துள்ளு தமிழ் ஓசையுடன் தூய கவி நாட்டும் செல்ல கணபதி’ என்கிறார் கவியரசு கண்ணதாசன். ‘ஆண்டாள் தமிழை ஆண்டாள்’ என்றவரும் அவரே. கவியரசு கண்ணதாசன் பாராட்டிய கவிஞர் செல்ல கணபதி. அவரை அறிந்தவர்க்கு அவர் வெல்ல கணபதி. மிக நல்ல கணபதி. அவர் குழந்தைக் கவிஞர், ஆனால் அவரே ஒரு குழந்தை. கள்ளம், கபடு, பொய், சூது, புரட்டு, வஞ்சகம் யாவும் பிரித்தெடுக்கப்பட்ட பால் முகம் அவருடையது. கொழுப்பு நீக்கப்பட்ட பால் என்பது போல. எதிர்மறையாக வாழ்த்தக்கூடாது என்பார்கள். மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளையே, ‘ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதையா உன் சீர் இளமைத் திறன் என்றுதானே சமரசம் செய்யப்படாத தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினார்!
மும்பையில் இருந்து கோவைக்கு வந்த 1989 முதலே செல்ல கணபதி அண்ணனை அறிவேன். என்னைவிட ஆறேழு ஆண்டாவது மூத்தவராக இருப்பார். நான் ஒரு ‘கடுவன் பூனை’ என்பது நவீன இலக்கிய உலகில் பரவலாக அறியப்படுபவன். எனில் அண்ணன் ‘புனிற்றா’ . இதை வாசிக்கிற உங்களில் பலருக்கும் ‘புனிற்றா’ என்றால் தெரிந்திராது. மாணிக்கவாசகர் பயன்படுத்தும் சொல்.
‘கற்றா’ என்றால் ஒருவேளை கேள்விப்பட்டிருக்கலாம். ‘கற்றாவின் மனம்போலக் கசிந்து உருகவேண்டுவனே!’ என்ற திருவாசக வரி செவிப்பட்டிருக்கலாம். ஆ எனில் பசு, கற்றா எனில் கன்று+ஆ. கன்றை உடைய பசு. புனிற்றா எனில் மிகச்சமீபத்தில் கன்றை ஈன்ற பசு என்று பொருள். மாணிக்கவாசகரே, ‘நுந்து கன்று’ என்ற சொல்லும் பயன்படுத்துகிறார். தேடி, பொருள் உணர்ந்து, வாசியுங்கள். எனில், புனிற்றா என்பது, புதியதாக மண்ணில் வந்து பிறந்த, இன்னும் சரியாக நடை பழகாத, முட்டி முட்டிப் பால் குடிக்கவே கற்றுக்கொள்ளாத, கன்றை நக்கிக் கொடுக்கும் தாய்ப்பசு. அதுபோன்றவர் குழந்தைக் கவிஞர் செல்ல கணபதி அண்ணன் என்று சொல்ல வந்தேன்.
தமிழைத் தோய்ந்து படிப்பவர், செவிமடுப்பவர், உடனே சிலாகித்தும் சொல்பவர். எப்போதும் அண்ணன் என்று அவரைக் கூச்சம் இன்றி அழைப்பேன். கோயம்புத்தூர், இரத்தின சபாபதிபுரத்தில் இருக்கும் அவரது ‘செல்லப்பா’ இல்லத்துக்குப் பலமுறை போயிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் உணவு கொண்டிருக்கிறேன். அது உணவல்ல விருந்து.
எங்கோ ஒருமுறை வாசித்த நினைவு. கவியரசர் கண்ணதாசன் வரிகள், ‘அப்பப்பா, கோவைக்கு வரக்கூடாது, அவர் சாப்பாட்டினாலேயே சாகடிப்பார்’ என்று. இதுவும் எதிர்மறை வாழ்த்துத்தான். கண்ணதாசன் சொற்களைத் திருத்தி நான் சொல்லலாம், ‘நகரத்தார் இல்லத்துள் போகவேண்டும், சாப்பிட்டு நீண்டநாள் வாழ வேண்டும்’ என்று.
‘பழனியப்பா பிரதர்ஸ்’ என்பது பாரம்பரியம் மிக்க பதிப்பகம். அவர்கள் பாடப்புத்தகங்களும் ஐயம்பெருமாள் கோனார் கைடும் மாத்திரம் பதிப்பிக்கவில்லை. அவர்கள் வெளியிட்ட நல்ல நூல்களைப் பட்டியலிட எனக்கு நான்கு பக்கங்கள் தேவைப்படும். என்றாலும் பதச்சோறாக ஒன்றைச் சொல்லிச் செல்வேன். அது அறிஞர் என். வரதராஜுலு நாயுடு என்ற N.V. நாயுடு எழுதிய ‘காப்பிய இமையம்!’ கம்பனில் நாட்டமுடையவர் வாசிக்கப் பரிந்துரைக்கிறேன். மேடைப் பேச்சுக்களுக்கு அது பயன்படுமா என்பதறியேன்.
குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா நினைவு அறக்கட்டளை ஒன்று நிறுவி, ஆண்டுதோறும் குழந்தை இலக்கியம் படைப்பவர்களுக்குப் பரிசளித்துக் கொண்டாடுகிறவர். அண்மையில், சாகித்ய அகாதமி, குழந்தை இலக்கியத்துக்கான விருதை செல்வகணபதி அண்ணனுக்கு வழங்கி மகிழ்ந்தார்கள்.
ஒரு தனிப்பட்ட உரையாடலின்போது, ‘வட்டி ஒன்றுதான் உறக்கத்திலும் நடக்கும்’ என்று குறிப்பிட்டார் கவிஞர் செல்ல கணபதி அண்ணன். அவரைக் கவிஞர் என்று அடைமொழி சேர்த்து உரைப்பதே வசதிக் குறைவாக இருக்கிறது எனக்கு. பிறந்தது தன வணிகர் குலம் என்றாலும் அவர் காசு சேர்ப்பவர் அல்ல. வரையறையற்று வழங்குகிறவர். அவரது தாளாண்மையில் நானும் நனைந்ததுண்டு.
என் பணி இந்த சந்தர்ப்பத்தில், அவரது ‘கவிதைச் சிறகுகள்’ எனும் கவிதை நூலுக்கு முன்னுரைப்பது. மூலவர் தரிசனம் மறந்து, நான் பிரகாரத்தில் வலம் திரிகிறேன்.
இயற்கை, உறவுகள், நாடும் மொழியும், காதலும் பெண்மையும், சமூகம், கவியரங்கம், பக்தி, மனக்கோயில் வாழும் உமையே, என்று எட்டுப் பகுதிகள் கொண்டது இந்தத் தொகை நூல்.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின், ‘அழகம்மை ஆசிரிய விருத்தம்’. கவிஞர் கண்ணதாசனின் ‘மதுரை மீனாட்சி உமையே’ வரிசையில் வைத்து எண்ணத்தக்கது கவிஞரின் ‘மனக்கோயில் வாழும் உமையே!’ ஒருவேளை கவியரசரிடம் இருந்து பெற்ற உத்வேகமாகக்கூட இருக்கலாம். அப்படித்தான் இலக்கியம் சம்பவிக்கும். வான்மீகி இன்றேல் கம்பன் எங்கே?
கவிஞரின் தமிழ்ப் புலமையும், செய்யுள் யாக்கும் தேர்ச்சியும், துள்ளிவரும் சந்தத் தமிழும், தமிழ்ப் பற்றும் இறைப்பற்றும், அவருக்கு இதனை சாத்தியமாக்கி உள்ளது.
சந்தத்தோடு சொல்லிப் பாருங்கள்:
*குழைகின்ற கவிதையில்
நெளிகின்ற உணர்வினால்
குருநாதன் புகழ்பாடுவேன்
கோபுரத் தமிழ்வளரும்
காவியப் புலவர் மனக்
கோயிலில் வாழும் உமையே!’
என்று.
கவிஞர் செல்ல கணபதியின் கவிமனம் அர்த்தமாகும். ‘பேச்சில் ஒரு பாச்சுவையைப் பின்னி வைக்க வேண்டும்’ என்று கவி எழுத வல்லவருக்கு, கயற்கண்ணியை பாடக் கற்பனை இல்லாது போமோ?
கவிதையைப் பெண்ணாக உருவகித்துப் பாடும்போது,
‘மீனசையும் கடல் நீரில் மின்னித் தோன்றி
மேவி வரும் காதலினை வளர்ப்பாள்; மின்னும்
வானசைந்தால் மழைவடிவில் ஏற்றம் கொண்டு
வாய்ந்த உயர் வாழ்வளித்துக் காப்பாள்’
என்று நடப்பது அவர் கவிதை.
பிறந்த மண்ணைப் போற்றும் எண்ணற்ற கவி மின்னல்கள் உண்டு .
‘கம்பனுக்கு கழகத்தைத் தோற்று வித்த
காரைக்குடி காசியைப் போல் புனித பூமி’
என்று போற்றுகிறார்.
வம்பர்களுக்கான கழகங்கள் போன்றதன்று காரைக்குடி கம்பன் கழகம் என்பதை நாடறியும்.
பக்தி என்பதோ, பக்தி இயக்கம் என்பதோமக்களைச் செம்மைப் படுத்துவது. அது சக மானுடரைச் சிறுமைப்படுத்தாது. கவிஞர் செல்ல கணபதி பாரம்பரியமான பக்தி உணர்வு மீக்கொண்டவர். கோதை மீனாட்சியின் அருள் மிகக் கொண்டவர்’.
‘பகலவன் வலம் வரப் பனி விலகுதல் போல், படும் துயர் மறந்திடத் தரிசனம்
பெறுபவர். ‘விழியிருந்தும் குருடனாக உலவுகின்ற மனிதரின் வேறுபடுபவர். மேற்கோள் காட்டப்பட்டவை யாவும் கவிஞரின் பாடல் வரிகளே!
பண்பட்ட மனதில்தான் பக்தியும் தழைத்தோங்கி வளரும். ‘ஒருவர் படுப்பதில் நால்வர் அமரலாம்’ என்ற மனவிசாலம் அவரிடம் இருக்கிறது. சமூகக் கரிசனமும், தாய்த்தமிழ் செம்மாப்பும், தொல்மரபும், நற்பண்பும் விரவிய கவிதைகள் இவை.
வாழ்த்துவதற்கு வயது வேண்டாம். மனம் போதும்! பல்லாண்டு வாழ்ந்து, கவிஞர் செல்ல கணபதி பொருட் கொடையும் அருட்கொடையும் தமிழ்க்கொடையும் நல்க வாழ்த்துவோம்.
அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.
’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;
ஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி!’
எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.