இது கண்களின் பார்வையல்ல

கவிஞர் ஏர்வாடி சிந்தா அவர்களின் இது கண்களின் பார்வையல்ல என்ற கவிதை தொகுப்பிற்கு மதிப்புக்குரிய எழுத்தாளர் நாஞ்சில் நாடன் எழுதிய அணிந்துரை..

நம்பியாறு வாழ்த்தட்டும்

‘இது கண்களின் பார்வையல்ல!’ என்பது இக்கவிதைத் தொகுப்பின் தலைப்பு. கண்ணால் காண்பது ஒன்றாகவும் உட்கருத்து முற்றிலும் முரண்பட்டதாகவும் இருத்தலும் கூடும் என்ற உண்மையை உணர்த்துகிறது தலைப்பு. கண்களின் பார்வை அல்ல என்றால் சிந்தனைத் தெளிவின் பார்வை. புறப்பார்வைக்கும் அகநோக்குக்கும் உண்டான வேறுபாடுகளை உணர்த்தும் தலைப்பு.

கவிஞர் சிந்தா எனக்கு அறிமுகமானவர் இல்லை. இதற்கு முன் அவர் கவிதை எதையும் வாசித்ததும் இல்லை. எனது சகோதரர் ஏர்வாடி சுல்தான் இந்தத் தொகுப்பை எனக்கு அறிமுகப்படுத்தினார். கவிஞர் சிந்தாவின் முழுப்பெயர் M.S. சிந்தா மதார் என்றும், சகோதரர் S.I. சுல்தான் அவர்களின் அடுத்த வீட்டுக்காரர் என்றும் பின்னர் அறிந்தேன். வயதென்ன, தொழிலென்ன, வருமானம் என்ன போன்ற தகவல்கள் எனக்கு அநாவசியம். கவிஞர் என்ற அறிமுகமே நமக்கு போதுமானது.

‘’பெருவெளி” என்ற கவிதையில் கவிஞர் சொல்கிறார்,

‘உடைந்தது மழைத்துளி
எத்தனை நைல் நதி?’

என்று. கவிதை எனும் அனுபவம் மழைத்துளி, அதுவே நைல் நதி. நதிகள் என்பன இங்கு சிந்தனைப் போக்குகள். புனிதம் என்பது உலகின் எந்த நதிக்குமான சொந்த உரிமையும் அல்ல.

அனைத்துக் கவிதைகளையும் வாசித்துச் செல்லும்போது, கவிஞரின் பரந்து பட்ட பார்வையின் தெளிவும் கூர்மையும் தெரிகிறது.

மனித உணர்வுகள் என்பன மதம் இனம் மொழி நிலப்பகுதி என்பனவற்றையும் கடந்து நிற்பன என்பதையும் கவிதைகள் நிறுவிச் செல்கின்றன.
‘அம்மா’ என்றொரு கவிதை அதற்கோர் எடுத்துக்காட்டு.

*குழந்தை மூசாவை
கூடைக்குள் கிடத்தி
நீரில் விட்டு
திரும்பியவளோ
கர்ணனை கங்கையில் விட்டு வந்தவளோ
ஈன்றவள் விழிகளில்
இடம் பெயர்ந்திருந்தன
நைலும் கங்கையும்’

என்றொரு கவிதை, விழிகளின் மூலம் மட்டுமே அல்லாத மிகச்சரியான அகப்பார்வையைத் தருகிறது. ஈன்ற தாய் என்பதோர் சக்தி வாய்ந்த சொல்லாட்சி. அதனால்தான் வள்ளுவன் ‘ஈன்ற தாய் பசி காண்பான் ஆயினும்’ என்று அழுத்தம் தந்து பேசினான்.

காதல், போர்கள், மதக்கலவரங்கள், துவக்குச் சூடுகள் குறித்த சில கவிதைகள் உண்டு நூல் நெடுக்க. வலி என்பது யாவர்க்குமாம்.

‘விரியும் சிறகுகள்’ எனும் நீண்ட கவிதை சொல்வதைப் போல –

‘பருந்தின் கால்களில்
சிக்கிய
பாம்பின் கண்களில்
தரிசனம் தந்து நெளிந்தது மண்புழு’

என்பதுதானே யதார்த்தம்.

‘புனிதப் பயணம்’ எனும் கவிதையில் கவிஞர் சிந்தாவின் பாடல் வரிகள் –

“அகந்தை மனது
தன் புழுதிகளை உதறிக் கொண்டே
புரண்டு சிரிக்கிறது”

என்பதும் இன்னொரு வகை யதார்த்தமே!

பெண்ணின் அவலங்களை மிகத்தீர்க்கமாக பேசுகிறார் கவிஞர்.
‘அவளுக்கே ஆன வனவாசம்’ என்ற கவிதையில்

“எவனோ ஒருவனின்
வார்த்தை எச்சத்திற்காய்
இரண்டாம் வனவாசத்தைத்
துவங்குகிறவள்
அசோகவனத்திலும் அதிகமாய்
அழுதிருக்கக் கூடும் அப்போது அவள்.

அடுதத கலவரத்தில்
யாரைப் புணரலாம்
என்றே
அலைந்து கொண்டிருக்கிறார்கள்
அன்றிலிருந்து’
என்ற கவிதை வரிகளின் அழல் எந்தக் குறிப்பிட்ட சமயத்தின், மொழியின், இனத்தின் பெண்களுக்கானவை மட்டுமே அல்ல. இதுவே கவிதைப் பண்பென்று உணர்கிறேன் நான். வார்த்தை எச்சம் என்பதொரு சிறந்த சொல்லாட்சி.

வேறொரு உண்மையை ‘நீரெழுதிய கவிதை உணர்த்தியது.

‘எந்த நதி என்று
யாருக்கும் தெரியாமல்
வந்து விழுந்தது மழைத்துளி’

என்பதது. மனித இரக்கம், காருண்யம், பரிவு என்பன தன்னாள் – வேற்றாள் பார்த்தா சுரக்கும்? அவையும் மழைத்துளிகள் போன்றவை அல்லவா?

‘பேயாட்டம் என்ற கவிதை நல்லதோர் சிறுகதைப் பண்பு கொண்டது. செய்னம்புவுக்கு பேய் பிடித்த கதையைப் பேசுகிறது கவிதை. ‘காராட்டு உதிரம் தூஉய் அன்னை களன் இழைத்து’ என்று தொடங்கும் முத்தொள்ளாயிரப் பாடலை நினைவுபடுத்தும்.

ஆதரவு இல்லம்’ ‘யாசிப்புகள்’, ‘கடவுளை விற்பவன்’, ‘பாவச் சுமைகள்’ எனப் பல, தொகுப்பின் குறிப்பிடத்தகுந்த கவிதைகள்.

மனிதநேயம் மிக்க கவிதை ஒன்று ‘மழை இரவு’ எனும் தலைப்பில்

‘‘தேநீர்க் கடைகளில
நாய்களுக்கும் மனிதனுக்கும் சமத்துவ தஞ்சம்
கூரை கிழிசல் வழி
ஒழுகும் நீரை
தடுத்துக் கொண்டிருக்கும்
குழந்தையின் கற்சிலேட்டு’

என்ற கவிதை வரிகள் அன்றும் இன்றும் ஊர்ப்புறங்களில் காட்சிபடுபவை.
ஆனா ஆவன்னாவும் வாய்ப்பாடும் எழுதிப் பயிலப் பயன்படும் பள்ளிக்கூட சிலேட்டு, மழைத்துளிகளுக்கும் மறைப்பு.
சாயாக் கடையின் ஒழுகும் சாய்ச்சிறக்கி மறைவில் நாயும்மனிதரும் பள்ளிச் சிறுமியும் தஞ்சமடைகிறார்கள்.

சிறுவயதில் நானும் மழைக்கு ஒதுங்கி இருக்கிறேன்.

ஊர்க்கோயில் கொடை என்பது கிராமங்களில் பிறந்து வளர்ந்தவர்களால் தோய்ந்து அனுபவிக்கப்படுவதொன்று. ஐம்பதாண்டு காலமாகப் புலம் பெயர்ந்து வாழ்பவன் நான். எம்மூர் முத்தாரம்மனுக்கு இந்த ஐம்பதாண்டு காலத்தில் இருபது கொடைகள் நடந்திருக்கும். அவற்றுள் குறைந்தது பதினெட்டு கொடைகளுக்கு நான் பம்பாயில் இருந்தும் கோவையில் இருந்தும் போயிருக்கிறேன். ஒரு கொடைக்கு போக வாய்க்காதபோது உணரும் ஏக்கமும் அறிவேன். புலம் பெயர்ந்து போன மகன் இந்த ஊர்க்கொடைக்காவது வருவான் என்று ஏக்கத்துடன் காத்திருந்த தகப்பனின் ஆவலாதியைப் புலப்படுத்துகிறது ‘ஊர்க்கொடை’ எனும் கவிதை.

‘’புலம் பெயர்ந்த மகன்
இம்முறையும் வரவேயில்லை
படையல் சோற்றை
காகம் மட்டுமே தின்றது’

என்பதன் வலி நமக்கு அர்த்தமாகிறது. அதுவும் படப்புச் சோறு என நாங்கள் கொண்டாடி உண்ணும் படையல் சோறும்கூட காத்திருந்து காகங்களுக்குப் போகும் சோகம். தூரா தொலைவுக்கு பிள்ளைகள் சம்பாதிக்கப் போய், அவர்கள் வரவு பார்த்திருக்கும் ஏக்கம் அது.

அதுபோலவே, ‘ஈரம்’ என்றொரு கவிதை

‘உணவுப் பொட்டலத்தைப் பிரித்து
நேசத்துடன் நோக்குகிறாள்
யாசிக்கும் சிறுமி
மன்னு சல்வா.

என்று தொடங்குவது. தொடர்ந்து –

‘இரண்டு சலாம்களுக்கு பதில் பெறாது
தொழுதுவிட்டு
பள்ளி வாசலைக் கடக்கையில்
ஏளனமாக சிரிக்கிறது பதிலளிக்காது
விட்டு வந்த
பக்கிரின் சலாமொன்று.’

என்று முடியும்போது நமக்குள்ளும் ஈரம் கசிகிறது. மனிதநேயம் இருந்தாலொழிய இவ்விதம் எழுத வராது.

ஊர்ப்பக்கம் வளர்ந்தவர்களுக்கு ஆறு, ஏரி, பொத்தை என்பன என்றுமே மறக்க இயலாத அனுபவங்களை தந்து நிற்கும். கவிஞர் சிந்தாவுக்கு அது நம்பியாறு.

திருக்குறுங்குடி மலையில் புறப்பட்டு திருமலை நம்பியின் கால் நனைத்து, சித்தூர் தென்கரை மகராஜா சாஸ்தாவுக்கும் வடக்குவாழ் செல்விக்கும் தாகம் தீர்த்து தொடரும் ஆறு அது. நம்பியாறு.பற்றி நிறையப் பேசுகிறார் கவிஞர்.

‘அத்தனை நினைவுகளையும்
ஆற்றோடு கொட்டிவிட்டேன்
என்ன செய்தாய் ஆற்றை என

என் பிள்ளைகள் கேட்கும் முன் என்று கவலும் வரிகள் நம் நிர்க்கதியை உணர்த்துகின்றன. மேலும்,

‘அத்தனைக் கள்ளக் குளியலுக்குப்
பின்னும்
பிரியாமல்
கால் சட்டைப்பைக்குள்
தங்கிப்போன மணல்துகள்தான்
மவுன சாட்சிகளாய்
அன்றும் இன்றும்

என்கிறார். ஆமாம் !மணல் துகள்களே இன்றெமக்கு அன்று பாய்ந்த யாறுகளை நினைவுபடுத்துகின்றன.

தொடர்ந்து நம் இயலாமைகளையும் உரைக்கிறார்.

‘அன்று

கட்டிய மணல் வீடுகளை

ஆறு கரைத்தது

இன்று கட்டிய வீடு

ஆற்றை கரைத்தது

என்று எவ்வளவு சீரழிந்த நிலைமையை கவிதை பேசுகிறது! மேலும் கடந்து தாண்டிப் போய் முறையிடுகிறார் –

‘அடுதத தேர்தல்வரை
ஆறிருக்கும் என
திண்ணமாய் நம்புகின்றன
மீன்கள்.

என்று. இங்கு நம்புவது மீன்கள் மட்டுமல்ல. பறவவகள், விலங்குகள், தாவரங்கள் அனைத்துமேதான்.

அஃதேபோல் ‘ஆற்று வழி’ என்ற கவிதையில் சொல்கிறார் –

‘எங்கோ பெற்றுக்கொண்ட தெங்கு ஒன்றை
யாரிடம் கொடுப்பதற்கென்றே தெரியாமல்
உருட்டிக் கொண்டே நகர்கின்றன அலைகள்

என்று. தெங்கு என்றால் தென்னை மரத்திலிருந்து முற்றிக் கழன்று விழுந்த தேங்காய். மேலும் சொல்கிறார் –

‘யாருடைய ஈமக் கடனையோ
பத்திரமாக எடுத்துச் செல்கிறது ஆறு’

என்று. எந்த நோக்கமும் திட்டமிடலும் இல்லாமல் கால்வாய் / ஓடை/ சிற்றாறு / ஆறு / நதி / பெருநதி என எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் நீரொழுக்கு தன் பணியை ஆற்றிக்கொண்டே நடக்கிறது. ஆறு போல் தானே அமைய வேண்டும் அரசியலும், மதமும், சமூகமும், ஆன்மீகமும், அவற்றின் கடமைகளும்! ஏன் அவ்வாறு இல்லை என அல்லாடுகிறது நம் மனம் அவ்வாறு இல்லை என்பதுகூட விடயமல்ல, ஏன் எதிற்மறையாக இருக்கிறது?

கவிஞரே ‘மழைத்தொழுகை’ எனும் கவிதையில் குறிப்பிஇருக்கிறது

வெட்டப்பட்டு பொட்டலாகி் போனத் திடலில்தான்
மழைக்காக சிறப்புத் தொழுகை
தொழுகை முடிந்தப்பின்
சுருட்டப்படுகின்றன
நதியைத் தொலைத்த
கோரைகளின் ஆன்மாக்கள்

என்ற உண்மை. ஏன் கோரை? இங்கு சுருட்டப்படுவது கோரம்பாய் என்பதனால். கோரம்பாய், கோரைத் தட்டி, கோரைப் படுதா, பன்றிகள் சேற்றில் தொடர்ந்து பறித்துத் தின்னும் கோரைக் கிழங்கு யாவுமே நம் நினைவுக்கு வருகின்றன. கூடவே கண்மணி குணசேகரன் இருபது ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய ‘கோரை’ எனும் சிறந்த நாவலும்.

கவிஞர் சிந்தா, தாம் கைக்கொள்ளும் கருப்பொருளுக்கும் உரிப்பொருளுக்கும் உண்மையாக இருக்கிறார். பாசாங்குகள் அற்ற மொழிப் பயன்பாடு, கவிச் செழுமையை மேம்படுத்த உதவுகின்றது. கவிதை என்பது மொழியின் உன்னதம். தமிழ்மொழியில் கவிதைக்கு ஏழாயிரம் ஆண்டுப் பாரம்பரியமும், தொன்மையும், அழகும், வளமும், நயமும் உண்டு. தமிழில் கவிதை எழுதிச் சாதிப்பது என்பது எளிவந்த காரியம் அல்ல.

மிகுந்த நம்பிக்கை தரும் இந்தக் கவிதைத் தொகுப்பை வழங்கியுள்ள கவிஞர் சிந்தா, மேலும் பயணிக்க, தடம்பல சமைக்க நமது வாழ்த்துகள். நம்பியாறும் வாழ்த்தும் என்பது நமது நம்பிக்கை.

மிக்க அன்புடன்

நாஞ்சில் நாடன்

கோயம்புத்தூர் – 641 042.
18 யூலை 2022

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும். Bookmark the permalink.

1 Response to இது கண்களின் பார்வையல்ல

  1. Valavaduraiyan சொல்கிறார்:

    நாஞ்சிலின் அணிந்துரை அருமையான ஒன்று. ஆற்றுவழி கவிதையைப் பற்றி அழகாகச் சொல்கிறார்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s