தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: நாஞ்சில்நாடன் – ச.தமிழ்ச்செல்வன்

ச.தமிழ்ச்செல்வன்
திருநெல்வேலியைப் பூர்வீகமாகக் கொண்ட சைவ வெள்ளாளர் குடும்பத்தில் பிறந்த இவருடைய தந்தையார் பிழைப்புத்தேடி நாஞ்சில் வட்டாரத்திற்குச் சென்று அங்கேயே மணம் செய்துகொண்டு குடியிருக்கலானதால் நாஞ்சில்நாடன் குமரி மாவட்டத்துக்காரராகிறார். ஓர் ஏழை உழைப்பாளிக் குடும்பத்தில் பிறந்து, வறுமையான பொருளாதாரப்பின்னணியுடன் போராடிக் கல்லூரிக்கல்வி முடித்து 1972இல் பிழைப்புக்காக பம்பாய் நகரத்தில் குடியேறுகிறார். சுமார் இருபதாண்டுகாலம் மும்பை நகரில் ஒரு தனியார் நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதியாகப் பணியாற்றிய நாஞ்சில்நாடன் இந்தியா முழுவதும் தொழில் நிமித்தம் பயணம் செய்தவர்.சில மொழிகளையும் பல கலாச்சாரங்களையும் அறிந்தவர். பழந்தமிழ் இலக்கியங்களின் மீது ஆழ்ந்த பற்றுதலும் புலமையும் பெற்றவர். 1989க்குப் பிறகு தன் குடும்பத்துடன் கோவை மாநகரில் குடியேறி இன்று அங்கு வசிக்கிறார். இந்தப்பின்னணி பற்றிய அறிதல்  அவருடைய சிறுகதைகளைப் புரிந்துகொள்ள அவசியமாகிறது. அவருடைய மொத்தக்கதைகளுமே குமரி மாவட்டத்தின் நாஞ்சில் வட்டாரம், மும்பை மாநகரம், கோயம்புத்தூர் நகரம் என மூன்று நிலப்பரப்புகளில்தாம் இயங்குகின்றன. தன் வரலாற்றுத் தன்மையுடன் அவருடைய கதைகள் இருப்பதாக அடையாளம் பெறுவது இந்நிலக்காட்சிகளாலும் அவருடைய அற்புதமான மண்சார்ந்த மொழியாலும் தான்.
நாஞ்சில் நாடு என்பது குமரி மாவட்டம் முழுவதையும் குறிப்பதாக பிற மாவட்டத்தினர் கருதுகின்றனர். அது சரியல்ல என்கிறார் நாஞ்சிலார். ”நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை” என்கிற அவரது நூலில்  ‘நாஞ்சில் நாட்டின் கிடப்பு’ என்னும் முதல் கட்டுரையில்,  அதை விளக்குகிறார். கிழக்கே ஆரல்வாய்மொழிக் கோட்டைக்கும், மேற்கே பன்றி வாய்க்காலுக்கும், தெற்கே மணக்குடிக்கும், வடக்கே மங்கலம் எனப்படும் குலசேகரத்துக்கும் இடைப்பட்ட பூமி என நாஞ்சில்  நாட்டைச் சொல்வார்கள்.   கன்னியாகுமரி மாவட்டத்தின் வடகிழக்கே அமைந்த தோவாளைத் தாலுகாவும் அகஸ்தீஸ்வரம் தாலுகாவின் சில பகுதிகளுமே ஆகும் . வடக்கிலும் வடக்கிழக்கிலும் வடமேற்கிலும் மலைகள் சூழ்ந்த பகுதியும் ஆன செழிப்பான நிலத் துண்டு நாஞ்சில் நாடு எனக் கொள்ளலாம் என்பார்.தான் பிறந்து வளர்ந்த வட்டாரத்தைப் பற்றி,அந்த மண்ணையும் மக்களையும் பற்றி நாஞ்சில்நாடன் அளவுக்கு விஸ்தாரமாக தமிழில் வேறு யாரும் எழுதியிருக்க முடியாது.
2004 வரை அவர் எழுதிய 80 கதைகள் ’தமிழினி’ வெளியிட்ட ‘நாஞ்சில் நாடன் கதைகள்’ என்னும் தொகுப்பாக 2006 இல் வெளிவந்தது. அதற்குப்பின்னர் எழுதப்பட்ட கதைகள் ’சூடிய பூ சூடற்க’ (சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல்)கான் சாகிப்,தொல்குடி,சங்கிலிப்பூதத்தான் ஆகிய நான்கு தொகுப்புகளில் சேகரமாகியுள்ளன.
இருநூறை எட்டும் இக்கதைகளை இப்போது மீண்டும் வாசிக்கையில்,ஒரு கதையைப் பற்றி மட்டும் தனியாக துவக்கத்திலேயே சொல்லிவிடவேண்டும் என்கிற உந்துதல் ஏற்படுகிறது. அக்கதை “யாம் உண்பேம்” என்னும் கதை. தோழர் பி.சாய்நாத்தின் கட்டுரைகள் மட்டுமே பேசிக்கொண்டிருக்கும் மராட்டிய மாநில விவசாயிகளின் தற்கொலைகளை முன் வைத்து, உறைக்கும் விதமாகத் தமிழில் ஒரு கதையை எழுதிய முதல் அல்லது ஒரே தமிழ் எழுத்தாளர் நாஞ்சில்நாடன் தான். மராட்டிய மாநிலத்தில் இருபதாண்டுகாலம் வாழ்ந்த அவரது வாழ்க்கையின் அர்த்தமாகவும் பெருங்கொடையாகவும்  இக்கதையை நான் பார்க்கிறேன்.. இக்கதையுடன் சேர்த்துச் சமமாகப் பேச வேண்டிய இன்னும் இரு மிக முக்கியமான மும்பைக்கதைகள் என ’கான்சாகிப்’ மற்றும் ’தன்ராம்சிங்’ ஆகிய கதைகளைச் சொல்ல வேண்டும்.முதலில் “யாம் உண்பேம்”:
“கோதுமை மாவை உப்புத் தண்ணீர் தெளித்துப் பிசைந்தால் மல வாடை வந்தது. எந்த முரட்டு ரகக் கோதுமையும் மட்ட ரக அரிசியும் கெட்ட நாற்றத்துடன் விளைவதில்லை. மலிவான ரகங்களை ஆதரவு விலை கொடுத்து வாங்கி, புழுங்க வைத்து, மக்க வைத்து, நிறம் மங்கவைத்து, கசக்க வைத்து, நாற வைத்து, ஒன்றிரண்டு ஆண்டுகள் மழையில் ஊறவைத்து, வெயிலில் காயவைத்து, புழுக்க வைத்து, மக்கள் தின்பதற்கென்று வள்ளன்மையுடன், பெருங்கருணையுடன், தாயின் சாலப்பரிவுடன் ரேஷன் கடைகளுக்கு அனுப்பினார்கள் தேசத் தலைவர் களும் தேசத்தைக் கட்டி எழுப்பிக் கொண்டிருந்த அதிகாரிகளும். அமெரிக்க ஐரோப்பிய நாட்டுப் பன்றிகள் தின்னாது அவற்றை கனிவுடன் பள்ளிக் குழந்தைகளுக்கு மதியம் ஒருவேளை மக்காச் சோள ரவை எனும் பெயரில் களி போன்றதொன்றைக் கிண்டிப் போட்டார்கள். வயிற்றின் காந்தல் உப்பின் சுவையைக் கூட எதிர்பார்க்க வில்லை. கொடுந்தீயொன்று குமுறிக்குமுறி எரிந்து கொண்டிருந்தது பங்கு பங்காக யாவர் வயிற்றிலும். பிள்ளைகளுக்குப் போட்டியாக கிழடுகட்டைகளும் அலுமினியத் தட்டேந்தி நின்றார்கள். செவலை நாய்கள் மலங்கள் தேடி எப்போதும் அலைந்தவாறிருந்தன.
ஈதல்லாம் ஆப்பிரிக்கக் கண்டத்துச் சின்னஞ்சிறு நாடொன்றின் பஞ்ச காலச் செய்திகள் என்றெண்ணிக் கொள்ளாதீர்! பொற்காலத்தை நோக்கி, வெளிநாட்டு நவீன சொகுசு ஊர்திகளில் வேகமெடுத்துப் பறந்து கொண்டிருக்கும் இந்தியத் திருநாட்டின் மத்தியப் பகுதியின் சமகாலச் சேதிகள்.” என்கிற மனதைப் பதைக்க வைக்கும் விவரிப்புடன் துவங்குகிற இக்கதை கன்பத் சக்காராம் நாத்ரே என்கிற விவசாயியின் கதையைச் சொல்கிறது.அவரது மகன் பாகோஜியும் ஒரு விவசாயி.தாண்ட முடியாத பாழ்கிணறாக வழிமறித்துக் கிடந்த பஞ்சத்தை எதிர்கொள்ள முடியாத பாகோஜி தானும் தன் மனைவி,இரு பெண்மக்களும் என ஒரே நாளில் நான்கு பேரும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். குடும்பத்தாரின் பசியாற ‘போர்’ என்கிற காட்டு இலந்தையையும் கிழங்குகளையும்  தேடிக் காட்டுக்குள் சென்ற நாத்ரே மாலை வீடு திரும்புமுன் எல்லாம் முடிந்து விட்டிருந்தது.
வரிசையாகக் கிடத்தப்பட்டிருந்தன நான்கு சவங்கள். கொள்ளிக் குடம் சுமக்கையில் ஈரல் கீறிப் பிளந்து வேதனித்தது நாத்ரேக்கு.
திருட்டு ரயிலேறிப் போய் நாக்பூரிலோ ராய்ப்பூரிலோ ஜபல் பூரிலோ கட்டிடக் கூலியாக செங்கல் லோ ஜல்லியோ மணலோ சுமந்திருக்கலாம். கரகரத்த குரலில் ‘அபங்‘ பாடிக்  கையேந்தி  நடந்திருக் கலாம். தினத்துக்கு ஐந்து ரொட்டி சம்பாதிக்க இயலாதா?
எதை அஞ்சினான் பாகோஜி?
வயிற்றை அஞ்சினானா? பருவமான பெண்களின் வாசம் கவர்ந்து வரும் கோரைப்பல் ஓநாய்களை அஞ்சினானா?
தன்னை மட்டும் ஏன் விட்டுப் போனான்?
உடைந்து உடைந்து பெருகியது கிழவனுக்கு. தன்னிலிருந்து தன்னை விலக்கி, தன்னைச் சேர்த்துத் தன்னை மாய்த்து..
தனியாகத் தன்னை மாய்த்துக் கொள்ளத் திராணியில்லை நாத்ரேக்கு!
கதையின் இரண்டாம் பகுதியில், ஒரு விற்பனைப் பிரதிநிதி யான பாபு ராவ் அடிலாபாத் ரயில்நிலையத்தில் அவசரமாக ஓடி வந்து ரயிலை பிடிக்கிறார். சாப்பிட நேரமில்லாததால்  சோள ரொட்டியை பார்சல் வாங்கிக் கொண்டு ரயில் ஏறும் அவர், ரயில் புறப்பட்டதும் சாப்பிடத் துவங்குகிறார்.வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டு, பறக்கும் தூசி ரொட்டியில் விழாமல் காபந்து செய்து கொண்டு, கார மிளகாய் கடித்துக் கொண்டு, நிதானமாக ரொட்டியைப் பிய்த்துத் தின்றுகொண்டிருந்தான்.
கால் துண்டு ரொட்டியும் கொஞ்சம் சப்ஜியும் இலையில் மீதம் இருந்தன. ஒரு துண்டு ரொட்டியை சப்ஜியுடன் விரல்கள் கவ்விப் பிடித் திருந்தன. வாய்க்குக் கொண்டு போகும் நேரம். பாபுராவின் உயர்த்திய கையை, முதிய, தோல் சுருங்கிய நாத்ரேயின் கை எட்டிப் பிடித்து வெட வெடத்தது. குலைந்து ஒலித்த குரலால் அதிர்வுற்று பாபுராவ் நிமிர்ந்து பார்த்தான்.
‘அமி காணார்… அமி காணார்…’,
 ‘எனக்குத் தா‘ என்றல்ல, ‘நான் தின்பேன்‘ என்றல்ல, ”நாம் உண்போம்” என. தூய சங்கத் தமிழில் பெயர்த்தால் ‘யாம் உண்பேம்‘ என.
கண்கள் கசிந்திருந்தன. பிடித்த கரம் நடுங்கியது. மீண்டும் மீண்டும் பதற்றம் பரவ, ”அமி காணார்… அமி காணார்…”
பல்கிப் பெருகிக் கிளைத்துத் தழைத்த பசியின் மொழி பாபுராவை திடுக்கிடச் செய்தது.
நம்மையும்தான்.ஒரு நவீனமயமாகிக்கொண்டிருக்கும் தேசத்தின் விவசாயியைச் சோற்றுக்கு அலையவிட்டுள்ள நம் காலத்தின் வெக்கையும் வேதனையும் இந்த ஏழு பக்கக் கதைக்குள் பொதிந்து வைக்கப்பட்டுள்ளது.சமகாலத்தின் கதையை கலை அமைதி கெடாமல்,அதே சமயம் அரசின் மீதான விமர்சனத்தையும் வைத்து அழுத்தமானகுரலில் பேசியிருக்கிறார் நாஞ்சிலார்.
பல்கிப் பெருகிக் கிளைத்துத் தழைத்த பசியின் மொழியை நாம் நாஞ்சில்நாடனின் 90 சதவீதக் கதைகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறோம்.பசியும் பசித்த வயிற்றுக்கு உணவும் நாஞ்சில்நாடனின் சிறுகதைகளின் முக்கியப் பாடுபொருளாக அமைந்திருக்கிறது.
எண்பது கதைகள் கொண்ட  தொகுப்பின் முதல் கதையான விரதம் கதையே சின்னதம்பியா பிள்ளையின் பசியோடு தான் துவங்குகிறது. சின்னத்தம்பியா பிள்ளை மட்டுமல்ல. நாஞ்சில் நாடனின் எந்த ஒரு கதாபாத்திரமும் கதைக்குள் தனியாக வருவதில்லை. தனியாக அறிமுகம் ஆவதும் இல்லை .அவருடைய கதைகள் ஊரை விரிவாக வர்ணித்து அவ்வூரில் நடமாடும் மனிதர்களை வர்ணித்து அந்த மனிதர்களில் ஒருவராகத்தான் ஒவ்வொரு கதையின் நாயகனும் நாயகியும் அறிமுகமாவார்கள்.நாஞ்சில்நாடன் கதைகளின் மிக முக்கியமான அடையாளம் என்று சொல்லலாம்.
வண்ணதாசன் கதைகளில் விரிக்கப்படும் திரைச்சீலையைப் போலவே  நாஞ்சில் நாடன் வரையும்  ஓவியத்துடன் சேர்த்து அவர் விரிக்கும் பின் திரையும் மிகுந்த கவனமும் முக்கியத்துவமும் உடையவை.
I . நாஞ்சில் நாட்டுக்கதைகள்
நாஞ்சில்நாடனின் முக்கால்வாசிக்கதைகள் நாஞ்சில்நாட்டுக் கிராமத்தைக் களனாகக் கொண்டே இயங்குகின்றன.எல்லாம் சைவ வேளாளக் குடும்பங்களின் பண்பாட்டு அசைவுகளையும் அவர்களின் விவசாயம் சார்ந்த பொருளியல் கூறுகளையும் அக்கிராமங்களுக்குள் ஊடும்பாவுமாகப் பின்னிக்கிடக்கும் திராவிடக் கட்சிகளின் அரசியலையும் வயல்வெளிகளில் அம்மக்கள் கொட்டும் உழைப்பின் மகத்துவத்தையும் அவர்களுக்குள் உள்ளுறையாகக் கிடக்கும் பாசத்தையும் துரோகத்தையும் ஆதிக்க உணர்வையும் அடிமைத்தனத்தையும் பக்தியையும் கடவுள் மறுப்பையும் மேன்மைகளையும் கீழ்மைகளையும் எந்த ஒளிவுமறைவுமின்றிப் பேசுகின்றன.
இக்கதைகளைச் சொல்ல அவர் கைக்கொள்ளும் மொழி தனித்துவமானது.பெரிதும் மக்களின் பேச்சு மொழியைச் சார்ந்து நிற்பது.அவசியப்படும் இடங்களில் சங்க இலக்கியத்திலிருந்து ஒரு வரி பளிச்சென மின்னுவது.இப்படிப் பின்னிப்பின்னிச் செல்லும் மொழிநடை நம்மை அப்படியே ஆகர்ஷித்து ஆலிங்கனம் செய்துகொள்கிறது.
ஒன்று
நாஞ்சில் நாட்டுக்கதைகளில் ஒரே சாதிக்குள்ளும் நிலவும் வர்க்க வேறுபாட்டைத்துல்லியமாக வேறுபடுத்திக்காட்டும் கதைகள் நம் கவனத்தை முதலில் ஈர்க்கின்றன.
’சில வைராக்கியங்கள்’ கதையில் பண்ணையார் பரமசிவம் – அவருக்கு வில் வண்டி ஓட்டும் ஆறுமுகம் இருவரும் அவரவர் வீட்டில் காலையில் தயாராகும் காட்சியை அருகருகே வைத்து நமக்குக் காட்டுகிறார்.
”ஊருஞ் சதமல்ல உற்றார் சதமல்ல
 உற்றுப் பெற்ற பேரும் சதமல்ல
 பெண்டிர் சதமல்ல”
 என்று நீட்டி முழக்கிப் பட்டினத்தடிகளைப்  பரலோகம் வரை சென்று பற்றி இழுத்தது பரமசிவம்  பிள்ளையின் வெண்கலக் குரல்…..
பூஜையை முடித்துவிட்டுக் கூடத்துக்கு வந்தார் உடலெல்லாம் வரிவரியாக திருநீற்றுப் பூச்சு. கழுத்தில் தங்கத்தால் கோக்க்ப்பட்ட உருத்திராட்சம்.  அரையில் நூறாம் நம்பர் இரட்டை வேட்டி. வேட்டியை மீறிச் சரிந்திருந்த தொந்தியை இழுத்து பிடிக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தது அரையில் சுற்றிக் கட்டிய துண்டு …..
இன்னும் நேரம் இருக்கிறது. என்றாலும் சூட்டோடு சாப்பிடுவதில் அவருக்கு விருப்பம்’ சூடு ஒரு ருசி; சிவப்பு ஒரு அழகு’ இல்லையா?   அடுக்களையை  நோக்கி நடந்தார்.
நுனி வாழை இலையில் ஆவி பறக்க ஐந்தாறு இட்லிகளை வைத்து ஓரத்தில் இரண்டு மூன்று கரண்டி மிளகாய்ப் பொடியை வைத்து  அவர் அதை விரலால் குழிக்க நல்லெண்ணெயை அதன் மீது  சரித்தாள் மனைவி.
பரமசிவம் பிள்ளை சாப்பிட ஆரம்பித்தார். உள்ளே போய்க் கொண்டிருந்த இட்லி களின் எண்ணிக்கையை கணக்கிட்டால் ”ஊருஞ் சதமல்ல உற்றார் சதமல்ல ”என்று சற்றுமுன் பாடியவர் இது  ஒன்றைத்தான் சதம் என்று எண்ணுகிறாரோ  என்று தோன்றும்.
சாப்பிட்டுவிட்டு வெளிப்படிப்புரையில் போடப்பட்டிருந்த சாய்வு நாற்காலியில் சாய்ந்தார் சுடச்சுடச்  சாப்பிட்டதால் அந்தப் பனி மாதத்தில் கூட, அவர் மேனியில் வியர்வை பொடித்தது .தோளில் கிடந்த துண்டால் உடம்பைத் துடைத்துக் கொண்டு வெற்றிலை போட ஆரம்பித்தார்.
*
ஆறுமுகம் குதித்துக் கொண்டிருந்தான். அவனும் பிள்ளைமார்தான் . வயதும் பரமசிவம் பிள்ளையைப் போல் அறுபது இருக்கும். என்றாலும் வறுமை காரணமாகவோ, இல்லை ‘வண்டிக்காரன்‘ பதவி காரணமாகவோ அவனுக்கு ‘ர்‘ மரியாதையோ, ‘பிள்ளை ‘ பட்டப் பெயரோ யாரும் தருவதில்லை. எல்லோருக்கும் அவன் வெறும் ஆறுமுகம் மட்டும்தான்
”செறுக்கி மவளே.. நாகருகோயிலுக்குப் போணும்… காலப் பறையே வண்டிபோடணும்ணு நேத்தே சொல்லி இருந்தம்லா? ஒனக்கு இப்பத்தான் தொவையலரைக்க நேரங்கெடச்சா?” ஆறுமுகத்தின்  கூக்குரல், அழுது கொண்டிருந்த அவன் கடைசி மூன்று வயது மகளின் வாயைக்கூட அடைத்து விட்டது.
”இன்னா ஆச்சு… ஆக்கப் பொறுத்தவரு ஆறப் பொறுக்க மாட்டாரா!” என்று சொல்லி அம்மியிலிருந்து துகையலை வழித்துவிட்டு எழுந்தாள் அவன் மனைவி.
”சரி…. சரி…. கஞ்சியை ஊத்து” என்று சொல்லி. ‘பத்தும் தண்ணி யுமாகக் கலந்து வைக்கப்பட்டிருந்த தாலத்தின் முன் உட்கார்ந்தான்.
பூவரச இலையில் வைத்திருந்த புளித்துகையலைத் தொட்டு நாக்கில் தீற்றிக்கொண்டு அவன்  விரல்கள் தாலத்தில் நீந்தின. கஞ்சியை குடித்து வாயைக் கொப்பளித்துவிட்டு மீசையைக் கையால் ஒதுக்கினான்.”யேவ்… யேவ்‘ என்று இரண்டு ஏப்பமும் விட்டபிறகுதான் அவனுக்குத் தெரிந்தது, தான் அனாவசியமாகக் கோபப்பட்டு விட்டோம் என்று.
அடுத்தடுத்து,அருகருகே இவ்விரு காட்சிகளை வைப்பதன் மூலமும் பண்ணையார் சாப்பாட்டை எள்ளலுடன் குறிப்பிடுவதன் மூலமும் தன் சாய்மானத்தைச் சந்தேகத்திடமின்றிக் காட்டிவிடுகிறார். எல்லா அசலான கலைஞர்களையும் போலவே  நாஞ்சில்நாடன் எளியவர்கள் பக்கமே நிற்கிறார். சாதி ஒன்றெனிலும் வர்க்கம் வேறு என்பதை இதைவிடக் கலாபூர்வமாக எப்படிச் சொல்வது?
’எச்சம்’ என்கிற கதையில் பண்ணையார் பலவேசம்பிள்ளை செத்துப்போகிறார். அந்த மரணத்தைப் பண்ணையார் வீட்டார் எதிர்கொள்ளும் விதமும் அவர் பண்ணையில் உழைக்கும் தொழிலாளிகள் எதிர்கொள்ளும் விதமும் இருவேறு பார்வைகளாகக் கதையில் இயல்பாக வந்து நிற்பதைப் பார்க்கலாம்.
”கோலப்பன் வீட்டை நோக்கி நடந்தார். அவர் தலைமறைந்த பிறகு மாடசாமி முணுமுணுத்தான். “செத்தாரா…! மனுசன் நல்லா அழுந்தித்தான் செத்திருக்காருடே… சின்ன நிலையா நிண்ணாரு…” –
பின் ஏர் அடித்துக்கொண்டிருந்த யாக்கோவு சொன்னான். “மச்சான்… உமக்கு யாபகம் இருக்கா…? பத்து வருசம் முன்னாலே… செவுத்தியானுக்கு மக போட்டாளே போடு, வாரியக் கொண்டையால… மனுசனுக்குப் பொறகாவது சொணை வந்தா? கண்டவ பின்னாலே கார்த்திகை மாசத்து நாய்மாதிரி அலையத்தாலா செய்தாரு…” –
“அது மாத்திரமாடே… இருபது வருசமா மாடா வேலை செய்யோம்… மூணாமாண்டு ஆடி மாசம்…  பொட்டு நெல்லு இல்லே வீட்டிலே… பிள்ளைங்கெல்லாம் பட்டினி கெடக்கு… ஒரு அஞ்சுமரக்கா நெல்லுத் தாரும்ணு கேட்டேன்… மனுசன் பேப் பட்டியாட்டமா வள்ளுண்ணுல்லா விழுந்தாரு. திருப்பி வாங்காமலா விடுவாரு… சவம்  பின்னே  சொணை கெட்டுப் போய்த்தான் வேலை செய்யோம்… தூ… பெரிய பண்ணையாரு…” மாடசாமி காறி உமிழ்ந்தான். ”
”இருள்கள் நிழல்களல்ல” கதையில் ஒரு பெரிய வீட்டு கல்யாணம். கல்யாண வீட்டு வாசலில் கடைசிப் பந்தி முடிந்தபிறகு நமக்கும் மீந்த சாப்பாடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கும் கையேந்திக் கூட்டம் .  கல்யாணப் பரபரப்புக்கு இடையில் வசதியான உறவினர்கள் கார்களில் வந்து இறங்கிக் கொண்டு இருக்கும் சூழ்நிலையில் இவர்கள் காத்திருக்கிறார்கள்.
” கொஞ்சம் தள்ளிப் போய் இரிங்கோ …இப்பமே மாநாடு கூடியாச்சா.. இன்னும் நேரமில்லா கிடக்கு ..”என்று விரட்டும் குரல்கள்.
விரட்டலுக்கு பயந்து  ஒதுங்கி இருந்த அவர்கள் நசுங்கிய அலுமினியப் பாத்திரங்கள், மழிக்கப்பட்ட தேங்காய் சிரட்டைகள் ,பீழை  வறண்ட கண்ணிமைகள் , பூர்வாசிரமத்தில் இன்ன நிறமாக இருந்தது என்று சொல்லமுடியாத கிழிந்து நைந்த  அழுக்குகள், அவசரகால நிவாரணமாக செப்பனிட வேண்டிய ஒட்டிய வயிறுகள், கனவுகளே இல்லாத வெளிறிய கண்கள்.
கோயில் உண்டியலை எண்ணிக் கணக்கிட வேண்டிக்  கொட்டிக் கொடுக்கும் போது முழு ரூபாய்  எட்டணா நாலணா நாணயங்களுக்கு இடையில் கிடைக்கும் செல்லாத ஓட்டைக் காலணாக்களைப் போன்று அந்த கும்பல் கூசிக் குறுகிப் புறக்கணித்துப்  புறந்தள்ளப்பட்டு கிடந்தது.  இந்தப் புறக்கணிப்புகள் என்றும் எங்கும் நிகழ்ந்து மரத்துப்போன மனம். அதனால் இது ஒன்றும் உறைக்காமல் ஓட்டியபோது நகரவும் நீங்கிய போது நெருங்குவது மாக இருந்த ஊமை நாடகம்..
முதல் பந்தி முடிந்தது எச்சிற்கையைத்  தாழ்த்தப்பட்ட சாதியைப் போல உடலிலிருந்து நீக்கித்   தனியாக மடக்கிப் பிடித்துக் கொண்டு சாரி சாரியாக வந்து கொண்டிருந்தார்கள். தெருவில் இந்தக் கும்பல் ஒதுங்கி இருந்த இடத்தின் தெற்குப் புறம் பெரிய உருளியில் நிறைத்து வைத்திருந்த தண்ணீரைகச்  செம்பினால் கோரி கோரிக் கையையும் வாயையும் கழுவிக்  கொப்பளித்துப்   பலருக்கும் முகத்தில் வியர்வை பிடித்திருந்தது. பனியன் போடாமல் சட்டை மட்டும் போட்டவர்களுக்கு வியர்வையில் சில இடங்களில் ஈரம் படிந்திருந்தன. சாப்பிடுவதே உழைப்பாகிப்  போய்விட்டதால் உழைக்கும் போது  வியர்க்காதா?
ஒவ்வொரு பந்தியும் முடிவதும் வீட்டுக்காரர்கள் கைகழுவுவதும் இந்தக் கும்பல் காத்திருப்பதும் எனக் கதை முழுவதுமே இவ்விரு வர்க்கங்களையும் நாணயத்தின் இருபக்கங்களையும் மாற்றி மாற்றிக் காட்டுவதுபோலக் காட்டி வாசக மனதில் பெரும் மன உளைச்சலையும் வெறும் சோற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சம் என்கிற பெருமூச்சையும் ஒருசேர உருவாக்கி விடுகிறார். இரண்டுக்கும் நடுவில் சிக்கிய பண்டாரம் என்கிற நாவிதரின் வழியே கதை சொல்லப்பட்டாலும் இருவேறு வர்க்கங்களின் படப்பிடிப்பாக அமைந்து நிற்கிறது.
‘உபாதை’ கதையில் பூமணி என்கிற உழைக்கும் வர்க்கப்பெண்ணும் கங்காதரம்பிள்ளை என்கிற பண்ணையாரும் முரண்படும் கோலம் வரையப்படுகிறது. ”அண்ணைக்கு விடியக்காலம் எந்திரிக்கச்சிலேயே மலப்பா இருந்து…இண்ணத்தப்பாடு எப்படிப் போகப்போகோ? சின்னதுகோ மொகத்தை மொகத்தைப் பார்த்துக்கிட்டு பள்ளிக்கொடம் போச்சு…” என்றுதான் பூமணிக்குப் பொழுது விடியும். கங்காதரம்பிள்ளை வயலில் வேலை பார்த்தால் வெள்ளிக்கிழமை பொழுதுசாய்ந்து விட்டால் அவரிடம் கூலி வாங்க முடியாது.
“என்னட்டீ மூதி?இண்ணைக்கு வெள்ளிக்கிழமைன்னு தெரியாதா?மூந்தி கருக்கல்லே வந்து நிக்கே?..
“ஓர்மையில்லே நயினாரே ..ஆனா நேத்தே பட்டினி..கும்பித்தீயை பச்சத்தண்ணி குடிச்சு அணைக்கவா முடியும்? தந்து அனுப்பும் நயினாரே..”
“….காலம்பற ஏழு மணிக்கு வந்து ஓங்காசை வாங்கீட்டுப்போ…சவங்களுக்கு என்னத்தைக்கொடு, நிறைவே கிடையாது..” என்பது நடைமுறை.                                                                                                                 இன்றும் அதே போல வெள்ளிக்கிழமை வேலை சுணங்கி இருட்டிவிட்டது. என்ன சொல்லப்போறாகளோ என்கிற பதைப்புடன் ஓட்டமும் நடையுமாக வரப்பில் வந்துகொண்டிருக்கிறாள்.வயல்வெளியில் ஆளரவமில்லை.அந்த இருட்டுக்குள் திடீரென்று கங்காதரம்பிள்ளை வந்து குறுக்கிடுகிறான்.
“..வளியை விடும் ..போட்டும்..”
“ அது சரிதான்…போறதுக்கா இவ்வளவு நேரம் தாயமாடிட்டு நிண்ணேன்..வா..கொஞ்சம் செண்ணு போகலாம்..” என்று கையைப்பிடிக்கிறான். அவள் கையை உதறிவிட்டுச் சுற்று முற்றும் பார்க்கிறாள். சற்று நிதானித்து “ஆமா.. எம்புட்டுத் தருவேரு..?” என்று கேட்கிறாள்.அவன் பத்துரூபாத்தாளை எடுத்து நீட்டுகிறான்.அதை வாங்கி மடியில் செருகிக்கொண்டு அவனைப்பள்ளத்தில் கிடந்த வயலில் தள்ளிவிட்டு தப்பி ஓடுகிறாள்.
“ஓட்டமும் நடையுமாக ஆற்றைக்கடந்து ரோட்டில் ஏறியபின்பும் பூமணியின் படபடப்பு அடங்கவில்லை.நடையைச் சற்று நிதானித்துக்கொண்டு ,அரிசி வாங்க ரோட்டுக்கடைக்கு ஒதுங்கினாள்” என்று கதை முடிகிறது. நாஞ்சில்நாடன் நேர்காணல்களிலும் நேர்ப்பேச்சுக்களிலும் முற்போக்கு பிற்போக்கு என்று சொல்லுவதை மறுப்பவர் என்றாலும் இக்கதை மிக முக்கியமான ஒரு ‘முற்போக்கு’க் கதை என்பதை தனியாகச் சொல்லத் தேவையில்லை.நாளை அவளுக்கு எனா ஆகுமோ என்கிற கவலையுடன் கதை நம் மனதில் தொடர்கிறது. இத்தகைய வெளி முரண்பாட்டை மட்டுமின்றி பூமணி என்கிற அந்த ஒடுக்கப்பட்ட பெண்ணின் மனதில் ஓடும் உள் முரண்பாடுகளும் கச்சிதமாகக் கதையில் சொல்லப்படுகிறது.
 ‘மார்த்தாளும் சாமிதாசும் பள்ளிக்கொடம் விட்டு வந்திருக்கும்… மூதி, உலையாவது வச்சா  கொள்ளாம்… சமயத்திலே எங்கயாம் போயி வாயைப் பாத்துக்கிட்டு நிண்ணாலும் நிண்ணிரும்… சாமிதாசை அஞ்சாறு சுள்ளி பெறக்கிட்டு வர காலம்பறையே சொன்னேன்… சவம் போச்சோ? இல்லை எங்காயாம் போய் ஓந்தான் புடிச்சுக்கிட்டு நிக்கோவ்?’
அவளுடைய புருஷன் நினைப்பும் கூடவே வந்தது. ‘அஞ்சு மணிக்கே வேல முடிஞ்சுரும்… தாளாக்குடிக்குப் போயி அரிசியும் மீனும் வாங்கீட்டு  வந்திருப்பாரு… ஒண்ணும் தீர்ச்சையாச் சொல்ல முடியாது. சிலசமயம் எல்லாம் ஓர்மையில்லாம கள்ளத்தனமாக கள்ளு குடிச்சுக் கிட்டு வந்து நிண்ணாலும் நிக்கும்… சவம் மாடு கெணக்கதான். ஒரு சுவாவத்திலே எல்லாம் செய்யும். மொரண்டிச்சிண்ணா அதுவும் இல்லே… என்னமேளமா இருக்கோவ்? போய்ப் பாத்தாதான் தெரியும். நமக்கே பசி பொறுக்க முடியலேண்ணு இருக்கச்சிலே சின்னச் சவங்க எப்பிடிப் பொறுக்கும்?’
ஆண் தலைமையிலான குடும்பமாக வெளித்தோற்ரம் கொண்டிருந்தாலும் உழைக்கும் வர்க்கக் குடும்பங்களில் பெண் தான் தலைமை ஏற்கிறாள் என்பதை இக்கதையிலு இன்னும் பல கதைகளிலும் நாஞ்சில்நாடன் எழுதிச்செல்கிறார்.
அவள் பத்து ரூபாயைக் கைநீட்டி வாங்கியதும் இன்னொரு பொன்னகரத்து அம்மாளுதானோ எனத்தோன்றியது.ஆனால் அப்படி முடிந்துவிடாதது ஆறுதல் அளித்தது.
’வாய் கசந்தது’ கதையில் அறுவடை செய்த பொலி நெல்லை அளப்பதற்கு வெண்கலப் பூண் போட்ட பொலி மரக்காலும் கூலி அளப்பதற்கு அதை விடச் சிறிதான கொத்து மரக்காலும் பண்ணைகள் வைத்திருந்ததைக் குறிப்பிடுகிறார். தஞ்சாவூர்ப் பண்ணைகளைப் போலத்தான் தமிழகம் முழுவதும் சுரண்டல் நடைபெற்றது என்பதன் அடையாளம் இது. தோழர் டி.செல்வராஜின் ’மலரும் சருகும்’ நாவல் எழுதிச்செல்லும் ‘முத்திரை மரக்கால்’ போராட்டமும் இதையே பேசுகிறது.
இதுபோலப் பலகதைகளில் இந்த வர்க்க வேறுபாட்டை, இருப்பவன் இல்லாதவன் இடைவெளியை எந்த மெனக்கெடலும் இல்லாமல்,வலிந்து சொல்லாமல், வாழ்வின் பகுதியாகவும் வாழ்வின் அடித்தளமாகவும் அது இருப்பதைச் சொல்லிக்கொண்டே போவதைப் பார்க்கிறோம்.இரு வாழ்நிலைகளையும் ”அருகருகே வைத்துக் காட்டுவது” என்பதுதான் மற்றவர்களிடம் காணக்கிடைக்காத, நாஞ்சில்நாடனின் தனித்துவமான பாணியாக இருக்கிறது.அவருடைய படைப்பின் அரசியலாகவும் அது அமைகிறது.
இரண்டு
கதாபாத்திரங்களுக்கு எந்த அளவுக்கு இடமும் முக்கியத்துவமும் அவர் கதைகளில் தரப்படுகிறதோ அதற்கு இணையாக ஊரின் மக்களும் ஊரின் மரம் செடி கொடிகளும் ஊரைச் சுற்றியுள்ள வயல்வெளிகளும் வாய்க்காலும் பழையாற்றின் கிளைகளும் முக்கியத்துவம் பெறுவது குறிப்பிடத்தக்கது. எந்தச் சூழலுக்கு நடுவில் இந்த கதாபாத்திரங்கள் இயங்குகின்றன என்பதை நமக்குச் சொல்வது முக்கியம் என்று அவர் கருதுகிறார். முழுமையின் ஒரு பகுதியாகத்தான் ஒவ்வொரு கதாபாத்திரமும் அவர் கதைகளில் நடமாடுகிறார்கள் .இந்த சமூகவியல்ரீதியான அணுகுமுறை மிகவும் அறிவியல்பூர்வமானது.எந்த ஒன்றையும் அதன் சூழலிலும் வரலாற்றின் புள்ளியிலும் வைத்துப் பார்க்கும் இப்பார்வை மிக முக்கியமானது.
’கிழிசல்’ என்கிற ஐந்தரைப் பக்கக் கதையில் கதை நாயகனான மாணிக்கம் இரண்டரைப்பக்கம் கடந்த பிறகுதான் கதைக்கு உள்ளேயே வருகிறான். அவன் எந்தத் திருவிழாவுக்குப் போய் எந்தக்கடையில் சாப்பிடப்போகிறானோ அவற்றின்  சித்திரம்தான் முதலில் விரிவாகத் தீட்டப்படுகிறது. இப்போது நாம் மையக்கதையைக் கேட்பதற்குத் தயாராகிவிட்டோம். வாசக மனநிலையைத் தயார்ப்படுத்தும் நாஞ்சில்நாடனின் முயற்சிகள் அபாரமானவை..
‘படுவப்பத்து’ கதையில் கதையின் நாலாம் பக்கத்தில்தான் வடக்குத்தெரு சங்கரசுப்பையருக்கு படுவப்பத்தில் முக்கால் கோட்டை விதைப்பாடு இருக்கிறது என்று கதைக்குள் நுழைகிறார்.அதற்கு முன்னால் அழகிய நல்லூர் கிராமமும் அக்கிராமத்தின் சாதி அடுக்கும் வயல்களின் தன்மையும் படுவம் என்றால் என்ன படுவப்பத்து என்றால் என்ன என்பதெல்லாம் கொஞ்சமும் பாக்கி இல்லாமல் விளக்கப்பட்டு…சரியா..இப்பம் கதையைக் கேளுங்க என்று கதை துவங்கும்.
கதை முழுமையாகச் ‘சென்று சேர’ வேண்டும் என்பதில் நாஞ்சில் நாடன் கொள்ளும் அக்கறையும் எடுக்கும் பிரயத்தனங்களும் ஆகா…என்று சொல்ல வைப்பவை.
பெரும்பாலான கதைகளில் அவர் மக்கள் கூட்டத்தை விரிவாகக் காட்சிப்படுத்துவதை நாம் பார்க்கிறோம்.காட்சிப்படுத்திவிட்டுப் பிறகுதான் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தின் மீது நம் கவனத்தைக் குவிமையப்படுத்துகிறார்.மக்களை-மக்கள் கூட்டத்தை – அவர் மையப்படுத்துவது ஐசன்ஸ்டீனின் ’போர்க்கப்பல் பொடெம்கின்’ படத்தை நினைவு படுத்துகிறது. உதாரணத்துக்கு ஒரு கதை:-
“லைன் வீடென்று சொல்வாரிங்கு” என்று ஆரம்பிக்கும் “கொங்கு தேர் வாழ்க்கை” கதையின் முதல் நாலு பக்கங்கள் லைன் வீடுகள் பற்றிய விவரிப்பாகவும் அவற்றில் வாழும் மக்களின் வாழ்வும் பாடுகளும் பண்புகளும் எனப் பேசி நான்காம் பக்கத்தில்தான் கதை துவங்குகிறது.பிறகும் அது லைன் வீட்டு மக்களைத்தான் படம் பிடிக்கிறது.ஒரே ஒரு முறை நாதஸ்வரம் வாசிக்கும் பெரியவரை மின்னலெனக் காட்டி மறைவதுதான் கதை .ஆனால் அதுவல்ல நாஞ்சில்நாடனின் நோக்கம்.அதைச் சாக்கிட்டு இந்த மாநகரத்துக் கீழ் நடுத்தட்டு மக்களின் வாழ்வை நமக்குச் சொல்ல வேண்டும்.தேன் தடவிக் கசப்பு மருந்தைக் குழந்தைக்கு ஊட்டும் தாயைப்போல மையக்கதை என்ற ஒன்றைக் காட்டி நமக்கு வேறொன்றைச் சொல்ல வருகிறார்.
”இதற்குள் எப்படி ஐயா நான்கு பேர் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாழமுடியும் என்ற வினா கிளைத்துப் பெருகுகிற வாசக அன்பர்கள் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். மும்பையில் தாராவி யில், கோவண்டியில், சுன்னாபட்டியில், மான்கூர்டில், கோலிவாடா வில் இந்த லைன் வீட்டை மூன்றாகப் பிரித்து வீட்டுக்கு எட்டுப்பேர் ஆணும் பெண்ணுமாய் குழந்தையும் முதியவருமாய் தாயும் பிள்ளையு மாய் பிழைத்து வாழ்வார்கள். மனசிருந்தால் புளியிலையில் கூட மூன்று பேர் புரண்டு படுக்கலாம்.
பெரிய பூட்ஸ் ஒன்றினுள் குடித்தனம் நடத்திய கதை ஒன்று நம்மிடம் ஏற்கனவே உண்டு. உடம்பாடு இலாதார் வாழ்க்கை தான் குடங்கருள் பாம்பொடு உடன் உறைந்தற்று. லைன் வீட்டுக்காரர்கள் என்னதான் முன்னூற்று அறுபத்தாறு பிரிவுகளும் உப பிரிவுகளும் துணைப் பிரிவுகளும் பிற்சேர்க்கைகளும் கொண்ட வாடகைக் குடியுரிமை சட்டங்கள் செய்தாலும் உச்ச நீதி மன்றத்தின் துணை கொண்டு தம்பதியர் புணர்ந்தனர், கர்ப்பமுற்றாள், குழந்தை ஈன்றாள், பிறந்த நாள் கொண்டாடினர், நோயுற்றனர், நோய் நீங்கினர், மரண முற்றனர், விருந்தினர் வந்தனர், பெண் குழந்தைகள் சமைந்தன, லைனுக்குள் சண்டை இட்டனர், சமாதானம் ஆயினர், தக்காளியும் தோசைமாவும் கடன் கொடுத்தனர், மீன் குழம்பு செய்து கிண்ணத்தின் மேல் கிண்ணம் வைத்து மூடிக் கொடுத்தனர். எல்லாம் இன்பமயம்.
நான் குடியிருக்கும் வீட்டின் எதிர்முகத்திலும் பக்கவாடுகளிலும் ஏழெட்டு லைன்கள் இருந்தன. நான் இருப்பதும் ஏகதேச உருவகமாக லைன் வீடுதான். ”
”பெரிய பூட்ஸ் ஒன்றினுள் குடித்தனம் நடத்திய கதை” என்று போகிறபோக்கில் அவர் குறிப்பிடுவது கிருஷ்ணன் நம்பியின் ‘தங்க ஒரு..’ கதையை.இப்படி நவீன இலக்கியம் மற்றும் எழுத்தாளர்களாஇயும்கூடக் கதைக்குள் வெகு இயல்பாகக் கொண்டுவர அவரால் முடிகிறது.லேசான எள்ளலுடன் கூடிய அவரது நடை அதற்கு அகன்று இடம் கொடுக்கிறது.
காடு,”கால்நடைகள்,கனகதண்டிகள்”,ராஜாக்களும் சீட்டுக்கம்பெனிகளும் ஆகிய கதைகளில் பேருந்து நிலையமும் பேருந்து நிறுத்தமும் அங்கு காத்திருக்கும் மக்களும் கதைமையமாக ஆகிறார்கள்.பஸ்ஸில் ஏறும் கூட்டமே கால் நடைகள் கனகதண்டிகள் கதையின் கதாநாயகம்.ஒரு கும்பல் கலாச்சாரத்தின் உளவியல் இக்கதையில் பேசப்பட்டாலும் அதிலும் வர்க்க வேறுபாடு உள்ளுறையாக இருக்கிறது.
மூன்று
(தொடரும்)

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s