எதிர்ப்பை

பேரகராதியிலும் வேறு சிலவற்றினுள்ளும் தேடியபோது என் பார்வையில் ‘எதிரும் புதிரும்’ எனும் சொற்றொடர் தட்டுப்படவில்லை. எதிர் என்ற சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு. புதிர் எனும் சொல்லுக்கும் அதுவேயாம். புதிர் என்றால் புதிது, புதிய கதிர், விடுகதை என்று பொருள் சொல்கிறார்கள். பிதிர் எனும் சொல்லின் திரிபாகவும் புதிர் கொள்ளப்பட்டுள்ளது.

எவராலும் கணக்கில் கொள்ளப்படாத, புச்சமாகக் கொள்ளப்படுகிற, எவ்வகை சமூக அங்கீகாரமும் அற்ற, சமூக அநீதிக்கு ஆட்படுத்தப்பட்ட, பிழைக்கத் தெரியாத இனம் ஒன்று உண்டு இந்த நாட்டில், விவசாயி எனும் பெயரில். அந்த எளிய விவசாயி தனது பயிரின் முதல் விளைச்சலை – வாழைக்குலையோ, தேங்காய்க் குலையோ, நெற்கதிரோ, கரும்போ எதுவானாலும் அறுத்துக்கொண்டு போய் தன்வீட்டின் திருவிளக்கின் முன் வைத்துக் கும்பிடுவான். அல்லது தம் குலதெய்வக் கோயிலில் கொண்டு போய்ப் படைப்பான். அவனின் அந்தச் செயலுக்குப் புதிர் என்று பெயர்.

பிறகெப்படி இந்த எதிரும் புதிரும் எனும் பிரயோகம்? தமிழ்பேசும் பன்னிரண்டு கோடிப்பேர் நாவிலும் புரள்கிறது? ஓசைநயம் கருதிய சொல்லாடலாக இருக்கலாம். குண்டக்க மண்டக்க, திண்டுக்கு முண்டு, நண்டும் சிண்டும் என்பது போலவும் இருக்கலாம்.

எதிர் எனும் சொல்லுக்குப் பேரகராதி விரிவான பொருள்கள் தருகிறது.

  1. That which is opposite, Over against, Infront, Before என்பன முதற்பொருள். அதாவது எதிர் என்றால் முன்னுள்ளது என்று பொருள்.
  2. Return, கைம்மாறு.
  3. Future Tense, வருங்காலம்
  4. Target, Aim, இலக்கு.
  5. In front, முன். ‘எதிர் நலப் பூங்கொடி’ என்கிறது சீவகசிந்தாமணி.
  6. Obstacle, That which is contrary, adverse, Hostile, முரண்.

‘ஏத்து எழில் மார்பஎதிரல்ல நின் வாய்ச்சொல்’ என்ற கலித்தொகை பாடல்வரி மேற்கோளாகத் தரப்பட்டுள்ளது.

  1. Battle, War,போர் (பிங்கல நிகண்டு)
  2. Rival,எதிரிடையானது
  3. Similitude, Comparison,ஒப்பு

‘உமக்கு யார் எதிர் எம்பெருமான்?’ என்ற தேவார அடியில் எதிர் என்ற சொல் ஒப்புமை எனும் பொருளில் ஆளப்பெற்றுள்ளது.

தமிழ் எதிர் என்று சொல்லும் பொருளிலேயே மலையாளமும் எதிர் எனும் சொல்லைப் பயன்படுத்துகிறது. கன்னடமும் எதிர்கொள்கிறது. தெலுங்கும் துளுவும் எதிரு என்னும்.

எதிர் எனும் சொல் ஒத்தே எதிர்தல் என்றுமொரு சொல் உண்டு. அகராதிகள் பொருள் தருகின்றன.

  1. To appear, தோன்றுதல்
  2. To happen, Befall, சம்பவித்தல்
  3. To Precede, முன்னாதல்

எனில், எதிர், எதிர்தல், எதிராதல் என்றால் முன்னாதல் என்றும் பொருள் கொள்ளலாம். தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் ஐந்திணைகளின் பொழுது – பெரும்பொழுது, சிறுபொழுது – பேசுமிடத்து – ‘பனி எதிர் பருவமும்’ என்று. பனி முன்னாகும் பருவமும் என்பது பொருள்.

எதிர்எதிர்தல் எனும் சொற்கள் தரும் முன்னாதல் என்ற பொருளுக்கான எடுத்துக்காட்டு இது.

  1. To blossom, மலர்தல் (திவாகர நிகண்டு)
  2. To be opposed, Be at variance, மாறுபடுதல்.

புறநானூற்றில், பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பாடிய காரிகிழார், ‘செய்வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேயத்து’ என்பார். கொள்கைக்கு மாறுபட்டுப் போரிட வந்த பகைவர் நாட்டில் என்பது பொருள்.

  1. To come to pass in future, எதிர்காலத்து வருதல்
  2. To join together, தம்மிற் கூடுதல்

பரிபாடலில் குன்றம்பூதனார் பாடல்நல்லச்சுதனார் இசைகாந்தாரப்பண்செவ்வேள் குறித்ததுஅதன் இரண்டாம் வரி, ‘கார் எதிர்ந்து ஏற்ற கமஞ்சூல் எழிலி போல்’ என்கிறது.

கார்கால மேகம் தன்னுடன் கூட்டிக்கொண்ட நிறை சூலி மேகம் போல என்பது பொருள்.

  1. To be hospitable, உபசாரம் செய்தல்.

சிலப்பதிகாரத்தில்மதுரைக் காண்டத்தில்கொலைக்களக் காதையில் கண்ணகி கோவலனிடத்துப் பணிந்து பேசுமிடத்து –

“அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்பலும்
துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்து எதிர்கோடலும் இழந்த என்னை”

என்பாள்இங்கு துறவோர்க்கு எதிர்தலும் என்றால்துறவியருக்கு உபசாரம் செய்தல் என்பது பொருள்.

  1. To oppose, confront, எதிர்த்தல்

வழக்கமாக எதிர், எதிர்ப்பு, எதிர்தல் எனும் சொற்களுக்கு வழங்கும் பொருள் எதிர்த்தல்.

  1. To receive, பெறுதல்
  2. To give, கொடுத்தல்
  3. To meet, சந்தித்தல்
  4. To rest on, Hover over as clouds. பொருந்துதல்
  5. To accept, submit to, ஏற்றுக் கொள்ளுதல்

எதிர்தல் எனும் சொல்லுக்கு பதினான்கு பொருள்கள். அனைத்துப் பொருள்களிலும் இச்சொல் ஆளப்பட்டமைக்கு இலக்கியச் சான்றுகள் உள்ளன.

எதிர்த்தல் எனும் சொல்லுக்கு மூன்றே பொருள்கள். To meet face to face, சந்தித்தல். To encounter, oppose, with stand, resist, தாக்குதல். To prevent, Hinder, தடுத்தல் என்பன அவை.

எதிர், எதிர்தல், எதிர்த்தல் ஆகிய சொற்களைத் தொடர்ந்து பல சொற்கள் எதிர் எனத் தொடங்குகின்றன. அகராதிகள் தரும் பட்டியல், எனது சிறிய குறிப்புகளுடன், கீழ்வருமாறு:

எதிர்க்கட்சிRival Party, opposite side, பிரதிபட்சம். நாடாறு மாதம் காடாறு மாதம் போல ஆளும் கட்சி – எதிர்க்கட்சி என்பன தவணை முறையில் அடித்து மாற்றுபவர்கள். சிலசமயம் கூட்டுக் களவாணிகள்.
எதிர்க்கடைRival Shop. போட்டிக்கடைஆனால் எதிர்க்கடை என்றால் எதிரேயுள்ள கடை என்றும் பொருள் தரும். எதிர் வீடென்றால் போட்டி வீடல்ல. எதிரேயுள்ள வீடு. அரசியல் கட்சிகளில் இருந்து பிரிந்து சென்று எதிர்க்கடை போட்டவர்தாம் இன்று பெரும்பான்மையும்.
எதிர்க்களித்தல்எமது பக்கம் இதனை எதுக்களித்தல் என்போம். பொருள் எதிர்க்கெடுத்தல். To nauseate, turn the stomach, குமட்டுதல். To retch. உண்ட உணவு திரும்பி மேலே வருதல்.
எதிர்க்கைOpposition. எதிர்த்து நிற்றல்.
எதிர் கழலுதல்To answer back. மாறு கூறுதல் To resemble. ஒத்தல் பரிபாடலில் திருமாலைப் பாடும் கீரந்தையார் ‘கொடி அறுபு இறுபுசெவி செவிடு படுபுமுடிகள் அதிரபடி நிலை தளர’ என்று பகைவனின் கொடி இற்று வீழசெவி செவிடுபடமணிமுடிகள் சிதறஇருப்பு அழிய எனப்பலவாறு திருமாலின் போர்த்திறம் பேசி வருபவர், ‘இடி எதிர் கழலும்’ என்பார்போர்க்களத்தின் ஓசை இடி மறுமொழி கூறுவதுபோல் இருந்தது என்று உவமை கூறுகிறார்.
எதிர்காலம்Future. வருங்காலம் (திவாகர நிகண்டு) Future Tense. வினைச்சொல்லின் கால வகை.
எதிர்கால உணர்ச்சிPrescience, Fore knowledge. பின்னால் வரப்போவதை முன்னால் உணர்வது.
எதிர்காற்றுContrary wind. எதிர்த்து அடிக்கும் காற்றுசைக்கிள் மிதிக்கும்போது சொல்வார்கள். ‘நல்ல எதிர்காத்து பலமா அடிக்கு’ என்று.
எதிர் கொள்ளுதல்To advance or go towards a guest or great person to meet, welcome and receive him. வரவேற்றல். இன்று கீழ்ப்பட்ட அரசியல்காரனை எல்லாம் மரபார்ந்த வழிபாட்டுத்தலங்களின் கடவுள்களின் முகவர்கள் வாசலில் காத்து நின்று மாலை சூட்டி, பரிவட்டம் கட்டி, பூரண கும்பம் வைத்து எதிர்கொள்ளுதல் நிகழ்த்துவதைக் காண்கிறோம். To accept. ஏற்றுக்கொள்ளுதல்.
எதிர்கோள்Ceremonious or complimentary greeting, welcoming, meeting and receiving. எதிர்கொள்ளுகை. கம்பர்பாலகாண்டத்தில்திரு அவதாரப் படலத்தில் ‘அரசை எதிர்கோள் எண்ணி’ என்பார்.
எதிர் சாட்சிCounter evidence. மாறான சாட்சியம். Defence witness. பிரதிவாதியின் சாட்சி.
எதிர்ச்சிOpposing. எதிர்க்கைஎதிர்ப்பு. வீழ்தல் – வீழ்ச்சிதளர்தல் – தளர்ச்சிவளர்தல் – வளர்ச்சி என்பன போன்று எதிர்த்தல் – எதிர்ச்சி.
எதிர்ச்சீட்டுCounter document containing the corresponding obligations of the executant of it. எதிர்ச்சீட்டு எனும் சொல்லை விளக்கப் பதினோரு சொல் எழுதவேண்டியது வருகிறது ஆங்கிலத்தில். எதிர்ச்சீட்டு என்ற சொல்லின் பொருள் எதிரிடை முறி.
எதிர்ச்சுவர்Face wall. எதிர்ப்படும் சுவர்.
எதிர்ச் செட்டுCompetition in trade. போட்டி வியாபாரம். Trading at second hand, buying and selling again directly at a small profit. வாங்கி விற்கும் வியாபாரம்.
எதிர்ச் செறித்தல்To dam up, as a flood. தடுத்து நிறுத்துதல். இற்செறித்தல் என்றோர் சொல்லுண்டு சங்கப்பாடல்களில்தலைவியைதலைவனைச் சந்திக்க அனுமதிக்காமல் வீட்டுக்காவலில் வைத்தல் என்று பொருள்செறித்தல் எனும் சொல் நாஞ்சில் நாட்டில் செறுத்தல் என வழங்கும்தடுத்து நிறுத்துதல் என்பதே பொருள்.
எதிர் சம்பாவனைஎதிர்ச்சீர்
எதிர் செலவுவரவேற்பதற்காக எழுந்து செல்லுதல். நாலடியாரில்குடிப்பிறப்பு அதிகாரத்துப் பாடல் ஒன்று ‘இருக்கை எழலும் எதிர் செலவும்’ என்று தொடங்கும்தம்மால் மதிக்கப் பெறுபவரைக் கண்டால் இருக்கையில் இருந்து எழுந்து நிற்பதுவும் எதிர் சென்று அவரைக் காண்பதுவும் மரபு என்பது பொருள்.
எதிர் சோழகம்நேர் தெற்கில் இருந்து வீசும் காற்று. Wind that blows from due south. மேல் விபரம் வேண்டுவோர் ஜோ.டிகுரூஸ் எழுதிய ‘ஆழி சூழ் உலகு’ நாவல் வாசியுங்கள்.
எதிர்த்தட்டுOpposite scale pan in a balance. எதிர்ப்பக்கத்துத் துலாத்தட்டு. That which is contrary, Opposite. எதிரிடை. ‘தாரித்திரியமும் அதற்கு எதிர்த் தட்டான ஐஸ்வர்யமும்’ என்பது வழக்கு.
எதிர்த்தலைஎதிர்த்தட்டு. ‘சிநேகமும் அதற்கு எதிர்த்தலையான துவேசமும்’ என்பது வழக்கு.
எதிர்த்தவன்பாஷாண வகை.
எதிர்த்துத் தருதல்To compensate, To make up for. இழப்புக்கு ஒத்துக் கொடுத்தல்இழப்பீடு.

“சும்மா எதுத்து எதுத்துப் பேசாத என்னா!” என்பர் தாயர்தமது வாதுக்கு நிற்கும் பிள்ளைகளை நோக்கிச் சினந்துஆசிரியரிடம் எதிர்த்துப் பேசுவது என்பது தண்டனைக்குரியதுஎதிர்த்துப் பேசுதல் என்றால் To dispute, controvert, object to, plead against to retort. To speak disobediently எனப் பொருள் தருகின்றன அகராதிகள்தமிழில் சொன்னால் மாறு சொல்லுதல்அடங்காமல் பேசுதல்வாதம் செய்தல்நியாயத்தைப் பேசினால்கூட மூத்தோருக்குஆசிரியருக்கு எதிர்த்துப் பேசுதல் என்பது பண்புக் குறைவுமுதலாளிகள்தலைவர்கள் என எதிர்த்துப் பேசினால் அது தண்டனைக்குரிய குற்றமாகும்.

எதிர்ந்தோர் என்ற சொல்லின் பொருள் Adversaries, Opponents, combatants. சண்டை சச்சரவில்சண்டையில்போரில் எதிர்த்து நிற்போர்பகைவர் என்று நேரடியான பொருள் தருகிறது திவாகர நிகண்டுஎதிர்நடை எனும் சொல்லை நாம் அர்த்தப்படுத்திக் கொள்வது சாதாரணமாக மாறுபட்ட நடை எனும் பொருளில்Acting perversely, Taking an opposite course என்றால் தெளிவாகிறதுஆனால் எதிர்நடை எனும் சொல்லின் சிறப்புப் பொருள் மூலப்பிரதிநடைமுறை மொழியில் அதை மூலப்பத்திரம்தாய்ப்பிரமாணம் என்பர்பிரமாணம் என்பது இங்கே Document. மூலப்பிரதிகளை நகல் எடுக்கும்போதுஇறுதியில் ‘இப்பிரதி எதிர்நடை பார்த்து எழுதியது’ என்று குறிப்பிடுவர்ஆங்கிலத்தில் Counter part of a document என்பர்இந்தப் பொருளை நான் முதன்முதலாக அறிகிறேன்.

எதிர்நடைக் கணக்கு என ஒன்று புழங்கியிருக்கிறது பண்டுஇரண்டு மூன்று பங்குதாரர் சேர்ந்து தொழிலோ வணிகமோ செய்து வந்தபோதுஒவ்வொரு கூட்டாளியும் தனித்தனியாக வரவு செலவு கணக்கு வைத்துக் கொள்வது எதிர்நடைக் கணக்குஅதாவது பங்குதாரர்களின் – கூட்டாளிகளின் தனித்தனிக் கணக்குகூட்டாளிகளின் தனிக்கணக்கு என்பது கூட்டணிகளின் தனிக்கணக்கு போல் அல்லஒரு பங்குதாரரின் கணக்கை மற்றவர் பரிசீலிக்கலாம்தவறு கண்டால் திருத்தலாம்ஏமாற்றும் எண்ணம் தோன்ற வாய்ப்பற்றும் போகும்.

நாள் என்ற சொல்லுக்கு நட்சத்திரம் – Star என்றொரு பொருளுண்டு. Cinema Star அல்லது திரைப்பட நட்சத்திரம் என்போரை சினிமா நாள் என சொல்லிப் பாருங்கள்கேளிக்கையாக இருக்கும். ‘நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை’ என்பதோர் சொலவம். ‘நாளென் செயும்நமை நம்பி வந்த கோளென் செயும்கொடுங்கூற்று என் செயும்?’ எனும் பாடலை சீர்காழி கோவிந்தராஜன் குரலில் கேட்க வேண்டும்!

இங்கு நாள் என்றால் நட்சத்திரம்பிறந்த நாளென்பது பிறந்த நட்சத்திரம்அதாவது Star of Birth. ஆனால் அது இன்று Date of Birth என்று ஆகிவிட்டதுமாமாசித்தப்பாபெரியப்பா யாவரும் அங்கிள் ஆன கதையாகமலையாளத்தில் எவரும் ‘எந்தா நாளு?’ என்று கேட்டால்அது திங்களாழ்ச்சையா செவ்வாய்ச்சையா என்று அறிய அல்ல. ‘குட்டியிட நாளேதா?’ அல்லது ‘செக்கனுட நாளெந்தா?’ என்று கேட்டால் குழந்தையின் பிறந்த நட்சத்திரம் – ஜென்ம நட்சத்திரம் அறிவதற்காககல்யாணத்துக்கு நாள் பார்க்க வேண்டும் என்பது நட்சத்திரப்படி நாள் குறிக்கவேண்டும் என்பதேஎதிர்நாள் என்றொரு சொல் காணக்கிட்டிற்று பேரகராதியில்எதிர்நாள் என்றால் எதிர்நோக்கு நட்சத்திரம் என்று பொருள்.

நாள்மீன் என்கிறது கலித்தொகையும் பட்டினப்பாலையும் புறநானூறும் மதுரைக்காஞ்சியும்.

நிரல் நிறை என்பது வரிசையாகஒழுங்காகநிரலாக வருவதுஎதிர் நிரல் நிறை என்றால் முறை மாறி வரும் நிரல் நிறை என்று பொருள் தரப்பட்டுள்ளது.

எதிர் நிற்றல் என்றால் முன்னிற்றல் என்பது ஒரு பொருள்மாறுபட்டு நிற்றல் என்பது இரண்டாம் பொருள்எதிர்த்து நிற்றல் என்பது மூன்றாம் பொருள். ‘என் எதிரே நில்லாதே’ என்பதுவும் ‘என்னை எதிர்த்து நில்லாதே’ என்பதுவும் வெவ்வேறு பொருள்எதிர்நிலை என்றால் Resistance, Opposition, மாறுபட்ட நிலைமுரண் நிலைஎதிர்நிலை என்றால் Mirror, ஆடி என்றும் பொருள் இருக்கிறதுஆடிமுகம் பார்க்கும் கண்ணாடிஆடிப்பாவை என்பது முகம் பார்க்கும் கண்ணாடியைக் கையிலேந்தி நிற்கும் பெண் பாவைச் சிற்பம்.

தமிழ்ச் செய்யுள் இலக்கணத்தில் எதிர்நிலையணி என ஒன்றுண்டுஉவமான உவமேயங்களை மாற்றிச் சொல்லும் அணி என்பது விளக்கம்குத்துப்பாட்டு கேட்கிற நமக்கு எந்த அணியானால் என்ன?

நீச்சு எனும் சொல்லின் பொருள் நீச்சல்தான்நீந்துதல் என்றும் சொல்வோம்வெள்ளப் போக்குக்கு எதிராக நீந்துவது என்பது செயற்கரிய காரியம்அதை எதிர்நீச்சு எனும் சொல் குறிக்கும்எதிர் நீச்சல் எனும் சொல்லும் சர்வ சாதாரணமாகப் புழக்கத்தில் உண்டு.

நூலாசிரியர் ஒருவர் தன் கொள்கையை நிறுவிபிறர் கொள்கையை மறுக்கும் நூலுக்கு எதிர்நூல் என்று பெயர்தர்க்க நூலாக இருக்கும் போலும்இங்கு இன்று நம்மிடையே அறிஞர் என அலையும் பலருக்கும் தம் கொள்கையிலேயே தெளிவு இல்லை என்றாலும் பிறர் கொள்கையை மாய்ந்து மாய்ந்து மறுப்பார்கள்வேறெந்த தர்க்கமும் கைவசம் இல்லை என்றால் சாதி சொல்லித் தீர்த்தும் விடுவார்கள்அறிவு என்றால் சூது என்றும் பொருளுண்டுஆண்டாள் பயன்படுத்துவார் அறிவு எனும் சொல்லைச் சூது எனும் பொருளில்.

வேலையாக எங்காவது போய்க்கொண்டிருக்கும்போதுஎதிர்பாராமல்முன் தீர்மானம் இல்லாமல்நெடுநாட்களாகத் தேடிக் கொண்டிருப்பவர் முன் தோன்றுவார்அதற்கான சொல் எதிர்ப்படுதல். To meet, encounter, சந்தித்தல் என்றும் பொருள் கொள்ளலாம்மாணிக்கவாசகர்திருப்படையாட்சி பகுதியில், ‘என்னுடைய நாயகனாகிய ஈசன் எதிர்ப்படும் ஆயிடிலே’ என்னென்ன நடக்கும் எனப் பட்டியல் இடுகிறார்எதிர்ப்பாடு என்றாலும் சந்திக்க நிகழ்வதுவேகாட்சி – காட்சிப்பாடு போலசமன் – சமன்பாடு போலஎதிர் – எதிர்ப்பாடுஎதிர்ப்படுதல் எனும் சொல்லுக்கு To resemble, ஒப்பாதல் என்ற பொருளும் தரப்பட்டுள்ளது.

எதிர்ப் பாய்ச்சல் என்றால் என்னபாய்ச்சலின் – நேர்ப்பாய்ச்சலின் எதிர்ச் செயல்எதிரான நீரோட்டத்தைக் குறிக்கும் சொல் எதிர்ப்பாய்ச்சல்அதாவது Counter current. நீரோட்டம் என்பது நேர்ப்பாய்ச்சல் என்றாலும் சில இடங்களில் சுழி இருக்கும்சில இடங்களில் வெள்ளம் எதிர்ப்பாய்ச்சல் பாயும்Leaping in a contrary direction. எதிராகப் பாய்கை என்று பொருள் தந்துள்ளனர்இவையெல்லாம் பழையாற்றின் பெருவெள்ளக் காலங்களில் பதினைந்து வயது முதலே நீந்திய எனக்கு நேரான அனுபவங்கள்.

‘எனது எதிர்ப்பை நான் தெரிவித்தேன்’ என்று பேசுகிறோம்எதிர்ப்பு எனும் சொல்லின் பிறப்பு அதுஆனால் எதிர்ப்பை என்றே ஒரு பெயர்ச்சொல் இருக்கிறதுபேரகராதி எதிர்ப்பை எனும் சொல்லுக்கு An equivalent given for a thing borrowed என்று பொருள் தரும்அதாவது கடனாக வாங்கிய ஒரு பொருளுக்கு ஈடாக வேறொரு பொருளைத் திருப்பிக் கொடுப்பதுஅதாவது ஒரு தேங்காய் அடுத்த வீட்டில் கடனாக வாங்கிஒரு சீப்பு வாழைப்பழமாக அதனைத் திருப்பிக் கொடுத்தால் அது எதிர்ப்பைஅல்லது அரிசி கடனாக வாங்கிக் கொண்டு உளுந்தாகத் திருப்பிச் செலுத்துவது.

புறநானூற்றில் மேற்சொன்ன பொருளில் எதிர்ப்பை எனும் சொல் ஆளப்பட்டுள்ளதுபாடல் எண் 333பாடியவர்பாடப்பெற்றவர் பெயர் குறித்துத் தகவல் இல்லைஅப்பாடலில், ‘மாறு எதிர்ப்பை பெறாஅமையின்’ என்று வரும் ஓரடியில்ஈண்டு எதிர்ப்பையாகக் கொடுத்ததைத் திரும்பப் பெற இயலாது போன மாறுபாடு குறிக்கப் பெறுகிறதுநல்லதொரு பாட்டு என்றாலும் நீளம் கருதி முழுப்பாடலையும் மேற்கோள் காட்டிப் பொருளும் எழுத யாம் முனையவில்லை.

எதிர்பார்த்தல்எதிர்பார்த்திருத்தல்எதிர் நோக்குதல்எதிர் நோக்கிக் காத்திருத்தல் எனும் சொல்லாடல்களை அறிவோம்To expect, look forward to, ஒன்றை நோக்கி இருத்தல் எனப் பொருள் தருகிறது பேரகராதிவரவு பார்த்திருத்தல் என்றும் பொருள்To await the arrival, as of one expected. இரயில் நிலையத்தில்பேருந்துத் தரிப்பிடத்தில்விமான தள வளாகத்தில் உறவினர்நண்பர் வருகை பார்த்துக் காத்திருத்தலாகும் அதுஅடுத்தவர் கையை உதவிக்காக எதிர்பார்த்திருத்தல் என்றும் பொருள்பணமோபொருளோபிற சலுகைகளோ எதிர்பார்த்திருத்தல்To look up to others for help.

எதிர் எனும் சொல்லில் துவங்கும் மேலும் சில தொடர்களைப் பட்டியலிடுகின்றன அகராதிகள்.

எதிர் பொழுதுFuture, இனிவரும் காலம். Future Tense, எதிர்காலம்.
எதிர்மறைNegative, எதிர் மறுப்புஇன்று சர்வ சாதாரணமாக எதிர்மறை என்ற சொல் ஆளப்படுகிறதுஆனால் அதன் எதிர்ப்பதமாக நேர்மறை என்று ஆளப்படுவதன் அர்த்தப்பாடு நமக்கு எட்டவில்லை.

எதிர்மறையில் தொடங்கும் நான்கு இலக்கணக் குறிப்புகள் உள்ளனஎதிர்மறை இடைநிலை என்று ஒன்று. Negative sign in the middle of the word, as அல்இல் என்ற குறிப்புத் தருகிறது பேரகராதிஎதிர்மறைப் பொருளாகக் காட்டும் இடைநிலை இவைஎடுத்துக்காட்டு சொன்னால் விளங்கும்காணலன் என்று ஒரு சொல்காண்+அல்+அன் எனப் பிரியும்இதில் அல் என்பது எதிர்மறை இடைநிலைமாளாத என்பதொரு சொல்இது மாள்++த எனப்பிரியும்இதில் ஆ என்பது எதிர்மறை இடைநிலைநின்றிலன் என்பதும் ஒரு சொல்நில்(ன்)+இல்+அன் எனப் பிரியும்நில் – பகுதிஇல் – எதிர்மறை இடைநிலைஅன் – ஆண்பால் வினைமுற்று விகுதிஇப்படியே நீங்களே பயிற்சியைத் தொடரலாம்ஈதென்ன முட்டைக்கு மயிர் பிடுங்குகிற வேலை என்றெண்ணினால் முக்கியமான மெகா சீரியல் ஏதும் பார்க்கலாம்.

அடுத்த இலக்கணக் குறிப்பு எதிர்மறை உம்மைஉம்மை என்றால் ‘ஏ செல்பி பொண்ணு உம்மாஉம்மா’ என்ற பொருள் அல்லஎதிர்மறையும்மை என்பது எதிர்மறைப் பொருளில் வரும் உம்மைஎடுத்துக்காட்டு சொன்னால் – அரசன் வருவதற்கும் உரியன் எனில் வராமைக்கும் உரியன் என்றும் பொருள் தரும்எனவே எதிர்மறைபொதுவாக உம்மை எட்டுப்பொருள்களில் வரும்எச்சம்சிறப்புஐயம்எதிர்மறைமுற்றுஎண்ஆக்கம்எதிர்நிலை என்பவை அவைஎடுத்துக்காட்டுகள் சொல்லப்போனால் அது தனிக்கட்டுரை ஆகிவிடும்.

எதிர்மறை இலக்கணை என்பது மூன்றாவதுபொருள் – Irony. Using language hinting a meaning contrary to the literal sense என்று பொருள் தந்துள்ளனர்அஃதாவது எதிர்மறைப் பொருளைக் குறிப்பால் உணர்த்துவதுவஞ்சப் புகழ்ச்சி போலபழிகரப்பு அங்கதம் போலமொழி நேர்ப்பொருளையும் தொனிக் குறிப்பு எதிர்மறைப் பொருளையும் தருவதுசொற்கள் நேரடியானவைபொருள் எதிர்மறையானதுஎடுத்துக்காட்டு – ‘தலைவர் மாதிரி யோக்கியனை உலகத்துலே பாக்க முடியுமாப்பா?’. இதுவே எதிர்மறை இலக்கணை எனப்படுவதாகும்.

நான்காவது எதிர்மறை வினைNegative verb என்கிறார்கள். உடன்பாட்டுக்கு எதிராக மறுத்து வரும் வினை என்று பொருள் தந்துள்ளனர்.

எதிர் எனத் தொடங்கும் மேலும் சில சொற்களை ஒரு அறிதலுக்காகக் காணலாம்.

எதிர்மீன்Fish that goes against the water current. நீர்ப் பாய்ச்சலை எதிர்த்துச் செல்லும் மீன். நேர்மையும் உண்மையும் உள்ள கலைஞன் எதிர்மீனாக இருப்பான்.
எதிர்முகம்Confronting position as face to face. நேரெதிர், நேருக்கு நேர். தமிழ்நாட்டு ஆளும் கட்சித் தலைவர்களும் எதிர்க்கட்சித் தலைவர்களும் கல்யாண வீடு, இழவு வீடுகளில் கூட எதிர்முகம் காணமாட்டார்கள். Presence, முன்னிலை. Opposition, மாறுபாடு.
எதிர்முக வேற்றுமைஇஃதோர் இலக்கணக் குறிப்பு. விளி வேற்றுமை என்று பொருள்.
எதிர்முழிFace to face, நேருக்கு நேராய்
எதிர்முறிஎதிர்ச்சீட்டு. எழுதுமுறி என்பர் ஓலையில் எழுதிய பற்றுச் சீட்டுக்கு.
எதிர்மூச்சுப் போடுகைஇருவர் ஒரே உரலில் எதிரெதிராக நின்று மூச்சு வாங்க உலக்கை போட்டு நெல்குத்துதல். மாற்றுலக்கை போடுவது என்பர் அந்தக் காலத்து நாஞ்சில் நாட்டார்.
எதிர்மைஎதிர்காலத்தில் நிகழ்வது. நேர்மைக்கு எதிர்ப்பதமாக எதிர்மை பயன்படுத்தலாமா என அறிய ஆவலுண்டு.
எதிர்மொழிAnswer, Reply. மறுமொழி (பிங்கல நிகண்டு). Rejoinder, counter Argument. மறுப்புரை.
எதிர் வட்டிCounter interest, as on payments made before due date. வட்டிக்குக் கடன் வாங்கியவர், தவணைக்கு முன்பே கடனைத் திருப்பிச் செலுத்தினால், செலுத்தும் முன் தொகைக்கு ஏற்ப கழிக்கும் வட்டி.
எதிர் வரவுபிற்காலத்து வருகை.
எதிர் வழக்குDefence, objection, cross – claim. எதிர் வியாச்சியம். Counter argument, பிரதிவாதம் ‘நாம் என்ன சொன்னாலும் அதற்கு அவன் எதிர்வழக்கு சொல்வான்’ என்பது மக்கள் வழக்கு.
எதிர்வாதம்Reply argument for the defence. பிரதிவாதியின் வாதம். Objection. மாறுபடக் கூறுதல். ‘எதைச் சொன்னாலும் எதிர்வாதம் செய்வான் அவன்’ என்பர் அன்றாட வழக்கில்.
எதிர்வாதிDefendant, Respondent, accused வழக்கின் பிரதிவாதி. He who pleads for the side opposite to ones own. தன் தரப்புக்கு எதிராகத் தானே வாதிப்பவர். Opponent. One who attacks a thesis. அறிவினால் வரும் வினா,
எதிர்வினைஎதிர்காலத்துக் காரியம். ஆனால் வினை, எதிர்வினை என்ற வழக்காடல் உண்டு நம்மிடம். தன்வினை x எதிர்வினை.
எதிர் வெட்டுOpposition, Contradiction. மறுதலை. ‘அவன் எப்போதும் எதிர்வெட்டாப் பேசுவான்’ என்பது எடுத்துக்காட்டு.
எதிரம்பு கோத்தல்எதிராக நின்று அம்பு கோர்த்தல், எதிர்த்து நிற்றல்.
எதிரிடுதல்எதிர்ப்படுதல்.
எதிரிடைOpposition, counter action. எதிர்ச்செயல். Rivalry, Competition, போட்டி.

அகராதிகளைப் பயின்று வரும் காலைஎதிர்வனன் எனும் ஓர் சொல் எதிர்ப்பட்டதுபொருள் – ஏற்றுக் கொள்பவன். Receipient. நாமொரு நடிகனாக இருந்து48 கதாநாயகியருடன் ஓடிச்சாடி உருண்டு புரண்டு காதல் செய்துஅரசுக்கு வரி செலுத்தாமல் கள்ளப் பணம் ஈட்டிகளவொழுக்கத்துக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்துநமது கலைச்சேவையைப் பாராட்டி நடுவணரசு பாரத ரத்னா போன்ற விருதுகள் வழங்குமானால்நாமதை ஏற்றுக் கொண்டால்நாம் அந்த விருதின் எதிர்வனன்வெட்கத்தை விட்டுச் சொன்னால் இங்கு பல எதிர்வனன்கள் உண்மையில் கொள்முதலான்கள்.

அதிர்வு, முதிர்வு, பகிர்வு போன்றதோர் சொல் எதிர்வு. எதிர்வு என்றால் எதிர்படுதல், Meeting, confronting என்பது ஒரு பொருள். எதிர்காலம், Future tense என்பது இன்னொரு பொருள். தொல்காப்பியச் சொல்லதிகார நூற்பா, இறந்த காலம் – நிகழ்காலம் – எதிர்காலம் என்பதை ‘இறப்பின் நிகழ்வின் எதிர்வின்’ என்கிறது. காலம் என்ற தொடர்ந்து வரும் சொல் தவிர்த்து இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்றே குறிக்கலாம். ஆனால் அதற்கும் நடுவணரசின் ஒப்புதல் வேண்டுமா என்பதறியேன்!

வழக்கொழிந்து வரும் சொல் எதிர் ஜாமீன். வரதட்சணை என்று பொருள். ஜாமீன் அரபிச் சொல். வரதட்சணை சமற்கிருதச் சொல். தொல்காப்பியரைத் துணைக்கு அழைத்தால், ‘கடி சொல் இல்லை காலத்துப் படினே!’ காலங்காலமாக மொழிக்குள் புழக்கத்துக்கு வந்துவிட்டால், அச்சொல் எம்மொழிச் சொல்லானாலும் கடிந்து ஒதுக்கப்பட வேண்டிய சொல் இல்லை என்பது பொருள். அதேசமயம் அவரே குறிக்கும் ‘வடவெழுத்து ஒரீஇ’ என்பதையும் தற்சமம், தற்பவம் போன்ற வரையறைகளையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

எதிராளி என்றொரு சொல்லுண்டு, நாம் அன்றாடம் புழங்குவது. நேர்ப்பொருள் பகைவன். Enemy, Adversary. பிரதிவாதி, Rival, Competitor என்றும் பொருளுண்டு. போட்டியாளனும் எதிராளிதான். எதிரியும் எதிராளியே! ஊரில் நடுநிலையாளர்கள் கேட்பார்கள், “ஏ! நீ இப்படிச் சொல்லுக! எதிராளி என்ன நினைப்பான்?’ என்று. பல்லாண்டுகள் முன்பு ஒரு புத்தக வெளியீட்டு விழாவில், படைப்பாளி என்ற சொல்லைப் பேசினேன். பேச்சாளப் பேராசிரியர் கேட்டார், படைப்பாளி பெண்பாலா என்று. ஒருவேளை அவர் எதிராளியையும் பெண்பால் எனக் கொள்ளக்கூடும்.

எதிரிடைக்கட்டுதல் என்றால் போட்டி போடுதல், விரோதித்தல், பகைத்துக் கொள்ளல். எதிரிடைக்காரன் என்றால் விரோதம் செய்பவன். எதிரிலி என்றும் சொல் ஒன்று உண்டு. எதிரில்லாதவன், நிகரில்லாதவன், தன்னிகரில்லாதவன் என்று பொருள். எதிருரைத்தல் என்பது எதிர்த்துப் பேசுதல்.

பில்லி சூனியம், ஏவல் வைப்பது, ஏவல் எடுப்பது என்பன பண்டைய சமூகத்தில் நம்மிடம் உண்டு. இன்றும் அரிதாக இருக்கக்கூடும். ஏவல் என்றால் ஏவல் வைப்பது, எதிர் ஏவல் என்றால் ஏவல் எடுத்தல் என்று ஒரு பொருள். எதிராக மற்று ஒரு ஏவல் ஏவுதல் என்றும் ஒரு பொருள்.

எதிரேறு என்றும் ஒரு சொல். Strength, Power, வலிமை என்று பொருள்.

‘வேகவதிக்கு எதிரேற விட்டதொரு சிற்றேடு
காலகதி நினைக் கரவா காரணத்தின் அறிகுறியே!’

என்பார் மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை.

எதிரொலித்தல் என்றால் To echo, reverberate என்று பொருள். எதிரொலி என்றாலும் Echo தானே!

எதிர்மறை என்று சொல்லின் எதிர்ப்பதமாக நேர்மறை என்பது சரிதானா என்று தேடப்புறப்பட்டேன். இன்னொரு கட்டுரையில் நேர் எனும் சொற்புலத்தில் தேடிப்பார்க்க வேண்டும்.

நாஞ்சில் நாடன்: 28-06-2021 சொல்வனம்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும். Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s