கம்பன் காதலன்

செந்தில்நாதன்
நன்றி:-  https://padhaakai.com/2015/04/27/kamban-kadhalan/
நாஞ்சில் நாடன் சிறுகதைகள் தான் எனக்கு முதலில் பரிச்சயம். பின் அவரது நாவல்கள். கும்ப முனியின் கம்பன் ஈடுபாடு அவர் ‘கம்பனுக்குள் வந்த கதை’ கட்டுரைக்குப் பின் தான் தெரிய வந்தது.
பள்ளிப் பருவத்தில் கம்பன் கழகப் போட்டிகளில் கலந்து கொண்டு சில பரிசுகள் வென்றது தான் அதற்கு முன் கம்பனுடனான எனது உறவு. மனப்பாடம் செய்த பாடல்களும் மறந்து போயின. நாஞ்சிலின் கட்டுரை படித்தவுடன் கம்ப இராமாயணத்தைப் படிக்க வேண்டும் என்ற தூண்டுதல் எழுந்தது. ஆனால் எந்த உரை சிறந்தது, அதற்கு எங்கே போவத?. அதற்கும் நாஞ்சில் தான் வழிகாட்டினார். வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியரின் உரையை வைத்துத் தன் ஆசிரியர் பாடம் எடுத்த்தாக அந்தக் கட்டுரையில் எழுதியிருந்தார். அதை ஒட்டியே அந்த உரை கொண்டு நான் கம்பனைப் படிக்கத் தொடங்கினேன்.
அந்தக் கட்டுரையில் அவர் பம்பாயில் ரா.பத்மனாபன் அவர்களிடம் நான்காண்டுகள் கம்ப இராமாயணம் கற்றதைச் சுவை படச் சொல்லியிருப்பார். இருபது பேருடன் கோலாகலமாக ஆரம்பித்த கம்பராமாயாயண வகுப்பு, கடைசியில் நாஞ்சில் மட்டுமே என்று சுருங்கியது, ஆசிரியரின் வீட்டுக்கு வகுப்பு நகர்ந்தது என்று அந்தக் கட்டுரையே ஒரு நல்ல சிறுகதை போல இருக்கும். அக்காலத்தில் தீவிர நாத்திகரான நாஞ்சிலுக்கு இராமன் பட்டாபிஷேகப் படத்தின் முன்னால் அமர்ந்து ஆசிரியரிடம் பாடம் கேட்கத் தடையொன்றுமில்லை. “அவருக்கு தமிழ் மூலம் சமயம்எனக்குச் சமயம் மூலம் தமிழ்சில சமயம் இரண்டும்
ஒன்று தான் எனத் தோன்றும்” என்கிறார் நாஞ்சில்.
காரைக்குடி கம்பன் கழக விழாவில் கம்பன் சொல் நயம் பற்றித் தான் ஆற்றிய உரையை விரிவு படுத்தி கம்பனின் அம்பறாத் தூணி என்ற நூலாக 2013ல் வெளியிட்டார் நாஞ்சில். அந்த நூல் அறிமுகமே இந்தக் கட்டுரை. இது விமர்சனமல்ல. நூல்நயம் பாராட்டுதல் என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்.
தான் கம்பனுக்குள் வந்த கதையை முதல் அத்தியாயத்தில் சுவை படச் சொல்லுகிறார். மாசி-பங்குனி மாதங்களில் ஊருக்கு வரும் தோல்பாவைக் கூத்துக்காரர்கள் மூலமாக இராமாயணக்கதை அறிமுகமாயிற்று என்று ஆரம்பித்து, பள்ளிப் பருவத்தில் தி.க. கூட்டங்களில் இராமாயணத்தில் எதிர்ப்பக்கங்களையும் கேட்டறிந்த கதை கூறி, பம்பாயில் ரா.பத்மநாபன் அவர்கள் இல்லத்தில் இராமாயணம் முழுமையாகக் கற்றதுடன் நிறைவு செய்கிறார். இந்த நூலை ரா.ப. அவர்களுக்குக் காணிக்கையாக்கியிருக்கிறார் நாஞ்சில்.
பின்னர் நவீன இலக்கியத்துக்குள் வந்த போதும் நாஞ்சில் மரபு இலக்கியத் தொடர்பை விடாமல் காத்து வந்திருக்கிறார். ”என்னை மாற்றிய நூல்” என்ற தலைப்பில் 2009 ஆண்டு சென்னை சங்கமம் விழாவில் கம்ப ராமாயணத்தைப் பற்றி தி.க. தலைவர் வீரமணி முன் பேசிய போது தி.க.வினர் ஏற்படுத்திய அமளியையும் சொல்லுகிறார். அதன் பின்னர் ஜெயமோகன் இதிகாசங்கள் பற்றி ஊட்டி இலக்கிய முகாமில் பேச அழைத்ததிலிருந்து தான் கம்பனுக்குள் மீண்டும் வந்ததாகவும், அந்த அமர்வுக்குப் பிறகு சற்று முயன்றால் தமிழ்க் காப்பியத்தின் மேன்மையை இளைய வாசகர்கள், இளம் படைப்பாளிகள் நெஞ்சத்துள் கடத்திவிடலாம் என்ற நம்பிக்கை வந்ததாகவும் சொல்லுகிறார்.
அடுத்த அத்தியாயத்தில் ‘கம்பனின் அம்பறாத் தூணி” என்று நூலுக்குத் தலைப்பு வைத்ததற்குப் பெயர்க் காரணம் கூறுகிறார். வீரர்கள் தோளில் மாட்டியிருக்கும் அம்பு வைத்திருக்கும் தூணி. இதற்குக் கம்பன் பயன்படுத்திய சொற்கள் கணைப்புட்டில், வாளிபெய் புட்டில், ஆவம், தூணி, பகழி என்று எடுத்துக் காட்டும் நாஞ்சில் எக்காலத்திலும் அம்பு அற்றுப் போகாத தூணி, அம்பு + அறா + தூணி = அம்பறாத் தூணி என்று பெயர்க்காரணத்தை விளக்குகிறார். கம்பன் சொல் வீரன், அவன் தூணி சொற்கள் நிறைந்தது. வில்வீரனின் அம்பறாத்தூணி தோளில் கட்டப்படும் எனில் காப்பியக் கவிஞனின் சொல் அறாத்தூணி அவன் சிந்தையில் கட்டப்படும்’ என்பது நாஞ்சிலின் விளக்கம்.
வில் கிடந்தது மிதிலையின் நகரிலே
கல் கிடந்தது கானகம் தன்னிலே
நெல் கிடந்தது சடையனின் வீட்டிலே
சொல் கிடந்தது கம்பனின் நெஞ்சிலே
உயர்ந்தெழுந்தது இராமனின் கதை அரோ
(கம்பனின் அம்பறாத்தூணி புத்தகத்தில் நாஞ்சில் நாடன் கொடுத்துள்ள தனிப்பாடல்)
வில் கிடந்தது மிதிலையின் நகரிலே
(சீதையை மணப்பதற்காக இராமன் முறித்த சிவதனுசு மிதிலையில் இருந்தது)
கல் கிடந்தது கானகம் தன்னிலே
(இராமன் பாதம் பட்டு சாப விமோசனம் அடைவதற்காக அகலிகை கல்லாய் கானகத்தில் கிடந்தாள்)
நெல் கிடந்தது சடையனின் வீட்டிலே
(கம்பனின் புரவலரான வெண்ணெய்நல்லூர்ச் சடையப்பனின் வீட்டில் வேண்டிய அளவு நெல் (செல்வம்) இருந்தது)
சொல் கிடந்தது கம்பனின் நெஞ்சிலே
(இராம காதை எழுதும் அளவுக்குச் சொல் கிடந்தது கம்பனின் மனத்திலே)
சொல் என்றால் ஒரு சொல்லா, இரு சொல்லா? தமிழ் அகராதிக் கணக்கையும் தாண்டிய சொற்குவை. மூன்றாவது அத்தியாயம் நாழி முகவுமே நாநாழி. நாழி என்பது நெல் அளக்கும் அளவை. நாழி முகவாது நாநாழி என்பது தான் பழமொழி. எவ்வளவு அழுத்தி அளந்தாலும் நாழி, நான்கு நாழிகள் தானியத்தைத் தன்னுள் முகந்து கொள்ளாது’ என்று பழமொழியை விளக்குகிறார்.
தமிழ்க் காப்பியங்களின் அளவைக் கணக்குப் போட்டுப் பார்த்து கம்பராமாயணத்தில் சுமார் மூன்று லட்சம் சொற்கள் கம்பன் பயன் படுத்தியிருக்கிறான் என்கிறார் நாஞ்சில். (10368 பாடல்கள், ஒவ்வொன்றும் 4 அடிகள், அதிகமும் அறுசீர் விருத்தம் என்பதால் ஒவ்வொரு அடியிலும் 6 சீர்கள், சில ஓரசைச் சீர்கள், சில ஈரசைச் சீர்கள்). அவற்றில் திரும்பத் திரும்ப பயன்படுத்திய சொற்களைக் கழித்துப் பார்த்தால் ஒன்றரை லட்சம் சொற்கள் இருக்கலாம் என்பது நாஞ்சிலின் துணிபு.
ஒரு வீரனின் முன் கிடக்கும் பல ஆயுதங்களில் எதைப் பயன் படுத்துவான் வீரன்? பகைவனின் சேண்மை அல்லது அண்மைதான் நிற்கும் இடம்ஆயுதம் பயன்படுத்தும் வெளிதனதாற்றல்பகை ஆற்றல் என எத்தனை தீர்மான்ங்கள்வீரனுக்குரிய அத்தனை முன் தீர்மான்ங்களும் கவிஞனுக்கு உண்டுஅதில் மாட்சி தெரிக்கும் தெய்வமாக்கவி எனில்கவிச்சக்கரவர்த்தி எனில்அவன் சொல் தேர்வு எங்ஙனம் இருக்கும்?” என்று நம்மைக் கேள்வி கேட்டு அவன் சொல் தேர்வின் வீச்சைப் புரிய வைக்கிறார். தூணியின் கொள்ளளவையும் மீறி சொற்கள் கிடக்கும் தூணி அவனுடையது. எனவே கம்பனின் காப்பியத்தில் நாழியும் முகவும் நாநாழி என்கிறார்
தமிழில் வழக்கொழிந்து ஆனால் மலையாளத்தில் வாழும் கம்பன் சொற்களைப் பட்டியலிடுகிறது ’மலையாளத்தில் வாழும் கம்பன் சொற்கள்’ அத்தியாயம். ஒவ்வொரு சொல்லுக்கும் அது மலையாளத்தில் எப்படிப் பயன்படுத்தப் படுகிறது, பழந்தமிழ் இலக்கியங்களில் எங்கெல்லாம் வருகிறது, தமிழில் இன்று அதற்குப் பதிலாக எந்த சொல் இன்று புழக்கத்தில் உள்ளது என்று கூறுகிறார் நாஞ்சில். இந்தப் நூலில் அவர் எடுத்துக் காட்டும் அனைத்துச் சொற்களுக்கும் இது போல் ஒரு குறுங்கட்டுரை வரைந்திருக்கிறார். அங்கங்கே அவருக்கே உரிய அங்கதத்துடன் தன் ஆதங்கத்தையும் பதிவு செய்கிறார்.
உறக்கம் என்ற சொல்லைத் தமிழன் மறந்து தூங்கப் போய்விட்டான் என்று வருத்தப் படுகிறார். கிங்கரர்கள் கும்பகர்ணனை எழுப்பும் பாடலை
உறங்குகின்ற கும்ப கன்ன! உங்கள் மாய வாழ்வெலாம்
இறங்குகின்றது! இன்று காண் எழுந்திராய்! எழுந்திராய்!
கறங்குபோல வில் பிடித்த காலதூதர் கையிலே,
உறங்குவாய், உறங்குவாய் இனிக்கிடந்து உறங்குவாய்
உதாரணமாகத் தரும் நாஞ்சில் ‘இந்தப் பாட்டுக்கும் கூட உரை வேண்டுமெனில், புத்தகத்தை மூடி வைத்து நீங்கள் உறங்கப் போகலாம்’ என்று வாசகனையும் எச்சரிக்கிறார். இது போன்ற நாஞ்சிலின் முத்திரைகள் நூல் வாசிப்பின்பத்தைக் கூட்டுகின்றன. இந்த அத்தியாயத்தில் முடிவில் இப்படியே போய்க் கொண்டிருந்தால் மொத்தக் கம்பராமாயணமுமே மலையாள மூல மொழியில் எழுதப்பட்ட இதிகாசம் என்று இந்த நூலாசிரியன் நிறுவிவிட்டுப் போய்விடுவான்“ என்று அவர் கூறும் போது புன்னகைக்காமல் இருக்க முடியவில்லை.
சொல் காமுற்றற்று அத்தியாயத்தில் கம்பனில் தன்னை ஈர்த்த, தனக்கு நூதனம் என்று தோன்றிய சொற்களை விளக்குகிறார். தான் கம்பன் சொல் திறத்தை விரும்புவதையே (காமுறுவுதையே) சொல் காமுற்றற்று என்ற தலைப்பின் மூலம் நமக்கு உணர்த்துகிறார் நாஞ்சில்.
கல்லாதான் சொல் காமுறுதல் முலைஇரண்டும்
இல்லாதாள் பெண் காமுற்றற்று
கல்வி கற்காதவன் அவையில் சொல்ல விருப்பப் படுவது முலை இரண்டும் இல்லாதவள் பெண்மையை விரும்புவது போன்றது என்பது வள்ளுவன் வாக்கு. இது தனக்கும் தெரியும் என்று கூறும் நாஞ்சில் இந்த இடத்தில் தனது தோதுக்கு ஏற்றாற் போல பொருள் கொள்கிறார்.
இசை ரசிப்பவர் குறுந்தகடுகள் சேகரிப்பது போன்றும் ஓவிய ரசிகர்கள் ஓவியம் சேகரிப்பது போன்றும் ஒரு படைப்பிக்க்கியவாதிக்கு சொற் சேகரம். ஆனால் அவன் பணி சேகரித்து அழகு பார்த்துக் கொண்டிருப்பதில் முற்றுப் பெறுவதில்லை. அடுத்த கட்டமாக அவற்றைப் பயன்படுத்த முடிவது. பயன்படுத்தும் முனைப்பு இல்லாதவனுக்கு சொல் மோகமும் இருக்காது, சொல் யோகமும் இருக்காது’ என்று கூறும் நாஞ்சில் படைப்பாளிக்கு கம்பன் காப்பியம் என்பது சொற் சுரங்கம் என்கிறார்.
நாஞ்சிலின் வாசகர்களுக்கு அவர் படைப்புகளில் உணவுக்கு இருக்கும் முக்கியத்துவம் தெரியும். இந்த நூலிலும் அவர் காளான் நம் நாட்டுத் தாவரமா என்று பேராசிரியர் பா.நமசிவாயத்திடம் கேட்டுத் தெரிந்து கொண்டதைப் பகிர்கிறார். புறநானூற்றிலும், சிறுபாணாற்றுப் படையிலும், களவழி நாற்பது நூலிலும் குறிப்பிடப்பட்டிருக்கும் காளாம்பி என்பது காளான் என்று உரைக்கும் நாஞ்சில் கம்பனில் கிட்கிந்தா படலத்தில் ஆம்பியைக் கண்டடைகிறார். இன்றும் செட்டிநாட்டில் பூஞ்சை படிவதை ’ஆம்பிப் போவது’ என்று சொல்லுவதையும் சுட்டிக் காட்டுகிறார்.
குண்டிகை (கமண்டலம் அல்லது குடுக்கை) என்ற சொல்லையும் நிறைவாக விளக்கிச் சொல்லுகிறார் நாஞ்சில். இது திருமழிசை ஆழ்வார் ஏழாம் நூற்றாண்டில் பாடிய நான்முகன் திருவந்தாதியில் வருகிறது என்று உரைத்து அதற்கு ஒரு குதர்க்க அர்த்தத்தையும் உரைக்கிறார். அதை இங்கு எழுதினால் சண்டை வந்துவிடும். நூலை வாங்கிப் படித்து நாஞ்சிலிடம் சண்டை போடுங்கள்.
பல சொற்களை நயம் பாராட்டிய ’சொல் காமுற்றற்று’ அத்தியாயத்திற்கு அடுத்து இரு சொற்களைப் பாராட்டும் ‘ஊழியும் ஆழியும்’. ஊழ் என்பதைக் கம்பன் ஊழ்வினை, முறைமை, பகை, முடிவு, ஊழிக்காலம் என்று பல அர்த்தத்தில் பயன்படுத்தியுள்ளதைக் காட்டும் நாஞ்சில் ஊழி தொடர்பாகக் கம்பன் பயன்படுத்தியுள்ள 43 சொற்றொடர்களைப் பட்டியலிடுகிறார். ஊழ்வினைக்கு எடுத்துக் காட்டாகத் தசரதன் அரச பதவியைத் துறந்து இராமனை அரசாள வேண்டுவதாக அமைந்த பாடலைக் காட்டுகிறார்.
முன்னை ஊழ்வினைப் பயத்தினும், முற்றிய வேள்விப்
பின்னை எய்திய நலத்தினும், அரிதினும் பெற்றேன்;
இன்னம் யான் இந்த அரசியல் இடும்பையின் நின்றால்,
நின்னை ஈன்றுள பயத்தினின் நிரம்புவது யாதோ?
பாடலில் தசரதனின் மனத்தை விளக்கும் நாஞ்சில்  ‘அரச பாரம் துறந்து, மகனிடம் பொறுப்பை ஒப்படைக்க நினைத்த ஒரு பேரரசனின் துறவு மனம் இது. தயவு செய்து சமகால அரசியலோடு ஒப்பு நோக்காதீர்கள். இங்கு எவரும் தசரதனும் இல்லை, இராமனும் இலக்குவனும் பரதனும் சத்ருக்கனும் இல்லை’ என்று முடிக்கிறார். இது தான் நாஞ்சில்.
தமிழ் லெக்சிகன் ஆழி என்னும் சொல்லுக்கு 11 பொருள் தருகிறது. கம்பனோ 12 பொருள்களில் ஆழி பயன்படுத்துகிறான் என்று கூறும் நாஞ்சில் அவற்றில் சில பாடல்களை மேற்கோள்களோடு விளக்குகிறார். வாலி இறக்கும் முன் இராமனிடம் வரம் இரந்து நிற்கும் பாடல்
அனுமன் என்பவனை – ஆழி ஐய! – நின் செய்ய செங்கைத்
தனு என நினைமதி
கூறி இந்த வரிகளைத் தான் சிகரமாக நினைப்பதாக்க் கூறுகிறார் நாஞ்சில். சாவதற்குச் சில கணங்கள் முன்பு, தன்னைக் கொன்றவனிடம், தன்னைக் கொல்ல அனுப்பியவர்களை நன்றாகப் பார்த்துக் கொள்ளுமாறு கூறுவது காப்பியத்தின் உச்சகணங்களில் ஒன்று.
அடுத்த அத்தியாயம் அம்பு என்னும் சொல்லுக்குக் கம்பன் உபயோகப்படுத்தும் சொற்கள். அம்பு, சோணை, கோல், கணை, சரம், வாளி, பகழி, என்று பட்டியலிட்டு ஒவ்வொன்றிற்கும் மேற்கோள் காட்டுகிறார்.
அடுத்து வழக்கொழிந்து போன உறவுச்சொற்கள். உம்பி (உன் தம்பி) நுந்தை (உன் தந்தை), உங்கை (உன் தங்கை), தவ்வை (தமக்கை, மூத்தவள்) போன்ற சில சொற்களை விளக்குகிறார். இவற்றில் தவ்வைக்கு எடுத்துக்காட்டியுள்ள பாடல் மிகச் சிறப்பான ஒன்று. பரதனுக்கு முடிசூட்ட வேண்டுமென்று கேட்பதற்காக கைகேயி வீழ்ந்து கிடக்கும் காட்சி. இதற்குக் கம்பன் உதாரணம் “தாமரையில் வீற்றிருக்கும் தாயாகிய திருமகள், எப்படியும் அயோத்தியை விட்டு நீங்கப் போகிறாள் என்று கருதி அயோத்தி வந்தடைந்த திருமகளின் தமக்கையாகிய மூதேவி போல கைகேயி கிடந்தாள்’.
கவ்வை கூர்தரச் சனகிஆம் கடிகமழ் கமலத்து
அவ்வை நீங்கும்’ என்று அயோத்திவந்து அடைந்த அம் மடந்தை
தவ்வை ஆம் என கிடந்தனள் கேகயன் தனையை
இதற்கு நாட்டார் வழக்கிலிருக்கும் எளிய சொலவடையைக் காட்டுகிறார் நாஞ்சில் ‘சீதேவி போனாள், மூதேவி வந்தாள்’.
கம்பனின் மொழியாக்கங்கள் என்ற அடுத்த அத்தியாயத்தில் நாஞ்சில் களம் கட்டி ஆடுகிறார். கம்பனை வால்மீகியை மொழி பெயர்த்தவன் தானே என்று துச்சமாகப் பேசுபவர்களுக்குப் பதிலே இந்தப் பகுதி. ‘வடமொழியில் வான்மீகமும் வாசித்திராத, தமிழில் கம்பனும் கற்றிராத மூடன் தான் அவ்விதம் சொல்வான்’ என ஆரம்பத்திலேயே தன் கருத்தை நிறுவுகிறார். கம்பன் செய்தது மொழியாக்கம் என்றும் 10368 பாடல்களிலும் கம்பன் ஒரு கிரந்த எழுத்தைக்கூட பயன்படுத்தவில்லை என்றும் சொல்லுகிறார்.’கம்பனின் தமிழ்ப்பற்று வடமொழி துதி பாடிகளுக்குப் புரியாது. திராவிட இயக்கக் கனபாடிகளுக்கும் அர்த்தமாகாது’ என்று கம்பன் பக்கம் நின்று எல்லா பக்கமும் சாட்டை வீசுகிறார்.
எடுத்துக்காட்டாக நாகம் என்ற சொல்லைக் கையில் எடுக்கிறார். ‘நாகம் எனும் சொல் தமிழ்ச்சொல், அதே சமயம் வட சொல். கம்பன் பல பாடல்களில் நாகம் எனும் சொல்லை தென் சொல்லாகவும், வட சொல்லாகவும் ஆள்கிறார். அவருக்கு அதில் பேதமில்லை’ என்று கம்பனின் அம்பறாத்தூணியை குறுக்குபவர்களைச் சாடுகிறார் நாஞ்சில். கதாபாத்திரங்களின் பெயரைத் தமிழ்ப் படுத்தியதையும் சுட்டிக்காட்டுகிறார். இப்படிப் போய்க்கொண்டிருக்கும்போதே சென்னையில் இன்று பயன்படுத்தப்படும் ‘காண்டாயிட்டான்’ என்ற சொல்லுக்குத் தாவுகிறார். கடுப்பாகிவிட்டான் என்ற அர்த்தத்தைக் கேட்டபின், ஒருவேளை இது கம்பன் பயன்படுத்திய ‘கான்று’ ( கனல் வீசும் ) தானோ என்று கேட்டு நம்மைச் சிரிக்கவும் வைக்கிறார்.
அசைச் சொற்கள், தாமரைக்கு ஈடான சொற்களை அடுத்தடுத்த அத்தியாயங்களில் விளக்கும் நாஞ்சில், ’கம்பனின் கலப்பை’ அத்தியாயத்தில் தன் பெயருக்கே வருகிறார். ‘நாஞ்சில்’ என்ற நிலப்பகுதி புறநானூற்றில் வருகிறது. ஆனால் அதன் பொருள் என்ன? கலித்தொகையில் இருந்து கலப்பை என்ற பொருள் கண்டடைகிறார். கம்பன் நாஞ்சிலை கலப்பையாகவும் போர்க்கருவியாகவும் பயன்படுத்துகிறான் என்கிறார். நாஞ்சில் நாடனுக்கும் இது பொருந்தும். கம்பனின் சொற்சுரங்கத்தைத் தோண்டி எடுக்கும் கலப்பையாகவும் இருக்கிறார், கம்பனை யாரும் தூற்றினால் போரிடும் போர்க்க்கருவியாகவும் இருக்கிறாரல்லவா நாஞ்சில்?
கம்பன் சேமித்த தகவல்கள் அத்தியாயத்தில் ‘புல்லிடை உகுத்த அமுது’ ஆயிற்று கம்பனின் கவித்திறம் என்று குறைபட்டுக் கொண்டு கம்பன் சேமித்து வைத்துள்ள பண்பாட்டுக் கூறுகளை விளக்குகிறார் நாஞ்சில். வாத்தியங்கள், மலர்கள், பறவைகள், ஆயுதங்கள் பற்றி எண்ணற்ற பாடல்களில் வரும் குறிப்புகளைக் காட்டிக் கம்பனில் உள்ள தகவல்கள் பற்றி ஆய்வு செய்யப்பட வேண்டும் என்கிறார்.
நாஞ்சிலின் சொல்லாய்வு நூல் பல்கலைகழகப்ங்கள் வெளியிடும் படிக்க முடியாத நூல் போன்றது இல்லை. கம்பனைத் தஞ்சாவூர் கோயில் கோபுரம் போல் பெருமை மிக்கப் பழம் பொருளாய்ப் புரியாமல் பார்த்து விட்டு நகருகிறவர்களைக் கூப்பிட்டு சில சிற்பங்களை, அதன் நுணுக்கங்களை, அழகை எடுத்துக் காட்டுகிறார் நாஞ்சில் நாடன்.
’எம்மனோர்’ என்ற சொல்லும் கம்பன் உபயோகப்படுத்திய சொல் தான். எம்மைப் போன்றவர் என்று அர்த்தம். அதுவே இந்த நூலின் கடைசி அத்தியாயம். காப்பியத்தின் உச்ச தருணங்களில் கம்பன் இதை எம்மனோர் எப்படி விவரிப்பர் என்று கேட்கிறான். அந்தச் சொல்லைப் பற்றி விளக்கும் போது கம்பன் எம்மனோர் என்பது யாரை என்று கேட்கும் நாஞ்சில் தானே அதற்கு பதிலும் சொல்கிறார் ”மடக்கி எழுதி 120 பக்கம் நிறைத்துநீட்டி அடித்தால் 20 பக்கம் வரும் கவிதைத் தொகுப்பு போட்டவர்களையாகவிஞர் விக்ரமாதித்தன் பாடியதுபோல் ஓய்ந்த நேரத்தில் கவிதை எழுதுபவர்களையாஇல்லை, 10000 பாடல்கள்எனும் பெருங்கனவு கொண்டவர்களையா?”
கம்பராமாயணம் படிக்க ஒரு தூண்டுதலாக இருக்கும் இந்த நூல். கம்பனைக் கற்றறிந்தவர்களுக்கு மேலும் சுவை கூடும். இந்த நேரத்தில் ஒரு கேள்வி எழலாம். கம்பராமாயணம் படிக்கத் தான் வேண்டுமா? படித்து என்ன ஆகப் போகிறது? தமிழ்ச்சுவையும், எதுகையும் இன்றைய அவசர உலகத்தில் தேவையா? நியாயமான கேள்வி தான். எதையும் தெரிந்து கொண்டு என்ன ஆகப் போகிறது? வெந்ததைத் தின்று விதி வந்தால் செத்துப் போகும் வாழ்க்கையில் எதுவுமே தேவையில்லை தான்.
நம் கல்வி முறையில் செவ்வியல் ஆக்கங்களுக்கு இருக்கும் இடம் ஓரிரண்டு செய்யுட்கள், மிஞ்சிப் போனால் ஒரு கட்டுரை, அவ்வளவு தான். சங்கத்திலிருந்து ஆரம்பித்து இருபதாம் நூற்றாண்டு வரை நீளும் இலக்கியத்தை சில பக்கங்களுக்குள் சுருக்கி விட வேண்டியிருக்கிறது. மதிப்பெண் பெறுவதற்கு கம்பனைப் பற்றிக் கோனார் கூறியதை மனனம் செய்தால் போதும்.கல்லூரிப் படிப்பு என்பது வேலைக்குப் போவதற்கான கருவி என்பதால் அங்கு இந்தப் பேச்சே இல்லை. இளங்கலை தமிழ் படிப்பவர்களுக்கு மட்டுமே செவ்வியல் இலக்கியங்களுக்கான அறிமுகம் இருக்கிறது.
இத்தகைய சூழலில் நம் மொழியின் ஆற்றலை, நம் முன்னோர்கள் சாதனைகளை, அவை இன்றும் நீடித்திருப்பதற்கான காரணங்களை நமக்கு எடுத்துரைக்க வேண்டிய கடமை நம் கலாச்சார ஆளுமைகளுக்கு உள்ளது. அந்த விதத்தில் நாஞ்சில் செய்வது முக்கியமானதொரு செயல். பள்ளிக்குப் பின் நான் மீண்டும் கம்பராமாயணம் படிக்க ஆரம்பித்ததற்கு நாஞ்சிலே தூண்டுகோல். கம்பராமாயணம் மட்டுமல்லாது, சிற்றிலக்கியங்கள் பற்றியும் அவர் தளத்தில் வெளியாகும் கட்டுரைகள் எனக்குப் பாடமாய் அமைந்தவை.
இந்த நூலிலேயே நாஞ்சில் கூறுகிறார் “யோசித்துப் பார்த்தால் இவையெல்லாம் படைப்பிலக்கியவாதியான் என் பணியே அல்ல எனத் தோன்றும்மீண்டும் யோசித்துப் பார்த்தால் இவற்றை நான் செய்யாவிட்டால் வேறு யார் செய்வார்கள் எனத் தோன்றும்”. முற்றிலும் உண்மையான கூற்று. கண் முன்னே கிடக்கும் ரத்தினங்களை விட்டுவிட்டு கூழாங்கற்கள் தேடும் தேசத்தில் இவ்வகையான பணிகள் செய்வது சோர்வூட்டக்கூடியது தான். ஆனால் அவரது இந்த முயற்சியால் தமிழ்ச் செவ்விலக்கியங்கள் மீது பலருக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறார். அவர்களில் நானும் ஒருவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப் படுகிறேன்.
தான் கம்பனைக் கற்றுச் சுவைத்துத் தோய்ந்த அனுபவத்தை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளும் முயற்சியே கம்பனின் அம்பறாத்தூணி நூல். நாஞ்சில் நாடன் கம்பன் மேல் கொண்ட காதலால் உருவான நூல் இது. கிட்கிந்தா காண்டத்தில் காதலன் என்ற சொல்லை மகன் என்ற அர்த்தத்தில் உபயோகிக்கிறான் கம்பன். வாலியின் மகன் அங்கதனை “வாலி காதலனும், ஆண்டு, மலர் அடி வணங்கினானை” என்று வருணிக்கிறான். அதே போல் நாஞ்சில் நாடனைக் கம்பன் காதலன் என்றே அழைக்கலாம்.
                                                      ————————

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், கம்பனின் அம்பறாத் தூணி, நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , , , , . Bookmark the permalink.

1 Response to கம்பன் காதலன்

  1. chezhian சொல்கிறார்:

    Beautiful ❤️🎈🎈 தமிழ் சிற்பங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s