என்னைக் கவர்ந்த இளம் படைப்பாளி வேல்முருகன் இளங்கோ

காஞ்சிபுரத்து ஜீவா படைப்பகம் இவ்வாண்டு வெளியிட்ட ’மன்னார் பொழுதுகள்’ எனும் நானூறு பக்க நாவல் போனமாதம் வாசிக்க நேர்ந்தது. வேல்முருகன் இளங்கோ எழுதியது. திருவாரூர் மாவட்டத்து வடுவூரைச் சேர்ந்தவர். இருபத்தொன்பது வயதானவர்; பொறியாளர் என்ற தகவல்கள் கடந்து எனக்கு வேறெதுவும் தெரியாது. ‘ஊடறுப்பு’ என்று ஒரு நாவல் ஏற்கெனவே எழுதியிருக்கிறார். நான் வாசித்ததில்லை. வேல்முருகன் இளங்கோவை நான் சந்தித்ததுமில்லை.
சிறுகதை, கட்டுரை எனத் தீவிரமாக இயங்கும் கார்த்திக் புகழேந்தி “மன்னார் பொழுதுகள்’ நாவலுக்கு முன்னுரைத்துள்ளார். பரந்த களமொன்றில் நாவல் நடக்கிறது. ஐ.என்.ஏ வீழ்ந்த காலகட்டப் பின்னணியில் தொடங்கி சதியால் சாய்க்கப்பட்ட விடுதலைப் புலிகள் தலைவன் பிரபாகரன் மரணம் வரை பேசுகிறது நாவல். ஊடாட்டமாகச் சமகால அரசியல் குறுக்குச் சால்கள் விவரிக்கப்படுகின்றன. ஆனால் இதையொரு வரலாற்று நாவல், அரசியல் நாவல் என்ற எல்லைக்குள் நிறுத்த இயலாது. இன, மத வர்க்க முரண்கள், சதிகள், வன்மங்கள் என மிடைந்து ஒரு திரில்லர் வாசிக்கும் அனுபவம் தருகிறது. பிரதான கதாமாந்தரும், சில காட்சிகளில் மட்டுமே நடமாடும் பாத்திரங்களும் ஈர்ப்புடனும் செறிவுடனும் படைக்கப் பெற்றுள்ளனர். திகிலூட்டும் சம்பவங்கள் நல்ல வாசிப்பு ஈர்ப்பான மொழியில் வடிவமைக்கப்பட்டுள்ளன. நாவலுக்கான மொழியும் நடையும் கைவரப் பெற்றிருக்கிறார் வேல்முருகன் இளங்கோ.
அறந்தாங்கி, தூத்துக்குடி, திருநெல்வேலி மக்களின் மொழி, நெய்தல் நிலத்து மொழி வழக்குகள் எனத் திறனுடன் ஆளப்பட்டிருக்கின்றன. பாசாங்கற்ற, மேதாவித்தனமற்ற உரையாடல்கள் நிகழ்கின்றன. சமகாலத்தில் வாசிக்க வாய்த்த நாவல்களில் மனம் கவர்ந்தது இது. இளம் நாவலாசிரியரான வேல்முருகன் இளங்கோ தன் திறன் உரைத்து நில்லாமல், நாவலை வளர்த்துச் செல்வதில் முனைப்புடன் செயல்பட்டிருக்கிறார்.
தமிழில் ஓர் இளைய திறன்மிக்க படைப்பாளி. நம்பிக்கை தரும் நாவலாசிரியர் எனும் நிலையெல்லாம் கடந்து, தேர்ந்த நாவலாசிரியர் வரிசையில் வைப்பேன் வேல்முருகன் இளங்கோவை. எப்பகுதியிலும், எந்த உறவிலும் எச்சம்பவத்திலும் செயற்கைத்தனம் அற்ற, புனைவென்று உணர்த்தாத விதத்தில் இவர் படைப்பு பேசுகிறது. அரை நூற்றாண்டுக்கும் மேலாகப் புனைவிலக்கியம் வாசிப்பவன் என்பதால் காலந்தோறும் பன்முகப்பட்ட எழுத்தாளுமைகளை எதிர்கொண்டு வந்திருக்கிறேன். புத்தம் புதிய, படைப்பூக்கமுள்ள, சொல் திறனில் நவீனமுள்ள, மொழித் தேர்ச்சியுள்ள இளைய நாவலாசிரியர் ஒருவரை ‘மன்னார் பொழுதுகள்’ மூலம் அறிமுகம் ஆனதில் களிப்பு உண்டு எமக்கு.
– நாஞ்சில் நாடன்
11- நவம்பர் -2020
நன்றி: விகடன் 25-11-2020

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும் and tagged , , , . Bookmark the permalink.

4 Responses to என்னைக் கவர்ந்த இளம் படைப்பாளி வேல்முருகன் இளங்கோ

  1. rajendranunnikrishnan சொல்கிறார்:

    இளம் படைப்பாளிகளை மற்றவர்கள் அறியச் செய்யும் ஐயா வின் பணி அளப்பரியது. இந்த பதிவிற்கு பின் வேல்முருகன் இளங்கோ வின் வலைப்பூவில் இரு சிறு கதைகளை படித்தேன். அற்புதமான எழுத்து. மன்னார் பொழுதுகள் புத்தகத்தை அடுத்த கண்காட்சியில் வாங்கிட எண்ணியிருக்கிறேன். 🙏

  2. G. Shyamala Gopu சொல்கிறார்:

    கதையும் அருமை. விமர்சித்து பாராட்டிய உயர்திரு. நாஞ்சில் நாதனின் பண்பு நெகிழ்வூட்டுகிறது

  3. G. Shyamala Gopu சொல்கிறார்:

    கதையும் அருமை. விமர்சித்து பாராட்டிய உயர்திரு. நாஞ்சில் நாடனின் பண்பு நெகிழ்வூட்டுகிறது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s