கணக்கெனக் கருதினால் இதுவென் நான்காவது கவிதைத் தொகுதி. இதனைச் சிறுவாணி வாசகர் மையம் வெளியிடுகிறது. முதல் தொகுப்பினை கோவை விஜயா பதிப்பகம் ‘மண்ணுள்ளிப் பாம்பு’ எனும் தலைப்பில் 2001-ம் ஆண்டில் வெளியிட்டது. ‘சரஸ்வதி’ இதழ் நடத்திய மூத்த அண்ணா நா.விஜயபாஸ்கரன் வெளியிட்டார். அந்தத் தொகுப்பில் 47 கவிதைகள். அடுத்த தொகுப்பு திருச்சிராப்பள்ளி உயிர் எழுத்துப் பதிப்பகம் ‘பச்சை நாயகி’ என்ற தலைப்பில் 2010-ம் ஆண்டில் வெளியிட்டது. சென்னை புத்தகத் திருவிழாவில் நண்பர் சுதீர் செந்தில் உடனிருக்க ‘உயிர்மை ‘ ஆசிரியர் கவிஞர் மனுஷ்ய புத்திரன் வெளியிட்டார். அந்தத் தொகுப்பில் 46 கவிதைகள். முதலிரண்டு தொகுப்பின் கவிதைகளையும் உள்ளடக்கி, மேற்சென்று யாம் யாத்த 32 கவிதைகளையும் சேர்த்து 2014ம் ஆண்டில், கோவை விஜயா பதிப்பகம் ‘வழுக்குப் பாறை’ எனும் தலைப்பில் மூன்றாம் தொகுப்பு வெளியிட்டது.
பிறகான கடந்த ஏழு ஆண்டுகளில் நானெழுதிய 38 கவிதைகள் தற்போது ‘அச்சமேன் மானுடவா?’ எனும் தலைப்பில் வெளியாகிறது. ஒத்த சிந்தனையும் நட்பும் கொண்ட சில இளைய எழுத்தாளர் என்னிடம் கேட்பது, “சமீப காலமாக நீங்க செய்யுள் ஏதும் எழுதலையா?’ என்று. என் கவிதைகள் குறித்த நேர்மையான இலக்கிய விமர்சனமும் ஆகும் அது. செய்யுள் எனும் சொல் பாடல், பாட்டு எனும் சொற்களின் உடன் பிறப்புத்தான். கவி, கவிதை எனும் சொற்கள் காலத்தால் பிந்தியவை. ‘கவியெனப் படுவது!’ எனும் தலைப்பில் எனதொரு முழு நீளக் கட்டுரை உண்டு. வஞ்சமின்றிக் காழ்ப்பின்றிப் பகையின்றி, சாதிச் சாய்வுகள் இன்றி, அழுக்காறுமின்றிக் கூறப்படும் எந்த விமர்சனமும் நல்ல நோக்கத்தின் பாற்பட்டதே! நமது கைப்புண்ணியம் எவ்வளவென நாமறிய மாட்டோமா?
பன்னீராண்டுகள் மாதவியுடன் கூடி வாழ்ந்து, மன முறிவினால் பிரிந்து கண்ணகியைச் சேர்ந்த காலத்து, தனது வறுமையையும் துன்பத்தையும் நினைத்து வருந்திக் கோவலன் கூறுவதாக சிலப்பதிகாரத்தில் புகார்க் காண்டத்தில் கனாத்திறம் உரைத்த காதையில் சில வரிகள் எழுதினார் இளங்கோவடிகள். ‘குலம் தரு வான் பொருள் குன்றம் தொலைத்த இலம்பாடு நாணுத் தரும் எனக்கு’ – என்று. இலம்பாடு என்றால் ஒற்கம். ஒற்கம் என்றால் வறுமை, துன்பம். ‘கற்றிலன் ஆயினும் கேட்க அஃது ஒருவற்கு ஒற்கத்தின் ஊற்றாம் துணை’
என்பது வள்ளுவம். கலித்தொகையும் புறநானூறும் ஒற்கம் பேசுகின்றன.
நாமிங்கு இரங்கிக் கூற வருவது, தமிழ்க்குலம் தந்த வானளாவிய கவிதைக் குன்றம் தொலைத்து விட்ட வறுமை எமக்கு நாணம் தருகிறது என்பது.
சங்க இலக்கியம் என அறியப்படும் பத்துப்பாட்டு. எட்டுத்தொகைப் பரப்பில் மொத்தம் பாடிய புலவர்கள் 473 என்றும் அவருள் ஒரேயொரு பாடலை மட்டுமே பாடியவர் 293 புலவர்கள் என்றும் பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை நிறுவுகிறார். அவரைத் தமிழ்த் துரோகி என்றது இங்கோர் இயக்கம். நல்ல வேளையாக வெள்ளாள எழுத்தாளன் என்று வரையறையும் செய்யவில்லை.
ஒரேயொரு பாடல் பாடியவர் பட்டியல், ஆடுதுறை மாசாத்தனார், ஆவூர் கிழார், இரும்பிடர்த்தலையார், இறையனார், கருவூர் இழார், கீரந்தையார், குட்டுவன் கீரனார், குறமகள் இளவெயினி, தாயங்கண்ணியார், நப்பசலையார் என நீளும்.
கணியன் பூங்குன்றன் பாடியது இரண்டு பாடல்கள். தனிப்பாடல் திரட்டில் ‘நாராய் நாராய் செங்கால் நாராய்’ பாடிய சத்திமுத்தப் புலவர் பெயரிலும் இரண்டு பாடல்களே கிடைத்துள்ளன.
சங்ககால ஔவையார் பெயரில் 59 பாடல்கள் மட்டுமே தற்போது நம் சேமிப்பில். அன்னவயல் புதுவை ஆண்டாள் கணக்கிலோ திருப்பாவை 30, நாச்சியார் திருமொழி 113, ஆக 143. காரைக்காலம்மை கணக்கில் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் 11, மூத்த திருப்பதிகம் 11, திரு இரட்டை மணி மாலை 20, அற்புதத் திருவந்தாதி 101, ஆக 143.
இன்றுடன் கவிதை எழுதுவதை, நிறுத்திக் கொண்டால், எம் கணக்கில் 163 பாடல்கள் இருக்கும். எண்ணிக்கையை ஒப்பிட்டுப் பேச ஈண்டு யாம் முனையவில்லை. முன்னவர்களுடன் ஒப்பிடும்போது எம் கவித்துவத்தின் கற்பனையின் மொழியாளுமையின் இசைவுத் தன்மையின் ஒற்கம் நாணுத் தரும் எமக்கு. ‘நெடிய மொழிதலும் கூடிய ஊர்தலும் செல்வம் அன்று’ என்பார் நற்றிணைப் புலவர் மிளை கிழான் நல்வேட்டனார். நீளப் பேசுவதும் விரைந்து செல்வதும் செல்வம் இல்லை என்று பொருள். எனவே நம் கவிதையை நாமே பேசப் புகவில்லை .
இந்தக் கவிதைகளில் பெரும்பான்மையானவற்றை வெளியிட்ட ஏழு பருவ இதழ்களுக்கும் நன்றி. பன்னீராண்டுகளுக்கு முன்பே என் பெயரில் தளம் துவங்கி சிறப்புடனும் பொறுப்புடனும் நடத்தி வரும் எம் குடும்ப நண்பர், அன்பு சகோதரர், ஏர்வாடி S.I.சுல்தான் அவர்களுக்கு இச்சிறுநூல் சமர்ப்பணம்.
சிறுவாணி வாசகர் மையம் வெளியிடும் எனது நான்காவது நூல் இது. “அஃகம் சுருக்கேல்” ‘நவம்’ “நாமமும் நாஞ்சில் என்பேன்” என்பன முதல் மூன்று. தனது ஐந்தாவது ஆண்டுத் தொடக்கத்தின் போது எனதிந்தக் கவிதைத் தொகுப்பு வெளியாவதில் மகிழ்ச்சி.
இத்தொகுப்புக்கு அணிந்துரை எழுதிய, நான் பெரிதும் மதிக்கின்ற நண்பர் வ.ஸ்ரீ. அவர்களின் பெருந்தன்மைக்கு நன்றி.
சிறுவாணி வாசகர் மையத்தின் பொறுப்பாளர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் கொடையாளர்களுக்கும் நலம் நாடுபவர்களுக்கும் நன்றியும் வாழ்த்தும்.
என்றும் அன்புடன்
நாஞ்சில் நாடன்
கோயம்புத்தூர் – 641 042.
15 மார்ச் 2021
பேரா. வையாபுரி அவர்கள் பல நல்ல ஆய்வுகளைச் செய்திருந்தாலும் பிழையான பல செய்திகளை உண்மை போல் இட்டது குற்றமே.. திருக்குறளில் ஒரு சொல் கூட சமக்கிருதம் இல்லாத போது, ( நான் இரண்டு மொழிக்குடும்ப மொழிகளையும் மொழியியலையும் கற்றாய்ந்தவன்) நன்றாக தெரிந்த தமிழ்ச் சொற்களை கூட சமக்கிருதம் எனச் சொன்னதும், கால கணக்கை சமக்கிருதமயமாக்கபட்ட நிலையில் பார்த்ததும் தமிழுக்கு எதிரானதே.