அன்னக் கொடை

முத்தாரம்மனுக்குக் கொடை என்றால் அவன் ஊரில் எப்போதும் அது அன்னக் கொடை, சில ஊர்களில் காட்டு என்பார்கள். உணவை ஊட்டுவதால் ஊட்டு. அமர்ந்து உண்ணும் இடம் ஊட்டுப்புரை. சத்தான உணவு ஊட்டம். அதிலிருந்தே ஊட்டச்சத்து. காளியூட்டு, தம்பிரான் ஊட்டு என்று நாஞ்சில் நாட்டில் கோயில் திருவிழாக்கள் உண்டு. உடன்தானே ஊட்டு மலையாளம் என்று தழைந்துவிட்டுப் பெயராதீர். அகநானூறும் புறநானூறும் நற்றிணையும் கலித்தொகையும் பரிபாடலும் ஐங்குறுநூறும் பட்டினப்பாலையும் நெடுநல்வாடையும் சிறு பாணாற்றுப்படையும்,  பெரும்பாணாற்றுப்படையும் பொருநராற்றுப்படையும் பயன்படுத்திய சொல். குறைந்தபட்சம் ‘பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து’ கேட்டிருக்கலாம். இன்னொரு கொண்டாட்டமான சொல் உண்டாட்டு என்றால் மெர்சல் ஆகாதீர் நாயன்மாரே! இலஞ்சத்துக்கு கையூட்டு என்பது மாற்றுத் தமிழ்ச்சொல்.
எவருக்கேனும் தனிப்பட்ட நேர்ச்சை இருந்தால் அதனைச் சிறப்பு என்பார்கள். சிறப்பு என்பது கொடை அல்லது ஊட்டு அல்ல. திங்கள் இரவு குடி அழைப்பு. செவ்வாய் காலை பழையாற்றில் இருந்து நீராட்டுக்கு மஞ்சன நீர் கொணர்தல். மத்தியானம் தீபாராதனை நடந்து முடிந்ததும் அன்னக் கொடை. ஊர் சாப்பாடு – அக்கம்பக்கத்துக்கு கிராமங்களில் இருந்து வருவோர்க்கும் வழிப்போக்கருக்கும் கொடை பார்க்க வெளியூரில் இருந்து வந்திருக்கும் விருந்தாளிகளுக்கும் எல்லோருக்கும்..
செவ்வாய் இரவு வில்லுப்பாட்டுக்காரர்களின் வரத்துப் பாடுதல், தீபாராதனை, ஆராசனை, பூ எடுப்பு, படப்புப் போடுதல், வாகனம் எடுப்பு, ஊர் சுற்றி வருதல், திசைபலி, வாகனம் கோயில் நடைக்கு வந்து இறங்கி, அம்மன் சிலையை அகற்றி கோயில் கருவறைக்குள் கொண்டு சேர்த்து தீபாராதனை ஆகும்போது முதற்கோழி கூவும். புதன் மத்தியானம் உச்சிக்கொடை கோமரத்தாடிகள் ஊர் சுற்றிவந்து மஞ்சள் நீராட்டு, கோயிலுக்குள் வந்தால் வாழி பாடுதல், மாலை ஆறுமணி ஆகிவிடும். இதுவே வழமை.
அவனுக்கு நினைவில் நீந்திக் கொண்டிருக்கும் முதல் அன்னக்கொடை நடக்கும் போது பத்துப்பன்னிரண்டு பிராயம் இருக்கும். அந்தக் கொடை பதினாறு ஆண்டுகளுக்குப் பிந்தி நடந்த கொடை எவர் பேசிக் கொண்டிருந்தாலும் எழும் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிந்து கொள்வான். முத்தாரம்மன், சந்தனமாரி, சூலைப்பிடாரி, பூவத்தான், வைரவன், அரவணைப் போற்றி பற்றிய தகவல்களை மாறி மாறிக் கேட்பான். ஆத்தா, அம்மை, சித்தி, அத்தைமார், அப்பா, சித்தப்பா, பக்கத்து வீட்டுப் பெரியம்மைகள் என. அவன் பிறப்புக்கு முன்பே, அவன் அப்பா கல்யாணத்துக்கு முன்பே, ஊர்வகைக் கோயில் என்பதால் ஊர்க் கூட்டத்தின் போது கணக்குக் கேட்டு, விளக்கு அணைக்கப்பட்டு, அடிவயிற்றில் அவன் தாத்தா பிச்சுவாவால் குத்தி இழுக்கப்பட்டு குடல் சரித்த சம்பவம் வரை.
ஒவ்வொரு இரவும் சாப்பாட்டுக் கடை ஒதுங்கிய பின்னர் ஈசான மூலையின் அடுத்திருந்த தெற்குப் பார்த்த வீட்டுப் படிப்புரையில், தெரு தடையில் என்று ஏழெட்டுத் தாயர் கூடியிருந்து உறக்கம் வரும்வரை வர்த்தமானம் பறைவார்கள். பல சங்கதிகளும் பரிமாறப்படும். அவள் வாய்பார்த்துக் கிடப்பான். அம்மா, போய்ப் படுமோ என்றாலும் அனுசரிக்க மாட்டான். பாடசாலைக்கு வெளியே அவனுக்கு அமைந்த கல்விக்கூடங்களில் அதுவும் ஒன்று .
கொடைக்குக் கால் நாட்டிய பிறகு அவன் மனமும் உடலும் பரபரத்துக் கிடந்தது. பள்ளிக்கு, மாடு குளிப்பாட்ட, மாட்டுக்குப் புல்லறுக்க, அடுப்பெரிக்க சுள்ளி பொறுக்கப் போகும் நேரம் கழிய மிச்சம் எல்லாம் கோயில் நடையில், சின்னச் சின்ன செப்பனிடல், வெள்ளையும் காவியும் அடித்தல், மோட்டுக் காமணம் தட்டுக் காமணம் போடுதல் என வேடிக்கை பார்த்துக் கொண்டே விளையாட்டும்.
அறுபதாண்டு கால நினைவுகள் அவனுக்கு. அஃதாவது தமிழ் ஆண்டுகள் அறுபதன் சுழற்சியொன்று முடிந்து விட்டது. எந்த ஊரில் வாழ்ந்தாலும் முத்தாரம்மன் கலங்கரை விளக்கம், தங்கூரம், படகின் பாய் தள்ளும் திசைக்காற்று. வஞ்சகச் சுயநலத்தை சமூக நலமாக அபிநயித்துக் காட்டிய விட விருட்சத்தின் வேர்கள் மண்ணுக்குள்ளும் கிளைகள் நிர்மல வெளியிலும் படரத் தொடங்கிய காலம் அது. பூனாவில், பம்பாயில், ஆமதாபாத்தில், சூரத்தில்
சென்னையில் இருந்தெல்லாம் ஊரம்மன் கோயில் கொடைக்குப் புறப்பட்டு வருவார்கள். வடக்கன் குளம், காவல் கிணறு, பணகுடி, களக்காடு, நாங்குநேரி, மூன்றடைப்பு, திசையன்விளை, கொக்கரகுளம் போன்ற பல ஊர்களை இலக்காக்கி. குடும்பத்துடன் யாத்திரையாகும் அந்த மன எழுச்சி நகர்ப்புறங்களில் பிறந்து வளர்ந்தவர்க்கு ஒருபோதும் அர்த்தமாகாது. எந்த மதம், என்ன சாதியாக இருந்தாலும் சர்க்கார் உத்யோகஸ்தர் பிள்ளைகளின் மன வார்ப்பு வேறு, காடு கரையென அலைந்து திரிந்து கண்டதைப் பறித்துத் தின்று வாழும் எளிய சம்சாரி வீட்டுப் பிள்ளைகளின் மன நிலை வேறுதான்.
முதன்முறை முத்தாரம்மன் கோயில் கொடை பார்த்த பத்துப் பன்னிரண்டு வயதுப் பிராயத்தில் இருந்து ஊரம்மனுக்கு இந்த அறுபதாண்டு காலத்தில் இருபத்தைந்து கொடைகள் நடந்திருக்கலாம். எப்படியும் இருபது கொடைகளுக்காவது அவன் இருந்திருக்கிறான்.
அன்னகொடையின் அடியந்திரச் சாப்பாடோ, செவ்வாய் இரவு சாமிகளுக்குப் படைக்கப்பட்ட படப்புச் சோறு வரி விகிதமாக மறுநாள் காலையில் பித்தளைத்தூக்கு போணிகளில் விளம்பரப்பட்டதைத் தின்றதன் சுவையோ, சாமிக்கு நேர்ந்து வெட்டப்பட்ட வெள்ளாட்டுக் கடாவின் குழம்பு மணமோ அல்ல. கருங்குளம் நாராயண பிள்ளை , புன்னார் குளம் கோலப்ப பின்ளை, தோவாளை சுந்தரம் பிள்ளை வில்லுப்பாட்டோ, வரத்துப் பாட்டோ, தனித்தொலிக்கும் உடுக்கோ அல்ல. தங்கப்பழம் குழுவினரின் நையாண்டி மேளம் அல்ல. கரகாட்டம் அல்ல. சுடலையாண்டிக் கம்பரின் உட்கோயில் ராஜமேளம் அல்ல. புத்துருக்கு நெய்போல், தோவாளைப் பிச்சிப்பூ போல், செந்தாழை போல் மணக்கும் புதுப்பாவாடை உடுத்தித் தாவணி போட்ட சமைந்த குமருகள் அல்ல. மறைவாகத் தனிச்சுற்றுக்கு என விநியோகமாகும் வாற்றுச் சாராயம் அல்ல. பிறகு எது? அம்மன் எனும் சொல் மனதின் ஆழத்தில் கிடந்து அலையடிக்கும் வாச நறும்புகை.
சமுதாயக் கோயில். பதினெட்டு வயது தாண்டிய எல்லா ஆண்களுக்கும் வரியுண்டு. எந்த ஊரில், எந்த நாட்டில் வாழ்ந்தாலும், கொடைக்கு வர வாய்த்தாலும் வராமற் போனாலும் வரி முடங்கலாகாது. முடங்காது. அம்மனுக்கு கடன் சொல்லல் ஆகுமா? எங்கு புரட்டியோ, கைமாத்து – கடன் வாங்கியோ வரி பாக்கி இல்லாமல் பார்த்துக் கொள்வார்கள். தான் நேரில் கொடுக்கவோ அனுப்பவோ சாத்தியப்படாவிட்டால், அண்ணனோ தம்பியோ கொடுக்க ஏற்பாடு செய்வார்கள்.
பெரும்பாலும் மாசி மாதம் தோதானதோர் செவ்வாயில் கொடை நடத்த ஏற்பாடு நடக்கும். முக்கியமாக அன்று மண்டைக்காட்டுப் பகவதி அம்மனுக்கு கொடை இல்லை என்று உறுதி செய்து கொள்வார்கள். கன்னியாகுமரி பகவதி, மண்டைக்காட்டுப் பகவதி, ஆற்றுகால் பகவதி, சோற்றாணிக்கரை பகவதி, கொடுங்கல்லூர் பகவதி, காடம்புழ பகவதி, மீன்குளத்தி பகவதி, பூக்குளத்தி பகவதி என அந்தந்த பிரதேச கொடைக்கோ ஊட்டுக்கோ கணக்கில் கொள்வர்.
ஊர் முதலடி எழுதிய கடிதம் வந்தது. கொடை நாள் குறித்தும் வரிப்பணம் சொல்லியும். வரிப்பணத்தைத் தம்பி மூலமாக அவனுக்கும் மகனுக்குமாகக் கொடுக்கச் சொன்னான். தலைக்கட்டு என்றால் முன்பெல்லாம் கல்யாணம் ஆன ஆண். இன்று வாக்காளர் பட்டியல் தகுதி. எதுவானாலும் அம்மன் காரியம்தானே!
கொடைக்குப் போவதா வேண்டாவா என அவன் உள்ளம் அலைக்கழிந்தது. அடுத்த கொடைக்கு இருப்போமா மாட்டோமா என உட்கேள்வியும். போன கொடைக்கு கோயிலின் இடதுபக்கச் சிறகில் போடப்பட்ட பந்திப்பாயில் பக்கத்தில் அமர்ந்து சாப்பிட்டான் முத்தையா. வெளியூர்க்காரன் அவியலுக்கு அலந்து கிடப்பான் என்றுணர்ந்து இலையில் இருந்த அவியலைக் கொத்தாக அள்ளி இவன் இலையில் வைத்தான். இந்தக் கொடைக்கு இல்லை. அதற்கு முந்திய கொடைக்கு, படப்புச் சோறு கொண்டு போன பித்தளைத் தூக்குவாளியைத் திரும்பக் கொண்டு வந்து அம்மன் கோயில் நடையில் நின்று ஆவலாதி சொன்னான் அழகப்பன் –
“இது என்ன வே? படப்புச் சோறா? இல்லே கூட்டாஞ்சோறா? படப்புச் சோறு எந்தக் காலதிலயாம் ஊசியிருக்கா லே.” என்று. அழகப்பன் பிராது உண்மைதான் என்று சாப்பிடும் போதே உணர்ந்தான். அழகப்பனும் இந்தக் கொடைக்கு இல்லை . அதற்கும் முந்திய கொடைக்கு, உச்சிக்கொடை அன்று, காலை பதினோரு மணிவாக்கில் அவனது பள்ளித் தோழர்களுடன் கும்பாட்டம் பார்த்துக் கொண்டிருந்தான். வடக்குப் பார்த்திருந்த கோயில் முகப்பில் கிழமேலாகப் போடப்பட்டிருந்த தட்டுக் காமணம். இருபதடி நீளத்துக்கு நீட்டி ஆடிக்கொண்டிருந்தாள் இரு கும்பக்காரிகளும். மேற்குப் பக்கம் நின்று வாசித்துக் கொண்டிருந்தனர் நையாண்டி மேளம். பள்ளித்தோழர்கள் கும்பல் கோயில் சுவரோரம் கிடந்த பெஞ்சில் அமர்ந்து சொக்களி பேசிக்கொண்டிருந்தது.
வியர்த்துப் பூத்து ஆடிக் கொண்டிருந்த கும்பாட்டக்காரி ஆடியவாறே காத்து எனப் பட்டப்பெயர் கொண்ட குமாரவேல் பக்கம் வந்து, அவன் தோளில் கிடந்த டர்க்கித் துவாலையை உருவினாள். ஆடிய தோரணையிலேயே நின்று, துண்டை நீளவாக்கில் கவுட்டுக்கிடையில் வைத்து வியர்வை துடைத்தாள். அக்குள்களில் ஒற்றினாள். கழுத்தில், முதுகில், நெஞ்சில் துடைத்தாள். அதற்குள் நையாண்டி மேள நாதசுரக்காரர் ஒருவரும் பம்பை முரசுக்காரரும் எங்கள் பக்கத்தில் வந்து ஆட்டி ஆட்டி வாசிக்க ஆரம்பித்தனர். கும்பாட்டக்காரி எல்லா இடங்களிலும் தன் வியர்வையை ஒத்தி விட்டுத் துண்டை காத்து தோளில் அணிவித்து, சலாம் வைத்து ஆடிப்போனாள்.
* அலமாரிலே கொண்டு பத்திரமா வைலே…. துவைச்சுக் காய வச்சிராதே!” என்றான் முத்தையா. சிரிப்பும் கும்மாளமுமாக இருந்தது. காத்தும் இந்தக் கொடைக்கு இல்லை.
அவன் காலத்திலேயே சாமி கொண்டாடிகள் இப்போது மூன்றாம் தலைமுறையினர். மூத்த தலைமுறையினரை நினைத்தால் மனதுள் பயம், பரவசம் எல்லாம் மிடைந்து ஊற்றெடுக்கின்றன கண்மூடி நம்பிய காலம் மேன்மையானதோ என்ற கலக்கம் மீதுறுகிறது. இயந்திரமயம், தொழில்நுட்பம், அரைகுறைச் சுயநலமிகள் கற்பித்தவை, எல்லாம் நமக்குத் தெரியும் என்ற மிதப்பு எல்லாமுமாகக் காலத்தைக் கரையான் போல அரித்து விட்டன.
உறங்கும் போது வாங்குகிற மூச்சு சுழி மாறிப் போனாலும் போச்சு! மூப்பும் குறுகின காண்! நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை ! செத்த மரம் அடுக்கித் தீமூட்டி விடுவார்கள். அல்லது மின்மயானம். காலை தகனம். மாலை பால். மறுநாள் காலை உத்தர கிரியை. அன்று மாலையே இரயிலோ, காரோ,டீலக்ஸ் பேருந்தோ, விமானமோ பணியிடம் நோக்கிய பாய்ச்சல்.
படப்புச் சோறின் மேல் இன்னும் மாறாத கொதி, வில்லுப்பாட்டு உடுக்கின் தூண்டில், கழுத்தறுபட்ட கருஞ்சேவல் குழம்பின் மணம் ஏதோ ஒன்று இந்த முறையும் அவனை ஊரம்மன் கோயில் நடையில் கொண்டு நிறுத்தியது. தாத்தன் கும்பிட்ட, அப்பன் கும்பிட்ட கோயில் நடை. ‘சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்ய பட்டும், பென்னம் பெரிய முலையும், முத்தாரமும், பிச்சி மொய்த்த கன்னங்களில் குழலும், கண் மூன்றும் கருத்தில் வைத்து கண் மூடிப் பிரார்த்தித்து நின்றான் அவன். அபிராமி அந்தாதி ஓடியது வரிவரியாக.
மணிகள் கோர்த்த வில்லடித்து வரத்துப் பாட்டு, ஆராசனை, உள் கோயில் மேள மங்கலம், பூவெடுப்பு எல்லாம் முடிந்தபின், கோயில் முகப்பிலும் இடம் வலம் சிறகுகளிலும் பக்கத்தில் இருந்த தமிழர் நூல் நிலையத்திலும் பந்தி விளம்ப யத்தனித்தனர்.
துவட்டல், அவியல், எரிசேரி, பச்சடி கிச்சடிகள், பப்படம், சிவந்த சம்பா அரிசிச்சோறு, பருப்பு, சாம்பார், புளிசேரி, ரசம், சம்பாரம், சிறுபயற்றம் பருப்பு பிரதமன், பாளையங்கோட்டன் பழம்…. நிலவாய்களின், சிப்பல்களின், வாளிகளின், தவிகளின், மூக்கன்களின், தம்ளர்களின் உலோக உரசல் சத்தம். விளம்புகிறவர் ஒச்சம். கலந்தெடுத்து காற்றில் அலைந்த அன்ன மணம்.
மூன்றாம் பந்தியில் உட்காரலாம் என்ற முடிவுடன் மேற்கே சாத்தாங்கோயில் நோக்கி நடந்தான். நல்ல மஞ்சள் வெயில். ஊரின் மேற்கெல்லை நீர் நிறை காவு கொண்ட சாஸ்தா. கடந்தால் மடத்தாம்பத்து. அதற்கும் மேற்கே பழையாறு. சேக்காளிகள் பலரும் அவசரப்பட்டுப் போய்ச் சேர்ந்து விட்டனர். மூத்தோர் சிலர் கைத்தடியுடன் நடமாடினர். சொல்லப்போனால், நாங்கல் தூங்கல் நடை தாழ்ந்தது. கூன் குருடு குண்டு பாய்ந்தது, செப்பு நவுண்டது செண்பகம் பாய்ந்தது சூலைக்கூறு வயிற்றுப்புண் வாயுக் கோளாறு, என….
இவ்வாண்டுக் கொடை விழாவில் மிகத் தனியனாய் உணர்ந்தான். அவனை அண்ணன் என விளிப்போர் மரியாதையுடன் ஒதுங்கித் தவிர்த்துப் போயினர். மாசிமாத வெயில் சுள்ளென உறைத்தது. சாத்தாங்கோயில் இடப்பக்கம் கிடந்த ஊருணி தூர்க்கப்பட்டுப் பூங்கா ஆகிவிட்டது. பங்குனி உத்திரத்துக்குக் கொடியேறி, ஆறாம் நாள் நடக்கும் நம்பிரான் விளையாட்டு மைதானம் சுருங்கிவிட்டது. கோயிலின் வலப்பக்க ஊர்ப்புறக் கிளை நூலகம். வான் பெரிய அரசமரம் நின்ற இடத்தில் மேல்நிலை தண்ணீர்த் தொட்டி அறுத்தடிப்புக் காலங்களில் நின்ற புளிய மரங்கள் பட்டுப் போயினவோ, தறித்து விறகாக்கினரோ! சாத்தாங்கோயில் உள் வளாகத்தில் பத்துக்கும் மேல் வேம்புகள் நின்றன ஒரு காலத்தில்.
பங்குனியில் பூத்து சித்திரை வைகாசியில் காய்த்து ஆனி,ஆடியில் பழுத்து உதிரும். கிளிகள் வேப்பம் பழந்தின்ன கிளைகளில் தத்தும். இன்று ஒன்றிரண்டு மரங்கள் பாறி நின்றன.
சாத்தாங்கோயிலின் வடக்குப் பக்கமாக நடந்து, மடத்தாம் பத்து வயல் வரப்பில் நின்று செலவாதிக்குப் போகலாம் என மந்தகதியில் நடந்தான். சாத்தாங்கோயில் வடக்கு நடையின் வரிக்கல்லில் இரண்டு விடலைப் பையன்கள் உட்கார்ந்திருந்தனர். கீழே மண்தரையில் இடதும் வலதுமாக இரண்டு பேர்… இருபது இருபத்திரண்டு பிராயம் இருக்கும்.
கால் முட்டுக்குக் கீழிறங்கிய பெர்முடா அணிந்திருந்தனர் நால்வரும். இடுப்புக்கு மேலே கட்டம் போட்ட அரைக்கை சட்டைகள். தரையில் இருந்த ஒருத்தன் தொடைப் பக்கம் பிராந்திக் குப்பி ஒன்று நின்றது. பக்கத்தில் தண்ணீர் போத்தலும். நால்வர் கையிலும் பிளாஸ்டிக் தம்ளரில் பானம். ஒரு ரூபாய் ஊறுகாய்த் தடை யாவர் மடியிலும் கிடந்தது. ஓரக்கண்ணால் பார்த்துவிட்டுக் கடந்து போனான். |
மூத்திரம் பெய்துவிட்டுத் திரும்பும்போது ஒரு பையன் கேட்டான் – ” அண்ணாச்சி ஒரு கிளாஸ் ஊத்தட்டா ?”
சற்றுத் திகைப்பாக இருந்தது அவனுக்கு. அவர்களை இன்னார் என்ற போத்தியம் இல்லை. இவர்களுடை அப்பன்மாரைப் பார்த்தால் அறிந்து கொள்வான். அவர்கள் அவனைச் சித்தப்பா என்றோ, பெரியப்பா என்றோ, மாமா என்றோ விளிப்பார்களாக இருக்கும். ஒருபோதும் அண்ணாச்சி என்று அழைக்க மாட்டார்கள். இவர்களை இன்னார் மகனா என்று விசாரிக்க இயலாது. அபிவாதையே சொல்ல மாட்டார்கள். ஊரைவிட்டு பிழைப்புக்காக நீங்கி 48 ஆண்டுகள் வடிந்து போயிருந்தன. அவனை இளக்காரம் செய்ய அவர்கள் அப்படிக் கேட்கவில்லை என முகபாவமும் தொனியும் உணர்த்தின. திகைப்பெலாம் அவர்கள் அண்ணாச்சி என விளித்ததில் இல்லை.
அவனும் இவர்களின் வயது கடந்து வந்தவன்தான். கொடைக்கும், கல்யாணம், மறுவீடு, சடங்கு போன்ற அடியந்திரங்களின் போதும் சிலர் தேறல் மாந்தினர். ஆள் நடமாட்டமில்லாத ஒதுக்கங்களில் இரண்டு அல்லது மூன்று பேர் நின்றவாறே பருகுவார்கள். அடியந்திர வீட்டு ஆக்குப்புரையில் இருந்து வாழை இலைத் தூம்பில் மடக்கிய அவியல், துவட்டல் அல்லது எரிசேரிதான் சைட் டிஷ். சிலருக்கு தொட்டு நக்க நாரத்தங்காய் பச்சடி. தேங்காய்ச் சிரட்டைதான் கிளாஸ்.
அப்போது முற்போக்கு சமூக நீதி திராவிட அரசியல் IMFL அறிமுகம் செய்திருக்கவில்லை . டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டிருக்கவில்லை. பனங்கள், சொல்லி வைத்தால் கிடைத்தது. என்றாலும் பலருக்கு என்னும் போது பெரிய பானைகள் சிலவற்றில் வரவேண்டும். ஊற்றிக் குடிக்கப் பனையோலைப் பட்டை முடைய இளம் பனையோலைகள் வேண்டும். கள்ளின் குழூஉக்குறி வெள்ளை.
ஔவையாரம்மன் கோயில் பொத்தையில், நாவற்காட்டு மலைப்பறம்பின் அடிவாரத்து விளைகளில், தாடகைமலை மடிப்புகளில் காய்ச்சப்பட்ட சுத்தமான வாற்றுச் சாராயமும் கிடைத்தது. சாராயத்தைக் கறுப்பு என்றனர் குழூஉக்குறியாக. மருந்து என்ற சொல்லும் புழக்கத்தில் இருந்தது. சரக்கு என்ற சொல் தேடினால் அகராதிகளில் கிடைக்கும். விரலை முக்கி தீயில் காட்டினால் நீல நிறத்தில் கொழுந்துவிடும்.
தேவையானவர்கள், முன்பணம் கொடுத்திருப்பவர், ஈட்டானுக்கு வந்து, தேங்காய்ச் சிரட்டையில் ஊற்றித் தரப்படுவதை ஒரே உறிஞ்சில் குடித்துவிட்டு, முகத்தைக் கோணி “ம்ஹ்ம்… ம்ஹ்ம்” என்று தொண்டையைச் செருமிவிட்டு இடத்தைக் காலி செய்வார்கள். ஈதெல்லாமே விளக்கு வைத்தபிறகு நடக்கும் காரியங்கள். எத்துக்குத்தாக, மறைவில் என்ன நடக்கிறது என்று எட்டிப் பார்த்தால் – வசக்கேடான பகல் நேரங்களில் – துரத்தி விடுவார்கள். அவர்களுக்கு ஏதும் தேவை இருந்தால் -“யாருலே அது? கெணவதி அண்ணனுக்கு மகனா? மக்காலே! ஒரு காரியம் செய் நீ.– ஆக்குப் பெரைக்குப் போயி கிருஷ்ண பிள்ளை அண்ணன்கிட்டே சொல்லி நான் கேட்டேன்னு ஒரு இலையிலே கொஞ்சம் அவியலு மடக்கிக் கொண்டுக்கிட்டு வா என்னா!’ என்று சொல்வார். கூட இருக்கும் இன்னொருவர் சொல்வார், ” அங்கிண கனகண்ணன் நிண்ணா கேட்டிராத என்னா ! சவம் கடுவா…. சாடி விழுந்து கடிச்சிரும்…’ என்பார். இன்னொருவர் சொல்வார், “தம்பி லே! ஒரு உவகாரம் செய்யி என்னா! அங்கிண கோயில் நடையிலே எங்க அப்பா நிப்பாரு…. கொஞ்சம் இங்கிண வந்திட்டுப் போகச்சொல்லு என்னப்போ….” என்பார்.
ஆளுக்குக் கொஞ்சம் பணம் போட்டு வாங்குவதால், உடன்பிறப்புகளுக்கும் ரத்தத்தின் ரத்தங்களுக்கும் தகவல் போகும். ஒரு சிரட்டை , கூடிப்போனால் இரண்டு சிரட்டை. மிக்சிங் என்று எதுவும் கிடையாது. இன்று சொல்கிறார்கள் அல்லவா Raw அல்லது Neat என்று அதுபோல அப்படியே உறிஞ்சுவது. ஒன்றிரண்டு பேர் தாங்கு சக்தி குறைந்தவர் சற்றுத் தள்ளாடி நடப்பார்கள். இயல்பாக இருப்பதாகக் காட்டிக் கொள்ள கொஞ்சம் வலிய அதிகம் சிரிப்பார்கள். சிலர் அலம்பல் செய்வதுண்டு. சொக்களி பேசுவதும் உண்டு. ஆனால் சச்சரவு, அடிதடி, சாதிச்சண்டை , கட்டப் பஞ்சாயத்து என்று என்னறிவில் போனதில்லை. எனவே குறுந்தலைவர்களுக்கு கட்டப் பஞ்சாயத்து சம்பாத்தியமும் இல்லை. எவராவது சற்று முறைத்தோ சினந்தோ பேசினால் தனியாகத் தள்ளிக்கொண்டு போய்விடுவார்கள் சகாக்கள்.
கொடை என்றால் நையாண்டி மேளக்காரர்களுக்கும் கும்பாட்டக் குட்டிகளுக்கும் ஒரு பங்கு போகும். சில அரிசி வைப்புக்காரரும் வேண்டிப் பெறுவார்கள்.
ஆனால் பட்டப் பகலில், சாத்தாங்கோயில் நடையில் அமர்ந்து குடிக்கிறார்களே என்று திகைத்தான் அவன். “நம்மள இன்னாருண்ணு தெரியாம அண்ணாச்சிண்ணு வேற கூப்பிடுகான்” என்று நினைத்தவாறு நடந்தான். சிரிப்பாகவும் வந்தது.
மூன்றாவது பந்தி போய்க் கொண்டிருந்தது. பசியும் முற்றி விட்டது. கிடைத்த இடத்தில் போய் உட்காரத் தோன்றியது. இதுவரை அவன் பங்கெடுத்த எல்லா அன்னக்கொடை பந்திகளிலும் பக்கத்தில் அமர்ந்து சாப்பிட்டவன் முத்தையா. இன்று அவன் இல்லை என்ற ஆயாசம் அலைக்கழித்தது.

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும் and tagged , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s