஸ்காரன் அல்லவா?

செருப்பு சார்ந்து சில பழமொழிகள் உடனடியாக நினைவுக்கு வருகின்றன.

 1. நாய்த்தோல் செருப்பு ஆகுமா?
 2. உதவி கேட்டு நுழையாத வீடில்லை; வாங்காத செருப்படி இல்லை.
 3. தங்கச் செருப்பு ஆனாலும் தலைக்கு ஏறாது!
 4. புதுச்செருப்பு கடிக்கத்தான் செய்யும்.
 5. புதுச் செருப்பானாலும் வாசலுக்குப் புறத்தே!
 6. கஞ்சிக்கு வழியில்லே, காலுக்குப் புதுச் செருப்பு கேக்குது!

வழக்கமாக,  செருப்பணிந்து போ எனும் பொருளில், “செருப்புப் போட்டுக்கிட்டுப் போ” என்று அறிவுறுத்துவர் தாயர். கொங்கு நாட்டில் அதனையே “செருப்பைத் தொட்டுக்கிட்டுப் போ” என்பர். இப்போது கால் தொடு தோல், கழல் தொடு தோல் எனும் சொற்றொடர்களின் பொருள் புரிகிறது.

Tamil Proverbs என்றொரு நூலின் ஒளிநகல் படி ஒன்றைத் திருநெல்வேலியில் இருந்து நண்பர் அனந்தசங்கர் வழங்கியிருந்தார், சில ஆண்டுகளுக்கு முன்பு. 498+xxv பக்கங்கள். 3644 தமிழ்ப் பழமொழிகளும் அவற்றின் ஆங்கில மொழியாக்கமும், ஆங்கில விளக்கக் குறிப்புகளும் அடங்கி இருந்தன. தொகுத்தவர் ரெவரண்ட் ஹெர்மன் ஜென்சன் (Rev. Herman Jension, Danish Missionary) சென்னையில் அருட்பணியில் இருந்தார். இந்த நூல் 1897-ல் பதிக்கப் பெற்றது. சி.வை. தாமோதரப் பிள்ளை வாழ்த்துரை வழங்கியிருக்கிறார்.

இந்தத் தொகுப்பின் சிறப்பு, இதில் பயன்படுத்தப்பட்ட சொற்கள் யாவுமே அகரவரிசைப்படுத்தப்பெற்று, அச்சொற்கள் இடம் பெற்ற பழமொழி எண்களும் குறிக்கப் பெற்றுள்ளமை.

எடுத்துக்காட்டுக்கு அம்மி என்ற சொல்லைத் தேடினால் பழமொழி எண். 166 & 3594 என்ற தகவல் கிடைக்கும்.

பெருத்த ஊதியம் பெற்றுக்கொண்டு, எழுதிய ஒரேயொரு ஆய்வுக்கட்டுரையை முப்பது கருத்தரங்குகளில் வாசித்து சன்மானம் வாங்கி, உலகத் தமிழ் மாநாடெல்லாம் பங்கேற்று, எவர் ஆண்டாலும் அவருக்குத் தாம்பூலம் சுருட்டிக் கொடுத்துக் கல்விப்புலத்தைக் காக்கும் பூதங்கள் கருணை கூர்ந்தால் மொழிக்குள் என்னவெல்லாமோ நடக்கும்!

மேற்சொன்ன பழமொழிகள் திரட்டு நூலில் கண்ட, செருப்பு குறித்த சில பழமொழிகளை நீங்களும் அறியத் தருவேன். 

 1. முப்பது செருப்புத் தின்றவனுக்கு, மூன்று செருப்பு பணியாரம்!
 2. சென்மத்தில் பிறந்தது, செருப்பால் அடித்தாலும் போகாது!
 3. ஆற்றுக்குப் போனதுமில்லே, செருப்புக் கழற்றியதும் இல்லை!
 4. பல்லக்குக்கு மேல் மூடியில்லாதவனுக்கும் காலுக்குச் செருப்பில்லாதவனுக்கும் விசாரம் ஒன்றே!
 5. என் தோலை அவருக்குச் செருப்பாகத் தைத்துப் போடுவேன்!
 6. காலுக்குத் தக்க செருப்பும், கூலிக்குத் தக்க உழைப்பும்!
 7. காலுக்கு ஆகிற செருப்பு தலைக்கு ஆகுமா?
 8. தங்கச் செருப்பு ஆனாலும் தலைக்கு ஏறாது!
 9. நான் செருப்பு விடுகிற இடத்திலே கூட அவன் நிற்க யோக்கியனல்ல!
 10. பூவுள்ள மங்கையாம், பொன் கொடியாம், போன இடமெல்லாம் செருப்படியாம்!
 11. புதுப்பெண்ணே, புதுப்பெண்ணே செருப்பு எடுத்து வா! உனக்குப் பின்னாலே இருக்குது செருப்படி!
 12. உச்சந்தலையிலே செருப்பால் அடித்தது போல!
 13. ஆடிக்கு அழைக்காத மாமியாரைத் தேடி மயிரைப் பிடித்துச் செருப்பால் அடி!
 14. பசுவைக் கொன்று செருப்புத் தானம் செய்தது போல!
 15. சீட்டாளுக்கு ஒரு மூட்டாளு; செருப்புத் தூக்கிக்கு ஒரு அடப்பக்காரன்!

கடைசிப் பழமொழியை சற்றுத் தீவிரமாகச் சிந்தித்துப் பார்த்தால் இன்றைய அரசியல் சூழலுக்கு அற்புதமாகப் பொருந்துவது தெரியவரும். அதனை எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்கப் புகுந்தால் நம் உயிருக்கு கிழிந்த செருப்பின் மதிப்பேதான்.

நாம் மேலே தந்த பட்டியலைத் தாண்டி ஏகப்பட்ட பழமொழிகள் மக்கள் வட்டாரத்தில் புழங்கக் கூடும். எனதிளைய படைப்பாளிகள் சு. வேணுகோபால், கண்மணி குணசேகரன், அழகிய பெரியவன், எம். கோபாலகிருஷ்ணன், குமார செல்வா, மலர்வதி, கீரனூர் ஜாகிர் ராஜா போன்றோர் தலைக்குப் பத்தாவது சொல்வார்கள். பிற மொழிகளினுள்ளும் சுவாரசியமான பழமொழிகள் இருக்கும் சர்வ நிச்சயமாக.

ஆக செருப்பு எனும் சொல்லின் ஆட்சி பதினென்கீழ்க்கணக்கு நூல்கள் வரை உளதென்று தாண்டிப் போய்விடலாமா?

அகநானூறு நூலில், மணிமிடை பவளம் பகுதியில், குடவாயில் கீரத்தனார் பாடல் ஒன்று –

“கொழுப்பு ஆதின்ற கூர்ம்படை மழவர்

செருப்புடை அடியர் தெண் சுனை மண்டும்”

என்று ஈரடிகள் பேசுகிறது. நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் உரை சொல்கிறார் – “கொழுத்த ஆக்களைக் கவர்ந்து சென்று கொன்று தின்ற கூரிய படைகளை உடைய மறவர்கள், செருப்பினைப் பூண்ட அடியராகி, தெளிந்த சுனை நீரை மிகுதியாகப் பருகும்” – என்று.

பசுக்களைக் கொன்று தின்ற குற்றத்துக்காக சங்ககால மறவர் மீது அல்லது புலவர் மீது இன்று தேசத்துரோகக் குற்றம் சாட்ட முடியுமா என்று தெரியவில்லை.

புறநானூற்றில் தேடினால் வன்பரணர் பாடல் ஒன்று செருப்பு எனும் சொல் பயன்படுத்தியமை தெரியவருகிறது. வன்பரணர் பகைவனைக் குறிக்கும்போது, “செருப்பு இடைச் சிறுபரல் அன்னன்” என்கிறார். அதாவது அவர் பாடும் மன்னரது பகைவர், செருப்பினடியில் கிடக்கும் சிறுபரல் போன்று சின்ன இடைஞ்சல்களைத் தருபவர் என்பது பொருள்.

நமது பழங்கோயில்கள் பலவற்றிலும் காலில் செருப்புடன் நிற்கும் சிற்பங்களை இன்றும் காணலாம். கம்பனே குகப்படலத்தின் இரண்டாவது பாடலில் குகனை அறிமுகம் செய்யும்போது,

“துடியன், நாயினன், தோற் செருப்பு ஆர்த்த

அடியன், அல் செறிந்தன்ன நிறுத்தினன்”

என்பார். துடி எனும் வாத்தியமும், வேட்டை நாய்களும் உடையவன். தோலால் செய்த செருப்பணிந்த பெரிய பாதங்களை உடையவன், இருள் செறிந்ததை ஒத்த நிறத்தை உடையவன் என்பது பொருள்.

இராமன் அணிந்திருந்ததனால் பாதுகம், இராவணன், குகன் அணிந்திருந்தது செருப்பு என எவரும் வித்தாரமாக விரித்துப் பொருளுரைக்க முயலவும் கூடும்.

கோல் ஆடக் குரங்கு ஆடும்!

***

Posted in "பனுவல் போற்றுதும்", அனைத்தும், இலக்கியம் | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஆயில்யத்துக்கும் பூசத்துக்கும் இடையேயான மானுடன்

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

எங்கள் தேவர் உங்கள் தேவர் என்றிரண்டு தேவரோ?

நாஞ்சில் நாடன்

எங்கள் தேவர் உங்கள் தேவர் (4)எங்கள் தேவர் உங்கள் தேவர் (5)எங்கள் தேவர் உங்கள் தேவர் (6)எங்கள் தேவர் உங்கள் தேவர் (7)எங்கள் தேவர் உங்கள் தேவர் (8)

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஐந்துறு பூதம் சிந்திப்போய் ஒன்றாக…

எமது பள்ளிப் பருவத்தில் பருவ இதழ்களில் தொடர்கதை எழுதும் இனமொன்று உண்டு. இன்றைய சொற்பொழிவுத் தொழில் வளர்க்கும் இனம் போல. தொடர்கதையில் நடக்கும் உரையாடல்களில் “கலி முத்திப் போச்சுன்னா! என்றும், நடக்கிறது கலிகாலமோல்லியோ! என்றும் சொற்றொடர்கள் கண்படும். அப்படியான உரையாடல்களை வாசிக்காத கிழமைகள் இல்லை. என்றாலும் அன்று கலிகாலம் என்றால் என்ன என்ற அறிவு இல்லை எமக்கு. கலி முத்திப் போச்சு என்றால் அர்த்தமாகாத எமக்கு முருங்கைக்காய் முத்திப்போச்சு, வெண்டைக்காய் முத்திப்போச்சு என்றால் அர்த்தமாயிற்று.

நல்ல காலம், கெட்ட காலம் என்று வீடுகளிலும் தெருக்களிலும் செவிமடுக்கின்ற காலமாக இருந்தது. ஆம் காலத்தே அவையவை ஆகும், போம் காலத்தே பொருள் புகழ் போகும்’ என்ற கண்ணதாசனின் கவிதை வரி அறிமுகமாயிற்று வாலிப வயதில். ஆம்காலம் என்றால் ஆகும் காலம், போம் காலம் எனில் போகும் காலம். பள்ளிகளில் பயின்ற காலத்தில் திருக்குறள் பாடல்கள் மூலம் காலம் காணக்கிடைத்தது. காலத்தினால் செய்த நன்றி’, காலம் அறிந்து செயின்!’, காலம் கருதி இடத்தாற் செயின்’, காலம் கருதி இருப்பர்! கருவியும் காலமும் செய்கையும்’, பொருள் கருவி காலம்’, காலத்தால் தக்கது அறிவதாம் தூது’, கடனறிந்து காலம் கருதி இடனறிந்து எண்ணி’, குறிப்பறிந்து காலம் கருதி’ எனப்பல சொற்றொடர்கள் காலம் குறித்துத் திருக்குறள் பேசுவன.

கால் என்றால் காற்று, ஊன்றும் கால், கால் பங்கு, காலன், வாய்க்கால், விலங்கு பறவை மாந்தரின் கால், எனப்பல பொருள்களில் ஆள்கிறோம்.

கலி எனும் சொல் திருத்தமாக அறிமுகம் ஆனது, கலித்தொகை’ எனும் எட்டுத்தொகை நூல் பற்றிக் கேள்விப்பட்ட பிறகு. கல்லூரிக் காலத்தில். அறிமுகம் என்ற அளவில் சங்க இலக்கியப் பாடல்கள் சில பாடமாக இருந்தன. கற்றறிந்தோர் ஏத்தும் கலி’ எனக்குறித்தனர் கலித்தொகையை. இசையுடன் பாடும் இசைப்பாடலாக இருந்திருக்கிறது. துள்ளல் ஓசை. நெய்தல் கலியை இயற்றியவரான நல்லந்துவனார், கலித்தொகையைத் தொகுத்திருக்கிறார். உரை எழுதியவர் ஆதியில் நச்சினார்க்கினியர். கலித்தொகையை முதன்முதலாக அச்சேற்றியவர் சி.வை. தாமோதரம் பிள்ளை.

ஐவகை நிலங்களைப் பாடும் கலித்தொகையில், பெருங்கடுங்கோன் பாலை பற்றி 35 பாடல்கள், கபிலர் குறிஞ்சி பற்றி 29 பாடல்கள், மருதன் இளநாகனார் மருதம் பற்றி 35 பாடல்கள், சோழன் நல்லுருத்திரன் முல்லை பற்றி 17 பாடல்கள், நல்லந்துவனார் நெய்தல் பற்றி 33 பாடல்கள். கடவுள் வாழ்த்துடன் ஆக 150 பாடல்கள்.

தமிழ்ப் பாக்களின் ஆதி வடிவங்கள் ஆசிரியப்பா அல்லது அகவற்பா, வஞ்சிப்பா, கலிப்பா, வெண்பா. விருத்தப்பா காலத்தால் சற்றே பிந்தியது என்பர். விருத்தமெனும் ஒண்பாவில் உயர் கம்பன்’ என்பர். கம்பனுக்கு முன்னோடி, சீவக சிந்தாமணி ஆசிரியர் திருத்தக்க தேவர். சங்க இலக்கியப் பரப்பில் பாக்கள் யாத்த மன்னர் பலருண்டு. கலித்தொகையில் முல்லைக்கலி பாடியவர் சோழன் நல்லுருத்திரன். ஈராயிரம் ஆண்டுகளாய்த் தமிழ் இலக்கியம் மூலம் வாழும் மன்னர் ஏராளம்.

அந்தக் கணக்கில்தான் தமிழ்ப் பல்கலைக்கழகம், உலகத் தமிழாய்வு மையம், செம்மொழி உயராய்வு நிறுவனம், தமிழ் வளர்ச்சித் துறை எனும் தகைசால் அமைப்புகள் சி.என். அண்ணாதுரை, மு. கருணாநிதி, எம்.ஜி. ராமச்சந்திரன், செல்வி ஜெயலலிதா போன்ற முன்னாள் முதலமைச்சர்கள் எழுதிய நூல்களையும் அவர்களைத் துதித்துப் பேராசிரியர்கள், அறிஞர்கள் என்று அறியப்படுகிறவர்கள் கூலிக்கு எழுதிய நூற்களையும் ஆயிரக்கணக்கில் அச்சிட்டுக் கட்டுக் கட்டாக விற்காமல் வைத்துக் காக்கிறார்கள். இன்றும் அவை ஐம்பது விழுக்காடு கழிவில் கிடைக்கும். சும்மா கிடைக்கிறது என வியாதிகளை விலை கொடுத்து வாங்குவார்களா எவரும்?

கலி எனப் பொதுவாகச் சொன்னாலும், கலிப்பா, கலி வெண்பா, கலி விருத்தம், கலித்தாழிசை எனப்பல பிரிவுகள் உண்டு. யாம் பாவிலக்கணம் கற்றேமில்லை. இனியென்செயக்கூடும் கற்குழியில் கால்நீட்டும் காலத்து?

கலி எனும் சொல்லுக்கு அகராதிகள் – துன்பம், அழிவு, சோர்வு, தீயவை, தீமை எனப் பொருள் தருகின்றன. கலி எனும் சமற்கிருதச் சொல்லுக்கு இருப்பூழியிறை, அதாவது இருப்பு+ஊழி+இறை, எனில் நடப்பிலுள்ள ஊழிக்காலத்தின் இறைவன் எனப் பொருள். மேலும் இருப்பூழி (நடக்கும் ஊழி), காரி, துன்பம், இலம்பாடு, ஒற்கம், வஞ்சகம் எனப் பொருள் சொல்கிறது அயற்சொல் அகராதி. வறுமை எனும் பொருள். இலம்பாடு என்றாலும் வறுமையே. இல்லை எனும் பாடு. கடமை – கடப்பாடு, பண்பு – பண்பாடு, மேன்மை – மேம்பாடு, கஷ்டம் – கஷ்டப்பாடு, என்பது போல இலம் – இலம்பாடு.

இலம்பாடு எனும் சொல்லைப் புறநானூற்றில் மூன்று பாடல்களில் காணலாம். புறத்திணை நன்னாகனார், கரும்பனூர்க் கிழானைப் பாடுமிடத்து, இலம்பாடு அகற்றல் யாவது? என்று கேட்கிறார். வறுமையைப் போக்குவது எங்ஙனம் என்ற பொருளில்.

சிலப்பதிகாரத்தில், புகார்க் காண்டத்தில், கனாத்திறம் உரைத்த காதையில், கோவலன் மாதவியிடம் இருந்து மடங்கி வந்து நடந்தனவற்றுக்கு இரங்கிக் கண்ணகியிடம் கவன்று பேசுகிறான், சுய பச்சாதாபத்துடன்.

சலம் புணர் கொள்கைச் சலதியொடு ஆடி,
குலம் தரு வான்பொருள் குன்றம் தொலைத்த
இலம்பாடு நாணுத்தரும் எனக்கு

என்று. ஜலம் எனும் சொல்லைச் சலம் என்று தமிழாக்கம் செய்தோம். ஆனால் சலம் எனும் தமிழ்ச்சொல்லுக்கு பொய்மை, வஞ்சகம் எனப் பொருள். சலதி எனில் பொய் கூறுபவள், வஞ்சகி என்று பொருள். பொய்யளாகிய மாதவியுடன் ஆடிக் குலம் தந்த வானளாவிய குன்றனைய பொருள் தொலைத்த இன்றைய வறுமை தனக்கு நாணம் தருகிறது என்கிறான் கோவலன்.

சலம் எனில் நீர் என்று பொருள் என்றால், அசலம் எனில் மலை என்பது பொருள். அருண+அசலம் = அருணாசலம், தணிகை+அசலம் = தணிகாசலம், வேங்கட+அசலம் = வேங்கடாசலம். அசலபதி எனில் மலைக்குத் தலைவன், சலபதி எனில் நீருக்குத் தலைவன்.

ஒற்கம் எனும் சொல்லைக் கண்டோம். ஒற்கம் எனும் சொல்லைத் திருக்குறள் கையாள்கிறது. கேள்வி அதிகாரத்துக் குறள் கூறுவது:

கற்றிலன் ஆயினும் கேட்க அஃது ஒருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாம் துணை

என்று. கல்வி கற்கும் வாய்ப்பு அமையாவிடினும் கேள்வியறிவு நல்லது. கற்றலின் கேட்டல் நன்று. கல்வி கேள்வி என்கிறோம். அஃது ஒருவனுக்கு வறுமையால் – ஒற்கத்தால் – தளர்வெய்தும்போது தாங்கும் துணையாக அமையும் என்பது குறளின் பொருள்.

தொல்காப்பியத்தின் சொல்லதிகார நூற்பா, இலம்பாடு ஒற்கம் ஆயிரண்டும் வறுமை’ என்கிறது தெள்ளத் தெளிவாக. இலம்பாடு, ஒற்கம் ஆகிய இரு சொற்களும் வறுமையைக் குறிப்பன என்பது பொருள்.

நாஞ்சில் நாட்டில் ‘ஒறுவினைக் காலத்தில்’ என்றொரு சொற்றொடர் வழக்கில் இருந்தது. ஒறுவினை எனில் வறுமை, பஞ்சம் என்று பொருள். ஒறுவினைக்கும் ஒற்கத்துக்கும் உள்ள உறவு அர்த்தமாகிறது இன்று.

இனி கலி எனும் சொல்லுக்குத் திரும்பலாம். பாரதியார், கண்ணம்மா என் குழந்தை’ எனும் பாடலில் முதல் பத்தியில் பாடுகிறார் –

சின்னஞ்சிறு கிளியே – கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே!
என்னைக் கலி தீர்த்தே – உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்!’

என்று. இங்கு பாரதியார் பயன்படுத்தும் கலி எனும் சொல்லுக்கு வறுமை, தரித்திரம், இன்மை, துக்கம், ஒற்கம், இலம்பாடு, அழிவு, துன்பம், சோர்வு, தீயவை, தீமை என்ற எப்பொருளும் கொள்ளலாம். கோபால கிருஷ்ண பாரதியாரின் பாடல் வரி, எப்போ வருவாரோ? எந்தன் கலி நீங்க! என்பது. ஜோன்புரி ராகத்தில் பாடுவார்கள் அதனை.

கலியன் எனும் சொல் சமற்கிருதம்+தமிழ் என்றும் இருப்புக்கால இறைவன், இருப்புக்காலிறை, இருப்பூழி, பசித்தவன், இலம்பாடி, ஒற்கத்தன் எனப் பொருள் தருகிறார் பேராசிரியர் அருளி. கலியுகம் (Kaliyuga) எனும் சொல் சமற்கிருதம். இருப்புக்கால ஊழி, நான்காம் ஊழி, பொய்யூழி என்பன பொருள்.

கலியென்ற சொல்லுக்குக் கடல் என்றும், வலி – அதாவது வலிமை – என்றும் பொருள் சொல்கிறது பிங்கலம். கலிக்கு ஒலி என்ற பொருளை முன்மொழிகிறது தொல்காப்பியம்.

கம்பலை, சும்மை, கலி, அழுங்கல்
என்றிவை நான்கும் அரவப் பொருள்

என்பது சொல்லதிகார நூற்பா. மேலும்

அழுங்கல் இரக்கமும் கேடும் ஆகும்

என்பது அடுத்த நூற்பா. அதாவது அழுங்கல் எனும் சொல் ஒலி என்ற பொருளன்றியும் இரக்கம், கேடு எனும் பொருளும் தரும் என்பதாகும்.

இசையினி தமிழகராதி கலி எனும் பெயர்ச் சொல்லுக்கு ஒலி, கடல், மனவெழுச்சி, வலிமை, சிறுமை, சனி, கலியுகம், வஞ்சகம், கலிப்பா, போர், கலித்தேன் எனும் பொருள்களைத் தரும். கலி எனும் வினைச்சொல் தழை, எழு, மகிழ், கர்வப்படு, நெருங்கியிரு, செலுத்து, நழுவு, நீக்கு, ஒலி எழுப்பு எனப் பொருள் சொல்கிறது.

 • கிருத யுகம் 17,28,000 ஆண்டுகள் எனவும்
 • திரேதா யுகம் 12,66,000 ஆண்டுகள் எனவும்
 • துவாபர யுகம் 8,64,000 ஆண்டுகள் எனவும்
 • கலியுகம் 4,32,000 ஆண்டுகள் எனவும்

சமற்கிருத மொழியறிஞர்களும், வேத விற்பன்னர்களும், சநாதன தர்ம சாத்திர ஆய்வாளர்களும் மொழிகின்றனர். நான்கு யுகங்களிலும் நாமிப்போது வாழ்வது கலியுகம் என்பார்கள்.

கலியுகம் கி.மு. 3102 பெப்ரவரி மாதம் 18-ம் நாள் தொடங்கிற்று என்று ஆரியபட்டரும், கி.மு. 2449-ல் ஆரம்பித்தது என்று வராகமிகிரரும், சொல்வதாக வாசித்தேன்.

கலியுகம் மொத்தம் 5140 ஆண்டுகள் என்றும், இன்னும் 380 ஆண்டுகள் மிச்சமிருப்பதாகவும் ஸ்ரீயுக்தேவர் வகுக்கிறார் என்கிறார்கள்.

யுகங்கள் நான்கும் மொத்தம் 42,90,000 ஆண்டுகள் என்றும் நடப்பூழி கலியுகம் என்றும், கலியுகம் முடிந்தபின் மறுபடியும் கிருதயுகம் எழுக மாதோ என்றும் சொல்கிறார்கள். வேறொரு கணக்கில் கலியுகம் மொத்தம் 4,32,000 ஆண்டுகள் என்றும் கலியுகம் முடிய இன்னும் 4,28,899 ஆண்டுகள் உள எனவும் உரைப்பர்.

மேற்சொன்ன தகவல்களில் பிழை இருந்தால் நாமதற்குப் பொறுப்பு இல்லை. ஆதாரமோ விளக்கமோ என்னால் அளிக்க இயலாது. வாசித்த செய்திகள், அவ்வளவே! யானை தூறுகிறது என்று ஆட்டுக்குட்டி தூற இயலாது! நமக்கென்ன, அப்பம் தின்னவோ? அல்லால் குழி எண்ணவோ?’.

நடப்பு யுகம் கலியுகம் என்றும், இந்த யுகத்தில்தான் மகாவிஷ்ணுவின் பத்தாவது அவதாரமான கல்கி அவதரிப்பார் என்றும் சொல்கிறார்கள். ஏற்கனவே நாட்டில் ஒருவர் கல்கி அவதாரம் என்றும் கல்கி பகவான் என்றும் சொல்லித் திரிந்தார்.

யாமறியக் கலி எனும் சொல்லை முன்பு சொன்ன பொருள்களில் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினென்கீழ்க்கணக்கு நூல்கள் ஆண்டுள்ளன. சிலம்பும் மேகலையும் சிந்தாமணியும் அப்பொருள்களில் பயன்படுத்தியுள்ளன.

கம்பன், அயோத்தியா காண்டத்தில், நகர்நீங்கு படலத்தில், இலக்குவனின் அன்னை சுமித்திரையின் துயர் ஆற்றும் விதத்தான் இராமன் கூற்றாகப் பாடல் ஒன்று வைக்கிறார்.

கான் புக்கிடினும், கடல் புக்கிடினும், கலிப்பேர்
வான் புக்கிடினும், எனக்கு அன்னவை மாண் அயோத்தி
யான் புக்கது ஒக்கும்; எனை யார் நலிகிற்கும் ஈட்டார்?
ஊன் புக்கு, உயிர் புக்கு, உணர்புக்கு, உலையற்க!” என்றான்.

என்பது பாடல்.

காட்டுக்குச் சென்றாலும், கடலில் சென்றாலும், ஆரவாரமும் பெருமையும் உடைய வானவர் உலகு அடைந்தாலும் எனக்கு அந்த இடங்கள் சிறந்த அயோத்தி மாநகரில் இருப்பது போலவே ஆகும். என்னைத் துன்பப்படுத்தும் ஆற்றலுடையவர் எவர்? உடல், உயிர், உணர்வு ஆகியனவற்றின் துயரம் உனை ஊடுருவித் தளர்ச்சிப்படுத்தாமல் இருப்பாய் என்றான் என்பது பாடலின் பொருள். எனவே இங்கு கலி எனும் சொல் ஆரவாரம் எனும் பொருளில் ஆளப்பெற்றுள்ளது. இதைத்தான் கம்பலை என்றும் உறுதிப்படுத்துகிறார் தொல்காப்பியர். கம்பலை என்பது எனதோர் கட்டுரைத் தொகுப்பின் தலைப்பு. அதனுள் கம்பலை என்றோர் கட்டுரையும் உண்டு.

கலிகாலம் என்று நேரிடையாகவே பேசுவார் கம்பர். ஆரணிய காண்டம், விராதன் வதைப்படலம்.

‘மா மங்கு பாதகம், விடம், கனல், வயங்கு திமிரக் கங்குல் பூசி வருகின்ற கலிகாலம் எனவே’ என்பது பாடல் வரி. அதாவது கலிகாலம் என்பது நச்சுக்காலம் என்பதாகும்.

திருவாசகமும் திருக்கோவையாரும் தேவாரமும் கலி எனும் சொல்லை ஆள்கின்றன. நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில், நம்மாழ்வாரின் திருவாய்மொழி,

காய்சின வேந்தே! கதிர் முடியானே!
கலிவயல் திருப்புளிங் குடியாய்!’

என்கிறது.நளவெண்பா நூலின் ஒரு படலத்தின் பெயர்‘கலி நீங்கு படலம்.

கலிகாலம் என்பதையே கலியுகம் என்றனர். கலியுகம் என்ற சொல்லும் வடமொழிதான். யுகம் என்ற சொல் சமற்கிருதம். தமிழில் ஊழி அல்லது நீடுகம். பேரகராதி யுகம் எனும் சொல்லுக்கு நால்வகை நீடிய காலம் எனப் பொருள் தருகிறது. A long period of time of which there are four – கிருத, திரேதா, துவாபர, கலி என நான்கு. யுகம் எனும் சொல் முறையான தமிழ் இலக்கணப்படி உகம் என்றும் எழுதப்பெறும். யுகத்துக்கு Earth என்றும் பொருளுண்டு.

யுகம் சார்ந்து மேலும் சில சொற்கள் உண்டு.

யுக முடிவு – யுகத்தின் முடிவு

யுகப் பிரளயம் – ஊழியிறுதி. சதுர்யுக முடிவில் நிகழும் பிரளயம்

யுகாந்தப் பிரளயம் – ஊழியிறுதி

யுகாந்தம் – ஊழியிறுதி

யுகாந்த வெள்ளம் – யுகப் பிரளயம்

யுகாந்தாக்கினி – ஊழித் தீ

யுகாதி – ஊழித் தொடக்கம். கடவுள், தகைஞன். தெலுங்கு, கன்னட ஆண்டுப் பிறப்பு. அருகன், யுகத்தின் தொடக்கம், யுகாதிப் பண்டிகை

யுக தருமம் – சாத்திரங்களின்படி அந்தந்த யுகத்தில் நடக்க வேண்டிய நடைமுறை

யுகசந்தி என்றொரு சொல் ஜெயகாந்தனின் கதைத் தலைப்பு. ஒரு யுகத்தின் முடிவில் நின்றும் அடுத்த யுகத்தின் தொடக்கத்தில் இருந்தும் சேர்ந்ததும் முன்யுகத்தின் ஆறிலொரு பங்குமான காலப்பகுதியே யுகசந்தி. தமிழர் இன்று ஒரு முதலமைச்சர் காலம் முடிந்து இன்னொரு முதலமைச்சர் அடித்து மாற்ற வந்ததும் யுகசந்தி என்கிறார்கள். இதுவே சினிமாக் கதாநாயக நாயகி நடிகருக்கும் பொருந்தும்.

ஐராவதி கார்வேயின் மராத்திய நாவலின் தலைப்பு யுகாந்தா. அதன் மொழிபெயர்ப்பு அனைத்து இந்திய மொழிகளிலும் உண்டு. தமிழில் இன்னும் கிடைக்கிறது சாகித்ய அகாதமி அல்லது நேஷனல் புக் ட்ரஸ்ட் வெளியீடு. அதுபோன்ற நாவல்களைப் பொருட்படுத்தாமல் நாம் சந்தையின் ஊசற்பண்டங்களை நக்கி நக்கித் தின்று மெய்சிலிர்த்துக் கொண்டிருப்போம். அரசுகள் அவ்வகை எழுத்தாளருக்குப் பாரத ரத்னா வழங்கி இந்திரியம் கசிய நிற்கும்.

ஊழி எனும் சொல்லுக்கு நேரான வடமொழிச் சொல்லே யுகம். 2013-ல் வெளியான, பத்துப் பதிப்புகள் கண்ட, 330 பக்கங்கள் நீண்ட எனது கட்டுரை நூல் ‘கம்பனின் அம்பறாத்தூணி’ அதன் பதினைந்து கட்டுரைகளில் ஒன்றின் தலைப்பு ‘ஊழியும் ஆழியும்!

ஊழி எனும் சொல்லுக்குப் பேரகராதி ஏழு பொருள் தந்துள்ளது.

 1. Time of Universal deluge and destruction of all things.

பிரளயத்தால் உலகம் முடியும் காலம்.

சீவக சிந்தாமணி எனும் பெருங்காப்பியத்தின் நான்காவது இலம்பகம்.

குணமாலையார் இலம்பகம். இலம்பகம் என்றால் என்ன என்று கேட்பீர்கள்தானே! காதை, படலம், சருக்கம், அத்தியாயம் போல. காண்டம் என்பது வேறு. குணமாலை இலம்பகத்தில் திருத்தக்க தேவரின் விருத்தப்பா,

இடியும் மின்னும் முழக்கும் இவற்றால் உலகம் நிறைந்து
ஒடியும் ஊழி இவண் நின்றுறு கால்வரை கீழ்ந்தன

என நீளும். புரிதலுக்காக விருத்தப்பாவின் முதலிரண்டு அடிகளைச் சீர் பிரித்து எழுதியுள்ளேன். பாடல் வரிகளின் பொருள் – இடியும் மின்னலும் முழக்கும் எனும் இவற்றால் உலகம் நிறைந்து, மலை பிளந்து, மாக்கடலை நிலத்தில் கவிழ்த்தது போல் மாரி பொழிந்து உலகம் அழியும் ஊழிக்காலம்.

 1. யுகம் என்பது ஊழிக்கான நேரடிப் பொருளும் ஆகும்.

‘பண்டையூழியிற் பார் மலிவுற்றதே! என்று சீவகசிந்தாமணியின் 12-வது இலம்பகமான இலக்கணையார் இலம்பகத்துப் பாடல்வரி. பண்டைய ஊழிபோல் உலகம் நலிந்தது என்பது பொருள்.

பண்டையூழி எனும் சொல்லுக்கு கிருதயுகம் – முதல் யுகம் என்று பொருள் எழுதினார் நச்சினார்க்கினியர் என்ற உரையாசிரியர். அவரது காலம் பதினான்காம் நூற்றாண்டுக்கு முற்பட்டதல்ல என்று துணிந்துள்ளனர்.

 1. Very very long time. நெடுங்காலம் பன்னெடுங்காலம் என்றொரு சொற்றொடர் உண்டு நம்மிடம். ஊழி வாழ்க’ என்று வாழ்த்தினால் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் ஆண்டு வாழ்க என்று பொருள்.
 2. Life Time. வாழ்நாள். இதனை வாணாள் என்றும் எழுதலாம். எங்கள் பகுதியில் தாயர் சேட்டை செய்யும் பிள்ளையைப் பார்த்து, வாணாளை வாங்காதே’ என்று ஏசுவார். புறநானூற்றில் ஏணிச்சேரி முடமோசியார், வேள் ஆய் அண்டிரனை வாழ்த்தினார் ‘அன்ன ஆக, நின் ஊழி’ என்று.

இன்றைய முற்போக்கு – சமூகநீதி – பெரியாரிய சிந்தனையாளர் பலர் முடமோசியார், முடத்தாமக் கண்ணியார் எனும் பெயர்களை மாற்றுத்திறனாளி மோசியார், மாற்றுத்திறனாளி தாமக் கண்ணியார் என்று எழுத வேண்டும் என்பார்கள். சங்க இலக்கியம் பதிப்பிப்போர், உரையெழுதுவோர், கட்டுரை எழுதுவோர் இதனைக் கருத்தில் கொள்க.

 1. ஊழி என்றால் உலகம் என்று பொருள். தேவாரம், ஊழி ஏழான ஒரு வா போற்றி’ என வாழ்த்துகிறது தென்னாடுடைய சிவனை. ஏழு உலகங்களுக்குமான ஒருவனே போற்றி என்பது பொருள்.
 2. ஊழி என்றால் ஊழ், விதி Fate என்றும் பொருள்.
 3. முறைமை, Regular, Order, ஒழுங்கு, நியதி என்பனவும் ஊழியின் பொருள்கள். எனவே அறியப்பட்ட பொருள்கள் ஏழு.

ஊழி என்ற சொல்லைச் சார்ந்தும் சில சொற்கள் புழக்கத்திலுண்டு. ஊழிக்காய்ச்சல் என்றால் தொற்றுக் காய்ச்சல். Epidemic Fever. ஊழிக்கால் எனில் ஊழிக்காற்று. ஊழிக்காலம் என்பது யுகாந்தக் காலம். ஊழிக்காற்று என்ற சொல் தரும் பொருள், யுக முடிவில் உண்டாகும் காற்று, நச்சுக்காற்று. Poisonous vapour that causes epidemic diseases. ஊழித் தீ எனில் வடவா முகாக்கினி. வடவா+முகா+அக்னி. வடவைத் தீ. ஊழி நாயகன் என்பவன் ஊழி முதல்வன். ஊழி நீர் என்றால் உலக முடிவில் உண்டாகும் வெள்ளப் பெருக்கு. ஊழி நோய் என்பது தொற்றுநோய். இறைவனை ஊழி முதல்வன் என்பர். எவனும் இங்கு ஏழாம்தர அரசியல் தலைவன் பிறந்த நாளுக்கு ஊழி முதல்வனே என்று கட்-அவுட் வைப்பான். கழுதை விட்டைக்கும் கருப்பட்டிக்கும் வேறுபாடு தெரியாதவன். ஆண்டாள் திருப்பாவையில் ‘ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து’ என்பாள்.

ஊழியான் என்றுமொரு சொல்லுண்டு. ஊழியான் என்றால் ஊழியன் அல்ல. ஊழியனுக்கு இன்று மறைபொருள் அநேகம். ஊழியான் என்றால் பிரளய காலத்தும் அழியாதிருக்கும் கடவுள் என்பது பொருள். நெடுங்கால வாழ்க்கையை உடையவன் என்றும் பொருள்.

கம்ப இராமாயணத்தில், கிட்கிந்தா காண்டத்தில், நட்புக்கோட் படலத்தில், அனுமன் வாயிலாக சுக்ரீவனுக்கு இராமனின் சிறப்புக்களைச் சொல்லும் பாடல்:

சூழி மால் யானையார் தொடுகழல் தயரதன்
பாழியால் உலகெலாம் ஒருவழிப் படரவாழ்
ஆழியான் மைந்தர், பேர் அறிவினார், அழகினார்,
ஊழியார், எளிதின் நிற்கு அரசு தந்து உதவுவார்

என்பது.

முகபடாம் அணிந்த யானைப்படையை உடைய மன்னரெலாம் வந்து தொழுகின்ற காலடிகளை உடைய தயரதன், தனது வலிமையால் உலகெலாம் ஒரு குடைக்கீழ் நடக்கும்படி ஆட்சி செய்யும் ஆணைச் சக்கரத்தை உடையவன். அவனது புதல்வர் இராம இலக்குவர். பேரறிவும் பேரழகும் உடையவர். பிரளய காலத்தும் அழியாத நீண்ட வாழ்நாளும் பெருவலியும் கொண்டவர். எளிதில் அவர் உனக்கு அரசாட்சியைத் தந்து உதவுவர். இது பாடலின் பொருள்.

ஊழி பற்றிப் பேசிவிட்டு பாரதியின் ‘ஊழிக்கூத்து’ கவிதையைச் சொல்லாமல் கட்டுரையை நிறைவு செய்ய உவப்பில்லை. வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட’ எனத்தொடங்கும் பாடல். ஐந்துறு பூதம் சிந்திப் போயொன்றாக’ என்கிறார். பாழாம் வெளியும் பதறிப்போய் மெய் குலைய’ என்று விவரிக்கிறார்.

காலத்தொடு நிர்மூலம் படுமூவுலகும் – அங்கே
கடவுள் மோனத்தொளியே தனியா இலகும்

என்று முடிக்கிறார்.

கலியில் தொடங்கி ஊழிக்கூத்தில் முடிக்கிறோம் கட்டுரையை. பாரதி பாடல்களைப் பயிலும் எவரும் அத்தனை இலயிப்புடன் வாசிக்கிற பாடல்கள் அல்ல மழையும் ஊழிக்கூத்தும். சொல்லும் சிலருக்கும் அந்தப் பாடல்களைச் சொல்லும் விதம் தெரிவதில்லை. பாரதியின் உன்னதங்கள் அந்தப் பாடல்கள்.

நான் கம்பன் பயின்ற காலத்தில் நூறாண்டு கண்ட அமரர் ரா. பத்மநாபன் வாசித்துக் காண்பித்த பிறகே எனக்கு அவை அறிமுகம். அவர் தமிழ்க்கடல் ராய.சொ. அவர்களின் மாணவர். ஊழிக்கூத்தும் மழையும் பலமுறை ரா.. சொல்லிக் கேட்டிருக்கிறேன். சிலமுறை பாடச்சொல்லி நானே கேட்பேன். நெஞ்சுச் சளி, மூக்கடைப்புத் தொந்தரவுகள் இருந்தால் மறுத்துவிடுவார். இண்ணைக்கு வேண்டாம் சுப்பிரமணியம்” என்பார். பாடலைச் சொல்லும் விதம் அப்படி.

2012-ம் ஆண்டின் ஆகஸ்ட் இறுதியில், விஷ்ணுபுரம் காவிய முகாமில் – அம்முறை முகாம் ஊட்டிக்கு மாற்றாக ஏற்காட்டில் நடந்தது – நான் மூச்சுப் பிடித்து அவ்விரண்டு பாடல்களையும் சொன்னேன்.

ஊழிக்கூத்தை ஐம்புலன்களும் உணரச்செய்யும் பாடலது.

ஆமாம்!

அன்னை! அன்னை! ஆடும் கூத்தைக் காணச் செய்வாய்
என்னை!’

நாஞ்சில் நாடன்: மார்ச்28 2021, சொல்வனம்

பகிர்க

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

எதிர்ப்பை

பேரகராதியிலும் வேறு சிலவற்றினுள்ளும் தேடியபோது என் பார்வையில் ‘எதிரும் புதிரும்’ எனும் சொற்றொடர் தட்டுப்படவில்லை. எதிர் என்ற சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு. புதிர் எனும் சொல்லுக்கும் அதுவேயாம். புதிர் என்றால் புதிது, புதிய கதிர், விடுகதை என்று பொருள் சொல்கிறார்கள். பிதிர் எனும் சொல்லின் திரிபாகவும் புதிர் கொள்ளப்பட்டுள்ளது. எவராலும் கணக்கில் கொள்ளப்படாத, புச்சமாகக் … Continue reading

More Galleries | பின்னூட்டமொன்றை இடுக