
வளவ. துரையன்
சிறுகதைக்கு மையம் என்ற ஒன்று இருக்க வேண்டுமா என்பதே இங்கு கேள்விக்குறியாக இருக்கிறது. ஏனெனில் சிறுகதைக்கான இலக்கியங்கள் காலத்துக்குக் காலம் மாறிக்கொண்டே இருக்கின்றன. இதுதான் அந்த இலக்கணம் என்று யாராலுமே வரையறுத்துக் கூற முடியாத நிலைதான் என்றும் உள்ளது. அப்படியிருக்கையில் சிறுகதை என்பது தான் கண்ட அல்லது கேட்டவற்றைச் சற்று புனைவு கலந்து படைப்பதாக உள்ளது. அதே நேரத்தில் முழுவதும் புனைவாகவே கூட சில படைக்கப்படுகின்றன. மையம் என்பது கூட ஒரு சிறுகதையில் ஒன்றுதான் இருக்க வேண்டும் என்ற கருத்துருவும் இன்று உடைக்கப்பட்டுவிட்டது. பின் நவீனத்துவம் எல்லாவற்றையும் கட்டுடைத்துப் பார்க்கும் போது எதற்குமே ஒற்றைத் தன்மையான மையம் என்பது வேண்டாம் என்கிறது. இன்று பல்வேறு புள்ளிகளை வைத்து ஒரு சிறுகதை பின்னப்படுவதைப் பார்க்க முடிகிறது.
நாஞ்சில்நாடன் சிறுகதை, நாவல், கட்டுரை கவிதை, விமர்சனம், சொல்லாய்வு, எனப் பல்வேறு துறைகளில் கால் பதித்து வெற்றிநடை போடுபவர். அவரது சிறுகதைத் தொகுப்புகள் மொத்தம் ஏழு வெளிவந்துள்ளன. அவை தவிர முன்பு வெளிவந்த தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்புகளாக நான்கு தொகுப்புகள் வந்துள்ளன. அவற்றிலிருந்து குறிப்பாக 2011-இல் ந. முருகேசபாண்டியன் தொகுத்து உயிரெழுத்து பதிப்பகம் வெளியிட்ட “நாஞ்சில் நாடன் சிறுகதைகள்” எனும் தொகுப்பிலிருந்து சில சிறுகதைகள் இங்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
’விரதம்’ சிறுகதை என்ன காட்டுகிறது? பொதுவாகப் பசி வந்திடப் பத்தும் பறந்துபோகும்’ என்று சொல்வார்கள். ஆனால் இக்கதையில் வரும் சின்னத்தம்பியா பிள்ளைக்கு அப்படி ஒன்றும் பறந்து போகவில்லை. அன்று அம்மாவாசை. “அம்மாசியாச்சே இண்ணைக்கு;……பழையது பானை நிறைஞ்சு கெடக்கு; நாளும் கிழமையுமா விரதமும் அதுவுமா எப்படிப் பழையது சாப்பிடுகது?” என்று கூறும் சின்னத்தம்பியா பிள்ளை ஆற்றில் குளித்து நெற்றி நிறைய திருநீறு அணிந்து பக்கத்தில் ஆறே பர்லாங்க் தூரத்தில் வாழ்க்கைப் பட்டிருக்கும் மகள்களில் மூத்தவள் வீட்டிற்குப் போகிறார்.
அவளோ இவர் சாப்பிட்டு வந்துவிட்டதாக நினைக்கிறாள். எடுத்த எடுப்பிலேயே “சாப்பிட்டாச்சுன்னா படுத்து ஒரு உறக்கம் போடுசுது. பிறகு வெயில் காந்தப்புறம் வந்தாப் போச்சு. பேரப்பிள்ளையோ என்ன ஓடியா போறா?” என்று கேட்டுவிட சின்னத்தம்பியா பிள்ளை மருமகனும் இருக்கையில் ”வெட்கத்தைவிட்டு எப்படிச் சாப்பிட வந்தேண்ணு சொல்வது” என்று ஒன்றும் சொல்லாமல் இரண்டாவது பெண்ணின் வீட்டுக்குப் போகிறார்.
அங்கே அனைவரும் சாப்பிடத் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இவரைக்கண்ட அவர் மகளோ, “உங்கிட்ட எத்தனை நாள்ப்பா சொல்லுசு? வந்தா நேரே இங்கே வாண்ணு! நீ பாட்டுக்கு அக்கா வீட்டிலே சாப்பிட்டுட்டு அப்புறமா இங்கே வாறே” என்று கேட்டுவிடுகிறாள். இங்கும் “கொஞ்சம் வெந்நீர் குடும்மா” என்று கெட்டு வாங்கிக் குடித்து விட்டு அவர் புறப்பட்டு விடுகிறார்.
ஒரு வித்தியாசமான மனிதராக சின்னையாப்பிள்ளையைப் பார்க்கிறோம். பசி வந்திட எல்லாமே பறந்துவிடும் என்ற மொழியை அவர் பொய்யாக்குகிறார். தன் மகள், மருமகனிடமே சாப்பிட வந்திருக்கிறேன் என்று சொல்ல இயல்லாத அவரின் செம்மாந்த நிலை பரிதாபப்பட வைக்கிறது. அதே நேரத்தில் புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்பது புரிகிறது. கெட்டாலும் மேன்மக்கள் மக்களே என்பதும் அவரால் இங்கு விளக்கப்படுகிறது. எனவே பசி எனும் உணர்வு எல்லாரையும் மாற்றிவிடாது என்பதுதான் மையமா என்றால் இல்லை இதற்கு மேலும் கதை விரிகிறது.
சின்னையாப்பிள்ளை மிகவும் ஆச்சாரமானவர். இதை நாஞ்சில் நாடன் ஒரே வரியில் விளக்கி விடுகிறார். அவர் குளித்து முடித்து விடுகிறார். “படிக்கட்டுகளின் மீதேறி, காலண்டர் தேதித் தாளில் மடித்து வைத்துக் கொண்டு வந்திருந்த திருநீற்றினைக் கையில் வைத்து வலது கையால் சில துளிகள் தண்ணீர் விட்டுக் குழைத்து மூன்று விரல்களால் நெற்றி, மார்பு, தோள்கள், மார்பு, முழங்கைகள் என்று இட்டுக்கொண்டு கைகளைக் கழுவி ‘நமச்சிவாயம்’ என்றவாறு கிழக்கு நோக்கிக் கைகுவித்தார்”.
இப்படி அனுஷ்டானங்களைக் கடைபிடிப்பவர் பசியால் அதைத் துறக்கிறார். பசித் துயர் தாங்காமல் பழையது சாப்பிடுகிறார். இது அவரின் தனிப்பட்ட விஷயமாகும். யாருக்கும் தெரியாது. தவிர்க்க முடியாத நேரங்களில் பிறருக்குத் தொல்லை தராமல் தன் சுய கருமங்களைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம் என்பது இதனால் புரிகிறது. பசியானது அவரின் சுய கௌரவத்தை மாற்ற முடியாமல் போகிறது. அதேபசி அவரின் சுய கருமத்தை விடச்செய்கிறது. முதலில் தோற்ற பசி பிற்பாடு வெற்றி பெறுகிறது. இந்த முரணே கதையின் ஊடே புகுந்து மையமாகி கதையைச் சுவாரசியமாக்குகிறது.
வெளி ஊருக்குப் பிழைக்கப் போகிறவர்கள் என்ன வேலை செய்தாலும் இங்கே வரும்போது தங்களை மிகவும் நல்லநிலையில் இருப்பதாகக் காட்டிக்கொள்கிறார்கள். அப்படிக் காட்டிக் கொள்வதுதான் தனக்கு மரியாதை தரும் என்று எண்ணிக் கொள்கிறார்கள். தவிர காசு பணம் செலவழித்துத் தன்னை வெளியூருக்குச் சம்பாதிக்க அனுப்பிய சுற்றத்தின் மனம் கஷ்டப்படுமோ என்பதனால் அவர்கள் அப்படி நடிக்க வேண்டியது அவசியம் ஆகிறது. இது போலி என்பதை அவரின் உறவினர்களும் புரிந்து கொள்வதில்லை. மாறாக வருபவருக்குத் தொல்லைதந்து அவரை மீண்டும் பொருள் நிலையில் சிக்கலுக்காக்குகிறார்கள். இதை மையமாக்குவதுதான் “ஐந்தில் நான்கு” சிறுகதை.
ஊருக்கு வந்த காத்தமுத்து, இரவல் வாங்கி வந்த டிரான்ஸ்சிஸ்டர்—கேஸட் பிளேயர், தவணையில் வாங்கிய கைக்கடிகாரம் எல்லாவற்றையும் உறவினர்கள் கேட்க மறுக்க முடியாமல் கொடுக்கிறான். திரும்ப பிழைப்புகாகப் போக வேண்டிய நாளில் அங்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் உழைக்க வேண்டுமோ என்று கண்கள் கலங்குகிறான். வழி அனுப்ப வந்த உறவோ “அருமாந்த பிள்ளை…..தூரா தொலைக்குப் போறமேண்னு வருத்தபடுகு” என்று அனுதாப்படுகிறது.
நீண்ட தொலைவு சென்று பிழைப்பவர்கள் படும் பாடு, அவர்களின் போலி முகம், இங்கு உறவினர்கள் அவர்களைப் பற்றி எண்ணியுள்ள நிலை ஆகியவற்றை வைத்து இக்கதை பின்னப்பட்டாலும் வருபவன் காட்டும் போலி முகம்தான் இங்கு மையமாக இருக்கிறது. இந்த காத்தமுத்து உண்மை நிலையைச் சொல்லி இருந்தால் அவன் மீண்டும் அங்கு இன்னும் பல ஆண்டுகள் உழைக்கும் நிலை சற்று குறைந்திருக்கலாம். ஆனால் முன்பு இருந்த தன் நிலையைப்பற்றி எண்ணாமல் இப்போது திடீரென்று புதுப் பணக்காரனானவன் காட்டும் வேஷத்தை வெளிப்படுத்தும் கதையிது.
நம் நாட்டில் தேர்தல் வருகிறது என்றால் வாக்காளர்கள் தெய்வங்களாகி விடுவார்கள். அவர்களைப் பார்த்ததும் வேட்பாளரின் கைகள் தானாகவே கும்பிடத் தொடங்கிவிடும். அவர்கள் கேட்டது மட்டுமன்று; இன்னும் கேட்காததும் கூட கிடைக்கும். ஒரு தொகுதியில் தேர்தல் நடக்க இருக்கிறது. மூன்று பேர் போட்டியிடுகிறார்கள். தமிழ்நாட்டின் வழக்கம் போல அவர்கள் மூவருமே ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள். மூவரும் மக்களின் வாக்குகளைப் பெற என்னென்ன செய்கிறார்கள் என்பதே ”வாக்குப் பொறுக்கிகள்” கதை.
தன் காரில் இதுவரை யாருமே ஏற்றாத ஆதிமூலம் பிள்ளை தன் மகன் தேர்தலில் நிற்கிறான் என்பதற்காக கிராமத்து மக்களையெல்லாம் காரில் ஏற்றுகிறார். அதுவும் சாக்கு மூட்டைகளோடு, ஈரம் உலராத மண்வெட்டிகளோடு, டிக்கியில் அடைத்த அழுக்கு மூட்டைகளோடு மக்கள் ஏறச் சம்மதிக்கிறார்.
இரண்டாவது வேட்பாளர் தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்திருக்கும் பணக்காரர் டாக்டர் பரமேஸ்வரன். இவர் ஆப்பிரிக்காவிலிருந்து வரும்போதே அங்கே ஒரு கிறித்துவப்பெண்ணை மணம் செய்து கொண்டு வருகிறார். இங்கும் அவருக்கு அவர் இனத்தில் ஒரு மனைவி உண்டு. இது அவருக்கு வாக்கு கேட்க வசதியாயிருக்கிறது. தன் இன மக்களைச் சந்திக்கப் போகும்போது இங்கு மணந்து கொண்டவளையும், அரிஜன சேரிக்குச் செல்லும்போது சிலுவை டாலரை எடுத்து வெளியே விட்டுக்கொண்டு வரும் கிறித்துவ மனைவியும் அழைத்துக் கொண்டு போகிறார்.
மூன்றாவது வேட்பாளர் அறிவரசன் இப்போதுதான் ஒரு சாதாரண வீட்டிற்குச் செல்கிறார். அங்கே உட்கார்ந்து கொண்டு ”வெறும் புளிக் கறையையும் காணாத் துவையலையும்” கேட்டு வாங்கிச் சாப்பிடுகிறார். ஆக இவர்கள் வாக்கு வாங்க அல்லது அவற்றைப் பொறுக்க எவற்றை வேண்டுமானாலும் இன்னும் சொல்லப்போனால் இதுவரை செய்ததற்கு மாறாகவும் செய்வார்கள் என்று இந்தக் கதை கூறினாலும் ஒரு சாதி என்பது ஒரு தொகுதியில் என்னென்ன செய்யும் என்ற கேள்வி எழுப்பி தொகுதி வரையறையையே கூட அது தன் வசதிக்கேற்ப மாற்றியமைக்கும் என்று கூறுகிறார் நாஞ்சில் நாடன்.
”சேவல் பண்ணை” என்று பாலகுமாரன் ஒரு குறுநாவல் எழுதிருப்பார். திருமணமாகாமல் தங்களின் சொற்ப சம்பளத்தில் நான்கைந்து பேர் ஒன்று சேர்ந்து ஓர் அறை எடுத்துத் தங் கியிருப்பதைக் காட்டும் கதை அது. வெளியூருக்குப் பிழைக்கப்போகும் இளைஞர் பட்டாளம் சார்ந்த சிலர் அதுபோல சேர்ந்து தங்கிக் கொள்வார்கள். சென்னை திருவல்லிக்கேணிப் பகுதியில் இது போன்ற ‘மேன்ஷன்’கள் உண்டாம். அவற்றில் தங்குவதில் சில சௌகரியங்களும் பல அசௌகரியங்களும் உண்டு. திடீரென நம்மைத்தேடி யாரேனும் விருந்தினர் சொல்லாமல் கொள்ளாமல் வந்துவிட்டால் அவர்களை அங்குத் தங்க வைக்க நாம் பாடும் பாட்டைச் சொல்லி மாள முடியாது. வாடகையைப் பங்கு கொள்வதில் சற்று பொருள் சுமை குறையும்.
இந்த ”அறைவாசிகள்” கதையில் வரும் சதாசிவன் போல் கையில் யார் பிரஷ் வருகிறதோ அதனால் பல் விளக்கும் பழக்கம் உடையவர்களுக்கு இன்னும் என்னென்னவோ வாங்க வேண்டிய செலவுகளும் குறையலாம். மும்பையில் ஓர் அறையில் தங்கிக் கொண்டிருக்கும் இளைஞர்கள் படும் சில்லறைத் துன்பங்கள் இக்கதையில் தெளிவாகத் தெரிகின்றன. செல்லையா, நமசிவாயம், தாமோதரன், சதாசிவன் ஆகியோர் தங்கியிருக்கும் அறைக்குச் சொந்தக்காரர்தான் மாடசாமி. வீட்டுச் சொந்தக்காரர்கள் எல்லாரும் கெடுபிடிகளில் ஒரே மாதிரிதான் இருப்பார்கள் போலிருக்கிறது வாடகை வீடுகளில் குடியிருந்து கொண்டிருப்போருக்கு இந்த அனுபவம் கிடைத்திருக்கும்.
நாஞ்சில் நாடன் வீட்டுச் சொந்தக்காரர் பற்றிப் படம் பிடித்துக் காட்டுகிறார்.
”நல்ல வேளையாக மாடசாமி ஊருக்குப் போயிருந்தார். வர இன்னும் பத்து நாட்கள் ஆகலாம். அவர் வீட்டில் இருந்தால் பூச்சி முள்ளாகக் கோர்த்திருப்பார்.
”பால்கனியிலே சேர்ந்து நிக்காதீங்கோ”
”பாத்ரூம் லைட்டை அணையப்பா”
”சிகரெட் பிடிச்சா சாம்பலைக் கிண்ணத்திலே போடணும்”
”பைப்பை இஷ்டத்துக்குத் தொறந்து விட்டுருவான்”
கக்கூசுக்குப் போனா சரியா தண்ணி ஊத்துங்கப்பா”
“தெனசரி ரத்திரி பத்தரை மணிக்கு வந்தா மனுஷன் ஒறங்காண்டாமா?
என்ற ரீதியில் தன் இருப்பை புலப்படுத்திக் கொண்டே இருப்பார். போதாக்குறைக்கு ஊறுகாய்போல “ம்ஹூம் ம்ஹூம்’ என்று ஓயாத செருமல் சத்தம் வேறு.”
வெவ்வேறு ஊர்களிலிருந்து வந்து வெவ்வேறு பணிகளில் இருக்கும் அந்த மனிதர்கள் தம் இயலாமை காரணமாக எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு போகும் பக்குவம் பெற்று விடுகிறார்கள். இதைவிட அறைவாசி கதையில் வரும்செல்லையா படும் பாடும் அவனால் மற்றவர்கள் படும் அவஸ்தைகளும் கதையை நகர்த்துகின்றன.
மணமாகி மனைவியை விட்டுவிட்டு வந்திருந்தான் செல்லையா. அதுவும் ஓராண்டுக்குள் ஒருமுறைகூடப் போகாதிருந்ததால் திடீரென ஒருநாள் விடியலில் அவன் மாமனார் அவன் மனைவியை அழைத்துக் கொண்டு மும்பை வந்து விடுகிறார். தான் விரைவில் வீடு பார்ப்பதாகச் சொல்லி சமாளிக்கிறான். அவர்கள் ஒரு வாரம் தங்க வைத்து அனுப்ப அவன் உத்தேசிக்கிறான். ”எல்லாம் கிட்டத்தட்ட இரண்டாயிரம் பழுத்துவிடும் என்றாலும் இரவில் படுப்பது பிரச்சனையாகிறது. நண்பர்கள் ஒருவாறாய்ச் சமாளித்து விடுகிறார்கள்.
அந்த ஐந்தாறு நாள்களில் எல்லாருக்கும் வீட்டுத் தேநீரும், இரவு ஒரு மொளகூட்டல் அல்லது எரிசேரியுடன் சூடான ரசமும் கிடைக்கின்றன. திடீரென ஒரு நாள் விடியலில் மாடசாமியும் அவர் மனைவியும் இரண்டு மகள்களும் வந்து விடுகிறார்கள். கதையை நாஞ்சில் இந்த இடத்தில் முடித்து விடுகிறார்.
வாசகன் மனத்தில் நகை தோன்றுவதற்குப் பதிலாக வெளியூர் சென்று சம்பாதிப்பவர்கள் தங்க இடம் சரியாக அமையாமல் தவிக்கும் பரிதாப நிலைதான் நிலைத்து நிற்கிறது. பொருள் பற்றாக்குறை, வெளியே சொல்ல முடியாத சில நண்பர்களின் தொல்லை, வீட்டுக்காரரின் நச்சரிப்பு, திடீரென வந்து சேர்ந்துவிடும் நெருங்கிய உறவுகள் இவற்றால் ஏற்படும் இன்னல்களை எல்லாம் பொறுத்துக் கொண்டுதான் அவர்கள் வாழ்க்கையை நடத்துகிறார்கள் அத்துடன் தங்கள் சொந்த ஊருக்கும் பணம் சேர்த்து அனுப்புகிறார்கள் என எண்ணும்போது பாவம் அவர்கள் என்ற உணர்வே மேலோங்குகிறது.
அந்தக் காலத்திலிருந்து இந்தக்காலம் வரை எல்லாக்கிராமங்களிலும் யாரேனும் ஒரு சண்டியர் இருக்கத்தான் செய்கிறார். ”நாட்டு மருந்து” கதையில் ஒருவன் வருகிறான். அவனுக்குப் பெயரையே நாஞ்சில் வைக்க வில்லை. பெயர் வைக்கக்கூடிய தகுதி கூட அவனுக்கில்லை எனக் கருதினாரோ என்னவோ? அவனுக்கு வேளா வேளைக்குச் சோறு கிடைக்கிறது. குடிக்கப் பணம் கிடைக்கிறது. குடித்துவிட்டுக் கண்ட இடங்களில் விழுந்து கிடக்கிறான். உறவுகள் அடித்தும், உதைத்தும் செய்தும் பயனில்லை. ஒருகட்டத்தில் சோறும் குடிக்கப் பணமும் இல்லையென்றாகிறது. சின்னச்சின்ன திருட்டுகளில் ஈடுபடுகிறான். பள்ளிப் பிள்ளைகளின் சாப்பாட்டு டப்பாவைக் கேட்டு வம்பு செய்கிறான். குடிக்கக் காசு தராதவர் வீட்டு வாசல்களில் மலம் போடுகிறான்.
அவனைப் பற்றிப் புகார் சொன்னாலோ அவனது உறவுகள் சண்டைக்கு வந்து விடுகின்றன. காசு கிடைக்காததாலோ என்னவோ ஒரு கட்டத்தில் அவன் வாழ்வு மாறிவிடுகிறது. குளிக்காமல் உடம்பு அழுக்கு மலையாகிறது. தலை முடி காடாகிறது. தாடி பெரியதாகி விடுகிறது. அவன் எல்லாருக்குமே வேண்டாதவனாகி விடுகிறான். நாட்டு மருந்துக்கடை வைத்திருக்கும் அய்யாவு ஆசான் அவனைக் கவனித்துக் கூப்பிடுகிறார். வருகிறான். அவனுக்குக் காசு தந்து முடிவெட்டி முகம் மழித்து வரச் சொல்கிறார். சோப்பு வாங்கிக் கொடுத்து குளிக்கச் சொல்கிறார். பின் அவனுக்குப் புதுத்துணிகள் வாங்கி கொடுக்கக் கட்டிக் கொள்கிறான். தன் கணக்கில் கடையில் போய் சாப்பிடச் சொல்கிறார். பாகனுக்குக் கட்டுப்பட்ட யானை போல் எல்லாம் செய்கிறான் .
அவனையே தன்கடையைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டுத்தான் தான் மதிய உணவிற்குப் போகிறார். பிறகு தான் வந்தவுடன் அவனை நாளை ஒரு மூலிகைச் செடி கொண்டு வரச்சொல்ல அவன் கிளம்பிப் போகிறான். கதை இப்படி முடிகிறது.
“போவதைப் பார்த்துக் கொண்டிருந்த ஆசானுக்கு அவனைத் தெற்றிவிட முடியும் என்று தோன்றியது”
ஒருவனை எல்லாரும் புறக்கணிக்கும்போது அவனுக்கு மேலும் மதம் பிடிக்கிறது. தாறுமாறாக நடக்கத் தொடங்குகிறான். அதே நேரத்தில் அவனிடம் அன்பு செலுத்தி நல்வழி காட்டும்போது அவன் ஏற்றுக் கொள்கிறான். ”அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்” என்பது குறள் அன்றோ?. ஆனால் எல்லாருக்கும் தோன்றாத ஓர் எண்ணம் ஏன் ஆசானுக்குத் தோன்றியது? “அய்யாவு ஆசானுக்கு, இவனை எப்படியும் ஒரு பரிட்சைக்கு ஆட்படுத்திப் பார்ப்பது என்று தோன்றியது.” என்று நாஞ்சில் எழுதுகிரார். அந்த ஊரில் எல்லாரும் இன்னும் சொல்லப்போனால் அவனின் உறவுகளே செய்து பார்க்காத ஒரு பரிட்சையைச் செய்து பார்க்க வேண்டும் என்று அவருக்குத் தோன்றியதே அதுதான் மனித நேயம்; அது மட்டுமன்று அவருக்கு இத்தனை நாள்களாய்த் தோன்றாமல் இப்போது தோன்றியது ஏன்? மனம் செய்பவற்றில் சில புதிரானவையாகத் தோன்றுவதில் வியப்பில்லை. அது தவிர ஆசானின் நம்பிக்கையும் ஒரு காரணம். அது வெற்றி பெறுவதும் கதையின் சிறந்த மையமாகத் திகழ்கிறது.
இன்றைய உலகம் பொருள் சார்ந்ததாக மாறி விட்டது. அன்பு, அறம், நட்பு போன்ற வாழ்வின் உச்சங்களெல்லாம் தறிகெட்டுப் போகின்றன. அரசியல், இலக்கியம், ஆன்மிகம் போன்ற எல்லாத் துறைகளுமே “பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்பதைப் பறை சாற்றுகின்றன. குறிப்பாகக் கோயில்களில் கட்டண தரிசனத்தில் இதைப் பார்க்கலாம். கட்டணத்தில் கூட அதிகமாக ரூபாயெனில் இறைவனுக்கு இன்னும் அருகில் போகலாம். தட்டில் ஒரு ரூபாய் போடுபவர், பத்து ரூபாய் போடுபவர், நூறு ரூபாய் போடுபவர் என்பவர்கள் அவரவர் போட்டதற்கேற்ப மரியாதை செய்யப்படுகின்றனர்.
கோயிலில் கடவுளுக்குப் பூசை செய்பவர்கள் கூட அக்கோயிலின் வருவாய் சரியாய் கிடைக்காமல் திண்டாடும் கோயில்களும் உண்டு. அதுவும் திருக்கோயில் பணியாளர்கள் நிலைமை இன்னும் மோசம். அர்ச்சகர், பட்டர்களைவிட ‘ஓதுவார்கள்’ என்று இருக்கிறார்களே அவர்களுக்குக் கோயில் தரும் மிகச் சொற்ப ஊதியம் கண்டிப்பாகப் போதாது. எனக்குத் தெரிந்த ஒரு பாடல் பெற்ற தலத்தில் தன் தேவாரம், திருவாசகம் ஓதும் பணியை முடித்தபின் கோயிலின் பின்புறப் பிரகாரத்தில் வருவோர்க்குத் திருநீறு கொடுத்துக் கொண்டு ஒரு தட்டை ஏந்திக் காசு போடுவார்களா என்று எதிர்பார்க்கும் ஓர் ஓதுவாரை நான் பார்த்திருக்கிறேன். ஆனாலும் அவர்கள் தங்கள் பணியைப் புனிதமாகக் கருதுகிறார்கள்.
இதையெல்லாம் வெளிப்படையாய்க் கூறாமல் மௌனமாய்க் கூறும் கதைதான் “பிணத்தின் முன் அமர்ந்து திருவாசகம் படித்தவர்” சிறுகதை. ஒரு பெரிய விழுமமே நிலைகுலைவதை இக்கதையில் காணமுடிகிறது. ஆமாம். சில மரபுகளும் உடைந்து போகின்றன.
செத்துப் போன செட்டியாரின் வீட்டில் தேவாரம், திருவாசகம் பாட வேண்டும். முடியாது, பழக்கமில்லை என்று மறுத்த ஓதுவாரைப் பெரிய இடத்து சிபாரிசு கொண்டு வந்து சேர்க்கிறது. ”தாராளமாய்ச் செய்வாங்க” என்று வேறு சொல்கிறார்கள். ஓதுவாரின் வாழ்க்கை இந்த வரிகளில் தெரிகிறது.
“வாடகை இல்லா மடமும் தினமும் மூன்று கட்டிப் பட்டைச் சோறும் எழுநூறு ரூபாய்ச் சம்பளமும் எத்தனை பிள்ளை பெற்று வளர்த்து ஆளாக்க முடியும்? அவன் அருளாலே அவனிடம் தினமும் செருப்படி வாங்கும் வாழ்க்கை….இதில் சுத்த சிவத்தின் மின் பாடினால் என்ன, செத்த சவத்தின் முன் பாடினால் என்ன?”
பிணம் எடுக்கப்பட்டு விடுகிறது. ஓதுவாருக்கு யாரிடம் போய்க் காசு கேட்பது என்று தெரியவில்லை. வரும்போது காரில் அமர்த்திக் கூட்டி வரப்பட்ட ஓதுவார் போகும்போது பஸ்சில் வீட்டுக்குப் போகிறார்.
“மாற்று வேட்டியை உடுத்தி சாப்பிட அமர்ந்தவர்க்கு சாப்பிடப் பிடிக்க வில்லை. அவருக்குப் பிடித்த முள்ளங்கிக் குழம்பும் காட்டுகீரை கடைசலும்தான். ஆனால் நாள் பூரா முன்னால் கிடந்த பிணம், அழுகுரல்கள்,ஆதாளிகள்…..?
மறுநாள் காலையில் ஓர் உறை ஓதுவாரிடம் தரப்படுகிறது. அதில் ஆயிரம் ரூபாய் இருக்க அவர் ஆச்சரியம் அடைகிறார். கதையின் கடைசி வரிகள் முக்கியமானவை.
“ஓதுவாருக்கு ஆச்சரியமாக இருந்தது. இத்தனை ஆண்டுகளில் சேர்த்துப் பார்த்ததில்லை. சிவபெருமானைச் செத்த பிணத்துக்கு விற்ற காசென்ற போதம் ஆன்மாவின் சுடலைப்பொடியின் வெக்கையாய்க் கத்தியது.
இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்றும் உள்மனம் கேட்டது.
மாதம் இரண்டு பணக்காரக் கிழவர்கள் திருவாசகம் கேட்டுப் பாடை ஏறினால் தலைமுறைகளய் அரித்துத் தின்னும் தரித்திரம் தீரும் என்றும் தோன்றியது.”
இன்றைக்கு நமது நல்ல கலாச்சாரங்களெல்லாம் பொருள் சேர்க்கும் காரணத்தால் மாறி வருவதை இக்கதை உணர்த்தினாலும் எல்லாவற்றையும் மௌனமாகப் பார்த்துக் கொண்டுதானே வாழ வேண்டி உள்ளது என்ற உண்மையையும் கதை உணர்த்துகிறது. இவ்வாறு மனிதகுலத்தின் கேவலத்தை நாஞ்சில் படம் பிடித்துக் காட்டுகிறார்.
“நாஞ்சில் நாடனின் எந்தவொரு கதையிலும் மனிதகுலத்துக்கு விரோதமான அம்சங்களைச் சிறிய அளவிலும் காணவியலாது. எத்தகைய நெருக்கடியிலும் சிக்கலிலும் மாட்டிக் கொள்ள நேர்ந்தாலும் கசப்பும் துயரமும் எல்லாப் பக்கங்களிலிருந்து பொங்கி வழிந்தாலும் அவருடைய படைப்புகள் மனிதகுல மேன்மை குறித்து மட்டுமே அக்கரை கொள்கின்றன”
என்ற ந. முருகேச பாண்டியனின் வரிகள் மிக முக்கியானவை. இவை நாஞ்சில் நாடனின் ஒட்டு மொத்தப் படைப்புகளின் மதிப்பீடு என உறுதியாகக் கூறலாம்.
– See more at: http://solvanam.com/?p=42915#sthash.AHit102v.dpuf
மிக அருமையான பகிர்வு, உண்மையில் நாஞ்சில் நாடனின் தொகுப்பை வாங்கி முதல் கதை “விரதம்” படித்தபோது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது அற்புதமான கதை,ஒவ்வொரு கதையும் ஒரு விதத்தில் சமூக பிரச்சனைகளை எந்தவித அலங்காரமில்லாமல் நம் முன் வைக்கிறது.