
நவீனத்தமிழ் இலக்கியப் பரப்பில் 45 ஆண்டுகளுக்கும் மேலாகத் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பவர் எழுத்தாளர் திரு.நாஞ்சில்நாடன் அவர்கள்.அவருடைய எழுத்துகள் மகத்தான மானுட விழுமியங்களும்,வாழ்வியல் பற்றும் மிக்கவை.சித்தரிப்பு நேர்த்தியும்,மொழியைக் கையாளும் உத்தியும்,சரளமாகக் கைவரக்கூடிய பகடியுமே அவரது எழுத்துக்களை ஜீவனுடன் வைத்திருக்கின்றன.விஜயா பதிப்பகம் வெளியிட்ட நாஞ்சில்நாடனின் நேர்காணல் தொகுப்பை வாசிக்க(என் கேள்வி உட்பட)நேர்ந்த போது…இத்தனை நேர்காணல்களில் கேட்கப்பட்ட கேள்விகளைத் தாண்டிப் புதிதாக என்ன கேட்பது என மிரட்சியாக இருந்தது.எனினும் நேர்காணலின் பெறுமதி என்பது கேள்விகளைப் பொறுத்ததல்ல…செறிவான பதில்களைப் பொறுத்தது என்பதை உணர வைத்தார் நாஞ்சிலார்.ஓர் கார்த்திகை மாதத்து அந்திப்பொழுதில் என் வீட்டிற்கு அவர் வருகை புரிந்திருந்த போது நிகழ்த்திய பதிவே இந்த நேர்காணல்…
1.எந்த இலக்கியப்பின்னணியும் இல்லாத குடும்பத்தில் பிறந்த நீங்கள் இன்று படைப்பாளிகளிடையே சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கிறீர்கள்.இது எங்ஙனம் சாத்தியமாயிற்று?
சின்ன வயதிலிருந்தே வாசிக்கின்ற ஆர்வத்தை என் ஆசிரியர்களிடமிருந்து பெற்றேன்.7வது,8வது படிக்கும் போதே செய்யுள்களை மனப்பாடமாகச் சொல்வேன்.இப்போதிருக்கும் ஆசிரியர்கள் மனப்பாடப் பாடல்களை உரைநடையாகச் சொல்கிறார்கள்.ஆனால் அப்போதைய எனது ஆசிரியர்கள் பாடல்களை சந்தநயத்துடன்…ஒரு musicality உடன் பாடுவார்கள்.இருமுறை அவர்கள் பாடினாலே அப்பாடல் எனக்கு மனப்பாடமாகி விடும்.நான் நன்றாகப் படிக்கக்கூடிய மாணவனாக இருந்ததால் என்னைப் பேச்சுப்போட்டி,கட்டுரைப் போட்டிகளில் கலந்து கொள்ளச் சொல்வார்கள்.என் தந்தை ஐந்தாம் வகுப்பு ஃபெயில்.அவரிடம் என்னத்தைக் கேட்பது?ஆகவே நான் ஆசிரியர்களிடமே,நீங்க எழுதிக்கொடுங்க சார்,நான் மனப்பாடமாகச் சொல்லிவிடுகிறேன் என்பேன்.அவர்கள் பேச்சுப்போட்டிக்கு எழுதித் தருகிறபோது இரண்டு வரி பாரதி சொல்வார்கள்,பாரதிதாசன் சொல்வார்கள்,கவிமணி சொல்வார்கள்,நாமக்கல் கவிஞர் சொல்வார்கள்.இவற்றைப் படித்து மனப்பாடமாகச் சொல்வேன்.பின்னர் நானே இளம் வகுப்புகளில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு கட்டுரை எழுதித்தர ஆரம்பித்தேன்.13,14 வயதிலேயே நான் அரசியல் கூட்டங்கள் கேட்க ஆரம்பித்து விட்டேன்.பா.ஜீவானந்தம்,நாவலர் நெடுஞ்செழியன்,அன்பழகன்,ஈ.வே.ரா,காமராஜர்,கருணாநிதி,அண்ணாதுரை,பி.ராமமூர்த்தி,கல்யாணசுந்தரம் ஆகியோரது பேச்சுக்களை விரும்பிக் கேட்பேன்.எங்கள் ஊரில் இருந்த நூலகத்திற்குச் சென்று வாசிப்பேன்.பெண்கள் நூலகத்திற்கு வரமாட்டார்கள்.என்னை புத்தகம் எடுத்து வரச் சொல்வார்கள்.அப்படி எடுத்துக் கொடுக்கும்போது நானும் படித்து விடுவேன்.இங்ஙனம் ஆசிரியர்களும் எனக்கு வாய்த்த சூழ்நிலைகளுமே என்னை வளர்த்தெடுத்தது.’திசை நோக்கி தொழுகின்றேன்’ என்று தினமணிக்கு என் ஆசிரியர்களைப் பற்றி ஒரு கட்டுரையே எழுதி இருக்கின்றேன்.
2)சிறுகதை,நாவல்,கவிதை என அனைத்துத் தளங்களிலும் சிறப்பாக இயங்குபவர் நீங்கள்…இருப்பினும் கட்டுரைகளுக்கு அதிக முக்கியத்துவம் தருவது போல் தெரிகிறதே?
என் முதல் கட்டுரையை 2000 ஆவது ஆண்டில் எழுதினேன்.எழுத்தாளராக என் முதல் சிறுகதை ‘தீபம்’ இதழில் வெளிவந்தது.என்னுடைய முதல் நாவல் ‘தலைகீழ் விகிதங்கள்’ 1977-ம் ஆண்டு வெளியானது.தொடர்ந்து 6 நாவல்களும்,5 தொகுப்புகள் சிறுகதைகளும் எழுதினேன்.2000 ஆவது ஆண்டில் சுந்தரராமசாமி அவர்கள் ஏற்பாடு செய்திருந்த ஒரு இலக்கிய முகாமில் ‘நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை’ எனும் கட்டுரையை எழுதினேன்.தலைப்பே சுந்தரராமசாமி கொடுத்தது தான்.நான் அந்த community ஐச் சேர்ந்தவன் என்பதால் அதைப் பற்றிய நல்லவைகள்,தீயவைகள் அனைத்தும் அறிவேன்.26 பக்கங்கள் கொண்ட அந்த கட்டுரை காலச்சுவடில் வெளியானது.”இதை ஏன் ஒரு நூலாக develop செய்து எழுதக்கூடாது?…அதற்கான space இதில் இருக்கிறது” என்று சுந்தரராமசாமி என்னிடம் கேட்டார்.ஆக 120 பக்கங்களாக நான் எழுதிய அந்தக் கட்டுரை நூலை காலச்சுவடே வெளியிட்டது.பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் Anthropology துறையைச் சேர்ந்த திரு.பக்தவத்சலபாரதி அவர்கள் தமிழ்மொழியில் community பற்றிய ஒரு study முதல்முறையாக,நுட்பமாக,கூர்மையாக இப்போது தான் வெளிவந்திருக்கிறது என்று கூறினார்.பின்னர் சுந்தரராமசாமி என்னிடம்…நீங்கள் சிறுகதையாகவோ,நாவலாகவோ எழுத முடியாததை ஏன் கட்டுரையாக எழுதக்கூடாது என்று கேட்டார்.அதை ஏற்று எழுதிய கட்டுரைகள் ‘நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று’ என்ற என் இரண்டாவது தொகுப்பாக வந்தது.தமிழினி அதை வெளியிட்டது.சிற்பி பாலசுப்ரமணியம் அவர்கள்,உங்கள் observation ஐ மிகத் தெளிவாக எழுதுகிறீர்கள் என்றும் கட்டுரை இலக்கியத்திற்கு நீங்கள் ஒரு திருப்புமுனை என்றும் கூறினார்.கனடாவைச் சேர்ந்த எழுத்தாளர் முத்துலிங்கம் அவர்கள்,’நாஞ்சில்நாடன் கட்டுரை இலக்கியத்திற்கும் தன் பங்கை அருமையாகச் செய்திருக்கிறார்’ எனக்கூறி விருது வழங்கிக் கௌரவித்தார்.மேலும் கட்டுரையை கதை போலவும்,கதையை கட்டுரை போலவும் வாசிப்புத் தரத்துடன் எழுதுபவன் நான்.எதை எழுதும் போது ஒரு எழுத்தாளராக என் திறமை முழுமையாக வெளிப்படும்படி எழுத முடிகிறதோ அதையே எழுதுகிறேன்.கட்டுரை எழுதுவது எனக்கு மிக comfortable ஆக உள்ளது.அது மட்டுமன்றி கட்டுரைகள் சிலவற்றை நான் எழுதாவிடில் தமிழில் அவை எழுதப்படாமலே போய் விடும்.
3)உங்கள் நூல்களைப் போலவே அவற்றிற்கு நீங்கள் தேர்ந்தெடுக்கும் தலைப்புகளும் பிரசித்தி பெற்றவை.நூலின் தலைப்பிற்கான உங்கள் மெனக்கெடல் என்ன?
சில நூல்கள் எழுதுகிற போது முதலில் தலைப்பைச் சூட்டி விடுவேன்.சில நூல்களுக்கு எழுதிய பிறகு தலைப்பைத் தேடுவேன்.தலைப்பென்பது நேரடியாக Pointblank ஆக நீங்கள் சொல்ல விரும்புவதை வலியுறுத்த வேண்டிய அவசியமில்லை.தலைப்புக்கும் ஒரு கவர்ச்சி இருக்கு,ஒரு தேடல் இருக்கு.தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சுந்தரமூர்த்தி அவர்கள் என்னிடம் பேசிய போது,’நாஞ்சில்நாடன்,என் மாணவன் ஒருவனை உங்கள் தலைப்புகளை மட்டுமே வைத்து MPhil செய்யச் சொன்னேன்’ என்று கூறினார்.ஆக,தலைப்பு என்பது catchy ஆக இருக்க வேண்டும்.நூலுக்குள் உங்களை இழுக்க வேண்டும்.சமீபத்தில்…கனடாவிலிருந்து ஈழத்தமிழர்கள் நடத்தி வரும் “தாய் வீடு” என்னும் மாதாந்தரிக்கு நான் எழுதிய கட்டுரையின் தலைப்பு : நீலம் – நீலன் – நீலி.இந்த பூமியை எட்டு யானைகள் தாங்குது.அந்த எட்டு யானைக்கும் பெயர் உண்டு.மனைவியரும் உண்டு.இந்த எட்டு யானைக்கும் மதம் பிடித்தால் என்னவாகும் என்று நான் யோசித்ததன் விளைவே ‘எட்டுத்திக்கும் மதயானை’.
4)வாழும் காலத்திலேயே உங்கள். பெயரில் ‘சிறுவாணி வாசகர் மையம்’ வழங்கும் ‘நாஞ்சில் நாடன் விருது’ பற்றிச் சொல்லுங்கள்?
‘சிறுவாணி வாசகர் மையம்’ என் பெயரில் விருது கொடுக்க வேண்டும் என்று சொன்னவுடன் நான் அதன் நிர்வாகிகளிடம் சொன்னேன்…’நான் இறந்த பிறகு கொடுங்கள்’ என்று.அவர்களோ சிற்பி அவர் பெயரில் கொடுக்கத்தானே செய்கிறார் என்று சொல்லி நான் ஏற்கும்படி வேண்டவே ஒப்புக்கொண்டேன்.Sponsor வாங்கித்தான் விருது கொடுக்கிறார்கள்.ஒரு குழு அமைத்து இலக்கியம் என்றில்லாமல் கலை உலகத்துக்குத் தன் அர்ப்பணிப்பை செய்தவர்களுக்கு வருடாவருடம் ஒருவருக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.
5)நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கிலான படைப்புகள் என்பதை உங்களின் பிரத்யேக அடையாளமாகக் கொள்ளலாமா?
எல்லா மொழிக்குள்ளேயும் வட்டாரம் சார்ந்த மொழி இருக்கு.மலையாளத்தில் தெக்கன் மலையாளம்னு சொல்வாங்க.அதெல்லாம் கொல்லத்துக்குத் தெக்க…நெய்யாற்றங்கரை வரை இருக்கக்கூடியது.வடக்கன் மலையாளம் என்றும் உள்ளது – கோழிக்கோடு பகுதியைச் சுற்றி.மாப்ளா Christians அவர்களுக்கும் ஒரு மலையாளம் உள்ளது.பிரதேசம் சார்ந்த மொழி வேறுபாடு எல்லா மொழிக்குள்ளேயும் இருக்கு.நாகர்கோவில், திருநெல்வேலி, கோவில்பட்டி, மதுரை, திருச்சி, தஞ்சாவூர்,வடஆற்காடு,தென்னாற்காடு,சென்னை மற்றும் கொங்கு மொழி,தொண்டை மண்டல மொழி,நடுநாட்டு மொழி ஒவ்வொன்றும் வெவ்வேறு.இதே போல் மகாராஷ்டிராவிலும் உள்ளது.ஒரு காலத்தில் சுத்தத்தமிழில் எழுதிக் கொண்டிருந்தார்கள்…மறைமலையடிகள், மு.வரதராசன், அகிலன், நா.பார்த்தசாரதி போன்றோர்.அது பொதுத்தமிழ்…அதே தமிழை வீட்டில் பேசமாட்டோம்.பின்னர் சண்முகசுந்தரம் போன்றவர்கள் கொங்கு nativity உடன் மொழியைக் கையாள ஆரம்பித்தார்கள்.மக்கள் பயன்படுத்தும் மொழியிலும் original ஆன சொற்கள் இருக்கு.நாஞ்சில் நாட்டிலேயே நான்கு வகையான மொழிகள் இருக்கு.ஐசக் அருமைராஜன்,சுந்தரராமசாமி,நாஞ்சில்நாடன்,கிருஷ்ணன் நம்பி,பொன்னீலன்,நீல.பத்மநாபன்,ஆ.மாதவன் இவர்கள் ஒவ்வொருவர் மொழியும் வெவ்வேறு.ஊருக்கு ஊர் மொழியில் வேறுபாடு உள்ளது.ஆக,எதற்கு என் மொழியை compromise செய்து கொள்ள வேண்டும்?வட்டார வழக்கின் மூலமாக எங்களை classify செய்வதற்கு எதிராக நானே நாலைந்து கட்டுரைகள் எழுதி இருக்கிறேன்.
6)’எட்டுத்திக்கும் மதயானை’க்குப் பிறகு நீங்கள் ஏன் நாவல் எழுதவில்லை?
1975ல் இருந்து என்னுடைய பங்களிப்பு : 6 நாவல்கள் – 156 சிறுகதைகள் – 170 கவிதைகள் மற்றும் 400 கட்டுரைகள்.1998ல் ‘எட்டுத்திக்கும் மதயானை’ நாவலை எழுதினேன்.24 வருடமாகி விட்டது.என் காலம் முடிவதற்குள் கண்டிப்பாக ஒரு நாவல் எழுதுவேன்.என் தாத்தா – அப்பா – நான் என மூன்று பாகமாக எழுதும் எண்ணம் உள்ளது.எங்கள் மூவர் வாழ்விலும் மூன்று வெவ்வேறு தலைமுறைகளில் நிகழ்ந்த சம்பவங்களைக் கோர்த்து நாவலாக வடிவம் கொடுக்க உள்ளேன்.நம்மிடம் 96 வகை சிற்றிலக்கியங்கள் உள்ளன.அவை பற்றிய ஒரு அறிமுக நூல் எழுதினேன்.நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை பற்றி எழுதினேன்.கம்பனின் சொல் ஆளுமை பற்றித் தனி நூல் எழுதினேன்.இவ்வாறு பல கட்டுரை நூல்களை எழுதியதாலேயே நாவல் எழுதுவதில் ஓர் பின்னடைவு ஏற்பட்டு விட்டது.
7)’எனது நோக்கம் மேம்பட்ட வாசக நிலை’ என்று முன்னர் ஓர் நேர்காணலில் கூறியிருந்தீர்கள்.அத்தகைய மேம்பட்ட நிலையை வாசகர்கள் அடைந்து விட்டதாக எண்ணுகிறீர்களா?
First and foremost i am a reader.ஒரு வாசிப்பாளராக இருந்து தான் நான் எழுத்தாளரானேன்.என்னுடைய எழுத்துக்களை – உலகளாவிய மொழிபெயர்ப்புகள் மூலமாகவும்,ஆங்கிலத்தின் மூலமாகவும்,தமிழில் நேரடியாக வாசிக்கின்ற எழுத்துக்கள் மூலமாகவும் ஒப்பிட்டுப் பார்க்கின்ற போது ஒரு உன்னதமான எழுத்தை நோக்கித்தான் நான் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறேன் – வாசகன் என்னும் முறையில்.அப்படிப் பார்க்கின்ற போது பழந்தமிழ் இலக்கியங்கள் என்ற எல்லைக்கெல்லாம் வந்து சேரமுடியுமான்னு சொல்ல முடியவில்லை.அதை முன்மாதிரியாக வைத்துக்கொண்டு தான் என் எழுத்தையே கட்டமைக்க நான் முயற்சி செய்கிறேன்…atleast an attempt towards them.இதை எல்லா மொழியிலேயும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.எப்பவுமே நுட்பமான வாசகர் என்பவர் எல்லா மொழியிலேயும் minority தான்.மொழியில் நுட்பமாக செயல்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்.அவர்களின் ஒரு புத்தகம் 500 காப்பி விற்பதற்கு 5 வருடம் ஆகின்றது.ஆனால் ஒரு சினிமாக்காரர் புத்தகம் எழுதினால் ஒரு வருடத்திற்குள் ஒரு லட்சம் காப்பி விற்றுத் தீர்கிறது.இது ரசிகனுடைய மேம்பாடுன்னு நான் கொள்ள மாட்டேன்.இது வந்து running after popular personalities.ஆனால் மொழியினுடைய நுட்பங்கள் அவர்களுடைய படைப்பில் இல்லை.அது வேறு எங்கேயோ இருக்கு.அவர்களை நான் தப்பு சொல்லவில்லை;குறை சொல்லவில்லை.நான் கேட்கிறேன் – சினிமா சம்பந்தப்பட்ட ஒரு எழுத்தாளருடைய புத்தகம் லட்சக்கணக்கில் காப்பி விற்கிற போது மற்ற எழுத்தாளர்களுடைய புத்தகம் பத்தாயிரமாவது விக்கணும்ல…பத்தாயிரத்தை விடுங்க…மூவாயிரமாவது விக்கணும்ல – முன்னூறு தானே நிக்குது.அப்போ…இது ஒரு வாசக மேம்பாட்டு நிலைன்னு கொள்ள மாட்டேன்.நான் தனிப்பட்ட முறையில் பேசவில்லை.கண்மணி குணசேகரனோ,அழகிய பெரியவனோ,தேவிபாரதியோ,கீரனூர் ஜாகிர்ராஜாவோ,எஸ்.செந்தில்குமாரோ,எம்.கோபாலகிருஷ்ணனோ,குமாரசெல்வாவோ…அந்தத் தரத்துக்கு ஏன் வாசகநிலை வரமாட்டேங்குது?அதனால் மொழியில் நல்ல வாசகரென்பவர் nucleus minority தான்.ஏழரை கோடி பேர் தமிழ்நாட்டில் வாழ்கிறோமென்றால் 60 வருடத்திற்கு முன்னால் கையினால் அச்சுக்கோர்க்கப்பட்ட காலத்தில் ஒரு புத்தகத்துக்கு 1200 காப்பி அடிச்சாங்க.இப்போது 250 காப்பி தான் அடிக்கிறாங்க.Population has doubled and tripled.அதற்குத் தகுந்தாற் போல் அதிகரிக்கத்தானே செய்துருக்கணும்?ஆனாலும் நுட்பமான வாசகர்கள் எல்லா காலகட்டத்திலும் இருக்கத்தான் செய்கிறார்கள்.அவர்கள் தான் எங்களை உயிரோடு காப்பாற்றி வைத்திருக்கிறார்கள்…not that out of their income we live…out of their moral support and strength we survive.
8)இப்போதைய எழுத்தாளர்களில் நம்பிக்கை தருபவர் யார்?
நான் மூன்று விதமாகப் பார்க்கிறேன்.என் வயதொத்த வர்கள்…ஜெயமோகன்,எஸ்.ராமகிருஷ்ணன்,சாருநிவேதிதா,ஷோபா சக்தி,கோணங்கி போன்றோர்.அடுத்த காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள் என எம்.கோபாலகிருஷ்ணன்,கண்மணி குணசேகரன்,கீரனூர் ஜாகிர்ராஜா,அ.வெண்ணிலா,குமார செல்வா,உமா மகேஸ்வரி,அழகிய பெரியவன்,தமிழ்நதி போன்றவர்களைப் குறிப்பிடுவேன்.இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.சுரேஷ் பிரதீப்,சுரேஷ் மான்யா,வேல்முருகன் இளங்கோ,சுனில் கிருஷ்ணன்,கே.என்.செந்தில்,இசை,ராம்தங்கம்,காளி பிரசாத் மற்றும் ஈழத்துப் படைப்பாளிகளான அகரமுதல்வன், டி.கே.தமிழன், குணா கவியழகன்,வாசு முருகவேல், சயந்தன் ஆகியோரையும் குறிப்பிடுவேன்.இப்போது ஈழத்துப் படைப்புகள் மிகுந்த திராணியோடு எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது.நான் அனைவருடைய படைப்புகளையும் up-to-date ஆக படித்துவிட்டுத் தான் தீர்மானிக்கிறேன்.தற்சமயம் நினைவுக்கு வரும் படைப்பாளிகளை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்.இன்னும் பல எழுத்தாளர் பெயர்களை சேர்க்க இயலும்.
9)உங்கள் நாவல்களில் வரும் கதாபாத்திரங்களின் செயல்பாடுகள் பெரும்பாலும் உங்களின் சொந்த அனுபவம் தானா?
பெரும்பாலும் என்னுடைய அனுபவங்கள் தாம்.ஒன்று என்னுடைய அனுபவமாக இருக்கணும் அல்லது அந்த சம்பவத்துக்கு நான் சாட்சியாக நின்றிருக்கணும்.அனுபவத்தை அப்படியே மறுபதிவு செய்வதல்ல இலக்கியம்.அனுபவத்தின் மீது நாம் ஏற்றக்கூடிய கற்பனை மட்டுமல்ல.சில காலம் எடுத்துக்கொண்டு அந்த அனுபவத்தை திரும்பிப் பார்க்கும் போது அது எந்த rangeல் மனதில் தோன்றுகிறது என்பதையும் பொறுத்தது.இப்ப எனக்கு ஒரு தரப்பு இருக்கு.அதற்கு எதிரிடையான இன்னொரு தரப்பும் இருக்கும்.இந்த இரண்டையும் பொதுவாகப் பார்க்கக்கூடிய பொறுப்பு ஒரு எழுத்தாளனுக்கு இருக்கு.ஒரு முறை office tourல் பேருந்தில் நாமக்கல் அருகே வரும் போது நடுரோட்டில் ஒரு குதிரை வண்டி நிக்கிது.குதிரை நகர மாட்டேங்குது.சாட்டை எடுத்து அடிக்கிறான் அந்த பையன்.அப்பன் நோய்வாய்ப்பட்டிருக்கலாம்.அதனால் மகன் வண்டி ஓட்ட வந்திருக்கலாம்.பின்னாலிருந்து பேருந்து ஓட்டுனர் ஹாரன் கொடுக்கிறார். Traffic jam ஆகி விட்டது.போலீஸ்காரர் சென்று பார்க்கிறார்.’குதிரை போக மாட்டேங்குது சார்,நான் என்ன செய்வது?’ என்கிறான் பையன்.எனக்கு நாமக்கல்லில் வேலை இருக்கு.நான் அங்கு போய் தான் சாப்பிடணும்.நேரம் போய்க்கொண்டிருக்கிறது.இது என்னுடைய கோணம்.இன்னொரு கோணமும் இருக்கிறது.அது குதிரையின் கோணம்.காலில் வலி இருக்கலாம்,நோய்வாய்ப்பட்டிருக்கலாம் அல்லது ‘என்ன மண்ணாங்கட்டிக்கு இவனுக்குக் காலம் பூரா நான் வண்டி இழுக்கணும்.வனத்தில் இருந்த என்னை வண்டியில் பூட்டி தீவனம் மட்டும் தான போடுற’ என்ற எண்ணம் தோன்றியிருக்கலாம்.ஆக அனுபவத்தின் மீது நமது பார்வையே இலக்கியம்.
10)கும்பமுனி கதாபாத்திரத்தை நீங்கள் படைக்கக் காரணம் என்ன?
கும்பமுனியினுடைய வயது,உருவம் ,தோற்றம் எல்லாமே நான் என்னுடைய மூத்த எழுத்தாளரான நகுலன் மாதிரியான ஒருவரிடமிருந்து பெற்றுக் கொள்கிறேன்.அவரை சேர்ந்து அவருக்கு மேல் என்னை நான் super impose செய்கிறேன்.தற்சமயம் கும்பமுனியினுடைய வயது,உருவத்துடன் நான் பொருந்திப் போகவில்லை.இன்னொரு பத்து வருடம் கழித்து நானே கும்பமுனியாகலாம்.இப்படி என்னை நான் project பண்ணிப் பார்க்கிறேன்…அப்போது என்னுடைய குணாம்சம் எப்படி இருக்குமென்று?நான் எப்படி react பண்ணுவேன் என்று?இரண்டாவது i always have a criticism on social aspects …அரசியல்,இலக்கியம்,சமூகம் மற்றும் இன்ன பிறவும்.இதை எப்படி சிறுகதையாக எழுதுவது?கும்பமுனி மற்றும் தவசிப்பிள்ளை(சமையற்காரர்) இவர்கள் இரண்டு பேருடைய உரையாடல்கள் மூலம் என்னுடைய ஆங்காரம் முழுவதையும் நான் பேச முடியும்.முன்பின் யோசியாமல் சமூக அவலங்களை வலுவாகச் சாட முடியும்.இதுவரை நான் 32 கும்பமுனி கதைகள் எழுதி இருக்கிறேன்.பெங்காலி எழுத்தாளர் Sharadindu Bandyopadhyay துப்பறிகின்ற கதாபாத்திரம் ஒன்றை வைத்துக் கொண்டு 32 கதைகள் எழுதியிருக்கிறார்.அவர் இறந்து 50 ஆண்டுகளுக்கும் மேலாகிறது.அவருடைய கதைகள் சிலவற்றை சத்யஜித்ரே கூட திரைப்படமாக எடுத்திருக்கிறார்.So i am at par with his record.இன்னும் ஒன்றிரண்டு கும்பமுனி கதைகள் எழுதினேன் என்றால் இந்திய அளவில் இரண்டு கதாபாத்திரங்களை வைத்து கதைகள் எழுதியதில் முதன்மை இடத்தில் இருப்பேன்.
11)நீங்கள் மிகச்சிறந்த உணவு ரசிகரென்பது தெரியும்.நாஞ்சில் நாட்டு உணவுப்பழக்கம் தான் உங்களின் உணவு ஈடுபாட்டிற்கான காரணமா?
ஒரு நேர்காணலில் என்னை ஒரு கேள்வி கேட்டார்கள்…எது சிறந்த உணவு என்று?நான் சொன்னேன்…’உங்கள் பசி தான் அதைத் தீர்மானிக்கும்’ என்று.சிறு வயதில் 20 மைல் தூரத்தில் கடல் இருக்கக்கூடிய இடத்தில் வாழ்ந்தேன்.அதனால் மீன் எங்களுக்கு முதன்மையான அசைவம்.வீட்டிலேயே கோழி வளர்ப்போம்.கோழி தலையைத் தொங்கப் போட்டதென்றால் அன்றைக்கு அது குழம்பு.ஆடு என்பது எங்களுக்கு வருடத்திற்கே ஒன்றிரண்டு முறை தான்.கோயில்கொடைக்கு ஆடு வெட்டினாலோ அல்லது தீபாவளிக்கு பங்கு எடுத்தாலோ தான் உண்டு.நான் மலேஷியா போயிருந்த பொது அங்கிருந்த தமிழ்சங்கத் தலைவர் எங்களுக்கு மான்கறி வாங்கிக் கொடுத்தார்.மிக ருசியாக இருந்தது.அங்கு மான்கறி தடை செய்யப் பட்டதல்ல.அது போல டொரோண்டோவில் நான் இருந்த போது மாட்டுக்கறியை சிறிதுசிறிதாக வெட்டி தீயில் சுட்டு bread ல் வைத்தத் தந்தார்கள்;தின்றேன்.அமெரிக்கா சென்றிருந்த போது என் மகன் சூசி(Sushi – Uncooked meat but marinated) சாப்பிடுறியாப்பான்னு கேட்டான்.எதுக்கு தெரிஞ்சிக்கிட்டு பச்சை மாமிசத்தை போய் சாப்பிடணும்னு நான் வேண்டாம்பான்னு சொல்லி விட்டேன்.பின்னர் கனடா போயிருந்த போது உஷா மதிவாணன் வீட்டில் தங்கினேன்.அவருடைய பெண்ணும்,மாப்பிள்ளையும் என்னை ஒரு ஜப்பானிய உணவு விடுதிக்கு அழைத்துப் போனார்கள்.நன்றாக ஆர்டர் செய்தார்கள்.சாப்பிட்டு முடித்தவுடன் உணவு எப்படின்னு கேட்டாங்க? பிரமாதம்னு சொன்னேன்.இதான் அங்கிள் சூசின்னா ங்க.So,detail தெரிகிற போது we object,தெரியாத போது we enjoy.அப்புறம் ஜப்பான் போன போது சூசி சாப்பிடலாம்யான்னு டோக்கியோ இரா.செந்திலிடம் வாங்கிக் கொடுக்கச் சொல்லிச் சாப்பிட்டேன்.ஆக,நமக்கு மனதளவில் உணவு பற்றிய blocks இருக்கக்கூடாது.எங்கள் நாஞ்சில் நாட்டு பயிர்…நெல்,தென்னை மற்றும் வாழை.குழந்தைகள் உணவாகத்தான் நாங்கள் ராகி கூல் கொடுத்தோம்.கேழ்வரகை அங்கு ‘கூரவு’ என்று சொல்வாங்க.சோளமெல்லாம் நாங்கள் சாப்பிட்டதேயில்லை.பனங்கிழங்கு, நுங்கு, பனம்பழம், பதநீர், கருப்பட்டி ஆகியவை சாப்பிட்டோம்.எங்க அம்மா வாழும் நாள் வரை கடலை எண்ணெய் தொட்டதில்லை.அவங்க பிறந்த ஊர் நெடுமங்காடுக்கு அருகில் உள்ள காட்டாக்கடை.அங்கேயும்,நாகர்கோவில்லேயேயும் தேங்காய் மலிவு.ஆக எங்களுக்கு கடலை எண்ணெய்க்கான தேவை இல்லை.தேங்காய் எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் மட்டும் தான்.வடநாட்டில் கடுகெண்ணெய்யில் தான் சமைக்கிறார்கள்.அது எனக்குப் பிடிக்கவில்லை,வாந்தி வருகிறதென்று நான் சொன்னால் அவன் தேங்காய் எண்ணெய் பற்றிச் சொல்வான்ல.சோளரொட்டி – அதை ‘பாக்ரி’ ன்னு மஹாராஷ்டிராவில் சொல்வாங்க.கல்லில் போட்டு சுட்டெடுப்பார்கள்.வெங்காயம்,வத்தல் மிளகாய்,புளி சேர்த்த காரசட்னியுடன் சாப்பிட்டால் அமிர்தம்ங்க அது.எனக்கு என்னுடைய புளிசேரி,அவியல் மீது பிரேமை உண்டு.ஆனால் எதையும் தாரதம்மியப்படுத்திப் பார்க்கக்கூடாது.
12)இன்றைய இளைஞர்களின் வாசிப்புப் பழக்கம் திருப்திகரமாக இருக்கிறதா?
ஒரு வகையில் சினிமாவும்,Whatsapp சமாச்சாரங்களும் negative ஆன வேலை தான் பண்ணிக்கிட்டிருக்கு.Whatsapp செய்திகளைப் படித்தால் போதும் என்ற எண்ணம் தான் இருக்கிறது.ஆனால் எல்லாக் காலத்திலேயும் வாசிக்கக்கூடிய இளைஞர்கள் இருந்து கொண்டு தான் இருப்பார்கள்.நான் படிச்ச காலத்திலேயும் சரி,இப்ப இருக்குற காலத்திலேயும் சரி.பெற்றோர்களுடைய வழிகாட்டுதலும் இதில் முக்கியபங்கு வகிக்கிறது.பாடப்புத்தகங்களுக்கு வெளியே தங்கள் பிள்ளைகள் படிப்பதை அவர்கள் விரும்ப மாட்டேங்குறாங்க.Reading என்பது பாடப்புத்தகம் மட்டும் தான் என்று நினைக்கிறார்கள்.நிறைய வீடுகளில் செய்தித்தாள் கூட வாங்குவதில்லை.மலையாளிகளின் ஜனத்தொகை மூணே முக்கால் கோடி.மலையாள மனோரமா,மாத்ருபூமி,தேசாபிமானி,கேரள கௌமுதி என அவர்களுடைய செய்தித்தாள்களின் circulation 75 இலட்சம்.ஆனால் ஏழரை கோடி தமிழன் 25 இலட்சம் செய்தித்தாள் தான் வாங்குகிறான்…தினமணி,தினமலர்,இந்து தமிழ்திசை,தினத்தந்தி,மாலை முரசு எல்லாம் சேர்த்து.இது நாம் யோசிக்க வேண்டிய விஷயம் அல்லவா?என் பெண்ணும்,மாப்பிள்ளையும் வேலைக்குப் போயிருக்கிற போது என் பேரன்களை walking அழைத்துச் செல்வேன்.அப்போது அவர்களுக்குத் தாவரங்களையும்,பறவைகளையும் காண்பித்துப் பெயர்களை சொல்லித் தருவேன்.நெருஞ்சி, நாயுருவி, குருக்கு, எருக்கு என இருபதுக்கும் மேற்பட்ட தாவரங்களின் பெயர்களும்…மைனா, கருங்குருவி,தேன்சிட்டு, சிட்டுக்குருவி,காகம்,செம்போத்து, கிளி, புறா, மயில் என பறவைகளின் பெயர்களும் அவர்களுக்குத் தெரியும்.நான் என்னுடைய மேதமையைச் சொல்ல வரவில்லை…இதெல்லாம் குடும்பத்தில் மூத்தவர்கள் சொல்லித் தர வேண்டியது.கடிவாளம் கட்டிய குதிரை மாதிரி தான் நாம் குழந்தைகளை வளர்க்கிறோம்.புத்தகங்களை அவர்கள் தொட்டுப் பார்த்தால் தொடாதே,கிழிஞ்சிடும்னு சொல்றாங்க.நான் சொல்வேன்…கிழித்தால் கிழிக்கட்டும் வேறொன்று வாங்கிக் கொள்கிறேன் என்று.National Book Trust ல் 16 ரூபாய்க்கும்,18 ரூபாய்க்கும் சிறுவருக்குப் புத்தகங்கள் கிடைக்கிறது.வாங்கிக் கொடுங்கள்.திரைப்படங்களும்,கைபேசியும் பெரிய அளவில் வாசிப்புப் பழக்கத்தைச் சீரழிக்கின்றன.
13)உங்களின் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைத்து விட்டதாக நம்புகிறீர்களா?
“கனியேனும் வறிய செங் காயேனும்
உதிர்சருகு கந்தமூ லங்களேனும்
கனல்வாதை வந்தெய்தின் அள்ளிப்பு
சித்து நான் கண்மூடி மௌனியாகித்
தனியே இருப்பதற் கெண்ணினேன்
எண்ணமிது சாமிநீ அறியாததோ
சர்வபரி பூரண கண்டதத் துவமான
சச்சிதா னந்த சிவமே”
என்று தாயுமானவர் பாடியது போல் மனநிலை வாய்க்கப்பெற்றால் தான் இங்கு தீவிர எழுத்தாளனாக இயங்க முடியும்.
https://karthimusings.blogspot.com/2021/12/blog-post.html?m=1
வாய்ப்புக்கு மிகுந்த நன்றி சார்
fantastic !
உங்கள் நேர்காணலை படிக்கும் பொழுது மனம் தானாக உற்சாகம் கொள்கிறது. என்றும் அன்புடன் உங்கள் வாசகன் ப.கலைச்செல்வன்.