மது – கைம்மண் அளவு 35

image1
நாஞ்சில் நாடன்
எனக்கு வாசகர் என்று எவரும் இல்லை. எல்லோரும் நண்பர்களே! இத்தொடரை தொடர்ந்து வாசித்து வரும் நண்பர்களில் பலர் கேட்டுவிட்டனர், ‘மதுவிலக்கு பற்றி வாய் திறக்க மாட்டீர்களா’ என! ஒருவேளை நாம் வாய் திறந்தால் மது மணம் வீசக்கூடும். சிலர் அதை மது நாற்றம் எனலாம். எமக்கதில் மறுப்பு இல்லை. நாற்றம் என்றாலும் தமிழில் மணம் என்றே பொருள்.
ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு, நாச்சியார் திருமொழியில் ஆண்டாள், ‘கற்பூரம் நாறுமோ, கமலப் பூ நாறுமோ, திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ?’ என்று மாதவனின் வாய்ச்சுவையும் நறுமணமும் வியக்கிறாள்.நள்ளிரவில், நடுச்சாலையில் நிறுத்தி, என்னை எவரும் இதுவரை ஊதச் சொல்லிக் கேட்டதில்லை. நடந்து போகிறவனை வேலை மெனக்கெட்டு ஊதச் சொன்னால் பைசாவுக்குப் பயன் உண்டா?
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை கதைகளும் நாவல்களுமே எழுதிக் கொண்டிருந்தேன். கட்டுரை எழுதும் ேசாலிக்கு வந்ததெல்லாம் கி.பி 2000க்குப் பிறகுதான். இப்போது சிந்துபாத்தின் தோளில் ஏறி அமர்ந்துகொண்டு, இறங்க மாட்டேன் என்று அடம்பிடிக்கும் கிழவன் போலாகிவிட்டது.தொடக்க காலத்தில் நானெழுதிய கட்டுரைகளில் ஒன்று மதுப்பழக்கம் பற்றியது. தலைப்பு, ‘நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று’. எனது முதல் கட்டுரைத் தொகுப்பின் தலைப்பும் கூட அஃதே. இதுவரை மூன்று பதிப்புகள் கண்ட நூல் அது. மேலும் இரண்டு கட்டுரைகள் எழுதினேன், மதுப்பழக்கம் பற்றி.
அவற்றில் ஒன்றின் தாக்கத்தால் ‘மதுச்சாலை’ என்றொரு திரைப்படம் வந்தது. மது பற்றிய எனது மூன்றாவது கட்டுரை ‘உண்ணற்க கள்ளை’ என்ற தலைப்பில் கள் உண்ணுதல் பற்றியது. கள்ளுக்கு ஆதரவானது.
இன்றைய அரசியல் சூழலில் மதுவுக்கு ஆதரவாகக் கட்டுரை எழுதினால், ‘கிறுக்கன்’ எனப் பட்டம் சூட்டி விடுவார்கள். ஏனெனில் வெகுசன மனப்போக்கு அவ்விதம் உள்ளது. ஆகவே, ஊர் ஓடும்போது நடுவில் ஓடுகிறார்கள் பலரும். பாம்பு தின்னும் நாட்டுக்குப் போனால், ‘நடுக்கண்டம் எனக்கு’ என்று சொல்லவும் வல்லவர்கள். ஆனால், எழுத்தாளன் அவ்வாறு இருக்க இயலாது. அவன் நடுப்பகலில் தீப்பந்தம் ஏந்தி மனிதனைத் தேடுகிறவன்.image3
குடிப்பவர்களில் வகைகள் உண்டு. எப்போதாவது அல்லது அவ்வப்போது பருகுவதை ஒரு ரசானுபவமாகச் செய்கிறவர்கள். இரண்டாவது, தினமும் குடிக்கும் குடிகாரர்கள். மூன்றாவது, குடி வெறியர்கள் அல்லது குடி நோயாளிகள். பொதுமக்கள் பார்வையில் பட்டு அவர்களைக் கவலையும் கோபமும் வெறுப்பும் அருவருப்பும் அடையச் செய்பவர்கள் இவர்கள். குடி வெறிக்கும் குடிநோய்க்கும் ஆளானவர்களை வைத்தியம் செய்து சீராக்கும் முயற்சியில் சமூகம் ஈடுபட வேண்டும்.
தமிழ்நாட்டில் மதுவை ஒழிக்க வேண்டும் என்று போராடுபவர்களின் சிந்தனையை ஆட்கொண்டிருப்பவர்கள் இந்த மூன்றாவது வகையினர்தான். அவர்களது நியாயம் நமக்குப் புரிகிறது. ஆனால் பூரண மதுவிலக்கு என்பது தீர்வா, சாத்தியமா என்ற ஆய்வும் அவசியமாகிறது.
உலகெங்கும் வாழும் பத்து கோடித் தமிழர்கள் என்னைப் பொறுத்தருள வேண்டும். ஏனெனில், எனது கணிப்பில் பெரும்பாலான தமிழர்கள் என்ன குடிக்க வேண்டும், எப்போது குடிக்க வேண்டும், எவ்வளவு குடிக்க வேண்டும், எப்படிக் குடிக்க வேண்டும், யாருடன் குடிக்க வேண்டும் என்பதை அறிய மாட்டார்கள். பள்ளிகளில் பாலியல் கல்வி வேண்டும் என்று முழங்குகிற நாம், மதுப்பழக்கம் பற்றிய அத்தியாவசியமான புரிதலை வழங்குவதும் தேவையானதாகிறது.image2
உடனே கேட்பீர்கள், ‘‘தமிழனுக்கு மட்டும் இதை ஏன் சொல்லித் தர வேண்டும்’’ என்று. இந்தியா முழுக்கப் பயணம் செய்தவன் எனும் நிலையில், பார்வையில் படுகிற காட்சிகளையும் செவிப்படுகிற செய்திகளையும் வைத்துக்கொண்டு யோசிக்கும்போது, தமிழனுக்குச் சில தகவல்கள் போய்ச் சேரவில்லையோ என்று தோன்றுகிறது. சென்ற ஆண்டில், புவனேஸ்வர் தமிழ்ச் சங்கத்தின் அழைப்பின் பேரில் ஏழு நாட்கள் ஒரிசா மாநிலத்தில் சுற்றித் திரிந்தேன். புவனேஸ்வர், கட்டாக், பூரி என்று அலைந்தபோது மதுக்கடைகளே கண்ணில் படவில்லை. என்னை ஊர் சுற்றிக் காட்டிய புவனேஸ்வர் தமிழ்ச் சங்கத் தலைவர் துரைசாமி, செயலாளர் அன்சாரி, செயற்குழு உறுப்பினர் மரகத ராஜா ஆகியோரிடம் கேட்டேன்.
ஒரிசா மதுவிலக்கு அமலில் உள்ள மாநிலம் அல்ல என்று எனக்குத் தெரியும். எங்கும் காலிக் குப்பிகள், உடைக்கப்பட்ட பீர் பாட்டிகள் காணோம். எனக்குச் சொன்னார்கள், அங்கு மதுவிலக்கு இல்லை என்றும், வேண்டியது கிடைக்கும் என்றும். ஆனால் நம்மூரில் மருந்துக் கடைகளுக்கு அடுத்தபடியாக மதுக்கடைகள் தென்படுவதைப் போல அல்ல அங்கே! ஏழு நாட்கள் அலைந்ததில் நாலைந்து கடைகளே கண்ணில் பட்டிருக்கும். அங்கும் சாரிசாரியாக மக்கள் கூட்டம் சாயவில்லை. நம்மூரிலோ, ரேஷன் கடைகளுக்கு அடுத்தபடியாக மதுக்கடைகளில்தான் கூட்டம் கிடக்கிறது.
அடிக்கடி பயணம் செய்யும் கேரளத்தில், கர்நாடகாவில், ஆந்திராவில், மகாராஷ்டிராவில், தெலங்கானாவில் குடி வெறியர்கள் இத்தனை கூட்டமாகக் கண்பட்டதில்லை. கோயில், தேவாலயம், பள்ளிவாசல், மருத்துவமனைகள், கல்விக்கூடங்களை அடுத்து அங்கெல்லாம் மதுச் சாலைகள் இல்லை.சென்ற கிறிஸ்து பிறப்பை ஒட்டி நான்கு நாட்கள் வாரணாசியில் இருந்தேன். அங்கே கஞ்சா இலையை சொடக்கு விடும்படி மை போல அரைத்து, பாலில் கலக்கி பச்சை நிறத்தில் லஸ்ஸி விற்கும் கடைகளில் வெளிப்படையாக விற்பனை செய்கிறார்கள்.
பாங் என்றொரு பானம். மராத்திய மாநிலத்தில் பெட்டிக் கடைகளில் பியர் விற்பதைப் போல. காசியில் சந்துகளுக்குள் கஞ்சா புகைக்கும் குடில்கள் உள்ளன. ஹூக்கா நடுவில் இருக்க, சுற்றி பத்துப் பேர் உட்கார்ந்திருக்கிறார்கள். அங்கே அலம்பலும் இல்லை; அலவலாதித்தனமும் இல்ைல. உத்தரப் பிரதேசத்தில், பீகாரில், உத்தராஞ்சலில், உத்தர்கண்டில், மத்தியப் பிரதேசத்தில் நம்மளவுக்குக் குடி வெறியர்கள் இல்லை.
இன்னொரு விடயம், நாடு முழுக்க கல்யாணக் கொண்டாட்டங்களின்போது மக்கள் குடிக்கிறார்கள், ஆடிப் பாடுகிறார்கள். ஆனால், சாவின்போது குடிப்பவன் தமிழனாகவே இருக்கிறான். பாடை கட்ட ஆரம்பிக்கும் முன்பே இங்கு மதுக்குப்பிகள் வந்து இறங்கி விடுகின்றன. பாடல் வரியொன்று சொல்கிறது, ‘தமிழன் என்றொரு இனம் உண்டு, தனியே அதற்கொரு குணம் உண்டு’ என. அந்தத் தனிக்குணம் என்ன என்பதைப் பல்கலைக்கழகங்கள் ஆய்வு செய்ய வேண்டும்.
மதுவுக்கு எதிரான அத்தனை பாடல்களையும் மேற்கோள் காட்டி, எம்மால் தனி நூல் எழுதவியலும்.
‘கள்ளுண்பார் நஞ்சுண்பாரே’ என்றும், ‘சான்றோரால் எண்ணப் படாதவர்’ என்றும், ‘கள்ளுண்டு கவறாடும் இறைமுறை பிழைத்த அரசு’ என்றும் ஏராளம் பாடல்கள் உண்டு. எவர் எப்படிச் சொன்னாலும் மதுப்பழக்கம் என்பது எஞ்ஞான்றும் அறம் சார்ந்த சமாச்சாரம் அல்ல. அது தனி மனித ஒழுக்கம் சார்ந்தது. எனது மூன்று கட்டுரைகளிலும் திரும்பத் திரும்ப அதைத்தான் பேசினேன்.
எல்லோரும் கேட்கிறார்கள், ‘‘ஐந்நூறு ரூபாய் சம்பளத்தில் முன்னூறு ரூபாய்க்குக் குடிக்கிறானே! பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் குடிக்கிறானே! குடித்து விட்டுச் சாக்கடையோரம் விழுந்து கிடக்கிறானே! குடிவெறியில் பாலியல் பலாத்காரம் செய்கிறானே! நோய் வந்து சாகிறானே! பெண்டாட்டி பிள்ளைகளைப் போட்டு அடிக்கிறானே! தாறுமாறாய் வாகனம் ஓட்டி சாலையில் விழுந்து சாகிறானே!’’
ஆம், ஆம், ஆம்! எனக்குத் திருப்பிக் கேட்கச் சில கேள்விகள் உண்டு! ‘‘ஏன் வங்காளத்தில், பஞ்சாபில் இத்தனை தீவிரத்துடன் மேற்சொன்ன காரியங்கள் நடக்கவில்லை? ஏன் பஜாரில், பேருந்து நிலையங்களை அடுத்து அங்கெல்லாம் மதுக்கடைகள் திறந்து வைக்கப்படுவதில்லை? மருத்துவமனை எமர்ஜென்சி வார்டு போல, ஏன் இரவு இரண்டு மணிக்கும் இங்கு மது வாங்கக் கிடைக்கிறது? எப்படி அரசு ஆணைகளின் படி காந்தி ஜெயந்தி, மகாவீர் ஜெயந்தி போன்ற நாட்களில் மதுக்கடைகள் சாத்தப்பட்டிருந்தாலும் அதிக விலையில் பக்கத்து கோழிக்கடையிலும் புரோட்டா கடையிலும் குப்பிகள் கிடைக்கின்றன? எந்தக் கட்சிக்காரன் ஓட்டுக் கேட்டாலும் காசுடனும் பிரியாணியுடனும் கால் குப்பியும் எதற்காக வழங்குகிறார்கள்?’’image2 (2)
எந்த வகை மதுவானாலும் தயாரிப்பு முறை என ஒன்றுண்டு. திராட்சையில் தயாரானால் ஒயின், பிராந்தி… கோதுமை, பார்லி போன்ற தானியங்களில் தயாரானால் விஸ்கி; அரிசியில் தயாரானால் சாக்கே; முந்திரிப்பழத்தில் அல்லது தேங்காய்த் தண்ணீரில் தயாரானால் ஃபென்னி என்பது போல்; இங்கே அனைத்து வகை மதுபானத்துக்கும் அடிப்படை, சர்க்கரைத் தொழிற்சாலைகளின் உப பிறப்பான மொலாசஸ் மூலப்பொருளாகக் கொண்ட ‘ஸ்பிரிட்’ என்கிறார்கள். பிராந்தி, விஸ்கி, ரம், வோட்கா, இவற்றுக்கான வாசம், நிறம், சுவை ஏற்றப்படுகிறதாம். யாவற்றிலும் ஸ்பிரிட்டின் அளவு 42.8 சதவிகிதம்தான்.
தமிழ்நாட்டின் தரமான மது ரசிகர்கள் கேரளத்திலும் கர்நாடகத்திலும் சென்று மது பாட்டில்கள் வாங்கி வருகிறார்கள். விலை சற்று அதிகம் என்றாலும் சரக்கு தரமானதாக இருக்குமாம். சிறுபாணாற்றுப் படை பாடிய புலவன், ‘பாம்பு வெகுண்டன்ன தேறல்’ என்கிறான். ‘நாகப்பாம்பின் சீற்றத்தை ஒத்த மது’ என்று பொருள்.
நம்மாளுக்கு தரமான சரக்கு போட்டால், ‘கடிக்கலை சார்’ என்கிறான். அவனுக்கு உள்ளூர் சரக்குதான் சரியாகக் கடிக்கிறது. இந்த மாயம் என்ன? இந்த மாயம் நிகழ்த்தும் மந்திரவாதிகள் யார்? இந்த மாயம் காட்டும் சேதம் யாது?
சரி, பூரண மதுவிலக்கு என்ற ராம ராஜ்ஜியம் வந்துவிடுவதாகவே இருக்கட்டும். பூரண மதுவிலக்குவந்த மறுநாள், டேங்கர் லாரிகளில் சாராயம் கொண்டு வந்து எல்லா பேருந்து நிலையங்களிலும் நிறுத்தப்பட்டு, அரசியல்வாதிகளின் நல்லாசியுடனும் காவல்துறையின் நல்லாதரவுடனும் விற்கமாட்டார்கள் என்பதற்கு உறுதியுண்டா? தமிழ்நாட்டின் எல்லைகளான நான்கு பிற மாநிலங்களின் மதுக்கடைகள் அமோக விற்பனை நடத்த மாட்டார்கள் என்பதற்கு உறுதியுண்டா? அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் குற்றப்பின்னணி உடைய வியாபாரிகளும் பெரும் முதலாளிகள் ஆவதற்கான சூத்திரமா அது?
மதுவிலக்குப் போராட்டத்தில் உயிர் நீத்த பெரியவரின் பிணத்தின் பக்கத்தில் போய் படுத்துக் கொள்ள இங்கு எத்தனை போட்டி? முடியுமானால் புத்தரின் பல், புத்தரின் எலும்பு, புத்தரின் தலைமுடி என்று பாதுகாத்து வைத்துக் கும்பிடுவதைப் போல, தியாகிகளின் சடலங்களைப் பங்கிட்டுக்கொள்வார் போலும்!
குஜராத் பூரண மதுவிலக்கு மாநிலம். அங்கு மதுவிலக்கு செயலாகவில்லையா என்று கேட்பீர்கள். பணியில் இருந்தபோதும் ஓய்வுபெற்ற பின்னரும் பலமுறை நான் குஜராத் போனவன். எங்கள் நிறுவனத்தின் மேலாளர்கள் மாநாடு ஆண்டுக்கு இருமுறை அகமதாபாத்தில்தான் நடக்கும். விலை இரண்டு மடங்கு என்பதைத் தவிர எந்தத் தட்டுப்பாடும் இல்லை, அன்றும் இன்றும்.
என்னுடைய பெரு வியப்பு, தமிழ்ச் சமூகம் மட்டும் ஏன் குடிப்பழக்கத்தைக் குடி நோயாக மாற்றிக்கொண்டது? விலையில்லா அத்தியாவசியப் பண்டங்களா, உடல் உழைப்புக்கான விலை இங்கு மிக அதிகம் என்பதாலா, அரசு அலுவலகங்களில் கை கடந்து புரளும் லஞ்சப் பணமா, அரசியல் தரகர்கள் தம் குடிபடைகளுக்குக் காட்டும் தனிப்பெருங் கருணையா? பணவெறி போல, கொலைவெறி போல, மதவெறி போல, பெண் வெறி போலத் தீவிரமாகிப் போன குடிவெறியை காய்தல் உவத்தல் இன்றி ஆராய வேண்டும். பழமொழியொன்று சொல்வார்கள் – ‘அறியாதவன் அறிஞ்சானாம்.ஆம்புளைப் புள்ள பெத்தானாம். தொப்புள் அறுப்பதுக்குப் பதிலா குறியை அறுத்தானாம்’ என்று. குடிப்பதுவும் இங்கு அப்படித்தான் ஆகிவிட்டது போலும்.
அரசாங்கமே தங்கள் சொந்தக் கடைகள் மூலம் தம் குடிமக்களுக்குப் போலிச் சரக்கு விற்கும் அறமற்ற செயல் செய்துவிட்டு, ‘குடி குடியைக் கெடுக்கும்’ என்றால் எப்படி? தமிழ்நாட்டில் மட்டும் ஏன் குடி, குடியைக் கெடுக்கிறது?
நம்மைச் சுற்றியுள்ள எந்த மாநிலத்திலும் கள்ளுக்குத் தடையில்லை. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் ெதன்னங் கள், பனங் கள், ஈச்சங் கள் என்று எதுவானாலும் தடை. உயர் நீதிமன்ற ஆணை சொல்கிறது, ‘மரத்துக்கு மரம் தரக் கட்டுப்பாடு சாத்தியமில்லை’ என்று. போலி மதுக்குப்பிகளுக்கு தரச் சான்றிதழ் வழங்குவதார்? குழந்தைகள், நோயாளிகள், முதியோர் பருகும் அத்தியாவசியப் பொருளான பாலின் தரக்கட்டுப்பாடு, பசு மாட்டுக்குப் பசு மாடு செய்கிறார்களா?image4 (1)
கள் என்பது மருந்து, கள் என்பது உணவு, கள் என்பது மிதமான போதை. அதிலும் பேட்டரிக் கட்டைபோடுகிறார்கள், யானை மயக்கி மாத்திரை போடுகிறார்கள், ஊமத்தங்காய் போடுகிறார்கள் எனில் நிர்வாகம் செய்ய வேண்டியது அரசின் பொறுப்பு. ெசாந்தத் தோட்டத்தில் கள் இறக்கி விற்கும் விவசாயி எவனும் அந்த மாபாதகங்களைச் செய்வானா? அவனுக்கு ஹெலிகாப்டரில் வந்து தனது மாளிகை மொட்டை மாடியில் இறங்கும் சாத்தியமுண்டா? அவன் கள் விற்க ‘சியர் கேர்ள்ஸ்’ வைத்துக்கொள்ள இயலுமா?
கள் எனில் கிராமத்துப் பொருளாதாரம் கிராமத்துக்கு உள்ளேயே கிடக்கும். எந்தப் பன்னாட்டுமுதலாளியின் பைக்குள்ளும் அது போகாது. நமது தமிழினத்தைக் காக்கத் தலையெடுத்த அரசுகள் யாவுமே அந்நிய மதுவுக்கு நட்பாகவும் கள்ளுக்குப் பகையாகவும் இருப்பதேன்?
மதுப்பழக்கத்தை முறையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்குப் பாடுபடும் கேரள அரசு, பன்னிரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் தயாராகும் அந்நிய மதுக்களின் பயன்பாட்டையே நிறுத்தி விட முடியும் என்று செயல்படும் கேரள அரசு, கள்ளுக்கு எந்தக் காலத்திலும் தடை இருக்காது என்கிறது.
பூரண மதுவிலக்கு என்று இங்கு அரசாணை போட்டு, கையெழுத்துப் போட அரை மணி நேரம் போதும். ஆனால் மது ஒழிந்துவிடுமா?
ராவணனுடைய கோட்டையைப் பார்த்து அனுமன் வியப்பதாகக் கம்பன் பாடல் – இதனுள் கறங்குகின்ற காற்றுப் புகாது. கதிரவனின் ஒளி புகாது. யமனின் ஆட்சி செல்லுபடியாகாது. உலகம் அழியும் காலத்து யாவும் அழிந்தாலும் அழியாத பொருள் ஒன்றுண்டு. அதன் பெயர் அறம். அந்த அறம் கூட நுழைய முடியாது. பிறகல்லவா வானவர் நுழைய முடியாது என்கிற பேச்சுக்கு வர வேண்டும்?image1 (2)
அவ்விதம் எங்கிருந்தும் எவ்வழியிலும் எல்லை தாண்டி மது புகுந்து விடாதபடிக்கு கோட்டை கட்டப் போகிறார்களா? தமிழ்நாட்டு ரேஷன் அரிசி கேரளத்துக்குக் கடத்தப்படுவதைத் தடுக்க முடியாதவர்கள், கேரளத்தின், ஆந்திரத்தின், கர்நாடகத்தின், பாண்டிச்சேரியின் மது தமிழ்நாட்டுக்கு வர முடியாதபடி
தடுத்துவிடுவார்களா?அரசியல்வாதிகளின் பாதுகாப்புடன் காவல்துறையின் ஆதரவுடன் கடத்தல் கோலாகலமாக நடைபெறாதா?
இந்தியா முழுக்க இந்தி மொழி பேசுகிறவர்கள் அனைவருக்குமாகத் தயாரிக்கப்பட்ட சினிமாக்கள்சென்ற ஆண்டில் 263. கன்னடத்தில் 143. வங்காளத்தில் 135. பஞ்சாபியில் 69, குஜராத்தியில் 53,மராத்தியில் 160. தமிழில் எத்தனை தெரியுமா, 202.தமிழ் மொழிக்கு மாத்திரம் இத்தனைசினிமாக்களுக்கான தேவை என்னவென்று நாம் ஆராயப் புகுந்தால், அந்த ஆய்வு ‘தமிழன் ஏன் இப்படித் தாப்புத் தெரியாமல் குடிக்கிறான்’ என்ற கேள்விக்கும் விடை தேடித் தரக்கூடும்!
பன்றிக் காய்ச்சல் வந்தது என்று பன்றிகளை அடித்துக் கொல்வதற்கு முன்னால், பறவைக் காய்ச்சல் வந்தது என்று கோழிகளைக் கொளுத்துவதற்கு முன்னால், நீல நாக்கு நோய் என்று கன்றுகாலிகளைக் கொல்வதற்கு முன்னால், அந்தந்த நோய்களின் மூல காரணங்களையும் ஆராய வேண்டாமா? எய்ட்ஸ் வருகிறது என்று உடலுறவைத் தடை செய்வார்களா? விபத்தால் மரணம் அதிகம் என்று இருசக்கர வாகனங்களைத் தடை செய்வார்களா?
நமது பண்பாட்டு நீர்த்தேக்கம் கசிகிறது என்றால், பெருத்த அபாயம் காத்திருக்கிறது என்றால், அணையின் உட்பக்கம் ஓட்டையை அல்லது விரிசலை அடைக்க முயல வேண்டுமே அன்றி, அணையின் வெளிப்பக்கம் சிமெண்ட் கலவைச் சாந்து பூசிப் பயன் என் காண்?மதுவிலக்குக்கு ஆதரவாக உரத்து மொழியும் நமது அரசியல்வாதிகள் இதனை அறிய மாட்டார்களா? அனைவருக்கும் தெரியும். ஆனால் காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்கிறார்கள்!
கற்போம்…..
ஓவியம்: மருது
நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று (1)
நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று (2)
நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று (3)
நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று (4)
குடியும் குடி சார்ந்த எண்ணங்களும் விழுமியங்களும்(1)
குடியும் குடி சார்ந்த எண்ணங்களும் விழுமியங்களும்(2)

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், குங்குமம் தொடர் கட்டுரைகள், கைம்மண் அளவு and tagged , , , , , . Bookmark the permalink.

7 Responses to மது – கைம்மண் அளவு 35

 1. Harikarthikeyan Ramasamy சொல்கிறார்:

  அறம் சார்ந்த சமாச்சாரம் அல்ல. அது தனி மனித ஒழுக்கம் சார்ந்தது. உள்ளது உள்ளபடி சொல்லியிருக்கிறீர்கள், நன்றி

 2. ராம்ஐி சொல்கிறார்:

  மிக நல்ல பதிவு.

 3. valava. duraiyan சொல்கிறார்:

  மதுவைப் பற்றி சமீப காலத்தில் இவ்வளவு தெளிவான கருத்துகளை யாரும் தெரிவிக்கவில்லை. ஆசிரியர்கள் மாணவர்கள் அரசியல்வாதிகள் தொழிலதிபர்கள் குடிப்பவர்கள் மற்றும் குடிக்காதவர்கள் என எல்லாரும் படிக்க வேண்டிய கட்டுரை இது. அனைவரும் குடிக்கும் ஓர் அரங்கில் நாஞ்சிலுடன் இருந்திருக்கிறேன். ஒரு கட்டத்தில் இதுதான் எல்லை. என்று அவர் நிறுத்தியது எனக்கு மாபெரும் வியப்பு. அப்படிப்பட்டவரால்தான் இது போன்று காய்தல் உவத்தல் அகற்றி எழுத இயலும்

 4. சகபயணி சொல்கிறார்:

  மதுவிற்கு எதிராக நீங்கள் எழுதியிருக்கப் போவதில்லை என்ற முன்ணுனர்வுடனேயே இப்பதிவை படிக்கத் தொடங்கினேன். இருந்தாலும், குமட்டிக் காய் கசக்கும் எனத் தெரிந்தே உண்டிருந்தாலும், உண்டபின் முகம் சுளிப்பதைத் தவிர்க்கவியலாததைப் போல், படித்து முடித்தப் பின் மனம் சுளிவதையும் தவிர்க்க முடியவில்லை. அண்ட இயக்கத்தின் அடி நாதமான பாலுணர்வின் அடிப்படைகளை இன்றைய சமுதாய நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள் நிலைகுலையாது காக்கும் பொருட்டு கல்வியாக்கும் கோரிக்கையை, மதுக்கல்வியின் தேவையுடன் ஒப்பிட்டிருப்பது அபத்தம். தங்கள் மகனுடன் சேர்த்து மகளுக்குமான கல்வியாக அது அமைக்கப்பட வேண்டுமா என்பதையும் தெளிவுபடுத்திவிடுங்கள். இருப்பினும் என்ன குடிக்க வேண்டும், எப்போது குடிக்க வேண்டும், எவ்வளவு குடிக்க வேண்டும், எப்படிக் குடிக்க வேண்டும், யாருடன் குடிக்க வேண்டும் எனும் கேள்விகளுக்கான விடையறிய ஆர்வம் எழத்தான் செய்கிறது.

  நமக்கு ஊற்றிக்கொடுத்து, கர்ணம் போட்டு ஓட்டுப்போடும் குரங்குகளாக, நம்மை ஆட்டி வைக்க, இவர்களின் கைகளில் கோலாக இருப்பது இம்மதுவல்லவா? நாட்டின் பிற மாநிலங்களில் மது வெறியர்களின் எண்ணிக்கை மட்டுப்பட்டிருப்பதற்கு, அவர்கள் யாரும் இது வரை இத்தகைய கூட்டுக் கொலை சோதனைக்கு அதிகார வர்க்கத்தால் ஆட்படுத்தப்படவில்லை எனும் தங்கள் கருத்தையே நானும் வலியுறுத்துகிறேன். எந்த ஒரு சமுதாயமும் இத்தகைய பரிசோதனைகளில் மீட்சிகொள்ளும் வாய்ப்பில்லை என்பதே நிதர்சனம். தமிழன் அதற்கு விதிவிலக்காகாது போனான். வேலியே பயிரை மேய்ந்த கதையாகிவிட்டது தமிழகத்தின் இன்றைய நிலை. திரைப்படத்தின் மாய வலையில் மயங்கி நல்ல தலைவர்களைப் புறக்கணித்து சில சுயநலப் பித்தர்களின் பின் சென்ற, பொறுப்பில்லா விசிலடிச்சான் குஞ்சுகளாக செயல்பட்ட உங்கள் தலைமுரையினரையேத் தூற்றத் தோன்றுகிறது. நாங்களோ மூத்தோரின் பிழை சுமக்கும் பாபக் கன்றுகளாய்ப் பிறந்து மாய்கிறோம்.

  பூரண மதுவிலக்கு என்பது எக்காலத்திலும் இருந்ததும் இல்லை, இருக்கப்போவதும் இல்லை எனும் தங்களின் கருத்தையும் நான் மனமார ஆமோதிக்கிறேன். அதுபோலவே, பொய்கள் அற்ற, கொலைகள் அற்ற, திருட்டுகள் அற்ற, பெண் வன்புணர்வு கொள்ளாத உத்தம சமூகமும் என்றும் சாத்தியப்படாததே. ஆனால் அதற்காக இச்சமூகம் ஒருபோதும் அவற்றை ஒழுங்கு முறைக் கல்வி எனும் பெயரில் நெறிமுறைப் படுத்த முற்பட்டதில்லை. அவை சாத்தியமில்லாதவை என்பது தெரிந்தே காலம் காலமாக அது தன் பல முகம் கொண்டு மாறாது எதிர்த்து ஒடுக்கி வந்துள்ளது. டேங்கர் லாரிகள் வந்து ஊற்றும், காவல்துறையே கலந்து கொடுக்கும், அண்டை மாநிலங்கள் லாபத்தை அள்ளிச்செல்லும் என எத்தனைக் கேள்விகளை நீங்கள் அடுக்கினாலும், அவற்றிற்கு பதில்களேதும் எம்மிடம் இல்லை எனினும் மதுவிலக்கிற்கான இச்சமூகத்தின் குரலை மாற்ற முற்படாதீர்கள். இத்தகைய நெறிகளை செயலில் இல்லா வெற்று வார்த்தைகளாகவாவது எங்களை அடுத்தத் தலைமுறையினருக்கு எடுத்துச்செல்ல அனுமதியுங்கள்.

  இரண்டு மடங்கு விலை அதிகமென்பது உங்களுக்கு வேண்டுமானால் மதுத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தாது இருந்திருக்கலாம். ஆனால் பெரும்பாலான இந்தியர்களின் நிலை அதுவல்லவே.

  மறைந்து நின்று அம்பெய்தி வாலியைக் கொன்ற ராமனுக்கு கம்பன் எவ்வளவுதான் வாரிசுருட்டிக் கொண்டுவந்து வக்காளத்து வாங்கி இருந்தாலும், ராமனின் மனதில் ஏதோ ஒரு மூலையில் சுயநலம் எனும் அந்த முள் தைக்கத்தானே செய்திருக்கும். இப்பதிவில் தரகு, இரவல் ஆகியப் பதிவுகளில் காணப்பட்ட தெளிவையும், உறுதியையும் மறைத்து ஒரு மெல்லிய சலனம் மேலிட்டுச் செல்வதைப் பார்க்கையில், தங்களையும் அந்த சுயநல முள் தைத்திருக்க வேண்டுமென்றே நினைக்கத் தோன்றுகிறது.

  என் கருத்துகளில், வார்த்தைகளில், புரிதலில் தவறேதும் இருந்திருந்தால் இச்சிறியாளை மன்னிக்கவும். மனித மனங்களின் ஆயிரமாயிரம் ஊசிகளில், ஒன்றை மட்டும் எடுத்து உற்றுப்பார்த்து வைக்க முயற்சித்தேன். தவறுதலாக காயம் ஏற்பட்டிருந்தால் அதற்கு என் அனுபவக் குறைவே காரணம். தங்களின் மகள் நிலை அமர்த்தி பொருத்தருள வேண்டும்.

  மேலும் ஒரு சந்தேகத்தை நிவர்த்திக்குமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன். இங்கு என் கருத்திற்கு வலு சேர்க்க வள்ளுவனையும் அழைத்து வரலாம் என முயற்சித்தேன். கள்ளுண்ணாமை அதிகாரம் அறத்துப்பாலில் சேர்க்கப்பட்டிருக்கும் எனும் நினைப்பில். ஏனோ தெரியவில்லை, எம்பூட்டன் அதை பொருட்பாலில் அதுவும் நட்பியலின் கீழ் தொகுத்துள்ளான். நட்பிற்கும், கள்ளுண்ணாமைக்கும் என்ன தொடர்பென்று புரிகிலேன். ஒருவேளை இல்லறவியலில் வகைப் படுத்தி இருந்தால் கூட ஏதோ தொடர்பைக் கண்டிருப்பேன். விளக்குவீர்களா?

 5. kannan N சொல்கிறார்:

  ய்யா அவர்களுக்கு வணக்கம். உண்ணற்க கள்ளை படித்தேன் ஆகச்சிறந்த கட்டுரை. அதை விஞ்சி நிற்கும் ” மது” தமிழ் மக்களின் உள்ளுணர்வுகளை இத்தனை நுட்பமாய் யாரும் ஆயிந்தது இல்லை என அறிகிறேன். தமிழகத்தில் மட்டும் கோவில், பேருந்து நிலைகள், முக்கிய ரஸ்தாக்கள், தேவாலயங்கள் மற்றும் மக்கள் அதிகம் புழங்கும் இடங்களில் மிகுந்திருக்கும் மதுச்சாலைகள் அவற்றினை உங்கள் நடை பயணத்தின் மூலமாய் கண்டு சாமானியன் படும் அவதிகளையும் நறுக்கு தெரித்தார் போல் தெரிவித்த உங்களுக்கு நன்றி.
  எஸ் ஐ சுல்தான் அண்ணன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் ஓவியம் “மருது” அய்யா அவர்களல்லவா? மாருதி என்று அச்சிடப்பட்டுள்ளதே . கவனிக்கவும்.
  நன்றி

 6. Naga Rajan சொல்கிறார்:

  நன்றி! அருமைI

 7. Senthilkumar.K சொல்கிறார்:

  நன்று

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s