ஓடும் செம்பொன்னும்

நாஞ்சில் நாடன்
கும்பமுனி சார்வாளுக்கு மார்பிலும் முகத்திலும் வியர்வை பொடித்திருந்தது.
கொதிக்கக் கொதிக்க உளுந்தங் கஞ்சியும், வறுத்தரைத்த துவையலும், கருப்பட்டித் துண்டுமாக, புதியதாய் உடைத்துத் துருவிய தேங்காய்ச் சிரட்டையில் ஊற்றி, ஊதியூதி, நான்கு அகப்பை அதிகமாகவே குடித்த களைப்பில் இருந்தார். தோய்ந்த கலவி முடிந்த களிப்பும் சோர்வும் தெரிந்தது முகத்தில்.
‘கலவியாம், முயக்கமாம்,
புணர்ச்சியாம், உவப்பாம்…
போக்கற்ற பயலின்
படைப்பு மனம்’
என்று குறுக்கு வெட்டொன்றும் பாய்ந்தது.
மத்தியானக் கஞ்சிக் கடை ஒதுங்கட்டும் என்று, கையோடு கஞ்சி குடித்து, பாத்திரங்களை ஒதுக்கி, அங்கணத்தில் போட்டு நீரூற்றி விட்டு, ஈத்தாமொழி வெற்றிலையும், பழுக்காப் பாக்கும், பாக்கு வெட்டியும், சுண்ணாம்புக் கறண்டவமும், அங்குவிலாஸ் புகையிலைத் தடையுமாகக் கும்பமுனியின் காலடியில் வந்து அமர்ந்தார் தவசிப்பிள்ளை கண்ணுபிள்ளை.
கும்பமுனிக்கு சற்று கர்வமாக இருந்தது. தாம் ஏதோ பாற்கடலில், ஆதிசேடப் பாம்பணையில் பள்ளிகொண்டிருக்கும் திருமால் போலவும், காலடியில் செந்திருமகளே போல் தவசிப்பிள்ளை அமர்ந்திருப்பது போன்றும் கற்பனை ஓடியது. சமீபகாலமாக, கும்பமுனியின் எண்ண ஓட்டத்தை ஞான மார்க்கமாகக் காணும் சித்தி வாய்த்திருந்தது தவசிப்பிள்ளைக்கு. பாதசாரி எனும் மிக நுட்பமான படைப்பாளியை அறிந்த நண்பர் வட்டம், காசி என்றும் காசியார் என்றும் செல்லமாக விளிப்பதைப் போன்று, தவசிப்பிள்ளையையும் தவசியார் என்றழைக்க அவாவுற்று நிற்கிறது இந்த எழுத்தாளனின் மனம்!
தவசியார் உரக்கவே சொன்னார்,
“கெடக்கது சாணிக் குண்டுலே, நெனப்பு பாற்கடலிலே!” என்று.
“பாற்கடலானால் என்ன, பண்டு வாங்கிய சூரல் நாற்காலியானால் என்ன வே! நினைப்புத்தான் மனுசனைப் பொறுக்கியாட்டும் புண்ணியாத்மாவாட்டும் ஆக்குது! கேட்டதில்லையா, ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார்ணு? உள்ளத்தில் உள்ளான் எனில் கோயில் உள்ளேயும் காண்பாயடிண்ணு கேட்டதில்லையா?”
கும்பமுனியின் வலப்பக்கம் சூரல் நாற்காலியில் சில புத்தகங்கள் கிடந்தன. சித்தர் பாடல்கள், கைவல்ய நவநீதம், முதல் தாய் மொழி, Sex For Advanced Lovers, நீலகண்டம், வேசடை, புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை, உலகின் மிக நீண்ட கழிவறை… பக்கத்திலேயே எழுதா மறுபக்கத் தாள்களைக் கோத்த கத்தையும், ஒரு ரூபாய் கறுத்த மைப் பேனாவும். அவற்றின் மேல், சில கதைகளுக்கு முன்பு அரேபிய வாசகர் பரிசளித்த தொடுதிரை அலைபேசியும்….
கெட்ட கனவு கண்டு விழித்தது போல், திடீரென அலைபேசியில் இருந்து, “ஐயோ என்னைக் கொல்றாங்களே! ஐயோ என்னைக் கொல்றாங்களே” என்பதன் கறட்டு முரட்டு இசைவடிவம் எழுந்தது. கும்பமுனி, மூன்று வட்டம் அழைப்புக்குரல் எழுவதற்குக் காத்திருந்து, நிதானமாக எடுத்து, திரையில் எண்தான் தெரிகிறது, பெயரில்லை என்பதையும் ஓர்த்து, திரை தொட்டு வணங்கி, “அல்லோ ” என்றார். எதிர்முனையில் சர்வ அவசரத்துடன் வாலிபக் குரல் ஒன்று ஒலித்தது.
 “பானுமதி டி.வி.யிலேருந்து பேசுறேனுங்க…”
“சொல்லுங்க தம்பி! நான் கும்பமுனி பேசுகேன்…”
 “ஐயா! சனிக்கிழமை ஷூட்டிங்… நீரா தீயா புரோக்ராம்… நீங்க மார்னிங் டென்னோ கிளாக் ஸ்டுடியோ கேட்டுக்கு வரணும்!”
கும்பமுனி, தசாவதானம் போல, உரையாடிக் கொண்டிருக்கும்போதே சொற்களை எண்ணிக் கொண்டு இருந்தார். ஆறு தமிழ்ச் சொற்கள், ஏழு ஆங்கிலச் சொற்கள்!
‘நாடு வெளங்கீரும்’ என்று சபித்தவாறே,
“நாரோல்லயா தம்பி!” என்றார்.
“இல்ல… சென்னையிலே!”
“நான் நாரோல்ல இல்லா இருக்கேன்? ஸ்டுடியோவை இங்க வரச் சொல்லுங்களேன்” என்றார். விசாகப்பட்டினம் துறைமுகத்தில் பழுதடைந்து நிற்கும் கப்பலைப் பழுது நீக்கி நேர் செய்ய போபாலுக்கு அனுப்பச் சொன்னது போலிருந்தது கும்பமுனியின் கோரிக்கை.
போனில் மறுமுனையில் இருந்த ஊடகத் தொடர்பாளர் உரைத்தார்,
 “அது முடியாத காரியமுங்க… நீங்கதான் சென்னை வரணும்!”
“அதும் அப்பிடியா? இன்னைக்கு என்ன கிழமை வே, கண்ணு பிள்ளை? பொதனாழ்ச்சையாக அப்பம் சனியாழ்ச்ச காலம்பற ஷுட்டிங்… ம்…”
“அப்ப ரீச் ஆயிருவீங்கன்னு சொல்லீரட்டா சார்?”
“சொல்லீருங்க தம்பி! அதுக்கு மிந்தி நீங்க ஒரு காரியம் செய்யணும்… நல்லா கேட்டுக்கிடுங்கோ.. வெள்ளிக்கிழமை மத்தியானம் திருவனந்தபுரத்திலே இருந்து சென்னைக்கு ரெண்டு பிளைட் டிக்கெட்டு போட்டிருங்கோ… திரும்பதுக்கு ஞாயிற்றுக்கிழமை எந்த நேரம்னாலும் பரவாயில்லே – ரிட்டர்ன் டிக்கட் போட்டுருங்க… பின்னே, சென்னையிலே ரெண்டு நாள் தாமசிக்கணும்லா? எதாம் நல்ல ஓட்டல்லே, ஃபைவ் ஸ்டார் எல்லாம் வேண்டாம் நாம என்ன உள்ளூர் எம்.எல்.ஏ.வா? நல்ல தரமான ஓட்டல் போரும்… தண்ணி வரணும் குளிமுறியிலே – சரியா?” எதிர்முனையில் குரல் இல்லை.
ஊமைச்சிரிப்புடன் கேட்டுக்கொண்டிருந்த தவசிப்பிள்ளையைப் பார்த்து, கும்பமுனி கண்ணைச் சிமிட்டினார்.
“பொறவு வேற ஒரு காரியம்… நல்லா கேட்டுக்கிருங்க தம்பி! இங்கேருந்து திருவந்திரம் ஏர்போர்ட்டுக்கு டாக்சி…. அதுபோல திரும்பி வாறதுக்கு… சென்னை ஏர்போர்ட்லே இருந்து ஓட்டலுக்கும் திரும்பி வாறதுக்கும்… ஓட்டல்லே இருந்து உங்க ஸ்டுடியோவுக்கும் மடங்கி வாறதுக்கும்…”
 “………………”
“இன்னும் ஒரு சமாச்சாரம்… சன்மானம் என்ன தருவியோ? நாமோ சொற்பொழிவு முதலாளி இல்லேல்லா? லெச்சமெல்லாம் வேண்டாம்… நமக்கும் வெள்ளி, சனி, ஞாயிறு – மூணு நாளு மெனக்கெடு பாத்தேள்ளா? ஒரு முப்பதினாயிரம் தருவேள்ளா ?”
“டேக்சி, சன்மானம், சில்லறைச் செலவு எல்லாத்துக்கும் சேத்து முன்பணமாத் தந்தாலும் சரி! வாற இடத்திலே கையில் தந்தாலும் சரி! செக்கானாலும் பரவால்ல… மாத்திக்கிடலாம்… நீங்க ஒடனே பிளைட் டிக்கெட்டும் ஓட்டல் முன்பதிவும் மெயில் பண்ணுங்கோ… ரெண்டாமத்த பயணி கண்ணுபிள்ளை. வயசு அறுவத்தெட்டு. ஆதார் அட்டையெல்லாம் இருக்கு. ஆங்… மெயில் அட்ரஸ் குறிச்சுக்கிடுங்கோ … Kumbamuni@gmail. com <mailto:Kumbamuni@gmail.com>… என்னா ? மனசிலாச்சா?”
“சரிங்க சார்! நான் ஆபிஸ்லே பேசீட்டுத் திரும்ப கூப்பிடுறேன்.”
-சரிப்போ… சாயந்திரத்துக்குள்ளே சொல்லு, என்னா?”
எனக்கூறி, மொபைல் போனைக் காதிலிருந்து எடுத்து, திரையைத் தைவரல் செய்து அழைப்பைத் துண்டித்தார் கும்பமுனி.
மிகுந்த புலனடக்கத்துடன் வாயைத் தைத்து வைத்திருந்த தவசிப்பிள்ளை கேட்டார் –
“என்னத்துக்குப் போய் சின்னப் பயக்களைக் கடுப்பேத்துகேரு? அவுனுக்கு நாமோ ஏதோ பட்டிமன்றம் நடத்தப்பட்டவரைக் கூப்பிட்டு விட்டோமா, தப்பிப் போயி, என்று சம்சயம் வந்திருக்கும்….”
“என்ன எளவாம் நெனச்சிற்றுப் போறான்… கூப்பிட வந்திற்றான்… இப்பம் பேசினான் பாரும், இந்தப் பயலோ, இவனுக்கு புரட்யூசரோ, இவன் சானல் சாமானத்துக்கு மொதலாளியோ நம்ம எழுத்திலே ஒரு வரி வாசிச்சிருப்பானுவளா வே? சுந்தர ராமசாமின்னா சந்திர குமாரியான்னு கேப்பான்!” |
“படிச்சிருந்தா கூப்பிட்டிருக்க மாட்டாம்லா? எவனாம் கெட்டுச் சோத்துக்குள்ள           அவயானை வச்சுக் கெட்டுவானா பாட்டா? ஆனாலும் ஒமக்கு ஆசை கொஞ்சம் அதிகம்தான் கேட்டேரா? யானையைக் கலவி செய்யணும்னா மத்தது நம்ம நெத்தீல இல்லா இருக்கணும்?”
“நீரு சும்ம கெடயும் வே! நமக்கும் சமயம் போகாண்டாமா?”
“இது புனத்தில் குஞ்ஞதுல்லா டயலாக்குல்லா? அது கொள்ளாம்! அதுக்காக, குண்டிக் கொழுப்பெடுத்து அரிவாள் மணையிலே ஏறுவேரா?
“ஒருக்கால் சரீன்னு சொல்லீட்டாம்னா? ஆயுசுலே மொதமொறயா பிளேன்ல போலாம்ல வே?
“அது சரி! அரண்மனை தாசியை சொப்பனம் கண்ட கதையாட்டுல்லா இருக்கு.”
இருவருமாகச் சற்றுநேரம் சொக்களி கதைத்துக் கொண்டிருந்தபோது, மாலை நாலரை மணி ஆகிவிட்டது.
“சரி! ஒரு கட்டன் எடுக்கேரா?” என்றார் கும்பமுனி.
“இன்னும் கேக்கக் காணோமேன்னு நெனைச்சேன்!” என்று சொல்லித் தவசிப்பிள்ளை எழுந்து போனார்.
தெருவில் இருந்து இறங்கி, கும்பமுனியை நோக்கித் தபால்காரர் நடந்து வந்தார்.
“போஸ்ட் கொண்டாரப்பட்ட நேரமா வே? கோயில்லே இப்பம் சாயரட்சை பூசைக்கு மணி அடிப்பான்!”
“அப்பம் கொண்டு போயிட்டு நாளக்கு வெள்ளென கொண்டுகிட்டு வரட்டா?” என்றார் தபால்காரர்.
“இலங்கையிலே பொறந்ததெல்லாம் ராச்சசக் கூட்டமால்லா இருக்கு!” என்றார் கும்பமுனி நகைத்தவாறு.
“ஏதோ ரெண்டு மூணு காயிதம், யாரும் வாசிக்காத பத்திரிகை.. அதை எப்ப படிச்சா என்ன பாட்டா ” என்றார் மறுபடியும்.
கட்டன் சாயாவுடன் வெளி வராந்தாவுக்கு வந்த தவசிப்பிள்ளை, தபால்காரரைப் பார்த்துக் கேட்டார், “கட்டன் சாயா குடிக்கேரா?”
“எனக்கென்ன வயத்தாலயா வே போகு, தேயிலையை அவிச்சு கிறுத்துக் குடிக்கதுக்கு? நீரே குடியும்…” என்றவாறு திரும்பி நடந்தார்.
ஒரு யப்பானியச் சடங்கு போல, இருவரும் கட்டன் சாயாவை ஊதி யூதிக் குடித்து , சம்போகத்தின் ஒத்த நேரத்து உச்சம் போலத் தம்ளரைக் கீழே வைத்தனர். குறிப்பறிந்தாற்போல மொபைல் ஃபோன் மணி அடித்தது.
“என்ன வே சொன்னேரு? இப்பம் பாத்தேரா? வேணும்னா சக்கை வேரிலேயும் காய்க்கும்!”
என்ற முகபாவத்துடன் கும்பமுனி, ஒரு பத்ம விபூஷண் விருதின் முகப்பொலிவுடன், தவசிப்பிள்ளையைப் பார்த்து சிரித்துவிட்டு, அலைபேசியைக் கையில் எடுத்தார்.
தவசிப்பிள்ளையோ, பப்பனாவ சாமிக்குப் பால் பாயாசம், கௌவனாருக்கு மனப் பாயாசம்’ எனும் கணக்கில், அலட்சிய சிரிப்புடன் மறுப்பு அறிக்கை வெளியிட்டார்.
அலைபேசியின் தொடு திரை தடவி இயக்கிய கும்பமுனி, நேர்த்தியான குரலில், “அல்லோ ! யாரு? பானுமதி டி.வி.யா?” என்றார். மறுமுனையில் ஒரு சின்னப் பெண்ணின் கொஞ்சல் குரல்.
“சார், நாங்கோ காளிகேசம் பைனான்ஸ் கம்பெனியிலேருந்து கூப்பிடுகோம்… உங்களுக்கு லோன் ஏதாம் வேணுமா?”
“அது வந்து….”
“சார் ஒரு அஞ்சு நிமிசம் நான் சொல்லப்பட்டதைப் பொறுமையாக் கேக்கணும், கேட்டேளா! நாங்க எந்த ஆதாரப் பத்திரமும் இல்லாம, பத்து லெச்சம் வரைக்கும் லோன் அரேஞ்ச் பண்ணித் தாறோம் பாத்துக்கிடுங்க… நீங்க ஒப்புப்போட்டு பத்து பிளாங்க் செக் லீஃப் மட்டும் குடுத்தாப் போரும்…”
“யம்மா ! அது… வந்து…”
 “பார்ம் எல்லாம் வீட்டுக்கே வந்து நிறைச்சுக்கிடுதோம்…”
 “என் வீடு தெரியுமாம்மா?”
“சொல்லுங்க சார்! எளுதிக்கிடுதேன்!”
“நாகராஜா கோயில் தெரியுமா? நாகரு கோயில்லே?”
“ஆங்… நல்லாக் கேட்டியோ! ஏந் தெரியாது? ஆவணி மாசம் எல்லா ஞாயித்துக்கௌமையும் எனக்க அம்மைக்குக் கூட போவன்லா! செவத்த கொய்யாப்பளம் பிரியமா வேண்டித் தருவா எனக்கு அம்ம…”
“கோயிலுக்கு கெழக்கு வாசல்லே, பெரிய அரச மரத்தைச் சுத்தி பெரிய மேடை இருக்குல்லா? சச்சதுரமா?”
“ஆமா! பத்திருவது நாகரு செலை இருக்கும். எல்லாரும் காப்பிச் செம்பிலே பாலு கொண்டாந்து ஊத்துவா…”
“ஆமா! அதே ஈட்டான்தான்… முன்னால பெரிய மரப்பெட்டி வச்சிருக்கும்… உப்பும் மிளகும் நேர்ந்ததைக் கொண்டு போடதுக்கு… !”
“ஆமா… சொல்லுங்கோ ….”
“அதுக்கு நேரே வடக்க, தெப்பக்குளத்துச் செவுருல சாஞ்சு உக்காந்திருப்பேன் பாத்துக்கம்மா…”
“என்னது? அங்க வந்து?”
 “அங்க வந்தாத்தான் என்னைக் காணலாம். பகல்லே அதுதான் நமக்கு தாமசம்… ராத்திரி ஏதும் கடை வாசல் படிப்புரையிலே கெடப்பேன்…”
 “சார்! என்னது இது? சொக்களி பேசுகேளா?”
“நான் ஏம்மா உங்கிட்டே பரியாசம் பேசுகேன்? நீதானே கூப்பிட்டு லோன் தாறம்னு சொன்ன!
காலம்பற கோயில் நடை தொறந்ததிலேருந்து ராத்திரி நடை சாத்துறது வரைக்கும் அங்கின பாக்கலாம்… ஈட்டான்லே நான் இல்லேன்னா பக்கத்திலே எங்கினயாம் செலவாதிக்குப் போயிருப்பேன்… ஒரு அஞ்சு, பத்து நிமிசம் வெயிட் பண்ணு என்னா!”
எதிர்முனையில் ஃபோனில் இருந்த சிறுபெண்,
 “சவம்! செத்த பிரேதம்… வௌக்கு வய்க்கப்பட்ட நேரத்திலே வந்திற்றான் பாரு… கொள்ளையிலே போவான்…”
என்று முனங்கிக் கொண்டே தொடர்பைத் துண்டித்தாள்.
கும்பமுனி அட்டகாசமான நகையொன்று சிந்தினார். ‘கலகலெனக் கனகன் நஃகான்’ என்று கம்பன் இரணியன் சிரிப்பை நினைவுபடுத்த.
“ஏம் பாட்டா? சின்னப் பிள்ளைகளைப் போட்டு கடுப்பேத்துகேரு? அதுக மாசம் அஞ் சாயிரம் ஆறாயிரம் சம்பளத்துக்கு கெடந்து பேசி மாயுதுக…”
“அதுக்காக? ஆள் தராதரம் தெரியாமக் கூப்பிடலாமா வே?”
“உமக்கெல்லாம், கும்பமுனியின் பெண் தொடர்புகள் அப்டீன்னு ரா முழுக்க உரையரங்கம் போடணும் பாட்டா… அப்பத்தான் ஒணருவரும்… சாவப்போற காலத்திலே புத்தி போறதைப் பாரு…”
“என்னவே வர்த்தமானம் பேசுதேரு? நமக்கு பிக்கப் போயி முப்பது வருசம் ஆச்சுன்னு தெரியாதா உமக்கு?”
தவசிப்பிள்ளையின் பிராது கேட்ட மனத்தாங்கலில், சற்றுத் தீவிரமாக, வீட்டு முற்றத்தின் வேலியாக நின்ற தங்கரளிப் புதரை அவதானித்தார் கும்பமுனி. தங்கரளிப் புதரைப் பார்த்தார் என்றும் எழுதலாம். ஆனால் பின்ன வீனத்துவத்தில் அவதானித்தார் என்றுதான் எழுத வேண்டும். பாடல் வரிகள் சில மனதில் செண்பகம் போலப் பாய்ந்தன. பதி இழந்தனம், பாலனை இழந்தனம், படைத்த நிதி இழந்தனம், இனி நமக்கு உளதென நினைக்கும் கதி இழக்கினும் கட்டுரை இழக்கிலேன் என்று உறுதியும் தோன்றியது. தினமும் வரும் கூறுகெட்ட வணிக அழைப்புகள் பற்றிக் கட்டுரை இன்று எழுத வேண்டும் என்று எண்ணிக் கொண்டார்.
நிலவெளி, ஆகஸ்ட் 2020

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், கும்பமுனி, நாஞ்சில்நாடனின் கதைகள் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to ஓடும் செம்பொன்னும்

  1. து.பிரபாகரன் சொல்கிறார்:

    மிக அருமையான கதை… நுட்பமான விவரிப்பு… நல்ல பகடி… இந்தக் கதையைப் படித்தவுடன் கதையில் சொல்லப்பட்ட நிகழ்வை எண்ணி ஒருபுறம் வலித்தாலும் ஒரு நல்ல கதையைப் படித்த நிறைவு இருக்கிறது. உடல் அலுப்பும் மன அலுப்பும் ஒருசேரத் தீர்ந்தது. நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s