நாஞ்சில் நாடனின் ஆரோக்கிய ஸ்டேட்மெண்ட்

WRAPPER LAYOUT.indd
நாஞ்சில் நாடனின் ஆரோக்கிய ஸ்டேட்மெண்ட்
 நாஞ்சில் நாடன் தமிழ் இலக்கியத்தின் கும்பமுனி. சிறுமை கண்டு சீறும் எழுத்துக்காரர். நாஞ்சில் நாடனுடன் பேசுவது நிகண்டுகள் நிறைந்த நூலகத்திற்குள் இருப்பதைப் போன்ற பேரனுபவம். அவருடைய உடல் உறுதியும் குரல் வலிமையுமே உரத்துச் சொல்லுகின்றன அவரின் நலவாழ்வை. நாஞ்சில் தமிழ் மணக்க தன் ஆரோக்கிய ரகசியங்களைப் பகிர்ந்துகொள்கிறார் நாஞ்சில் நாடன்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பழையாற்றங்கரைல இருக்கிற வீரநாராயணமங்கலம்கிற சின்ன கிராமம்தான் நான் பிறந்து வளர்ந்த பூமி. சின்ன வயசுல தேர்ந்தெடுத்துச் சாப்பிடற வாழ்க்கை அமையல எனக்கு. அதனால கிடைக்கிறப்ப குவிச்சுக் கொட்டிக்கிறது தான் அப்போதய வழக்கமா இருந்துச்சு.
அன்னிக்கு நாங்க சாப்பிட்ட உணவில் பூச்சிக்கொல்லி மருந்துகளோ செயற்கை உரங்களோ கிடையாது. நம்முடைய நாட்டுப்பழங்கள்தான் சாப்பிட்டோம். ஆப்பிள், ஆரஞ்சு மாதிரி அயலகப் பழங்களை, நாள் கணக்குல வெச்சு, சாப்பிடற பழக்கம் எல்லாம் அப்ப கிடையாது. தண்ணீரை வடிகட்டுதலும், கொதிக்க வைத்தலும் இல்லை. ஆற்றின் படுகையில் இருக்கும் மணலில் வளர்ந்திருக்கிற செடிகள், புல் பூண்டுகள்தாம், நீரை சுத்தப்படுத்தும் வேலையைச் செய்யும்.
நாங்க சுவாசிச்ச காத்துல புகை கிடையாது. மாட்டு உரம் போடப்பட்ட இயற்கையான விவசாயமுறைல விளைஞ்ச அரிசியையும், எங்க தோட்டத்தில விளையிற வெண்டைக்காய், கத்தரிக்காய், கொத்தவரங்காய், புடலங்காய், அவரைக்காய், பீர்க்கங்காய், பப்பாளி மாதிரியான நாட்டுக்் காய்கறிகளையும்தான் சாப்பிட்டோம். பெரிய வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு இதெல்லாம் அந்தக் காலத்தில் இல்லை. எங்க சாம்பாரில் தக்காளி வந்தே 50 வருசம்தான் இருக்கும். உள்ளூரிலேயே கிடைக்கும் புளியையும், பங்குனி சித்திரை மாதங்களில் தயாரிக்கும் வத்தலையும் வருசம் முழுக்க வச்சு சாப்பிடுவோம்.
தினமும் மதியம் சுடுசோறு, இரவு ஆறின சோறு, காலைல பழையது… இதுதான் எங்கள் அன்றாட உணவு. இட்லி, தோசை எல்லாம் விசேஷ நாட்களில்தான்! புழுங்கல் அரிசி சுடுகஞ்சி, முழு உளுந்தோடு வெந்தயம், தட்டின சுக்கு, பூண்டு உப்பு போட்டு, கொதிக்க வைத்த உளுத்தங்கஞ்சி எல்லாம் வயிறு நிறைக்கும் நல்ல உணவு. பயறு, சுண்டல், அவல் இதெல்லாம்தான் திண்பண்டங்கள். தாளிக்க மட்டும்தான் எண்ணெயைப் பயன்படுத்துவோம்.
என் பால்யத்துல இன்னிக்கு மாதிரி இவ்வளோ ஸ்வீட்ஸ் இல்லை. அப்பம், பாயசம், முந்திரிப்பருப்பு, கருப்பட்டி, தேங்காய், பச்சரிசி, எள்ளு இதெல்லாம்தான் நாங்க சாப்பிட்ட இனிப்புகள். கருப்பட்டி காப்பிதான் குடிப்போம். சுக்கு, கொத்தமல்லி, சீரகம், கருப்பட்டி தட்டிப்போட்டு பால் ஊற்றினா அதுதான் காப்பி! அதுல காப்பித்தூளே இருக்காது.
பால்யத்தில் கிடைத்த விஷமில்லாத காற்று, விஷமில்லாத உணவு, விஷமில்லாத தண்ணீர்… இவைதான் என்னுடைய 67 வயதுலயும் என்னை ஃபிட்டா வச்சிருக்கும் விஷயங்கள். ஊர் ஊரா அலையிற வேலை, ஏதேதோ சாப்பாடுன்னு வாழ்ந்ததில் 25 வருஷம் முன்னாடி எனக்கும் சுகர் வந்திடுச்சி. ஆஞ்சியோபிளாஸ்டி செய்து ஸ்டென்ட் வச்சிருக்காங்க. ஆனா இப்பவும், ஐ பீல் ஐ’ம் குட். அதுக்குக் காரணம் எனக்குக் கிடைச்ச அற்புதமான, ஆரோக்கியமான இளமைக்காலம்தான்.
சின்ன வயசுல நான் ஒல்லியா இருப்பேன். அதனால விளையாடறதுக்கு சேர்த்துக்கமாட்டாங்க. ஆனா படிக்கும் பசங்க யார் செஞ்ச வேலையவிடவும் ரெண்டு மடங்கு அதிகமாக வேலை பார்ப்பேன். ஏழு பிள்ளைகளில் நான்தான் மூத்தவன். வயல் வேலை பார்ப்பேன், சுள்ளி பொறுக்கி தூக்கிவருவேன். அப்பாவுக்கு கஞ்சி கொண்டு போனா, அவர் சாப்பிடும்போது கலப்பை பிடிச்சு உழுவேன். சின்ன வயசுல நான் செய்த அந்தக் கடுமையான உடல் உழைப்புதான் இத்தனை வயசு வரைக்கும் என்னை ஓட வைக்குது.
நீச்சல் அடிக்கறது ரொம்ப இஷ்டமான விஷயம். அதை விளையாட்டு, உடற்பயிற்சின்னு எல்லாம்  நினைச்சு நாங்க செய்யலை. அந்த அற்புதமான விஷயங்கள் என்னுடைய குழந்தைகளுக்குக் கிடைக்கலைன்னாலும்கூட, அவங்க எப்போதும் ஆரோக்கியமான உணவுகள்தான் சாப்பிடுறாங்களான்னு கவனிச்சிட்டே  இருப்பேன். அவங்க  உணவில் கண்டிப்பா மீன் இருக்கும்படி பார்த்துப்பேன்.  நாஞ்சில் நாட்டில் கடல் மீனுக்குப் பஞ்சமில்லை. பெரும்பாலும் என் உணவில் மீன் இருக்கும்.
என்னோட ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள் எல்லாத்தையும் என் மகளுக்கும், மகனுக்கும் சொல்லிக் கொடுத்திருக்கிறேன். அன்றாடம் காலையில் எழுந்ததும் ஒரு மணிநேரம் நடக்கிறேன். நான் இருசக்கர வாகனம் ஓட்டுறதில்ல. எங்க போகவும் நடைதான். தினமும் மாலை என் பேரனைக் கூட்டிட்டு ஒரு வாக் போவேன். அவனுக்கு அப்படியே மயில்களை எல்லாம் காட்டிட்டு, கதையடிச்சிட்டே வருவோம்.
பொதுவாழ்வில் இருக்கிறதால நாலுவகை விமர்சனங்களையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கு. எல்லாவற்றையுமே ரொம்ப எமோஷனலா எடுத்திட்டம்னா ரொம்பக் கஷ்டம்.  பதற்றப்பட்டு இங்கு என்ன ஆகப்போகுது, உடம்பையும் மனசையும் கெடுத்துகிறதைத் தவிர? அதனால் எந்த பிரச்சனையாக இருந்தாலும், பதற்றப்படாம இருந்தாலே அதை பாதி சமாளிச்ச மாதிரிதான்.
ஒரு டயாபடீஸ்காரனா நான் சாப்பிடற உணவுகள் பற்றி, அதில் உள்ள சத்துகள், கலோரிகள் பற்றி ரொம்ப தெளிவாவும் கறாராவும் இருக்கிறேன். ஐயோ, இதை சாப்பிட்டா கலோரி ஏறிடுமேன்னு முற்றா நிராகரிக்க மாட்டேன். சாப்பிட்ட கலோரிய எரிக்கிறது எப்படின்னு யோசிப்பேன். உதாரணத்துக்கு ஒரு இட்லில 80 கலோரியும் ஒரு வாழைப்பழத்துல 100 கலோரியும் இருக்குன்னு வச்சுக்குவோம். வாழைப்பழம் சாப்பிட ஆசை வந்தா, நான் இட்லி சாப்பிடறதைத் தவிர்த்திட்டு, வாழைப்பழத்தை மட்டும் சாப்பிடுவேன். இன்சுலின் வரைக்கும் போகாம என் உணவு மற்றும் வாழ்க்கை முறை மூலமே, சர்க்கரையை எதிர்கொண்டு மகிழ்ச்சியா இருக்கேன். அடிப்படையில் மனசு மகிழ்ச்சியா இல்லாம என்ன மாத்திரை மருந்து எடுத்துட்டாலும் பயன் இல்லை’ சந்தோஷமாகச் சொல்கிறார் நாஞ்சில் நாடன்.

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி, விகடன் கதைகள் and tagged , , , , , , . Bookmark the permalink.

2 Responses to நாஞ்சில் நாடனின் ஆரோக்கிய ஸ்டேட்மெண்ட்

  1. yarlpavanan சொல்கிறார்:

    எல்லோருக்கும் இந்திய குடியரசு நாள் வாழ்த்துகள்!

  2. K.Sivaramakrishnan சொல்கிறார்:

    Olden days are Golden days.. Thanks for sharing Nanjil sir

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s