நாஞ்சில் நாடன் “ஓசை பெற்று உயர் பாற்கடல்“ கட்டுரைக்கு வாசகர் மறுவினைகள்

நாஞ்சில்நாடன் கட்டுரை ஓசைபெற்று உயர் பாற்கடல் பல அரிய செய்திகளை அறிவிக்கிறது. இசை கேட்பதென்பது வலிய பல மன அழுத்தங்களில் இருந்து விடுதலை. எழுத வாசிக்க முனைகையில் மனம் குவியவும் என அவர் எழுதுவது அனுபவித்தவர்களுக்குப் புரியும்.ஒருவருக்கு சபாபதி. மற்றொருவருக்கு ராமன் என்று மிகத் தெளிவாக எளிதாக நாஞ்சில் கூறும்போது பரவசப்படுகிறோம். அவர் வட இந்திய இசையையும் ரசித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இடையே மாறோக்கத்து நப்பசலையாரின் புறநானூறு அடிகளையும் எடுத்துக் காட்டி நண்பர் காலமானது குறித்து வருந்துகிறார். பாடலை ரசிக்க மொழி தேவை இல்லை என்ற அவர் கருத்து நூற்றுக்கு நூறு உண்மை.
பூதத்தாழ்வார்,பெரியாழ்வார் தொண்டரடிப் பொடியாழ்வார் ஆகியோரின் பாசுரங்களையும் அருமையாகத் தேவையான இடங்களில் எடுத்துக் காட்டி உள்ளார். பாரதியார் பாடல்களில் மனத்தைப் பறிகொடுக்கிறார். அவர் எப்பொழுதும் சொல்லாராய்ச்சியில் ஆர்வம் காட்டுபவர். பவனம் என்னும் சொல் கிடைக்க அதைப் பற்றி மிகச்சிறப்பாக ஆய்ந்து எழுதுகிறார். செந்தமிழ் செவ்விலக்கியங்கள் என்பது போல செவ்வியல் இசை உருவாக வேண்டும் என்று கட்டுரையை அருமையாக முடிக்கிறார்…..வளவ துரையன்

வணக்கம். சொல்வனத்தில் தங்களது இசை ரசனை குறித்த கட்டுரை வாசித்தேன்.தேன். பலாச்சுளை ஊறிய தேன். இசை துயர் கடத்தி, மனமிளக்கி என்ற உணர்வுகளை மெய்ப்பிக்கிறது. தாய்மொழியில் கேட்டு ரசிக்கும் பாடலின் பேரின்பத்தை உணர்த்தி இருக்கிறீர்கள். சில பம்மாத்து இசைஞர்களுக்கும் காதிழுப்பு கொடுத்திருக் கிறீர்கள். கம்பராமாயாணப் பாடல்களின் இசைமையையும், இராவணனின் இசையாற்றலும்  இசைபற்றிய உங்கள் கட்டுரையில் இல்லாததும் நாட்டுப்புறப்பாடலின் இசையாற்றல் குறித்தும் விடுபட்டமையையும் அடுத்தக் கட்டுரையில் தொடுவீர்கள் என நம்புகிறேன். இன்று பூராவும் இசையில் மிதக்க இக்கட்டுரை இழுத்துச் சென்றது…….ஜனநேசன்
———————————————————————————————————————————-
சொல்வனத்தில் நேற்று வெளியான தங்களது கட்டுரையை வாசித்தேன். திரைப்பட இசை மட்டும் தான் இதுவரையிலும் எனக்கு இசையாகவே இருந்து வந்துள்ளது என்பதை ஒப்புக்கொள்கிறேன்.  அதற்கு வெளியேயென்றால்  சிம்பொனி திருவாசகம், பாரதியார் பாடல்கள் , சில சூஃபி பாடல்கள் மட்டும் அறிமுகம். குறிப்பாக “பொல்லா வினையேன்” என் துயர் நீக்கும் மருந்து. மலையூர் சதாசிவத்தின் திருவருட்பா நாள் தவறாமல் நம் வீட்டில் ஒலிக்கும். இவற்றைத் தாண்டி செவ்வியல் இசை மீதான தேடல்கள் இதுவரை என்னுள் உருவாகவில்லை. உங்களது கட்டுரையை வாசித்தபிறகு புதிதாய் ஒரு திறப்பு ஏற்பட்டிருக்கிறது. அதில் நீங்கள் தந்துள்ள இசை இணைப்புகள் ஒவ்வொன்றையும்  கேட்க ஆவல் கொண்டிருக்கிறேன்.மிக்க நன்றி. மகிழ்வுடன்… வேல்முருகன் இளங்கோ. “மன்னார் பொழுதுகள் “நாவலாசிரியர்.

வணக்கம் சார். மிக அருமையான இசைக் கட்டுரை.. வெகு நாட்களாக கேட்டகாமல் போயிருந்த பல பாடல்களை நினைவில் மீட்டெடுத்தது.
சீதை பற்றிய அந்த காண வேண்டும் லட்சம் கண்கள் மதுரை சேஷகோபாலன் பாடிக் கேட்டிருக்கிறேன்.லிங்க் இதோ, இறுதிப் பாடலாக இதைப் பாடியிருப்பார்:
‘காலகாலன் கயிலைநாதன்’, ‘சாம கானப் ப்ரியே’ போன்றபெரியசாமித் தூரனின் கீர்த்தனைகள் என் தாத்தா மிகவும் விரும்பிக் கேட்டவை.
‘வண்டினம் முரலும் சோலை’யில்  அந்த ராகத்தில் எம்.எஸ்ஸின்குரலே வண்டினம் போல முரல்வது செவிக்கமுது.. என்.சி.வசந்தகோகிலம் பாடிய ‘தந்தை தாயிருந்தால்’ பாடலை என் அப்பா இளவயதில் ரசித்து எடுத்துச் சொல்லி நானும் அதில் மனதை இழந்திருக்கிறேன்.. ‘கல்லால் ஒருவன் அடிக்க’..எனத் தொடங்கி ‘மதுரை மாறன் பிரம்பால் அடிக்க அந்த வேளை யாரை நினைந்தீரோ’ என அந்த ஈசனை யார் பெற்ற பிள்ளையோ என மனம் கனிய என்ன ஒரு தாய்மை மனதுள் சுரந்திருக்கவேண்டும்!! கண்ணும் சுரந்து விடும் பல நேரம்.
உங்கள் இசை ரசனை வழி பல பழந்தமிழ் இசைக்கோவைகளை நினைவுறுத்தி இருக்கிறீர்கள். மீண்டும் சுவைக்க வேண்டும். மீண்டும் மீண்டும் இசைத்து, இசைக்கு இசைய வேண்டும்.
ஓசை பெற்று உயர் பாற்கடல் -உங்களுக்குக் கம்பன் என்றும் எதற்கும் உடன் வருகிறார் – இதை விடப் பொருத்தமாக இசைக்கடலைப் பற்றி எழுதுவதற்கு வேறென்ன தலைப்பு வைக்க முடியும்!!
மீண்டும் மீண்டும் இன்பத் தமிழுக்கு என் வணக்கங்கள் 🙏🙏🙏……சுபஸ்ரீ.சிங்கப்பூர்.

அற்புதமான நீண்ட கட்டுரையை படித்து முடித்தேன் – இடையில் தரப்பட்ட பாடல்களை மற்றொரு சமயம் கேட்க வேண்டும்.  சின்ன வயது முதல் கர்நாடக இசையில் துளியும் விருப்பமில்லாது போனதும், அதன் காரணமாக கேட்கும் பயிற்சி இல்லாமல் போனதும் நிகழ்ந்தன. அதன் தொடர் விளைவு, நல்ல கர்நாடக இசை பயிற்சியும் கேட்கும் ஆர்வமும் இருந்த என் தாய்க்கு ரேடியோவில் கேட்கும் வாய்ப்பும் இல்லாமல் போன சோகம் (எப்போதும் ரேடியோ சிலோன் சினிமா பாடல்கள் மட்டும்தான் என ஆனதால்) இன்றும் உண்டு. என்ன செய்ய, நம்முடைய வளர்ச்சி காலம் தாழ்ந்து பொருள் இல்லாத நேரத்திலேயே நிகழ்கிறது, பெரும்பாலும்.
சின்ன வயதில் கர்நாடக இசையில் ஆர்வம் இல்லாது போனதின் முழு காரணம் – அது தமிழில் இல்லாததே.  “கல்வியில் ஆங்கிலம், கோவிலில் சம்ஸ்கிருதம், இசையில் தெலுங்கு. தமிழுக்கு எங்கு இடம்”, என கேட்ட பாரதியார் புரட்சியாளரா? இல்லை வேற்றுமையும் வெறுப்பையும் மட்டுமே விதைத்து வளர்த்தவர்கள் புரட்சியாளர்களா?
 அற்புதமான கட்டுரை. போகிற போக்கில் சொல்லிச்சென்ற பாலக்காட்டு ராமன் கதை ஒரு அற்புதமான சிறுகதையாகலாம். உங்களிடம் வரிக்கு வரி இலக்கியம்தான்.
நன்றி.
“அந்தச் சிறுவயதில் சைவம், வைணவம் என்று என்னத்தைக் கண்டேன் நான்?”
என்னுடைய சின்ன வயதில் விபூதி கேட்டவுடன், மதுரை தள்ளாகுளம் பெருமாள் கோயில் பட்டர் , குரலை உயர்த்தி “போடா. போய் புள்ளையார் கோவிலில் கேளு” என கத்தியது நினைவுக்கு வந்தது.
அந்த வயதில் வேற்றுமை தெரியாது. பின் வந்த நாட்களில் ‘வேற்றுமை கிடையாது’ என்ற தெளிவு,  “குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்” என்ற பாரதியார் பாடல் மட்டுமல்ல என்னுடைய தாய்தந்தையரும் கற்பித்த பாடம்., ……கேசவசாமி. TCS உயரதிகாரி- திருவனந்தபுரம்.

சொல்வனத்தில் நாஞ்சில் நாடனின், இசை குறித்த கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது.

ஓசை பெற்று உயர் பாற்கடல்

இசை கேட்க மனமும் நல்ல செவிகளும் இருந்தால் போதும், இராகம் தாளம் கணக்கு வழக்குகள் எல்லாம் பாடுகிறவர்கள் கவலை என்கிறார் அவர். என் பித்தமும் இதே தான். நமக்கு மாயா மாள கௌளையும் தெரியாது மார்க்கஹிந்தோளமும் தெரியாது. ஆனால் இசைப் புரிதலும் ரசனையும் உண்டு.
நாஞ்சில் நாடனைப்போல என் தலைமுறைக்கு கான சபாக்களும், கச்சேரிகளும் அவ்வளவு நெருக்கமில்லை. நெல்லையில் துவரை ஆபீஸ் பக்கம் சங்கீத சபா உண்டு. அதற்கே யானையை மறைய வைக்கும் மேஜிக் ஷோ விளம்பரம் பார்த்துத்தான் முதல்முறை போனது. ஆனால், இந்தப்பக்கம் கிறிஸ்தவ தேவாலய ஆராதனைகளும், கொயர் பாடல்களும், கிராமபோன் வட்டிசைகளும் நல்ல அறிமுகமாகிவிட்டது.
கீழே கால்கட்டையை மிதித்துக்கொண்டு, தேக்கில் செய்த, கிராண்ட் ஸ்ட்ரிங் பியானோவை சின்னஞ்சிறுசிலே குத்திப் பார்த்து வாய் மலர்ந்ததுண்டு. முள் நுனியில் எச்.எம்.வி உச்ச ஸ்தாதிகளை அகலாது அணுகாது உள்வாங்கினதுண்டு. பிறகு YAMAHA key Board எல்லாம் அந்தந்த இடங்களைப் பிடித்துக்கொண்டது. ஒன்பதாவது படிக்கையில் பள்ளிக்கூட நாடக மேடையில் எனக்குத் தபேலா வாசிக்கிற வேடம். தட்டித் தட்டி ஒரு மாதிரி ஒப்பேற்றியிருக்கிறேன்.
என் இசை மற்றும் இசைக்கருவிகளின் அறிமுகம் மேற்கத்தியில் இருந்தே துவங்கியிருக்கிறது என்பது என் இப்போதைய நினைப்பு. அதேநேரம் நாயனமும், மேளமும் இன்னும் பலமாகச் சுண்டி இழுக்காமல் இல்லை. காரணம் கோயில் திருவிழாக்கள்.
பிறகு திரைப்பாடல்கள் தான் தமிழ்ப்பாடல் இசை என்று நம்பிக் கொண்டிருந்த வயதில் கி.ரா வந்தார். அவரது வயக்காட்டுப்பாணி விவரிப்பில் இசையின் மொழியாழம் கரம்பிடித்து இழுத்துப்போட்டது. கீர்த்தனை தெலுங்கா இருந்துட்டுப் போவுது, இசையை கருநாடகம், தமிழ்நாடகம்னு மொழியிலே அடக்காதே ருசி என்றார்.
2015ல் பாப்டிலனைப் பற்றியெல்லாம் கட்டுரை எழுதிப் போட்டிருக்கிறேன். இன்றும் யானி மாதிரி ஒருத்தன் என் தூக்கத்தைக் கெடுத்ததில்லை. ஈரானியத் திரைப்படம் ஒன்றின் பின்னணி இசையைக் கேட்டுவிட்டு கம்பீஸ் ரோஷன்ராவனுக்கு மின்னஞ்சல் கூட எழுதினேன். ஆனால் தமிழின் இசைமொழியை அவ்வளவு சிலாகிக்க வழியில்லாது பாதியில் கிணத்திலே விட்டிருந்தேன்.
அப்போதுதான் அகரமுதல்வன் மதுரைக்குக் கிழக்கே மாணிக்கவாசகர் பிறந்த திருவாத ஊருக்கு அழைத்துப் போனான். சன்னதியில் உட்கார்ந்துகொண்டு இரண்டுபேரும் திருவாசகம் படிக்கிறோம். “நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத். தாயிற் சிறந்த தயாவான தத்துவனே..” என்கிற வரிகளின்போது இந்த மொழியின் பிரவாகம் என்னை அடித்து இழுத்துச் செல்லத் துவங்குகிறது.
மொழியின் மேனியிலே இசையை வாரித்துக் கட்டியிருக்கிறானே படுபாவி என்று வந்தது. தமிழ் இசை சொல்லுக்குள் உறங்கும் பாட்டில் இருந்து கீறிக் கிளம்புவதாக ஒரு உற்சாகம். அடிப்படையில் இருந்து தெரிந்துகொள்வோமென்று, மெட்ராஸ் பல்கலைக்கழக நூலகத்தில் நுழைந்து தமிழிசை கலைக் களஞ்சியத்தைப் புரட்டினேன். சத்தியமாக அப்படித்தான் எல்லாம் ஆரம்பித்தது.
விளாத்திகுளம் சுவாமிகளின் கனத்த தொண்டையும் ஒலியில் மழைக்கோடு விழும் ரெக்கார்டும் ஒன்றை ஒன்று மோதும் இசைப் பெருக்கத்தை நண்பர் சிவக்குமார் போட்டுக் காட்டியபோது  அம்மாந்துபோகச் செய்தது. கிராவுக்கு எடுத்துப் போய் போட்டுக் காட்டினேன். என்ன ராகம் தெரியுமா என்றார்? பேந்த பேந்த முழித்தேன். இந்த பாரதி பாட்டு ஒண்ணு உண்டே! சிந்து நதியின் மிசை.. அதே ராகம் தான் இது என்றார். நான் என்னத்தைக் கண்டேன். நமக்கு எல்லாமே மீன்குழம்பு. அதில் என்ன மீன் கிடந்தால் என்ன…
நாஞ்சில் நாடனின் இந்தக் கட்டுரைக்குள் ஒவ்வொரு பாட்டையும் சொல்வனம் இணையதளத்தார் இடைச் சொருகியே தந்திருக்கிறார்கள். இசை கேட்கக் கேட்க மயிர் சிலிர்க்கிறது. பத்தாததுக்கு கட்டுரையில் நாஞ்சில் நாடன் திரட்டித் தருகிற புலனனுபவம். அது  ஒரு களவுச் சொப்பனம் போல ஆளை ஆழ்த்தும். கூடவே யாழ்பாணத்துச் சித்தர் யோகரின் பத்து கண்ணியில் வரும் பவனம், பருதி, பரவை ஆழி எல்லாமும் தாண்டி அதிலுள்ள ‘எடி’ என்கிற தொனியையும் விட்டுவிடாமல் ஒரு பிடி பிடித்து வைக்கிறார்.
ஒரு கட்டுரையின் அடர்த்தி என்பது வெறும் அனுபவங்களால் தகவல்களால் விஷயங்களால் நிரம்புவது அல்ல என்பதை நாஞ்சில் நாடன் எனக்குத் திரும்பத் தொரும்பச் சொல்லிக் கொடுக்கிறார். மூச்சு விடுகிற ஜீவராசியை கொஞ்ச நேரம் மூச்சுமுட்ட அமிழ்த்துவிடும் கனம் அதில் வேண்டுமென்பதும் இன்று எனக்கு ஒரு பாடம்…….கார்த்திக் புகழேந்தி

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , . Bookmark the permalink.

1 Response to நாஞ்சில் நாடன் “ஓசை பெற்று உயர் பாற்கடல்“ கட்டுரைக்கு வாசகர் மறுவினைகள்

  1. பாலா கிருஷ்ணமூர்த்தி சொல்கிறார்:

    “ ஓசை பெற்று உயர் பாற்கடல் “ ..மிக அருமை. “ துக்கடா என மாபாவிகள் தரம் பிரித்த தமிழ்ப் பாடல்கள் படிக்க ஆரம்பித்ததும் அப்பா எழுப்பி உட்கார வைப்பார். “…மெலிதான அர்த்தம் பொதிந்த , ஒரு வலியுடன் கூடிய புன்னகையை உள் விதைத்தது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s