ஐந்துறு பூதம் சிந்திப்போய் ஒன்றாக…

எமது பள்ளிப் பருவத்தில் பருவ இதழ்களில் தொடர்கதை எழுதும் இனமொன்று உண்டு. இன்றைய சொற்பொழிவுத் தொழில் வளர்க்கும் இனம் போல. தொடர்கதையில் நடக்கும் உரையாடல்களில் “கலி முத்திப் போச்சுன்னா! என்றும், நடக்கிறது கலிகாலமோல்லியோ! என்றும் சொற்றொடர்கள் கண்படும். அப்படியான உரையாடல்களை வாசிக்காத கிழமைகள் இல்லை. என்றாலும் அன்று கலிகாலம் என்றால் என்ன என்ற அறிவு இல்லை எமக்கு. கலி முத்திப் போச்சு என்றால் அர்த்தமாகாத எமக்கு முருங்கைக்காய் முத்திப்போச்சு, வெண்டைக்காய் முத்திப்போச்சு என்றால் அர்த்தமாயிற்று.

நல்ல காலம், கெட்ட காலம் என்று வீடுகளிலும் தெருக்களிலும் செவிமடுக்கின்ற காலமாக இருந்தது. ஆம் காலத்தே அவையவை ஆகும், போம் காலத்தே பொருள் புகழ் போகும்’ என்ற கண்ணதாசனின் கவிதை வரி அறிமுகமாயிற்று வாலிப வயதில். ஆம்காலம் என்றால் ஆகும் காலம், போம் காலம் எனில் போகும் காலம். பள்ளிகளில் பயின்ற காலத்தில் திருக்குறள் பாடல்கள் மூலம் காலம் காணக்கிடைத்தது. காலத்தினால் செய்த நன்றி’, காலம் அறிந்து செயின்!’, காலம் கருதி இடத்தாற் செயின்’, காலம் கருதி இருப்பர்! கருவியும் காலமும் செய்கையும்’, பொருள் கருவி காலம்’, காலத்தால் தக்கது அறிவதாம் தூது’, கடனறிந்து காலம் கருதி இடனறிந்து எண்ணி’, குறிப்பறிந்து காலம் கருதி’ எனப்பல சொற்றொடர்கள் காலம் குறித்துத் திருக்குறள் பேசுவன.

கால் என்றால் காற்று, ஊன்றும் கால், கால் பங்கு, காலன், வாய்க்கால், விலங்கு பறவை மாந்தரின் கால், எனப்பல பொருள்களில் ஆள்கிறோம்.

கலி எனும் சொல் திருத்தமாக அறிமுகம் ஆனது, கலித்தொகை’ எனும் எட்டுத்தொகை நூல் பற்றிக் கேள்விப்பட்ட பிறகு. கல்லூரிக் காலத்தில். அறிமுகம் என்ற அளவில் சங்க இலக்கியப் பாடல்கள் சில பாடமாக இருந்தன. கற்றறிந்தோர் ஏத்தும் கலி’ எனக்குறித்தனர் கலித்தொகையை. இசையுடன் பாடும் இசைப்பாடலாக இருந்திருக்கிறது. துள்ளல் ஓசை. நெய்தல் கலியை இயற்றியவரான நல்லந்துவனார், கலித்தொகையைத் தொகுத்திருக்கிறார். உரை எழுதியவர் ஆதியில் நச்சினார்க்கினியர். கலித்தொகையை முதன்முதலாக அச்சேற்றியவர் சி.வை. தாமோதரம் பிள்ளை.

ஐவகை நிலங்களைப் பாடும் கலித்தொகையில், பெருங்கடுங்கோன் பாலை பற்றி 35 பாடல்கள், கபிலர் குறிஞ்சி பற்றி 29 பாடல்கள், மருதன் இளநாகனார் மருதம் பற்றி 35 பாடல்கள், சோழன் நல்லுருத்திரன் முல்லை பற்றி 17 பாடல்கள், நல்லந்துவனார் நெய்தல் பற்றி 33 பாடல்கள். கடவுள் வாழ்த்துடன் ஆக 150 பாடல்கள்.

தமிழ்ப் பாக்களின் ஆதி வடிவங்கள் ஆசிரியப்பா அல்லது அகவற்பா, வஞ்சிப்பா, கலிப்பா, வெண்பா. விருத்தப்பா காலத்தால் சற்றே பிந்தியது என்பர். விருத்தமெனும் ஒண்பாவில் உயர் கம்பன்’ என்பர். கம்பனுக்கு முன்னோடி, சீவக சிந்தாமணி ஆசிரியர் திருத்தக்க தேவர். சங்க இலக்கியப் பரப்பில் பாக்கள் யாத்த மன்னர் பலருண்டு. கலித்தொகையில் முல்லைக்கலி பாடியவர் சோழன் நல்லுருத்திரன். ஈராயிரம் ஆண்டுகளாய்த் தமிழ் இலக்கியம் மூலம் வாழும் மன்னர் ஏராளம்.

அந்தக் கணக்கில்தான் தமிழ்ப் பல்கலைக்கழகம், உலகத் தமிழாய்வு மையம், செம்மொழி உயராய்வு நிறுவனம், தமிழ் வளர்ச்சித் துறை எனும் தகைசால் அமைப்புகள் சி.என். அண்ணாதுரை, மு. கருணாநிதி, எம்.ஜி. ராமச்சந்திரன், செல்வி ஜெயலலிதா போன்ற முன்னாள் முதலமைச்சர்கள் எழுதிய நூல்களையும் அவர்களைத் துதித்துப் பேராசிரியர்கள், அறிஞர்கள் என்று அறியப்படுகிறவர்கள் கூலிக்கு எழுதிய நூற்களையும் ஆயிரக்கணக்கில் அச்சிட்டுக் கட்டுக் கட்டாக விற்காமல் வைத்துக் காக்கிறார்கள். இன்றும் அவை ஐம்பது விழுக்காடு கழிவில் கிடைக்கும். சும்மா கிடைக்கிறது என வியாதிகளை விலை கொடுத்து வாங்குவார்களா எவரும்?

கலி எனப் பொதுவாகச் சொன்னாலும், கலிப்பா, கலி வெண்பா, கலி விருத்தம், கலித்தாழிசை எனப்பல பிரிவுகள் உண்டு. யாம் பாவிலக்கணம் கற்றேமில்லை. இனியென்செயக்கூடும் கற்குழியில் கால்நீட்டும் காலத்து?

கலி எனும் சொல்லுக்கு அகராதிகள் – துன்பம், அழிவு, சோர்வு, தீயவை, தீமை எனப் பொருள் தருகின்றன. கலி எனும் சமற்கிருதச் சொல்லுக்கு இருப்பூழியிறை, அதாவது இருப்பு+ஊழி+இறை, எனில் நடப்பிலுள்ள ஊழிக்காலத்தின் இறைவன் எனப் பொருள். மேலும் இருப்பூழி (நடக்கும் ஊழி), காரி, துன்பம், இலம்பாடு, ஒற்கம், வஞ்சகம் எனப் பொருள் சொல்கிறது அயற்சொல் அகராதி. வறுமை எனும் பொருள். இலம்பாடு என்றாலும் வறுமையே. இல்லை எனும் பாடு. கடமை – கடப்பாடு, பண்பு – பண்பாடு, மேன்மை – மேம்பாடு, கஷ்டம் – கஷ்டப்பாடு, என்பது போல இலம் – இலம்பாடு.

இலம்பாடு எனும் சொல்லைப் புறநானூற்றில் மூன்று பாடல்களில் காணலாம். புறத்திணை நன்னாகனார், கரும்பனூர்க் கிழானைப் பாடுமிடத்து, இலம்பாடு அகற்றல் யாவது? என்று கேட்கிறார். வறுமையைப் போக்குவது எங்ஙனம் என்ற பொருளில்.

சிலப்பதிகாரத்தில், புகார்க் காண்டத்தில், கனாத்திறம் உரைத்த காதையில், கோவலன் மாதவியிடம் இருந்து மடங்கி வந்து நடந்தனவற்றுக்கு இரங்கிக் கண்ணகியிடம் கவன்று பேசுகிறான், சுய பச்சாதாபத்துடன்.

சலம் புணர் கொள்கைச் சலதியொடு ஆடி,
குலம் தரு வான்பொருள் குன்றம் தொலைத்த
இலம்பாடு நாணுத்தரும் எனக்கு

என்று. ஜலம் எனும் சொல்லைச் சலம் என்று தமிழாக்கம் செய்தோம். ஆனால் சலம் எனும் தமிழ்ச்சொல்லுக்கு பொய்மை, வஞ்சகம் எனப் பொருள். சலதி எனில் பொய் கூறுபவள், வஞ்சகி என்று பொருள். பொய்யளாகிய மாதவியுடன் ஆடிக் குலம் தந்த வானளாவிய குன்றனைய பொருள் தொலைத்த இன்றைய வறுமை தனக்கு நாணம் தருகிறது என்கிறான் கோவலன்.

சலம் எனில் நீர் என்று பொருள் என்றால், அசலம் எனில் மலை என்பது பொருள். அருண+அசலம் = அருணாசலம், தணிகை+அசலம் = தணிகாசலம், வேங்கட+அசலம் = வேங்கடாசலம். அசலபதி எனில் மலைக்குத் தலைவன், சலபதி எனில் நீருக்குத் தலைவன்.

ஒற்கம் எனும் சொல்லைக் கண்டோம். ஒற்கம் எனும் சொல்லைத் திருக்குறள் கையாள்கிறது. கேள்வி அதிகாரத்துக் குறள் கூறுவது:

கற்றிலன் ஆயினும் கேட்க அஃது ஒருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாம் துணை

என்று. கல்வி கற்கும் வாய்ப்பு அமையாவிடினும் கேள்வியறிவு நல்லது. கற்றலின் கேட்டல் நன்று. கல்வி கேள்வி என்கிறோம். அஃது ஒருவனுக்கு வறுமையால் – ஒற்கத்தால் – தளர்வெய்தும்போது தாங்கும் துணையாக அமையும் என்பது குறளின் பொருள்.

தொல்காப்பியத்தின் சொல்லதிகார நூற்பா, இலம்பாடு ஒற்கம் ஆயிரண்டும் வறுமை’ என்கிறது தெள்ளத் தெளிவாக. இலம்பாடு, ஒற்கம் ஆகிய இரு சொற்களும் வறுமையைக் குறிப்பன என்பது பொருள்.

நாஞ்சில் நாட்டில் ‘ஒறுவினைக் காலத்தில்’ என்றொரு சொற்றொடர் வழக்கில் இருந்தது. ஒறுவினை எனில் வறுமை, பஞ்சம் என்று பொருள். ஒறுவினைக்கும் ஒற்கத்துக்கும் உள்ள உறவு அர்த்தமாகிறது இன்று.

இனி கலி எனும் சொல்லுக்குத் திரும்பலாம். பாரதியார், கண்ணம்மா என் குழந்தை’ எனும் பாடலில் முதல் பத்தியில் பாடுகிறார் –

சின்னஞ்சிறு கிளியே – கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே!
என்னைக் கலி தீர்த்தே – உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்!’

என்று. இங்கு பாரதியார் பயன்படுத்தும் கலி எனும் சொல்லுக்கு வறுமை, தரித்திரம், இன்மை, துக்கம், ஒற்கம், இலம்பாடு, அழிவு, துன்பம், சோர்வு, தீயவை, தீமை என்ற எப்பொருளும் கொள்ளலாம். கோபால கிருஷ்ண பாரதியாரின் பாடல் வரி, எப்போ வருவாரோ? எந்தன் கலி நீங்க! என்பது. ஜோன்புரி ராகத்தில் பாடுவார்கள் அதனை.

கலியன் எனும் சொல் சமற்கிருதம்+தமிழ் என்றும் இருப்புக்கால இறைவன், இருப்புக்காலிறை, இருப்பூழி, பசித்தவன், இலம்பாடி, ஒற்கத்தன் எனப் பொருள் தருகிறார் பேராசிரியர் அருளி. கலியுகம் (Kaliyuga) எனும் சொல் சமற்கிருதம். இருப்புக்கால ஊழி, நான்காம் ஊழி, பொய்யூழி என்பன பொருள்.

கலியென்ற சொல்லுக்குக் கடல் என்றும், வலி – அதாவது வலிமை – என்றும் பொருள் சொல்கிறது பிங்கலம். கலிக்கு ஒலி என்ற பொருளை முன்மொழிகிறது தொல்காப்பியம்.

கம்பலை, சும்மை, கலி, அழுங்கல்
என்றிவை நான்கும் அரவப் பொருள்

என்பது சொல்லதிகார நூற்பா. மேலும்

அழுங்கல் இரக்கமும் கேடும் ஆகும்

என்பது அடுத்த நூற்பா. அதாவது அழுங்கல் எனும் சொல் ஒலி என்ற பொருளன்றியும் இரக்கம், கேடு எனும் பொருளும் தரும் என்பதாகும்.

இசையினி தமிழகராதி கலி எனும் பெயர்ச் சொல்லுக்கு ஒலி, கடல், மனவெழுச்சி, வலிமை, சிறுமை, சனி, கலியுகம், வஞ்சகம், கலிப்பா, போர், கலித்தேன் எனும் பொருள்களைத் தரும். கலி எனும் வினைச்சொல் தழை, எழு, மகிழ், கர்வப்படு, நெருங்கியிரு, செலுத்து, நழுவு, நீக்கு, ஒலி எழுப்பு எனப் பொருள் சொல்கிறது.

  • கிருத யுகம் 17,28,000 ஆண்டுகள் எனவும்
  • திரேதா யுகம் 12,66,000 ஆண்டுகள் எனவும்
  • துவாபர யுகம் 8,64,000 ஆண்டுகள் எனவும்
  • கலியுகம் 4,32,000 ஆண்டுகள் எனவும்

சமற்கிருத மொழியறிஞர்களும், வேத விற்பன்னர்களும், சநாதன தர்ம சாத்திர ஆய்வாளர்களும் மொழிகின்றனர். நான்கு யுகங்களிலும் நாமிப்போது வாழ்வது கலியுகம் என்பார்கள்.

கலியுகம் கி.மு. 3102 பெப்ரவரி மாதம் 18-ம் நாள் தொடங்கிற்று என்று ஆரியபட்டரும், கி.மு. 2449-ல் ஆரம்பித்தது என்று வராகமிகிரரும், சொல்வதாக வாசித்தேன்.

கலியுகம் மொத்தம் 5140 ஆண்டுகள் என்றும், இன்னும் 380 ஆண்டுகள் மிச்சமிருப்பதாகவும் ஸ்ரீயுக்தேவர் வகுக்கிறார் என்கிறார்கள்.

யுகங்கள் நான்கும் மொத்தம் 42,90,000 ஆண்டுகள் என்றும் நடப்பூழி கலியுகம் என்றும், கலியுகம் முடிந்தபின் மறுபடியும் கிருதயுகம் எழுக மாதோ என்றும் சொல்கிறார்கள். வேறொரு கணக்கில் கலியுகம் மொத்தம் 4,32,000 ஆண்டுகள் என்றும் கலியுகம் முடிய இன்னும் 4,28,899 ஆண்டுகள் உள எனவும் உரைப்பர்.

மேற்சொன்ன தகவல்களில் பிழை இருந்தால் நாமதற்குப் பொறுப்பு இல்லை. ஆதாரமோ விளக்கமோ என்னால் அளிக்க இயலாது. வாசித்த செய்திகள், அவ்வளவே! யானை தூறுகிறது என்று ஆட்டுக்குட்டி தூற இயலாது! நமக்கென்ன, அப்பம் தின்னவோ? அல்லால் குழி எண்ணவோ?’.

நடப்பு யுகம் கலியுகம் என்றும், இந்த யுகத்தில்தான் மகாவிஷ்ணுவின் பத்தாவது அவதாரமான கல்கி அவதரிப்பார் என்றும் சொல்கிறார்கள். ஏற்கனவே நாட்டில் ஒருவர் கல்கி அவதாரம் என்றும் கல்கி பகவான் என்றும் சொல்லித் திரிந்தார்.

யாமறியக் கலி எனும் சொல்லை முன்பு சொன்ன பொருள்களில் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினென்கீழ்க்கணக்கு நூல்கள் ஆண்டுள்ளன. சிலம்பும் மேகலையும் சிந்தாமணியும் அப்பொருள்களில் பயன்படுத்தியுள்ளன.

கம்பன், அயோத்தியா காண்டத்தில், நகர்நீங்கு படலத்தில், இலக்குவனின் அன்னை சுமித்திரையின் துயர் ஆற்றும் விதத்தான் இராமன் கூற்றாகப் பாடல் ஒன்று வைக்கிறார்.

கான் புக்கிடினும், கடல் புக்கிடினும், கலிப்பேர்
வான் புக்கிடினும், எனக்கு அன்னவை மாண் அயோத்தி
யான் புக்கது ஒக்கும்; எனை யார் நலிகிற்கும் ஈட்டார்?
ஊன் புக்கு, உயிர் புக்கு, உணர்புக்கு, உலையற்க!” என்றான்.

என்பது பாடல்.

காட்டுக்குச் சென்றாலும், கடலில் சென்றாலும், ஆரவாரமும் பெருமையும் உடைய வானவர் உலகு அடைந்தாலும் எனக்கு அந்த இடங்கள் சிறந்த அயோத்தி மாநகரில் இருப்பது போலவே ஆகும். என்னைத் துன்பப்படுத்தும் ஆற்றலுடையவர் எவர்? உடல், உயிர், உணர்வு ஆகியனவற்றின் துயரம் உனை ஊடுருவித் தளர்ச்சிப்படுத்தாமல் இருப்பாய் என்றான் என்பது பாடலின் பொருள். எனவே இங்கு கலி எனும் சொல் ஆரவாரம் எனும் பொருளில் ஆளப்பெற்றுள்ளது. இதைத்தான் கம்பலை என்றும் உறுதிப்படுத்துகிறார் தொல்காப்பியர். கம்பலை என்பது எனதோர் கட்டுரைத் தொகுப்பின் தலைப்பு. அதனுள் கம்பலை என்றோர் கட்டுரையும் உண்டு.

கலிகாலம் என்று நேரிடையாகவே பேசுவார் கம்பர். ஆரணிய காண்டம், விராதன் வதைப்படலம்.

‘மா மங்கு பாதகம், விடம், கனல், வயங்கு திமிரக் கங்குல் பூசி வருகின்ற கலிகாலம் எனவே’ என்பது பாடல் வரி. அதாவது கலிகாலம் என்பது நச்சுக்காலம் என்பதாகும்.

திருவாசகமும் திருக்கோவையாரும் தேவாரமும் கலி எனும் சொல்லை ஆள்கின்றன. நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில், நம்மாழ்வாரின் திருவாய்மொழி,

காய்சின வேந்தே! கதிர் முடியானே!
கலிவயல் திருப்புளிங் குடியாய்!’

என்கிறது.நளவெண்பா நூலின் ஒரு படலத்தின் பெயர்‘கலி நீங்கு படலம்.

கலிகாலம் என்பதையே கலியுகம் என்றனர். கலியுகம் என்ற சொல்லும் வடமொழிதான். யுகம் என்ற சொல் சமற்கிருதம். தமிழில் ஊழி அல்லது நீடுகம். பேரகராதி யுகம் எனும் சொல்லுக்கு நால்வகை நீடிய காலம் எனப் பொருள் தருகிறது. A long period of time of which there are four – கிருத, திரேதா, துவாபர, கலி என நான்கு. யுகம் எனும் சொல் முறையான தமிழ் இலக்கணப்படி உகம் என்றும் எழுதப்பெறும். யுகத்துக்கு Earth என்றும் பொருளுண்டு.

யுகம் சார்ந்து மேலும் சில சொற்கள் உண்டு.

யுக முடிவு – யுகத்தின் முடிவு

யுகப் பிரளயம் – ஊழியிறுதி. சதுர்யுக முடிவில் நிகழும் பிரளயம்

யுகாந்தப் பிரளயம் – ஊழியிறுதி

யுகாந்தம் – ஊழியிறுதி

யுகாந்த வெள்ளம் – யுகப் பிரளயம்

யுகாந்தாக்கினி – ஊழித் தீ

யுகாதி – ஊழித் தொடக்கம். கடவுள், தகைஞன். தெலுங்கு, கன்னட ஆண்டுப் பிறப்பு. அருகன், யுகத்தின் தொடக்கம், யுகாதிப் பண்டிகை

யுக தருமம் – சாத்திரங்களின்படி அந்தந்த யுகத்தில் நடக்க வேண்டிய நடைமுறை

யுகசந்தி என்றொரு சொல் ஜெயகாந்தனின் கதைத் தலைப்பு. ஒரு யுகத்தின் முடிவில் நின்றும் அடுத்த யுகத்தின் தொடக்கத்தில் இருந்தும் சேர்ந்ததும் முன்யுகத்தின் ஆறிலொரு பங்குமான காலப்பகுதியே யுகசந்தி. தமிழர் இன்று ஒரு முதலமைச்சர் காலம் முடிந்து இன்னொரு முதலமைச்சர் அடித்து மாற்ற வந்ததும் யுகசந்தி என்கிறார்கள். இதுவே சினிமாக் கதாநாயக நாயகி நடிகருக்கும் பொருந்தும்.

ஐராவதி கார்வேயின் மராத்திய நாவலின் தலைப்பு யுகாந்தா. அதன் மொழிபெயர்ப்பு அனைத்து இந்திய மொழிகளிலும் உண்டு. தமிழில் இன்னும் கிடைக்கிறது சாகித்ய அகாதமி அல்லது நேஷனல் புக் ட்ரஸ்ட் வெளியீடு. அதுபோன்ற நாவல்களைப் பொருட்படுத்தாமல் நாம் சந்தையின் ஊசற்பண்டங்களை நக்கி நக்கித் தின்று மெய்சிலிர்த்துக் கொண்டிருப்போம். அரசுகள் அவ்வகை எழுத்தாளருக்குப் பாரத ரத்னா வழங்கி இந்திரியம் கசிய நிற்கும்.

ஊழி எனும் சொல்லுக்கு நேரான வடமொழிச் சொல்லே யுகம். 2013-ல் வெளியான, பத்துப் பதிப்புகள் கண்ட, 330 பக்கங்கள் நீண்ட எனது கட்டுரை நூல் ‘கம்பனின் அம்பறாத்தூணி’ அதன் பதினைந்து கட்டுரைகளில் ஒன்றின் தலைப்பு ‘ஊழியும் ஆழியும்!

ஊழி எனும் சொல்லுக்குப் பேரகராதி ஏழு பொருள் தந்துள்ளது.

  1. Time of Universal deluge and destruction of all things.

பிரளயத்தால் உலகம் முடியும் காலம்.

சீவக சிந்தாமணி எனும் பெருங்காப்பியத்தின் நான்காவது இலம்பகம்.

குணமாலையார் இலம்பகம். இலம்பகம் என்றால் என்ன என்று கேட்பீர்கள்தானே! காதை, படலம், சருக்கம், அத்தியாயம் போல. காண்டம் என்பது வேறு. குணமாலை இலம்பகத்தில் திருத்தக்க தேவரின் விருத்தப்பா,

இடியும் மின்னும் முழக்கும் இவற்றால் உலகம் நிறைந்து
ஒடியும் ஊழி இவண் நின்றுறு கால்வரை கீழ்ந்தன

என நீளும். புரிதலுக்காக விருத்தப்பாவின் முதலிரண்டு அடிகளைச் சீர் பிரித்து எழுதியுள்ளேன். பாடல் வரிகளின் பொருள் – இடியும் மின்னலும் முழக்கும் எனும் இவற்றால் உலகம் நிறைந்து, மலை பிளந்து, மாக்கடலை நிலத்தில் கவிழ்த்தது போல் மாரி பொழிந்து உலகம் அழியும் ஊழிக்காலம்.

  1. யுகம் என்பது ஊழிக்கான நேரடிப் பொருளும் ஆகும்.

‘பண்டையூழியிற் பார் மலிவுற்றதே! என்று சீவகசிந்தாமணியின் 12-வது இலம்பகமான இலக்கணையார் இலம்பகத்துப் பாடல்வரி. பண்டைய ஊழிபோல் உலகம் நலிந்தது என்பது பொருள்.

பண்டையூழி எனும் சொல்லுக்கு கிருதயுகம் – முதல் யுகம் என்று பொருள் எழுதினார் நச்சினார்க்கினியர் என்ற உரையாசிரியர். அவரது காலம் பதினான்காம் நூற்றாண்டுக்கு முற்பட்டதல்ல என்று துணிந்துள்ளனர்.

  1. Very very long time. நெடுங்காலம் பன்னெடுங்காலம் என்றொரு சொற்றொடர் உண்டு நம்மிடம். ஊழி வாழ்க’ என்று வாழ்த்தினால் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் ஆண்டு வாழ்க என்று பொருள்.
  2. Life Time. வாழ்நாள். இதனை வாணாள் என்றும் எழுதலாம். எங்கள் பகுதியில் தாயர் சேட்டை செய்யும் பிள்ளையைப் பார்த்து, வாணாளை வாங்காதே’ என்று ஏசுவார். புறநானூற்றில் ஏணிச்சேரி முடமோசியார், வேள் ஆய் அண்டிரனை வாழ்த்தினார் ‘அன்ன ஆக, நின் ஊழி’ என்று.

இன்றைய முற்போக்கு – சமூகநீதி – பெரியாரிய சிந்தனையாளர் பலர் முடமோசியார், முடத்தாமக் கண்ணியார் எனும் பெயர்களை மாற்றுத்திறனாளி மோசியார், மாற்றுத்திறனாளி தாமக் கண்ணியார் என்று எழுத வேண்டும் என்பார்கள். சங்க இலக்கியம் பதிப்பிப்போர், உரையெழுதுவோர், கட்டுரை எழுதுவோர் இதனைக் கருத்தில் கொள்க.

  1. ஊழி என்றால் உலகம் என்று பொருள். தேவாரம், ஊழி ஏழான ஒரு வா போற்றி’ என வாழ்த்துகிறது தென்னாடுடைய சிவனை. ஏழு உலகங்களுக்குமான ஒருவனே போற்றி என்பது பொருள்.
  2. ஊழி என்றால் ஊழ், விதி Fate என்றும் பொருள்.
  3. முறைமை, Regular, Order, ஒழுங்கு, நியதி என்பனவும் ஊழியின் பொருள்கள். எனவே அறியப்பட்ட பொருள்கள் ஏழு.

ஊழி என்ற சொல்லைச் சார்ந்தும் சில சொற்கள் புழக்கத்திலுண்டு. ஊழிக்காய்ச்சல் என்றால் தொற்றுக் காய்ச்சல். Epidemic Fever. ஊழிக்கால் எனில் ஊழிக்காற்று. ஊழிக்காலம் என்பது யுகாந்தக் காலம். ஊழிக்காற்று என்ற சொல் தரும் பொருள், யுக முடிவில் உண்டாகும் காற்று, நச்சுக்காற்று. Poisonous vapour that causes epidemic diseases. ஊழித் தீ எனில் வடவா முகாக்கினி. வடவா+முகா+அக்னி. வடவைத் தீ. ஊழி நாயகன் என்பவன் ஊழி முதல்வன். ஊழி நீர் என்றால் உலக முடிவில் உண்டாகும் வெள்ளப் பெருக்கு. ஊழி நோய் என்பது தொற்றுநோய். இறைவனை ஊழி முதல்வன் என்பர். எவனும் இங்கு ஏழாம்தர அரசியல் தலைவன் பிறந்த நாளுக்கு ஊழி முதல்வனே என்று கட்-அவுட் வைப்பான். கழுதை விட்டைக்கும் கருப்பட்டிக்கும் வேறுபாடு தெரியாதவன். ஆண்டாள் திருப்பாவையில் ‘ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து’ என்பாள்.

ஊழியான் என்றுமொரு சொல்லுண்டு. ஊழியான் என்றால் ஊழியன் அல்ல. ஊழியனுக்கு இன்று மறைபொருள் அநேகம். ஊழியான் என்றால் பிரளய காலத்தும் அழியாதிருக்கும் கடவுள் என்பது பொருள். நெடுங்கால வாழ்க்கையை உடையவன் என்றும் பொருள்.

கம்ப இராமாயணத்தில், கிட்கிந்தா காண்டத்தில், நட்புக்கோட் படலத்தில், அனுமன் வாயிலாக சுக்ரீவனுக்கு இராமனின் சிறப்புக்களைச் சொல்லும் பாடல்:

சூழி மால் யானையார் தொடுகழல் தயரதன்
பாழியால் உலகெலாம் ஒருவழிப் படரவாழ்
ஆழியான் மைந்தர், பேர் அறிவினார், அழகினார்,
ஊழியார், எளிதின் நிற்கு அரசு தந்து உதவுவார்

என்பது.

முகபடாம் அணிந்த யானைப்படையை உடைய மன்னரெலாம் வந்து தொழுகின்ற காலடிகளை உடைய தயரதன், தனது வலிமையால் உலகெலாம் ஒரு குடைக்கீழ் நடக்கும்படி ஆட்சி செய்யும் ஆணைச் சக்கரத்தை உடையவன். அவனது புதல்வர் இராம இலக்குவர். பேரறிவும் பேரழகும் உடையவர். பிரளய காலத்தும் அழியாத நீண்ட வாழ்நாளும் பெருவலியும் கொண்டவர். எளிதில் அவர் உனக்கு அரசாட்சியைத் தந்து உதவுவர். இது பாடலின் பொருள்.

ஊழி பற்றிப் பேசிவிட்டு பாரதியின் ‘ஊழிக்கூத்து’ கவிதையைச் சொல்லாமல் கட்டுரையை நிறைவு செய்ய உவப்பில்லை. வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட’ எனத்தொடங்கும் பாடல். ஐந்துறு பூதம் சிந்திப் போயொன்றாக’ என்கிறார். பாழாம் வெளியும் பதறிப்போய் மெய் குலைய’ என்று விவரிக்கிறார்.

காலத்தொடு நிர்மூலம் படுமூவுலகும் – அங்கே
கடவுள் மோனத்தொளியே தனியா இலகும்

என்று முடிக்கிறார்.

கலியில் தொடங்கி ஊழிக்கூத்தில் முடிக்கிறோம் கட்டுரையை. பாரதி பாடல்களைப் பயிலும் எவரும் அத்தனை இலயிப்புடன் வாசிக்கிற பாடல்கள் அல்ல மழையும் ஊழிக்கூத்தும். சொல்லும் சிலருக்கும் அந்தப் பாடல்களைச் சொல்லும் விதம் தெரிவதில்லை. பாரதியின் உன்னதங்கள் அந்தப் பாடல்கள்.

நான் கம்பன் பயின்ற காலத்தில் நூறாண்டு கண்ட அமரர் ரா. பத்மநாபன் வாசித்துக் காண்பித்த பிறகே எனக்கு அவை அறிமுகம். அவர் தமிழ்க்கடல் ராய.சொ. அவர்களின் மாணவர். ஊழிக்கூத்தும் மழையும் பலமுறை ரா.. சொல்லிக் கேட்டிருக்கிறேன். சிலமுறை பாடச்சொல்லி நானே கேட்பேன். நெஞ்சுச் சளி, மூக்கடைப்புத் தொந்தரவுகள் இருந்தால் மறுத்துவிடுவார். இண்ணைக்கு வேண்டாம் சுப்பிரமணியம்” என்பார். பாடலைச் சொல்லும் விதம் அப்படி.

2012-ம் ஆண்டின் ஆகஸ்ட் இறுதியில், விஷ்ணுபுரம் காவிய முகாமில் – அம்முறை முகாம் ஊட்டிக்கு மாற்றாக ஏற்காட்டில் நடந்தது – நான் மூச்சுப் பிடித்து அவ்விரண்டு பாடல்களையும் சொன்னேன்.

ஊழிக்கூத்தை ஐம்புலன்களும் உணரச்செய்யும் பாடலது.

ஆமாம்!

அன்னை! அன்னை! ஆடும் கூத்தைக் காணச் செய்வாய்
என்னை!’

நாஞ்சில் நாடன்: மார்ச்28 2021, சொல்வனம்

பகிர்க

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும். Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s