எழுதுவதுமன்றி வாழ்க்கையின் அர்த்தமென்ன?

உயிர் எழுத்து’ ஆசிரியர், நண்பர் சுதீர் செந்தில் கூப்பிட்டுச் சொல்லியிராவிட்டால் நான் ஜெயந்தி கார்த்திக் எனுமிந்த புதிய நாவலாசிரியர் பெயரை அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவருடைய ஆக்கங்கள் எதனையும் இதற்குமுன் வாசித்திருக்கவும் இல்லை. லிங்கம்’ எனும் இந்த நாவலின் தட்டச்சுப்படி கிடைத்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. எந்தப் புதிய படைப்பு நூலையும் எழுத்தாளரையும் தமிழ்ப் படைப்பிலக்கிய சேனைக்குப் புதிய வரவென்று கருதுபவன் நான். எந்த நூலையும் வாசித்துத் தீர்மானிக்கிறவன்.
கையில் கிடைத்ததும் வாசிக்க ஆரம்பித்தேன். வாசிப்பதும் எழுதுவதுமன்றி வாழ்க்கையின் அர்த்தமென்ன எமக்கு? வாசிப்பு ஈர்ப்புடைய எளிமையான வாழ்வியல் மொழி. கண்டியூரில் பழைய துணிகளை வீடுவீடாகச் சென்று சேகரித்து வந்து, கிழட்டுத் தையல் மெஷினில் தைத்துக்கொடுத்துக் கூலி பெற்று சீவிக்கிற தையல்காரர் லிங்கத்தின் ஐந்தாறு ஆண்டுகால வாழ்க்கைப் போராட்டங்களே இந்த நாவல்.
இரண்டு ஆண்களும் மீதிப் பெண்களுமாக ஏழு பிள்ளைகள் அவர்களுக்கு நாவல் தொடங்கும்போது. பிறகு மிகுந்த பாடுகளுக்கு இடையில் மேலுமோர் பெண்குழந்தை.
சோவாரியாகப் போன மூத்த மகன். பொறுப்புணர்ந்து தந்தையின் தொழிலையே முனையும் இரண்டாவது மகன். கல்விக்கான சூழல் இல்லை, ஊக்கம் இல்லை, ஆதரவும் இல்லை எவர்க்கும். எந்தப் பெரிய காரணமும் இன்றி, நான்காண்டுகள் காணாமற் போய்விடுகிறான் லிங்கம். அவனைத் தேடுவதற்கான முயற்சிகளும் இல்லை. எட்டுப்பிள்ளைகளை வைத்துக்கொண்டு குடும்பத் தலைவி வேணி படும் பாடுகளே நாவல்.
பெண்ணின் பாடுகளைக் கண்ணீர் மல்கும்படியாகப் பேசும் இரண்டு நாவல்கள் உண்டு நானறிய. யூமா வாசுகியின் ‘ரத்த உறவு’, கண்மணி குணசேகரனின் அஞ்சலை’. அந்த வரிசையில் வைத்து எண்ணப்படத் தகுந்த புதிய நாவல் லிங்கம்’.
கணவன் காணாமற்போன நான்காண்டுகளும் ஒன்பது வயிற்றுக்குச் சோறிட மூத்த இரண்டு பெண்பிள்ளைகளையும் கூலி வேலைக்கு அனுப்பித் தானும் கூலி வேலை பார்த்து அலைக்கழிகிறாள் வேணி, கணவன் வழி உறவுகளின் எந்த அனுசரிப்பும் இல்லை. மாறாகப் பொல்லாங்குப் பேச்சுக்களையும் எதிர் கொளல் வேண்டும்.
இப்படித்தான் கழிகிறது இன்னும் கிராமத்து வாழ்க்கை , தமிழ் சினிமாக்களில் காட்டப்படுவதைப்போல, தலைக்குமேல் தாவாணியைப் பட்டம் பிடித்துக்கொண்டு கொலுசொலியும் வளையல் ஓசையுமாகப் பாடிக்கொண்டு தத்தியோடும் பெண்களை எந்த இந்தியக் கிராமத்திலும் இன்று நம்மால் காண இயலாது. மடியறுத்துப் பால் கவரலாம் என்று கணக்குப்போடுகிற அரசியல், அதிகார, கிராம, ஆன்மீகத் தலைமைகள் நம் சாபம்.
நாவல் ஓர் இயல்பான மக்கள் மொழி மூலம் சொல்லப்படுகிறது. சென்னை, பங்களூரு, ஐதராபாத் புனே போன்ற நகரங்களில் ஐ.டி. துறையில் பணிபுரியும் மாந்தரின் மொழி, வாழ்க்கைச் சூழல், எண்ண அலைக்கழிப்புகளுக்கு அந்நியமான சம்பவங்கள் இங்கே விவரிக்கப் பெறுகின்றன.
பாசாங்கற்ற நடப்பு மொழி நாவலின் எந்தச் சம்பவமும் செயற்கையாக, நாவலுக்காக என்று உருவாக்கப்பட்டதாக நமக்குக் காட்சி தரவில்லை.
எட்டுப் பிள்ளைகள் பெற்ற பிறகும், நான்காண்டுகள் எப்படி எங்கே வாழ்ந்தான் என்ற எந்தத் தடயமும் இல்லாமல், கைக்காசும் இல்லாமல் ஊர் திரும்பிய லிங்கம் மனைவியுடன் இரவில் கூடும் போது நாவலாசிரியரின் படைப்புத் திறன் வெளிப்படுகிறது. இயற்கையான வாசனைகளுடன் நிகழும் உவப்பு.
அம்மை’ நோய் கண்ட வீட்டில் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவர்களை வீட்டை விட்டு விலக்கி வைக்கக்கூடாது எனும் கருத்தை நாவலில் வரும் ஒரு பெண் கதாமாந்திரத்தின் மூலம் உணர்த்துவது முன்னெப்பொழுதும் தமிழ் புனைவிலக்கியத்தில் இடம் பெறாததாகும்.
அதுபோலவே விபத்தொன்றில் ஆண்மை இழந்தவன் என்பதறியாமல் திருமணம் செய்து கொடுக்கப்பட்ட லிங்கம் – வேணி தம்பதியரின் மூத்த மகள் கலையிடம் கணவன் கொள்ளும் செயற்கையான முயக்கங்கள் நமக்குக் குறிப்புணர்த்தப்படுகிறது. எந்த விரசமும் ஆபாசமும் அதிர்ச்சி நோக்கங்களும் இல்லாமல் தெளிவுடன் பேசுகிறார் நாவலாசிரியர்.
நாவலின் இறுதிக் கட்டத்தில், கொழுந்தனால் வன்புணர்வுக்கு ஆட்டுத்தப் படும்போது, கலையின் உடல் இணங்கத் தலைப்பட்டாலும், சட்டென உணர்வு பெற்று, விழித்துக்கொண்டு செயல்படுத்தும் வன்முறை நாடகத்தனம் இல்லாமல் விவரிக்கப்படுகிறது. நமக்கு அப்போதுதான் நாவலுக்கு ‘லிங்கம்’ எனப் பெயர் சூட்டப்பட்டதன் நுட்பம் புரிகிறது.
கன்னியாகுமாரி எனும் சிறிய மாவட்டத்திலுள்ளேயே நாஞ்சில் மொழி, கரைக்காட்டு மொழி, பரதவப் பெருங்குடி மொழி, கல்குளம் விளவங்கோட்டு மொழி என உட்பிரிவுகளும் நுணுக்கங்களும் சிறப்புக்களும் உண்டு. தஞ்சாவூரிலும் அதன் சாத்தியப்பாடுகள் உண்டு. தி.ஜானகிராமன், தஞ்சை பிரகாஷ், சி.எம்.முத்து, பாவைச்சந்திரன் போன்றவர்களின் நாவல் வாசித்தவர்கள் அதன் பேதங்கள் உணர்வார்கள். ஜெயந்தி கார்த்திக் பயன்படுத்தும் கண்டியூர் பிரதேசத்து மொழியும் அதன் நயங்களுடன் ஆளப்பெற்றிருக்கிறது.
மூத்த எழுத்தாளன் எனும் முன்னுரிமை எடுத்துக்கொண்டு, முன்பின் அறிமுகம் இல்லாத இந்த நாவலாசிரியருக்கு, காய்தலும் உவத்தலும் இன்றிச் சில கூற முயல்வேன்.
அன்றாடம் கூலி வேலைக்குப் போய்ப் பிழைக்கும் குடிமக்களின் வாழ்க்கைச் சம்பவங்களைப் பேசும் நாவல் இது. என்றாலும் நாவலின் சம்பவங்கள் உணர்த்தும் நுட்பங்கள் நோக்கி அவர் மேலும் பயணப்பட்டிருக்கலாம். கதை நடக்கும் காலம் குறித்த தெளிவு வாசகருக்கு உணர்த்தப்பட்டிருக்கலாம். சூழல் பற்றி, இயற்கை பற்றி சில விவரிப்புகள் இடம் பெற்றிருக்கலாம். எதிர்வரும் படைப்புக்களில் இவை கவனத்தில் கொள்ளப்படலாம்.
பாத்திரப் படைப்பு எனப் பார்த்தால், பிரதான கதாமாந்தர்கள் லிங்கம், வேணி, கலை, ஆனந்து மற்றும் அண்டை அயலார் என செவ்வனே படைக்கப் பெற்றுள்ளனர், குறிப்பாக, சொந்தக் கொழுந்தனே ஆனாலும் பாலியல் வன்முறைக்கு அவன் துணியும்போது, கலை அவனை எதிர்கொள்ளும் விதமும், விடுபட்டபின் அவள் காட்டும் நெஞ்சுரமும் நிதானமும் சிறப்பாகச் சித்திரிக்கப் பெற்றுள்ளன.
நாவல் தொடங்கும்போது, கலை இரத்தச் சிவப்புநிற ரோஜாமலர்களுடன் வீட்டின் பின்புறத்தில், தன்னை மறந்து நின்று கொண்டிருக்கிறாள். நாவல் முடியும்போது அதே வீட்டின் பின்புறத்தில் மஞ்சள் வண்ண ரோஜா ஒன்று புதியதாய்ப் பூத்திருந்தது. இயற்கையின் அழகென்பது செல்வர்க்கு ஒன்றும் வறியவர்க்கு ஒன்றும் என்று இல்லை .
நாவலாசிரியர் ஜெயந்தி கார்த்திக்கிற்கு லிங்கம்’ எனுமிந்த நாவல் ஒரு தொடக்கம். காலப்போக்கில் அவர் நெடுந்தூரம் பயணிக்க வாழ்த்துகிறேன்.
மிக்க அன்புடன்
நாஞ்சில் நாடன்
கோயம்புத்தூர் – 641 042
17 செப்டம்பர் 2020

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் and tagged , , , , , . Bookmark the permalink.

1 Response to எழுதுவதுமன்றி வாழ்க்கையின் அர்த்தமென்ன?

  1. பாலா கிருஷ்ணமூர்த்தி சொல்கிறார்:

    வணக்கம்.
    ஜெயந்தி கார்த்திக்கின் ‘ லிங்கம் ‘ பற்றி, தாங்கள் எழுதியதைப் படித்தேன். நாவலை இனிதான் படிக்க வேண்டும்.
    இது எனது நெருக்கத்திற்குரிய ஒரு தோழி கூறியதை நினைவு படுத்தியது……
    “ இது என்ன மாதிரியான சமூகம் பாலா?…நாங்கள் தன லக்‌ஷ்மியாக இருக்க வேண்டும், தைரிய லக்‌ஷ்மியாக இருக்க வேண்டும், தான்ய லக்‌ஷ்மியாக இருக்க வேண்டும்…சகல லக்‌ஷ்மியாகவும் இருக்க வேண்டும். எனினும், ஏதாவது சந்தர்ப்பம் கிடைத்தால், எங்களை சிலுவையில் அறைய தயங்குவதே இல்லை “…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s