ஆவநாழி
நாஞ்சில் நாடன்
காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா’ என்பது சித்தர் பாடல்,
“வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன? இங்கார் சுமத்திருப்பார் இச்சரக்கை?
என்பது தனிப்பாடல், ஈண்டு காயம் எனும் சொல்லின் பொருள் உடல், காயகல்பம் எனும் சொல் கேள்விப்பட்டிருக்கலாம்.
நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் பேயாழ்வாரின் மூன்றாம் திருவந்தாதியில் ஒரு பாடல்,
“படிவட்டத் தாமரை பண்டுலகம் நீரேற்று
அடிவட்டத்தால் அளப்ப நீண்ட – முடிவட்டம்
ஆகாயம் ஊடறுத்து அண்டம் போய் நீண்டதே
மாகாயமாய் நின்ற மாற்கு’
என்று பேசும். நெடுமால் ஈரடியால் மூவுவரும் அளக்க முற்பட்டதைச் சொல்லும் பாடல்,
இதில் மாற்கு என்ற சொல், மாலுக்கு – திருமாலுக்கு- என்று பொருள் தரும். ‘மாகாயமாய் நின்ற மாற்கு’ என்றால் பேருரு- பேருடல் எடுத்து நின்ற திருமாலுக்கு என்பது பொருள், மா + காயம் = மாகாயம் = பெரிய உருவம், பெரிய படல்,
காயம் என்றால் ஆகாயம் என்றும் பொருள் உண்டு. தொல்காப்பியம், எழுத்ததிகாரம், புள்ளிமயங்கியலில் ‘விண் என வரூஉம் காயப் பொர் வயின்’ என்ற நூற்பா உண்டு, விண் என்ற ஆகாயத்தை உணர்த்தும் பெயர்ச்சொல் என்பது பொருள், சீவகசிந்தாமணி கோவிந்தையார் இலம்பக்கத்துப் பாடல் ஒன்று ‘காயம் -ஆறாக ஓடும் கருத்தடங்கண்ணி எனும் தேவதை பற்றிக் கூறுகிறது. ஆகாயமார்க்கமாகச் செல்லும் கருத்தடங்கண்ணி என்ற தேவதை என்பது இச்சொற்றொடரின் பொருள், எனவே காயம் என்ற சொல்லை ஆகாயம் எனும் பொருளில் திருத்தக்கதேவரும் ஆண்டுள்ளார்.
காயம் எனில் நிலைபேறு என்றும் பொருள். ‘உத்தியோகம் காயமாயிற்றார் என்பர். எங்கள் பகுதியில் காயம் இந்தப் பொருளில் பயன்பட்டதில்லை. எங்கும் சரளமாக இன்றும் வழங்கும் பொருள், காயம் என்றால் புண், வடு, wound. அச்சு ஊடகங்கள் படுகாயம் எனும் சொல்லைப் பயன்படுத்தாத நாளில்லை. அதிகப் பயன்பாடு அதிக சர்குலேஷன், அதிக வருமானம் அவர்களுக்கு. படு என்றால் என்ன என்று கேட்பீர்கள், அந்தச் சொல் பற்றி எனது முழுநீளக் கட்டுரை ஒன்றுண்டு, ‘படுவேன் படுவது எல்லாம்! என்ற தலைப்பில், தமிழினி 2019-ல் வெளியிட்ட ‘கருத்த வாவு’ எனும் கட்டுரைத் தொகுப்பில் காணலாம். ‘கணையாழி வெளியிட்ட கட்டுரை அது.
காயம் என்றால் காய் அதாவது காய்கறி என்று பொருள் சொல்கின்றன அகராதிகள். உறைப்பு அதாவது எரிப்பு அல்லது காரம் என்று பொருள் தருகிறது பிங்கல நிகண்டு, காயம் எனும் சொல்லுக்கு. மிளகு, பூண்டு, சுக்கு, கடுகு, பெருங்காயம் என்பன காயம் எனும் ஒற்றைச் சொல்லால் குறிக்கப்படுவதுமுண்டு. ஐங்காயம் என்றொரு சொல் இருக்கிறது. ‘காயமிட்டுக் கீரை கடை’ என்பார் கவிமணி. ஒரு குழம்புக்குக் காயம் என்று பெயர் இருந்திருக்கிறது. குழம்புக்கு மாற்றுச் சொற்கள் சாறு, ஆனம். ஆனம் எனும் சொல் சங்க இலக்கியம் தொடங்கி கீரனூர் ஜாகிர் ராஜா வரைக்கும் புழங்கப்படும் சொல்.
திருமூலர், பத்தாம் திருமுறையான இருமந்திரத்தில், காயம் எனும் சொல்லைப் பல பாடல்களில் பயன்படுத்தியுள்ளார். காயா பழமா என்றொரு வழக்குண்டு சமூகத்தில், காரியம் சித்தியா அல்லவா என்பதறிய. பள்னிப் பருவத்துச் சிறுமியர் காய் விடுவதும் பழம் விடுவதுமாக இருந்தனர் ஒரு காலத்தில். இன்று தமிழிலக்கியச் குழலில், குழுக்கள் சார்ந்த ஊடகவியலாளர்கள் தமது எதிர்க்குமுவினரை நிரந்தரமாகக் காய் விட்டு விடுகிறார்கள். குழம்பில் கிடக்கும் காயைக் குறிக்கத் தான் என்றொரு சொல் பயன்பாட்டில் உண்டு சில சமூகத்தினரிடம்.
காயா என்ற சொல் வினாவாக வரும்போது கனியாததா எனப் பொருள் தருகிறது. ஆனால் காயா என்றொரு பெயர்ச்சொல் கிடக்கிறது அகராதிகளினுள். காயா எனும் சொல்லுக்குக் காசாமரம் எனப் பொருள் தரும் திவாகர நிகண்டு. காயா எனும் சொல்லுக்கு Iron woo tree எனப் பொருள் சொல்கின்றன அகராதிகள். காயா மரம் என்றால் காய்ப்பே இல்லாத மரம் எனப் பொருளுண்டு, திரு ஏகம்பமாலையில் பட்டினத்தடிகள்,
‘காயா மரமும் வறளாங்குளமும்
கல்லாவும் என்ன
ஈயா மனிதரை ஏன் படைத்தாய் கச்சி ஏகம்பனே!’
என்று பாடுகிறார். திரு.வி.க. உரை எழுதினார். ‘காயாத மரமும் நீர் வறண்ட குளமும் கற்பசுவும் போல, ஒருவருக்கும் ஒன்றும் கொடாத மனிதர்களை ஏன் படைத்தாய் கச்சி ஏகம்பனே!’ என்று. கற்பசு என்பது சிறந்த சொல்லாட்சி. வேறொரு சித்தர் அதனை மரப்பசு என்றார். ‘மரப்பகவின் மடியதனில் பாலுண்ணலாமோ?’ என்பார். தி.ஜானகிராமன் நாவல்களில் ஒன்றின் தலைப்பு ‘மரப்பசு’, பசு என்பது அங்கொரு குறியீடு,
காயா மரம் என்றால் காய்க்காத மரம் என்றாலும், காயா என்றே ஒரு மரம் பேசப்படுகிறது. காயா எனும் தாவரமும் காய்ப்பதில்லை என்பதால் அதனைக் காயாமரம் என்று காரணப் பெயராகவும் கொள்ளலாம் என்கிறார்கள். காயா மரத்தின் பூவையேக் காயாம்பூ என்கிறார்கள்.
நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில், பெரியாழ்வார் திருமொழியில் செங்கீரைப் பருவத்துப் பாடலில், ஆறாம் பாடல், ‘காயமலர் நிறவா! கருமுகில் போலுருவா!’ என்று தொடங்கும். காயாம்பூ நிறத்தவனே, கார்முகில் போல் உருவம் கொண்டவனே!’ என்று பொருள்.
அண்மையில் செம்மூதாய் கி.ரா.வின் 98-வது பிறந்தநாளில் போது, அவரது பெயரால் கோவை விஜயா வாசகர் வட்டம் இலட்சம் ரூபாய் விருது ஒன்று அளித்தது. விருது பெற்றவர் நடு நாட்டுச் சொல்லகராதி தொகுத்து அளித்தவர். தகுதியான கவிதைகள் எழுதியவர், தரமான சிறுகதைத் தொகுதிகள் தந்தவர், அஞ்சலை, கோரை, நெடுஞ்சாலை, வத்தாரங்குடி போன்ற சிறப்பான நாவல்கள் படைத்தளித்தவர், கண்மணி குணசேகரன். அவரிடம் கேட்டேன், “கண்மணி! காயாம்பு பாத்திருக்கேளா?”
கண்மணி குணசேகரன் தந்த தகவல், காயாமரம் என்பது செடியும் அல்லாத,
பெருமரமும் அல்லாத புதர்போன்ற தாவரம் என்பதும் அதனை அவர்கள் அப்பகுதியில் காச்சான் என்று சொல்வர் என்றும், காடுகளில் புதராக வளர்ந்து கிடக்கும் என்றும்.
விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் மூலமாக எனக்கு திருமதி லோகமாதேவியுடன் நல்ல குடும்ப நட்பு. அவர் தாவரவியல் துறை பேராசிரியராகப் பொள்ளாச்சி கல்லூரியொன்றில் பணியிலிருப்பவர். தாவரவியலில் முனைவர். அவரிடம் கேட்டபோது, காயா பற்றி அவர் தந்த தகவல்களும் புகைப்படங்களும் அருமையானவை. தகவல்களைத் தொகுத்துத் தருகிறேன்.
என்றும் பசுமையுடன் இருக்கும் தாவரம் இது. Ever green. காடழித்தாலும் காயா அழியாது என்றொரு வழக்கு உண்டு. காயாவின் தாவரப் போரினப் பெயர் மிமிசிலான். தாவர சிற்றினப் பெயர் எடுயூல். இஃதோர் இந்தியத் துணைக்கண்டத்துத் தாவரம். இலங்கையில் இதன் பெயர் காயான். இதன் Botanical name, Memecylon Edule ல் குறிக்கப்பெற்றுள்ள Cylon எனும் சொல்லை நாம் கவனத்தில் கொள்ன வேண்டும்.
காயாம்பூ நான் கண்டதில்லை. ஒருவேளை ஏதும் காடுகளில் கண்டிருந்தாலும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. லோகமாதேவியிடம் கேட்டபோது மைசூர் பக்கம் மெர்க்காரா காடுகளில் கண்டதாகச் சொன்னார். காயா பூத்திருந்தால் பார்க்கப் பரவசம் என்றார். காயா இலையைச் சுவைத்துப் பார்த்தால் முதலில் இனிப்பாகவும் பிறகு சற்றுப் புளிப்பாகவும் இருக்குமாம். Presence of starch in leaves காரணமாக என்றார். திருவண்ணாமலையில் இரமண மாமுனிவர் காயா இலைகளைப் பிரசாதமாகத் தருவாராம். சிவன் கோயில்களில் வில்வமும் பெருமாள் கோயில்களில் துளசியும் தருவதைப் போல.
கண்மணி குணசேகரன் ஒரு செய்தி சொன்னார். காயா மரத்தின் சிறு கட்டை அரிவாள், சுத்தியல், கத்தி, கோடரி இவற்றின் கைப்பிடிகள் செய்யப் பயன்படும், விறகுக்கும் உதவும், நின்று எரியும் என்றும்.
தமிழில் இந்தத் தாவரம் காயா, காயாம் அஞ்சனி, காசா, காச்சான், சிறுகாசா, அல்லி, பூவை எனும் பெயர்கனில் அடையாளம் காணப்படுகிறது. தெலுங்கு அல்லிச் செட்டு என்னும், கன்னடம் ஒல்லையாக்கொடி என்கிறது. துளு ஒல்லைக்கொடி என்னும் மலையாளம் கன்னாவு, அஞ்சனி, காயாம்பூ காசாவு, நெடுஞ்செடி எனும் பெயரில் வழங்குகிறது. மராத்தி அஞ்சனி, அஞ்சன் என்றும், வங்காளி அஞ்சனா என்றும், ஓடியா தெயமாரு என்றும் சமஸ்கிருதம் அஞ்சன் என்றும், இந்தி அஞ்சன், அல்லி என்றும் வழங்குகின்றன.
அஞ்சனம் என்றால் கருமை என்று பொருள். மை எனலாம். சுசீந்திரம் அருகில் ஆசிராமம் எனும் சிற்றூரில் ஒரு சாஸ்தா இருக்கிறார். அவர் பெயர் அஞ்சனம் எழுதிய சாஸ்தா. கம்பன், குகன் கூற்றாக இராமனைக் கூறுவான், அஞ்சன வண்ணன் என் ஆருயிர் நாயகன்’ என்று. நீல மேக சியாமள வண்ணன் என்பார்கள் திருமாலை. காயாம்பூ வண்ணன் என்று நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் பல பாடல்களில் குறிக்கும். கூர்ம புராணம், இராமாவதாரப் பகுதியில், காயாம்பூ வண்ணன் இவை கழறும் அன்றே! என்று பேசுவதாகப் பேரகராதி தகவல் தருகிறது. நான் வாசிக்க நேர்ந்ததில்லை.
காயாவின் பூ காயாம்பூ. சில பகுதிகளில் காசாம்பூ என வழங்கப் பெறுகிறது. ‘ய-ச’ மயக்கம் நம்மிடம் பல சொற்களில் உண்டு, ஆகாயம்-ஆகாசம், வயம்-வசம், அவதி- அசதி, கபம்-கசம், கலயம்-கலசம், குயவன்-குசவன் எனும் சொற்களில் சில எடுத்துக்காட்டுகள், நிகண்டுகள் காயாவை அஞ்சனி, காசை, வச்சி எனும் சொற்களால் குறிக்கின்றன. எனவே காயா, காசா என்றும் வழங்கப்பெற்றது.
காயா முல்லை நிலத்துப் பூ அரிதாகக் குறிஞ்சியிலும் பூக்கும் என்கிறார் ‘சங்க இலக்கியத் தாவரங்கள்’ எனும் நூலில் முனைவர் கு.சீனிவாசன். தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் 1987-ம் ஆண்டு வெளியீடு, 80 பக்கங்கள், மறுபதிப்பு இல்லை என்பதால் தேட வேண்டாம். பல ஆண்டுகள் முன்பு நான் தஞ்சாவூர் போயிருந்த போது பல்கலைக்கழகத்தின் நூல் விற்பனைக் கூடத்துக்குப் போய் சில புத்தகங்கள் வாங்க, இந்த நூலைப் பற்றி விசாரித்தேன். செம்மொழி மாநாட்டில் வர இருக்கும் நூற்பட்டியல் காண்பித்தார்கள். அதில் இந்த நூலும் இருந்தது. கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டின்போது, நம்மையெல்லாம் அழைக்க மாட்டார்கள் என்பதால் சாலையில் நின்று ஊர்வலம் பார்த்தேன். செம்மொழி மாநாடு நடந்த வனாகத்தின் எதிர்ப்புறம் இருந்த கல்லூரி வளாகத்தில நடத்த புத்தகக் கண்காட்சிக்கும் போனேன், தமிழ்ப் பல்கலைக் கழக அரங்கில் விசாரித்தபோது, இன்னும் வரவில்லை என்றார்கள். தொடர்ந்து சென்னையில் நடக்கும் புத்தகத் திருவிழாவில் விசாரித்துக்கொண்டிருக்கிறேன் அவர்கள் அரங்கில், 2020 ஜனவரி வரை, அற்புதமான புத்தகம், ஆகவே மறுபதிப்பு இல்லை .
***
பிரமிப்புதான் கூடுகிறது வார்த்தைகள் எழவில்லை
இதுவரை காயம் என்ற சொல்லுக்கு
ஆதாரத்துடன் ஆகாயம் என்ற அர்த்தத்தை எவரும் எழுதவில்லை.நன்றி.
தொல்காப்பியர் மன்றத்திற்காக,
தலைவர்& ஒருங்கிணைப்பாளர்.
அ.இருளப்பன்-9942470199