புன்கவி சொன்னேன்!

இது எனது பதினாறாவது கட்டுரைத் தொகுப்பு. தேர்ந்தெடுத்த கட்டுரைத் தொகுப்புக்கள் ஐந்தும் நீங்கலாக. 2001-க்குப் பிறகே நான் கட்டுரை எழுதவந்தேன். திரும்பிப் பார்க்கும்போது அறுவடை பற்றிய மனக்குறை இல்லை. உத்தேசமாக முந்நூறுக்கும் அதிகமான கட்டுரைகள் நவீன தமிழுக்கு எம் பங்களிப்பு.
‘கருத்த வாவு’ என்று தலைப்பிடப்பட்ட இந்தத் தொகுப்பின் கட்டுரைகள் அனைத்துமே 2019-ம் ஆண்டில் வெளியானவை. இத்தொகுப்பில் சேர்க்காமல் தவிர்க்கப்பட்ட சில முன்னுரைகளும் மதிப்புரைகளும் உண்டு. 2018-ல் தமிழினி வெளியிட்ட சொல்லாழி’க்குப் பிறகு வெளியாகும் தொகுப்பு இது. தமிழினி வெளியீடாக வரும் எனது ஏழாவது கட்டுரைத் தொகுப்பு.
சிலர் இந்நூலின் தலைப்பில் திகைத்து நின்றுவிடக்கூடும். கருத்த என்றால் அர்த்தமாகிறது, வாவு தெளிவாக இல்லை என மயங்கலாம். தொகுப்பின் முதல் கட்டுரையின் தலைப்பே நூலின் தலைப்பும். நூலின் தலைப்பு குறித்த ஐயங்கள், வினாக்களுக்கு, முதல் கட்டுரை தெளிவு தரும். எனவே தலைப்பை விளக்கப் புகுந்தால் கூறியது கூறல் குற்றத்துக்கு நாம் ஆளாக நேரும்.
இந்தத் தொகுப்பின் கட்டுரைகள் பகரும் செய்திகள் யாவும் முழுமையானவை என்பதில் எமக்கு உறுதிப்பாடு இல்லை. ஆனால் நோக்கப்பிழைகள் – Intentional errors – கிடையாது. பெரியாழ்வாரே பாடுகிறார், “சழக்கு நாக்கொடு புன் கவி சொன்னேன்” என்று. நாம் எம்பாடு?
பட்டினத்தார் சொல்வார், “நெல் முதல் சூழ்ந்து நீர்ச்சிறு பாம்பு தன் வாய்க்கெதிர் வந்த தேரையை வவ்வியாங்கு” என்று. நெல் சூழக்கிடக்கும் வயலில் வாழும் சிறு தண்ணீர்ப் பாம்பு, தன் வாயின் எதிரே வந்த தவளையைக் கவ்வியதைப் போன்று, என்பது பொருள். என் சிறு புத்தியில் நானும் எதிர்கொண்டதை எழுத்தாக்கியுள்ளேன். அவ்வளவே!
அறிதொறும் அறிதொறும் அறியாமையே எஞ்சுகிறது. மேலும் நாம் முனைவரோ முதுமுனைவரோ பேராசிரியரோ அறிஞரோ இல்லாத பேறு பெற்றோம். நம் சட்டியில் இருப்பது நம் அகப்பையில் வருகிறது. ‘கோமணம் பீ தாங்குமா?’ என்றொரு சொலவம் உண்டு ஊரில். அதுவும் நினைவுக்கு வருகிறது.
கம்ப இராமாயணத்தில், ஆரண்ய காண்டத்தில், சடாயு உயிர்நீத்த படலத்தில் ஒரு பாடல்:
மண் சுழன்றது; மால் வரை சுழன்றது; மதியோர்
எண் சுழன்றது; சுழன்ற அவ்வெறி கடல் ஏழும்;
விண் சுழன்றது; வேதமும் சுழன்றது; விரிஞ்சன்
கண் சுழன்றது; சுழன்றது கதிரொடு மதியும்”
என்று பேசும். மண், எண், விண், கண் என்பன ஈரெழுத்து எதுகைகள். சுழன்ற எனும் சொல் எட்டுமுறை வரும் பாடல். ஆயிரம் யாண்டுகள் முந்திய தமிழ். பொருள் தருவதும் எளிது. சீதையைக் காணாது திகைத்த இராமனின் தத்தளிப்பைச் சொல்வது பாடல். மாநிலம் சுழன்றது. பெருமலைகள் சுழன்றன. ஞானியரின் சிந்தனை திரிந்து சுழன்றது. (இங்கு எண் எனில் எண்ணம்). அலை எறியும் கடல்கள் ஏழும் சுழன்றன. வானம் சுழன்றது. வேதமும் சுழன்றது. பிரமனுடைய கண்கள் சுழன்றன. சூரிய சந்திரர் நிலை குலைந்து சுழன்றனர் என்று பொருள் சொல்லலாம்.
எனது சிந்தனையும் சுழல்கிற போது கிடைத்த தெளிவே இத்தொகுப்பின் கட்டுரைகள். புகழ்மொழிகள் சாற்றுவார் சாற்றுங்கள். அனலிட்டு நீற்றுவார் நீற்றுங்கள்! எனக்கிது முடிந்து போன செயற்பாடு.
இத்தொகுப்பை வடிவு செய்த, அச்சிட்ட, முகப்பமைந்த அனைவருக்கும் வெளியிட்ட தமிழினிக்கும் நன்றி.
என்றும் நட்புடன்.
நாஞ்சில் நாடன்
கோயம்புத்தூர் – 641 042
28 நவம்பர் 2019

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , . Bookmark the permalink.

2 Responses to புன்கவி சொன்னேன்!

  1. சி வடிவேல் சொல்கிறார்:

    ஐயா வணக்கம். 30.05.19 அன்று தங்களின் ‘கருத்த வாவு’ கட்டுரையை இத்தளத்தில் வாசித்து வியந்து பின்னூட்டமும் அளித்தேன். தற்போது அக்கட்டுரை அடங்கிய நூல் வெளிவந்திருப்பது உள்ளபடியே மகிழ்ச்சி. விரைவில் வாங்கி வாசிக்கிறேன். நன்றி.

  2. A.S.NELLAIYAPPAN சொல்கிறார்:

    தமிழ்ப் பெருந்தகைக்கு வணக்கம் . உங்கள் எழுத்தை எதிர் நோக்கிப் படிக்கும் பல்லாயிரக் கணக்கான வாசகர்களில் நானும் ஒருவன் . உங்கள் “ சாலப் பரிந்து “ கதை பற்றி என் முக நூல் பக்கத்தில் எழுதி பலரது பாராட்டைப் பெற்றேன் . அடுத்து என்ன எழுத வேண்டும் என நீங்கள் யோசிக்கின்ற கணங்களில் எல்லாம் , அடுத்து என்ன எழுதுவார் என நானும் யோசித்துக் காத்து நிற்கின்றேன் . நன்றி .

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s