ராஜசுந்தரராஜன்
https://padhaakai.com/2015/04/27/nagumilagai/
“எழுத்தாளன் பென்ஷன் வாங்கமாட்டான். சாவது வரைக்கும் எழுதலாம். அதனாலதான் சாகப்போற காலத்திலே தீவாளிமலர் பொங்கல்மலர்னு கதை கேப்பான். … சின்னப் புள்ளையோ இப்பம் எம்புட்டு நல்லா எழுதுகு… அவாள் கதைகளை எங்கயாம் மலருல பாத்திருக்கேளா?”
இது நாஞ்சில் நாடனின் ‘கதை எழுதுவதன் கதை’யில் எழுத்தாளர் கும்பமுனி பேசுவதாக வருவது. ‘நாஞ்சில் நாடன் சிறப்பிதழ்’க்காக “பதாகை” என்னிடம் கட்டுரை கேட்டபோது இது ஞாபகம் வந்தது! மெய்யாலுமே என்னிலும் சிறந்த எழுத்தாள இளைஞர்கள் இருக்கிறார்கள்.
கட்டுரை எழுதுவதற்குத் தகவலறிவு வேண்டும். அனுபவங்களைத் தாண்டி, தகவலறிவின் கருத்துக் கடலுக்குள் விழுந்து துழாவுவதில் எனக்கானால் மூச்சுமுட்டும். அதனால், பொதுவாக, அவ்வகை எழுத்துகளை நான் ஏற்றெடுப்பது இல்லை. ஆனால் நாஞ்சில் நாடன் குறித்தல்லவா எழுதச் சொல்கிறார்கள்?
தலைக்கனம் இல்லாதவர் நாஞ்சில் நாடன்; தன்னிலும் இளைய எழுத்தாளர்களைத் தன் சகோரம் அல்லது பிள்ளைகளைப் போல மதிப்பவர்; தமிழின் சங்க இலக்கியங்கள், பின்னர் வந்த சமய, சிற்றிலக்கியங்கள், கம்பராமாயணம் என மிக்கவாறும் வாசித்துப் புலமை கண்டவராயினும், ஒன்றுமே வாசித்தறியாது இன்றைக்கு வந்த எழுத்தாளர், வாசகர்களையும் கூட செவிமடுப்பவர்; ஊக்குவிப்பவர்.
நாஞ்சில் நாடன் நமக்கு குரு என்று கொண்டால் அப்படித்தான்; அண்ணாச்சி என்று கொண்டால் அப்படியும்தான். படைப்பாளியாய் வரம்பெற்று வந்த ஒரு மாமனிதர் அவர். அடிப்படையில் நல்ல மனிதர்களாய் இருந்தும் எழுத்து, கலை என்னும் மேல்கட்டுமானங்களால் வேலிகட்டிக் காவல்கோபுரத் துப்பாக்கிச் சிப்பாய்களாய் விரைத்து நிற்பவர்களை எடுத்துக்காட்டி இதைத் தெளிவுபடுத்தலாம்…, ஆனால் என்னத்துக்கு நமக்கு எதிர்மறை அணுகல்?
ராஜமந்திரித் தொடர்வண்டி நிலைய வாசலில் நான் ஏறிய வண்டியில்தான், என்னை ஒட்டி, ஏறி அமர்ந்தார் நாஞ்சில். அவர் இருக்கத் தாராளமாக இடமிருக்குமாறு நான் எதிர்வரிசைக்கு மாறி அங்கே இடித்துக்கொண்டு உட்கார்ந்தேன். படகுத்துறைக்குப் போகிற வழிநெடுக அவர், தமிழ்ச்சொற்களை அர்த்தமில்லாமல் பிரிக்கிற அச்சகத்தார் மீது எரிச்சல் பட்டும், பெண் எழுத்தாளர்களுக்கு முன்னுரை எழுதுகையில் காட்டவேண்டிய கவனம் பற்றியும் விளக்கிக்கொண்டு வந்தார். தமிழ் வார்த்தை ஒன்றின் ஒரு பாதியை மேல்வரியின் முடிவிலும் மறுபாதியைக் கீழ்வரியின் முதலிலும் அவர் இட்டுக் காட்டியபோது எனக்குச் சிரிப்புத் தாளவில்லை. “சரோஜாதேவி புத்தகங்களில் கூட அப்படி வராதே!” என்றேன். “அச்சுக் கோர்த்துகிட்டு இருந்த காலத்துல அப்படி இல்லைங்க; கம்ப்யூட்டர் வந்த பின்னாலதான் இந்தக் கண்ராவி எல்லாம்,” என்றார்.
கண்மணி குணசேகரன் போன்ற எழுத்தாளர்கள் உள்ளவரை யதார்த்தவாதம் மடியாது என்றார் நாஞ்சில். ஆனால், ‘யதார்த்தவாதம்’ என்பது நம் வசதிக்கு வைத்துக்கொண்ட ஒரு பெயர்தானே? கொண்டுகூட்டி அல்லது முன்பின் கற்பித்துப் பொருள் கொள்வது (interpretation) அல்லவோ யார்க்கும் நடைமுறை?
நீர் தொடர்பான கும்பகர்ண மொழிதல் ஒன்றை நினைவிலிருந்து எடுத்து விளக்கினார், கம்பனை ஓரளவுக்குக் கரைகண்டவர் அல்லவா நாஞ்சில்? “நீர்க்கோல வாழ்வை நச்சி” என்பதே அந்த செஞ்சோற்றுக் கடன்கழித்தான் செப்பிய மொழி. அந்தச் சொற்றொடரின் தாக்கத்தில் சற்று முன்பின் கற்பித்து இட்டதுதான் இந்தக் கட்டுரையின் தலைப்பு.|| (இது நாஞ்சில் நாடனொடுகூட நான் போகியதோர் உலா பற்றியதொரு கட்டுரையின் ஒரு பகுதி. அந்தக் கட்டுரைத் தலைப்பு: “நீர்மேல் உலாவை நச்சி”
இதை ஏன் இங்கே நினைவிலெடுக்கிறேன் என்றால், அவரளவுக்கு உள்ளபடி எழுதுகிற திறமையில்லாதவன் நான். சுந்தரராமசாமி என்னை ஒரு மாணாக்கனாக ஒரு பயிற்சி பண்ணிப்பார்க்கச் சொல்வார்: ஒரு மரத்தை அல்லது படிக்கட்டைப் பார்த்து அதை வாக்கியங்களில் உருவாக்கி எடுக்க வேண்டுமாம். எனக்கு அது வியப்பாகவும் உவப்பாகவும் இருந்தது. ஏனென்றால் சிறுவயதிலிருந்து அதைத்தானே செய்துவருகிறேன். என்றால் வாக்கியங்களில் அல்ல, கோடுகளில். அது ஓவியர்களுக்கான ஒரு பயிற்சி. முப்பரிமாணப் பொருள்களை அவதானித்து அதை இருபரிமாணத் தாள் மீது உருவப்படுத்துதல் அத்துணை எளிதில்லை. யதார்த்த எழுத்தும் அப்படித்தான். எடுத்துக்காட்டாக, வட்டார வழக்குப் பேச்சுமொழித் தமிழை எழுத்தில் கொண்டுவருவதென்பது யதார்த்தம் சார்ந்தது. நாஞ்சில் நாடன் அதில் விற்பன்னர்.
நாஞ்சில் நாடனின் “நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை” கட்டுரைப் புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் பேசி இருக்கிறேன். தமிழின் “சிற்றிலக்கியங்கள்” பற்றி அவர் எழுதிய புத்தகத்துக்கும் மதிப்புரை எழுதி இருக்கிறேன். அவரது நாவல்கள், சிறுகதைகள் அன்றி கம்பராமாயணம் பற்றி அவர் எழுதிய கட்டுரைகள் அடங்கிய புத்தகத்தையும் வாசித்து இருக்கிறேன். அடடா, எத்துணைப் பெரிய தமிழறிஞர் இவர் என்று வியக்காமல் இருக்க முடியாது. ஆனால் அதற்கு நாமும் கொஞ்சம் தமிழறிந்திருக்க வேண்டும்.
கொப்பூழ் அருகில் மச்சமிருக்கிற ஒருத்தியைத் தேடி அவளைக் கண்டுபிடிக்கிற அக் கட்டத்தில் நாயகன், தமிழ்த் திரைப்படத்தில்தான், தான் இசையறிந்தவன் என்று அவளிடம் காட்டுவதற்காக, “மரிமரி நின்னே..” என்று யேசுதாஸ் குரலில் இரண்டுவரி எடுத்து விடுவான்; அங்கிருந்த குழந்தைகள் எல்லாம் காணாமல் போய்விடுவார்கள். தமிழ்ப்புலமை உண்டென்று காட்டினாலும் அதே கதிதான். ஆகவே, தமிழ்பற்றி இங்கொன்றும் சொல்லப்போவதில்லை.
புதுமைப்பித்தனுக்கு ‘அவலத்துப் பகடி’; மௌனிக்கு ‘தத்துவ மொழியிருண்மை’ என்றால், நாஞ்சிலுக்கு ‘ஒவ்வாச்சுருதி’ (absurdity). இதை, முக்கியமாக, தனது கும்பமுனிக் கதைகள் வழியாக மிகச்சிறப்பாக நிகழ்த்துகிறார். கும்பமுனி என்னும் கிழட்டு எழுத்தாளர், அவருக்குத் தவசிப்பிள்ளையான (சமையற்காரர்) கண்ணுபிள்ளை ஆகிய இரண்டே இரண்டு குணவார்ப்புகளைக் கொண்டு நிகழ்த்தப்படுகிற உரையாடல்களினால் ஆனவை இந்தக் கதைகள். இவற்றை கட்டுரைத்த கதைகள் அல்லது கதைவடிவிலான கட்டுரைகள் எனவும் கொள்ளலாம். விமர்சனத் தொனியுடன் கூடிய எழுத்துகள்.
“’மோகமுள்’ தெரியுமாடே?” என்று கும்பமுனி, தவசிப்பிள்ளையைக் கேட்கிறார். அவர் மீன்முள் வரைக்கும் தெரிந்து வைத்திருக்கிறார்; மோகமுள் இன்னதென்று அறிந்தாரில்லை.
இராவணன் நெஞ்சில் தைத்தது
உயிர் ஒடுங்கும் நாளில்
சீதையோடு சேர்ந்து எரிவது
ஒருக்கால்
அஸ்தி பொறுக்கப் போனால்
ஆணிபோல் எரியாமல்
கனன்றும் கிடப்பது.
“கவிதை மாரி இருக்கு பாட்டா! அப்பமே புதுக்கவிதை வந்தாச்சா?”
“கவிதை என்னவே? வாக்கியத்தை நாலா மடக்கி எழுதினாப் போச்சு. பல பேருக்க கவிதைப் பொஸ்தகத்தை நீட்டி அடிச்சா பதினாறு பக்கம் தேறாது தெரியுமா?”
இப்படி நக்கலோடு கூடிய விமர்சனங்களே எல்லாக் கதைகளும். சமூகச் சடங்குகள், அரசியல், அரசாங்க நடபடிகள், கலாச்சாரங்கள், முற்போக்குகள், சாவுபற்றிய சிந்தனைகள் என எல்லாவற்றின் மீதும் விமர்சனங்கள். தான் வாழும் சூழ்நிலை அபத்தங்கள் மீது துணிந்து கருத்துச்சொல்ல ஓர் எழுத்தாளர் மெனக்கெட்டிருக்கிறார் என்பதே போற்றுதற்குரியது.
மாமன்மகள் மீதுகொண்ட காதலால் எழுத்தாளர் இளகி, சமையற்காரரை குரு நிலைக்கு உயர்த்துவது. அண்ணன் தம்பி பாகப்பிரிவினையில் தெய்வங்கள் இடையிற்புகுந்து வசனம் பேசுவது, எமதர்மனிடம் மாப்புவாங்க புத்தகங்கள் காரணமாவது என நான் வியந்த பல உத்திகள் பற்றியும் பேசலாம். ஆனால் எனக்கு முன்னவரான நாஞ்சில் நாடனை வியப்பதற்கு வேண்டிய தகுதி எனக்குண்டா?
****