
ஊடகத்தார் படும் இன்னல்
உரைக்க ஒண்ணாது
அல்லில்லை பகலில்லை அலுப்பொன்றில்லை
பெற்றோர் மனையாள் தம்மக்கள்
தறுகண் நினைப்பில்லை
அவனன்றி ஓரணுவும் அசையாது
என்பது போல் எவ்விடத்தும்
நீக்கமற நிறைந்திருக்கும் பணி
கொங்கைஶ்ரீ உண்டது செரிக்காமல்
மூன்றாம் முறை வெளிக்குப் போனால்
அங்கே இருக்கணும்!
தலைவனின் வைப்பாட்டி மகளின்
மாமியார் ஓட்டுநர் நாக்கில் புண்ணாம்
அங்கே நிற்கணும்!
மந்திரி கொழுந்தியாள் நாத்தனார்
அம்பலம் சென்று பொங்கல் வைத்தால்
அங்கே கிடக்கணும்!
ஶ்ரீகோதண்டம் மைத்துனர் விரல் நகம்
பெயர்ந்து வைத்தியம் பார்க்க
அமெரிக்க நாட்டுக்கு விமானம் ஏறினால்
அங்கே இருக்கணும்!
மாமன்ற உறுப்பினர் பேரன்
பதின் பருவத்துப் பாலகன்
நெடுஞ்சாலையில் செலுத்திய
மூன்று கோடி பெறுமதி வாகனம்
புரண்டு மறிந்து
கழுத்தும் இடுப்பும் கனமாய் முறிந்து
செத்த சவமாய்ச் சிதறிக் கிடந்தால்
அங்கே நிற்கணும்!
நேதா வீட்டு வளர்ப்புப் பூனை
வெருகுடன் ஓடிக் காமம் துய்த்தால்
அங்கே கிடக்கணும்!
இயக்குநர் தோட்டத்துப் பாற்பசு
சினைக்குப் பிடித்தால்,
நகரின் சிறந்த நகைக்கடை
திறந்து காட்ட புட்டஶ்ரீ வந்தால்,
மாமன்ற உறுப்பினர் தொந்தி இளைக்க
கரும்பூனைக் காப்புடன் பூங்கா நடந்தால்,
வட்டச் செயலர் சாலையோரம்
சாய் பருகினால்,
தொண்டனின் மகள் சமைந்த சடங்கில்
வாரியத் தலைவர் வாழ்த்தப் போனால்,
ஊழல் பெருநதி ஓடிக் களைத்து
உவரியில் கரைந்தால்,
அங்கும் இருக்கணும், எங்கும் இருக்கணும்!
மக்களாட்சியின் நான்காம் தூண் என
நல்லோர் நாவால் புகழப் பெற்றவர்
நாயாய்ப் பேயாய்ப் படும் பெரும்பாடு
தாளம் படாது தறியும் படாது!