
கற்பனவும் இனி அமையும் – நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்
நேர்காணல்: த கண்ணன், வெ.சுரேஷ், அன்பழகன், செந்தில்
நாஞ்சில் நாடன்: நான் காஸ்மோப்பாலிட்டனாகத்தான் யோசிக்கிறேன். ஒரு இந்தியனாத்தான் யோசிக்கிறேன். ஆனா என்னைத் தமிழனா யோசிக்கிறதுக்கு என்னைத் துரத்துறாங்க. ‘இந்தியனா யோசிக்கிறதுல அர்த்தம் இல்லைடா’…இதை என்னுடைய அனுபவங்கள்ல இருந்து பெறுகிறேன். பெனராஸ் இந்து யுனிவர்ஸிட்டில, சாகித்ய அகாதெமியும் இந்திய அரசாங்கத்துடைய கல்ச்சுரல் சென்டரும் நடத்திய அந்த மூணு நாள் கருத்தரங்குல, நான் வீட்டுக்கு வர்றபோது, ‘எப்படி இவனுங்களோடு சேர்ந்து வாழறது. இந்த ஒரு மேலாண்மையோடு அவங்க இருக்கிறபோது.’
சுரேஷ்: அதைப் படிக்கிறப்ப எனக்கு ஒன்னு தோணுதுங்க சார். நீங்க இந்த இடத்துல இப்படி நினைக்கிறீங்க. ஆனா பம்பாய்ல உங்க வாழ்க்கை உங்களை அந்நியப் படுத்தலையே.
நாஞ்சில் நாடன்: ஒரு வகையில அந்நியப்படுத்துச்சு. வடபுலத்தைச் சார்ந்தவங்களுக்கு ஒரு upper handதான் என்னுடைய நாற்பது வயசு அனுபவத்துல நான் உணர்கிறேன். அதற்கு நாமும்தான் காரணம். இங்க சாதாரணமா ரயில்வே ஸ்டேஷன்ல டிக்கெட் வாங்க வரிசைல நிற்கறபோது, ஒரு இந்திக்காரன் நின்னான்னா, நம்ம ஆளே ஒதுங்கி இடம் கொடுக்கிறான். இவனுக்கு ஒரு inferiority complex. இவனுடைய ஸ்கின் காரணமாவோ, அவன் சேட்டான்…எவன்னாலும் சேட்டான் தானே…இருநூறு ரூபா சம்பளத்துக்கு வேலை செய்தாலும் சேட்டான்தான்.
சுரேஷ்: ஆனா நம்ம ஊருக்கு பிகார்ல இருந்து வேலை செய்ய வர்றவங்களப் பார்த்தா நமக்கு அப்படி இல்லையே.
நாஞ்சில் நாடன்: அவங்க ரொம்ப பாவம். பரிதாபதுக்குரியவங்க. பிகார்ல அவங்க living conditionsக்கு கோயமுத்தூரப் பார்த்தா அவங்களுக்கு சிங்கப்பூர். இங்க இருக்கிற வசதிகள், சமாச்சாரம். வாங்கிச் சாப்பிடுகிற ரேஷன் அரிசி, தக்காளி, பருப்பெல்லாம் பார்த்தீங்கன்னா…அங்க அவனுக்கு அஞ்சு ரூபாய்க்கு முடிவெட்டலாம்.
கண்ணன்: நானும் ஜம்ஷெட்பூர்ல அஞ்சு ரூபாய்க்கு வெட்டியிருக்கேன். பாம்பேல பத்துவருஷம் முன்னால வரைக்கும் பத்து பதினைஞ்சு ரூபாய்க்கு வெட்டியிருக்கேன்.
நாஞ்சில் நாடன்: இன்னமும் தமிழநாட்ல பத்து ரூபா டீ. கேரளத்துல பாலக்காடு தாண்டிட்டீங்கன்னா ஆறு ரூபா. கச்சாப் பொருள் விலை. அவனுக்கு எங்கிருந்து எல்லாம் கிடைக்குது. பாலே அவனுக்கு நம்ம நாட்ல இருந்துதான் போகுது. அஸ்கா உலகம் முழுக்க ஒரே விலை. டீத்தூள் ஒரே விலைதான்.
சுரேஷ்: ஒரு ப்ரைவேட் கம்பனிலதான் ரொம்ப நாள் வேலை பார்த்திருக்கீங்க. லைசன்ஸ் பிரச்சனைகளையெல்லாம் சந்திச்சிருக்கீங்க. Post liberalization, நீங்க என்ன நினைக்கறீங்க, இந்தியாவுக்கு அதனால பயன் கிடைச்சிருக்கா.
நாஞ்சில் நாடன்: நான் அந்த அளவு economist இல்லீங்க. பொதுவா இதைப் பற்றிய ஒரு கவனிப்பு உண்டே தவிர, கருத்துச் சொல்ற அளவுக்கு I am not equipped. இது ஒன்னும் நல்லது செய்யலனு தோணுது. என்னவிதமான நன்மையைக் கொண்டுவந்து சேர்த்துனு விமர்சனம் பண்ணிப் பார்த்தா, it has helped a particular section of people. பெரிய அளவில பணம் சம்பாதிக்க அவங்களுக்கு உதவி பண்ணிச்சு. சாதாரண மனுஷனுக்கு அது என்ன வகைல பெனிஃபிட் ஆச்சுனு கேட்டா நெகட்டிவ்வாத்தான் எனக்குத் தோணுது.
சுரேஷ்: ஆனா, கண்ணுல பார்க்கிறபோது, நீங்க 60கள், 70கள்ல வர்றீங்க, நாங்கெல்லாம் 80கள், 90கள்ல் வர்றோம், அப்ப அரசாங்க வேலையைத் தவிர கிட்டத்தட்ட வேலையே இல்ல. இப்ப உங்க மகன் நான் பார்க்கிற என்னுடைய உறவினர்கள் எல்லாம் வேலை கிடைச்சு, முந்தி இருந்தத விட பெட்டரா ஆன மாதிரி ஒரு உணர்வு வருதே.
நாஞ்சில் நாடன்: உண்மைதாங்க. ஒருவகைல அந்த வளர்ச்சி இருக்கு. நான் எப்படிப் பார்க்கறேன்னா, மாசம் பத்தாயிரம் ஒருத்தன் சம்பாதிக்கிறான்னு வச்சுப்போம். விஜயா பதிப்பகத்தில வேலை பார்க்கிற ஒருத்தன். இவன் தன்னுடைய பையன எஞ்சினியரிங் சேர்த்தனும்னா வருஷத்துக்கு ஒரு லட்சம் ரூபா செலவு பண்ணனும். இதுவும் அதனுடைய பயன்தானே. அரசு ஊழியர்கள் ஒருவகையில ஆசிர்வதிக்கப்பட்ட கம்யூனிட்டிங்கிறது எனது அபிப்ராயம். லஞ்சம் வாங்காம, சுத்தமா இருக்கக்கூடிய ஆட்களே ஆசிர்வதிப்பட்டவர்கள்தாம். சாதாரணமா, இன்னிக்கு தமிழ்நாட்டினுடைய கன்டிஷன் என்ன. ஒரு பஸ் டிக்கட் வாங்கக்கூட லஞ்சம் கொடுக்கவேண்டி வந்திருமோங்கிற நிலைமைக்கு நாம போயிட்டிருக்கோம்.
கண்ணன்: அது ஏற்கனவே நடக்குதுங்க. டிக்கெட் வாங்கினா பத்து ரூபா, இல்லைனா அஞ்சு ரூபாங்கிறதெல்லாம் ஏற்கனவே சில இடங்கள்ல பார்த்திருக்கேன்.
நாஞ்சில் நாடன்: இது ரொம்ப சமீப காலத்துல நமக்கு வந்து சேர்ந்திருக்கிற ஒன்று. கல்வியினுடைய காஸ்ட் ரொம்ப பெரிது. நான் 1964ல pre-university சேர்றபோது வருஷத்தினுடைய ஃபீஸ் 128 ருபாய். எங்க அப்பா 128 ரூபாய் கூட இல்லாத விவசாயி. அவரு வட்டிக்குக் கடன் வாங்கி என்னை சேர்த்தார். இப்ப நிலைமை அதைவிட மோசமா இருக்கு. 1லட்சம் ரூபாய் வருஷத்துக்கு ஃபீஸ்னா…
குமரகுருல படிக்கிற, GCT, CIT, PSGல படிக்கிற அந்த மாணவர்கள மாத்திரம் நீங்க கணக்குல எடுத்துட்டுப் பேசக்கூடாது. நான் சமீபத்துல Government Arts collegeக்கு போயிருந்தேன். 5500 மாணவர்கள் படிக்கிறாங்க. 70% மாணவர்கள் part-time job பண்றாங்க. ராத்திரி ஹாஸ்ப்பிட்டல்ஸ் க்ளீன் பண்றாங்க. மால்ஸ்ல வேலை பண்றாங்க. மருந்துக் கடைல வேலை பண்றாங்க. பத்தாயிரம் முதல் பன்னிரண்டாயிரம் வரை அவன் சம்பாதிச்சாத்தான், அவனுக்கு பிஏ இங்கிலிஷோ பிஎஸ்சி ஃபிசிக்ஸோ படிக்க முடியும். அதுல அவன் சேமிச்சு வீட்டுக்கு அனுப்பறான். இதுவும் உலகமயமாக்கல்தான். எனக்கு அந்தப் பையங்களப் பார்க்கும்போது சந்தோஷமா இருந்திச்சு, ‘உன்னைத் தோற்கடிக்க முடியாதுடா’னு சொன்னேன். பொங்கல் விழாவுக்கு அங்க பேசினேன். எதிர்காலம் இவங்க கைலதான் இருக்கு. இவங்கதான் பேப்பர் படிக்கிறாங்க. இவங்கதான் மேகசின்ஸ் படிக்கறாங்க. இவங்கதான் புக் வாசிக்கறாங்க. இவங்கதான் சினிமாவையும் ஓட்றாங்க. ஒரு டைரக்டர் சொல்றாரு எங்கிட்ட, ‘சார் என்படம் அஞ்சு கோடி ரூபா பட்ஜெட். ஒரு வாரம் ஓடினாப் போதுங்க சார். அதைக் காலேஜ் பையங்க பார்த்துப்பாங்க’, அப்படிங்கிறார். உங்களைப்பத்தி என்ன மரியாதை வச்சிருக்காண்டா அவன். நீ ஓட்டிருவே, அஞ்சு கோடி ரூபா அவன் பாக்கெட்ல வந்து விழுந்திரும்ன்ற கணக்கு வைச்சிருக்கான். நீ ஜாக்கிரதையா இருக்கவேண்டாமா. சகல குப்பையையும் நீ எதுக்குப் பார்க்கிற. இன்னும் நான் ஒரு கல்லூரி மாணவன் பத்து ரூபாய்க்கு ரீசார்ஜ் பண்றதைப் பார்க்கறேன். அதனால, குமரகுருவையும் கிருஷ்ணா காலேஜையும் வைச்சுட்டு மதிப்பீடு செய்யமுடியாது. பால் அவனுக்கு என்ன விலை, டூத்பேஸ்ட் என்ன விலை. தேங்காய் என்ன விலை. சாதாரணமா வாழ்க்கையைக் கொண்டு போறது – கீழ்த்தட்டு மக்களுக்கு…கிடைக்கிற பணத்தையெல்லாம் குடிச்சுத் தொலைச்சுறான்னு நினைக்கிறோம். அது ஒரு சின்ன மைனாரிட்டிதான். நம்மூர்ல ஒரு அட்வேன்டேஜ் பார்த்தீங்கன்னா, ஒரு நல்ல வேலைக்காரன் வறுமைல வாடவேண்டிய அவசியமில்ல. கொத்து வேலைக்குப் போறவனுக்கு 700ரூபாய் கிடைக்குது, கையாளுக்கு நானூறு ரூபாய் கிடைக்குது. இன்னிக்கு நம்ப நாட்ல ப்ளம்பர் கிடையாது. எதிர்காலத்துல தையல் கம்யூனிட்டி அழிஞ்சு போயிடும். முன்னாடியெல்லாம் ஒரு பையனுக்குப் படிப்பு வரலைனா, ஒரு டெய்லர்கிட்ட கொண்டுபோய் விடுவாங்க. டீ வாங்கிட்டு வரது, காஜா போடறதுன்னு ஆரம்பிச்சு பத்து வருஷத்துல அவன் ஒரு டெய்லர் ஆயிடுவான். நான் வழக்கமா ஒருத்தர்கிட்ட ராம்நகர்ல தைச்சுகிட்டு இருக்கேன்…அவர் சொல்றாரு – இந்த மாதிரிப் பையன்க என்கிட்ட வந்துசேர்ந்து இருபது வருஷமாச்சு. என் பையன் வளமா இருக்கான். வெளிநாட்ல இருக்கான். நான் ஒரு பழக்கத்துல இந்தத் தொழில் நடத்திட்டிருக்கேன். எதிர்காலத்துல நீங்க ப்ராண்டடுக்குத்தான் போய் வாங்கிப் போடணும். தைச்சுப் போடுகிற சமாச்சாரம் இந்தியாவுல, தமிழ்நாட்ல முடிஞ்சு போயிரும். இப்படி கைத்தொழில் சார்ந்த பல விஷயங்கள் அழிஞ்சு போறதுக்கும் உலகமயமாதல் காரணமா இருக்கு. அவனுக்கு விற்காமப் போனா இருநூத்தம்பது ரூபாய்க்கு ரெண்டு சட்டை தரான். அந்துத் துணி உங்களுடைய தீர்மானம் இல்ல. அந்த துணி எத்தனை வாஷ்க்கு வரும்கிறது தெரியாது. இப்ப கரெக்ட் ஃபிட்டிங்….எந்த ஃபிட்டிங் சீப்பாக் கிடைக்குதோ அதையே வாங்கிப் போட்டுகிட்டு ஃபேஷன்னு சுத்திகிட்டிருக்கான். மெடிக்கல் எக்ஸ்பென்சஸ். சாதாரண வைரல் ஃபீவர் உங்களுக்கு ஐநூறு ரூபாயில்லாம வைத்தியம் பார்க்கமுடியாது. இருபது ஆம்ஃபிசிலின் எழுதறாங்க. நாலு அஞ்சு நாளைக்கு. ஆம்ஃபிசிலினுடைய காஸ்ட் என்ன? டாக்டர் ஃபீஸ விடுங்க. மருந்து விலை என்ன? இதுவும் நம்ம உலகமயமாதல் தானே. என் பையன் எடுத்த எடுப்புல பதினெட்டாயிரம் சம்பாதிக்கப்போறான். நாங்க ரெண்டாயிரம் ரூபா, ஆயிரத்திருனூறு ரூபாயில ஆரம்பிச்சோம். ஆனா அவங்கிட்ட இப்படிக் குடுத்திட்டு இப்படி வாங்கிக்கிறான். அவன் இருக்கிறதுல பெஸ்ட்டுக்குப் போறான். ஒரு ஷூவா, 4500 ரூபா. ஒரு ஷர்ட்டா 2500 ரூபா. இதைத் தொடங்கி வைச்சுட்டோம்னு வையுங்க, அவன் என்னை ஒரு exemplary Indian citizen ஆக்குற முயற்சிலயே இருக்கான். Only this soap, only this paste, அதனுடைய காஸ்ட் என்ன, இந்த பெர்ப்யூம்…ஏன் சார் ஒரு அம்பது வருஷத்துக்கு முன்னாடி பஸ்ல பிராயணம் பண்றபோது எங்க ரிமோட் வில்லேஜ்ல எவனுக்கும் வியர்வை நாற்றம் அடிக்கலை. அவன் எவனும் டியோடரன்ட் தெளிக்கல. பெர்ப்யூம் தெளிக்கல. குளிச்சான். ஒரு நாளைக்கு ரெண்டு வேளை குளிச்சான். இப்ப ஏன் வியர்வை நாறுது? இது உணவுப் பழக்கமா? உண்மையிலயே குளிக்க மாட்டானா? சோப் தேய்க்க மாட்டானா? காஸ்ட்லி சோப் இருக்கத்தானே செய்யுது? உலகமயமாக்கல்ல நாம நிறைய விலை குடுக்கறோம். கொக்க கோலா நமக்கு எதுக்காக? டீயே நமக்கு எதுக்காக? ஒரு முட்டை மூன்றுரூபா தான். முட்டை விலை கூடிப் போயிருச்சுனு சொல்றோம். ஆனா ஒரு நாளைக்கு டீக்காக செலவு பண்ற காசு எவ்வளவு. ஒரு லேபர் , ஒரு கட்டிட வேலை போகுதுனா, சரியா பதினோரு மணிக்கு ஒருத்தன் கைல சமோசா டீயோட வந்துருவான். அஞ்சு பேர் வேலை செஞ்சாலும் சரி, மூணு பேர் வேலை செஞ்சாலும் சரி. மறுபடியும் மூணு மணிக்கு வருவான். இதுசார்ந்து அவனுக்கு ஒரு பிழைப்பு நடக்குதுங்கிறது ஒன்னு. இரண்டாவது, இந்த ப்ரேக் அவனுக்குத் தேவை..இதையும் நாம பழக்கிட்டோமில்லையா. கோயமுத்தூர் மாதிரி பேக்கரி எந்த நகரத்துலயும் கிடையாது.
லிபரலைசேஷன் தந்த இன்னொரு விஷயம்…நீங்க படிக்கிற போது எத்தனை சட்டை பேண்ட் வச்சிருந்தீங்க? மூணு இருக்குமா? இன்னிக்கு எத்தனை வச்சிருக்கீங்க…ஒரு ஐம்பது இருக்காது? இதுக்கான தேவை என்ன? என் பிள்ளைககிட்ட சொல்வேன்..ஒவ்வொரு தீபாவளிக்கும் சட்டை பேண்ட் வாங்கித்தராதீங்க. இருக்க துணிகளையே இன்னும் பத்து வருஷம் போடலாம் – பத்து வருஷம் இருப்போம்கிறதுக்கு ஒரு க்யாரெண்டியும் கிடையாது. ஒரு வேலைக்குப் போற பெண்கிட்ட குறைஞ்சது முன்னூறு சாரீ இருக்கும். இதனுடைய காஸ்ட ஒர்க அவுட் பண்ணிப் பாருங்க. இவ்வளவு கன்ஸூமரிசத்துக்கு நம்மள ஆளாக்குனது யாரு? இத்தனை வகையான சட்னி எதுக்கு சார்? நாலு சட்னி, ஒரு சாம்பாரு, மிளகாப் பொடி வேற ஒரு கிண்ணத்துல வைக்கிறான். ஒவ்வொண்ணும் ஒவ்வொருதடவை தொட்டாலுமே இட்லி தீர்ந்துரும். பாதிக்குப் பாதி வீணாகும். இதுவே நீங்க கேரளத்துக்குள்ள போங்க. ஒரு சட்னி குடுப்பான், ஒரு சாம்பார் குடுப்பான். மூணாவது சட்னி நீங்க அவன்ட்ட கேட்கமுடியாது. கேரளத்துளுள்ள ஆர்ய பவனோ, வேறு எந்த நல்ல ஓட்டலுக்குப் போனாலும், இட்லின்னு சொன்னாலே தட்ல நாலு இட்லி கொண்டுவந்து வைப்பான். அப்புறம் காபியா சாயாவாம்பான். அவ்வளவுதான். ரெண்டு இட்லி சாப்பிட்டுட்டு மசால் தோசையா, ஆனியம் ஊத்தப்பமா, அந்த சாய்ஸே அவன் குடுக்கறதில்லை.
சுரேஷ்: கம்பன் பற்றிப்பேசும் போது நீங்க அதுல தோய்ந்திருக்கீங்க. ஆனா உங்க புனைவுகள்ல சிறுகதைலையோ நாவல்லயோ அதிலிருந்து எதுவும் எழுதில. கான்ஷியசா அவாய்ட் பண்றீங்களா.
நாஞ்சில் நாடன்: கான்ஷியசா அவாய்ட் பண்ணலை. எனக்கு அதுக்குண்டான ஒரு urge கிடைக்கணும். ஒரு இதிகாசத்துல ஒன்னு ரெண்டு பீஸ் எல்லா ரைட்டரும் எழுதியிருக்காங்க. எல்லா மொழிகள்லயும் நடந்திருக்கு. ஐராவதி கார்வே, பி.கே.பாலக்கிருஷணன், எம்.டி.வாசுதேவன் நாயர், நம்ம மொழில எழுதுனவங்க…சகலர்லையும் இதை நீங்க பார்க்க முடியும்…புதுமைப்பித்தன் எழுதியிருக்கார், எம்விவி எழுதியிருக்கார்…புராணக் கதாபாத்திரங்கள வைச்சுட்டு. எனக்கு அப்படித் தோனலை. நான் அதை மறுபடியும் விவரிச்சு ஒரு கதையாச் சொல்றதைவிட பாட்டாச் சொல்றதுலதான் ஈடுபாடு.
சுரேஷ்: அசோகமித்திரன் இதைச் செய்ய வேண்டாம்னே சொல்றார். வெண்முரசு விழாவில் கூட அப்படியான பொருள்ல பேசினார்.
நாஞ்சில் நாடன்: அசோகமித்திரன் சொல்றது தப்புனு நினைக்கிறேன். ஏன்னா, இந்தப் புராணம்…mythனு சொல்லத் துணியலை நான்…இது இந்தியாவுடைய எந்த மாநிலத்துக்காரனுக்கும் சொந்தமானதல்ல. ஒருத்தன் அதை எடுத்து முதல்ல செஞ்சான். வால்மீகியோ வியாசனோ. அவனுடைய பார்வைல, அவனுடைய காலகட்டத்துக்குத் தகுந்த மொழியைப் பயன்படுத்திகிட்டு, அவனுக்கிருந்த வசதிகளைப் பயன்படுத்திகிட்டு, அவன் செஞ்சான். செய்யறதுக்கான ஸ்கோப் இருக்கும்போது எத்தனை பேர் வேணாலும் செய்யலாம். இங்க ஒரு சின்ன பாத்திரத்தை எடுத்துட்டு நானூறு பக்கத்துக்கு எழுதறார் வாசுதேவன் நாயர். இதை அசோகமித்திரன் செய்யாம இருக்கலாம். ஒரு விமர்சகரா அப்படி செய்யறதை விரும்பாம இருக்கலாம். ஆனா அது ஒரு தப்பான, வேண்டாத வேலைனு நான் நினைக்க மாட்டேன். ஏன்னா எல்லா மொழிகளிலும் ராமாயணம் எழுதப்பட்டிருக்கு. ஆதி பாஷையில் இக்கதை செய்தவர் மூவரானவர்ங்கறான் கம்பன். வால்மீகிக்கு முன்னாடியே மூணு பேர் செஞ்சிருக்கான். ஏன் மூணு பேரு செய்யறான். மலையாத்துலே, துஞ்சத்து எழுத்தச்சன் பண்றதுக்கு முன்னாடி ரெண்டு பேர் பண்ணியிருக்கான். கண்ணச பணிக்கர் பிரதர்சுனு சொல்வாங்க, அவங்க பண்ணியிருக்காங்க. நீங்க அப்ப கோபாலகிருஷ்ண பாரதிய எப்படிப் பார்ப்பீங்க? அருணாச்சலக் கவிராயர எப்படிப் பார்ப்பீங்க? கம்பன விட்றுங்க. எல்லாருக்கும் அந்த உரிமை இருக்கு. அது என்னுடைய சுதந்திரம். அருணாச்சலக் கவிராயருடைய ராமாயண நாடகக் கீர்த்தனைகள்ல அவர் ஒரு குறிப்பிட்ட பகுதி மாத்திரம் எடுத்திட்டுப் பார்க்கிறார். கோபாலக்கிருஷ்ண பாரதியார், அவருக்குத் தேவையான, நந்தனார் பண்றார் இல்லையா. கம்பன் எழுதி 1200 வருஷம் ஆயிப் போச்சு. ஒரு மாஸிவ் வொர்க். தமிழ்ல அதுக்கப்புறம் அதுமாதிரியான ஒரு வொர்க்குக்கு தேவை வந்ததா யாரும் நினைக்காம இருக்கலாம். ஆனா, கீமாயணம் எழுதப்பட்டிருக்கு. மூவாயிரம் பாட்டுலயோ இரண்டாயிரத்து ஐநூறு பாட்டுலயோ கீமாயணம் நம்ம மொழியில எழுதப்பட்டிருக்கு. இந்தில துளசிதாஸ் வரைக்கும் ராமாயணம் வந்திருக்கு. துளசிதாஸ் நம்ம குமரகுருபரருடைய contemporary.
சுரேஷ்: பதினேழாம் நூற்றாண்டு.
நாஞ்சில் நாடன்: குமரகுருபரர் தென்தமிழ்நாட்டில பிள்ளைத்தமிழ் பாடி, மீனாட்சியம்மை குறம் பாடி, வடநாட்டுக்குப் போய், வடமொழியைக் கற்பதற்காக சரசுவதியை வேண்டி சகலாவல்லி மாலை பத்துப்பாட்டு பாடி, வடமொழி கற்றுக்கொண்டு, வடமொழியில…நான் கேதார்காட்டுக்குப் போயிருந்தேன்..கேதார்காட் மடம் குமரகுருபரர் நிறுவின மடம். அங்க உட்கார்ந்து ராமாயணம் பிரவசனம் பண்றாரு. கம்ப ராமாயணம். அவரு பிரவசனம் பண்ற சபையில துளசிதாசர் உட்கார்ந்திருக்கான். ஆகவே, துளசியினுடைய ராமாயணத்திலே கம்பனுடைய செல்வாக்கு அதிகம்னு ஒரு ஆய்விருக்கு. கருத்திருமன், 13000 பாட்டிலயும் ஒரு 1000 பாட்டை மட்டும் எடுத்து ஒரு ராமாயணம் பண்றாரு. பி.ஜி.கருத்திருமன். காங்கிரசிலிருந்தவர். ரசிகமணி 3500 பாட்டெடுத்து ராமாயணம் இதுதாங்கிறார். கம்பனுக்குப் பத்தாயிரத்துச் சில்லறை பாட்டுத் தேவையா இருந்திருக்கு. அதுலயும் 1500-2000 பாட்டு அவர் பாடலைனு நாம தள்ளி வைச்சிருக்கோம். ஆனா துரத்துல. ஒவ்வொரு வால்யூமிற்குப் பின்னாடியும் அது இருக்கு. இது எப்படி சாத்தியம்…இப்படிப் பல கேள்விகள் இருக்கு. அசோகமித்திரன் சொன்னது அவருடைய கருத்து. எனக்கு அதுக்கான ஒரு urge வரலை. அசோகமித்திரன் தமிழ் மொழில ஒரு முக்கியமான ரைட்டர். எம்.டி. வாசுதேவன் நாயர் ஒரு மோசமான ரைட்டர் கிடையாது. பி.கே. பாலக்கிருஷ்ணன் ஒரு மோசமான ரைட்டர் கிடையாது. ஏன் புதுமைப்பித்தனுக்கு அகலிகைய எடுத்துத் திரும்ப எழுத வேண்டிய தேவையாயிருந்து. பாரதி ஏன் பாஞ்சாலி சபதம் எழுதறான். 412 பாட்டிலே. ரெண்டே ரெண்டு விஷயந்தான் அவன் எடுத்துகிறான். ஒன்று பெண் விடுதலை. அந்த கான்டெக்ஸ்ட்டில் பெண் விடுதலை பேசுவதற்கான ஒரு முகாந்திரத்துக்கு இந்தப் புராணத்தை அவன் பயன்படுத்திக்கிறான். தன்னையாடித் தோற்றபின் என்னைத் தோற்றாராங்கிறது எவ்வளவு பெரிய கேள்வி. இதையே, ஒரு புத்தகத்துக்கு முன்னுரைக்காக படிச்சிட்டிருக்கேன்…செய்குத்தம்பி பாவலர்னு ஒருத்தர்…1907ல எட்டு கிரிமினல் கேசுனு ஒரு நூல் எழுதியிருக்கார். ஒரு கோர்ட் ப்ரொசிஜர் பாவனைல, திரௌபதி பிரதிவாதிகளாக துச்சாதனன், சகுனி, துரியோதனன், கர்ணன் வரைக்கும் பிரதிவாதியாத் தொகுக்கிற கோர்ட் ப்ரொசீடிங்கசா பண்றாரு. இத மாதிரி எட்டு கேஸ் எழுதறார். சூர்ப்பனகை, திரௌபதி, சீதை, இந்த மாதிரி. இது எல்லாமே literary appreciationகான ஒரு மார்க்கம் தான். இதை யோசனை பண்ணிட்டிருக்கிறபோது எனக்கு என்ன தோணுச்சுன்னா, நம்முடைய முச்சந்தி இலக்கியம், பட்டி மன்றம் இதுக்கெல்லாமே லீட் அங்கிருந்துதான் எடுக்கறாங்க. ஒருகாலத்துல கம்பனாகவும் இளங்கோவாகவும் வேஷங்கட்டி ஆடின காட்சியெல்லாம் தமிழ்நாட்டுல நடந்திருக்கு. இதன் மூலமாக, in good spirit and sense, இலக்கியத்தை மேலும் புரிந்து கொள்வதற்கு இது உங்களுக்கு உபகாரமாக இருக்கும்.
செந்தில்: சார், இதன் தொடர்ச்சியா ரெண்டு கேள்வி. நீங்க பல நூல்களுக்கு முன்னுரை எழுதியிருக்கீங்க. ஆனா விமர்சகரா நீங்க ஏன் அந்த அளவுக்கு எழுதறதில்லை? விமர்சனம் எப்படி இருக்கணும்னு நீங்க வரையறை வைப்பீங்க?
நாஞ்சில் நாடன்: விமர்சகன் வந்துங்க, he is a scholarly person. I am not a scholarly person. நான் ஒரு emotive ஆன ஆள். எனக்குக் கிடைக்கிற இன்சிடென்ட்ஸ் மூலமா நான் கற்றுக்க முயற்சி செய்வேன். விமர்சகன் அறிவார்த்த ரீதியா ஒரு கலையை அணுகறான். சுப்புடுவ நீங்க பாடச் சொல்ல முடியாது. ஆனா பாம்பே ஜெயஷ்ரீயை விமர்சனம் எழுதச்சொல்ல முடியாது. அது வேற brain. வேற வேலை அது. ஒரு விமர்சகனாக ஆகிற முயற்சில நான் இல்லை. I am not equipped. ஆனா முன்னுரை எழுதறதுங்கறது ஒரு appreciation, encouragement தான். அதுல இருக்கிற நல்ல விஷயங்களச் சொல்வோம். ஒரு புக்குக்குள்ள நல்ல விஷயங்களே இல்லாம இருக்கும். புதுசா ஒரு கவிதைத் தொகுப்போ, சிறுகதைத்தொகுப்போ வரும். எழுத வந்திருக்கான், நாலு வார்த்தை நல்லதாச் சொல்வோமே. வேற எங்கயோ சுத்திட்டு வந்து, இவர்கிட்ட இருந்து அடுத்த சிறுகதைத்தொகுப்பை எதிர்பார்க்கிறோம்னுகூட முடிச்சரலாம். ஏன் டிஸ்கரேஜ் பண்ணனும். எழுத வர்ற ஆளே குறைவு. எப்பவுமே அவந்தான் ஓடி அவனை நிரூபிச்சாக வேணும். நீங்க ஒரு நடிகரைக் கூப்பிட்டு ஒரு வெளியீட்டு விழா நடத்தினாவெல்லாம் உங்க எழுத்து நின்றாது. எழுத்த அவன் எழுதித்தான் நிறுத்தணும். இது ஒரு இந்துஸ்தானி பாடகன் ஒரு ராகத்தை நிர்மாணம் செய்றமாதிரி. He has to do it. அவன் உழைக்கணும். இதுக்கு நான் செய்யற வேலையெல்லாம் ஒரு தட்டுதட்டிக் கொடுத்து, ‘பரவால்லப்பா தம்பி, உனக்கு எழுத வருது. கொஞ்சம் ஓடிப்பாரு.’ அவன் ஒரு தொகுப்பிலயே முடிஞ்சு போவான். அல்லது தொடர்ந்து வருவான். இப்படி நூறு பேருக்கு எழுதறபோது, ஒரு ரெண்டு பேர் கிடைக்கமாட்டானா. இது ஒரு வாத்தியார் பிள்ளைகளுக்குச் செய்யற ஒரு அப்ரிஷியேசன் தான். ‘நல்லாப் படிடா, நல்லா உட்கார்ந்து எழுது. உனக்கு எழதவரும்.’ இந்த விதத்துலதான் நாம முன்னுரைகள் எழுதறோம். அதே சமயத்துல,அதுல இருக்கிற தவறுகள் எனக்குத் தெரியும். நான் அதத் தனியாச் சொல்லிருவேன். என்னுடைய மேதைமையையோ என்னுடைய திறனையோ காட்டுறதுக்கு நான் என்னுடைய முன்னுரைகளைப் பயன்படுத்த மாட்டேன். I will never irritate that boy. I will never discourage that fellow. ஆனா, அவனத் தனியாக் கூப்பிட்டு, ‘தம்பி இதெல்லாம் என்ன பண்ணி வைச்சிருக்க. நான் இதை ஒரு சென்டென்சா எழுதிக் காட்டினா இத ஒரு சென்டென்ஸ் இல்லைனு சொல்லமுடியுமா உன்னால. எதுனால இதக் கவிதைனு சொல்ற.’ நீ என்ன படிச்சிருக்க. நீ என்ன படிக்கணும். தனிப்பட்ட முறைல பேசறபோது அவன் ஓரளவு வாங்கிக்குவான். வெளியில போய், இவன் பெரிய புடுங்கினு, சொல்லிட்டுப் போனாக்கூடப் போவான். ஆனா இதை எழுத்துல சொல்லிட்டீங்கன்னா, நாம அவன நிரந்தரமா டிஸ்கரேஜ் பண்றோம். ரெண்டாவது அவனும் எனக்கு ஆயுசு முழுக்க ஒரு பகைவனா மாறிடறான். இது எனக்கு எதுக்கு? இதுல இருந்து தப்பிக்க முடியாது. மூத்த எழுத்தாளர்கள் எனக்குக் கொடுத்த அறிவுரை, ‘யாராவது உங்கிட்ட வந்தா, நீ படிச்சுப்பாரு. ஒரு கேர் அண்ட் கன்சர்னோட படிச்சுப்பாரு. முடிஞ்சா நாலு வார்த்தை நல்லதாச் சொல்லு.’
அன்பழகன்: கண்மணி குணசேகரன் நெடுஞ்சாலைக்கு நீங்க முன்னுரை எழுதியிருக்கீங்க.
நாஞ்சில் நாடன்: ஆமா.
அன்பழகன்: அது நல்ல நாவல். ஆனா தனியாக்கூப்பிட்டு ஏதாவது சொன்னீங்களா.
நாஞ்சில் நாடன்: நான் வந்தாரங்குடி நாவலுக்கு முன்னுரை எழுதலை. ஆனா, படிச்சிட்டேன். என்னுடைய கருத்துக்காக கண்மணி காத்திருந்தான். நான் கண்மணியைக் கூப்பிட்டு முக்கா மணிநேரம் பேசினேன். ‘நீ பாமக உறுப்பினரா இருக்கலாம், இல்லாம இருக்கலாம். தொழிற்சங்க உறுப்பினரா இருக்கலாம், இல்லாம இருக்கலாம். உன்னுடைய படைப்புல அது interfere ஆகாமப் பார்த்துக்கோ.’ இந்தத் தப்பத்தான் நம்ம இடதுசாரிகள் அத்தனைபேரும் செஞ்சாங்க. மேலாண்மை பொன்னுசாமில இருந்து, தமிழ்ச்செல்வன்ல இருந்து எல்லாரும் இதைத்தான் பண்றாங்க. இன்னொன்னு, ஒரு பார்ட்டியுடைய ரோலை நீ பேசறபோது, அந்த பர்டிக்குலர் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் இஷ்யூல, மார்க்சிஸ்டுகளின் பெரிய ரோல் ஒன்னு அங்க இருக்கு. அதை நீ சுத்தமா மறைக்கிற. இது ஒரு நேர்மையற்ற செயல். இதை நீ செய்யக்கூடாது.
பொன்னியின் செல்வனைத் தொடர்ந்து இன்னொரு அஞ்சு நாவல் எழுதப்பட்டது. வரலாற்று நாவல்கள். நான் வேறொரு நண்பருக்காக கோஸ்ட் ரைட்டிங் எழுதிக்கொடுத்தேன். எம்பேர்ல வர்றல. ஏன்னா அவருக்கு, நிறைய ஆப்ளிகேஷன். படிக்க நேரமில்லை. எழுதவும் வராது. ‘நாஞ்சில் இதப்படிச்சிட்டு’…எழுதிக்கொடுத்தேன். இதை ஒரு நட்புக்காக செய்யறதுன்னு வையுங்க. அப்புறம் அவரைக் கூப்பிட்டு சொன்னேன். பொன்னியின் செல்வன் நடக்கிற காலம் ராஜராஜ சோழன் காலம். அதைத்தொடர்ந்து வருகிற இன்னொரு நாவல். இந்த மாவட்ட அதிகாரி என்கிற சொல் தமிழுக்கு வந்து அறுபது வருஷம்தான் ஆச்சு. 1200 வருஷத்துக்கு முன்னாடி இந்த சொல்லே கிடையாது. நீங்க அந்த காலகட்டத்தச் சொல்லுகிற போது, அந்தச் சொல்லை யோசிச்சுப் பயன்படுத்தணும். நீங்க சொல்லுங்க தயவுசெய்து அவர்கிட்ட. இது take it easyஆ போற விஷயம் இல்ல.
பாலாவுடைய பரதேசி படத்துல, கோழி மேய்ந்து கொண்டிருந்தான்னு நான்தான் எழுதறேன். அவன் ஆறு வைட் லகான் கோழியப் புடிச்சுக் கொண்டுவந்து விட்டுட்டான். செழியன் எனக்கு நல்ல நண்பர். பாலா பிசியாயிருந்தாலும் சரி, ‘செழியன் வைட் லகான் 1960ல தான வருது. இந்த கதை 1939லயில்ல. முடிஞ்சா நாட்டுக்கோழிய விடுங்க. இல்லைனா கோழியே விடாதீங்க.’ இதை நாம தனிப்பட்ட முறைல சொல்லிடுவோம். ஒரு பிள்ளை, நல்லா எழுதக்கூடியவங்கதான். மூன்று சிறுகதைத்தொகுப்பு வந்திருக்கு. எனக்கு அவங்க சிறுகதை பிடிக்கவும் செய்யும். அந்தம்மா, வேம்ப மரம் பூக்கற மாசத்தப் புரட்டாசியோ ஆவணியோ சொல்றாங்க. நான் தனியா போன் பண்ணி, ‘புரட்டாசில ஒருபோதும் வேம்பு பூக்காது. நீ விரும்பினாக்கூட அது பூக்காது.’ இந்தத் தகவல், ஃபிக்சனுக்காகச் சொன்னாக்கூட அதுல தவறுவரக்கூடாது. இந்த மாதிரியான குறிப்புகளைச் சொல்கிறபோது, எப்படி வேப்ப மரத்தில் மாம்பழம் காய்க்காதோ, அதுமாதிரி அது பங்குனில தான் பூக்கும். ஆனி, ஆடில பழம் உதிறும். சித்திரைல, சித்திரை விஷூல, சில கம்யூனிட்டிக்காரங்க வேப்பம்பூவும் வெல்லமும் பிராசதமாகவே கொடுக்கறாங்க. இது அறியாம வரக்கூடிய பிழையாக்கூட நாம எடுத்துக்கலாம். ஆனா ஒரு எழுத்தாளர் இதையெல்லாம் பொருட்படுத்தணும். இந்த மாதிரி தகவல் சொல்றபோது, இதுல பிழை வரக்கூடாதுன்னு. வரலாற்றுச் சம்பந்தமாப் பேசறபோது, இது நாவல்தானே, சிறுகதைதானேனு நினைச்சுட்டு you can’t escape – வரலாற்று விஷயங்களப் பேசுகிற போது, தட்பவெட்ப நிலையைப் பேசுகிற போது, பூகோளம் பேசுகிற போது.
சாண்டில்யன் நம்ம மதிப்பீட்ல சாதாரணமான ஒரு எழுத்தாளரா இருந்தாலும் – நான், ஜெயமோகன், வசந்தகுமார், மதுரைலயிருந்து ஒரு நண்பர், நாலு பேரும், சிவாஜி கோட்டைகளப் பார்த்துட்டுத் திரும்பி வந்துகிட்டு இருக்கோம். நாங்க பாம்பேல இருந்து போகிற போது – வாதாபி கோட்டைகளையெல்லாம் பார்த்துட்டு, பந்தர்பூர் போயி, என் தம்பி நியூ பாம்பேல இருக்கான் – அவங்கிட்ட தங்கிட்டு திரும்பி வருகிற வழியில – ராய்காடு பார்த்துட்டு, ரத்னகிரி ஃபோர்ட் பார்த்துட்டு, கனோஜி ஆங்க்ரே வரார் இல்ல, அந்த கொலாபா ஃபோர்ட் பார்க்கிறோம். அந்த ஃபோர்ட் பார்க்கிற போது – இவருடைய வர்ணனை நான் படிச்சு முப்பத்தைஞ்சு நாற்பது வருஷம் இருக்குங்க…அந்த மனுஷன் சொன்ன தகவல்கள்ல எந்தப் பிழையும் கிடையாது. குமுதத்துக்குத்தானே எழுதறோம். ஜலதீபமோ ஏதோ ஒன்னு, குமுதம் வாசகனுக்கு இது போதாதா…அப்படி அல்ல அது.
சுரேஷ்: டாவின்சி கோட்ல, புக்கோட அட்டையிலயே, ‘லோவர் ம்யூசியத்தப் பற்றிக் கொடுத்திருக்கிற அளவுகள் எல்லாம் உண்மையானவை சோதித்துப் பார்த்துக்கொள்ளுங்கள்’னு போடறாங்க.
நாஞ்சில் நாடன்: அந்தக் கோட்டை – நாங்க லோ டைட்ல போறோம். நாங்க திரும்பி வர்றபோது ஹை டைட் வந்திருது. ஹை டைட்னா இவ்வளவு உயரம். அப்ப நமக்கு சாண்டில்யன் ஞாபகத்துக்கு வர்றார். அந்த ஹை டைட், லோ டைட்ஐப் பயன்படுத்தி, அந்தக் கோட்டை வெற்றி கொள்ளப்படாத கோட்டை. இங்கிலீஷ்காரனால ஜெயிக்கமுடியாத கோட்டை. அதுக்குக் காரணம் அந்த டைட்ஸ். அதெல்லாம் கரெக்டா ஸ்டடி பண்ணிச் சொல்றாரு. நினைவுல படம்மாதிரி சாண்டில்யன் எழுதினது இருந்ததால…நான் விரும்பிப் படிச்சேன் ஒரு காலத்துல…நமக்கு ஒரு ரைட்டரா அவர்மீது மரியாதை இருக்கோ இல்லையோ, எந்தத் தகவலும் பொய்யான தகவல்னு சொல்லமுடியாது. இந்த கமிட்மென்ட் ஒரு ரைட்டருக்கு வேணும். அவஞ்சொல்றாங்கறுக்காக, அது ஃபிக்சன்கிறதுக்காக சூரியன் மேற்க உதிக்காது. கிழக்கதான் உதிக்கும். இந்த சமயத்துல இந்தக் காற்றுதான் அடிக்கும். கடல் பற்றி இப்ப ஜோ டி க்ரூஸ் எழுதறார்னா, கடல் காற்று பற்றி எழுதறார்னா, ரிசர்ச் பண்ணித்தான் எழுதறார். அந்தக் காற்றடிக்கிறபோதுதான் அந்த மீன் படும். மீன்பாடுன்னு சொல்வோம். எல்லா காலத்துலயும் சால கிடைக்காது. எல்லாக் காலத்துலயும் அயில கிடைக்காது. அதுக்கான காலகட்டங்கள் இருக்கு. அபூர்வமாக் கிடைக்கும். ஆனா பெருவாரியாக் கிடைக்காது. சாகரைன்னு சொல்வாங்க மலையாளத்துல. அது படுவதற்கான காலமிருக்கு, சீதோஷ்ன நிலைகளிருக்கு. காற்றினுடைய போக்கு இருக்கு. நீரோட்டங்களினுடைய போக்கு இருக்கு. சும்மா நெட்லயிருந்து விஷயங்களத் தரவிறக்கம் பண்ணிட்டு, ஒரு நாவல் எழுதப்போனா நாம அகப்பட்டுக்கிடுவம். ஒரு முக்கியமான நாவலாசிரியர்…நான் அடிக்கடி நவசாரி போறவன்…நவசாரில இருந்து இருவது கிலோமீட்டர் டண்டி (Dandi)..நாம தண்டின்னு படிக்கிறோம்…ஏக்சுவலா அது டண்டி. உப்பு சத்தியாகிரகம் நடந்த இடம். நம்ம தோழர் ஒருத்தர் எழுதறார். அகமதாபாத்ல இருந்து தண்டி 240 கிலோமீட்டர். இதச் சொன்னவுடனே, நான் முப்பது முறை நவசாரி போயிருக்கேன். இருவது முறை டண்டி போயிருக்கேன். என்னுடைய ஓனர்ஸ் கூட்டிட்டுப் போவாங்க. எனக்குத் தெரியுது இவன் ப்ரோச்சர் பார்த்துத்தான் எழுதியிருக்கான். குஜராத் சுற்றுலா ப்ரோச்சர் எங்கயோ கிடைச்சிருக்கும். It is 240 kms from Ahmedabad airportம்பான் அவன். நீங்க கோயமுத்தூர்ல இருக்கீங்க. மதுரை போகணும். சென்னைல இருந்து தூரம் சொல்ல மாட்டீங்க, இல்லையா. இங்கிருந்து மதுரை 230 km via Pollachi, 210 km via Dharapuram. நீங்க அந்த இடத்துக்கே போகாம, ஒரு ப்ரோச்சரை வைச்சுட்டு, சில அணுமானங்கள் செய்து…atleast ஒரு மேப்பையாவது முன்னாடி வச்சிக்கிடணும். நான் ஒரு பத்து ரயில்வே அட்டவணைகள் வச்சிருக்கேன். ஏன்னா மறந்துபோகும். உண்மைலயே பயணம் பண்ணியிருந்தாலும், இந்த ஊருக்குப் போயிருக்கேன், அடுத்த ஸ்டேஷன் எனக்கு ஞாபகத்துக்கு வரமாட்டேங்குதுனா, உடனே, ஃபாலோ பண்ணிப் போயிடுவேன் பென்சில்ல.
சுரேஷ்: சார், சதுரங்கக் குதிரைலயும், எட்டுத்திக்கும் மதயானைலயும் அந்த ரூட் வருதில்லையா, பாம்பே போன நண்பர்களெல்லாம் சொன்னாங்க..ரொம்ப accurate. எந்த ஸ்டேசன்ல சிக்கி (chikki) கிடைக்கிறது அது எல்லாம் துல்லியமா இருக்கு.
நாஞ்சில் நாடன்: இப்ப நான் சொன்ன கம்பன் பாட்டு எனக்கு மனப்பாடமா இருந்தாக்கூட, இதை நான் எழுதுகிறபோது, ஒருதரம் புத்தகத்தில் சரிபார்த்துத்தான் எழுதுவேன். அதுல பிழை வந்துரக் கூடாதுன்னு நினைக்கிறேன். ஔவையாரோட பாட்டுல, இல்லானை இல்லாளும் வேண்டாள், மற்றீன்றெடுத்த தாய்வேண்டாள், செல்லாது அவன் வாய்ச்சொல்.
சுரேஷ்: பாட்டில் பிழை வந்தால், அம்பாளே நேர்ல வந்து அந்தப் பிழைய மெய்யாக்கிடரா இல்லையா?
நாஞ்சில் நாடன்: ஆமா
சுரேஷ்: காளிதாசனுக்கும் அது நடந்திருக்குதானே?
நாஞ்சில் நாடன்: சோழர் சபைலே, மன்னர்கள் எல்லாம் பெரிய சிவாஜி கணேசன் படத்தில வர்ற மன்னர்கள் மாதிரி இருந்திருக்க மாட்டாங்க. இத மாதிரி ஒரு வீட்லதான் இருந்திருப்பான். நானே ஒரு மன்னன்தான். இப்ப ஐயப்பனுடைய ஆபரணங்கள் போகுதில்லையா, பந்தளத்திலிருந்து சபரிமலைக்கு. இந்த பந்தளம் வீடு இதைவிட ஒரு அரைபங்கு பெரிசா இருக்கும். ரெண்டு மாடியா இருக்கும். பந்தளத்துல ராஜா. அவன் என்ன சோறு தின்னுறுப்பான். பெரும்பாலும் கம்பங்கூழ்தான் சார் குடிச்சிருப்பான். கம்பன், அவன் மகன் அம்பிகாபதி, சோழ மன்னன் எல்லாம் உட்கார்ந்து சாப்பிடறாங்க. அவ பரிமார்றா…அமராவதியா. பரிமார்றபோது, இட்ட அடிநோவ, எடுத்தஅடி கொப்பளிக்க, வட்டில் சுமந்து மருங்கு அசையங்கிறான் அம்பிகாபதி. சோழ மன்னனுக்கு ஒரு கண்ணு, இந்த பையன் தப்பான பாதைல போயிட்டிருக்கான். அதை டெஸ்ட் பண்ணறதுக்காகத்தான் அந்த விருந்தே. கம்பன் வித்தக்காரன் இல்லையா, உடனே அவன் கொட்டிக் கிழங்கோ கிழங்கென்று கூறுவாள் நாவில் வழங்கோசை வையம் பெறும்னு அவன் முடிக்கிறான். உடனே சோழ மன்னன் கேட்கிறான், கொட்டிக் கிழங்குங்கிறது குளம் வத்தினபிறகு பிடுங்கக்கூடிய கிழங்கு. ஏழு தண்ணி மாத்தியமைச்சாத்தான் அந்தக் கிழங்கே சாப்பிடமுடியும். அது ரொம்ப அர்த்தமான கிழங்கு. கொட்டிக்கிழங்கு விற்கிற அளவுக்கு நாட்ல பஞ்சமா. என்ன கதையடிக்கிறேனு சொன்னவுடன, கூட இருந்த மந்திரிய அனுப்பிச்சு யாரு கொட்டிக் கிழங்கு வித்துட்டுப்போறா பாருன்னான். போனா, அங்க ஒரு பொம்பள கொட்டிக்கிழங்கு தலைல கூடை வைச்சு வித்துட்டுப்போறா. கம்பனுக்காக சரசுவதி ஸ்பெசல் அப்பியரன்ஸ் அப்படினு தனிப்பாடல்ல செய்தி இருக்கு.
சுரேஷ்: படத்திலயும் அந்த சீன் வைச்சிருப்பாங்க.
நாஞ்சில் நாடன்: ஆனா அந்த செய்யுளுடைய தமிழ் இருக்கு பாருங்க, கதை எளிமையா நமக்குப் புரிய வைக்கறதுக்காக எழுதினது…இட்ட அடி நோக – வைச்ச அடி நோகுது; எடுத்த அடி கொப்பளிக்க – அவ்வளவு வெயில் தகிக்குது. கால் பொத்துப்போற அளவு வெயிலு. வட்டில் சுமந்து மருங்கு அசைய – அவளுடைய மென்மையான பாதங்களச் சொல்றான். மருங்குன்னா இடுப்பு, வட்டில்னா சோறு போற வட்டில். இவன், கொட்டிக் கிழங்கோ கிழங்கு – எங்க வாத்தியார் சொல்வார் – கொட்டிக் கிழங்கோஓஓஓ கிழங்ங்கு. தெருவில கூவிட்டுப் போறவ சொல்வா இல்லையா…மல்லீப்பூஊஊ, வாழத்தண்டு வாழப்பூவேஏஏ…கிழங்ங்கோஓஓ கிழங்கென்று கூறுவாள் நாவில் வழங்கோசை வையம் பெறும். இது மொழியில உங்களுக்கு கன்ட்ரோல் இல்லைனா வராது. மொழின் மீதிருக்கக்கூடிய கன்ட்ரோல் போயட்டுக்குத்தான் வேணும்னு அவசியமில்லை. எல்லா ரைட்டருக்கும் வேணும். கவிதைங்கறது அதனுடைய உச்சம்தானேதவிர சிறுகதை எழுத்தாளனோ, ப்ரோஸ் ரைட்டரோ is no way lower than a poet. அவன் ரொம்ப crystalize பண்ணித்தாரான். செறிவாத் தாரான். காலங்கடந்து நிற்கிற ஒரு வடிவத்துல தாரான். அது அவனுக்குப் பெருமை. ஆனா இந்த வடிவத்தை எல்லாம் நாம தொலைச்சாச்சு. இப்ப எந்த வடிவத்துலயும் காலம் கடந்து நிற்கிற மாதிரி கவிதைகள் தமிழுக்கு யாரும் தந்தமாதிரி தெரியலை. இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடி பாடின ஒரு பாட்டை நம்மால சொல்ல முடியுது. அறுபது வருஷத்துக்கு முன்னாடி பாடின பாட்டை என்னால சொல்ல முடியாது. அப்ப எப்படி இது காலங்கடந்து நிக்கும்? எனக்குப்பிறகு யாரு சொல்லுவாங்க இதை?
அடுத்த கேள்வி என்ன கேட்டீங்க?
செந்தில்: விமர்சனம் என்பதை எப்படி வரையறுப்பீங்க? அதுக்கு முன்னாடி, முதல் கேள்வி வேற மாதிரி பதில் சொன்னதுனால, இதையும் கேட்கிறேன்…உங்களைப்பற்றிய விமர்சனங்கள் எப்படி இருந்தன? நீங்க அதை எப்படி எதிர்கொண்டீங்க?
நாஞ்சில் நாடன்: விமர்சனம்ங்கிறது எந்த வகையிலயும் ஒரு க்ரியேட்டிவ் ரைட்டருக்கு உதவறதில்லை. நான் எழுதின படைப்புல விமர்சனம் பண்றாங்க. சதுரங்கக் குதிரையில் போதாமைகள் என்ன, எங்க மோசமாயிருக்குன்றது, in no way, it is going to help me. ஆனா factual inaccuracies, இதனுடைய நோக்கத்தில இருக்கக்கூடிய பிழைகள், தத்துவார்த்தமா நான் பண்ற பிழைகள், இதை சொன்னாங்கன்னா நான் கணக்குல எடுத்துப்பேன். நீ இந்தக் கொள்கையை இப்படிப் பேசறியே சர்தானாங்கன்னா, நான் அதைக் கணக்குல எடுத்துப்பேன். அதை யோசிப்பேன். ஒரு நாவலுக்கு அம்பை ஒரு கடிதம் எழுதினாங்க. அவங்க என்ன சொல்றாங்கன்னா, குரான்லயோ என்னவோ பாலைவனம் பற்றி ஒரு சொல்கூடக் கிடையாது. அப்படிங்கிற மாதிரி ஏதோ சொன்னாங்க…சரியோ தப்போ, அந்தக் கடித்தத்தை எடுத்துப் பார்க்கணும். நீ ஏன் திரும்பித்திரும்பி உன் பிரதேசம், உன் மொழிலதான் பேசிட்டிருக்க. இது எனக்கு ரொம்ப harsh ஆன விமர்சனம். நான் ஒரு ரெண்டு நாள் upset ஆயிட்டேன்.
சிலருடைய விமர்சனத்தை நாம கணக்குல எடுத்துகணும். என்னுடைய முதல் நாவல் தலைகீழ் விகிதங்கள். சுந்தர ராமசாமி ஒரு விமர்சனம் எழுதினார். ‘இவர் போலியான முற்போக்கு பேசுறாரு.’ என்னுடைய முதல் நாவல். ‘வார்த்தைகள அனாவசியமா விரயம் பண்றாரு.’
சுரேஷ்: பெரிய வாயாடின்னார்.
நாஞ்சில் நாடன்: ‘நீல பத்மனாபனைப் போல.’ இவைதான் என்மீது வைச்ச விமர்சனம். நான் அவரைப் பார்த்தது கூடக் கிடையாது. அவருக்கு என்மீது பகைக்கான ஒரு காரணமுங் கிடையாது. பகையும் கிடையாது. ரெண்டுமூணு ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கிட்ட ஒருமுறை கேட்டேன். அவர் சொன்னாரு, ‘அதிகம் எதிர்பார்ப்பதற்கு தமிழ்ல நிறையப் பேர் இல்ல, நாஞ்சில் நாடன். ஆகவே, உரிமை எடுத்துட்டு உனக்குச் சொல்றன்.’ அவருடைய சொற்கள் என்னை hurt பண்ணாக்கூட, அவர் வேணும்னு offensiveஆ பண்றார்னு நான் எடுத்துக்கல. அதுக்கப்புறம்தான் அவரைப்போய் சந்திக்கிறேன். அவரோட நட்பா இருக்கிறேன். அவருடைய ஸ்கூல்லயே பயின்றவன்கூட சொல்லலாம். ஆனா இது ஒரு தரப்பு. என்னை யாராவது முற்போக்குனு சொன்னா ஒத்துப்பாங்களா.
சுரேஷ்: Traditional ஆன முற்போக்குன்னு சொல்லலாம்.
நாஞ்சில் நாடன்: விமர்சகனுடைய மேதாவிலாசம் என்னங்கிறத அவனுடைய எழுத்து எனக்கு சொல்லிடும். நான் இதைப் பொருட்படுத்தணுமா பொருட்படுத்தவேண்டியதில்லையா? பொருட்படுத்தணும்னா சில இடங்கள்ல நான் பதில்சொல்வேன். என் பாணில பதில் சொல்வேன். எப்பவோ ரெண்டு வருஷங்கழிச்சு நான் எழுதக்கூடிய கட்டுரைலகூட பதில் சொல்வேன்.
பரதேசிப் படத்துக்கு நான் வசனம் எழுதறேன். தெளிவா கன்வர்ஷன்க்கு எதிரா அதில நான் பேசறேன். என்னுடைய வசனங்கள்ல இருக்கு. ஆனா நான் சொன்ன எந்தக் காரணமும் பொய் கிடையாது. இந்த நாட்டுல என்னென்ன நடந்ததுனு உங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும். அந்தப் படத்துல ஒரு பாட்டு இருக்கு. என்னுடைய வேலை கதை வசனம் எழுதறது. பாட்டு என் ஜாப் இல்ல, என் டிபார்ட்மெண்ட் இல்ல. அந்தப் பாட்டுக்கு என்னை விமர்சனம் பண்ணாங்க. வைரமுத்துவ க்ரிட்டிசைஸ் பண்ணல. அவர் வீட்டுக்கு முன்னால போய் ஆர்ப்பாட்டம் பண்ணினா அதனுடைய விளைவுகளை அவங்க சந்திக்கணும். நாஞ்சில் நாடன் ஒரு சாதாரண எழுத்தாளன்தானே. ரெண்டு தட்டுதட்டினாலும், ரோட்டுல போறபோது என்னை இடிச்சிட்டுப் போனாலும் கேட்கிறதுக்கு நாதியுண்டா. இதை விமர்சனம் செய்றவங்க சினிமா தெரிஞ்சவங்க. சினிமால வசனகர்த்தா பாட்டெழுத மாட்டான்னு தெரியாமலா இருப்பாங்க. அவங்க இத என்னை அடிக்கறதுக்கு ஒரு வாய்ப்பா பயன்படுத்திகிட்டாங்க. இந்த மாதிரி சந்தர்ப்பங்கள்ல, எனக்கு, ஜெயமோகன் – சொந்த ஊர்க்காரர், தம்பி மாதிரி. சின்ன வயசில அவர் எழுத வர்றதுக்கு முன்னாடியே எனக்கு அவரைத் தெரியும். எங்களுக்குள்ள ஒரு நல்ல நட்பு உண்டு. அவர் மீது எனக்கு விமர்சனங்களும் உண்டு. விமர்சனங்களைத் தனிப்பட்ட முறையில அவர்கிட்டயும், அருள்மொழிகிட்டயும் சொல்லுவேன். அதைப் பொதுவெளில என் குரல்வழிய அறுத்தாக்கூட ஒரு கட்டுரை என்கிட்ட நீங்க வாங்கமுடியாது. எனக்கு இதுமாதிரி பிரச்சனை வரும்போது நான் ஜெயமோகனுக்கு போன் பண்ணுவேன். ‘ஜெயமோகன் இதை என்ன பண்றது.’ ‘நாஞ்சில் நாடன் நீங்க இதில எறங்கி பதில் சொல்லப் போனீங்கன்னா ஒரு வருஷத்துக்கு உங்கள ஒரு ஜோலி பார்க்க விடமாட்டாங்க. நீங்க அந்த மாதிரியான ஆள் கிடையாது. இதுக்கெல்லாம் என்னைமாதிரி ஆள்தான் லாயக்கு. போய் வேலையப் பாருங்க.’ இப்படி ரெண்டு மூணு சந்தர்ப்பங்கள்ல எனக்கு நடந்திருக்கு. பரதேசியின்போது நடந்தது. இந்த ஆனந்த விகடன் கேள்விபதிலின் போது நடந்தது. கோயமுத்தூர்ல அவருக்குhf கண்ணதாசன் விருதுவழங்கும் விழா நடந்தபோது நான் பாராட்டிப் பேசறேன். நீங்க இருந்தீங்களா?
கண்ணன்: இருந்தோம்.
நாஞ்சில் நாடன்: கம்பன்ல இருந்து ஒரு காட்சி சொன்னேன். இந்திரஜித்துக்கு லட்சுமனன் மேட்ச் கிடையாது. கடவுள், ஆதிசேடன் அவதாரங்கிறதெல்லாம் வேற. ஆனா வீரத்துல லட்சுமனன் மேட்ச் கிடையாது. அப்படியே, if Indrajit was allowed to continue, லட்சுமனன் ஜோலி அன்னிக்கு முடிஞ்சிருக்கும். இத அனுமன் ஃபீல் பண்றான். பண்ண உடனே குறுக்கபோய் நின்னுட்டு கல்லு மட்டை மரம் எல்லாம் புடுங்கி வீசறான். ‘குரங்கே உனக்கும் எனக்கும் இப்ப சண்டையில்ல. அவனுக்கும் எனக்குந்தான் சண்டை. மாறு’ங்கிறான். இது அரைமணி நேரம் போகிறபோது, லட்சுமனன் போயிட்டு ரிலாக்ஸ் ஆயிட்டு வந்துர்றான். எனக்கு ஜெயமோகன் இந்த அனுமான் மாதிரி. அதை தயவுசெய்து குரங்குன்னு புரிஞ்சுக்காதீங்கன்னு சொன்னேன். எனக்கு ஒரு நெருக்கடின்னா – அவரு எனக்கு ஒரு விடுதலை தர்றாரு. இடத்தைவிட்டு, ஸ்தலத்தைவிட்டு நகர்ந்திரும்பாங்க எங்க ஊர்ல. ஸ்தலத்துல இருக்காத, நான் பார்த்துக்குறேன்.
விமர்சகன் பெரிய அறிவாளியா இருக்கணும். நுட்பமாக் கலைகளை உணரக் கூடிய ஒரு ஆற்றல் உடையவனா இருக்கணும். காய்தல் உவத்தல் இல்லாம இருக்கணும். வேண்டப்பட்டவன், வேண்டாவதன், முற்போக்கா பிற்போக்கா, பிராமினா பிள்ளைமாரா, நாடாரா, அப்படியெல்லாம் பார்க்காத வொர்க்கை வைச்சு மாத்திரமே மதிப்பீடு செய்கிற மனோபாவமுள்ள ஒருத்தன்தான் விமர்சகனா இருக்க முடியும். இல்லன்னா அவன் விமர்சனம் செய்யறது இலக்கியத்துக்கு எந்த வகையிலும் supportiveஆ இருக்காது. ஒருமாதிரி நெகட்டிவ்வாத்தான் அது ஒர்க் அவுட் ஆகுமே தவிர…இப்ப க.நா.சு….க.நா.சு.வைத் திட்டின பரபரப்பான பாப்புலர் ரைட்டர்ஸ்கூட ‘என்னைப் பத்தி க.நா.சு. ஒரு வரி எழுதமாட்டாரா’ன்னு எதிர்பார்த்துட்டு இருந்தாங்க. க.நா.சு.ட்ட பாரபட்சம் கிடையாது. க.நா.சு.வுடைய மதிப்பீடுகள் தப்பாப் போறதுக்கு வாய்ப்பு இருந்துச்சு. நான் க.நா.சு.ட்டியே கேட்டிருக்கேன், சில எழுத்தாளர்கள் பற்றிச் சொன்னபோது. ‘நான் சரின்னு நினைச்சுத்தான் சொல்றேன்’ அப்படிங்கிறார். ஃபன்ட் வாங்கிட்டு கருத்துச்சொல்ற விஷயமில்ல. அந்த ரேங்க்ல உள்ள விமர்சகர்கள் தமிழ்நாட்ல endangered species. முதல்ல இப்ப இருக்கிற பெரும்பாலான விமர்சகர்களுக்கு முற்போக்கு பிற்போக்கு பார்க்காம, தலித்தியம் பெண்ணியம் பார்க்காம, ரைட்டிங்க ரைட்டிங்கினுடைய மதிப்புகளுக்காக மாத்திரம் மதிப்பீடு செய்யக்கூடிய விமர்சனங்கள் கிட்டத்தட்ட தமிழ்ல இல்லேனே சொல்லிறலாம். முதல்ல இந்த கேட்டகரி பண்ணித்தான் விமர்சனத்துக்கே வர்றாங்க. ரெண்டாவது ஒரு படைப்பாளி தன்னுடைய படைப்பை எடுத்துட்டுப்போய் அவன்ட்ட கொடுத்து, அவனுடைய விமர்சனம் எழுதி வாங்க வேண்டியிருக்கு. பல படைப்பாளிகள் ரூம் போடறாங்க, ஒரு மதிப்புரையோ விமர்சனக் கட்டுரையோ எழுதி வாங்கறதுக்கு. க.நா.சு. என்னுடைய முதல் நாவலுக்கு விமர்சனம் எழுதினபோது க.நா.சு.க்கும் எனக்கும் அறிமுகமே கிடையாது. நான் மூணு நாவல் எழுதினதுக்கு அப்புறம்தான் டில்லிலபோய் அவர சந்திச்சேன். அவருக்கு ஏன் அந்த urge வந்தது. ஒரு புஸ்தகத்தைப் படிச்சுட்டு இதப் பத்தி எழுதணும். ஏன் க.நா.சு.வுக்கு வந்தது, ஏன் வெங்கட் சாமிநாதனுக்கு வந்தது, ஏன் இந்தமாதிரி பல முக்கியமான விமர்சகர்களுக்கு வந்தது? ஏன்னா அவங்க லிட்ரேச்சர் ஃபார் லிட்ரேச்சர்ங்கற நோக்கத்துக்காகவே விமர்சனம் பண்ணாங்க. சுப்புடுவ எவ்வளவு காசு கொடுத்தும் விலைக்கு வாங்கியிருக்கலாமே நீங்க. சில சமயங்கள்ல ஹார்ஷாக்கூட சுழற்றுவாரு. படக்கூடாத எடத்துல பட்டுறும். ஆனாலும் சுப்புடுவுடைய இன்டக்ரிட்டியை நீங்க கேள்வி கேட்க முடியுமா. ஒரு கல்லூரிப் பேராசிரியருக்கு விமர்சனம் வராது. அவன் ஆய்வுக் கட்டுரை எழுதத்தான் லாயக்கே ஒழிய…
அன்பழகன்: பரதேசி படத்துல வசனம் உறுத்தவே இல்லை. இயற்கையா பிரிச்சுப் பார்க்க முடியாத மாதிரி இருந்துச்சு. வசனம்னா தனியாத் தெரியணுங்கிற மாதிரித் தேவையில்லையே. இதை யாராவது சொன்னாங்களா?
நாஞ்சில் நாடன்: பாசிட்டவா பார்த்தவங்க நிறையப்பேர் சொன்னாங்க. என்ன சொல்வாங்கன்னா, இந்த ரெண்டாவது வரக்கூடிய கூலிக்கூட்டத்துக்கு குடிசை அலாட் பண்றாங்க. அதர்வாவுக்கு இரண்டாவது ஹீரோயின் குடிசை அலாட் பண்றாங்க. அவ சாமானத்தைத் தூக்கி வெளிய போடறா. இதுதான் எனக்குக் கொடுக்கப்பட்ட சீன். நான் இதுக்கு மூணு பக்கம் எழுதுவேன். ஏற்கனவே ஒரு பேக்கு டைப். போன உடனே பானையைத் திறந்து பார்ப்பான். திங்கறதுக்கு ஏதாவது இருக்கான்றதுதான் அவன் முதல் நோக்கம். ரெண்டாவது அவன் வயசு – இருபத்திமூணு வயசு பிராயமுள்ள ஒரு ஆண். கொடில காயப்போட்டிருக்கக்கூடிய அவளுடைய ப்ளவுஸ எடுத்துப் பார்க்கிறான். அப்பத்தான் அவ சீனுக்குள்ள என்டர் ஆகறா. இதெல்லாம் வசனத்துல எழுதமாட்டேன். பாராகிராப்ல் போகும். வந்தவுடன அவ பார்க்கிற போது அவன் இத கைல வச்சுகிட்டு நிற்கறான். அது அவளுக்குப் புரியும். ஆண் பெண் உறவினுடைய, உள்ளாடைகள் ஏற்படுத்தக்கூடிய – அது க்ரியா ஊக்கி. அவ அடுத்த காட்சில அவனை அடிச்சு வெளிய தள்ளிட்டு குச்சில தீக்கொளுத்திக் கொண்டுபோய் வெளிய போடறா. இதப் பல viewers miss பண்ணியிருப்பாங்க. இத நான் டயலாக் வடிவத்துல எழுதல. டயலாக் நாலு வரிதான் வரும். எட்டு வார்த்தையோ பத்து வார்த்தையோ. இத அவர் நீட்டா காட்சிப் படுத்தறார். அவர் என்கிட்ட சொன்னது, ‘இதுதாங்க எனக்கு வேணும். உங்களுக்கு என்னவெல்லாம் தோணுதா அதையெல்லாம் எழுதுங்க. எனக்குத் தேவையானத நான் அதிலிருந்து எடுத்துக்கறேன்.’ சில சமயம் ஏழாவது சீன்ல நான் எழுதின டயலாக்கக் கொண்டுபோய் முப்பத்திநாலாவது சீன்ல சேர்ப்பாரு அவரு. அந்த சீக்குவன்ஸ் வந்ததுனா, இதைக்கொண்டுபோய் அங்க ஃபிக்ஸ் பண்ணிடுவாரு. அது நல்லாத்தான் இருக்கு. ஏன்னா அவர் தொழில்நுட்பம் தெரிஞ்சவர் இல்லையா. அவர் வெறொரு உலகத்தினுடைய மிக நல்ல ஆர்ட்டிஸ்ட். எனக்கு அந்த வடிவம் தெரியாது. ஒரு சிறுகதை மாதிரித்தான் இதை எழுதவரும்னேன். அதான் எங்களுக்கு வேணும்னார்.
சுரேஷ்: என்பிலதனை வெயில் காயும் – நாஞ்சில் நாடன் படைப்புகளிலேயே எனக்கு ரொம்பப் பிடிச்சதுன்னு சொல்லலாம். ஆனா தமிழ்நாட்டில் அது அவ்வளவா கவனிக்கப்படலையோ?
நாஞ்சில் நாடன்: மற்றவையும் கவனிக்கப் படல. நான் எப்ப கவனிக்கப்பட்ட எழுத்தாளன் ஆனேன்? ஒரு ஏழெட்டு வருஷம் முன்னாடி. இதுக்கு முன்னாடி கொஞ்சம் ரிஃபைன்டான ரீடஸுக்கு நான் அறிமுகமாயிருப்பேனே தவிர, பெரிய அளவிலெல்லாம் கவனிக்கப்பட்டதில்லை.
(தொடரும்)
பகிர்ந்துகொள்ள,அச்செடுக்க
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
Related
About S i Sulthan
Phone: 9443182309
Nellai Eruvadi
நாஞ்சில் நாடன் கூறியுள்ள கருத்துக்கள் மிகவும் தெளிவாகவும் உள்ளத்தை தொடும்படி யாகவும் உள்ளன. பல கருத்துக்கள் எனக்கு ஏற்புடையவையாக இல்லையென்றாலும் அவர் உள்ளத்திலிருந்து வந்தவை என்று உணருகிறேன்.. பொய் முகமூடி கிடையாது என்று புரிகிறது.
வாழ்த்துக்கள்