பிஞ்ஞகன்

நாஞ்சில் நாடன்
தருமமிகு சென்னையில் இருந்து எமது நாற்பதாண்டு குடும்ப நண்பர் வைத்தியநாதன் காலையில் கூப்பிட்டார். அவரைச் சிறிதாக அறிமுகம் செய்வதானால், அவர் மதுரை மகா வைத்தியநாதய்யரின் தம்பியின் கொள்ளுப் பேரன். அவர் பெயரைத்தான் இவருக்கு வைத்திருக்கிறார், இவரது தந்தை சென்னையின் புகழ்பெற்ற வழக்கறிஞர் சிவசாமி ஐயர். நன்னூல் மனப்பாடமாகச் சொல்லக் கேட்டிருக்கிறேன். பழந்தமிழ் நூல்களில் நல்ல பயிற்சி உண்டு. சென்னை மாகாணத்தின் அட்டர்னி ஜெனரலாக நியமனம் பெறப் பரிந்துரைக்கப்பட்டவர். பெருந்தலைவர் முதலமைச்சராக இருந்த காலம். எந்தக் காலத்திலும் நடைமுறையில் இருக்கும் சாதி அரசியலால் நிராகரிக்கப்பட்டவர்.
எஸ். வைத்தியநாதன் தீவிர நவீன இலக்கிய வாசிப்புக் கொண்டவர். சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் உயரதிகாரியாக இருந்து அண்மையில் ஓய்வு பெற்றார். சென்னைப் பல்கலைக்கழக எம்.எஸ்சி (புள்ளி இயல்) பட்ட மேற்படிப்பு. மும்பை பல்கலைக்கழகத்தின் பஜாஜ் இன்ஸ்டிட்யூட் எம்.பி.. ஆமதாபாத் ஐ.சி.பி.எம். உயர்படிப்பு. எனக்குத் தெரிந்து நாற்பதாண்டு காலமாக ழ, கவனம், விருட்சம் இதழ்களில் கவிதை எழுதுகிறவர். தமது கவிதைகள் தொகுப்பாக வருவதில் ஆர்வமில்லாதவர். நகுலன் சொல்லியும் கேட்காதவர், அழகிய சிங்கர் சொன்னால் கேட்பாரா?
அவர் மூலமாகத்தான் எனக்கு ஞானக்கூத்தன், சா. கந்தசாமி. ந. முத்துசாமி, ஆத்மாநாம், ராஜகோபாலன், மா. அரங்கநாதன், ஆனந்த், அழகிய சிங்கர், ராம்மோகன் என்ற காளி-தாஸ் என்ற ஸ்டெல்லா புரூஸ் நேரடியாக அறிமுகம்.
மும்பை கொலாபா பகுதியில், சிட்டி பெ.கோ. சுந்தரராஜன் தனது மகன் வீட்டில் தங்கி இருந்தபோது பார்க்கக் கூட்டிப் போனார். வடாலா பகுதியில் அம்பையும் விஷ்ணு மாத்தூரும் வசித்தபோது பார்க்க அழைத்துப் போனார். க.நா.சு.; நகுலன், லா..ரா; ந. முத்துசாமி, அம்பை ஆகியோரின் நண்பர். யாவற்றுக்கும் மேலாக, வைத்தியநாதனின் அம்மா, சிவகாமி அம்மாள், பலமுறை என்னிடம் சொன்னதுண்டு பரிவுடன், சுப்பிரமணியம்! வைத்தியைப் போல நீயும் எனக்கொரு பிள்ளைதாண்டா!” என்று. சுப்பிரமணியம் என்பதென் முற்பிறவிப் பெயர்.
காலையில் அழைத்த வைத்தியநாதன் கேட்டார், சுப்பிரமணியம் பிஞ்ஞகன் என்ற சொல்லின் நேரான பொருள் என்ன? சமீபகாலமாக, தமிழ்ச் சொல்லில் ஐயம் தீர்க்கப் பாவப்பட்ட என்னிடம் கேட்கிறார்கள். நம் பாடோ, எலி பெரிதாகிப் பெரிதாகிப் பெருச்சாளி ஆன கதை. நாமென்ன, வேர்ச்சொற் கட்டுரைகள் எழுதிய மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரா? மேலும் பாவாணரைப் போலத் தமிழினத்தால் புறக்கணிக்கப்பட்டுச் சாவதில் எவருக்கு சம்மதம் இருக்க இயலும்? தமிழ் தமிழ் எனக் கூவி, தமிழால் பரம்பரைக்கும் செல்வம் சேர்த்து, தமிழ் அழிக்கும் தன்மானங்கள்தானே இங்கு வியாபாரமாகும்! பார்த்துச் சொல்கிறேன் வைத்தியநாதன் என்று கூறித் தொடர்பறுத்தேன்.
இப்போது நாம் நேரடியாகக் கட்டுரைக்குள் வந்துவிட்டோம், Warming up முடிந்து. பிஞ்ஞகன் எனும் சொல், அரை நூற்றாண்டாக நமக்கு அறிமுகமான சொல். சிவனைக் குறிக்கும் சொல் என்று மட்டும் அறிவோம். ஆனால் நேர்ப்பொருள் தெரியாது. நாம் தமிழ் மாணாக்கனோ, சைவ சித்தாந்த மாணாக்கனோ இல்லைதானே! தண்டபாணி, கோதண்டபாணி, சாரங்கபாணி, சக்கரபாணி, பினாகபாணி போல இருக்கலாம் என்று எண்ணி இருந்தேன். இப்போது தேடவேண்டும், பிஞ்ஞகன் என்றால் என்ன குந்தாணி குடைச்சக்கரம் என்று!
பெரும்பாலும் ஒரு சொல் மனதில் கோலம் காட்டினால், அந்தச் சொல் பயன்படுத்தப்பட்ட பாடல் வரி – திருக்குறளோ, கம்பனோ, பாரதியோ எனக்கு நினைவில் குறுக்கிடும். தலைவன் என்ற சொல் வந்தவுடன் உடனேயே அடுத்த சொல்லாக அயோக்கியன் எனும் சொல் நினைவுக்கு வருவதைப்போல. போட்டியாகச் சிலசமயம், திருட்டுத் தே………… மவன் எனும் சொற்றொடரும் வருவதைப்போல.
பிஞ்ஞகன் எனும் சொல் என் மனத்தில் தூண்டிய பாடல் வரி, சிவபுராணத்தின் ஏழாவது அடி, பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க என்பதாகும். சிவபுராணம் என்பது மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத் தொகையின் முதற்பாடல். திருப்பெருந்துறையில் அருளப்பெற்றது. சிவபுராணம் மொத்தம் 95 அடிகள்.
மாதம் 1418 பணம் ஓய்வூதியம் வாங்கும் நமக்கு, சில சமயம் பெருந்தொகை ஊதியமாகப் பெறும் பேராசிரியப் பணி ஆற்ற வேண்டிய நிர்ப்பந்தம் வந்து சேர்ந்துவிடுகிறது. தமிழ் நமக்கொன்றும் தலையாலும் தந்துவிடாது என்றாலும் கட்டுரையும் கைப்பழக்கம்.
சைவத் திருமுறைகள் பன்னிரண்டில் எட்டாம் திருமுறை திருவாசகம். ஞானசம்பந்தர் தேவாரம் முதல் மூன்று. அப்பர் தேவாரம் அடுத்த மூன்று. சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரம் ஏழாம் திருமுறை. திருவிசைப்பாவும் திருப்பல்லாண்டும் ஒன்பதாம் திருமுறை. திருமந்திரம் பத்தாம் திருமுறை. பன்னிரு அருளாளர்கள் பாடிய நாற்பத்தொரு நூல்கள் அடங்கியது பதினோராம் திருமுறை. சேக்கிழார் அருளிய பெரியபுராணம் என்று வழங்குகிற திருத்தொண்டர் புராணம் பன்னிரண்டாம் திருமுறை.
எனது இலக்கியக் கொள்கை, பன்னிரு திருமுறைகளோ, நாலாயிரத் திவ்யப் பிரபந்தமோ படைத்தவர் அனைவரும் கவிஞரும் ஞானியரும் ஆவர். சமயம் எனும் புறக்கணிப்பில் அவரைத் தவிர்த்துவிட்டுத் தமிழ் கற்பது என்பது அந்தகன் வாரணம் உணர்ந்த கதையாகவே இருக்கும். நினைவில் கொள்க – நான் பயன்படுத்திய சொல் வாரணம், வானரம் அல்ல. வேழம், வாரணம், குஞ்சரம், கரி, களிறு, கைம்மா, நால்வாய், போதகம் என்றால் அது யானை.
எட்டாம் திருமுறையான திருவாசகம் மொத்தம் 656 பாடல்கள். அடிகள் எனக் கணக்கெடுத்தால் 3327. இவற்றுள் 51 பதிகங்கள் அடக்கம். பதிகங்களினுள் திருவெம்பாவாய் 20 பாடல்கள், திருப்பள்ளி எழுச்சி 10 பாடல்கள். அடிகள் 3327 என்ற கணக்கினுள் சிவபுராணம் 95 அடிகள், கீர்த்தித் திரு அகவல் 146 அடிகள், திருஅண்டப்பகுதி 182 அடிகள், போற்றித்திரு அகவல் 225 அடிகள் அடக்கம். மேலும் 51 பதிகங்களின் பாடல்களின் அடிகளும் உள்ளடங்கும். மாணிக்கவாசகர் அருளிய  மற்றொரு மகத்தான நூல் திருக்கோவையார். நானூறு பாடல்களிலான அகப்பொருள் இலக்கியம். சிற்றிலக்கியங்கள் என்று 2013-ம் ஆண்டு வெளியான எனது நூலில் திருக்கோவையார் நூல்பற்றி விரிவாகப் பேசி இருக்கிறேன்.
ஆக ஈண்டு நாம் புகல வந்த விடயம், பிஞ்ஞகன் எனும் சொல் மாணிக்கவாசகரின் சிவபுராணத்தில் ஆளப்பட்டுள்ளது என்பது. அடுத்து ஒரு கேள்வி வரும் என்பதறிவேன். என் அம்மை ஆரிய நாட்டுக்காரி அடிக்கடி சொல்வாள், பிள்ளை முழிக்க முழி பேலுகதுக்குண்ணு தெரியாதா?’’ என்று. ஆகவே பிஞ்ஞகனுக்கு வருவோம். மாணிக்கவாசகர் திருவாசகத்தில், செத்திலாப் பத்து பகுதியில், பிறை குலாஞ்சடைப் பிஞ்ஞகனே!’ என்பார். திரு அம்மானைப் பகுதியில் முன்னானை மூவர்க்கும் முற்றுமாய் முற்றுக்கும் பின்னானைப் பிஞ்ஞகனை என்கிறார். பிடித்த பத்து பகுதியில், அளவிலா ஆனந்தம் அருளிப் பிறவி வேரறுத்தென் குடிமுழுதாண்ட பிஞ்ஞகா என்கிறார்.
ஆகமொத்தம் திருவாசகத்தில் மாணிக்கவாசகர் நான்கு இடத்தில் பிஞ்ஞகனைப் பேசுகிறார். சரி! பிஞ்ஞகன் என்றால் என்ன பொருள்? பேரகராதியில் தேடினால் பிஞ்ஞகன் எனும் சொல்லுக்கு சிவன் என்று பொருள் சொல்கிறார்கள். அட! இதுவென்ன Back to square one கதையாக இருக்கிறதே என்று தொடர்ந்து போனால், பிஞ்ஞகன் எனும் சொல்லுக்கு Destroyer என்று பொருள் தரப்பட்டுள்ளது. அஃதாவது, சம்ஹாரம் – சங்காரம் செய்பவன். சங்காரன். சங்கரன் அல்ல சங்காரன். இப்போது மாணிக்கவாசகரின் சிவபுராணத்து வரியின் பொருள் விளங்குகிறது நமக்கு. பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்! பிறப்பை அறுக்கும் மறுபிறவியை அழிக்கும் சம்ஹார மூர்த்தி. பிஞ்ஞகன் எனில் தலைக்கோலம் எனும் அணி பூண்டவன் எனும் பொருளும் தரப்பட்டுள்ளது.
பிஞ்ஞகன் எனும் சொல்லுக்கு மகளிர் தலைக்கோலம் என்று பொருள் சொல்கிறது பிங்கல நிகண்டு. அதாவது An ornament worn by women. திருவாசகத்தின் சில பதிப்புகள் பிஞ்ஞகன் எனும் சொல்லைப் பிஞ்சகன் என்றும் அச்சிட்டுள்ளன. பிஞ்சகன் என்றாலும் பிஞ்ஞகன்தான் என்கின்றன அகராதிகள். கவிஞர்களே சிலர் கவிஞர் என்பதைக் கவிஞ்சர் என்கிறார்கள். யார் என்ன சொல்ல இயலும். அதுவும் தமிழ்தான்.
பிஞ்ஞை என்றும் ஒரு சொல்லுண்டு பேரகராதியில். பின்னை என்று பொருள் தரப்பட்டுள்ளது. பின்னை என்றால் நப்பின்னை, புன்னை மரம் அன்று. நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி – கண்ணம்மா! என்று தொடங்கும் பாரதியின் கண்ணம்மா பாடலில்,
பொன்னையே நிகர்த்த மேனி, மின்னையே நிகர்த்த சாயல்
பின்னையே! – நித்ய கன்னியே! கண்ணம்மா!’
என்பார். பின்னையே என்றால் நப்பின்னையே என்று பொருள். திருப்பாவையில், கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா!’ என்றும், நந்த கோபாலன் மருமகளே! நப்பின்னாய்! கந்தம் கமழும் குழலீ! கடை திறவாய்!’ என்றும் ஆண்டாள் பாடுகிறார். நப்பின்னை யார் என்பதில் தர்க்கம் உண்டு. அதனுள் பிரவேசிக்கத் தற்போது நமக்கு உத்தேசம் இல்லை.
கூலவாணியன் மதுரைச் சாத்தனாரின் மணிமேகலையில், சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்கிய காதையில், மாமணி வண்ணனும் தம்முனும் பிஞ்ஞையும் என்கிறார். மணிவண்ணனும் பலராமனும் நப்பின்னையும் என்பது உரை. ஆக நமக்குப் பிஞ்ஞகன், பிஞ்ஞை என இரு சொற்கள் சேகரம்.
நமக்கு உயிரெழுத்துகள் 12 என்றும், ஆய்த எழுத்து ஒன்று என்றும் அறிவோம். மெய்யெழுத்துகள் 18 என்பதறிவோம். உயிர் எழுத்தும் மெய்யெழுத்தும் புணர்ந்து (ஆய்த எழுத்து நீங்கலாக) 12×18=216 உயிர் மெய்யெழுத்துகள் என்று தெரியும். எனவே தமிழ் எழுத்துக்கள் 12+1+18+216 = 247 என்பதைச் சொல்ல வேண்டியது இல்லை. இவற்றுள் வடமொழி வர்க்க எழுத்துக்களை நாம் கூட்டாக்கவில்லை. எழுத்தை உச்சரிப்பதற்கான கால அளவு ஒற்றெழுத்துக்கு அரை மாத்திரை, குறிலுக்கு ஒரு மாத்திரை, நெடிலுக்கு இரு மாத்திரை. இவற்றுள் ஐ, ஔ எனும் இரு எழுத்துக்களும் குறிலாகவும் நெடிலாகவும் பயன்படுத்தப்படும். சொற்களுக்குள் அளபெடை, இடைக்குறை, தொகை, ஆகுபெயர், குற்றியலுகரம், மகரக்குறுக்கம், புணர்ச்சி விதிகள், திரிதல், விகாரம் என எக்கச்சக்கம்.
இவ்வளவு தெளிவாக, தமிழ் பட்டப்படிப்பு, மேற்படிப்பு, புலவர் படிப்பு, ஆய்வுப் படிப்பு, முனைவர் படிப்பு எதுவும் கற்காமல் பேசுகிறோம் என்றால் நமக்கு வாய்த்த தமிழாசிரியர்கள் உண்மையிலேயே ஆசான்கள், குருக்கன்மார். கூலிக்கு மாரடித்தவர் அல்லர்.
இவ்வளவு தெளிவாகப் பேசுதல் எண்ணி நீங்கள் போற்றவும், தூற்றவும் வேண்டாம். இந்தக் கதவடைப்பு  நாள்களில் ஒன்றாம் வகுப்பில் வாசிக்கும் எம் முதற் பேரனுக்குத் தமிழில் ஏற்படும் ஐயமகற்ற என்னைத் தயாரித்துக் கொள்கிறேன். எல்.கே.ஜி. பயிலும் எம் இரண்டாவது பேரன் One standing line, One sleeping line வரைந்து ட எழுதக் கற்றுக் வருகிறான். அவன் எழுதக் கற்றுக்கொண்ட முதல் தமிழ்ச் சொல் படம். பேச்சுத் தமிழ்ச் சொற்கள் ஆயிரம் அவன் கைவசம் இருக்கும். படம் வரைந்து முடிந்து அவன் வரையும் இரண்டாவது தமிழ்ச்சொல் பப்படம். பப்படம் எனும் சொல்லுக்குத் தமிழனுக்கு நாம் பொருள் சொல்ல வேண்டிய நெருக்கடியில் நிற்கிறோம். உலகெங்கும் உள்ள பன்னிரு கோடித் தமிழருக்கும் அப்பளம் தாய்மொழி. பப்படம் வட்டார வழக்கு. என்ன சமூக நீதி இது?
சரி, நிற்க அதற்குத் தக!
உயிர்மெய் எழுத்துக்கள் தொடங்கும் க, ங, ச, ஞ, ட, ண, த, ந, ப, ம, ய, ர, ல, வ, ழ, ள, ற, ன எனும் பதினெட்டில் நான்காவது எழுத்து ஞ. இப்பதினெட்டும் வல்லினம், இடையினம், மெல்லினம் எனப் பிரிவு பெறும். க,,,,,ற – வல்லினம். ங,,,,,ன – மெல்லினம். ய,,,,,ள – இடையினம். என்ன ஆச்சரியம் என்றால், இடையினம் எழுத்துக்கள் ஆறுமே, முதல் வைப்பு முறையில் சேர்ந்தே இருப்பவை. நான் சொல்வது முதலில் சொன்ன க,,,,,ண அடுக்கு. இந்த வல்லினம், இடையினம், மெல்லினம் இன்று ஐம்பது வயதானவர்க்கு மனப்பாடம்.
பழைய தமிழ் சினிமா ஒன்றில் நாயகன் காட்டில் பிறந்த நாயகிக்கு தமிழ் போதிப்பான். காதல் செய்வதற்கும் காமம் துய்த்தலுக்கும் எதற்குத் தமிழ் சொல்லிக் கொடுத்தான் என்பது தனிக்கேள்வி. நாயகன் காமம் துய்ப்பதற்கான யத்தனமாகப் பாடிய பாடலின் முதல் வரி, அன்று ஊமைப் பெண்ணல்லோ!’. அந்தப் பாடலில் நாயகன் சொல்வதை நாயகி திருப்பிச் சொல்வாள் தத்தை மொழியில். கசடதபற வல்லினமாம்,  யரலவழள இடையினமாம்,  ஙஞணநமன மெல்லினமாம்….’ என்று.
தத்தம் தாயர் கற்புடையவள் என்று சினிமாக்காரன் சொன்னால் மட்டுமே நம்புவான் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளுடன் முன் தோன்றிய மூத்தகுடித் தமிழன்.
தமிழில் ட,,,,,,,ன எனும் எழுத்துக்கள் மொழி முதலில் வாரா. அதாவது இந்த எழுத்துக்கள் கொண்டு சொல் ஆரம்பிக்காது. உடனே லயம், ராமன், டம்பம் இல்லையா என்பீர்கள். இலயம் என்றும், இராமன் என்றும், அரம்பை என்றும், இரதி என்றும் அதனால்தான் எழுதினோம். இன்று அந்த இலக்கணத்தை நழுவவிட்டுப் பிறமொழிச் சொற்களை அப்படியே எழுதத் தொடங்கி விட்டோம்.
இலக்கணம் மொழிக்குள் தரும் தாராளங்களும் ஏராளம். இலக்கணம் கட்டுப்பாடுகள் ஏற்படுத்திக் கவிதையைக் கொல்கிறது என வாதிட்டு, இலக்கணம் மறுத்தும் தளர்த்தும் ஆனபிறகு இன்று கவிதையைக் கொன்று கொண்டிருக்கிறார்கள்.
மொழி முதலில் வாராத மேற்சொன்ன எட்டு எழுத்துக்கள் போலன்றி, மீதமுள்ள பத்து எழுத்துக்களில் ஒன்றான ஞகரம் செல்வாக்குப் பெற்ற எழுத்தாக இருக்கிறது. சொல்லின் முதல் எழுத்தாக  பயன்படுத்தப்பட்ட பல சொற்கள் உண்டு நம்மிடம்.
ஞமலி எனும் சொல்லைக் குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு பயன்படுத்தியுள்ளன, நாய் எனும் பொருளில்.  ஞமலி என்றால் மயில் என்றும் கள் என்றும் பொருள் உள.
ஞமன் என்றொரு சொல் புறநானூற்றில் கிடக்கிறது. சமன்கோல் என்பது பொருள். அதைத்தான் திருக்குறள் சமன் செய்து சீர்தூக்கும் கோல் என்கிறதா?
அகராதிகள் மேலும் சில சொற்கள் தருகின்றன. ஞத்துவம் – அறியும் தன்மை, ஞமகண்டம் – யமகண்டம், ஞமர்தல் – பரத்தல், தங்குதல், முற்றுதல், ஒடிதல், நெரிதல். ஞமன் – யமன், ஞயம் – நயம், ஞரல் – முழங்கு, ஞரிவாளை – சிறு தேக்கு, ஞறா – மயிலின் குரல் என்று.
ஞாண் என்றொரு சொல்லை அகநானூறும் புறநானூறும் பயன்படுத்தியுள்ளன. ஞாண் என்றால் நாண், கயிறு. ஞாய் என்றொரு சொல்லை ஐங்குறுநூறும் குறுந்தொகையும் ஆள்கின்றன. ஞாய் எனில் உன் தாய். யாயும் ஞாயும் யாராகியரோ? எனும் செம்புலப்பெயல் நீரார் பாடல் அறிந்திருப்போம். ஞாயர் என்றொரு சொல் கலித்தொகையில் கிடக்கிறது. ஞாயர் எனில் தாயர், தாய்மார்கள் என்பது அறிக.
ஞாயிறு என்ற சொல்லைப் பல இலக்கியங்கள் பயன்படுத்தி உள்ளன. பகலவன், சூரியன், அருணன், கதிரவன் என்பது பொருள். சிலப்பதிகாரத்தின் ஞாயிறு போற்றுதும் மிகவும் பிரபலம்.
ஞாலம் என்பது நம் புழக்கத்திலுள்ள சொல். அகநானூறும் ஐங்குறுநூறும் பயன்படுத்துகின்றன. திருக்குறளில் பத்துப் பாக்களில் ஞாலம் வருகிறது. ஞாலம் எனில் உலகம், பூமி. மாயவித்தை என்றும் பொருள் கூறப்பட்டுள்ளது.
காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது’
என்பது செய்ந்நன்றி அறிதல் அதிகாரத்துக் குறள். ஞால் என்றால் நாலுதல், தொங்குதல். திருக்குறளில் ஞாட்பு என்றொரு சொல்லும் உண்டு, களவியல் அதிகாரத்தில். 1088-வது குறள். ஞாட்பு எனில் போர், போர்க்களம், படை, கூட்டம், சனம், வன்மை. ஞான்று என்றொரு சொல் காணலாம் குறளில். காலத்தில் என்று பொருள். எஞ்ஞான்றும் என்று வரும். நான் அடிக்கடி எழுதி இருக்கிறேன், எக்காலத்திலும் எனும் பொருளில்.
ஞாய் என்றால் தாய் என்று கண்டோம். கலித்தொகை ஞாயை என்கிறது, உன் தாயை என்று குறிக்க. ஞாழல் என்றொரு சொல் பார்க்கிறோம் குறுந்தொகையிலும் நற்றிணையிலும். ஞாழல் எனும் சொல்லின் பொருள் புலிநகக் கொன்றை, Tiger claw tree, மயில் கொன்றை, பொன்னாவாரை, கோங்கு, ஒருவகைக் கொடி, குங்குமம், மரவயிரம், ஆண்மரம் என்கின்றன அகராதிகள். ஞாழ் என்றால் யாழ் என்றும் பொருள் தருகிறார்கள்.
ஞமலியை, நாயைக் குறிக்க அகநானூறு ஞாளி என்ற சொல் பயன்படுத்தியுள்ளது. ஞாடு – நாடு, ஞாதா – ஞானவான், ஞாதி – தாயாதி, சுற்றம், நாதி என்ற பொருளில் சொற்கள் கிடைக்கின்றன. நாஞ்சில் என்றால் கலப்பை, மதில் உறுப்பு, நாஞ்சில்நாடு. நாஞ்சிலை ஞாஞ்சில் என்னும் குறிப்பும் உண்டு. இன்றும் நாம் பயன்படுத்தும் சொற்கள் ஞாபகம் – நினைவு, ஞாபகார்த்தம் – நினைவு என்பன. நியாயம் என்ற சொல்லுக்கு மாற்றாக ஞாயம் எனும் சொல் வழக்கில் உண்டு.
ஞிணம் என்றொரு சொல் பெய்யப்பட்டுள்ளது புறநானூற்றில். கொழுப்பான தசை என்பது பொருள். ஞிமிறு எனும் சொல்லை அகநானூறும் புறநானூறும் ஆண்டுள்ளன. வண்டு என்பது பொருள். ஞிலம் என்கிறது வீரத்தைப் புறநானூறு. ஞெகிழ் எனும் சொல்லைக் குறுந்தொகை, நற்றிணை, ஐங்குறுநூறு பயன்படுத்துகின்றன. நெகிழ்ந்த என்ற பொருள் தரப்பட்டுள்ளது. பிளாஸ்டிக்கைக் குறிக்கவும் இன்று ஞெகிழி, ஞெகிழிப்பை எனும் சொற்கள் புழக்கத்தில் உள்ளன. ஆனால் ஞெகிழி எனும் சொல்லைக் குறுந்தொகையும் நற்றிணையும் தீ, எரி, நெருப்பு, தழல், அனல், கனல் எனும் பொருளிலும் ஆண்டிருக்கின்றன. ஞெண்டு என்றால் நண்டு, ஆதாரம் அகநானூறு.
ஞெமை என்பதை ஒருவகை மரமாகக் குறித்துள்ளன அகநானூறும் குறுந்தொகையும். ஞெலி என்றாலும் தீ எனத் தெரிகிறது அகநானூறு புறநானூறு மூலமாக. ஞெள்ளல் என்பதைத் தெரு எனும் பொருளில் கையாண்டுள்ளன அகநானூறும் புறநானூறும். சோர்வு, குற்றம் எனவும் பொருளுண்டு.
என்னால் இலக்கியச் சான்று கண்டெடுக்க இயலாத, ஞ இன எழுத்தில் தொடங்கும் பல சொற்கள் உண்டு. ஞானக்கண், ஞானக்கூத்தன், ஞானப்பிரகாசம், ஞான சரீரம், ஞான சூரியன், ஞானசூனியம், ஞானத் தந்தை, ஞான திருட்டி, ஞானப்பல், ஞானப்பிள்ளை, ஞான புத்திரி, ஞானஸ்நானம், ஞான பிதா, ஞான புத்திரன் எனப் பல.
ஞான சபை என்பர் சிற்சபையை. ஞானசம்பந்தன் ஞானப்பால் உண்டவன். ஞானம் என்றால் அறிவு என்பது மிதமான பொருள். எனக்குத் தோன்றுவது, ஞானம் என்பது அறிவுக்கும் மேலே. ஞானி, மெய்ஞ்ஞானி, அஞ்ஞானி, ஞான மார்க்கம் எனப்பல பிரயோகம் உண்டு. ஞானம் என்பது இறைக்கு நெருக்கமான சொல் என்பது என் புரிதல். ஞான்ற எனில் நான்ற, தொங்கிய என்பது பொருள். காரைக்காலம்மை அற்புதத் திருவந்தாதியில், ஞான்ற குழற் சடைகள் பொன்வரை போல் மின்னுவன என்பார்.
மேலும் சில சொற்கள்.
ஞாழல் மாது – ஊமத்தை, ஞாழி – வள்ளை, ஞாளம் – பூந்தண்டு, ஞாளியூர்தி – வைரவன், ஞாற்று – தொங்க விடு, ஞாறுதல் – நாறுதல், மணம் வீசுதல், ஞெலுவன் – தோழன், ஞெள்ளை – நாய், ஞெளிர் – ஒளி, ஞேயம் – நேயம், கடவுள், ஞேயர் – நேயர், நண்பர் சாதாரணமாக அன்றாடம் நாம் புழங்குகிறோம், நைநை என்கிறான் என்று. அதனை ஞைஞை என்கிறான் என்றும் கூறுவதுண்டு. ஞொன்குதல் என்றொரு சொல் கண்டேன் பேரகராதியில். பொருள் சோம்புதல், அஞ்சுதல், அலைதல், குலைதல்.
இச்சொற்களை எழுதிவரும்போது எமக்கொன்று தெளிவாகிறது. மக்கள் நாவில் சில சந்தர்ப்பங்களில் ந, ஞ மயக்கம் உண்டு என்று. எவ்வாறாயினும் மக்கள் புழங்கும் ஒலிக்குறிப்புகள்தாமே சொல்லாக உருவெடுக்கிறது! எமக்கு அறிமுகமில்லாத சொற்கள் யாவும் வட்டார வழக்கென்றோ, மக்கள் கொச்சை என்றோ வரையறுக்கவோ, ஒதுக்கி நிறுத்தவோ இயலுமா?
சொல்லின் முதலெழுத்துக்கு அடுத்த இடத்தில் ஞகர ஒற்று, அதாவது ஞ் எனும் ஒற்றெழுத்து கனம்பப் பயன்படுத்தப்பட்டுள்ளன. சாதாரணமாக இன்று பயன்பாட்டில் இருக்கும் சொற்கள் தவிர்த்துச் சில சொற்களைப் பட்டியலிட பிரயத்தனப்படுகிறேன்.
அஞ்சுகம் – கிளி
அஞ்சம் – அன்னம், Swan
அஞ்சல் – சோம்பு, தபால்
அஞ்சலி – வவ்வால், Bat, காட்டுப்பலா
அஞ்சன் – பிரமன்
அஞ்சனம் – கண்மை, இருள், கருநிறம், நீலக்கல், குற்றம்
அஞ்சனாவதி – வடகீழ்த்திசைப் பெண்யானை
அஞ்சனி – நாணல்
அஞ்சி – அதியமான், தகடூர் மன்னன்
அஞன் – அறிவில்லாதவன்
குஞ்சி – ஆணின் தலைமயிர், குடுமி, யானை, மயில் கொண்டை
கிஞ்சுகம் – கிளியின் முள்முருக்க மலர்போல் சிவந்த வாய்
குஞ்சரம் – யானை, கருங்குவளை
ஒஞ்சி – முலை
கஞ்சகம் – கறிவேம்பு, அரைக்கச்சை அல்லது மார்க்கச்சை முடிச்சு
கஞ்சம் – அப்பம், கஞ்சா, துளசி, வெண்கலம், கைத்தாளம், வஞ்சனை, பாத்திரம், தாமரை
கஞ்சன் – பிரம்மன், கம்சன், உலோபி, நொண்டி, குறளன்
கஞ்சனம் – கைத்தாளம், கண்ணாடி, வலியன், கரிக்குருவி
கஞ்சாங்கோரை- நாய்த்துளசி, திருநீற்றுப் பச்சை
கஞ்சிகை – சிவிகை, பல்லக்கு, குதிரை பூட்டிய தேர்
கஞ்சுகம் – அதிமதுரம், சட்டை, பாம்புச் சட்டை
கஞல் – செறிவு, நெருக்கம், Dense
கஞறம் – நறவம், கள்
காஞ்சனம் – பொன்
காஞ்சனி – மஞ்சள், கோரோசனை
காஞ்சி – ஆற்றுப் பூவரசு, நொய்யல் நதி, செவ்வழிப் பண், நாதாங்கி, காஞ்சி
மாநகரம்
காஞ்சிரம் – எட்டி மரம்
காஞா – பூடு வகை, காயா மரம்
கிஞ்சப்பள்ளி – நாயுருவிச் செடி
கிஞ்சம் – புளி, புளி மா
குஞ்சம் – கூன், குறளை, பூங்கொத்து, குன்றி, நாழி, புளி நரளை, கொய்சகம் – (கொசுவம்)
குஞ்சரி – பெண்யானை, தெய்வயானை
குஞ்சான் – குஞ்சி, குஞ்சாமணி, குழந்தையின் ஆண்குறி
குஞ்சிதபாதம்- நடராசனின் நடமாடத் தூக்கிய பாதம்
கைஞ்ஞானம்- அற்ப அறிவு
கொஞ்சி – காட்டுக் கொஞ்சி, பூவை மரம்
கொஞ்சு – கொஞ்சுதல், இறால் மீன், Prawns
கொஞ்சு நடை- மென்னடை, அன்ன நடை
சஞ்சயனம் – பால் தெளிக்கும் ஈமச் சடங்கு
சஞ்சரிகம் – வண்டு வகை
சஞ்சலை – மின்னல், இலக்குமி, திப்பிலி
சிஞ்சுமாரம் – முதலை
செஞ்சாமிருதம்- மழையுடன் காற்று
துஞ்சுதல் – இறத்தல், துஞ்சல்
புஞ்சம் – திரட்சி, தொகுதி
பஞ்சவர் – பாண்டவர், ஐவர்
பஞ்சுரம் – பாலை நிலப்பண் வகை
பைஞ்சேறு – பசுஞ்சாணம்
மஞ்சன் – மைந்தன்
மஞ்சு – மேகம்
வஞ்சி – கொடி, வஞ்சி மாநகர்
ஞகரம் பயிலும்போது எனக்கேற்பட்ட வியப்பு மற்றும் உவப்பு, சொல்லின் இரண்டாவது எழுத்தாக ஞகர ஒற்று, அதாவது ஞ் எனும் எழுத்து வந்தால் அதன் அடுத்த எழுத்தாகப் பெரும்பாலும் சகரம் அதாவது ச எனும் எழுத்தே வருகிறது. எடுத்துக்காட்டுகள் சில தரலாம். நஞ்சு, நெஞ்சம், மஞ்சள், வஞ்சம், இஞ்சி, ஊஞ்சல், கொஞ்சம், கொஞ்சல், சஞ்சலம், சஞ்சாரம், செஞ்சொல், தீஞ்சொல், நோஞ்சான், பாஞ்சாலம், மஞ்சம், மிஞ்சி, வஞ்சிரம், வாஞ்சை, விஞ்சுதல், வெஞ்சுடர் என. அதாவது சொல்லின் இரண்டாவதாக ஞ் வந்தபிறகு, க,,,,,,,,,,,,,,,ன வரும் சொல்லேதும் தேடியும் கண்டிலனே!
ஆனால், ஞ் எனும் எழுத்துக்குப் பிறகு, ச எழுத்து அல்லாமல் ஞ எனும் எழுத்து வரும் சொற்கள் சில தென்பட்டன.
பிஞ்ஞகன் – சிவன், Destroyer
அஞ்ஞை – தாய்
ஆஞ்ஞை – கட்டளை
ஆஞா – தகப்பன்
ஐஞ்ஞை – அழகு, ஆடு
மஞ்ஞை – மயில்
முஞ்ஞை – ஒருவகைக் கொடி
அஞ்ஞன் – அறிவில்லாதவன்
அஞ்ஞாதம் – அறியப்படாதது
அஞ்ஞானம் – அறியாமை
அஞ்ஞானி – அறிவிலாதவன்
கிஞ்ஞா – ஒரு செடி வகை
பைஞ்ஞிலம் – மக்கள் கூட்டம்
மஞ்ஞைப் பீர்க்கு- மயிலிறகு
முஞ்ஞை – அடகு
மெஞ்ஞலம் – மெய்ந்நலம்
யஞ்ஞம் – யக்ஞம், யாகம்
யஞ்ஞவராகம்- வராக அவதாரம்
யாஞ்ஞவல்கியம்- 108 உபநிடதங்களில் ஒன்று
விஞ்ஞாபனம் – விண்ணப்பம்
விஞ்ஞானம் – அறிவியல்
விஞ்ஞை – விஞ்சை
ஐஞ்ஞீலம் – கற்பூரம், இலவங்கம், சாதிக்காய்
ஐஞ்ஞை – அழகு, ஆடு, அறிவுகேடன்
தஞ்ஞன் – அறிஞன்
எழுதிவரும்போதே, முதல் எழுத்தும் இரண்டாம் எழுத்தும் ஞகரம் வராத சொற்களுக்கு அறிமுகம் ஆனோம். யக்ஞம், அறிஞன் என. மேலும் சொல்லலாம் பொறிஞன், வறிஞன் என. பொழுதிருக்குமானால் மேலும் சற்றுத் தேடலாம். பாரதி சொல்லும் எல்லை ஒன்று இன்மை!’ சொல்லின் ஐந்தாவது, ஆறாவது எழுத்தாக எங்கேனும் வந்திருக்கலாம். கிஞ்சிஞ்ஞத்துவம் என்றொரு சொல் அகப்பட்டது. சிற்றறிவுடைமை என்பது பொருள். கிஞ்சிஞ்ஞம் என்றால் சிற்றறிவு. கிஞ்சிஞ்ஞன் என்றால் சிற்றறிவாளன். சிவான்மா இன்னொரு பொருள். இந்தச் சொற்களை இப்போதுதான் அறிகிறேன். வீடடங்கிக் கிடக்கும் இந்த நாட்களில் நீங்களும் தேடலாம்.
தமிழின் மொத்த எழுத்துக்கள் 247-ல் ஓர் எழுத்தைக்கூட முழுமையாக, சரிவரத் தெரிந்து கொள்ளாத நாம்தான் மொழிப் பெருமைபற்றிப் பக்கம் பக்கமாகக் கதைக்கிறோம். மணிக்கூர் கணக்கில் உரைக்கிறோம். தமக்குத்தாமே ஆள் பிடித்து, காசு அள்ளி விட்டு, சாதி தேர்ந்து பட்டங்கள் வழங்கிக் கொள்கிறோம்.
உலகத்தின் மூத்த மொழி என்றும் முதல் மொழியென்றும் பாராட்டப் பெறுவது சாமான்ய காரியமன்று. பொருள் கொடுத்துப் புத்தகங்கள் எழுதி வாங்குவது போன்று, பெருந்தொகைக்கு ஆய்வடங்கல்கள் எழுதி வாங்குவது போன்று அற்பமான காரியமன்று. எம்மொழியை எண்ண எமக்குக் கர்வமாகிறது. அது வெறுமனே தமிள் வாள்க என்று பிரியாணிப் பொட்டலத்துக்கும் கால்குப்பிக்கும் முட்டியுயர்த்தி முழங்குவதன்று. அல்லது ஊழல் மலிந்த அரசு அலுவலகக் கட்டிடச் சுவர்களில் தமிள் எங்கள் மூச்சு என்று எழுதிப் போடுவது அன்று.
பரிபாடலில் திருமாலைக் குறித்த கடுவன் இளவெயினனார் பாடல் இங்கெனக்குப் பொருத்தமாக நினைவுக்கு வருகிறது.
“நின் வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள;
நின் தண்மையும் சாயலும் திங்கள் உள;
நின் சுரத்தலும் வண்மையும் மாரி உள;
நின் புரத்தலும் நோன்மையும் ஞாலத்து உள;
நின் நாற்றமும் ஒண்மையும் பூவை உள;
நின் தோற்றமும் அகலமும் நீரின் உள;
நின் உருவமும் ஒலியும் ஆகாயத்து உள;
நின் வருதலும் ஒடுக்கமும் மருந்தின் உள”
என்கிறார் புலவர்.
என்ன பொருள்?
உன் ஆற்றலும் விளக்கமும் ஞாயிற்றில் உள்ளன;
உன் குளிர்ச்சியும் அருட்தன்மையும் திங்களில் உள்ளன;
உன் சுரப்பும் கொடையும் மாரியில் உள்ளன;
உன் காப்பும் பொறையும் நிலத்தில் உள்ளன;
உன் மணமும் ஒளியும் பூவில் உள்ளன;
உன் தோற்றமும் ஆழ அகலமும் நீரில் உள்ளன;
உன் உருவமும் ஒலியும் வானத்தில் உள்ளன;
உன் பிறப்பும் ஒடுக்கமும் காற்றில் உள்ளன.
இறைவனைப் போற்றும் பாடல் வரிகள் அல்லவா என நீவிர் வினவக்கூடும். சரிதான்! ஆனால் ரமண மகரிஷி, தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாதய்யரிடம் உறுதிபடச் சொன்னது எமக்கு நினைவுக்கு வருகிறது. ஆமாம், தமிழ் வழிபாடு என்பதே இறைவழிபாடுதான்!
ஆனால் இங்கு வழிபாடு என்பது ஆதாயத்துக்கான விஞ்ஞாபனம் அன்று. நேயம், தோய்வு, தேட்டம், பாவித்தல், பரவசம்.
தண்ணார் தமிழ் பகை அழிக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க! பூங்கழல்கள் வெல்க! கோன் கழல்கள் வெல்க!
08.04.2020
நன்றி: சொல்வனம்
https://solvanam.com/2020/07/12/பிஞ்ஞகன்/

 

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , . Bookmark the permalink.

1 Response to பிஞ்ஞகன்

  1. தனபாக்கியம் சொல்கிறார்:

    சிறப்பானதொரு கட்டுரை மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் இறுதி நிலை அறிந்தபோதுவருத்தம் மேலிட்டது. பாவப்பட்ட என்னிடம் என்ற சொல் பதத்தை படிக்கும்போது நகைக்காமல் அடுத்தவரிக்கு செல்ல இயலவில்லை. பன்னிரு திருமுறைகளையும் நாலாயிர திவ்ய பிரபந்தத்தையும் தவிர்த்து தமிழ் படிப்பது என்பது குறித்த தங்களது சிந்தனை போற்றுதலுக்குரியது . நிறைவாய் பரிபாடல் வரி மிகச்சிறப்பு .சொல்லாழியை முகர்ந்து உணர்ந்து கொண்டேன் .மிக்க நன்றி. வாழ்க வளமுடன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s