ச.தமிழ்ச்செல்வன்
முந்தைய பகுதி (தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: நாஞ்சில்நாடன் – ச.தமிழ்ச்செல்வன்)
மூன்று
தெய்வங்கள்,தெய்வ நம்பிக்கைகள், ஆச்சாரங்கள், அனுஷ்டானங்கள், சைவம், ஊரில் நிலைபெற்றிருக்கும் சாதியக்கட்டமைப்பு என கடவுளும் நம்பிக்கைகளும் சார்ந்து அவர் எழுதியுள்ள கதைகள் நமக்கு வியப்பூட்டுகின்றன.”தெய்வங்கள்,ஓநாய்கள்,ஆடுகள்” ஒரு கதையே போதும். என்ன ஒரு நுட்பமான பதிவு! முத்தாரம்மனின் கதையை வில்லுப்பாட்டுக்காரர் சொல்லி, வரத்துப்பாடிக்கொண்டிருக்கிறார். வில்லிசைக்கும் குமரி ,நெல்லை மாவட்ட நாட்டார் கோவில் தெய்வங்களுக்குமான உறவை இவ்வளவு விரிவாக வேறு தமிழ்க்கதைகள் பதிவு செய்ததில்லை. தொ.மு.சி.ரகுநாதனின் ‘ஆனைத்தீ’ கதைக்குப் பிறகு நாஞ்சில்நாடன் கதைகள்தான் இத்தெய்வங்களைப்பற்றி விரிவாகப்பேசி நம்மை மலைக்க வைக்கின்றன.
தெய்வத்தின் கதையும் கோவில் தர்மகர்த்தாக்களான முதலடிகளுக்கிடையிலான அரசியலும் சாமியைவிட முக்கியம் பெறுவதைச் சொல்லும் கதைதான் “தெய்வங்கள்,ஓநாய்கள்,ஆடுகள்” என்றாலும் கதையின் போக்கில் அவர் சொல்லிப்போகும் காட்சிகள் அவருடைய வர்க்கச் சார்பைத் துல்லியமாகக் காட்டுகின்றன.
”அது வேளாளர் சமுதாயக் கோயில்.எனவே தாழ்த்தப்பட்ட இந்துக்களுக்கு அங்கே இடமில்லை.பலகை அளிக்கு வெளியில் இடம் பிடித்து அமர்ந்திருந்தனர்.மனிதன் என்பதற்கான மரியாதயைக்கூடத் தேடித்தராத ,தர இயலாத வக்கற்ற தெய்வத்தின் அருள்வேண்டி அவர்கள் பழியாகக் காத்துக் கிடந்தனர்”
பிரதான தெய்வமாகிய முத்தாரம்மன் கோவிலுக்கு வெளியே துணைத்தெய்வங்கள் நிலை கொண்டிருப்பது வழக்கம்.அதுபற்றி நாஞ்சில்நாடன் எழுதுகிறார்:
அரவணைப்போத்தி கோவிலில் சிலை,சிங்காரம் எதுவும் வித்தாரமாகக் கிடையாது.சுண்ணாம்புக்காரையால் ஆன ‘மொட்டை மொழுக்கட்டை’யான உருவம்.சாதி குறைந்த சாமிக்கு இதுகூட அதிகம் என்று தர்மகர்த்தாக்கள் நினைத்தார்களோ என்னவோ?என்றாலும் இன்று அவர் முகத்தில் செக்கச் செவேரென மஞ்சணை பூசி,அரளிப்பூ,பிச்சிப்பூ ஆரங்கள் கழுத்தில்- அதாவது கழுத்து என்று ஊகிக்கக் கூடிய பாகத்தில் – புரண்டன.எப்போதும் அடக்க ஒடுக்கமாகவே இருக்கும் அரவணைப்போத்தி,அன்றைய தடபுடலில் சற்று அரண்டு போயிருந்தார்.
அவர் முகத்தில் இருந்த பாவத்தைக் கண்டால் யாராவது பண்ணையார் அந்த வழியாக வந்தால் எழுந்து நிற்பார் போலத் தோன்றியது.
…அடாவடித்தனம் இல்லாத சாமி ஆனதால்,அரவணைப்போத்தி மீது அவ்வூர்ச் சிறுவர்களுக்குப் பயமே கிடையாது.வாட்டசாட்டமாக வளர்ந்திருக்கும் நாற்பது வயது ஆண்பிள்ளையைக் கூட ‘எலே’ என்று விளிக்கும் ‘நுண்மாண் நுழைபுலம்’ உடைய சிறுவர்கள் ஆனபடியால் ,அவர்கள் இந்தச் சாமிக்குப் பயப்படுவார்கள் என்று எதிர்பார்ப்பதில் நியாயமில்லைதான்!கோவிலின் உள்ளே ‘ஒன்றுக்குப்’போனால்கூட ,அவர் அலட்டிக்கொள்வதில்லை.சிறுவர்கள் – அதுவும் –மேல்சாதிச் சிறுவர்கள் அல்லவா?”
மேற்கண்ட பத்திகள் மிக முக்கியமான அரசியலைப் பேசுகின்றன.சாதியக் கட்டமைப்பும் இந்துசமயமும் –அது நாட்டார் தெய்வமாக இருந்தபோதும் கூட- எப்படிப் பின்னிக்கிடக்கின்றன என்பதைப் பிசிறற்ற குரலில் பேசுகின்றன.நாஞ்சில்நாடனின் குரல் ஒடுக்கப்பட்ட சாதி மக்களின் பக்கம் காலூன்றி நிற்கிறது.
சாதிக்கு ஒரு நீதி பேசுகிற மனுநீதி எப்படி நம் கிராமங்களில் தொழிற்படுகிறது என்பதை ”நேர்விகிதம்” கதையின் ஒரு காட்சியில் அநாயசமாகத் தூக்கிப் போடுகிறார்.கிராமத்தில் பள்ளி விடுமுறை நாளீல் மாங்காய்த் தோப்புகளுக்குள் புகுந்து மாங்காய் அடிப்பது விடலைப்பையன்களின் உரிமை அல்லவா? சூனாப்பிள்ளையின் தோப்புக்குப் பயல்கள் செட்டாகக் கிளம்பிப் போகிறார்கள்.,சாதியில் கீழ்ப்படுத்தப்பட்ட முருகப்பன் தான் குழுவின் கேப்டன்.மற்றவர்களை விடவும் மரம் ஏறுதல்,கொக்கு முட்டை எடுத்தல், கண்ணி வைத்து ஓணான் பிடித்தல் என்கிற சகல வித்தைகளிலும் அவன் தான் முன்னோடி.அப்படி அவர்கள் சூனாப்பிள்ளையின் தோப்பில் நுழைகிறார்கள்.முருகப்பன் மாங்காய் பறித்துப்போட கீழே நின்று மற்றவர்கள் காய்களைக் கடித்துக்கொண்டிருக்கிறார்கள். அப்போது சூனாப்பிள்ளை வந்து பயல்களைப் பிடித்து விடுகிறார்.அதற்குப்பிறகு நாஞ்சில் நாடன் எழுதும் இக்காட்சிதான் கதையின் மையம்:
“மரத்திலே யாருலே? கீளே எறங்கு செறுக்கிவிள்ளா…” நெஞ்சுத் தோல் மரத்தின் உடம்பில் உரச, அரைகுறை உயிருடன் கீழே இறங்கினான் முருகப்பன். குதித்து நின்று வெடவெடத்த முருகப்பனை எட்டிப் பிடித்த சூனாப் பிள்ளை மற்ற பயல்களை அடையாளங் காண முயன்றார். நிதானமாக எல்லோரையும் பார்த்தார்.
நாராயணன் நிக்கரிலேயே ஒன்றுக்குப் போய்விட்டான். ”என்ன அய்யரே? உமக்கும் கள்ளப்புத்தி வந்தாச்சா?” நாராயணன் அழத்தொடங்கினான். சூனாப் பிள்ளை இரண்டு காய்களைப் பொறுக்கி அவன் கையில் தந்தார். “இனி இந்தப் பயக்க கூடச் சேரப்பிடாது… கேட்டேரா? ஓடும் வீட்டைப் பாத்து.” நாராயணன் ஓட்டம் பிடித்தான்.
அவர் பார்வை மூத்தபிள்ளையின் மகன் சுந்தரத்தின் மீது சென்றது.” மக்கா உனக்கு ஏம்லே இந்தத் தலையெளுத்து. எங்கிட்டே கேட்டா தரவா மாட்டேன்? உங்க அப்பன் அறிஞ்சா தொலைச்சுப் போடுவானே தொலைச்சு? போலே… போ… சத்த மூச்சுக்காட்டாம போயிரு..”
அடுத்தது பூதலிங்கம், பொன்னையா. பாக்கிப்பேர் மனதில் திடுக் திடுக்கென ஓசை. ரங்கையா ரெட்டியாரின் மருமகன் சிதம்பரத்தின் கண்களில் குளம் கட்டி நின்றது. “இது யாருலே? புதுசா இருக்கு?… ஆங்… ரெட்டியாருக்கு மருமகனா? கொள்ளாண்டே… நல்ல கூத்துதான். உங்க தோப்பிலே இருந்து நீலமும் ஒட்டும் வண்டி வண்டியாப்போகு. நீ இந்த புளிச்ச மாங்காய்க்கு வந்தியாக்கும்… பண்ணிக்குக் கூடச் சேந்த கண்ணுக்குட்டியும் பீத்திங்கும்கது சரியாத்தான் இருக்கு….”
முருகப்பனைத் தீர்க்கமாகப் பார்த்தார். கையைப் பிடித்தபிடி அழுந்தியது. பளீரென கன்னத்தில் ஒன்று கொடுத்தார்.
“திருட்டித் தேவடியாவுள்ளா.. களவாங்கவா வந்தே? சாதிகெட்ட பயலுக்கு ரொம்பத் தைரியம் தான்லே.. குளியைத் தோண்டி மூடீரு வேன்.”
கீழே கிடந்த சுள்ளி ஒன்றை எடுத்து வாங்கு வாங்கென்று வாங் கினார். முதுகு, விலா, பெருந்தொடை என்று வரிவரியாக… கதறக்கதற…
“இனி வரமாட்டேன்… இனி வரமாட்டேன்” மண்ணில் விழுந்து புரண்டு துடித்தவனைக் காலால் தள்ளி, “இனி இந்தப் பக்கம் எட்டிப்பாத்தே, வெட்டி வெலி குடுத்துப் போடுவேன்.”
மனுதர்மத்தின்படி சூனாப்பிள்ளை தண்டனை கொடுத்ததோடு கதையை முடிக்கவில்லை நாஞ்சில்நாடன்.
”மூன்று நாட்கள் கழிந்தன.
சித்திரை பத்தாம் உதயத்துக்கு கோழியறுத்தான் வயலில் நட்ட தென்னங்கன்றுகள் எப்படி இருக்கின்றன எனப் பார்த்து வர சூனாப் பிள்ளை காலையில் போனபோது – கால்மாடு தலைமாடாக, குருத்து மண்டைகள் சிதைக்கப்பட்டு நாற்பது தென்னங் கன்றுகளும் கோரமாகக் கிடந்தன. இரண்டு மாதமாக, நிலத்தைப் பண்படுத்தவும் குழி எடுக்கவும் உரம் சுமக்கவும் பட்டபாடு. நக்க வாரித் தென்னங்கன்றுகள் வாங்க கொட்டாரம் பண்ணைக்கு அலைந்தது. பிள்ளைபோல பொதிந்தி தண்ணீர் ஊற்றி… சூனாப் பிள்ளை கண்களை மூடிக்கொண்டார்.”
என்று அவர் கதையை முடிக்கும்போது கதைக்கு அழுத்தமான ஒரு ‘முற்போக்கு முகம்’ (மரபார்ந்த!)கிடைத்து விடுகிறது.
நாஞ்சில்நாட்டுக் கதைகளில் 60களுக்கு முந்திய வாழ்க்கையை விவரித்தாலும் அந்த வாழ்க்கை சிதைந்துபோச்சே என்கிற மாதிரி அவ்வாழ்வைப் புனிதப்படுத்தும் வேலையை அவர் செய்வதில்லை.அவ்வாழ்வில் ஏற்பட்டு வரும் சமகால மாற்றங்களைத் தவறாமல் பதிவு செய்கிறார்.
சைவத்தில் ஊறிய நாஞ்சில் வாழ்க்கைக்குள் –சைவாள் காப்பி கிளப் நடத்தும் சுப்பையாபிள்ளை வீட்டுக்குள்ளேயே மாட்டுக்கறி உணவு நுழைந்து விட்டது.சுப்பையாபிள்ளையின் மருமகன் கவர்மெண்ட் உத்தியோகஸ்தன்.மதுரை தாண்டி மேலூர்ப்பக்கம் குடியிருப்பு.மகளைப்பார்க்க, சைவாள் காபி கிளப்பை அடைத்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை பஸ் ஏறிப் போகும் சுப்பையாபிள்ளைக்கு கலாச்சார அதிர்ச்சி காத்திருக்கிறது.மருமகன் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆட்டுக்கறி,மாட்டுக்கறி எடுத்து மகளைச் சமைக்கச்சொல்லிச் சாப்பிடுகிறவர் என்பதை மகள் சொல்லக் கேட்டு சாப்பிட்டதையெல்லாம் ஓவ்..ஓவ்..என்று அங்கேயே வாந்தி எடுத்துவிட்டு ஊர் திரும்புகிறார்.ஆனால்,அதைச் சமைத்துக் கொடுக்கும் மகளை நினைக்கையில் அவருக்குத் துக்கம் அடைக்கிறது.
கணவன் (அவனும் சைவப் பிள்ளைதான்) மூக்கில் நீர் ஒழுக கறியைச் சுவைப்பதைக் காண ஒரு மிருகத்தைப் பார்ப்பது போலிருக்கும் மனைவிக்கு.(கட்டமைக்கப்பட்ட சைவ வெள்ளாள மனம்) பதி கேட்டானே என்று அவள் சமைப்பாளே ஒழியச் சாப்பிடுவதில்லை.இனி மக வீட்டுக்குபோய் எப்படித் தண்ணி குடிக்கது? என்று கவலைப்படும் சுப்பையா பிள்ளையிடம் அவருடைய நண்பரான காத்தமுத்துத் தேவர் “எங்க வீட்டுக்கு வந்தா குடிக்கேரில்லா?அது மாதிரி நெனச்சுக்கிடும்” என்கிறார்.இன்னும் சமாதானம் ஆகாத அவரிடம் “நாளைக்கி உம்ம பேத்தியா திம்பா..என்ன செய்வேரு?வேண்டான்னு தள்ளீருவேரா?” என்று கேள்வி கேட்பதுடன் கதை முடிகிறது.வேற்றுச் சாதி உணவுப்பழக்கம் சைவாள் வீடுகளுக்குள் நுழைந்துவிட்ட உண்மையை அவர்களால் செரிக்க முடியாவிடாலும் அதுதான் சமகால யதார்த்தம் என்பதை நாஞ்சில் நாடன் பதிவு செய்கிறார்.உணவு அரசியலை முன்வைத்து விவாதிக்க உதவும் முக்கியமான கதை இது.
அன்றும் கொல்லாது,இன்றும் கொல்லாது,ஏவல்,கறங்கு போன்ற கதைகளில் சாமிகளே கதாபாத்திரங்களாகக் களமிறங்கி வேலை செய்வதும் இயலாமையில் புலம்புவதுமாக அலைகிறார்கள்.பரிசில் வாழ்க்கை ஒரு பூசாரியான நம்பியாரின் இல்லாமையைப் பரிவுடன் பேசுகிறது.
நான்கு
அவரது நாஞ்சில் வட்டாரக் கதைகளின் இன்னொரு முக்கியமான முகம் எனப்படுவது அவர் கதைகளில் உழைப்பைப் போற்றும் விதம்.நெல் விவசாயத்தின் அத்தனை கட்டங்களிலும் செலுத்தப்படும் உழைப்பை நாமே வயலிலும் களத்து மேட்டிலும் நின்று உழைப்பதைப் போன்ற உணர்வைத் தரும் விதமாகத் துல்லியமாக எழுதிச்செல்கிறார்.சொந்த உழைப்பு அனுபவமில்லாமல் இப்படி எழுத முடியாது.
உடைப்பு என்கிற கதையில் குளத்தில் ஏற்பட்ட உடைப்பை அடைக்கத் தொழிலாளிகள் இரவிலும் உழைக்கின்ற காட்சி இப்படி விரிகிறது:
”பழையாற்றங்கரையில் ஒரே பெகளமாக இருந்தது. மனிதக் கூச்சல்களின் ஆரவாரம். ‘சதக் சதக்’ என்று நனைந்து கொவர்ந்திருந்த வரப்புத்திரட்டில் மண்வெட்டி இறங்கும் ஓசை. ‘சொத்’தென்று பிரம்புக்குட்டை களில் உரம் சுமைக்கடவங்களில் மண்வெட்டி முங்க வெட்டிக் கோரிய மண் விழும் சத்தம். ‘ம்’ என்று முக்கி வெட்டி உயர்த்தித் தலையில் சுமந்து ஓடுவோரின் தடதடப்பு…
– பிரியாகச் சுற்றிய வைக்கோல் வடங்களையும் வைக்கோல் கூளங் களையும் பலவீனமான கரையில் பரத்தும் சலசலப்பு. வெட்டிய மண்ணைச் சுமந்து ஆற்றங்கரையில் போட்டு மண்வெட்டுபவனிடம் மீண்டும் வந்து துரிதப்படுத்தும் அரவம்…
வெட்டுபவனுக்கு குறுக்குக் கடுக்கிறது என்று நிமிர முடியவில்லை . சுமப்பவனுக்குக் கழுத்து வலிக்கிறது என்று நிற்க முடியவில்லை. வீசிய வாடைக் காற்றையும் பொழிந்து கொண்டிருந்த மழை யையும் மீறி வியர்வை துளிர்த்து, மழையில் கரைந்தது. ”
வாய் கசந்தது,படுவப்பத்து,உப்பு,உபாதை,வைக்கோல்,ஆங்காரம்,விலாங்கு,கொடுக்கல் வாங்கல்,சுரப்பு,அம்புரோஸ்,எருமைக்கடா,சாலப்பரிந்து போன்ற பல கதைகளின் மையம் வேறாக இருந்தாலும் உழைப்பைப் பல ராகங்களில் பாடும் கதைகளாகவும் அமைவதைச் சொல்லியாக வேண்டும்.அதிலும் குறிப்பாக உள் மாவட்டத்துக்குள்ளேயே புலம் பெயர்ந்து உழைக்கும் தொழிலாளியான ’அம்புரோஸ்’ என்னும் உழைப்பாளியின் மரணத்தைப் பேசும் கதை மனதை அசைக்கும் கதை.
II . மும்பைக்கதைகள்
நாஞ்சில் வட்டாரத்தை களமாகக் கொள்ளாத பிற கதைகள் எல்லாவற்றையும் மும்பைக்கதைகள் என்கிற தலைப்பின் கீழ் வைத்துப் பேசலாம்.இந்தியா முழுவதும் சுற்றியலைந்த அவரது வாழ்க்கை அனுபவமும்,மும்பை என்கிற ஒரு சர்வதேச மாநகரத்தின் கீழ் மத்தியதரவர்க்கத்து வாழ்க்கை அவருக்கு வழங்கியுள்ள முதிர்ச்சியும் பக்குவமும் ஒரு தேசம் தழுவிய பார்வையும் மொழி,இன பேதங்கள் கடந்த அன்பும் கனிவும் இக்கதைகளில் துலாம்பரமாக வெளிப்பட்டு நிற்கின்றன.
பயணங்கள்,அதுவும் நீண்ட தூரப் பயணங்கள் கொடுக்கும் பண்பாட்டுப் பாடங்கள் இவை.இவை தமிழர்களுக்குக் கிடைத்திருப்பதைவிட சதா கோவில்களை நோக்கி ரயில்களில் கூட்டம் கூட்டமாகப் பயணித்துக்கொண்டிருக்கும் வட இந்தியர்களுக்குக் கிடைப்பது அதிகம்.இதையே ஒரு கதையாக எழுதியிருக்கிறார்.”வளைகள் எலிகளுக்கானவை” என்கிற அக்கதையில் ஏழைகளான மராட்டிய விவசாயிகளில் மூத்தோரெல்லாம் ஒன்று சேர்ந்து பாசஞ்சர் ரயிலில் மட்டும் பயணிக்கும் சுழல்முறை டிக்கட் எடுத்து கன்னியாகுமரிக்கு வருகிறார்கள்.ஆங்காங்கே பிளாட்பாரங்களில் கிடைக்கும் கல்லில் அடுப்பு மூட்டி ரொட்டி சுட்டுச் சாப்பிட்டுக்கொண்டு,தண்ணீர் கிடைக்கும் இடத்தில் குளித்துக்கொண்டு வந்து சேர்கிறார்கள்.அவர்கள் குமரியிலிருந்து திரும்புவதற்காக கன்னியாகுமரியில் ரயில் ஏறி பெட்டிகளில் இடம் அடைத்து அமர்கிறார்கள்.அங்கே ரயிலேற வந்த உள்ளூர்க்காரர்களுக்கு இடமே இல்லை.அவர்கள் அதிகபட்சம் வள்ளியூர் வரை பயணிக்கிறவர்கள்.அவர்கள் இவர்களைக் கையைப்பிடித்து இழுத்துக்கீழே போட,இவர்கள் மறுக்க என்று தள்ளுமுள்ளு ஆகிவிடுகிறது.கலவரம்போலக் கூச்சலும் குழப்பமும் ஆக,காவல்துறை பறந்து வர,சற்று நேரத்தில் மாவட்ட ஆட்சியரும் வந்து சேர்கிறார்.
அடிவாங்கிய மராட்டிய மக்கள் அதிகாரிகளிடம் முறையிடுகிறார்கள்:
“நாங்க ஏழைங்க சாப்..கற்சிரோசி விவசாயிங்க..வித்தவுட் பிச்சைக்காரங்க இல்லே..போன வருசம் காசி போனோம்..அதுக்கு முந்தி காளிகட் போனோம்…கன்னியாகுமரி வந்து நாங்க ரத்தக்கோறையோட போறோம்…இது நியாயந்தானா?உங்களுக்கே இது நல்லாருக்கா?”
ஒன்றரை மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட, மாலையப்பன் முறுக்கை எடுத்து மகாதேவ் தெல்கேயிடம் நீட்ட எனக் கதை முடிகிறது.
தமிழர்கள் எலிவளைகளுக்குள்,கிணற்றுத் தவளைகளாக வாழ்கிறார்கள்,வட இந்தியர்கள் அப்படி அல்ல என்கிற கோணம் இக்கதையில் உள்ளது.இது விவாதத்துக்குரியது.அப்படிப் பொதுமைப்படுத்த முடியுமா?போக, வட இந்திய மக்களின் பயணம் முழுக்கவே பூஜா,மந்திர் என்றே அமைபவை.வட இந்தியாவில் மதவாத அரசியல் பெற்றுள்ள செல்வாக்குக்கு இந்தப் புனிதபயணங்கள் உருவாக்கும் சமூக உளவியலும் துணை நிற்கிறது என்கிற கோணத்திலும் பார்க்க வேண்டுமல்லவா?2006 இல் நாஞ்சில் நாடன் இக்கதையை எழுதியிருக்கிறார். இப்போது இக்கதையை எழுதினால் இந்தக்கோணத்தையும் கணக்கில் கொண்டு எழுதியிருப்பார் என்று நினைக்கத்தோன்றுகிறது.
மும்பை வாழ்க்கையின் வெதுவெதுப்பான சூழலில் கனிந்த ஒரு நட்பின் காவியமாக வந்திருக்கும் கதை ‘கான் சாகிப்’ .தன் வரலாற்றுக்கதையான இதில் நாஞ்சிலுக்கும் மும்பையில் வாழும் ஆம்பூர் இஸ்லாமியரான கான் சாகிப்புக்கும் இடையில் 1972 இல் முகிழ்த்து 2010 இல் இக்கதையை எழுதும்வரையிலும் பிறகும் நீளும் தூய அன்பின் –சுகுமாரன் மொழியில் சொல்வதானால்- ‘நடு ஆற்றில் அள்ளிய நீரைப்போன்ற’ அன்பின் – நட்பின் கதை இது.ஒரு சைவ வெள்ளாளருக்கும் இஸ்லாமியருக்கும் இடையிலான இந்தக் காதலை ’பகை வளர்ப்புக் காலமாகிவிட்ட’ இன்று அவர் எழுதியிருப்பதே முக்கியமான அரசியல் என்று சொல்ல வேண்டும்.
கூர்க்காக்கள் எனப்படுகிற இரவு நேரக் காவலர்கள் மீது அளவற்றை அன்பையும் பரிவையும் நம் உள்ளங்களில் ஊற்றெடுத்துச் சுரக்க வைக்கும் ’தன்ராம் சிங்’ என்னும் கதை 2007இல் அவர் விகடனில் எழுதிய மாஸ்டர் பீஸ்.
”அவனுக்கு ஊரில் ஒரு குடும்பம் இருந்தது. இருக்கத்தானே செய்யும்? பெண்ணும் இரண்டு பையன்களும். இரண்டாண்டுக்கு ஒரு முறை மட்டுமே ஊருக்குப் போய் வரும் அபாக்யவான் அவன்.
பதினைந்து இருபது பேர் சேர்ந்துதான் பயணமாவார்கள். பம்பாயில் இருந்து வாரணாசி வரை ஒரு ரயில் வண்டி.. இறங்கி வண்டி மாறி பாட்னா, பரூணி, மன்சி.. மறுபடியும் வண்டி மாறி மீட்டர் கேஜில் சிலிகுரி. அங்கிருந்து மலைப்பாதையில் மங்கன் வழி சிக்கிம் எல்லை வரை கிழட்டு டப்பா பஸ். ஐம்பது கிலோமீட்டர் போக நான்கு மணி நேரமாகும். பிறகு மலைப்பாதையில் தலைச் சுமடாக வும் மட்டக் குதிரையிலும் பாரம் ஏற்றிக்கொண்டு எட்டு முதல் பத்து நாட்கள் வரை நடை. காலை எட்டு மணிக்கு மேல் பிற்பகல் நாலுமணிவரை மலைப் பயணம். மலைக் கிராமம் ஒன்றில் கிடை. ஆண்டாண்டு நடந்து பழகிய மலைத்தடம், பனிப்பொழிவு, பாறை கள், கொடுங்குளிர்… நமக்கு பொள்ளாச்சியில் இருந்து உடுமலைய பேட்டை போக அலுப்பாக இருக்கிறது. –” என்று நாஞ்சில் எழுதும் இந்த ஒரு பத்தியே போதும்.
சாப்பாட்டுக்கதைகள் இரண்டு
சாப்பாட்டின் மீது மிகுந்த கவனமும் அக்கறையும் எடுத்துக்கொள்ளும் பகுதிகள் நாஞ்சில்நாடனின் ஏராளமான கதைகளில் வந்துகொண்டே இருக்கும்.சாப்பாடு முக்கியம் என்று பேசுகிற கலைஞன் நிச்சயம் பசியை அறிந்தவனாகவும் உணர்ந்தவனாகவும்தான் இருப்பான்.கால்வயிற்றுக் கஞ்சியேனும் வயிறாரக் குடிக்கத்தானே இந்தப்பாடு.
இரண்டு கதைகளைப்பற்றி மட்டும் இப்பகுதியில் குறிப்பிட்டாக வேண்டும்.ஒன்று ‘இடலாக்குடி ராசா’ இன்னொன்று ’துறவு.’.சோற்றுக்கு வழியில்லாதவரான இடலாக்குடி ராசா கிடைப்பதைக் கிடைக்கிற இடத்தில் சாப்பிட்டுக்கொள்பவர்.சாப்பாட்டுப் பிரியரான நமச்சிவாயம்பிள்ளை இன்னொருவர்.இவ்விரு கதாபாத்திரங்களோடும் நாம் ஒவ்வொருவரும் நம்மை நாமே அடையாளம் காண முடிவதுதான் இக்கதைகளின் சிறப்பு.
பார்த்தால் மனப்பிறழ்வானவர்போலத்தோன்றும் இடலாக்குடி ராசா உண்மையில் மனப்பிரச்னைக் காளானவரில்லை.எந்த ஊர்,குடும்பம் உண்டா பெற்றவர் உற்றவர் யாரும் உண்டா என்பது ஏதும் தெரியாது.திடீரென்று அவசரமாக ஊருக்குள் நுழைவார்.யாருடையதோ ஒரு வீட்டுத்திண்ணையில்-படிப்புரையில்- அமர்வார்.அக்கா…பெரீம்மா…என்று ஏதேனும் ஒரு முறை வைத்து வீட்டுப்பெண்களை அழைப்பார்.”ராசாக்குப் பசிக்கில்லே…” என்பார்.இவன் போக்கை அறிந்தவர்கள் என்பதால் இருக்கும் பழையசோற்றைப் போட்டு விடுவார்கள்.அப்பம் ராசா வண்டியை விட்டிரவா..என்று கேட்டபடி விறீர் என்று கிளம்பி விடுவார். சாப்பாடு போடாவிட்டாலும் “ராசா வண்டியை விட்டிரவா..” என்று கேட்டுவிட்டு விறீர் என்று கிளம்பி விடுவார். இது வழமையாக நடைபெறும் காட்சி.
இளைஞர்கள் சிலர் ராசாவிடம் விளையாட்டுக்காட்ட காத்திருக்கிறார்கள்.ஒரு கல்யாண வீட்டுச் சாப்பாட்டுக் கூடத்தில் இளைஞர்கள் பறிமாறிக்கொண்டிருக்கையில் ராசாவை அழைத்து வந்து வீட்டார் பந்தியில் அமர வைக்கிறார்கள்.
”நீள நீளமான தலைவாழை இலைகள், ஏந்திய கைகளில் எவர்சில்வர் மூக்கனில் இருந்து தண்ணீர். தண்ணீர் தெளித்து இலையைத் துடைத்து… விளம்ப நின்ற ஐந்து பையன்களின் முகத்தில் குறும்பின் தெறிப்பு. உப்புப் பரல் வந்தது. துவட்டல் வந்தது. தயிர்ப் பச்சடி வந்தது. அவியல் வந்தது. எரிசேரி வந்தது. வந்தவன் எல்லாம் ராசாவின் இலையை மட்டும் விட்டு விட்டு விளம்பிச் சென்றான். பிரப்பிரம்மமாக ராசா இடமும் வலமும் பார்த்தான்.
நடப்பதைக் கவனித்த யாவரின் முகத்திலும் பிதுங்கி நின்ற சிரிப்பு, எப்போது வெடிக்குமோ என்ற தெறிப்பு… கறி வகைகள் வைத்து முடித்து பப்படம் போட்டு, ஏத்தங்காய் உப்பேரி வைத்து…
காது வைத்த செம்பு நில வாயில் சாதம் எடுத்து, பித்தளைக் கோடுவையால் பார்த்து, இலையிலையாக வைத்துக்கொண்டு போனான் ஒருவன். தன் இலைத் தாண்டிப் போனதும் இடலாக்குடி ராசா விளித்தான்.
“எண்ணேன்… ஏ எண்ணேன்… ராசாக்கும் போடாமாப் போறியே…”
பருப்புக்குப் பின்னால் நெய் வந்தது.
ராசாவின் முகத்தில் ஒரு பதைபதைப்பு அடர்ந்தது. “எண்ணேன்… ராசாக்கில்லையா? அப்பம் நான் வண்டியை விட்டிரட்டா…”
இதற்காகவே காத்துக்கொண்டிருந்ததைப் போல… “சோ”வென்று சிரிப்பு. ஒரே சமயத்தில் போட்டித் தெறித்த அலையாய் பந்தலின் கூரையைக் கிளப்பும் எக்காலி ஓசை…
ராசாவின் கண்களில்…
அவன் இலைக்கு ஒருவன் சாத நிலவாயை எடுத்து வருமுன்னால்… “அப்பம் நான் வண்டியை விட்டிடுரேன்…” சொற்கள் நனைந்து வந்தன. திடீரென்று சிரிப்பு நின்றது.
‘விறீர்’ என்று எழுந்து நடந்தான் ராசா.
யாருக்குமே சாப்பிடப் பிடிக்கவில்லை.” என்று கதை முடியும்போது இடலாக்குடி ராசாவுக்காக நம்முடைய கண்களிலும் நீர் திரண்டு நிற்கும்.
இதற்கு நேர் மாறானது நமச்சிவாயம்பிள்ளையின் கதை.சாந்தம் தவழும் முகம்.நெற்றியில் வரி வரியாக அனுபவக்கோடுகள்.குறுகத்தறித்த தலை மயிர்…தோளில் சுட்டி போட்ட துவர்த்து.மடியில் எப்போதும் தேவார திருவாசகத் திரட்டு.அவரது முதன்மையான பலவீனம் சாப்பாடு.
”ஆனால் அவருக்கு அப்படி குறிப்பிட்ட வகைகளின் மீதல்ல பலவீனம். மொத்தமாக சாப்பாட்டின் மீது. அதாவது சைவ சாப்பாட்டின் மீது. குளித்து முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தால் சமையலை முடித்து மூடி வைத்து விட்டு பெண்டாட்டி குளிக்கப் போயிருப்பாள். பிள்ளைகள் பள்ளிக்கோ, விளையாடவோ போயிருக்கும். சோற்றுப் பானை, வரிச்சட்டி, தண்ணீர்ச் செம்பு இவற்றை முன்னால் இழுத்து வைத்துக் கொண்டு சாப்பிடத் தொடங்குவார். சாப்பிட்டு முடியும்போது சில சமயம் இரண்டு அகப்பைச் சோறு மீதமிருக்கும். சிலசமயம் சில பாருக்கைகள் மட்டும் பாசம் காரணமாகப் பானையில் ஒட்டிக் கொண்டிருக்கும். ‘பித்தா பிறைசூடி பெம்மானே அருளாளா’ என்று நாவுக்கரசர் பாணியில் ‘பாவி சண்டாளா பேயே பிணம்பிடுங்கி’ என்று பெண்டாட்டி எடுப்பாள். வாயை உரசிக் கொப்பளித்து மேல் துண்டால் கைம் துடைத்து நிற்கும் அவர் மீது இந்தப் பாணங்கள் ஏதும் பாயாது.அதே சாந்தம் பரவிய முகம்
மூன்று பேர் சாப்பிடும் சாப்பாடானாலும் உள்ளே போன பிறகு நமச்சிவாயம் பிள்ளையின் வயிற்றுப் பரப்பில் மாறுதல் ஏதும் தெரியாது. சாப்பிடு முன் வயிற்றில் திருநீற்றுக் கோடுகள் போல் இருந்த குறுக்கு வரிகள்
சாப்பிட்ட பின்னும் அப்படியே இருக்கும். முன்புறமோ பக்கங் களிலோ புடைத்தல் கிடையாது. தின்ற, தீற்றி எல்லாம் பிரம்மத்தில் கலந்து விடும் போல.
நாளாக ஆக, குளிக்கப் போகும் போது பெண்டாட்டி வீட்டைப் பூட்டிக் கொண்டு போனாள்; தனக்கும் பிள்ளைகளுக்குமான சோற்றை எடுத்து ஒளித்து வைத்து விட்டு, மீதியைப் பானையில் விட்டுச் செல்வாள். நமச்சிவாயம்பிள்ளை குளித்துவிட்டு வருமுன்பே தானும் தின்று பிள்ளைகளுக்கும் போட்டு விடுவாள். ”
இப்பேர்ப்பட்ட நமச்சிவாயம்பிள்ளை கடைசியில் ஒரு சமையல் பரிசாரக அய்யரின் குழுவில் சேர்ந்து சோற்றோடே பயணிக்கும் வாழ்வை ஏற்கிறார்.
“சில நாட்கள் கல்யாணச் சாப்பாட்டை ஆர்வமாகத் தின்றார் நமச்சிவாயம்பிள்ளை.பிறகு, சாப்பாடு தயிரும்மாங்காய் உப்பிலிடும்தான்.” என்று நாஞ்சில் கதை முடிக்கிறார்.சோற்றிலிருந்து துறவறம் என்கிற நிலைக்குப் போகிறார்.
சாப்பாடும் சாப்பாடு சார்ந்தும் கதைகளிலும் கட்டுரைகளிலும் நிறைய எழுதிய எழுத்தாளராக நாஞ்சில்நாடன் திகழ்கிறார்.
கும்பமுனி கதைகள்
கும்பமுனி என்கிற கற்பனைக் கதாபாத்திரத்தையும் அவருக்குத் துணையாக அவருக்கு ஆக்கிப்போட தவசிப்பிள்ளை என்கிற பாத்திரத்தையும் (சுஜாதாவின் கணேஷ்-வசந்த் –அயன் ஃபிளமிங்கின் ஜேம்ஸ் பாண்ட் போல) மையமாகக் கொண்டு தொடர்ந்து பல கதைகளை எழுதி வருகிறார்.மறைந்த எழுத்தாளர் நகுலனனின் சாயலில் படைக்கப்பட்ட ஒரு மூத்த எழுத்தாளர்தான் கும்பமுனி.தொடர்ந்து கும்பமுனி கதைகளை எழுதி எழுதி நாஞ்சில்நாடன் தான் கும்பமுனி என்று ஆகி விட்டது இலக்கிய உலகில்.அவரைக் கும்பமுனி என விளிப்பதும் நடக்கிறது.இலக்கியவாதியான கும்ப முனி எல்லாவற்றின் மீதும் விமர்சனத்தை வைப்பவராக- எல்லாம் அறிந்த ஞான நிலையில் பேசுபவராக படைக்கப்பட்டிருக்கிறார்.அவருடைய ஆல்டர் ஈகோ போல படைக்கப்பட்ட பாத்திரம் தவசிப்பிள்ளை.இருவரும் பேசிக்கொள்வதன் ஒரு சாம்பிள்:
“பாட்டா! சொல்லுகனே ண்ணு வெசண்டையா நெனக்கப்பிடாது. நீரு என்ன எழுதினாலும், பேசினாலும், நேர்காணல் குடுத்தாலும் ஓட்டுப்போட்டாலும் போடாட் டாலும் ஒம்மால ஒரு புல்லும் புடுங்கீர முடியாது… பின்ன என்னத்துக்குக் கெடந்த பெடங்கி அடிச்சுக்கிட்டு வரணும்? இல்லே, தெரியாமத்தான் கேக்கேன்! இளைய தளபதியா உம்மை அறிவிச்சா, உம்மைக் கொண்டு ஏலுமா? ஒரு வீல் செயர் வாங்கப்பட்ட காசு உண்டா உம்ம கோமணத்துக்கு உள்ளே? என்னத்துக்குப் போட்டு வெப்ராளப் படுகேரு?’
“அதுக்கு நான் இப்பம் ஒண்ணும் சொல்லல்லியே வே! தமிழ் எழுத்தாளன்னா உங்களுக்கெல்லாம் என்ன நெனப்புண்ணு எனக்கு மனசிலாகாதா? குளி முறியிலே சறுக்கி விழுந்து இடுப்பு எலும்பு முறிஞ்சாக் கூட, சவத்துக்குப் பொறந்த பய சாவட்டும்ணு ஸ்டேட்டஸ் போடக்கூடிய ஆளுததானவே நீங்க?”
தான் செத்துப்போனால் தவசிப்பிள்ளை என்ன செய்வார் என்று யோசித்தார் கும்பமுனி.
(காக்கைச் சிறகினிலே-2020)
கும்பமுனி கதைகளில் சிலவே சுவாரஸ்யம் தருகின்றன.பல கதைகள் ஆழமற்ற அரசியல் விமர்சனங்களுடன் அயர்ச்சியும் சலிப்பும் தருகின்றன.அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு அல்லவா?
பெண்கள் கதைகள் இரண்டு
எழுத்தாளர் அம்பையுடன் நட்புடனும் தொடர்ந்த உரையாடல்களுடனும் வாழும் வாய்ப்புப் பெற்றிருந்தபோதும் நாஞ்சில்நாடன் படைப்புகளில் வெடிப்புறப் பேசும் நவீனப் பெண்களின் நடமாட்டத்தைக் காண முடியவில்லை.சமூகம் வரையறுத்த வரம்புகளில் நின்று வாழ்க்கைச் சக்கரத்தை (இந்தக் கேடுகெட்ட ஆம்பிளைகளையும் இழுத்துக்கொண்டு சுழற்றுபவர்களாக) பெண்கள் வருகிறார்கள்.
அமெரிக்காவுக்குப் போய் செட்டில் ஆகிவிட்டு மாதம் தவறாமல் கிராமத்தில் தனித்திருக்கும் அம்மாவுக்கு வங்கிக்கணக்கில் பத்தாண்டுகளுக்கு மேலாகத் தவறாமல் மாதாமாதம் பணம் மட்டும் போடும் பையனை ”நேரில் வந்து என்னைப் பார்க்கணும் அல்லது உன் பணம் வேண்டாம்” என நிராகரிக்கும் ஒரு தாய் ”பேச்சியம்மை” இருக்கிறாள்.
“சாலப்பரிந்து” மற்றும் ”தெரிவை” ஆகிய இரண்டு கதைகளைப்பற்றிக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
“காளியம்மை இட்டிலிக்கார அக்காவாக இருந்தபோது காலணாவாக இருந்தது.இட்டிலிக்கார அம்மாளானபோது இரண்டணா ஆகி,இட்டிலிக்கார பாட்டி ஆனபோது எட்டணா ஆகியது.”
மகன் மலையப்பனைப் பெற்றுப் பிறந்த நாள் கழியுமுன்னே புருசன்காரன் காணாமல் போகிறான்.மீண்டும் அவனை அவள் காணவே இல்லை.’தேய்ந்து போனதோர் பழந்தாலியும் நெற்றிக்குங்குமமும் தவிர வேறு பொருளற்றுப் போனதோர் இல்வாழ்க்கை.தவறாது வந்த மாதவிடாய் போல அவன் நினைவு வந்தது கொஞ்ச நாட்கள் அதுவும் நின்று போனது”
இப்படியான வாழ்க்கையில் மகனை வளர்த்துப் படிக்க வைத்து அவனும் வேலைக்குப் போய்க் கலியாணம் கட்டிக்கொண்டு நகரத்தில் சொந்த வீடும் கட்டிக்கொண்டு அம்மையை வருந்தி வருந்தி அழைத்துச் சென்று கூட வைத்துக்கொள்கிறான். பழகிய மாமியார் கசந்துதான் போகிறாள்.வயதாகித் தொண்டுகிழமாகி அவளை ஒரு தனி அறைக்குள் போட்டு வைக்கிறார்கள்.மகன் கூட எட்டிப்பார்ப்பது குறைச்சல்.”உடலில் இருந்த காளி செத்து ஆண்டுகள் ஆகிவிட்டன.மனதில் இருந்த காளியும் செத்துக்கொண்டிருந்தாள்”
ஒரு சோக காவியமாக காளியம்மையின் ஜீவிய சரித்திரம் முடிந்துபோவதை நம் மனம் உருகச் சொல்லிவிட்டார் நாஞ்சில்நாடன்.காலமெல்லாம் உழைத்தே சாகும் கோடானு கோடி இந்தியப்பெண்களின் கதை இது.
“தெரிவை” என்கிற கதை மிக முக்கியமான கதை.கண்ணாடி பார்த்து நரைமயிர் பறிக்கும் நாற்பது வயதான நீலவேணி தமிழாசிரியராகப் பணியாற்றிக்கொண்டு பெண்பார்க்கும் படலங்களில் காப்பி சுமந்து கொண்டிருப்பவள். 42 பேருக்குக் காப்பி கொடுத்துவிட்டவள்.
”நாற்பத்திரண்டு என்பது தற்போதைய வரிசை எண். எத்தனை யெத்தனை காரணங்கள் நிராகரிப்புக்கு?
ஐந்து பவுன் பேரத்தில் தட்டியது, மாற்றல் கிடையாது என வழுகியது, நிறக்குறைவு என நிராகரிப்பானது,
மூங்கில் கழி போல் என்றும் முன்பல் தூக்கல் என்றும் வக்கை நாடி என்றும் ஏறு நெற்றி என்றும் கொக்குக் கழுத்து என்றும் கூனல் முதுகு என்றும்… மூல நட்சத்திரம் என்றும் பாவி கூடுதல் என்றும் மாரும் இல்லை மயிரும் இல்லை என்றும்…”
இப்படிப்பெண்கள் ’காமத்துக்காக ஏங்கிக்கிடப்பவர்கள்’ எனக்கருதும் ஆண்மனங்களோடு நடத்தும் போராட்டங்கள் இன்னொரு புறம்.
” தோழியொருத்தி அடிக்கடி சொல்வதுண்டு, பரபுருடர் யாவர்க்குமே மறைவான நிகழ்நிரல் உண்டென. ஆடை கழற்றினால் யாவும் நிர்வாணம் என்பது போல, ஆண்மனத் தோலைச் சுரண்டினால் அரிப்பெடுக்கும் சேனைக் கிழங்கின் சிவப்புத் தெரிகிறது. புளிவிட்டு அவித்தாலும் தணியாத அரிப்பு, ஊரல், நாக்குத் தடிப்பு.”
வெளிநாட்டிலிருந்து அண்னனும் அண்ணியும் வருகிறார்கள்.அண்ணியும் தாய் சமீபத்தில் இறந்து போனாள்.தன் தகப்பனுக்கு நீலவேணியை இரண்டாந்தாரமாகக் கட்டிவைத்தால் என்ன என்கிற கோரிக்கையுடன் தான் அண்ணனின் சம்மதத்துடன் அண்ணி வந்திருக்கிறாள்.அண்ணிக்காரி நீலவேணியுடன் இதுகிறித்துப் பேசும் கடைசிக்காட்சி உண்மையில் ஒரு ஆழமான துன்பியல் நாடகம்தான்.
கு.அழகிரிசாமியின் “தேவ ஜீவனம்” கதையில் வரும் அருணாசல முதலியாரைப்போல நாம் இந்த சமூகத்தை நோக்கி வெடித்துப் பேசும் மனநிலைக்கு நம்மை ‘தெரிவை’ கதை கொண்டு வந்து நிறுத்தி விடுகிறது.லா.ச.ரா.வின் ”கன்னியாகுமரி” போல நீலவேணி காத்திருந்தால் கூடப் பரவாயில்லை என்று மனம் கடைசியில் பதைப்புக்கொண்டு விடுகிறது.
சொற்களின் தீராக்காதலராக நாஞ்சில்நாடன் இக்கதைகள் நெடுகிலும் சங்கச் இலக்கியத்திலிருந்தும் பேச்சு வழக்கிலிருந்தும் சொற்களைத் தேடித்தேடி எடுத்துப் பயன்படுத்துவதைக் குறிப்பிட்டாக வேண்டும்,ஒரு எழுத்தாளன் மொழிக்கு ஆற்ற வேண்டிய தொண்டு அது.
பேரம்(1975),அம்பாரி மீது ஒரு ஆடு (ஏப் 1977) வைக்கோல்-ஜூலை 1977,விலக்கும் விதியும்-1977 ஆகிய நான்கு கதைகளை செம்மலர் ஏடு வெளியிட்டிருக்கிறது.
1975இல் தீபம் இதழில் வெளியான ‘விரதம்’ கதையிலிருந்து 2020 செப்டம்பரில் ஆவநாழி மின்னிதழில் அவர் எழுதியுள்ள ‘உண்டால் அம்ம’ கதை வரை படைப்பின் வேகமும் வீச்சும் குன்றா இளமையுடன் அவர் எழுதிக்கொண்டிருக்கிறார்.
தான் சரி என்று நம்புகிற உண்மைகளைத் தயக்கமின்றிப் பேசும், எழுதும் படைப்பாளியாக நாஞ்சில்நாடன் நம்முடன் என்றும் பயணிக்கிறார்.
*****
அழகான விவரிப்பு, அற்புதம்.
வாழ்த்துகள்.