நாஞ்சில் நாடனின் நாவல்களை முன்வைத்து
1,
நாஞ்சில் நாடன் 150 க்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். இப்போதும் எழுதிக் கொண்டிருக்கிறார். பழந்தமிழ் இலக்கியங்கள் மற்றும் சொல்லாய்வுகள் சார்ந்து தொடர்ந்து முக்கியமான பல கட்டுரைகளை அண்மைய ஆண்டுகளில் எழுதி வருகிறார். தோராயமாக நாநூறு கட்டுரைகளுக்கு மேல் இருக்கலாம் என உரையாடலின்போது கூறினார். முறையே ‘கறங்கு’ மற்றும் ‘பாடுக பாட்டே’ அவருடைய இவ்விரு முகங்களின் அண்மைய காலப் பரிணாமத்தைக் காட்டுகின்றன. கும்பமுனிக் கதைகள், கான் சாகிப், தன்ராம் சிங், இடலாக்குடி ராசா, பூனைக்கண்ணன், ஏவல் போன்ற சிறுகதைகளே இன்று அதிகம் பேசப்படுகின்றன. அவருடைய மரபிலக்கியக் கட்டுரைகள் தமிழுக்கு அவர் விட்டுச் செல்லும் கொடை என்றே சொல்லலாம். தொடர்ச்சியாக இயங்கி வரும் மூத்த எழுத்தாளர்களை நாம் சரிவர உள்வாங்குவதில்லையோ என எனக்கு ஓர் எண்ணம். எழுத்தின் ஊடாக அவர்கள் அடைந்திருக்கும் பரிணாமத்தை நாம் கணக்கில் கொள்வதில்லை. நாஞ்சில் நாடனையும் அப்படி வட்டார வாழ்வியலை எழுதியவர் எனப் பரவலாகப் புரிந்துகொண்டுள்ளோம். ஆனால் அவருடைய அண்மைய சிறுகதைகளை வாசிக்கும்போது தமிழ்ச் சிறுகதைகளின் எல்லையை எத்தனை தூரம் நகர்த்தி இருக்கிறார் என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. எனினும் இக்கட்டுரை அவருடைய சிறுகதைகளைப் பற்றியது அல்ல.
‘தலைகீழ் விகிதங்கள் ’, ‘என்பிலதனை வெயில் காயும்’ ‘மாமிசப் படப்பு’ ‘மிதவை ’ ‘சதுரங்க குதிரை’ ‘எட்டுத் திக்கும் மதயானை’ என ஆறு நாவல்கள் எழுதியுள்ளார். 1977 ஆம் ஆண்டு ‘தலைகீழ் விகிதங்கள்’ வெளியாகிறது. ஆக சமீபத்திய நாவலான ‘எட்டுத்திக்கும் மதயானை’ வெளியாகி இருபத்தி மூன்று வருடங்கள் கடந்துவிட்டன. 2000க்குப் பிறகான தமிழ் நாவல்கள் பல மாற்றங்களை, பரிணாமங்களை அடைந்துள்ளன. பெருநாவல்கள் ஆட்சி செலுத்திய காலகட்டத்திற்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தவை நாஞ்சிலின் நாவல்கள். சிறுகதையாசிரியராக அவருடைய அசலான பங்களிப்பு அளவிடப்படும் அளவிற்கு அவருடைய நாவல்கள் விவாதிக்கப்படுவதில்லை என்று எனக்குத் தோன்றுவதுண்டு. அவர் தொடர்ச்சியாகக் கதைகளை எழுதி வருவதால் சிறுகதைகள் பற்றிய விவாதங்களில் ஏதேனும் ஒருவகையில் அவருடைய கதைகள் விவாதத்தில் புழங்குகின்றன. ‘தலைகீழ் விகிதங்கள்’ ‘சொல்ல மறந்த கதையாகத்’ திரைப்படமான வகையில் கவனம் பெற்றது. பிற நாவல்கள் பெரிதாக விமர்சிக்கப்பட்டதில்லை. தமிழின் சிறந்த பத்து நாவல்கள் பட்டியலில் அவ்வளவாக யாரும் நாஞ்சிலின் நாவல்களைப் பட்டியலிட்டதும் இல்லை. இந்த ஆறு நாவல்களை மொத்தமாக வாசிக்கும்போது, நாவலாசிரியராக நாஞ்சில் நாடனை நாம் சரியாக மதிப்பிடவில்லை எனும் நெருடல் எனக்கு ஏற்பட்டது. என் நோக்கில் ‘என்பிலதனை வெயில் காயும்’ ‘மிதவை’ மற்றும் ‘சதுரங்கக் குதிரை’ ஆகிய மூன்று நாவல்களும் தமிழின் சிறந்த நாவல்களின் வரிசைக்கு உகந்தவை என உறுதியாகச் சொல்வேன்.
நாஞ்சில் நாடனுக்கு மெய்யியல் கோட்பாடுகள் மீது பெரிய ஈர்ப்பு ஏதுமில்லை. ‘பசியைப் புரிந்துகொள்வதற்குத் தத்துவம் தெரிந்திருக்க வேண்டியதில்லை. மனிதகுல வரலாறு தெரிந்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. அதற்கு மொழிகூடத் தெரிந்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் இல்லை.’ (எட்டுத்திக்கும் மதயானை) எனும் பூலிங்கத்தின் மனவோட்டமே அவர் நிலைப்பாடும் எனக் கொள்ள இயலும். படைப்பில் தத்துவத்தின் பங்களிப்பை எப்போதும் நிராகரித்தே வருகிறார். எனினும் நாஞ்சில் நாடனின் தத்துவப் புலத்தை ‘இருத்தலியல்’ என வகைப்படுத்தலாம். எட்டுத்திக்கும் மதயானையில் ‘முன்னும் போகவிடாத பின்னும் போகவிடாத நின்ற பாவனையில் ஓடிக் கொண்டிருப்பதாகக் கற்பனை செய்துகொள்ளும் சுய நிந்திப்புக்கு உள்ளான வாழ்க்கை’ எனும்வரி அவருடைய எல்லா நாவல்களின் முதன்மைப் பாத்திரங்களுக்கும் பொருந்தும். நாஞ்சில் நாடனின் நாவல்களின் தலைப்புகளை மட்டும் கருத்தில் கொண்டால்கூட அடிப்படையில் நாஞ்சில் நாடனின் நாவல்கள் இருத்தலியல் தன்மை கொண்டவை என்பதை உணர்ந்துகொள்ள முடியும். ‘தலைகீழ் விகிதங்கள்’. திருமண உறவில் சமூகப் பொது வழக்கத்தில் உள்ள ஆண் பெண் உறவுச் சமன்பாட்டைத் தலைகீழாக்குகிறது. இந்தத் தலைகீழாக்கம் ஏன் நிகழ்ந்தது? அதன் விளைவுகள் என்ன என்பதை விசாரிக்கிறது. சிவதாணுவிற்கும் பார்வதிக்குமான திருமண உறவின் நிறப் பிரிகைகள் நுணுக்கமாகப் பதிவாகின்றன. சொக்கலிங்கம் பிள்ளை, நீலாப்பிள்ளை ஆகியோரிடம் அவமானத்தை எதிர்கொள்ளும் சிவதாணு அங்கே பார்வதியின் தங்கை பவானியிடம் மட்டுமே ஆறுதலை அடைகிறான். அகங்காரப் பகடையாட்டத்தின் துல்லியப் பிரதி. ‘மாமிசப் படைப்பு’ என்பது இறைவனுக்குப் படைக்கப்படும் பலிச் சோறு. எல்லாம் இயல்பாகவும் நல்லவிதமாகவும் இருக்க வேண்டிச் செய்யப்படும் நேர்த்தி அல்லது நன்றிக்கடன். கந்தையா பலியிடப்படுகிறான். எல்லா காலங்களிலும் தங்கள் இலக்கை மனிதர்கள் அடைய எவரையோ பலியளிக்க வேண்டியதாய் இருக்கிறது.
‘என்பிலதனை வெயில் காயும்’ திருக்குறளில் இருந்து எடுத்தாளப்படும் தலைப்பு. எலும்பு இல்லாத புழு போன்ற உயிரினங்களை வெயில் வதைக்கிறது. என்பிலதனை வெயில் காயும் எனும் வரி மனதில் விரிந்தபடி இருக்கிறது. ஓர் உண்மையை, ஒரு கண்டடைதலைக் குளிர்ந்து இறுகிய உள்ளத்துடன் சொல்கிறது. ஏன் அப்படி என்றொரு கேள்வியாகவும் மன்றாட்டாகவும் அது பரிணாமம் கொள்கிறது. எலும்பு உடலுக்கு வடிவம் அளிக்கிறது, மனிதரை நிலை நிறுத்துகிறது, அதற்கு அன்பு இணை வைக்கப்படுகிறது. கதை நாயகன் சுடலையாண்டிக்கு அன்பில் குறைவில்லை. தாயும் தந்தையும் மரித்த பின்னரும்கூடத் தாத்தாவும் ஆத்தாவும் அவர்களை வருத்திக்கொண்டு அவனைக் காக்கிறார்கள். அவனிடத்தேயும் அவர்கள் மீது கொள்ளை அன்புண்டு. பொருளியல் வாழ்வே மனிதர்களைத் தாங்கும் என்பாகிறது. பசியை வடவைத்தீ என்பார்கள். பெரும்பசிதான் இங்கு வெயில். என்பு என்பதை முதுகெலும்பு எனக் கொண்டோம் எனில் பசி வாட்டும்போது மானத்துடன் தருக்கி எழுந்து நிற்க முடியுமா? மானத்தையும் ரோஷத்தையும் ஆவியாக்கியபடி நின்று எரிகிறது பசித்தீ. பசித்திருப்பவனுக்கு, ஒவ்வொரு வேளை உணவிற்காகவும் அலைந்து திரிபவனுக்கு மானத்துடன் வாழ உரிமையில்லை. அத்தகையவன் அவமானப்படுத்தப்படுவது அங்கீகரிக்கப்பட்ட ஒரு வழிமுறை. அவற்றை மென்று அதக்கிக்கொண்டு அவன் வாழப் பழகியாக வேண்டுமா? எனக் கேள்வி எழுப்புகிறது இந்நாவல்.
‘சதுரங்கக் குதிரை’ சதுரங்கத்திற்கு வெளியே புழங்க முடியாதது. சதுரங்கத்திற்குள்ளும் தன் விருப்பத்திற்கு ஏற்ப ஓட இயலாது. அதன் அசைவுகள் விதிமுறைகளால் முடக்கப்பட்டவை. பிற காய்களின் நிலைகள் அதன் அசைவை முடிவு செய்கின்றன. சுய விருப்பிற்கும் (free will) விதிக்கும் (fate) வாழ்க்கையுடன் உள்ள உறவைச் சுட்டிக்காட்ட பயன்படுத்தப்படும் வலுவான படிமம். மனிதன் ஒரு கணக்குடன் காய்களை நகர்த்துகிறான் ஆனால் அவற்றைப் பொருளற்று ஆக்கும் வேறொரு ஆட்டம் மறுமுனையில் நிகழ்ந்துவிடுகிறது. மனித வாழ்க்கை என்பது ஊழுடன் ஆடும் சதுரங்கம். நாராயணன் எனும் 45 வயது திருமணமாகாதவன் நாவலின் நாயகன். அவனுடைய பொய்த்துப்போகும் கனவுகளின் ஊடாக வாழ்க்கைக்கான பிடிமானத்தைத் தேடுவதுதான் நாவல். ‘எட்டுத்திக்கும் மதயானை’ அனைத்து திசைகளிலிருந்தும் மனிதன் எதிர்கொள்ளும் நெருக்கடியைச் சொல்வது. பூலிங்கத்தால் எங்கும் கால் தரிக்க முடியவில்லை. எல்லா திசைகளில் இருந்தும், இடங்களிலிருந்தும் துரத்தப்பட்டோ வெளியேறியபடியோ இருக்கிறான். எனினும் அவனை யானைகள் நசுக்கிவிடவில்லை. அவனுக்கு ஏதோ ஒரு திசையும் வழியும் புலப்பட்டுத் தொடர்ந்து ஓடுகிறான். எதையாவது பற்றிக்கொண்டு கரையேறிவிட முடியாதா என்று மனிதர்கள் ஆழ்கடலில் தங்களுக்கான ‘மிதவையைத்’ தேடித் தத்தளித்துக்கொண்டே இருக்கிறார்கள். ‘ஆழியின் ஆழத்தில் அமிழ்ந்துவிடாமல் இருக்க கையில் கிடைக்கும் எதையும் பற்றிக்கொள்கிறார்கள். கரை கைக்கெட்டும் தொலைவில் நெருங்கும்போதெல்லாம் ஒரு பேரலை அவர்களைத் திசை மாற்றி அலைக்கழிக்கிறது. மனிதன் கரைதேடி அலைந்து கரையேற முடியாமல் அலைக்கழிந்து கரைந்து போகும் மிதவை. முடிவற்ற வாழ்க்கைப் பேராழியில், கடலில் மிதக்கும் மிதவை காற்றால் அது விரும்பும் திசைக்கு அடித்துச் செல்லப்படுகிறது. மிதவையின் இலக்கை அது முடிவு செய்துகொள்வதில்லை. ஆனால் சண்முகம் அமிழ்ந்து அழிந்துவிடவில்லை. கிடைப்பதைப் பற்றிக்கொண்டு மூச்சுவிட்டுக்கொண்டுதான் இருக்கிறான்.
யதார்த்தவாத எழுத்தாளர் என்றறியப்படும் நாஞ்சில் நாடன். மாமிசப் படைப்பு நாவலில் மட்டுமே அப்படி வெளிப்படுகிறார். பிற அனைத்து நாவல்களையும் நவீனத்துவ/ இருத்தலியல் ஆக்கங்கள் என்றே சொல்ல முடியும். அதிகமும் நகரத்தை மையமாகக் கொண்ட, தனிமனித அகத்தை மையமாகக் கொண்ட இருத்தலியல் தளங்களிலிருந்து கிராமங்கள் நோக்கியும், சமூகச் சூழல் நோக்கியும் இருத்தலியல் சிக்கலைப் பேசியதே நாஞ்சில் நாடன் ஏற்படுத்திய மிக முக்கியமான உடைப்பு என்று சொல்லலாம். தனிமனித இருத்தலை வரலாற்றுடன் இணைத்த முதன்மை மற்றும் முன்னோடிப் படைப்பு என ப. சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’யைச் சொல்லலாம். ஆனால் இன்று சிங்காரத்தின் நாவல்களுக்கு இருக்கும் இடம் மிதவை வெளிவந்த காலத்தில் கிடையாது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். ‘மிதவையில்’ சண்முகம் பம்பாய்க்கு ரயிலில் செல்லும் பகுதியை அவ்வகையில் தமிழ் நாவலின் மிக முக்கியமான பயணம் என்பேன். அகம் நோக்கி மட்டும் திரும்பியிருந்த இருத்தலியல் புனைவு குறியீட்டு ரீதியாகப் புறத்தில் வேர்கொள்ளும் பயணம் ‘மிதவையில்’ தொடங்குகிறது. ‘எட்டுத்திக்கும் மதயானையில்’ உச்சம் கொள்கிறது. மற்றுமொரு தொடர்ச்சியைச் சுட்ட வேண்டும் என்றால் எட்டுத்திக்கும் மதயானையும் அடிப்படையில் புயலிலே ஒரு தோணியைப் போல் சாகசத்தன்மை நிறைந்த நாவல்தான்.
‘என்பிலதனை வெயில் காயும்’ நாவலை பூமணியின் ‘வெக்கையுடன்’ ஒப்பிட்டு நாஞ்சில் நாடனின் தனித்துவமான பங்களிப்பை உணர்ந்துகொள்ள முடியும். ‘என்பிலதனை வெயில் காயும்’ வளரிளம் பருவத்தில், ஆளுமை உருகொள்ளும் காலத்தில் பசித்தவன் எதிர்கொள்ளும் அவமானங்களின் கதை எனச் சொல்லலாம். வளரிளம்பருவத்து மனதின் நுண்மைகளை வெளிப்படுத்திய மிக முக்கியமான நாவல். பூமணியின் ‘வெக்கையும்’ வளரிளம்பருவத்து வாழ்க்கையை வேறொரு பின்புலத்திலிருந்து பேசுகிறது. ‘வெக்கை’ வலுவான காட்சி சித்தரிப்புகளைக் கொண்டது. தந்தை- மகனுக்கு இடையேயான உறவைக் குறைந்த சொற்களில் காட்டிச் செல்கிறது. ‘என்பிலதனை வெயில் காயும்’ நாவலிலும் சுடலையாண்டி ஒரு பெருமழையில் சிக்கிக்கொண்டு தவிக்கும் இடம் மற்றும் அவன் தந்தையுடன் ஆற்றுக்குக் குளிக்கச் செல்லும் பகுதி ஆகியவை அபாரக் காட்சி அனுபவத்தை அளிப்பவை. ‘வெக்கையை’ விட ‘என்பிலதனை’ மேலான வாசிப்பனுபவத்தை அளிக்க முதன்மை காரணம் புறச் சித்தரிப்பு அளவுக்கே ஆழமான அகச் சித்தரிப்பை அளிப்பதுதான். யதார்த்தவாத/இயல்புவாதப் புறச் சித்தரிப்புக்கும் நவீனத்துவ/ இருத்தலியல் அகச் சித்தரிப்புக்கும் இடையிலான பாலம் என நாஞ்சில்நாடனின் நாவல்களைச் சொல்லலாம். இந்த நகர்வு பிற்காலத் தமிழ் நாவல்களுக்குப் பாதையமைத்து அளித்தது.
இக்கட்டுரையின் தொடர்ச்சியை முழுதும் படிக்க:
ஆனைதுரப்ப அரவு உறை ஆழ்குழியில் விழும் தேனின் அழிதுளி