தன்னை அழித்து அளிக்கும் கொடை

இசை 

நாஞ்சில் நாடனின் “பாடுக பாட்டே”

சமீபகாலமாக என்னிடம் கொஞ்சம் நாஞ்சில் நாடன் வாசம் அடிப்பதாகச் சொன்னார் ஒரு நண்பர். இருவருக்கும் பொதுவான பழந்தமிழ் இலக்கிய ஈடுபாட்டைக் கருதி அவர் இப்படிச் சொல்லியிருக்கக் கூடும். இதில் நாஞ்சிலுடையதைப் புலமை என்றும், என்னுடையதை ஆர்வம் என்றும் வரையறுக்கலாம். சமீபத்தில் வெளியான என் கட்டுரைத்தொகுப்பின் தலைப்பு “தேனொடு மீன்”. இது கம்பனின் வரி. முதல் கட்டுரைத் தொகுப்பின் தலைப்பு “அதனினும் இனிது அறிவினர் சேர்தல்” ஒளவை அருளியது. என் புத்தகங்களின் பெரும்பான்மையான தலைப்புகள் ஏதோ ஒரு பழந்தமிழ்ப் பாடலிலிருந்து பெறப்பட்டிருப்பது இப்போது நினைவிற்கு வருகிறது. 2008 ல் வெளியான “உறுமீன்களற்ற நதி” என் இரண்டாவது கவிதைத் தொகுப்பு. அப்போது நான் பழந்தமிழ் இலக்கியங்களையோ, நாஞ்சில் நாடனையோ அதிகம் வாசித்திருக்கவில்லை. ஆனால் அந்தத் தலைப்பும் ஒளவையின் ஒரு பிரபலமான பாடலிருந்தே பிறந்துள்ளது. ஆகவே இதை ஒரு “பிறவிக்குறைபாடு” என்றும் கொள்ளலாம்.

இந்தநூலின் தலைப்பு “அகவன் மகளே! அகவன் மகளே!” என்று துவங்கும் ஒரு குறுந்தொகைப் பாடலிலிருந்து தோன்றியுள்ளது. “பாடுக பாட்டே” எனில் சிறப்பித்துப் பாடுவாயாக என்று பொருள். நாஞ்சில் இந்தப் புத்தகமெங்கும் பழந்தமிழ்ப் பாடல்கள் பலவற்றைச் சிறப்பித்துப் பாடியுள்ள்ளார். “திரைகடல் ஓடி திரவியம் தேட வேண்டியது” எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் நமது செல்வங்களை நாம் அறிந்துகொள்வதும். இந்தவகையில் இந்நூலை “தமிழ்ச்செல்வம்” என்று தயங்காமல் சொல்லலாம். இந்த நூலின் இருநூறு பக்கங்களை வாசித்து முடிக்கையில் நமக்குத் தொல் இலக்கியங்களோடு ஒரு பரிட்சயம் நேர்ந்துவிடுகிறது. சுவை கண்டுவிடுகிறது. அந்தச் சுவையோடு சுவையாக நாம் மேலும் தேடிப் படிக்க வேண்டும்.

“கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து” என்று பேசுகையில் நம் நெஞ்சு கொஞ்சம் விம்மத்தான் செய்கிறது. ஆனால் சிக்கலும் அதுதான் என்று தோன்றுகிறது. இரண்டாயிரம் ஆண்டிற்கு முந்தைய மொழி வேறு. பண்பாட்டு, கலாச்சாரங்கள் வேறு. வாசகன் இந்த இரண்டாயிரம் வருடத்து அந்நியத் தன்மையைக் கடக்க வேண்டியுள்ளது. வேறானது என்றாலும் அப்படி முற்றிலும் வேறானதல்ல. மாறவே மாறாத “மனிதாம்சம்” என்று சில உண்டல்லவா? ஒரு இனக்குழுவின் ஆதார அம்சங்கள் என்பது காலம் காலமாகத் தொடர்ந்து வருவது. அதன் உதவியோடுதான் வாசகன் இந்த இரண்டாயிரம் ஆண்டுகளைக் கடக்க வேண்டியுள்ளது. உதாரணமாக “கொங்கு தேர் வாழ்க்கை” என்று தொடங்கும் மங்கையர் கூந்தல் மணம் குறித்த பாடல் குறுந்தொகையில் உள்ளது. சங்ககாலம் தொட்டே தமிழ் ஆண், பெண்களின் கூந்தலைத் தீவிரமாக ஆராய்ந்துவருகிறான். ஓயாது அதைப் பாடிக்கொண்டே இருக்கிறான். அவனுக்குக் கூந்தல் மணம் இயற்கையா? செயற்கையா? என்பது குறித்தெல்லாம் அக்கறையில்லை. அதைப் பாட வேண்டும் அவ்வளவே. முடிவுகளுக்கு அலைய கவிதை அறிவியல் அல்லவே? திருவிளையாடலில் இறையனாரே இறங்கி வந்து களமாடிக் கண்டு சொன்னதென்ன? கூந்தல் மணம் செயற்கை. ஆனால் இந்தத் தீர்ப்பை யாரும் பொருட்படுத்தவில்லை. நானே “லூஸ்ஹேருக்கு மயங்குதல்” என்று ஒரு கவிதை எழுதியுள்ளேன். இந்தப் புத்தகத்திலிலேயே இதையொட்டிய வரியொன்று கி.ராவின் கூற்றாக வருகிறது… “தனீ மனுஷி வாசனை” என்கிறார் அவர். அதாவது வாசனாதித் திரவியங்களின் துணையேதுமின்றிப் பெண் தனியாகக் கிளர்த்தும் வாசனை.

சங்கஇலக்கியம் துவங்கி திருக்குறள், சிற்றிலக்கியங்கள், கம்பன், தனிப்பாடல்கள் வரை நாஞ்சிலைக் கவர்ந்த சில பாடல்களும் அதை ஒட்டி எழுந்த அவரின் சிந்தனைகளுமாக விரிந்திருக்கின்றன இக்கட்டுரைகள். “தனிப்பாடல்கள்” சற்று கூடுதல் கவனம் பெற்றுள்ளன. நவீன இலக்கியப் பரப்பில் இதற்குமுன் பெருமாள்முருகன் இது போன்று தனிப்பாடல்களைச் சிறப்பித்து “வான்குருவியின் கூடு” என்கிற பெயரில் ஒரு நூல் எழுதியுள்ளார். தனிப்பாடல்கள் இயல்பாகவே வெளிப்படையான சுவாரஸ்யமுடையவை. அந்தச் சுவாரஸ்யம் இந்தக் கட்டுரைகளுக்குள்ளும் இறங்கியுள்ளது.

இதில் நாஞ்சிலின் ஆர்வம் கவிதை என்பதைத் தாண்டி “சொற்கள்” என்பதுவரை நீள்கிறது. காளமேகம் கவிதை குறித்த கட்டுரையை அவர் “காளமேகம்” என்கிற பெயரிலிருந்தே துவங்குகிறார்…

“காளமேகம் என்கிற சொல்லுக்கு கார்மேகம் என்று பொருள்… “காளம்” என்ற சொல்லுக்கு கருமை, நஞ்சு, பாம்பு, எட்டிக்காய், அவுரி, மேகம், நற்பயன் தரும் பெருமழை, சூலம், கழுமரம், எக்காளம் என்று பொருள் தருகின்றன திவாகர நிகண்டு.”

சொற்கள் அவரை ரொம்பவும் இம்சிக்கின்றன. இன்புறுத்துகின்றன. அவர் ஒரு சொல்லை ஏந்திக்கொண்டு நிகண்டுகளுக்குள் தொலைந்துபோகிறார். அவர் கோவை விஜயா பதிப்பகத்தில் இரண்டரை ரூபாய் கொடுத்து “க்ஷேத்திர திருவெண்பா” என்கிற நூலை வாங்குகிறார். அதில் “மூப்பும் குறுகிற்று” என்கிற சொற்பிரயோகம் அவருக்குப் பிடித்துப்போகிறது. அந்தப் பிரயோகத்தைப் பிடித்துக்கொண்டு பக்தி இலக்கியம், திருக்குறள், கம்பனின் ஊடாகப் பயணித்து அவர் “பீளை” என்கிற இன்னொரு சொல்லை அடைகிறார். “பீளை” என்கிற சொல்லை முன்வைத்து “யாக்கை நிலையாமை”யை விஸ்தாரமாகப் பேசத்துவங்கி விடுகிறார். கட்டுரையின் முடிவில் அவரே சொல்கிறார்… “ஒரு இரண்டரை ரூபாய் புத்தகம் என்னபாடு படுத்துகிறது பாருங்கள்.”

பழந்தமிழ் இலக்கியத்தில் இருக்கும் பரந்த வாசிப்பின் காரணமாகப் புறநானூற்றில் ஒரு கால் வைத்து, சிறுபாணாற்றுப்படையில் மறுகால் வைத்து கம்பனில் வந்து குதிக்க நாஞ்சிலால் முடிகிறது. இந்த எழுத்திற்கு பின்னே நம்மை மலைக்கச் செய்யும் உழைப்பு உள்ளது. உண்மையில் இது போன்ற பணிகள் பல்கலைக்கழகங்களும், பேராசிரியர்களும் ஆற்ற வேண்டியவை. ஒரு புனைவெழுத்தாளன் இதையும் சேர்த்துச் செய்ய வேண்டியிருப்பது நமது கல்விப்புலத்தின் போதாமை. ஒரு கவிதையின், சொல்லின் பொருளை ஐயமற அறிந்துகொள்ள அவர் பல பதிப்புகளைப் புரட்ட வேண்டியுள்ளது. அகராதிகள், நிகண்டுகளில் நீந்திக் கரையேற வேண்டியுள்ளது. என்னைப் போன்ற தமிழ் மாணவர்களுக்கு இது ஒரு கொடுப்பினை. நாஞ்சிலைப் போன்ற ஒருவர் பல பதிப்புகளைப் புரட்டி உறுதி செய்யும் ஒன்றைக் கண்ணை மூடிக்கொண்டு நம்பிவிடலாம். நமக்கு வேறு வாய்ப்பில்லை. அவ்வளவு பொறுமையும் இல்லை. நாஞ்சிலின் பணியை ஒருவிதத்தில் தன்னை அழித்து அளிக்கும் கொடை எனலாம்.

ஓடுகின்ற நீர்மை ஒழிதலுமே, உற்றாரும்
கோடுகின்றார், மூப்பும் குறுகிற்று நாடுகின்ற
நல்அச்சில் தம்பலமே நண்ணாமுன், தன் நெஞ்சே
தில்லைச் சிற்றம்பலமே சேர்.

நம் ஓட்டம் குறைந்து ஓய்ந்துவிட்டால் உற்றார்கூட நமக்கு உதவ முகம் சுளிப்பார்கள். தாம்பூலம் தரிக்க இயலாமல் வெற்றிலையும், பாக்கும், சுண்ணாம்பும் சேர்த்து அவற்றைச் சிறு உரலில் இட்டு இடித்து உண்ணும்படிக்கு முதுமை வந்து சேரும் முன்னே, நெஞ்சே சிற்றம்பலம் சேர்! என்பது பொருள்.

இந்தப் பாடலைக் குறிப்பிட்டுவிட்டுப் பழந்தமிழ்ப் பாடல்களை வாசிப்பது பற்றி நாஞ்சில் எழுதியிருக்கும் ஒரு பத்தி முக்கியமானது. அதை அப்படியே தருகிறேன்…

இப்பாடலில் இறுதி வரியான தில்லை சிற்றம்பலமே சேர்என்பது மட்டுமே இதனைச் சைவ சமய இலக்கியம் ஆக்குகிறது. புலவர் வைணவ, சமண, பெளத்த இசுலாமிய, கிறித்துவ மதத்ததைச் சார்ந்திருந்து, யாப்பும் அறிந்திருந்து, கவி புனையும் ஆற்றலும் பெற்றிருந்து, இறுதிவரியில் அவர் இறைவனைக் குறித்திருந்தால் எதுவும் நீர்த்துப் போகாது. இக்கூற்றின் மறுதலையாக கடைசி வரி சைவசமயக் கடவுளைக் குறிக்கின்ற காரணத்தினாலேயே முதல் மூன்று வரிகள் தமது கனம் இழந்தும் போய்விட மாட்டா! திரண்ட கருத்து எனக் கொண்டால், காலன் வருமுன்னே, கண்பஞ்சடை முன்னே இறைவன்பால் சிந்தையைச் செலுத்து என்பதுவே. சரிஇறைமறுப்பாளருக்கு இந்தப்பாடல் சொல்ல வருவது என்ன? அவர்கள் தத்தம் காலம் வரும் முன்னே செய்து முடிக்க வேண்டிய நல்ல காரியங்களை விரைந்து முடிக்கக் கருதிக் கொள்ளலாம்.”

புத்தகத்தில் எனக்குப் பிடித்த புறநானூற்றுப் பாடல் ஒன்றைச் சிறப்பித்து எழுதியுள்ளார் நாஞ்சில். அதைச் சொல்ல வேண்டும் என்கிற ஆசை எழுகிறது.

யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய!
பாணர் காண்க இவன் கடும்பினது இடும்பை;
யாணர்ப் பழுமரம் புள் இமிர்ந்தன்ன
ஊண் ஒலி அரவம் தானும் கேட்கும்;
பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி,
முட்டை கொண்டு வன்புலம் சேரும்
சிறுநுண் எறும்பின் சில் ஒழுக்கு ஏய்ப்பச்
சோறுடைக் கையர் வீறுவீறு இயங்கும்
இடுங்கிளைச் சிறாஅர்க் காண்டும்; கண்டும்
மற்றும் மற்றும் வினவுதும்; தெற்றென;
பசிப்பிணி மருத்துவன் இல்லம்
அணித்தோ? சேய்த்தோ? கூறுமின் எமக்கே!

(கடும்பு சுற்றம், இமிர்தல் ஒலித்தல், வீறு வீறு நெருக்கமாக)

பரிசில் பெறச்செல்லும் இரு பாணர்களுள் ஒருவன் இன்னொருவனிடம் சொல்லுவதாகப் இப்பாடலைக் கொள்ளலாம்.

“யான் வாழும் நாட்களும் சேர்த்துப் பண்ணன் நீடு வாழட்டும்! காணுங்கள், பரிசில் பெற வரும் பாணர்களை, அவர் சுற்றத்துக் கொடிய வறுமையை. பருவத்தில் பழுத்து நிற்கும் மரம் நாடிவந்த பறவைகள், ஆவலோடு அதன் கனிகளை உண்ணும் போது எழும் ஆரவாரச்சத்தம் கேட்கிறது. தப்பாது பெய்யும் மழையைக்கருதி, தமது முட்டைகளைத் தூக்கிக்கொண்டு மேட்டுநிலம் நோக்கி வரிசை செல்லும் எறும்புக் கூட்டம் போல, சோறேந்திய கைகளோடு வரும் சிறார் கூட்டத்தைக் காண்கிறோம். அவர்களிடம் சென்று கேட்போம். பசிப்பிணி மருத்துவனான பண்ணனின் இல்லம் அணித்தோ? சேய்த்தோ?”

“பசிப்பிணி மருத்துவன் இல்லம் அணித்தோ? சேய்த்தோ?” என்கிற வரி வாசிக்கும் போதெல்லாம் பரவசம் கொள்ளச்செய்யும் ஒரு வரி. இதுவரை இப்பாடலைக் கவிதையாக வாசித்து நல்ல கவிதை என்று அனுபவித்திருக்கிறேன். ஆனால் நாஞ்சில் இந்நூலில் சொல்லும் வரலாற்றுத் தகவல்களோடு வாசிக்கையில் கவிதை மேலும் உயர்ந்து எழுகிறது. பாடலைப் பாடியது ஒரு அரசன்… சோழன் கிள்ளிவளவன்… அவன் தன் ஆளுகைக்கு உட்பட்ட ஒரு குறு நில மன்னனான “சிறுகுடிக்கிழான் பண்ணன்” என்பவனைப் போற்றிப் பாடிய பாடல் இது. ஒரு பேரரசன், எளிய மனிதன் ஒருவனை நோக்கி என் ஆயுளையும் சேர்த்து நீயே வாழ்ந்துகொள் என்கிறான். மேலும் அவனை “பசிப்பிணி மருத்துவன்” என்றே விளித்துப் போற்றுகிறான். சங்கஇலக்கியத்தில் கிள்ளிவளவனைப் போற்றிப் பாடும் பாடல்கள் பலவுண்டு. ஆனால் அவன் பாடியதாகக் கிடைப்பது இந்த ஒரே பாடல்தான் என்கிறார் நாஞ்சிலார். ஒரே ஒரு கவிதை… அதுவும் ஆகச்சிறந்த கவிதை… அதுவும் தன் குடைநிழலில் வாழும் ஒருவனைப் போற்றிப் புனைந்தது.

சில தருணங்களில் சில வரிகள் விசேஷமாகத் திறந்துகொள்ளும்.சில சொற்கள் விசேஷமாகக் கவனம் ஈர்க்கும். இந்த முறை நாச்சியார் திருமொழியின் விரகதாபப் பாடல் ஒன்று.. அதில் இடம்பெற்றுள்ள “குதூகலித்து” என்கிற ஒரு வரி…

பொங்கிய பாற்கடல் பள்ளி கொள்வானைப்
புணர்வதோர் ஆசையினால் என்
கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதூகலித்து
ஆவியை ஆகுலம் செய்யும்.

ஆம்… காமம் குதூகலமும், ஆகுலமும் கூடியதுதான். “தாபம்” என்கிற சொல் குளிர்ந்து எரிவது. “ஏக்கம்” என்கிற சொல் தேனும், நஞ்சும் கலந்தது. “இன்பவேதனை” என்கிற சொற்றொடர் இப்போது புழக்கத்தில் உள்ளது. கொஞ்சம் செக்ஸ்பட டைட்டில் போல் இருந்தாலும் ஆழ்ந்த பொருளுடையது. ஆயினும் இந்தப் பரவசம் காமத்திற்கு மட்டுமே உரித்தானதன்று. கலையின், இசையின் உட்சபட்ச தருணங்களில் வெளிப்படுவது. “ஆகவே சகோதரனே! நீ ஒரு காமுகனாய் இருப்பது குறித்து மனம் வருந்தாதிருப்பாயாக!”

நந்திவர்மன் நாட்டு மங்கையரின் இடையைப் பாடிய தனிப்பாடல் ஒன்று…

கைக்குடம் இரண்டும், கனகக் கும்பக்குடமும்
முக்குடமும் கொண்டால் முறியாதோ?- மிக்கபுகழ்
வேய்க்காற்றினால் வீரநந்தி மா கிரியில்
ஈக்காற்றுக்கு ஆற்றா இடை?

மலையில் பலத்த மூங்கில்காற்று வீசும் வேளையில், இடுப்பில் இரு குடங்களும், தலையில் ஒரு குடமும் கொண்டு நடந்து வந்தால், மென் காற்றுக்குக்கூட ஆற்றாத அந்த இடை எப்படித் தாங்கும்? என்பது பாடலின் திரண்ட பொருள். “ஈக்காற்று” என்பதற்கு மென்காற்று என்று பொருள் சொல்கிறார் நாஞ்சில். இன்னொரு உரை “ஈரமான சிறிய காற்று” என்று சொல்கிறது. நான் “ஈயின் காற்று” என்றே வாசித்தேன். பொருள் தவறாக இருக்கலாம். ஆனால் நயம் நன்று. ஒரு நாள் முழுதும் அந்த “ஈக்காற்று” என்னைத் தூக்கிப் பறந்தது. விமானம் வானில் சீறிப்பாய்கையில் ஒரு காற்று எழும். ரயில்பெட்டிகள் தடதடத்துக் கடக்கும்போது ஒரு காற்று எழும். கொக்கு ஒன்று நம்மைக் கடந்து செல்கையில் ஒரு காற்று எழும். இப்படியாக ஈ எழுந்து பறக்கும் போதும் ஒரு காற்று எழும் அல்லவா? அக்காற்றிற்கும் தாங்க மாட்டாத இடை.

சில கட்டுரைகளில் பேசுபொருளின் மையத்திலிருந்து விலகி, சொற்களைத் துரத்திக்கொண்டு தாவித்தாவிப் பறக்கிறார் நாஞ்சில். சொற்காமம் அவரை இழுத்துக்கொண்டு போகிறது. எழுதித் தேர்ந்த கை என்பதால் எவ்வளவு தூரம் போன பிறகும் திரும்பிவர முடிகிறது அவரால்.

ஒரு பாடலில் “கோயின்” என்கிற சொல்லிற்கு “புகுந்து” என்று பொருள் தந்துள்ளார் நாஞ்சில். இது “going” என்பது போல ஒலிக்கிறது. இந்த ஆங்கிலத் திருட்டை நாம் தமிழர் தம்பிகள் அண்ணனின் மேலான கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும்.

பழந்தமிழ் இலக்கியச் செய்திகளோடு நிற்காமல் நவீன வாழ்வு குறித்த விமர்சனங்களோடு எழுதப்பட்டிருப்பது இப்புத்தகத்தின் குறிப்பிடத்தக்க அம்சம். ஆயினும் நாஞ்சிலின் ரெளத்திரம் சில இடங்களில் முரட்டுக்கோபமாக வெளிப்பட்டிருப்பதாகத் தோன்றியது. “தினகரன்” என்கிற சொல் இடம் பெறுகிற பாடலை விளக்கும் போது “இங்கு தினகரன் என்பது T.T.V. தினகரன் அல்ல” என்பது போல் எழுதும் இடங்கள். இதுபோன்ற இடங்களில் ஒருவித “எரிந்து விழும் தன்மை” தோன்றிவிடுகிறது. எவ்வளவு எரிந்து விழுந்தாலும் நம் ஆட்களுக்கு உறைக்காது என்பது தனிக்கதை.

இத்தனை சிறப்புகளுக்கிடையே நாஞ்சிலிடம் சொல்லிக்கொள்ள முக்கியமான விஷயம் ஒன்று உண்டு. சொற்பித்து பெண்பித்தைக் காட்டிலும் பெரும்பித்து போலும்! மயக்கு வித்தைக்காரன் பின் செல்லும் சிறுமியென அது நம்மை இழுத்துச்செல்ல வல்லது. “எலிகள் பேக் பைபரிடம்” எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். சொற்கிடங்கின் ஆழத்துள் பிரகாசமான இருள் சூழ்ந்துள்ளது. நாஞ்சில் இந்தத் திளைப்பிலிருந்து விடுபட்டு மேலேறி வர வேண்டும். கொஞ்சகாலம் சொல்லாராய்ச்சிகளை நிறுத்திவிட்டுப் பாதியில் நிற்கும் அவரது நாவலை எழுதி முடிக்கவேண்டும் என்று அவரை உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன். அவரது முந்தைய நாவல் வெளியாகி 22 ஆண்டுகள் ஆகிவிட்டன. “இனிமேல் என்னால எழுத முடியுமான்னு தெரியல” என்று வேதனையோடு வெளிப்பட்ட அந்தச் சொற்களை ஓர் இணைய வழி உரையாடலில் கேட்க நேர்ந்தது. நாஞ்சில் அவர்களே நீங்கள் உங்கள் தமிழ்க்கடனை இனிதே நிறைவேற்றிவிட்டீர்கள். சற்று அதிகமாகவே அளித்துவிட்டீர்கள். இனி உங்கள் உலகைப் படையுங்கள்.

இந்தப் புத்தகத்தில் ஒரு புறநானூற்றுப் பாடலை சிலாகித்துவிட்டு நாஞ்சில் சொல்கிறார்… “இந்தப் பாடலை அனுபவிப்பதற்காகவே இந்த வாழ்நாள் எனக்குக் கிடைத்தது போலும்!”. ஒரு படைப்பாளி பிறிதொன்றில் இவ்வளவு தோய்ந்து கரைவது, ஏதோ ஒருவிதத்தில் அவன் சொந்த எழுத்தைச் சோர்வுக்குள் தள்ளிவிடும் போலும்! நானெல்லாம் காமத்துப்பாலிற்கு உரை எழுதப் புகுந்ததன் பின்னணியில் அய்யன் என்கிற மாயாவியின் சதித்திட்டம் ஒளிந்துள்ளது. எனவே மேற்சொன்னவை மிகச்சிறிய அளவில், ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாக எனக்கும் சேர்த்துச் சொல்லிக்கொண்டதுதான்.

பழந்தமிழ் இலக்கியங்களை பக்தியின் நிமித்தம் புறக்கணிப்பவர்களைப் பார்த்து நாஞ்சில் ஒரு கேள்வி கேட்கிறார்… “குளத்தோட முரணிகிட்டு குண்டி கழுவாமப்போனா யாருக்கு நட்டம்?”

நானும் அதையே கேட்க விரும்புகிறேன்.

பாடுகபாட்டே – நாஞ்சில் நாடன் – விஜயா பதிப்பகம் – பக்கம்: 191- விலை: 150

XXXXXXXXXXXXXXX

நன்றி: https://aroo.space/2021/01/24/தன்னை-அழித்து-அளிக்கும்/

 

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s