நாஞ்சில் நாடனின் புனைவுலகு

(நாஞ்சில்நாடனின் வலைபக்கத்தில் கடந்த மூன்றரை மாதங்களில், பதிமூன்றாயிரத்து எழுநூற்று நாப்பது சொடுக்குகளில் இதுவரை இந்தகட்டுரையை பார்த்தவர்கள் வெறும் நாற்பதுபேர் மட்டும்தான். ஆகையால் இந்த கட்டுரையை மீழ்பதிப்பு செய்கிறேன். சில படங்களுடன்……………………..எஸ்.ஐ.சுல்தான், ஏர்வாடி)

நாஞ்சில் நாடனின் புனைவுலகு தாடகைமலையடிவாரத்தில் ஒருவர்   ஜெயமோகன்

கமண்டல நதி – நாஞ்சில் நாடனின் புனைவுலகு
ஆசிரியர் : ஜெயமோகன்
வெளியீடு : யுனைடட் ரைட்டர்ஸ்.
விலை: 50.00 ரூபாய்

1991ல் நான் பாலகோட்டு [தருமபுரி மாவட்டம்] சுந்தர ராமசாமியைப் பார்க்க நாகர்கோயில் சென்றிருந்தேன். உள்ளே நுழையும்போது சுந்தர ராமசாமி கோடு போட்ட உயர்தர முழுக்கைச் சட்டையை பாண்ட்டுக்குள் விட்டு நல்ல இடைப்பட்டை கட்டி காலுறை அணிந்து பவ்யமாக அமர்ந்திருந்த ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார். அவர் இனிய புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்தார். நேர்த்தியான உடை நாஞ்சில் நாடன் பவ்யம் நாஞ்சில் நாடன் இனிய புன்னகை…. யாரவர்? மனிதர்களைப் பற்றிய என் நுண்ணுணர்வால் உடனே அவரை ஒரு எல்.ஐ.ஸி முகவர் எனப் புரிந்துகொண்டேன். இந்த வயது வரை சுந்தர ராமசாமி  காப்பீடு செய்யாமலா இருக்கிறார்?

சுந்தர ராமசாமி என்னைப் பார்த்து சிரித்து, “வாங்க. இவர்தான் நாஞ்சில் நாடன்,” என்றார். நான் திரும்பி காலை உணவுமேஜையை ஐயத்துடன் பார்க்க அவர் மேலும் புன்னகை விரிந்து, “இவர்தான்… நம்ப முடியல்லை இல்லையா?” என்றார்.

நாஞ்சில் நாட்டு விவசாயியின் பேச்சையும் எண்ணங்களையும் எழுத்தில் கொண்டுவந்த கலைஞன் என நான் அவரை மனதில் பகுத்து வைத்திருந்தேன். எந்த வகையான நவீன விஷயங்களும் அவரில் ஒட்டமறுத்தது என் மனதில். ஆனாலும், “வணக்கம் சார்” என்றேன்.

“படிச்சிருக்கேன்” என்றார் நாஞ்சில்.

அப்படி விஷமத்தனமாக சிரிக்குமளவுக்கு நான் எதையுமே எழுதவில்லையே என்ற குழப்பத்துடன் “அப்டியா?” என்றேன்.

“நல்லா எழுதறீங்க…” என்றார்.

நான் அருகே மோடாவில் அமர்ந்து கொண்டேன்.

“உங்களுக்கு குலசேகரம் பக்கமில்ல?”என்றார்

“ஆமா”

“…அந்தப் பக்கமெல்லாம் அவியலிலே மாங்கா போடுக வழக்கம் கெடையாது சார்…” என்று நாஞ்சில் நாடன் சுந்தர ராமசாமியிடம் பேச்சைத் தொடர்ந்தார். “ஆனா சாம்பாரிலே சேம்பங்கிழங்கு போடுவா. கல்யாணச் சமையல்ணா சேம்பக்கெழங்கு இல்லாம சாம்பார் இல்ல. காயம் கொஞ்சம் ஜாஸ்தியாப் போட்டு பருப்ப ஒருமாதிரி முக்கா வேக்காட்டா விட்டு… அதும் ஒரு மாதிரி நல்லாத்தான் இருக்கும். இங்க நம்ம தெரிஞ்சவங்க வீட்டு சமையலுக்கு ஒரு நாயர் திருவட்டாரிலேருந்து வந்தாரு. குறிப்படிகளைப் பார்த்ததுமே சேம்பங்கெழங்கு இல்லாம சமைக்கிறது பொண்ணு இல்லாம கல்யாணம் செய்யியது மாதிரில்லான்னு சொல்லிட்டாரு..”

கேரளத்துச் சாம்பாரை மலையாளி அல்லாத ஒருவர் பாராட்டி நான் கேட்பது அதுவே முதல் முறை. கடைசி முறையும் கூட. கேரளத்தில் பதினேழாம் நூற்றாண்டில் சாம்பார் வந்தது, படையெடுத்துவந்த மங்கம்மாளின் படைகளுடன். அந்தக் கோபம் இன்றும் மலையாளிகளுக்கு உண்டு. ‘தெய்வதிண்டே ஸ்வந்தம்’ சாம்பாரைக் கண்டடையும் முயற்சியில் நம்மூர் ரசவாதம் போல அதில் இன்றுவரை பரிசோதனைகள் செய்துகொண்டே இருக்கிறார்கள். அது பலவடிவங்களில் பரிணாமம் கொண்டும் வருகிறது. கேரள இட்லி இவ்வாறு பரிணாமம் செய்த பாதையில்தான் அங்கு இன்னும் பிரபலமாக இருக்கும் பலவிதமான பசைகளும் கூழ்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

நான் நாஞ்சில் நாடனை வாயைத் திறந்து கேட்டுக் கொண்டிருந்தேன். பேசப் பேச சட்டை பேண்ட் எல்லாம் போய் அவர் தோளில் வடசேரி ஈரிழைத் துவர்த்தும் இடுப்பில் பலராமபுரம் புளியிலைக்கரை வேட்டியும் அணிந்து, நெற்றியில் பாதி அழிந்த திருநூறும் வாயில் வெற்றிலையுமாக ஒரு முத்தாலம்மன் கோயில் கல் திண்ணையில் அமர்ந்திருக்கும் சித்திரம் உருவாயிற்று. அதன்பின் நான் அவரை பேண்ட் சட்டையில் பார்த்ததே இல்லை.

அதன்பின் நீண்டநாள் நாஞ்சில் நாடனிடம் பழகிய பின்னர்தான் அந்த ஆச்சரியம் கரைந்தது. அவர் நானறிந்து எந்த உணவுப் பண்டத்தையும் நிராகரித்ததே இல்லை.

போன வருடம் நவம்பரில் காசியில் நானும் சுரேஷ் கண்ணனும் நடந்துகொண்டிருந்தோம். கடுகெண்ணையில் பூரி சுட்டு சாலையோரங்கள் எண்ணெய்ப் புகையால் கரித்தன. குதத்தில் இருந்தே குமட்டலெடுக்க வைக்கும் கடும் நெடி.

“இதைப்போய் எப்டி திங்கிறானுக?” என்றார் சுரேஷ்.

“…சித்தப்பா கதையிலே நாஞ்சிநாட்டு ஹீரோக்கள் பாதிநேரம் இதைத்தானே திங்கிறானுக…? அய்யோ பாவம்…கூப்பிட்டு ஒரு வார்த்தை பேசிப்பிடுவோம். பாவம் அவாள் வட இந்தியாவிலே புளிசேரி எரிசேரி சாப்பாட்டுக்கு எப்டி ஏங்கியிருப்பாக!”

செல்பேசியில் அழைத்து “சித்தப்பா…நல்லாருக்கேளா? நானும் நாயர்வாளும் காசியிலே நடந்திட்டிருக்கோம். இங்க ஒரே கடுகெண்ணை—”

“அய்யோ சூப்பரா இருக்குமே… நெனைச்சாலே எச்சில் ஊறுது” என்று நாஞ்சில் நாடன் பரவசக்குரல் எழுப்பினார். “… சுரேஷ் அங்க கடுகெண்ணையிலே பெரிசா நம்மூர் போண்டா சைசுக்கு ஒண்ணு போடுவான். அதைச் சூடா பச்சமிளகாயும் நல்ல மொளகாப் பொடியும் வச்சு நாட்டுபிரட் நடுவிலே வைச்சு குடுப்பான். அற்புதமா இருக்கும். வடா பாவ்பாஜின்னு பேரு… விடாதீங்க…”

சுரேஷ் பரிதாபமாக என்னைப் பார்த்தபின், “..ஆனா சித்தப்பா, அந்த வாசனை…” என ஆரம்பிக்க நாஞ்சில் நாடன் ஆவேசமாக “…அந்த வாசனைதான் அதோட ஸ்பெஷல். எப்டி இருக்கு பாத்தேளா? பானிபூரி சாப்பிட்டேளா? அந்த ஊர் ஜாங்ரியெல்லாம் ஒருமாதிரி லேசான புளிப்போட இருக்கும். அதுக்கு ஒரு தனி ருசி… இந்த அலஹாபாத் வாரணாசி பக்கமெல்லாம் பால்கோவா ரொம்ப விசேஷமாமே…”

“சித்தப்பா இங்க கங்கை கரையெல்லாம் ஒரே எருமை. பாலுக்குப் பஞ்சமேயில்ல… அதான்…”

“ஆமாமா. பாலை பெரிய கடாயிலே போட்டு நல்லா சுண்டக் காச்சிட்டே இருக்கான். அது ஒருமாதிரி பேஸ்டா ஆனதுமே சீனியை போட்டு கிண்ட ஆரம்பிச்சிடறான்….”

“முழூஉ…க்க்கையையும் விட்டு கிண்டுதானே சித்தப்பா. அக்குளிலேருந்துல்லா வழிச்சு போடுதான்?”

“அதுபின்ன சமையக்காரன் அக்குள்லா? பலதடவ வழிச்சதுக்குப்பிறவு சுத்தமாத்தான் இருக்கும். இதைச் சொல்றியோ. இங்க தோசமாவு கலக்கிறவன் என்ன செய்யுகான்?..”

“சித்தப்பா கோயிலுக்கு வந்துட்டோம். நான் நாளைக்கு கூப்பிடுதேன்…” செல்பேசியை அணைத்து “மனுஷனை நிம்மதியா சாப்பிட விடமாட்டாக…”

“என்ன சொன்னார்?”

“ஆ? பால்கோவாயையே அக்குளை வச்சுத்தான் கிண்டணும்னு சொல்லுதாரு… சும்மா வாங்க மோகன், கடுப்ப ஏத்தாம…”

ருசிதான் நாஞ்சில் நாடன். உண்மையில் அது இயற்கை மீதான ருசி. இயற்கையில் இருந்து மனிதன் தேர்வுசெய்து தொகுத்து உருவாக்குவதனால் சமையல் மீதான ருசி. நாஞ்சில் நாடன் படைப்புகளில் அந்த ஈடுபாடு ஒரு மதநம்பிக்கை போலவே தீவிரமாக வெளிப்படுகிறது. பாலக்காடு வழியாக கேரளா போய்விட்டு வந்து தொலைபேசியில் அழைத்தார்.

“மோகன் இப்பதான் வந்தேன்… கேரளா முழுக்க நல்ல மழை. வரிவரியா பெரிய மலைகள். மலையுச்சிகளிலே கரும்பாறை. மழைபெய்றப்ப என்ன ஒரு கருப்பு… மழைத்தண்ணி அதிலே அருவிகளா கொட்டுறப்ப ஆனைக்க தந்தம் தெரியற மாதிரி இருக்கு… ஒரு எள வெயில் நடுவிலே அடிச்சுது பாருங்க… அப்டியே கை கூப்பி கும்பிட்டுட்டேன். கண்ல தண்ணி வந்து கன்னத்திலே வழியுது…”

நாஞ்சில் ஆரோக்கியமானவரல்ல. சர்க்கரை வியாதி உண்டு. இதயம் ஒரு முறை சிறு மக்கர் செய்து ஆஞ்சிபிளாஸ்ட் செய்து கொண்டிருக்கிறார். ஆனாலும் எனக்குத் தெரிந்து தமிழ் படைப்பாளிகளில் மிக அதிகமாகப் பயணம் செய்வது அவர்தான். பயணப் பையை அவர் கலைப்பதேயில்லை. வந்து இறங்கி ஆச்சியிடம் நாலு நல்ல வார்த்தை பேசி சாப்பிட்டு தூங்கினால் அடுத்த நாளே மீண்டும் பயணம்.

பயணம் மூலம் அவர் இயற்கை நடுவில் இருக்கிறார். இயற்கையில் அவருக்கு ஒரு ‘மறைஞான’ உணர்வு இருக்கிறது. அதை அவர் தத்துவப்படுத்துவதே இல்லை.

“…பெரிய மணல் வெளி… ஆளே இல்ல. கொஞ்சமா தண்ணி. ஓடுது…. காயத்திருமேனி எண்ணை வழிஞ்சு போறது மாதிரி பச்சையாட்டு… அந்தப் பக்கம் சிவன் கோயில். இந்தப் பக்கம் ஒரு சின்ன காளி கோயில்… பறவைகளோட சத்தம் மட்டும்தான்… என்னமோ பண்ணுது மோகன்” அவரது அதிகபட்ச வெளிப்பாடு என்பது இது மட்டும்தான்.

நாஞ்சில் நாட்டு இயற்கையை அவர் சொன்ன விதமே அவரை தமிழிலக்கியத்தின் முக்கியமான மையமாக ஆக்கியிருக்கிறது. யோசித்துப் பார்ப்போம், அவர் அசாதாரணமான கதாபாத்திரங்களை உருவாக்கியதில்லை. மகத்தான மனமோதல்களை படைத்ததும் இல்லை. எளிய மக்கள், எளிய சித்திரங்கள். ஆனால் அவர்கள் பேருருவம் கொண்ட ஒரு இயற்கையின் மடியில் இருக்கிறார்கள். அனைத்துக்கும் சாட்சியான தாடகை மலை. வற்றாத ஆறு. உயிர் ததும்பும் வயல்கள். ஆகவே அவ்வாழ்க்கை அழியாத பேரியற்கையின் ஒரு நிகழ்வாக ஆகிவிடுகிறது.

“சுப்ரமணியம் நல்ல வேளையா சென்னையிலே இல்லை. இருந்திருந்தா எப்டியும் ஒருதடவை கூவத்திலே குளிச்சிருப்பார்…” என்றார் சுந்தர ராமசாமி. நாஞ்சில் நாடன் ஆற்றைப் பார்த்தால் குளிக்காமல் வரமாட்டார். மீண்டும் மீண்டும் ஆற்றில் குளிக்கும் சித்திரங்களை நாம் அவரது படைப்புலகில் காண்கிறோம். அவரது கதாபாத்திரங்களுக்கும் இந்த ஈர்ப்பு உண்டு. பூலிங்கத்தின் [எட்டுத் திக்கும் மதயானை] பயணமே வீர நாராயண மங்கலம் ஆற்றில் இருந்து கிருஷ்ணா கோதாவரி என்று மாறி மாறிக் குளிப்பதாகவே இருக்கிறது. “…சும்மா கண்ட கண்ட கானல் நதிகளிலே குளிக்கிறதுக்கு, இருந்திட்டிருக்கிற நதிகளிலே குளிக்கிறது எவ்ளவோ பெட்டர்” என்று நாஞ்சில் நாடனின் யதார்த்தவாதத்தைப் பற்றிச் சொல்லும்போது சுந்தர ராமசாமி குறிப்பிட்டார்.

யதார்த்தவாதம் நாஞ்சில் நாடன் தேர்வுசெய்துகொண்ட அழகியல் அல்ல. அவரது ஆளுமையே முற்றிலும் யதார்த்தமயமானது. பாலாஜி சக்திவேலின் பிரபலமான ‘காதல்’ படம் வந்தபோது சுரேஷ் கண்ணனும் நாஞ்சிலும் சேர்ந்து அதைப் பார்த்தார்கள். அதில் நகரவிடுதியில் அந்த இயக்குநர், “டைரக்டா ஹீரோவா?” என்று கேட்கும்போது “..ஆமா சார் அப்டியே சி.எம்” என்று சொல்லும் விரிச்சிக காந்த் என்ற பல்லவர் பிற அனைவரிலும் சிரிப்பை உருவாக்கியபோது நாஞ்சில் அனுதாபத்துடன் சொன்னார். “பாவம் சுரேஷ், யோசிச்சுப்பாருங்க. எவ்ளவு கனவோட அந்த ஆள் இருக்கான். இதுக்குன்னே ஊரிலேருந்து பஸ் ஏறி வந்து மெட்ராஸிலே அலைஞ்சு…” சுரேஷ் இதற்கு தனியாகச் சிரித்ததாகச் சொன்னார்.

வாழ்க்கையை நாஞ்சில் நாடன் ஒரு பெரிய யதார்த்த நாடகமாகவே பார்க்கிறார். இன்னும் உருவகமாகச் சொல்லப்போனால் ஒரு மாபெரும் கல்யாண விருந்தாக. இதிலே மாப்பிள்ளை வீட்டுப் பெரிய மனிதர்களுக்கு நல்ல சாப்பாடு. மெல்ல மெல்ல சாம்பாரில் கஞ்சித்தண்ணி கலக்கிறது. சோறு வேகாமலாகிறது. அப்பளம் மீண்டும் கேட்டால் கிடைப்பதில்லை. பாயசம் பரிமாறுகிறவன் ஒரே அகப்பையை ஒன்பது இலையில் தொட்டுத் தொட்டுச் செல்கிறான். [நாஞ்சிலின் சொற்கள், ‘எளவு பாயசத்தாலே எலயில பொட்டு வச்சிட்டுல்லா போறான்?’]. ஒன்றும் சொல்வதற்கில்லை. மனக்குமுறலுடன், “செரி, இப்ப என்ன? நம்ம வீட்டு கல்யாணம். நம்ம புள்ளைக… நல்லாருக்கட்டும்” என்று சொல்லி புன்னகைப்பதல்லாமல்.

சாப்பாடுப் பந்தி நாஞ்சிலுக்குரிய ஒரு சிறப்பான உருவகம். ஜார்ஜ் லூயி போர்ஹெவுக்கு நூலகம் போல. போர்ஹெ போல இவரும் மேலே சொர்க்கமும் ஒரு பெரிய சாப்பாட்டுப் பந்திதான் என்று அவர் உருவகித்திருக்கிறாரா தெரியவில்லை. அவரது சிறுகதைகளில் ஏராளமான கல்யாணப் பந்திக் கதைகள் இருக்கின்றன. சம்பந்தமில்லாத விஷயங்களுக்கும் இங்கே உருவகம் அகப்படும். பின் நவீனத்துவ சிந்தனைகள் வந்து அலம்பல் செய்த காலத்தில் நாஞ்சில் சொன்னார். “… பக்கத்து எலையிலேருந்து ரசம் ஓடி நம்ம எலைக்கு வாறதுல்லா அது? செரி போட்டுன்னு வக்கலாம்னா நாம சாப்பிடுகது பாயசம் பாத்துக்கிடுங்க…..”

நாஞ்சில் நாடனின் நெஞ்சில் ஆழமாகப் பதிந்த ஒரு வடுவைப்பற்றி அவர் மீண்டும் மீண்டும் எழுதியிருக்கிறார். பள்ளியில் வகுப்பை விட்டுவிட்டு நாலுமைல் தூரம் ஓடி ஒரு கல்யாணப் பந்தியில் அமர்ந்து எளிய உடை காரணமாக கைபிடித்து தூக்கி வெளியே விடப்பட்டதன் அவமானம். தன் அறுபது வயதிலும் அது நெஞ்சைச் சுடுகிறது என்று அவர் சொல்லியிருக்கிறார். அதிலிருந்து வளர்ந்தது அந்தப் பந்திப்பாசம். பந்திப்பாசமறுத்து உய்வடைவதே முக்தி என்றால் அதை அவரது ஒரு கதாபாத்திரம் அடைகிறது. எல்லாக் கல்யாணத்திலும் கையில் திருவாசகக் கவசத்துடன் புகுந்து சுவையறிந்து உண்ணும் அவரை சமையற்குழுவே ஆஸ்தான ‘சுவைபார்ப்புன’ராக அமர்த்திக் கொள்கிறது. அதனால் அவருக்கு பந்திச் சாப்பாட்டில் ருசி இல்லாமலாகிறது. பாசமறுத்து பதியில் ஒடுங்கிய ஒரு பசு.

நாஞ்சில் நாடன் ஒரு நிரந்தரப் பயணி. ந.முத்துசாமியின் ஒரு கதாபாத்திரம் தாசியை பார்க்க செம்பொனார்கோயில் போகவேண்டும். ஆனால் ஊஞ்சலில் இருந்து எழுந்திருக்க சோம்பல். ஊஞ்சலில் ஆடியபடியே ‘இந்த ஊஞ்சல் மட்டும் பின்னால் வராமல் முன்னாலேயே போயிருந்தால் இந்நேரம் செம்பொனார் கோயில் போயிருக்கும்’ என சிந்திக்கும். [செம்பொனார் கோயில் போவது எப்படி?] கிட்டத்தட்ட அதுதான் நாஞ்சில் நாடனின் பயணங்கள். பெண்டுலப்பயணம். பம்பாய்க்கும் திருப்பி வீரண மங்கலத்துக்கும்.

நாஞ்சில் நாடனின் பயணப்பையை நான் பீதியுடன் பார்ப்பதுண்டு. பொதுவாகவே எனக்கு கனகச்சிதம் என்றாலே என் அப்பா ஞாபகம் வந்து மனதைக் கலக்கும். கச்சிதமாக மடிக்கப்பட்ட துணிகள். நானெல்லாம் பையை திறந்தால் ஒரு ஜட்டியை எடுக்க எல்லா துணியையும் கலைக்க வேண்டியிருக்கும். நாஞ்சில் நாடன் எல்லாவற்றையும் தொகுப்பு தொகுப்பாக வைத்திருப்பார். பயணத்தில் போட்ட ஜட்டியையே மீண்டும் போட்டுவிட்டோமா என்ற ஐயத்தால் மேடையில் பேச்சுகூட சரியாக அமையாது போன சந்தர்ப்பம் எனக்கு உண்டு. முகர்ந்து பார்த்தாலும் விசேஷமாக எதும் கண்டுபிடிக்க முடிவதில்லை. நாஞ்சில் நாடன் போட்டதற்கும் கழற்றியதற்கும் தனித்தனியாக பாலிதீன் பைகள் வைத்திருப்பார். பற்பசை, ஷாம்பூ, பௌடர் எல்லாவற்றுக்கும் சாஷேக்கள். குறிப்பேடு, பாத்ரூம் சப்பல், கொசுவத்தி, தீப்பெட்டி…. சில ஓட்டல்களில் கொடி இருக்காது காயப்போட. ஆகவே சிறு நைலான் கயிறு. [சூட்கேஸைத் திறந்து அந்தக் கயிறைப் பார்த்திருந்தால் ஓட்டலில் ரூம் கொடுக்கமாட்டார்கள்] இத்தனைப் பொருட்களுடன் இவர் கிளம்புவதை வைத்துத்தான் முக்கால்நாள் ஊரில் இல்லாத இவருக்கு சின்னவீடு இருக்குமோ என்ற ஐயத்திலிருந்து ஆச்சி விடுபட்டிருக்கவேண்டும்.

அறைபோடும்போது பல நிபந்தனைகள் உண்டு. “…ரிசப்ஷனைப்பாத்து ஏமாந்திரப்பிடாது, மலையாளத்தான் சிரிப்பை நம்புற மாதிரியாக்கும் அது… ரூமுக்குப் போயி கக்கூஸை கதவைத் தெறந்து உள்ள பாக்கணும். மெத்தைமேல நல்ல வெள்ள விரிப்பா போட்டிருப்பான். தூக்கி பாக்கணும். உள்ள பழங்கால மெத்தை செல்லரிச்சு கெடக்கும். ராத்திரி செள்ளு கடிச்சு கொன்னிரும்… நேஷனல் ஹைவேயைப்பாக்க ரூம் போடப்பிடாது. ராத்திரி டைனோசர் சத்தம் மாதிரி லாரி கத்தும்…” அனுபவ வெள்ளம்!

அறையைக் காலிசெய்யும்போதும் அதற்கென்றே ஒரு வரிசை முறை உண்டு. முதலில் பாத்ரூம்பொருட்களை எடுத்து ஈரத்துணிகளை முறைப்படி பதமாக பாலிதீன் உறைகளில் வைப்பது. செருப்பை தனியாகச் சுருட்டி வைப்பது முதலிய சம்பிரமங்கள். கட்டிலுக்கு அடியில் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும். பிளக் பாயிண்டுகளை விடக்கூடாது- செல் ·போன் சார்ஜரை விட்டுப்போவது கற்றுக்குட்டிகளின் வழக்கம். நான் ஐம்பது ரூபாய் சார்ஜர் ஒன்று தொலைப்பதற்கென்றே வைத்திருக்கிறேன்.

“நமக்கு பிரச்சினை இல்ல, ஜெயமோகன். வேற மாதிரி ஆளுகளானாக்க துணிக்குள்ள காஞ்ச மல்லியப்பூ தலமுடி ஏதாவது மாட்டியிருக்கான்ணு ஒரு முற பாத்துக்கிடணும்” என்றார் நாஞ்சில் புன்னகையுடன்.

“முடி மாட்டும் இல்ல சார்?” என்று ஆர்வமாக சண்முகம் கேட்டார்.

“…தலமுடீண்ணா என்னான்னு நெனைக்கிறீங்க? அது கன்மமலம் மாதிரில்லா? எளவு, பிடிச்சா சும்மா விடுமா?”

பயணத்தில் பெட்டியைக் கடாசிவிட்டு ஊரில் அலைந்து திரும்பிவந்து குளித்து சாயவேட்டி கட்டி சன்னமாக விபூதி பூசி காதைக்குடைந்தபடி மெத்தைமேல் ஏறி சப்பணம்போட்டு அமரும்போது நாஞ்சில் மெல்லமெல்ல  தியான நிலையை எட்டுவதை கண்கூடாகக் கானலாம். அதன் பின்னர் தான் மது. பிராண்ட் தீர்மானங்கள் உள்ள பிடிவாதக்காரர் அல்ல. எங்கும் எதிலும் சுவை உள்ளது என நம்புபவர். ரம், வோட்கா, ஜின். காசிருந்தால் சிக்னேச்சர் விஸ்கி.

“…இந்த மாய யதார்த்தம்னாக்க நம்ம ‘உள்நாட்டில் தயாரான அயல்நாட்டு மது’ மாதிரியாக்கும். சங்கதி எல்லாமே பொள்ளாச்சி மகாலிங்கத்துக்க காந்தியன் மொலாஸசுதான்…”.

மதுவை சும்மா எருமை கழனித்தண்ணி குடிப்பதுபோல குடிப்பதை நாஞ்சில் நாடன் ஏற்கமாட்டார். முதலில் மூக்குக் கண்ணாடியை மாட்டிக் கொண்டு தலையை தூக்கி கண்ணாடிக் கீழ்வட்டம் வழியாக அதன் மேல் அச்சிடப்பட்டுள்ள பொடி எழுத்துகளைக் கூர்ந்து படிப்பது தொடக்கம். அபூர்வமான ரகம் என்றால் மூடியை பெட்டிக்குள் போட்டு சேமிப்பது உண்டு. காதலியின் வளையல் துண்டுகள் போல அது ஒரு இனிய நினைவு.

பின்னர் பாட்டிலின் அடிப்பகுதியை உள்ளங்கையில் ஒரு தட்டு தட்டி [இல்லாட்டி மூடி சுத்தும். பிடிச்சா பிடி சிக்காது. ஒரு மாதிரி சீண்டிரம் பிடிச்ச பொம்பிளைங்க கிட்ட பேசுகது மாதிரி ஆயிரும். மெனக்கேடு…] அதன் பின் சட்டென்று மூடியை வசமாகப் பிடித்து ஒரு சுற்று சுற்றினால் திறக்கும். அளவாக பாட்டிலில் விட்டு அதை மின் விளக்கு ஒளியில் தூக்கி அளவைப்பார்க்க வேண்டும். பின்னர் ஒரு அரை அவுன்ஸ். மீண்டும் தூக்கிப்பார்த்து மேலும் ஒரு துளி. இந்த ஒரு துளியால் என்ன நிகழ்ந்துவிடும் புரியவில்லை. அதன் பின்னர் மினரல் வட்டரை யக்ஞ நெருப்பில் நெய்விடும் புரோகிதரின் பாவனையுடன் மெல்ல வீழ்த்தி எடுத்து மீண்டும் அளவு பார்த்தபின் நிமிர்ந்தால் முகத்தில் பரவசம். கண்ணாடியை கழற்றிவிட்டு ‘அப்றம்? ‘என்பது போல ஒரு சிரிப்பு.

‘நாடன்’ என்றால் மலையாலத்தில் ‘நாட்டுச்சாராயம்’ என்று பொருள். “நாஞ்சில்- நாடன் கழிக்குமோ?” என்று மலையாளக் கவிஞர் டி.பி.ராஜீவன் கேட்டார். “அது நாஞ்சில் ‘நாடன்’ எந்நால் கழிக்கும். வேறே கழிக்கில்ல” என்றேன். நாஞ்சிலுக்கு மதுவில் சாதிப்பாகுபாடு கிடையாது. ஆனால் பாரம்பரியம் பற்றிய போதம் உண்டு.

‘பின்தொடரும் நிழலின் குரல்’ நாவலில் கதிர் என்ற கதாபாத்திரம் சொல்லும் “வேளாளப்பிள்ளைக உளுந்தங்களி சாப்பிட்டாலே போதை ஏறிடுவானுக”– நாஞ்சில் நாடனுக்குப் பிடித்த சொற்றொடர் அது. ஆனால் நாஞ்சில் நாடன் எனக்குத் தெரிந்து உளுந்தங்களி சாப்பிட்ட அளவுக்கு கூட மது சாப்பிட்டு நிதானம் இழப்பதில்லை. ‘மாங்காப்பால் உண்டு மலைமேல் இருப்பவரின்’ பாவனைதான். ஆகவேதான் நான் ஒருமுறை தமிழ்நாட்டிலேயே ‘தரமான’ குடிகாரர்களின் பட்டியல் ஒன்றை உயிர்மையில் வெளியிட்டபோது நாஞ்சில் நாடனுக்கு முதலிடம் அளித்தேன். இரண்டாமிடம் க.மோகனரங்கன். அதைத் தொடர்ந்து நாஞ்சில் நாடன் தன் மது அனுபவங்கள நாலைந்து கட்டுரையாக எழுதினார். [நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று]. ·பாதர் ஜெயபதி அவர்கள் மது ஒழிப்புக்காக நாகர்கோயிலில் கூட்டிய மது அடிமைகள் மறுவாழ்வு மாநாட்டில் மது அருந்தும் கலையை விதந்தோதி பேசிய பேச்சுதான் கடைசி என நினைக்கிறேன்

நாஞ்சில் நாடனின் போதை மூன்று படிகள் கொண்டது. ஆணவம் கன்மம் மாயை போல. அல்லது பசுபதிபாசம் போல. முக்கியமாகக் குறிப்பிடத்தக்கது மது உள்ளே போனதும் நகைச்சுவை வெளியே போய்விடும் என்பது. முற்றிலும் ‘சீரியஸான’ நாஞ்சிலை நாம் இச்சந்தர்ப்பங்களில்தான் காண முடியும். மேலும் மது என்பது அவரை ஒரு அதி தீவிர இந்தியக் குடிமகனாக ஆக்கும் தேசபக்தி பானமும் கூட. சமூக அநீதிகளுக்கு எதிராக புருவம் தூக்கும் நாஞ்சில் நாடனை நாம் அப்போது காணலாம்.

முதல் தளம் பொதுவான ஆதங்கங்கள். “பாருங்க இவன்லாம் இப்டி செய்யுதான்…” என்ற மட்டில். தமிழாசிரியர்கள் வட்டிக்கு பணம் விடுதல், சொற்பொழிவுக்குப் போன அப்பாவித்தமிழ் எழுத்தாளனுக்கு [நாஞ்சில் நாட்டைச் சேர்ந்தவர்] நூறு ரூபாய் கொடுத்துவிட்டு காலி வவுச்சரில் கையெழுத்துப் பெறும் அவலங்கள், மேற்படி எழுத்தாளர் பேசிக்கொண்டிருக்கும்போது நாலாந்தர மேடைப் பேச்சாளன் வந்ததுமே மொத்த நிகழ்ச்சிக் குழுவும் பாதி பங்கேற்பாளர்களும் பாய்ந்து வெளியே ஓடும் கொடுமை. உச்சகட்டமாக அவரிடம் வந்து பேச்சைக் குறைத்து உழைப்பைப் பெருக்குமாறு கூறும் அநீதி, அந்த அவலங்களுக்கு முன்னால்கூட இனிய புன்னகையை மட்டுமே அளிக்கும்படி பழகிப்போன விற்பனைப் பிரதிநிதித்தனம் என்னும் சமூகச் சீர்கேடு.

இரண்டாம் தளம் மெல்ல சூடேறுகிறது. தேசிய அவலங்கள். “எப்டீங்க உருப்படும்? இல்ல கேக்கேன்… ” என்ற அளவில். மன்மோகன் சிங்கின் நிலை கிட்டத்தட்ட இந்தியக் கணவர்களின் நிலையாக ஆகிப்போனமை, சோனியா காந்தியின் தேசபக்தி… பின்னர் உலகச் சிக்கல்கள். பாகிஸ்தானின் ஜனநாயகம் இல்லாமை, [இங்கமட்டும் இருக்கான்னு கேக்காதீக. இருக்குன்னு சொல்லுகதுக்குண்டான உரிமை மட்டுமாவது இருக்கா இல்லியா?] ஈராக்கை அமெரிக்கா அநீதியாக ஆக்ரமித்துள்ளமை. உச்சகட்டமாக ராயல்டிக்கு பதிப்பகங்கள் ஒழுங்காக கணக்கு வைத்திருக்காததன் விளைவான பொருளாதார நெருக்கடி..

மூன்றாம் தளம் ஆன்றவிந்தடங்கிய நிலை. ” என்னா சொல்லுகது போங்க..” இந்நிலையில் “சும்மாவா பெரியவங்க சொல்லி வச்சிருக்காங்க…”, “எல்லாத்துக்கும் அதுக்குண்டான ஒரு இது இருக்குல்லா?” போன்ற தத்துவ நிலைப்பாடுகள் வெளிப்படுகின்றன. கம்பராமாயண வரிகள் “இவ்வண்ணம் நிகழ்ந்தவண்ணம் இனி இந்த உலகுக்கு எல்லாம் உய்வண்ணம் அன்றி மற்று ஓர் துயர்வண்ணம் உறுவது உண்டோ?” ண்ணுல்லா சொல்லுகான்… அந்தப்பாட்டுக்க கடசீ வரி இருக்கே ‘கைவண்ணம் அங்கு கண்டேன். கால் வண்ணம் இங்கு கண்டேன்…’ கண்ணதாசன் கூட இதை வச்சு ஒரு பாட்டு எழுதிப்போட்டான்…” அப்டியே நாஞ்சில் நாடன் சமனமடைந்து இசைக்குள் செல்வார்.

நான் பிறந்ததுமே என் மாமா என்னை எடுத்து முத்தியதாக அம்மா சொல்வர். அவர் ஒரு பெருங்குடிகாரர். ஆக பிறந்ததுமே குடிகார சகவாசம். இந்த நாற்பத்தைந்து வருடங்களில் பார்த்த மதுரசிகர்களில் போதையிலும் பிறர்க்கின்னா நினையா பெருந்தகையாளனாக நாஞ்சில் நாடன் ஒருவரை மட்டுமே பார்த்திருக்கிறேன்

நாஞ்சில் நாடன் என்றுமே தீவிரமான இசை ரசிகர். சிறுவயதில் திரையிசை நாட்டம் அதிகமாக இருந்திருக்கிறது. ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன் மேல் மோகம் அதிகம். எம்.எஸ்.விஸ்வநாதன் பாடல்களும் பிடிக்கும். அவரை திரையிசையில் இருந்து துரத்தியவர் எல்.ஆர்.ஈஸ்வரி. “அவங்க பாடினாலே ஆயிரம் கண்ணுடையா கொப்புடையம்மன் ஜிகினாப்பாவட கட்டிகிட்டு வந்து ஆடுகது மாதிரி ஒரு நெனைப்பு வந்து ரொம்ப கஷ்டமா இருக்கு..” ஒரு கல்யாண அழைப்பிதழில் பெண் பெயர் ஈஸ்வரி என்று போட்டிருந்ததைக் கண்டே நாஞ்சில் நாடன் கடுப்பானதை நினைவு கூர்கிறேன்.
“பொண்ணுக்கு குரல் நல்லாருக்காதுண்ணு நெனைக்கேன். ஒரு மாதிரி பேஸ்வாய்ஸ்ல காப்பி குடிக்கேளாண்ணு நம்ம கிட்ட கேட்டாள்னா என்ன செய்யுகது?”

அப்படியே நாஞ்சில் நாடன் கர்நாடக இசைப்பக்கம் நகர்ந்தார். சிறுவயதில் அப்பாவுடன் சுசீந்திரம் திருவிழாவுக்குப்போய் பருப்புவடையும் சுக்குக் காப்பியும் குடித்து பனியில் அமர்ந்து கேட்ட சீர்காழி கோவிந்தராஜன், மதுரை சோமு, மணி அய்யர் கச்சேரிகள் அவரை இசைக்குப் பதப்படுத்தியிருந்தன. அவரது அப்பா ஒரு நல்ல இசை ரசிகர். நாஞ்சில் நாடனின் ரசனை மிக நுட்பமானது. தொடர்ந்து இசை கேட்பவர். ஏராளமான இசை சேகரிப்பு உண்டு. கோவை இசைச் சங்கத்தில் தீவிர உறுப்பினர். டிசம்பரில் சென்னைக்குப்போய் கேட்பார். எல்லாரைப் பற்றியும் கறாரான கருத்துகள் உண்டு. ஆனால் இசை ரசிகர்களுக்கு இசை பற்றி வாய் ஓயாமல் பேசுவது பொதுவாகப் பிடிக்கும். நாஞ்சில் நாடன் வாயே திறப்பதில்லை. கேட்டால் மட்டுமே சொல்வார்

பொதுவாக அவருக்கு புதிய பாடகர்கள் மேல் அதிகப் புகார்கள் இல்லை. சஞ்சய் சுப்ரமணியம், அருணா சாய்ராம் போன்றவர்களைப் பிடிக்கும். ஆனாலும் அவரது ரசனை சம்பிரதாயமாக பாடுபவர்கள்மேல்தான். சென்னை புத்தகக் கண்காட்சியில் மதுரை டி.என்.சேஷகோபாலன் தனியாக நிற்பதைக் கண்டு பதின்பருவத்துக்கு மட்டுமே பொருத்தமான பரவசத்துடன் பாய்ந்துசென்று அவரிடம் அளவளாவினார். திரும்பும் வழியில் கரும்பு தின்ற எருமை போல ஒரு பாவனையுடன் “என்னா ஒரு பாட்டு…இல்ல? தனியா நிக்கிறார். பாருங்க ஒருத்தர் கூட கவனிக்கல்லை” என்றார்

“அவரு ஒரு சினிமால கூட நடிச்சிருக்காரே…”என்றேன்.

“ஆமா. தோடி ராகம்னு பேரு…குன்னக்குடி பட்டைநாதன்  எடுத்த படம். அந்தப் படத்தில நளினிய கட்டிப்பிடிக்கிறப்ப அவ முலை இவர் மேல படுறப்பல்லாம் இவர் முகத்தில ஒரு மரண வேதனை தெரியும் பாருங்க…கொடுமை!”

இதுவரைக்கும் நான் நாஞ்சில் நாடனுடன் பேசியதை வைத்துப் பார்த்தால் அவரது இலட்சியப் பாடகர் மதுரை சோமுதான். “பாவம்னா சோமு பாடணும். அப்டியே மறந்து போய்டுவார். என்ன ஒரு கார்வை. என்ன ஒரு வேகம். அப்டில்லாம் பாடகர்கள் சும்மா வந்திர மாட்டாங்க. நாம காத்து இருக்கணும்…”

யுவன் சந்திரசேகர் மற்றும் அவரது நிழலாக வரும் மதுரை தண்டபாணி இருவருக்கும் மதுரை மணி அய்யர்தான் உச்சம். மறுத்துப்பேசும் வழக்கம் நாஞ்சில் நாடனிடம் இல்லை. ஆனால் “நல்லாத்தான் பாடுவாரு… அவரு பாட்டில ஒரு வரி கோயில்பட்டி கடலமிட்டாய் மாதிரி பன்னிரண்டு துண்டாட்டுல்ல இருக்கும்” தமிழறிவும் கவிதை மீதான ஈடுபாடும் நாஞ்சில் நாடனை வரிகளையும் பொருளையும் சிதைத்துப் பாடுவதை ரசிக்க அனுமதிப்பதேயில்லை. அதனாலேயே அவருக்கு அதிக ஈடுபாடு இல்லாவிட்டாலும் மகாராஜபுரம் சந்தானத்தை அவர் மதித்தார்.

ஒருபோதும் இசையைப் பற்றிய மிகைச் சித்திரங்களை நாஞ்சில் நாடன் அளிப்பதில்லை. லா.சா.ரா போல கட்டைவிரலைச் சுற்றி பாம்பு பிணைந்தேறி கால்வழியாக சிரசில் படமெடுக்கும் அனுபவமெல்லாம் அவருக்கு இல்லை. அதே சமயம் ராகம் தாளம் என்ற கணக்கு வழக்கு விவகாரமும் அவரிடம் இல்லை. அருணா சாய்ராம்  கச்சேரி கேட்டுவிட்டு என்னிடம் ·போனில் சொன்னார். “நல்ல பதமான பாட்டு. சித்திரைமாசத்திலே மணல்திட்டு நடுவிலே ஓடை மாதிரி சன்னமாட்டு தண்ணி ஓடும் பாருங்க. நல்லா தெளிஞ்சு, சத்தமே இல்லாம. அடக்கமான பொண்ணு சேலை முனிதியை கையால பிடிச்சுட்டு மெல்ல நடக்கிற மாதிரி, அந்தமாதிரிப் பாட்டு…”

முழுக்க முழுக்க ஒரு பெரும் கலைஞனின் ரசனை அது. ஒரு கலையைப் பார்த்து நாக்கை சுழட்டுவதும் தோள்தட்டி ஆர்ப்பரிப்பதும் எப்படியோ அக்கலையை இழிவுபடுத்துகிறது என்பது என் எண்ணம். கலைஞர்கள் கலையுடன் தனித்திருக்கக் கற்றவர்கள். நாஞ்சில் நாடனால் கேட்கப்படுவதென்பது அந்த பாடகனின் பெரும் வரங்களில் ஒன்று– அவர்கள் அதை அறியுமளவுக்கு நம் பண்பாடு வளரவில்லை என்றாலும்.

நாஞ்சில் நாடன் எம்.எஸ்.ஸி படிப்பை முடித்த பிறகு வேலைதேடி பம்பாய்க்குச் சென்றார். அதற்கு முன் அவரது நகர அனுபவம் என்பது மாதுரை நகரின் ‘கிழ தாசி போன்ற’ வைகையும் தூசியும் கருமை படிந்த கோபுரங்களும் சுந்தரேஸ்பரரின் விபூதியும்தான். அவசரமாக நாகர்கோயில் ஒழுகிணசேரி தையல்காரரிடம் தைத்த, எல்லா விதமான சுப்ரமணியன்களுக்கும் பொருந்தகூடிய பாண்ட்டும் சட்டையும் அணிந்து ஒல்லியான உடல் மீது பதைக்கும் கண்கள் கொண்ட பெரிய தலையும் பவ்யமான சிரிப்புமாக பம்பாய்க்குச் செல்லும் நாஞ்சில் நாடனை இப்போதும் காணமுடிகிறது. நவீனத் தொழில் நாகரீகம் சுழித்து அலறி ஓடும் மாநகரத்தில் விக்டோரியா டெர்மினலில் நாஞ்சில் நாட்டிலிருந்து தகரப்பெட்டியுடனும் கரிமுகத்துடனும் வந்திறங்கும் ராமசாமிகள், சுப்ரமணியங்கள், கணபதியா பிள்ளைகள், அம்புரோஸ¤கள், தாவீதுகள் நடுவே அவருக்கும் ஒரு இடம் காத்திருந்திருக்கிறது. அதை எப்படியேனும் சென்றடையும் வைராக்கியம் அவரது நெஞ்சுக்குள் வறுமையால் உருவாக்கப்பட்டிருந்தது.

நாஞ்சில் நாடனுக்கு பம்பாய் என்றால் எறும்பரித்துக் கொண்டு செல்லும் புழுபோல நகரும் மாநகர் மின்ரயிலும், தெருவை அறுத்துச்செல்லும் சாக்கடையை பிரீ·ப் கேஸ¤டனும் ஷ¥க்காலுடன் தாவிக்கடக்கச்செய்யும் இடுங்கிய தெருக்களும்  கக்கூஸ் போக முறை வைத்துக் காத்திருக்கும் அறையும் இரவுத்தூக்கத்திற்கு முன் நெஞ்சில் தெளிந்து வரும் நாஞ்சில் நாட்டு நினைவுகளும்தான். தன் கதைகளில் மீண்டும் மீண்டும் அந்தச் சித்திரத்தை நாஞ்சில் நாடன் எழுதியிருக்கிறார்.

“பம்பாய்க்கு ஒரு நல்ல பழக்கம் இருக்கு. எங்கியும் சாப்பிடலாம். எங்கியும் தூங்கலாம் யாரும் கேக்க மாட்டாங்க. பம்பாய் மாதிரி சீப்பா சாப்பாடு கெடைக்கிற எடத்தை பாத்ததே இல்லை. பாவ்பாஜி ரெண்டு சாப்பிட்டா  ஏப்பத்தில மணமா இருக்கும். மறுநாளைக்கு கூட மணம் இருக்கும், வேற மாதிரி…” என்றார் நாஞ்சில் நாடன்.

“சப்பாத்தி நல்லா சொளவு மாதிரி குடுப்பான். தொட்டுக்கிட உப்பும் வினிகரும் போட்ட பெரியவெங்காயம் போதும்ணாக்க ஒரு பிரச்சினையும் இல்ல. ஒரு சோடா கலர் குடிக்கிற காசிலே சாப்பிட்டுடலாம். ரொம்ப குளிர் கெடையாது. டிசம்பர் ஜனவரி தவிர மத்த நாட்களில ஒரு மாதிரி சமாளிச்சுகிட்டு தூங்கிடலாம். ·பாங்க் இல்லாட்டி பட்டை அடிச்சா கொசுக்கடி தெரியாது. கொசுதான் தலைசுத்திக் கஷ்டப்பபடும்.. ஏழைகளுக்கு ஏத்த நகரம்….”

“பம்பாயில் சேட்டுகளுக்குப் பெரிய பந்தா எல்லாம் கிடையாது” என்றார் நாஞ்சில் நாடன். அவர்கள் பரம ஏழைகளையும் மனிதனாக மதித்தார்கள். காரணம் அவனும் சில்லறைக் காசு வைத்திருக்க வாய்ப்புண்டே. சேட்டு முயன்றால் அந்தப் பணம் அவரது முந்திக்கு வரக்கூடியதுதானே? நடுத்தெருவில் கண்டஸா காரை நிறுத்தி வைத்து கதவை பாதித் திறந்து தையல் இலையில் பானிபூரி பேல்பூரி சாப்பிடும் சேட்டு குதப்பும் பலூன் வாயில் சிறிய சிவந்த உதடுகளுடன்  சொந்தமாக அதட்டி மேற்கொண்டு சட்டினி வாங்கிப் போட்டுக் கொள்வார். சாப்பிடுவதற்கென்றே ஆண்டவன் படைத்த உயிரினமான சேடாணி கொடுத்த காசுக்கு கடைசித்துளி வரை சட்டினி வாங்குவதற்காக கணவனுக்கு ஊக்கம் அளிப்பாள்.”

“ஒரு மாதிரி நியாயத்துக்குக் கட்டுபட்ட ஊர். அநியாயத்த பத்தி நினைக்கணுமானா ஞாயித்துக்கிழமை நினைச்சாத்தான் உண்டு. அண்ணைக்கு தோத்தி குர்தா நனைச்சுக் காயப் போடணும். கடைக்கண்ணிக்கு போகணும். மாசந்தோறும் அளவு மாறுத பொண்டாட்டிக்கு ஜாக்கெட் தைக்க குடுக்கணும்…. எல்லா கஷ்டத்திலும் ஒரு நட்பும் உறவும் இருந்தது அங்க ஜெயமோகன். எனக்கு பம்பாயை பிடிச்சிருக்கான்னு கேட்டா பிடிச்சிருக்குண்ணு தான் சொல்லணும். ஆனா எப்பமும் அங்கேருந்து தப்பி வாறதைப்பத்தியே தான் நினைச்சிட்டிருந்தேன்.”

நேர் எதிராக அவரது ‘வீரின’மங்கலம் பாசத்தைச் சொல்லலாம். அதை அவருக்குப் பிடித்திருந்ததா என்று கேட்டால் பிடிக்கவில்லை. அங்குள்ள ‘குடிக்கிற தண்ணியிலே குஞ்சாமணியை விட்டு ஆழம் பார்க்கிற’ வெள்ளாளார்கள் , உளுந்தங்களியும் முந்திரிக்கொத்துமாக நகரப்பேருந்துக்கு நிற்கும் போது சர்வதேச உளவு நிறுவனங்களுக்கு உரிய கண்களுடன் ஆட்களை நோட்டம் போடும் வெள்ளாட்டிகள், வெற்றிலைப்பாக்குக் கடைகளில் தினத்தந்தியில் ‘நடிகை அசின் தொழிலதிபராமே?’ ‘ஆமாம். தொழில் விரிவாக நடப்பதாகக் கேள்வி’ போன்று குருவியார் அளிக்கும் ஞானப்பிசிறுகளை அள்ளி விழுங்கும் பிளஸ் டூ படிப்பாளிகள். பஸ்ஸை விட்டு ‘வீரின’மங்கலத்தில் இறங்கினாலே நாஞ்சில் நாடனுக்கு கசப்பும் கரிப்பும் வந்துகொண்டே இருக்கும்.

ஆனால் வாழ்நாள் முழுக்க அவர் வந்துகொண்டே இருக்க விரும்பும் ஊர் இது. அங்கே இன்னும் ஆறு ஓடத்தான் செய்கிறது. சட்டையைக் கழற்றிவைத்துவிட்டு முட்டளவு நீரில் திருப்பதியில் கொடிமரத்தடியில் சாமிகும்பிடுதல்போல விழுந்து குளித்து துவட்டிப் போகலாம். .ஆற்றங்கரை முழுக்க  சடை விரித்த ஆலமரங்கள். கல்யாணத்துக்கு பந்தல்கால் நாட்டும்போது ஆற்றங்கரையில் ஒரு ஆலமரக்கிளை நடும் வழக்கம் அவர் ஊரில் உண்டு. பல மரங்கள் இப்போது படர்ந்து பந்தலித்துவிட்டன. “பிது எங்க சித்தப்பா சித்திய கட்டுறப்ப நட்டமரம்…” கல்யாணம் ஆனவர்கள் பேரன் பேத்தி எடுத்து கனிந்து தளர்ந்துவிட்டார்கள். விழுதோடிப்பரவும் மரத்துக்கு முறித்த கிளைகளின் வடுவல்லாமல் ஒன்றும் பங்கம் இல்லை.

நாஞ்சில் நாடன் அவர் படித்த பள்ளியில் ஒரு இலஞ்சிமரம் நட்டார். “நான் நட்ட மரம் பாத்துக்கிடுங்க. இந்தா தண்டி இருக்கு. நாம போனாலும் அது அங்க நிக்குமில்லா?”என்று சொன்னபோது பெரிய கண்ணாடிச்சில்லுகளில் மரக்கிளைநிழல்கள் ஓடும் கார் வேகத்தில் பின்னகர்ந்தன. உணர்ச்சியை அவதானிக்க முடியவில்லை. “செகண்ட் ஷோ சினிமா விட்டால் அம்பது பைசா பொரிகடலையை தின்னுட்டு திருப்பதிசாரம் வழியாட்டு நடந்தே வந்திருவோம். இப்ப நெனைச்சா முகுது வலிக்குது”

அந்தக் காலத்தில் நாஞ்சில் நாடன் சரியான தீனா மூனா கானா. திமுக பதவிக்கு வந்த முதல்தேர்தலில் அம்பாசிடர் காரில் மைக் கட்டி தொண்டை உடையும்வரை செந்தமிழில் சொல்லடுக்கிப் பிரசாரம் செய்தவர். அண்ணாத்துரை இறந்தபோது மொட்டைபோட சென்னைபோகவேண்டுமென காசுக்குப் பரிதவித்து சித்தப்பாவிடம் அடிவாங்கி அமைந்தவர். இப்போது என்ன சொல்கிறார்? “அப்ப காமராஜ் சொன்னார் தமிழ்நாட்டில் விஷ விருட்சம் உள்ளே நுழைஞ்சிட்டுதுன்னு…  அது சரியான பேச்சு…இனிமே லேசிலே வெட்ட முடியாது.” பின்னர் அவரது மனம் திராவிட இயக்கத்தின் தமிழ்க் கூச்சலை ஒரு கசப்பான சிரிப்புடனல்லாது எண்ணிக் கொண்டதில்லை.

வேலை மாறி நாஞ்சில் நாடன் கோயம்புத்தூருக்குத்தான் வந்தார். அது ஒரு தமிழக பம்பாய்தான் அவருக்கு. இருபது வருடங்களாக அங்கே வாழ்ந்தும் அவர் அந்நிலத்தவராக ஆகவில்லை. முள் ஆடி ஆடி வீரநாராயண மங்கலத்திலேயே வந்து நிற்கும். ஆனால் அவருக்கு கொங்கு கவுண்டர்கள் மேல் உள்ள மோகம் அபாரமானது. “அருமையான ஆட்கள்… அன்பா நடந்துகிடுயது எப்டீண்ணு அவங்க கிட்ட கேட்டு தெரிஞ்சுகிடணும்…” அவருக்கு அவரது பயணங்களில் பல சிற்றூர்களில் மனமுவந்து உபசரித்து அன்னமிட்ட கவுண்டச்சிகளின் நெஞ்சை நிறையவைக்கும் நினைவுகள் உண்டு. பல உறவுகள் மிக ஆழமானவை. இப்போதும் தொடர்பவை. “மண்ணில பாடுபடுத ஜனம். அவங்களுக்கு அதுக்குண்டான ஒரு பண்பாடு இருக்கு. அது மத்தவங்களுக்கு வராது” என்பார் நாஞ்சில் நாடன்

சமீபத்தில் ஓய்வுபெற்றபின் ஊருக்கே வந்துவிடுவார் என்று வேதசகாய குமார் சொன்னார். வரமாட்டார் என்றேன். அவருக்கு சற்று தூரத்தில் நின்று வீரநாராயண மங்கலத்தைப் பார்த்தால்தான் அதை சகித்துக் கொள்ள முடியும். கோயம்புத்தூர் சிங்காநல்லூர் வீட்டில் இருந்துகொண்டு ‘நல்ல காலம் பொறந்து’ வீரநாராயண மங்கலம் ஏகும் பொன்னாளைக் கனவு கண்டுகொண்டிருப்பார் என்றேன். அவரால் கொங்குமண்ணை விட்டு வரவே முடியாது. அதுதான் நடந்தது.

நாஞ்சில் நாடன் அரைநாள் விடுப்பில் வீர நாராயண மங்கலம் வந்தால்கூட கிட்டத்தட்ட பத்து சொந்தக்காரர் வீட்டுக்கு போய் வருவார். தம்பி தங்கைகள், சித்தி பிள்ளைகள், மச்சினிகள். மருமக்கள், கொழுந்தியாள்கள். போகிற வழியில் நல்லதாக ஒரு கட்டு முருங்கைக்காய் வாங்கிக் கொள்வார். மலிவாகக் கிடைத்தால் பூமுள் கொண்ட வெண்டைக்காய் நாலு கிலோ. அல்லது ஊதாப் பளபளப்புடன் கத்திரிக்காய். சாளைமீன்கூட வாங்கிக் கொண்டுபோனதாக வேதசகாயகுமார் சொன்னார். மதினிகளைப் பொருத்தவரை அவர்கள் ஆத்மாவுக்குள் நுழையும் சாவிக்கொத்துடன் தேவதூதனே வந்ததுபோலத்தான். நாஞ்சில் நாடனுக்குச் சமைக்கும்போதுதான் ஒரு பெண்ணின் உச்சகட்ட திறமை வெளிப்படுமென நினைக்கிறேன்.

திரும்பி கோவை போவதும் இதே சீரில்தான். குட்டிச்சாக்கில் நாலுகிலோ பொடியரிசி. [மச்சினிச்சி குடுத்தா. கொஞ்சம் பயறு உடைச்சுபோட்டு கஞ்சிவச்சு துள்ளி நெய்யும் விட்டு பப்படமும் ஊறுகாயும் என்னமாம் ஒரு துவரனும் வச்சு குடிச்சா மனசு நெறைஞ்சிரும்] மனதை வாய் வழியாக நிரப்ப முடியும் என நான் இதுவரை உணர்ந்ததில்லை. பெரிய மதினி கொடுத்த தேங்காய்; தம்பி கொடுத்த கருப்பட்டி; அம்மா கொடுத்த ஊறுகாய்; [இதை ஒரு முறை எனக்கும் கொடுத்தார்கள். அந்த அம்மா ஒரு ஊறுகாய் மேதை] அதன் பின் நாஞ்சில் நாடனே வடசேரி சந்தைக்கு முன்னால் போய் அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராய்ந்து வாங்கும் முரல் கருவாடு [கருவாடுன்னா அதுக்கு ராஜா முரல்தான். வாளைய வேணுமானா அமைச்சராட்டு வலப்பக்கம் இருத்தலாம்] தவறவே விடாத முந்திரிக்கொத்து, வாழைக்காய் சிப்ஸ், காராச்சேவு ஆகியவற்றை கோட்டாறு ஆஸ்பத்திரி முக்கில் நின்று வாங்கினால் பயணம் தொடங்கியாகிவிட்டது. கிட்டத்தட்ட நிலவுக்குப் போகும் ஆம்ஸ்ஸ்டிராங் போல. சமீப காலம் வரை நானும் வேதசகாய குமாரும் பஸ் வரை போய் நின்று பேசி பிரியாவிடை கொடுப்போம்..

அடுத்த நாளுக்கு அடுத்த நாளே நாஞ்சில் நாடன் மீண்டும் சுடச்சுட நாகர்கோயிலில் தென்படுவார். “கொழுந்தியா மக சடங்காயிட்டா… நாளைக்கு தண்ணி ஊத்து..” என்பார்.

“இப்பதானே வந்திட்டு போனீங்க?”

“அதுக்கென்ன செய்யியது? அவ சும்மால்ல வட்டாடிட்டு இருந்தா ஒரு க்ளூ கூட குடுக்கல்லியே”.

அதன் பின் வரிசையாக வளைக்காப்பு, பிரசவம், இருபத்தெட்டு கெட்டு, பிள்ளைகளுக்கு அவ்வையாரமன் சன்னிதியிலே காதுகுத்து, மொட்டை போடுதல்… இருக்கவே இருக்கிறது சிவலோகப் பதவியை அடைந்த மூத்தபிள்ளைவாள்களின் துட்டி விசாரணை, காடேத்து, பதினாறு அடியந்திரம். இன்னபிற. நாஞ்சிநாடன் வராமல் சொந்தத்தில் சடங்கு சம்பிரதாயம் இல்லை. “அவாள் இருக்கபப்ட்டது ஒருமாதிரி ஐஸரியம் பாத்தேளா?” என்று ஒருவர் ஒரு சடங்குவீட்டில் என்னிடம் சொன்னார்.

கல்யாணம் என்றால் அது ஒரு பலநாள் திருவிழா. பெண்பார்க்க வருவதில் தொடக்கம். பின்னர் நிச்சய தாம்பூலம், தாலிக்குப் பொன்னுருக்கு, பந்தல்கால் நாட்டல், தாலிகெட்டு, மறுவீடு, அடுக்களை பார்த்தல் எல்லாம் கழிந்து சகல கறிகளும் சென்றுசேரும் பரம்பொருளான  பழங்கறியில் ஆல்கஹால் அதிகரித்த பிறகே விடைபெற்றுச் செல்வார். நாஞ்சில் நாடன் உறவு வட்டாரங்களில் கல்யாணச் சமையலுக்கு குறிப்படி எழுதும் கௌரவம் முற்றிலும் அவருக்கே. வேறு ஆள் போட்டால் சரியாக வராது. இத்தனை கோட்டை அரிசிக்கு எத்தனை பனம்பாய், எத்தனை அகப்பை தேவை என்பதை யூக்ளிட் போல கணித்துச் சொல்லிவிடுவார் என்பார்கள். [நாஞ்சில் நாடன் கணிதம் முதுகலை] அவர் பட்டியல் போட்டார் என்றால் வழக்கமாக மண்ணாந்தைகள் தவிர்த்துவிடும் விஷயங்களை முதலிலேயே போட்டுவிடுவார்.

அவரது கல்யாணவருகைகளில் எல்லாம் எனக்கும் வேதசகாய குமாருக்கும் அழைப்பிதழ் உண்டு. நாங்கள் முந்தினநாளே ‘கறிக்கு வெட்டுக்கு’ போய் சேர்ந்துவிடுவோம். நாஞ்சில் நாடன் சட்டையைக் கழற்றி துவர்த்தை தலையில் கட்டி தகரநாற்காலியில் சப்பணமிட்டு அமர்ந்தால் மொத்தக் காய்கறியையும் அவர்தான் வெட்டப்போகிறார் என்று தோன்றும். ஆனால் ஒரு ஏழுமணி அளவில் பையை திறந்து உள்ளிருந்து போளி, மைசூர் பாகு வகையறாக்களை எடுப்பார். சர்க்கரை வியாதிக்காரரான வேத சகாய குமார் தவிர்த்துவிடுவார். அதைவிட சர்க்கரை அளவு அதிகமானவரான நாஞ்சில் நாடன் “ஒருநாளைக்கு சாப்பிடலாம்… சும்மாவா வெள்ளக்காரன் மாத்திரயக் கண்டுபிடிச்சிருக்கான்?” என்பார்.

இலக்கியச் சர்ச்சைகள்; வேடிக்கைகள்; சிரிப்பு;. சுடச்சுட கட்டன் சாயா; அதன் பின் முதலில் பொரித்த வாழைக்காய் சர்க்கரை உப்பேரி; பின்னர் சூடாகக் கொட்டாங்கச்சியில் புளிசேரி வகையறாக்கள்; பிரம்ம முகூர்த்ததில்  வெல்லக்குமிழி வெடிக்க பிரதமன்;. அதன்பின் காலைச் சிற்றுண்டிக்கு ரசவடையாக ஊறவேண்டிய பருப்புவடையும் மீண்டும் கட்டன் சாயாவும். “இப்டி ராத்திரி பூரா இருந்து இலக்கியம் பேசினா நல்லாத்தான் இருக்கு இல்ல?” காலையில் நான் அரைப்போதை நிலையில் வீட்டுக்குப் போய் கட்டிலில் குப்புறப் படுப்பேன். நாஞ்சில் நாடனுக்கு மறுநாள்தான் வேலையே. பந்தியில் சாப்பிடவேண்டும். பந்தி விசாரிக்க வேண்டும். ஒரு முந்நூறு நாநூறு புன்னகைகள், முகமன்கள். ஐம்பது அறுபது விபூதிப் பூசல்கள். சாயங்காலம் கூப்பிட்டால் “ஜெயமோகன், மிஞ்சின அடைப்பிரதமனை சூடு பண்ணி குடிக்கேன். நல்லா கெட்டியாட்டு ஆகியிருக்கு. தேங்காப்பால் போட்டு சூடு பண்ணி எளக்கினது… நல்லாருக்கு”

தன் பெரிய குடும்பத்தை கடுமையான வறுமையிலிருந்து மீட்டு கரைசேர்த்த முன்னோடி நாஞ்சில் நாடன். ஒருகட்டம் வரை அவரது உழைப்பும் தியாகமும்தான் அவர் குடும்பத்துக்கு உணவாகியிருக்கிறது. இன்று அவரது குடும்பம் மேல்நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்ததாக உள்ளது. எல்லா தம்பிகளும் நல்ல நிலையில் இருக்கிறார்கள். பொதுவாக இம்மாதிரி தியாகிகளை முற்றிலும் உதாசீனம் செய்யும் தம்பிதங்கைகளைப் பற்றித்தான் நாம் அறிந்திருக்கிறோம். நேர் மாறாக நாஞ்சில் நாடன் அவரது குடும்பத்துக்கு மதிப்பு மிக்க அரிய வரம் போல. அவரது தம்பிகளுக்கு மட்டுமல்ல, கொழுந்திகளுக்கும் கூட.

குற்றாலத்தில் பழைய குற்றாலம் செல்லும் பாதையில் டி.கெ.சிதம்பரநாத முதலியாரின் சமாதியிடத்தில் ஆழமான அமைதியில் பசுக்களின் கழுத்துமணி ஒலிக்கும் சூழலில் நினைவு விழா. அஞ்சலி நடந்துகொண்டிருக்கும்போது ஒரு ஃபோன் வந்தது நாஞ்சில் நாடனுக்கு. அவர் அனைத்தையும் மறந்து உரையாட ஆரம்பித்துவிட்டார். மறுமுனையில் அவரது தம்பியின் சிறு மகன். கொஞ்சல்கள், குலாவல்கள், வாக்குறுதிகள், நலம் விசாரிப்புகள். அந்தச் சூழலில் இருந்த அமைதியில் அவரது குரல் உரக்க ஒலிக்க நான் தர்மசங்கடமாக உணர்ந்தேன். இங்கிதத்தின் உச்சி என நான் நினைக்கும் நாஞ்சில் நாடன் அல்ல அது. சங்கடமாக இருந்தது. நாஞ்சில் உருகி வழிந்துகொண்டே இருந்தார்.

திரும்பி வரும்போது அருகே வந்த ஒரு முதியவர் சொன்னார். “கரெக்டா அவாள் அஞ்சலி நடக்கிறப்ப பிள்ளைச்சத்தம் கேட்டுது பாத்தேளா? இவரு கொஞ்சிப்பேசினது ரொம்ப நல்லா இருந்தது. அவாள் அப்டித்தான். பிள்ளைகள்னாக்க உசிரு. மீசையும் கண்ணுமா பிள்ளையளைப்பாத்து சிரிக்கிறப்ப அப்டியே சாமி மேலேருந்து வந்தது மாதிரி இருக்கும்…”என்றார்.

“நீங்க பாத்திருக்கிகளா?” என்றேன்.

“சின்னவயசுல பல தடவ திருநெல்வேலியிலே அவாள் வீட்டுக்குப்போய் பாத்திருக்கேன். பிள்ளையளைப்பாத்தா அவாளும் ஒரு பிள்ளைதான். எல்லாத்தையும் மறந்திருவார்…”

‘எல்லாவற்றையும்’ மறக்க வைக்கும்படி குழந்தைக்குரலால் ஈர்க்கபப்டுவது அனைவருக்கும் சாத்தியமல்ல. “பிள்ள வச்சிரு.. பெரியப்பா அப்றமா பேசுகேன்” என்று சொன்னால் அது நாஞ்சில் நாடனே அல்ல. சொந்தம் பந்தங்களில் நண்பர்கள் வீடுகளில் உள்ள அத்தனை குழந்தைகளுக்கும் என்றும் பிரியவரான சுப்பிரமணியம் தாத்தா அவரது ஆகிருதிக்கு முழுக்கச்செல்வதே குழந்தைகளுடன் விளையாட, தவழ ஆரம்பிக்கும்போதுதான்.

வேலையும் மனைவியும் அமைந்தவன் பாக்கியசாலி என்பார்கள். நாஞ்சில் நாடனுக்கு ஆச்சி அமைந்தது நல்லூழ் – இரண்டுபக்கமும்தான். ஆனால் அவருக்கு வேலை அமையவில்லை. ரசனையும் நகைச்சுவையும் உடையவரான நாஞ்சில் நாடன் உள்ளே செலுத்தப்பட்ட சட்டையும் பாண்ட்டும் பூட்சும் ப்ரீ·ப்கேஸ¤மாக ஊர் ஊராக அலைந்து, மில் கம்பெனிக்காரர்களைச் சந்தித்து, பச்சைப்புன்னகை பெய்து, ரெடிமேட் ஆங்கிலத்தில் பேசி ,அவர்களுடைய கடுமையான முகங்களில் மெல்லமெல்ல புன்னகையைத் தருவித்து, சரக்குக்கு ஆர்டர் எடுத்து வந்து, மேலும் எடுத்திருக்கலாமே என்று மேலதிகாரியின் ராஜதந்திரப் புன்னகை தவழும் வசைக்கு ஆளாகி, ‘தாயோளி’ என்று இனிய புன்னகைக்குள் நினைத்தபடி வீடுதிரும்பும் வாழ்க்கை கொண்டிருந்தார்.

1994 ல் மில் எந்திரங்களுக்கான உதிரி பாகங்கள் தயாரிக்கும் ‘பிராடி அன் கோ’வின் கோவை விற்பனை அலுவலகத்தில்  நான் அவரைப்பார்க்க முதல்முறையாகப் போயிருந்தபோது குளிர்வசதி செய்யபப்ட்ட சிறிய அறைக்குள் யாரிடமோ “நீங்க செருப்பால அடிக்கது என் பாக்கியமுல்லா? சரி சரி… வாறேன் நேரில வந்து உங்க கால நக்குதேன்… ஓக்கே” என்று ஆங்கில மொழியில் வேறு சொற்களில் நயமாகச் சொல்லி என்னைப் பார்த்து “நாறத்தேவ்டியாப்பொழைப்பு ஜெயமோகன். நான் முடிவு எடுத்தாச்சு…” என்றார்

நான் பீதியுடன், “என்ன?” என்றேன்.

“ரிசைன் பண்ணப்போறேன். பாத்தேளா?” என்றார்.

சீராக டைப் அடிக்கப்பட்ட ராஜினாமா கடிதம். “சர் ஐ ஹியர் பை இன்கிளைண்ட் டு சே த ·பாலோயிங் ·பாக்ட்ஸ்..” என்று ஒரு கண்ணீர்க் காவியம்.

“நல்லா நாலுபக்கமும் யோசிச்சுப் பாத்தாச்சு. மனுஷனுக்கு வாயும் வயிறும் மட்டுமில்ல மானமும் ஈனமும் இருக்கில்லா? சும்மா… எல்லாத்துக்கும் ஒரு லிமிட் உண்டு ஜெயமோகன். புழுவானாலும் போட்டு சமுட்டினாக்க எதுத்து கடிக்கும் பாத்துக்கிடுங்க… என்னான்னு நெனைக்கானுகோ?”

“அதுசரி… ஆனா இப்ப ராஜினாமா செய்யுகதுண்ணா பல பிரச்சினை இருக்கே?”

“இருக்கு. ஆனா நான் எல்லாத்தையும் தீர விசாரிச்சாச்சு…” நாஞ்சில் நாடன் ஒருசில காகிதங்களைப் பரப்பினார். அதில் விரிவான கணக்குகள். “பாத்தேளா ஷேரிலே இவ்ளவு இருக்கு. கொஞ்சம் பிஎ·ப் கிராஜூடி தருவான். மிச்சம் அங்கிண இங்கிண சேவிங்ஸ் கொஞ்சம் இருக்கு… சங்கீதா படிப்ப முடிக்குதவரைக்கும் ஓட்டிக்கிடலாம். பின்ன அவ என்னமாம் சம்பாதிப்பாள்ல? பின்ன என்ன ஜெயமோகன், மனுஷனானா மனுஷன மாதிரி வாழணும். இது என்ன பொழைப்பு?”

“சரி.ஆனாலும்…”

‘ஒரு ஆனாலும் இல்ல.. ஊருக்குப்போயி நாலு காய்ச்சில் சேம்பு சேனைண்ணு நட்டாலும் ஒருத்தனுக்கும் தலைய குனிக்காம மனுஷனா வாழலாம்… நான் முடிவுசெய்தாச்சு…”

“யோசிக்கணும்..”

“என்னத்த யோசிக்கிறது? பாருங்க உக்காந்து நிம்மதியா ஒரு கதை எழுத முடியல்ல. ஒரு புஸ்தகத்த ஒழுங்கா வாசிச்சு முடிக்க முடியல்ல… உங்க கிட்ட சொல்றதுக்கு என்ன ஜெயமோகன், பாதிக்கதைகளை சும்மா பணம் குடுக்கனேன்னு அவசர அவசரமாட்டு எழுதிக்குடுக்கேன்… இனி அதெல்லாம் முடியாது. அவ்ளவுதான். எழுதியாச்சு. உள்ளதச் சொல்லப்போனா இத எழுதினம்பிறவுதான் ஒரு நிம்மதி மனசுக்கு…”

நான் அதே உச்சகட்ட அச்சத்துடன் சுந்தர ராமசாமிக்கு ·போன்செய்தேன். “சார் நீங்க நாஞ்சில் நாடன்கிட்ட பேசுங்க. ரிசைன் செய்யப்போறார்னு சொல்றார்”

“சொல்லிட்டாரா? சரிதான்”

“இல்ல சார்…”

“ஜெயமோகன், அவரு அந்த லெட்டரை எழுதி பதினஞ்சு வருஷத்துக்கு மேலே ஆகும்னு நினைக்கிறேன். அதெல்லாம் அப்டி குடுத்திர மாட்டார்… பேசாம வாங்கோ… அதிலே புதிசா ஏதாவது நல்ல ஸென்டன்ஸ் இருந்தா அப்றமா சொல்லுங்கோ”

மறுநாள் நான் பிராடிக்குப் போனேன். நாஞ்சில் நாடனின் அறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது ஒரு கரிய மலையாளி தாண்டிச்சென்றார்.

“ஜெயமோகன் இந்த ஆளை நல்லா பாத்துக்கிடுங்க… என்னைக்குன்னாலும் இவன் உசிரு என் கையாலதான்… நான் செயிலுக்கு போகணும்ணு ஜாதக விதி இருக்கு பாத்துக்கிடுங்க…”

எதிர்காலத்தில் கொலையாகப்போகும் சிரியன் கிறிஸ்தவர் உள்ளே ·போனில் தன் விதியைப்பற்றி அறியாமல் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்.

“யாரு இவரு?”

“எங்க மேனேஜர்…” நாஞ்சில் நாடன் அப்போது துணை விற்பனை மேலாளர். “என்ன அழும்பு பண்ணுகான் தெரியுமா? அயோக்கியபப்ய. ஒரு வேலையும் செய்யுகதில்ல. மில் ஓனர்மாரிட்ட ஐஸா கொழைஞ்சு பேசுவான்… மத்தவனுக அவனுக்கு மயித்துக்குச் சமானம்…. நான் என்ன சொல்லுகேண்ணா இந்த மலையாளிகளையே சேத்துவச்சுக் கொல்லணும்… என்ன நெனைக்கிறீய?”

“செய்யவேண்டியதுதான்” என்றேன்

“ஸ¤ப்ரமண்யம்!” என்று பக்கத்து கேபினில் மலையாள அழைப்பு. “சார்!” என நாஞ்சில் நாடன் பாய்ந்தோடினார்.

நான் இங்கிருந்து பார்க்கையில் அது ஒரு அலுவலக உரையாடல் போலவே தெரியவில்லை. காதல்கொண்ட இருவர் மத்தியில்தான் அப்படி ஒரு பூரிப்பும் முகமலர்ச்சியும் வெளிப்பட முடியும். சிரிப்பு முகமன் கொஞ்சல் குலாவல். நாணமும் உண்டு.

கதவைச் சாத்திக் கொண்டு வந்து ·பைலை மேஜைமேல் போட்ட நாடன் “…நிக்க வச்சு கொளுத்தணும்…” என்றார்.

கோவை ராம்நகரிலேயே அலுவலகம் இருந்ததனாலும் நாஞ்சில் நாடன் எந்த இலக்கிய நாடோடிக்கும் சாப்பாடும் வழிச்செலவும் முடிந்தால் திரவச்செலவும் அளிப்பவர் என்பதனாலும் பொதுவாக அவ்வலுவலகத்தில் இலக்கிய நடமாட்டம் அதிகம்.

நாஞ்சில் நாடனின் குணத்தில் முக்கிய அம்சம் அவரால் எவருக்கும் எதற்கும் ‘முடியாது’, ‘இல்லை’ என்று சொல்ல முடியாது என்பதே. “என்ன சொல்லுகேண்ணா…”, “அதாவது இப்ப இருக்கிற நிலைமையிலே”, ” உள்ளதச் சொல்லப்போனா…”, என்றெல்லாம் தான் ஆரம்பிக்க முடியும். கொஞ்சம் கட்டாயபப்டுத்தி அவருக்கு கால் லிட்டர் விளக்கெண்ணையைப் புகட்டிவிடமுடியும். சிந்தி எருமை மேலேயே கடித்து உறிஞ்சும் இலக்கிய ஒட்டுண்ணிகளுக்கு இது நல்ல மென்மையான சருமம்.

புகழ்பெற்ற கவிஞர் அடிக்கடி வருவார். அவரது வருகை கல் நெஞ்சையும் கரைக்கக் கூடியது. பரட்டைத்தலை. பரிதாபகரமான தாடி. பவ்யத்தின் பவ்யமான தோற்றம். “சுப்ரமணியம் சார்வாள் இருக்காரா?” நாஞ்சில் நாடன் மனமுருகி சாப்பாடு போட்டு செலவுக்காசும் கொடுத்து அனுப்புவார். போனவேகத்திலேயே பந்து திரும்பிவரும். இம்முறை அம்பிக்குள் இருந்து அன்னியன் வெளியே வந்திருக்கும். “டேய் நாஞ்சில் நாடா, வெளியே வாடா.. டேய் உனக்கு கவிதை பத்தித் தெரியுமாடா? டேய் விடிய விடியப் பேசுவோம்டா… பேசுவோமா? டேய், புதுமைப்பித்தன் போனான் நான் வந்து நிக்கிறேண்டா…டேய்…”

நாஞ்சில் நாடன் லாட்ஜில் அறைபோட்டுக் கொடுத்த கவிஞர்கள் அங்கிருந்து பெட்ஷீட் போர்வைகளை மடித்து எடுத்துக் கொண்டு சென்றிருக்கிறார்கள். நாஞ்சில் நாடன் சொன்னார் என நாலாபக்கமும் கடன் வாங்கிவிட்டு ஊருக்குக் கிளம்பியிருக்கிறார்கள். பத்துவருஷம் முன்னால் வந்து நின்றுபோன சிறுபத்திரிகைக்கும் வரவே வராத சிறுபத்திரிகைக்கும் அவரிடம் ஆயுள் சந்தாவை கட்டாயபடுத்தி கண்ணீர் மல்கவைத்து வாங்கியிருக்கிறார்கள்.

சிற்றிதழ் சார்ந்த ‘ஒட்டுண்ணித் தொந்தரவு’ எல்லாருக்கும் உள்ளதுதான் என்றாலும் நாஞ்சில் நாடன் அளவுக்கு அதனால் துன்பமடைந்தவர்கள் குறைவு. நாஞ்சில் நாடன் மூக்குக் கண்ணாடியை ஏற்றிப்போட்டபடி “…குறிவச்சு நம்மளைத்தேடி வராங்க ஜெயமோகன்… பயம்மா இருக்கு” என்றார்.

“ஒண்ணுரெண்டு வாட்டி குடுக்கப்பிடாது, நாஞ்சில். முரட்டுத்தனமா துரத்தி விட்டிரணும்” என்றார் [தமிழினி] வசந்தகுமார், “நம்மகிட்ட எவனுமே வரதில்லியே”

“அப்டி பாக்க முடியுமா? அவனும் நம்பியில்லா வாரான்?” நாஞ்சில் நாடன் சொன்னார் “வந்து எறங்கியிருதான். கையிலே அஞ்சு பைசா இல்லாம… என்ன செய்றது? அவன் ஊரவிட்டு போனாத்தானே நமக்கு நிம்மதி…”

“இதெல்லாம் கோழைத்தனம்” வசந்தகுமார் சொன்னார். “இந்த ஒட்டுண்ணிகள் என்ன எழுதியிருக்காங்க? ஒண்ணுமே இல்ல. சரி எழுதவேண்டாம், படிப்பாங்களான்னு கேட்டா அதுவுமில்ல. அப்ப அவனுக்கும் இலக்கியத்துக்கும் என்ன சம்பந்தம்? நாலு எழுத்தாளர்கள் அட்ரஸ் கையிலே இருந்தா இலக்கியவாதி ஆயிடலாமா? தமிழிலே நல்லா எழுதக்கூடிய பல இளைஞர்கள் கடுமையா வேலைசெய்து குடும்பத்த காப்பாத்திட்டு ஓய்வு நேரத்த சேமிச்சு எழுதிட்டிருக்காங்க. அவங்களுக்கு யாரும் ஒண்ணும் பண்றதில்ல…”

“அதுவும் சரிதான்…”, நாஞ்சில் நாடன் பெருமூச்சுவிட்டு, “அண்ணைக்கு பாருங்க ஆடிட்டிங். மேலேருந்து ஏகப்பட்டபேரு வந்திருக்காங்க. நான் மேனேஜர் ரூமிலேருந்து வந்து பாத்தா என் ரூமிலே இவரு உக்காந்திருக்கார். எனக்கு திக்குன்னு ஆகிப்போச்சு. ராத்திரி கரெண்டு போய் சிடி உள்ள சிக்கிகிட்டா ஒரு வெப்ராளம் வரும் பாருங்க… அதுமாதிரி.. நெலை கொள்ளல்ல… பாத்தேன் ஒரு முந்நூறு ரூபாய எடுத்துக் குடுத்தேன். என்னமோ சாமிப்பிரசாதத்த வாங்கிகிடுகது மாதிரி பொத்திக் கும்பிட்டு வாங்கிட்டு போறார்…”

“என்ன சிடி?” என்றேன்

“அப்றமா வந்தாரா?” என்றார் வசந்த குமார்

“அதானே நேக்கு. முந்நூறு ரூபாய்க்கு சரக்கு ஏத்திட்டாருண்ணாக்க அவரால கடைவாசலை தாண்டமுடியாது. மறுநாள் காலம்பறதான் எந்திரிப்பார்..”

“என்ன சிடி அது நாஞ்சில்?”

“இப்டி குடுத்தே ஒரு தலைமொறைய உருவாக்கிட்டீங்க நாஞ்சில். இப்ப பாருங்க அதேமாதிரி அடுத்த வரிசை ஆளுங்க உருவாகியாச்சு…. நீங்கதான் ஆபீசராச்சே. பியூன் கிட்டே சொல்லி இனிமே உள்ளவிடாதீங்கன்னு சொன்னா என்ன?”

“அதெப்டி? பிரம்மஹத்தி வாசலிலே உக்காந்திரும்ணுல்லா சாஸ்திரம்?”

“என்ன சிடி அது?”

“சும்மா இருங்க ஜெயன்… நடுவிலே பூந்துட்டு…” வசந்தகுமார் சொன்னர் “…இதெல்லாம் அனாவசியம். எந்தத் தொழிலுக்கும் அதுக்குண்டான ஒரு தர்மம் உண்டு. திருடன்கூட ஒரே வீட்டில நாலுவாட்டி நுழைய மாட்டான்”

ஒருவழியாக நாஞ்சில் நாடன் ஓய்வு பெறும் நாளை நெருங்கினார். அவரது கணிதத் திறமை உச்சத்தில் வெளிப்பட்ட நாள்கள். “எக்ஸ்டென்ஷனுக்கு வாய்ப்பிருக்காண்ணு தெரியல்ல… கம்பெனிக்கு நம்மளை தேவை இருக்கு… நைஸா பேசிப் பாப்போம்” ஒன்றும் நடக்கவில்லை. கருணைமனுவும் நிராகரிக்கப்பட்டுவிட்டது. இன்னும் ஒருவருடம் ஒன்பதுமாதம் ஆறுமாதம்.. நூற்றி ஐம்பத்தி மூன்று நாட்கள்… இரண்டாயிரத்தி நாநூறு மணி நேரம்..

ஒரு தாளில் நிமிடக் கணக்கில் அதைப்போட்டு வைத்திருந்தார். “சார் இது ஒரு நல்ல கதையா இருக்கும் போலிருக்கே” அக்கதை ஓம் சக்தியில் வெளியாகியது. ஓய்வு பெறும்போதுள்ள செலவுகள் முதலீடுகள் வட்டிகள் வரவுக் கணக்குகள். ·போன் செய்தாலே பிலாக்காணம்தான். ‘…ஒண்ணும்புரியல்ல ஜெயமோகன். சங்கீதாவுக்கு படிப்பு முடியதுக்கு இன்னும் நாள் இருக்கு. பையன் வேற எஞ்சீனியரிங் போறான்… என்ன செய்யதுண்ணு தெரியல்ல.. தம்பிக இருக்கானுக. ஒண்ணும் பயப்படாதேண்ணு அவனுக ஆயிரம் மட்டம் சொல்லியாச்சு. இருந்தாலும் நம்ம பிள்ளைகளுக்கு நாம கஷ்டப்பட்டு செய்தாத்தானே ஒரு நெறைவு…”

ஓய்வுநாள். உச்சக்கட்ட ரத்த அழுத்தம் இருந்த நாள்கள். ” ஒருவழியா ஏறக்கட்டியாச்சு… இனி அந்தப் பார எளவ தொடவேண்டாமுல்லா…. இனி ஒரு மனுஷன மாதிரி வாழணும்… நாவல் ஒண்ணு யோசிச்சிருக்கேன். எழுதணும். நம்ம பூர்வீகம் முனிஞ்சிக்கரப்பட்டி மூலக்கரைப்பட்டி. அங்கேருந்து முப்பாட்டன் காலத்திலே வந்து வீரநாராயண மங்கலத்திலே குடியேறியிருக்காங்க. எங்க அம்மைக்கு நெடுமங்காடு. மலையாளமெல்லாம் மறந்துபோச்சுண்ணாலும் மீன் கொழம்பிலே மலையாள வாசனை வீசும்… எல்லாத்தையும் பத்தி ஆற அமர உக்காந்து ஒரு நாவல் எழுதிரணும்… என்னன்னு சொல்றீக? சும்மா இதுவரை பூட்ஸ¤ம் டையும் கட்டிட்டு வாழ்ந்தாச்சு.. நெறைய படிக்கணும். புஸ்தகம் குமிஞ்சு கெடக்கு வீட்டிலே”

ஓய்வு பெற்று ஒரு இரண்டுவாரம் சட்டைபோடாமல் சாயவேட்டியும் ஈரிழைத்துவர்த்துமாக வீட்டில் இருந்தபின் வாழ்க்கையே காலியாகக் கிடந்தது. ஆகவே அதுவரை செய்துவந்த அதே ‘சீண்டிரம் பிடிச்ச’ தொழிலை தனியாகச் செய்வதென ஆரம்பித்தார். நாஞ்சில் ஏஜென்ஸீஸ் தொடக்கம். புரப்ரைட்டர்  ஆச்சிதான். சுப்ரமணியம் பிள்ளை அலுவலக உதவியாளர் கம் டிராவலிங் சேல்ஸ்மேன். கையில் பிரீ·ப் கெஸ¤ம் ஷ¥வுமாக மீண்டும் அதே மில்கள் தோறும் பயணம்.

“சும்ம இருந்தா ஒருமாதிரி வெக்ஸ் ஆயிடுது…. அதாக்கும் கெளம்பியாச்சு…” நாஞ்சில் நாடனுக்கு ஆழமான அதிர்ச்சி காத்திருந்தது. அவர் அலுவலகத்தில் சம்பாதித்த அதே தொகையை, சமயங்களில் அதைவிடவும் அதிகமாகக் கூட, அதேவேலையை தனியாகச் செய்து சம்பாதிக்க முடிந்தது. வாரத்தில் ஒருசில நாள்கள் மட்டுமே வேலை. அவரது ‘கிளையண்டு’களில் பாதிபேருக்கு அவர் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் என்று தெரியும். அவருக்காகத்தான் அவரது நிறுவனத்துக்கு உத்தரவுகள் அளித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

“மோசம் போயிட்டேன் ஜெயமோகன். அப்பவே வெளியே வந்து இதைச் செஞ்சிருந்தா இப்ப காரும் பங்களாவுமா எங்கியோ இருந்திருப்பேன்… இப்ப மில்தொழிலே டவுனாக கெடக்குத காலகட்டம்… இப்பவே நமக்கு இந்த ஆர்டர் வருதுண்ணா.. என்னத்த சொல்ல…”

“சார்… எண்ணையபோட்டு மணலிலே பொரண்டாலும் ஒட்டுற மணல்தானே ஒட்டும்…” நான் மேலும் பழமொழிகளுக்காக மனதுக்குள் துழாவினென். ‘காதறுந்த ஊசியும் வாராது கடைவழில்க்கே’ அது பொருத்தமாக படவில்லை. வேறு? ஒன்றும் தகையவில்லை

நாஞ்சில் நாடன் ஆழமாகப் பெருமூச்செறிந்தார். ஆத்மாவே புகைந்து கருகும் மணத்துடன் வெளியேறுவதுபோல.

“என்னமாம் எழுதினீங்களா சார்?”

“என்னத்த எழுத? நாவல் அங்கிண கெடக்கு. முடிக்கணும். நாலஞ்சு கட்டுரை எழுதினேன். கும்பமுனி சிறுகதை இருக்கு, எழுதணும். நாளைக்கு மதுரைக்குபோய்ட்டு அப்டியே ராஜபாளையம் போய் வந்து மறுநாளே பாலக்காடு போகணும். அடுத்த திங்க்கக்கிழமை நேரம் கெடைக்கும்ணு தோணுது பாப்போம். எல்லாத்துக்கும் ஒரு விதி இருக்குல்லா?”

மகிடபதியை நாஞ்சில் நாடன் வெறுப்பது இயல்பே. அவரை ஒருவகை கோமாளியாகவே அவர் கருதிவந்திருக்கிறார். அவருக்கு எப்படி எங்கே வருவதென ஒரு வரைமுறை கிடையாது. சிவஞான போதமும் கைவல்யநவநீதமும் கற்ற முதுபெரும் சைவர் மனகாவலப்பெருமாள் பிள்ளை விஜிடபிள் பிரியாணியை விழுங்கும்போதுதான் மகிடத்தின் கனத்த குளம்படியோசை கேட்கிறது. என்ன சாஸ்திரம் படித்து என்ன புண்ணியம்? “…இல்லாட்டியும் வயசானா வீடடங்கி கெடக்கணும். கிட்டுதேண்ணுட்டு அள்ளி இப்டியா விழுங்குகது?” என்று இளைய தலைமுறைக்கு ஏகடியப்பொருளாகி புளியமரத்தில் தாழ்ந்த சாதி பேய் வந்து அருகே தொங்க தொங்கும் இழிநிலைக்கு ஆளாகிறது பிள்ளைவாளின் ஜீவாத்மா. [மனகாவலப்பெருமாள் பிள்ளை பேத்தி மறுவீடும் விஜிடபிள் பிரியாணியும்]

நாஞ்சில் நாடனுக்கு இப்போது வீரநாராயண மங்கலத்து ‘வெள்ளாம்புள்ளையோ’ கொள்ளும் நவீனமயமாதலில் ஆதாரமான கோபம் இருக்கிறது. பந்திப்பாயை விரித்து நுனியிலை பரப்பி உப்புதொட்டு கூட்டுகறி வரை விதிப்படி பரிமாறி பருப்பும் நெய்யும் பெய்து ‘மூட நெய்விட்டு மூக்கு வழிவார’ உண்ணும் பண்பாடு அழிகிறது. புதிய பண்பாட்டை நாஞ்சில் நாடனின் படைப்புகளை வைத்து நாம் சுருக்கமாக ‘வெஜிடபிள்பிரியாணி·பிகேஷன்’ என்று சொல்லலாம். காலனைஸேஷன், போஸ்ட் காலைனைசேஷன், மாடர்னைசேஷன், சான்ஸ்கிரிட்டைஸேஷன் போன்ற பொருந்தாப் பதங்களுக்கு பதிலாக வீரநாராயண மங்கலத்து மண்ணின் மைந்தரால் உருவாக்கபப்ட்ட இந்தப்பதம் மேலும் பொருந்துவதாகும்.

மகிடம் உண்மையில் நாஞ்சில் நாடனைத் தேடிவரவில்லை. கொங்குநாட்டில் தெருவுக்கு நாற்பது சுப்ரமணிய[க்கவுண்டர்]கள்,  பழனிச்சாமி[க்கவுண்டர்]கள். பையன்களானால் செந்தில் இல்லாவிட்டால் கார்த்திக். வேறு பேரிட்டால் கவுண்டர் அடையாளம் இல்லாமலாகிவிடும் போல. [நடுவே ஒரு நினைவு மின்னல். வீரப்பனை என்கவுண்டர் வைத்து போட்டுத்தள்ளிய சேதி வந்தபோது தர்மபுரியில்  தொலைபேசி லைன்மேன் பழனிச்சாமிக் கவுண்டர் சொன்னது. “செரி போகுது… என்ன ஆனாலும் கொன்னவனும் நம்ம ஆளு] யாரோ ஒரு கிழக்கவுடருக்காகப் போன எருமையின் பாதஒலியை அரைத்தூக்கத்தில் கிடந்த நாஞ்சில் நாடன் கேட்டார். உடனே மகள் மேற்பார்வையில் ஆஸ்பத்திரி, ஆஞ்சியோ பிலாஸ்ட். எஸ்.வி.சுப்பையா போல நாஞ்சில் நாடன் மெய்ப்பாடுகளைக் காட்டியதாகவும் டாக்டர் கடுப்பாகி “இந்த அளவுக்கு நீங்க சீரியஸா எடுத்துக்கிட வேண்டியதில்லை… இது சும்மா ஒரு செஸ்ட் கஞ்செக்ஷன்தான். அட்டாக்கெல்லாம் இல்லை….” என்றதாகவும் செய்தி.

அதில் நாஞ்சில் நாடனுக்கு ஏமாற்றம் தான்; ஆனால் ஆஞ்சியோபிளாஸ்ட் அவருக்கு பிடித்திருந்தது. நல்ல ‘குடும்பத்தில்பிறந்த’ வார்த்தை. கேட்டாலே கம்பீரமாக இருக்கிறது. நாஞ்சில் நாடனுக்கு பிரஷர் பிடிக்காது. அது அவரை ஒரு சைக்கிள் டியூபாக உணரவைக்கிறது. நீரிழிவு என்று சொல்பவன் வீட்டில் ஜலபானம் இல்லை. அதென்ன, பேரிலேயே இழிவு.’ ஆஞ்சியோ பிளாஸ்ட்!’  ஏதோ நல்ல வெள்ளைக்காரி போல ஒலிக்கும், சொல்லச்சொல்ல நாவிலினிக்கும் பெயர். வெள்ளைக்காரிகளை நாஞ்சில் நாடனுக்கு பிடிக்கும். “குதிரை மாதிரில்லா இருக்காளுக. அவளுக நம்மளப் பாத்தா நாமள்லா வெக்கப்பட்டு தலைகுனிஞ்சுகிடணும்…”

நான் உடனே அரசு பஸ் பிடித்து முப்பத்துமூன்று இடங்களில் முக்கி முனகி நின்று நகர்ந்து விடிகாலையில் நாஞ்சில் நாடனின் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தேன். ஈஸி சேரிலமர்ந்து தினமணி படித்துக் கொண்டிருந்தார். நோய் விசாரிக்க வந்ததாகச் சொல்லவில்லை. உடனே போய் படுத்துக்கொண்டு நோய் விபரங்களைச் சொல்ல ஆரம்பித்துவிடுவார் என்று பயம். நான் நோயாளிகளைப் பார்க்கபோனால் பொதுவாக ஜோக் அடிப்பதே வழக்கம். எனக்கு நோய் வந்தால் அருண்மொழி கொஞ்சி மம்மு ஊட்டிவிடவேண்டுமென ஆசைப்படுவேன். கல்யாணத்துக்கு முன்னால் பாலக்கோட்டில் வைரல் காய்ச்சல் வந்து இருபதுநாள் கிடந்தபோது அறை நண்பன் குப்புசாமி மம்மு ஊட்டிவிட்டு முத்தமெல்லாம் கூட கொடுத்து ஆறுதல் சொல்லியிருக்கிறான்.

ஜோக் போய்க்கொண்டே இருந்தது. வாய்விட்டுச் சிரித்தாலும் ஓரக்கண்ணால் என்னைப்பார்த்தார். ஒன்றும் நடக்கவில்லை. சந்து தேடி பாம்பு பரிதவிக்கிறது.

பின்னர் மெதுவாக, வெற்றிலைக் காம்பைக் கிள்ளுவது போல, ஒரு தொடக்கம் “…ரொம்பக் கஷ்டப்படுத்திப்போட்டு ஜெயமோகன்”

“கஷ்டமெல்லாம் எங்க இல்ல நாஞ்சில்… நீங்க அந்தக் கதையிலே எழுதினீங்களே… அதுபேரென்ன முள்ளெளித்தைலம். அற்புதமான கதை. இப்டித்தான் எங்க ஊருலே..”

சிரிப்பு நடுவே ஆச்சி வந்து டீ கொடுத்தார்கள்.. “கெடந்து பயப்படுகா!”

நாஞ்சில் துணிந்துவிட்டார். போனால் போகிறது. இங்கிதம் எல்லாம் பார்த்தால் மயிருக்காகாது. “பயப்படாம பின்ன என்ன? ஆஞ்சியோ பிளாஸ்ட்னாக்க சும்மாவா? இந்த ஆஞ்சியோ பிளாஸ்ட்னா ஒரு மாடர்ன் டெக்னிக் கேட்டேளா? என்னல்லாம் கண்டுபிடிக்கானுகோ” சகல தடைகளையும் உடைத்து வெள்ளம் பிரவாகமாகியது. ரத்தக்குழாய்க்குள் பலூனைச் செலுத்துதல். அதை தள்ளிக்கொண்டே சென்று கொழுப்பு இருக்குமிடத்தில் [வெள்ளாளர்களுக்கு வாயைச்சுற்றி அதிகம்] முட்டி உடைத்தல்.

“.. சும்மா அப்டியே தூர்வாரி குப்பக்கூளமெல்லாம் அள்ளி ஓட்டிவிட்டா தெளிஞ்சுட்டு போகும்லா? இப்ப ஒரு ·ப்ரெஷ்னெஸ் இருக்கு ஜெயமோகன். என்னைக்கேட்டா இந்த ஆஞ்சியோ பிளாஸ்ட் செய்றது உடம்புக்கு ரொம்ப நல்லது. அறுத்து எடுத்து இம்சை பண்ணாம பதமா செய்யுகான்லா?”

எனக்கே ஒரு ஆஞ்சியோ பிளாஸ்ட் செய்தாலென்ன என்று சபலம் தட்டிவிட்டது. பிறந்ததில் இருந்து தூர் வாரியதேயில்லை. எனக்குள் ஓடும் பலூனை கற்பனைசெய்தேன். கிச்சுகிச்சு மூண்டது. “ஜாலியா இருக்குமா சார்?”

“என்ன ஜாலி? நம்ம நெஞ்சுலயும் முதுகிலயும் தொண்டையிலயும் கண்ட கண்ட வயரையெல்லாம் செருகி எல்லாத்தையும் ஆங்கங்கே ஸ்டீல் மிஷின்களுக்கு கனெக்ஷன் குடுத்து… ஒண்ணைப்பாத்தா சும்மா கன்யாகுமாரில பவுர்ணமிக்கு அலையடிக்க மாதிரி ஓடுது. இன்னொண்ணில அனக்கமே இல்ல. எளவு, நாம செத்தாச்சா மிச்சமிருக்காண்ணும் அதைப்பாத்து சொல்லிகிட முடியாது. மூவாயிரம் நாலாயிரம்ணு ஒண்ணுல டிஜிட் ஏறிக்கிடே போகுது. இது என்னது நம்ம சிந்தனைக்க மதிப்பை காட்டுத மிசினாண்ணு ஒரு சந்தோஷம்… பின்ன ஒண்ணும் தெரியாது. அனங்காம கெடக்க வேண்டியதுதான். நாம நம்மள ஒரு எலக்டிரானிக் சர்க்யூட் மாதிரி ·பீல் பண்றப்ப என்னத்தை அனங்குகது போங்க. நான் எச்சிலைக்கூட்டி முழுங்கல்ல. ஒண்ணுமே நெனைக்கவும் இல்ல. என்னமாம் செய்யப்போய் உள்ளுக்குள்ள ஷார்ட் சர்க்யூட் ஆகிபோனா என்ன செய்ய? பிள்ள குட்டி இருக்கே?”

தமிழ்நாடு முழுக்க ஆஞ்சியோ பிளாஸ்ட் என்னும் கலையை பரப்பியதில் நாஞ்சில் நாடனுக்கு முக்கியமான பங்கு உண்டு. உற்சாகம் ஆவேசம். ஆஸ்பத்திரியில் உள்ள டாக்டர்கள், பெற்ற பிள்ளைகளைப்போல கவனித்துக் கொண்டார்கள். கடுமையான டயட் சொல்லபப்ட்டது. நாஞ்சில் நாடன் அதை சிரமேற்கொண்டார். உண்ணும் உணவு, தின்னும் வெற்றிலை, உடுக்கும் உடை, கிடக்கும் பாய், அருந்தும் பிராந்தி அனைத்துமே டயட் நினைவில். ஆனால் பேசக்கேட்டால் அது டயட் தானா என எளிய ஆத்மாக்களுக்கு ஐயம் கிளம்பலாம்.

“அரைக்கீரை ரொம்ப நல்லதுண்ணு சொல்லுகா ஜெயமோகன். அரைக்கீரையை நல்லா ஆய்ஞ்சு மண்ணுகிண்ணு போக சுத்தம் பண்ணி வாணலிய அடுப்பில ஏத்தி ஒரு கரண்டி தேங்காயெண்ணைய விட்டு அதில போட்டு கொஞ்சம் உப்பு தெளிச்சு நல்லா சுண்டவச்சு அப்டியே ஒரு பாத்திரத்தில கொட்டிட்டு இன்னொரு வாணலிய அடுப்பில வச்சு கொஞ்சம் எண்ணைய விட்டு கடுகு கறிவேப்பில உள்ளி போட்டு தாளிச்சு எடுத்தா சோத்துக்கு தொட்டுகிட நல்லா இருக்கும். மோருக்கு முன்னால ரசத்துக்கு பொருத்தம்…. சோத்திலக்கூட போட்டுப் பிசைஞ்சி திங்கலாம்…”

இதைப்போல பயத்தம் சுண்டல் [நல்லா தேங்காப்பூ துருவிபோட்டு தாளிச்சு எடுத்தா மணமாட்டு இருக்கும்] முருங்கைக்கீரை [ஊரிலே நெய் காய்ச்சினாக்க அதில முருங்கயிலையைப்போட்டு பொரிச்சு எடுப்பாங்க. அப்டி ஒரு ருசி அதுக்கு] வாழைத்தண்டுக்கும் மோட்சம் இல்லை. அதை நல்லெண்ணை போட்டு வதக்க வேண்டும். வெள்ளரிப்பிஞ்சை நெய்யில் வதக்கி சாப்பிடுவாரா என கேட்க நினைத்து அடக்கிக் கொண்டேன். அதைக் கேட்கப்போய் புதிய ‘ரெசிப்பி’ ஆகிவிடும் அபாயம் உண்டு.

“இதிலே நல்ல விஷயம் என்னான்னா அவர் வீட்டிலேயே இப்ப டாக்டர் இருக்கா. அப்டி யாராவது கூடவே இருந்து கவனிச்சுகிட்டாத்தான் அவரு ஒரு கண்டிரோலிலே இருப்பார் ஜெயன்” என்றார் வசந்தகுமார். நாலுவாரம் கழித்து ·போனில் நாஞ்சில் நாடனிடம் பேசினேன். “டயட்டெல்லாம் இப்ப ஒண்ணும் இல்ல…. நேரமே இல்ல ஜெயமோகன். அலைச்சலிலே போகுது வண்டி. பின்ன ஒரு ஆறுதல் என்னான்னா வீட்டிலேயே டாக்டர் இருக்கா. ஒண்ணு கெடக்க ஒண்ணுண்னாலும் அவ இருக்கப்பட்ட ஒரு தைரியம் இருக்கு பாருங்க”

‘சுப்ரமணிய பிள்ளை, கைமருத்துவம் — அலோப்பதி ‘ என்று போர்டு மாட்டி கோவையில் பிராக்டீஸ் செய்யுமளவுக்கு இப்போது நாஞ்சில் நாடனுக்கு மருத்துவ அறிவு விருத்தியாகியிருக்கிறது. எந்த நோயைப் பற்றி சொன்னாலும் விரிவாக அதன் ஊற்றுமுகம் ஊறடைக்கும் கல் எல்லாவற்றையும் விளக்கி அந்த நோய் நமக்கு வந்தால் நன்றாக இருக்குமே என்ற ஆசையை உருவாக்கிவிடுவார். விரிவான மருந்து பெயர்கள், டாக்டர்கள் சொல்வது போலல்லாமல் சைவ மணம் கமழச் சொல்லப்படும். தீராத ஐயங்களைக் கேட்கப்போய் “உங்களுக்கு ஒண்ணும் நோய் கெடையாது. சும்மா நச்சுபண்ணாம கெடங்க” என்று சங்கீதா சொல்லிவிட்டதில் வருத்தம். “ஆஸ்பத்திரியிலே டாக்டர்கள் பெத்த பிள்ளை மாதிரி இருக்காளுக. பெத்தபிள்ளை டாக்டர் மாதிரி பேசுகா”.

இப்போது ஏறத்தாழ இரண்டுவருடங்களாக தலைமறைவாக திரிகிறார் என்று அவரே சொன்னார். இதயம், கல்லீரல், மண்ணீரல் எதையுமே பரிசோதிக்கவில்லை. “நல்ல்லாத்தான் இருக்கேன். இப்ப என்ன? ஒரு ஆறுமாசம் நல்லா டயட் இருந்து எல்லாம் சரி பண்ணின பிறவு போகலாம்னு இருக்கேன். இப்ப போனா டாக்டர் வருத்தப்படுவார். பாவம் நல்ல மனுஷன்…” டயட்டெல்லாம் சும்மா. ஆடவல்லானின் ஆட்டத்தை டயட்டை வைத்தா மானுடப் பதர்கள் நிறுத்திவிடப்போகின்றன? “ஆச்சு ஜெயமோகன்… வயசும் அறுபதாயாச்சு. எல்லாம் கூடி எண்ணிப் பாத்தா கொஞ்சம் புக்கு இருக்கு. பிள்ளையள கரையேத்தியாச்சு… இனிமேப்பின்ன என்ன?”

“அறுபது ஒரு வயசா? ”

“அது நியாயம். அதைச்சொன்னா செறுக்கிவிள்ளை கேக்க மாட்டேங்கியாளே…”

நாஞ்சில் நாடன் தலைக்கும் மீசைக்கும் சாயமடித்துக் கொள்வதில்லை. சீனிக்கடுகு கலவை. அருகே நின்றால் நான் அவருக்கு சமவயதாகத்தெரிவேன், நான் பதினைந்துவருடம் சின்னவன். என்னை இளம்பெண்கள் அங்கிள் என்றும் குழந்தைகள் தாத்தா என்றும் அழைக்க ஆரம்பித்திருக்கின்றன. நாஞ்சில் நாடனின் சமவயதாளரான கல்யாணி [வண்ணதாசன்] இன்னும் முதுமையாகத் தெரிவார். வண்ணநிலவன் நாஞ்சில் நாடனுக்கு மாமாபோல. நாஞ்சில் நாடன் பூரண ஆரோக்கியத்துடன்தான் இருக்கிறார் என்று படுகிறது. கும்பமுனி இப்போதுதான் திண்ணைக்கு வந்து உட்கார்ந்திருக்கிறார்.

நாஞ்சில் நாடனின் இளமையின் ரகசியம் என்ன? அத்தனை சிக்கல்கள் நடுவிலும் அவருக்கு வாழ்க்கை ஒரு பெரும் ரசனை வெளியாகவே இருந்திருக்கிறது. ஒவ்வொருநாளும் சிரித்து ரசித்து மகிழ்ந்தபடித்தான் வாழ்ந்திருக்கிறார். சாப்பாடு, கவிதை, நண்பர்கள். நாஞ்சில் நாடன் என்று நினைக்கும்போதே இந்தப் பதினைந்து வருடங்களில் பல்வேறு நகரங்களில் விடுதியறைகளில் தங்கி விடிய விடிய பேசி சிரித்து வயிறு வலிக்க குப்புறப்படுத்து உருண்டு எழுந்து சொக்கிப்போய் விடிகாலையில் டீ குடிக்க நடந்துபோன நினைவுகள்தான் எழுகின்றன.

பேசிச் சலித்ததேயில்லை. என் நோக்கில் நல்ல கலைஞர்கள் எல்லாருலமே பெரும் நகைச்சுவை விற்பன்னர்கள். சிலர் எழுத்தில் அது இருக்கும் சிலரில் அது வெளிபப்டாது. ஜெயகாந்தன் எழுத்தில் நகைச்சுவை பொதுவாக அரிது. ஆனால் அவரது அவையில் எப்போதும் சிரிப்பு முழங்கும். நாஞ்சில் நாடனின் சிரிப்பில் ஒருபோதும் பகைமையும் நக்கலும் கூடியதில்லை. ஒரு பதினைந்துவருடம் அருகேயிருந்து அறிந்தபோதிலும் மனம் குன்றும் ஒரு சொல் ஒரு முகமாற்றம் கூட அறிந்ததில்லை.

நானும் அவரும் மரபின் மைந்தன் முத்தையாவும் நண்பர்களும் குற்றாலத்தில் குளிர் ஏறும் இரவுவரை பேசிவிட்டு நள்ளிரவில் துண்டை தலைக்குக் கட்டிக் கொண்டு சிரித்துக் குலுங்கியபடி அருவியைக் காணச் சென்றோம் ஒருமுறை. தன்னந்தனிமையில் தனக்குள் ஆழ்ந்து பெய்துகொண்டிருக்கும் பேரருவியில் அவருடன் சென்று நின்றேன். அவர் அருவியில் குளிப்பது அம்மையப்பன் சன்னிதியில் கைகூப்பி நிற்பதுபோலிருக்கும். தோள்குறுக்கிக் கோர்த்த கைகளை மார்பில் அமுக்கி பரவசத்தில் சுளித்த முகத்துடன். வெடவெடவென ஆனந்த நடுங்கல் வேறு.

மீண்டு வந்து நின்றபோது இருளுக்குள் தலைகீழ் வெண்தழல்போல விழுந்த நீரையே பார்த்துவிட்டு நாஞ்சில் நாடன் சொன்னார். “போரும் ஜெயமோகன். என்னத்த தேடுகோம். எங்க பாத்தாலும் இப்டி நெரப்பி வச்சிருக்கே… பாத்து அனுபவிச்சு மாளல்லியே… ஒண்ணுலயே நின்னாக்கூட ஒரு ஆயுசு பத்தாதே… என்னத்துக்குன்னு இருக்கு… இதெல்லாம் இப்டி இருக்கிறப்ப…” கண்களில் கண்ணீரின் திரை. மேலே ஏந்திய முகம் “…எப்டி ஒரு ஆவேசம் பாத்தேளா? இந்தா நிக்கேண்டா நான்னு சொல்றாப்ல.. இது போரும், வேற ஒண்ணுமே வேண்டாம்!”

ஆனால் தன் நூலை கூர்ந்து ரசிக்கும் வாசகன் மீது எழுத்தாளன் கொள்ளும் பிரியத்துக்கு அளவேயில்லை. அவ்வாசகன் கண்கள் வழியாக அவனே தன் படைப்பை மீண்டும் மீண்டும் வாசித்துக் கொண்டிருக்கிறான். மீண்டும் மீண்டும் அவன் தன்னைக் கண்டடைகிறான். நாஞ்சில் நாடனை அவன் மேலிருந்து ரசித்துக் கொண்டிருக்கிறான்.

“நூறாண்டிரும்! என்று நெஞ்ச நிறைவதல்லாமல் இக்கணம் வேறென்ன சொல்ல?

முற்றும்.

==================================
கமண்டல நதி – நாஞ்சில் நாடனின் புனைவுலகு
ஆசிரியர் : ஜெயமோகன்
வெளியீடு : யுனைடட் ரைட்டர்ஸ்.
விலை: 50.00 ரூபாய்
==================================

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

11 Responses to நாஞ்சில் நாடனின் புனைவுலகு

 1. ramji_yahoo சொல்கிறார்:

  பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

  படிக்கையில் அப்படியே மனம்+நினைவு காவல்கிணறு,thovaalai,அஞ்சு கிராமம், வடசேரி,ராமன்புதூர், சுங்கான்கடை, மார்த்தாண்டம் என பயணப் பட்டது.

 2. maduraisaravanan சொல்கிறார்:

  //இயற்கையில் இருந்து மனிதன் தேர்வுசெய்து தொகுத்து உருவாக்குவதனால் சமையல் மீதான ருசி. நாஞ்சில் நாடன் படைப்புகளில் அந்த ஈடுபாடு ஒரு மதநம்பிக்கை போலவே தீவிரமாக வெளிப்படுகிறது. //

  unmai thaan. neenda pathivu . vaalththukkal. thanks for sharing.

 3. RV சொல்கிறார்:

  நல்ல பதிவு, அங்கும் இங்குமாக ஜெயமோகன் தளத்தில் படித்திருந்தாலும் இப்படி மொத்தமாக படிப்பது நன்றாக இருக்கிறது.

 4. ganesh babu சொல்கிறார்:

  அற்புதமான கட்டுரை. ஜெயமோகனின் அருவி போன்ற மொழிநடையில் நாஞ்சில் நாடனைப் பற்றிய நுட்பமான அறிமுகம் கிடைத்தது. ‘சைவமும் சாரைப் பாம்பும்”, “சாலப் பரிந்து” போன்ற கதைகள் எந்த உலக சிறுகதைக்கும் சமானமானது எனலாம்.

 5. ganesh சொல்கிறார்:

  ஏற்கனவே ஜெ மோ தளத்தில் சில படித்திருந்தாலும், அருமையான் பதிவு. ஜெ மோவின் அன்பு, மதிப்பு அருமையாக வெளிவருகிறது.

 6. Mahesh சொல்கிறார்:

  Orey moochil padithen..Arputham.. orey samayathil irandu padaipppaligalin ulagukku chenru vandha anubhavam .. Idhai ivvalu naal eppadi padikkamal irunthen..? Mahesh -Chennai.

 7. சென்ஷி சொல்கிறார்:

  ஆஹா.. அருமையான தொகுப்பு. முன்பே சிலவற்றைப் படித்திருந்தாலும் விடுபட்டவற்றையும் இங்கு ஒருசேர மீண்டும் படிக்க அருமை. மிக்க நன்றிகள்..

 8. SiSulthan சொல்கிறார்:

  (தன் நூலை கூர்ந்து ரசிக்கும் வாசகன் மீது எழுத்தாளன் கொள்ளும் பிரியத்துக்கு அளவேயில்லை. அவ்வாசகன் கண்கள் வழியாக அவனே தன் படைப்பை மீண்டும் மீண்டும் வாசித்துக் கொண்டிருக்கிறான். மீண்டும் மீண்டும் அவன் தன்னைக் கண்டடைகிறான்.)…………….

  நன்றிகள் ஜெ மோவுக்கு..

 9. kaja சொல்கிறார்:

  super

  thanks jeyamohan

 10. v.iyyappan சொல்கிறார்:

  அருமை நன்றி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s