பதாகை நேர்காணல்: த கண்ணன், வெ.சுரேஷ், அன்பழகன், செந்தில்
கற்பனவும் இனி அமையும் – நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்
நாற்பதாண்டுகாலமாக செயலூக்கத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் நாஞ்சில் நாடனின் எழுத்துலகப் பயணம் தனித்துவமானது. தன்னுடைய முதல் படைப்பிற்கே ‘இலக்கிய சிந்தனை’ விருது பெற்றவர், தொடர்ந்து முப்பதுக்கும் குறையாத நூல்களை வெளியிட்டிருக்கிறார். இதில் ஆறு நாவல்களும், நூற்றிமுப்பத்திரண்டு சிறுகதைகளும் இரண்டு கவிதைத் தொகுப்புகளும், பல கட்டுரைகளும் அடக்கம். ‘செய்தது போதாது. எனக்கு இன்னமும் செய்வதற்கு நிறைய இருக்கிறது,’ என்று தணியாத படைப்பூக்கத்துடன் சொல்கிறார். ‘எனக்கு முன்னால் தகுதியுடையவர்கள் நிறைய பேர் விருது பெற காத்திருக்கின்றனர். ஓய்வூதியப் பயன்கள் போலக் காலங்கடந்து வழங்கப்படுகிறது’ என்று விமர்சித்தாலும், சாகித்ய அகாதெமி அவருக்கு வழங்கிய விருதை மதித்து ஏற்றுக் கொண்டார். தமிழ் இலக்கிய தோட்டம் போன்ற அமைப்புகளும் சமீபத்தில் அவருக்கு விருது அளித்தன.
நாஞ்சில் நாடன் வழியாக நமக்கு பழந்தமிழ் இலக்கியங்களின் சுவை கிடைக்கிறது. நாஞ்சில் நாட்டு வழக்கு மொழியின் வீச்சு புரிகிறது. கம்பன் எடுத்தாண்ட சொற்களின் பரிமாணம் புரிகிறது. நாஞ்சில் சமையல் முறைகள், மீனவர் வரலாறு, வெள்ளாளர் வாழ்க்கை முறை, விவசாயத்தின் வகைப்பாடுகள், மகாராட்டிர குக்கிராமங்களின் நிலவமைப்பு என்று தகவல் களஞ்சியமாக இருக்கிற கதைகளின் நடுவே ‘அமி காணார்’ எனும் பசிமொழியையோ, வண்டியை விட்டுக் கொண்டு போகும் ராசாவின் ‘விறீர்’ நடையையோ சேர்த்து அறுசுவை விருந்தாக மாற்றிவிடுகிறார். ‘கொளம்பு வச்சு பத்து தட்டத்துக்கு ஊத்தாண்டாமா தாயி?’ என்று கரிசனத்தோடு பேசும் நாஞ்சில் நாடனை நேர்முகம் காண முடிவு செய்து அவரை அணுகினோம். எழுத்து மூலம் கேள்விகளுக்குப் பதிலிறுப்பதைக் காட்டிலும், நேரில் சந்தித்து உரையாடுவதையே அவர் விரும்பினார்.
***
கோவை நண்பர்கள் வெ.சுரேஷ், அன்பழகன், செந்தில், த.கண்ணன் என்று ஒரு சிறு குழுவே நாஞ்சில் நாடனைச் சந்திக்க, கோயமுத்தூரின் தென்மேற்குக்கோடியில் மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்த கோவைப்புதூரில் அவரது புதிய இல்லத்துக்குச் சென்றோம். கல்லூரி மாணவர்கள் சிலரும் அவரைச் சந்திக்கும் ஆர்வத்தோடு எங்களுடன் இணைந்துகொண்டனர்.
நேர்காணல் என்கிற சிறுகதையில் கும்பமுனி தன்னை நேர்காண வந்த தொலைக்காட்சி நிருபர்களுக்குக் கொடுத்த வல்வரவேற்பை நல்ல வேளையாக நாஞ்சில் நாடன் எங்களுக்கு வழங்கவில்லை – எப்போதும்போல், இன்முகத்துடன் எதிர்கொண்டார். நாங்களும் அந்தக் கதையில் வந்தவர்களைப் போல நாஞ்சில்முனியின் படைப்புகளைப் படித்திராதவர்களும் அல்லர். அவரது பல ஆக்கங்களைப் படித்துச்சுவைத்து, அவர்மீதிருக்கும் பெருமரியாதையை வெளிப்படுத்தும் ஒரு நல்வாய்ப்பாகத்தான் இந்த நேர்காணல் அமைந்தது.
சில நாட்கள் வெளியூர்ப் பயணத்திற்குப்பின் களைப்புடனும் இளவெண்தாடியுடனும் நாஞ்சில் நாடன் ஓரிரு மணிநேரம் முன்புதான் வீடு திரும்பியிருந்தார். இருப்பினும் மூன்று மணிநேரம் சலிப்பின்றி உரையாடினார். நேர்காணல் என்பதைவிட இதை ஓர் உரையாடல் என்றுதான் சொல்லவேண்டும். நாஞ்சிலைப் பேச வைப்பதற்கு நீண்ட கேள்விகள் தேவையில்லை. அவரது நினைவோட்டத்தைக் கிளரிவிடும் ஓரிண்டு சொற்கள் போதும், அவரது கணைகள் அம்புப்புட்டிலிலிருந்து சரசரவென்று கிளம்பிவர. சொற்காமுறுகிறவர் என்று தன்னைத்தானே விளித்துக்கொண்டாலும், அதிக சொற்களை விரயம் செய்கிறார் என்ற பொருந்தா விமர்சனம் அவர்மீது ஒரு சிலரால் வைக்கப்படுகின்ற போதிலும், கூர்ந்து கவனிப்போமேயானால், அவரது கட்டற்ற நடையிலும் மிகச்செறிவான, கவனமாகச் செதுக்கிய மொழியைக் கையாள்பவர் நாஞ்சில். பல கிளைகளாகப் பிரிந்துசெல்லும் அவரது விரிவான உலகத்தை விவரிக்க, செறிவான மொழியன்றிச் சாத்தியப்படாது. அவரது பேச்சில், அந்தச் செறிவூட்டும் கவனம் இல்லாமல், பட்டைதீட்டப்படாத பொலிவுடன் வெளிப்படுகின்றன சொற்கள். முடிந்தவரை அந்த பச்சையான காரத்தையும், இனிமையையும் பதிவுசெய்து நாஞ்சில் நாடனின் பேச்சுவழக்கை அப்படியே தந்திருக்கிறோம். எழுத்துவடிவேற்றப்பட்ட நாஞ்சில் வழக்கில், கொஞ்சம் கோவை வாடை அடித்தால், அதற்குக் காரணம் நாஞ்சில் உணவை உண்ட செவிகள் கோவைச்செவிகள் என்பதால் இருக்கலாம். அல்லது நாஞ்சில் மொழியை தளும்பத்தளும்பத் தந்த பேனாவுக்குச் சொந்தக்காரர் பல ஆண்டுகளாய்க் கோவையில் இருப்பதாலும் இருக்கலாம். கோவை என்று யாம் ஈண்டு சொல்வது கோயமுத்தூரையே குறிக்கும். (இந்த விளக்கத்திற்கான தேவை நேர்காணலுக்குள் செல்லும்போது புரியும்.) ஆங்காங்கு, சிறுவாணி நீரில் கலந்த அத்திக்கடவு நீராய் ஆங்கிலச் சொற்களும் இயல்பாகக் கலந்து வரவே செய்தன.
தனது படைப்புமுறை, விமர்சனங்கள், புதிய படைப்பாளிகள், இசை, வெள்ளாளர் வாழ்க்கை என்று பல்வேறு விஷயங்களைக் குறித்து அளவளாவும் ஆர்வம் தனது படைப்புகளைப் பற்றி உரையாடுவதில் அவருக்கு அதிகம் இல்லை என்பதை உணரமுடிந்தது. ‘தன்னையே முகஸ்துதி செய்துகொண்டு, புதிதாய் அறிமுகம் செய்துகொண்டு, மீண்டும் நிரூபித்துக்கொண்டு, எந்த மலைஅடுக்குகள் கடக்க இன்னும்? மலை கல்தான், மண்வெட்டி இரும்புதான், தீ சூடுதான், கசப்பும் சுவைதான்,’ என்று தனது சிறுகதைத் தொகுப்புக்கான முன்னுரையிலேயே எழுதியவராயிற்றே அவர். ஆனால், வேறு பல தளங்களில் படர்ந்தது உரையாடல்.
***
நாஞ்சில் நாடனின் பயணத்தைப் பற்றிக் கேட்கத்தொடங்கி, அவரது நாசூக்கான சைவ-அசைவப்பழக்கத்திற்குச் சென்றதால், நாங்கள் திட்டமிடாமலே வெள்ளாளர் வாழ்க்கைக்குள் நுழைந்தோம்.
நாஞ்சில் நாடன்: இதெல்லாம் இலக்கிய வட்டத்துல சொல்றதில்லை. எல்லாம் கலந்துகட்டி அடிச்சுருவாங்க. என் மூதாதையர்கள் திருநெல்வேலி சைவப்பிள்ளைமார். 1800களினுடைய கடைசிப்பகுதியில, பெரும்பஞ்சம் வந்தபோது, எங்கயாம் போய் பிழைச்சிக்கிடுங்கடான்னு துரத்திவிட்டிருக்கார் எங்க தாத்தாவுக்கு அப்பா. நாஞ்சில் நாட்ல மழைபெய்யுது, மாடு மேய்ச்சுப் பிழைச்சுக்க…அதை நான் எழுதிட்டேன்…நடந்துவந்து ஒரு வீட்ல மாடுமேய்கறதுக்குத்தான் வேலைக்கு சேர்ந்திருக்கார். சாப்பாடுதான பிரதானம். அவருடைய சொந்த அத்தை பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டார். அத்தை பொண்ணுனா, அவங்க நேச்சுரலி சைவ வேளாளர் தானே? அந்த அம்மா, வைசூரில இறந்து போறாங்க..ரெண்டு பையனுங்களப் பெத்துப் போட்டுட்டு. ஆகவே, ரெண்டாவது கல்யாணம் பண்றாரு. ரெண்டாவது, எங்க அப்பாவுக்கு அம்மை. நாங்க ஆத்தானு சொல்லுவம். வள்ளியம்மைக்குப் பறக்க சொந்த ஊர். பறக்கை..மதுசூதனப் பெருமாள் கோயில் இருக்கும். சுசீந்திரத்திலிருந்து நடக்கும் தூரம். அவங்க நாஞ்சில் நாட்டு மருமக்க வெள்ளாளர். நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் மீன் சாப்டுவாங்க. கோழி, மட்டன் எல்லாம் ஏதாவது விருந்து நடந்தாத்தான். நான் இத வெள்ளாளல வாழ்க்கைல எழுதியிருக்கேன். மட்டன்ங்கிறது வருஷத்துக்கு ஒருநாள் அல்லது ரெண்டு நாள்தான். கோயில்ல குடை வைக்கணும். அல்லது தீபாவளியா இருக்கணும். கோழிங்கறது, விவசாயிகள் வீடுங்கறதால, கோழிக் கூடு இருக்கும். கோழி வளர்ப்பாங்க. அப்ப இந்தக் கோழிக்கு ஒரு நோய் வரும். கொஞ்சம் தலைய இப்படித் தொங்கப்போடும். தொங்கப்போட்ட உடனே அறுத்துருவாங்க. தானா சாகறதுக்கு முன்னாடி. அந்த சீசன்ல, எட்டுநாள் பத்துநாள் தினமுமே கோழிக்கறி போட்ருவாங்க. அது நோய் கோழிதான். 100-150 டிகிரில கொதிக்கிற போது, ஃபேரன்ஹீட்ல, நோய்க்கிருமியெல்லாம் போயிடும். ஆனா மீன் எங்களுக்குப் பிரதான உணவு. 12 மைல்ல கடல். காலைல ஒம்பது மணிக்குப் புத்தம்புதுசா மீன் வரும். எங்க அப்பாவுக்கு அம்மை…பறக்கக்காரியக் கட்டினதுப்புறம், இவங்க, நேச்சுரலி, மீன் ஈட்டர்சா மாறிட்டாங்க.
சுரேஷ்: பெங்காலி பிராமின்ஸ் மீன் சாப்டுவாங்க.
நாஞ்சில் நாடன்: அதனால, நான் இப்ப சைவ வேளாளன்னு க்ளெய்ம் பண்ணிக்க முடியாது. Strictly speaking. பண்ணனுமானாப் பண்ணலாம். ஏனா, தந்தைவழிச் சமூகம்தானே நாம. இத இப்ப வெளில சொல்றதுல disadvantage தான் அதிகமே தவிர advantage கிடையாது. ஆனா நா எதையும் மறைச்சுப் பேசுறவனில்லை. என்னத்தக் கேட்டாலும் ஓப்பனா பேசிடுவேன். நம்மப் பத்தி மார்க்கெட்ல பெரிய கெட்ட பேர் இருக்கு. இவன் வெள்ளாள சாதி வெறியன். இந்துத்வா.
நாஞ்சில் நாடன்: அது ஒரு anthropological study. பத்கவத்சல பாரதி அந்த புத்தகம் வந்தப்ப ஒரு ரெவ்யூ எழுதினார். காலச்சுவடுல பப்லிஷ் பண்ணினாங்க. இந்த மாதிரி ஆய்வு தமிழ்ல வந்ததே இல்லை. ஒரு சமூகத்தைப் பற்றிய நடுநிலமையுடன், அந்த சமூகத்தில பிறந்த ஒருவன்தான் அதை எழுத முடியும். இத 2000ல எழுதியிருப்பேன்…2003ல அந்த புக் பப்லிஷ் ஆயாச்சு. முதல்ல, ஒரு கட்டுரைதான் வாசிச்சேன். பாம்பன்விளை செமினார்க்காக. சுந்தர ராமசாமி சொன்னார்…நீங்க விரிவுபண்ணி எழுதலாம்ல. உங்களத்தவிர யாரு எழுத முடியும். பொட்டன்ஷியல் இருக்கில்ல. கண்ணனும் சொன்னான். காலச்சுவடு கண்ணன். ஒரு 120 பக்கத்துக்கு எழுதினேன். கொஞ்சம் உழைப்பும் நேரமும் கிடைக்குமானா ஒரு 250 பக்கத்துக்கு என்னால எடுத்துட்டுப்போக முடியும். அந்த புஸ்தக்கதைப் பொறுத்தவரைக்கும் நான் ஒரு கன்சர்னோட அந்த புத்தகத்தை முடிக்கறேன். பிஎஸ்ஸி படிச்சுட்டு, பிஏ படிச்சுட்டு, அம்மன்கோயில்லியோ சாத்தாங்கோயில்லியோ உட்கார்ந்து நாயும் புலியும் விளையாடிட்டு, சீட்டாடிட்டு – சோத்துக்குப் பஞ்சம் கிடையாது..ஒரு அரை ஏக்கர், முக்கா ஏக்கர் இருக்கும்…ரெண்டு போகம் விளையும். நெல்லுக்கும் தேங்காய்க்கும் காய்கறிக்கும் ப்ராப்ளம் இல்ல – இப்படி பாழாப் போய்கிட்டிருக்காங்களே. திருநெல்வேலி சைட்ல சைவப்பிள்ளைமார்க்கெல்லாம் என்னன்னா, அங்க ஆர்எம்கேவி இருந்தது. ஆர்எம்கேவி 3000 பேருக்கு வேலை குடுக்குறான். அதனால திருநெல்வேலி சைவப்பிள்ளைமார் அந்த ஆர்எம்கேவிய மூடினாலொழிய முன்னேற மாட்டான். அந்த urge அவனுக்கு அப்பத்தான் வரும். எனக்கு அந்த urge எப்படி வந்ததுனா, MSc படிச்சு முடிச்சதுக்கப்புறம்…25000 ரூபா குடுத்து வேலைக்கு சேர முடியல, பார்க்கிறவனெல்லாம்…எங்க ஊர்ல நூத்தியிருவது வீடுதான்…ட்யூஷன் எடுறான்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. நான் அதுக்கப்புறந்தான் பையத்தூக்கிட்டு பாம்பேக்குக் கிளம்பிப்போனேன்.
சுரேஷ்: அந்த நேரத்துல நீங்க சர்வீஸ் கமிஷன் மாதிரி முயற்சி பண்ணவே இல்லையா?
நாஞ்சில் நாடன்: எஸ்எஸ்எல்சி க்ரேட்ல, பிஎஸ்சி க்ரேட்ல, எம்எஸ்சி க்ரேட்ல மூணு தடவ எழுதுனேன்.
சுரேஷ்: எது எழுதினீங்க?
நாஞ்சில் நாடன்: TNPSC. அப்ப திமுக பவர்க்கு வந்தாச்சு. பெரு விலைவைச்சு எடுத்துட்டு இருக்காங்க. எங்க பக்கத்து ஊருல ஒரு அரசியல் பிரமுகர். பேராசிரியர். எனக்கு வகுப்பெடுத்திருக்கார். தூரத்து உறவு. நான் எம்எஸ்சி பாஸ் பண்ணி முடிச்சிட்டு அவர்கிட்டப் போய் நின்னேன். உங்க அப்பாகிட்டப்போய் ஒரு இருபத்தஞ்சாயிரம் ரூபா வாங்கிட்டுவாங்கிறார். அப்ப 68ல.
சுரேஷ்: மத்திய அரசுத் தேர்வாணையம் பற்றியெல்லாம் தெரியாது?
நாஞ்சில் நாடன்: அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. நான் எழுதின ஒரே தேர்வாணையம் – இன்கம்டேக்ஸ் இன்ஸ்பெக்டர் எக்ஸாம். கொஞ்சம் அதிகமா ஆசைப் பட்டுட்டேனோ…க்ளரிக்கல் எழுதியிருந்தா ஒருவேளை கிடைச்சிருக்கலாம்.
சுரேஷ்: ஏன்னா, தமிழ்நாட்ல பொதுவா ஒரு போக்கு. தமிழ் மீடியத்துல இருந்து வர்ற மாணவர்கள் யாரும் இதை எழுதறதே இல்லை.
நாஞ்சில் நாடன்: முக்கியமான காரணம், பத்து வருஷம் முன்னாடி வரைக்கும், ப்ளல் டூ முடிச்சுட்டு, இஞ்சினியரிங் என்ட்ரன்ஸ் எழுதணும்னே கிராமத்துல பல பள்ளிக் குழந்தைகளுக்குத் தெரியாது. ப்ளஸ் டூ முடிச்சாச்சு, இண்டர்வூயல வேலைக்கு வந்துரலாம்னு நினைப்பானே தவிர, இன்னொரு ஸ்டேஜ் இருக்கு..ப்ரிப்பரேஷன் இருக்கில்லை…இப்ப நாங்க ரிமோட்டஸ்ட் வில்லேஜ்…ட்ரெய்ன் கூடக் கிடையாது எங்க நாட்டுல. எங்களுக்கு இதெல்லாம் சொல்லித் தருவாருங்கிடையாது. எங்க ஊர்ல நான் ஃபர்ஸ்ட் கிராட்ஜுவேட்டு. எனக்கு யாரு சொல்லித்தருவாங்க? உங்களுக்கு இருக்கிற அட்வாண்டேஜ் ஒண்ணு உண்டு. அப்பா ஹோட்டல சர்வரா இருந்தாலும், கோயில்ல மணியடிச்சாலும் அவருக்குண்டான எஜுகேஷனல் பேக்கிரவுண்ட் உண்டு. ஒரு தூண்டுதல் இருக்கும். என்னைத் தூண்டுனவங்ககூட…எங்க பக்கத்து ஊர் இறச்சகுளம்…அதுல ஒரு கிராமமிருக்கு…கிராமங்கிறது அக்கிரகாரம்…அக்கிராகிரத்துனடைய இலக்கணம்…ஒரு ஓரத்துல சிவன் கோயில் இருக்கணும்…ஒரு ஓரத்துல பெருமாள் கோயில் இருக்கணும்…அப்பத்தான் அக்கிரகாரம்னு சொல்லலாம். இல்லைனா, அதை கிராமம்னு சொல்வாங்க. ரெண்டே தெருவுள்ள ஒரு ப்ராமின் செட்டில்மெண்ட். அங்க ஊர்ல எஸ்எஸ்எல்சில படிக்கிறபோதும் பிஎஸ்சி படிக்கிறபோதும், நான்தான் படிக்கிற பையன். என்னை ஓரளவுக்கு கைய்ட் (guide) பண்ணவங்களும் அவங்கதான். எங்க அப்பா என்னை என்ன கைய்ட் பண்ணிருக்க முடியும். வேற வழியில்லாம நான் பையத்தூக்கிட்டு பாம்பே போயிட்டேன். ஆனது ஆகட்டும் பார்த்துக்கலாம்..அப்படின்னுட்டு. அதெல்லாம் எழுதியிருக்கேன் நான்.
அன்பழகன்: சார், TNPSC எழுதிப்போயிருந்தா, ஒரு எழுத்தாளர் கிடைச்சிருக்க மாட்டார்.
நாஞ்சில் நாடன்: போராட்டம் இல்லாத மனித வாழ்க்கை வீணாப் போயிரும்னு நினைக்கிறேன். என்னுடைய வளர்ச்சினு நாம் கருதுவோமானால், நான் இந்த இடத்துக்கு சேர்ந்திருப்பதற்கு மிக முக்கியமான காரணம் என்னோட இந்த போராட்டம்தான். நான் சோத்துக்குப் போராடியிருக்கேன், தங்குமிடத்துக்குப் போராடியிருக்கேன், பயணுத்துல போராடியிருக்கேன், வேலைக்குப் போராடியிருக்கேன், செலவ மெய்ன்டெய்ன் பண்றதுல போராடியிருக்கேன். 210 ரூபாய் சம்பளம் வாங்குறபோது, முதல்ல 25ரூபாய் MO கணபதியாப்பிள்ளைக்கு அனுப்பிச்சிட்டுத்தான் மிச்சத்த நான் செலவு பண்ணுவேன். மாசக் கடைசில ரெண்டு ரூபாய் எல்லாம் கைமாத்து வாங்கியிருக்கேன். எங்கிட்ட எட்டணா கைமாத்து வாங்கிறவனும் ஒருத்தன் இருப்பான்…கூர்க்கா ஒருத்தன். சார், ஆட் அணா தேதீஜியே முஜே…அப்படினு நிப்பான்.
சுரேஷ்: ‘நான் இப்படித்தான், எழுத்தாளர் ஆகணும்’ அப்படினு நினைச்சீங்களா?
நாஞ்சில் நாடன்: Of late, எனக்கு அந்த நம்பிக்கை வலுவா இருக்கு. எனக்கு ஏதோ ஒரு guiding force இருக்கு. இப்ப வாழ்கைல…கடந்த ஒரு பத்து வருஷம், இருபது வருஷம்…எனக்கு சோத்துக்குப் பஞ்சம் இல்ல. துணிமணிகளுக்குப் பஞ்சமில்லை. ஆனா எப்பவுமே பண நெருக்கடி இருந்திருக்கு. இந்த வீடு கட்டிக் குடிவந்ததுக்கப்புறம் – என் பையன் பெரும்பணம் செலவு பண்ணிக் கட்டியிருக்கான் – பின்னாடி வரக்கூடிய செலவுகள் இருக்கே..குடிநீர் இணைப்பு எடுக்கணும்…அதுக்கு மோட்டர் வாங்கணும்…ப்ளம்பர் 8000 கேட்கிறானோ,10000 கேட்கிறானோ..நான் ஐநூறு ரூபாய் நோட்டுப் பார்த்தே பல நாள் ஆச்சு. அதுக்காக பஸ்ல போகும்போது, கண்டக்டர்கிட்டப் பார்த்ததில்லையான்னு கேட்கக்கூடாது. இது ரெண்டு விதமா மனித மனதை இயக்குது. உங்களைத் தோற்றுப் போகச்செய்யும். தோல்வி மனப்பான்மையைப் பெருக்கும். உங்கள வலுவிழக்கச் செய்யும். நான், by nature, diehard species. வடிவேலு சொல்வாரில்லையா…எத்தனைவாட்டி அடிச்சாலும் அழமாட்டேங்கிறான்னு மறுபடி அடிச்சாங்க. ரொம்ப நல்லவன்டா இவன். அந்த ஜோக் மாதிரித்தான் இது,
சுரேஷ்: இது இந்திய விவசாயியோட ஆதார குணமா?
நாஞ்சில் நாடன்: மண், இயற்கையோடு இருக்கோமில்லையா…எங்க அப்பா தோல்வியடைஞ்சாக்கூடத் தோல்வியை ஒத்துக்கமாட்டார். ‘இந்த பூ விளையலைன்னா என்னடா, அடுத்த பூ விளையும்.‘ பஞ்சத்தினாலயோ, எதன் காரணமாகவோ, இந்த பூ விளையல, ஆனா அடுத்த பூ விளையும். விளையாம எங்க போயிடும்? மழை பெய்யல. அப்படிப் பெய்யாமலேயா இருந்துரும்?
ஒரு ஏக்கர், ஒன்றரை ஏக்கர் வைச்சுட்டு சிறு விவசாயிகளுக்கு – பெரிய விவசாயிகளப்பற்றி நான் பேசலை – நெல்லு, வாழை, தென்னை இத மாத்திரம் யோசிக்கிறவன்…விவசாயங்கிறது, it includes கோழி, it includes பால்மாடு, it includes ரெண்டு தென்னை மரம், ஒரு முருங்கை மரம், ஒரு கருவேப்பிலை மரம், வயக்கரைல தண்டங்கீரை போட்டு – ஒரு கைப்பிடித் தண்டங்கீரை ஓரணாவுக்கு நான் போய் வித்துருக்கேன். இதெல்லாம் கண்ணுக்குத் தெரியாத வருமானங்கள். விவசாயங்கிறது, இதெல்லாம் சேர்ந்ததுதான். கோழி வளர்த்தறோம்னா, கோழிக் கூண்டுல, கீழ, உமி பரப்புவோம். அதனோட வசதிக்காக. ஒரு ஆறு மாசத்துப்புறம், அந்த உமியை மாத்துவோம். மாற்றுகிறபோது, அந்தக் கோழியினுடைய எச்சம் எல்லாம் சேர்ந்து, அது ஒரு நல்ல உரமா இருக்கும். அத நாங்க என்ன பண்ணுவோம்னா, வரப்போரம் போடுகிற, கொத்தவரைங்காய், கத்திரிக்காய், பீர்க்கங்காய்…இதுக்கு மொதல்ல மண்ணை வெட்டிட்டு – இந்தக் கோழிக்காரத்த நான் சுமப்பேன், கடவம் வைச்சு – எங்க அப்பா வாங்கி அத வெட்டிப்போடுவார். கோழிக்காரம் வருமானம்னு நீங்க ருப்பீ அணா பேசிஸ்ல கேல்குலேட் பண்ணீங்கன்னா, அது வருமானம்தானே? அது ஒரு உரமா உங்களுக்குப் பயன்படுதில்லையா? மாடு வளர்க்கிறபோது…அதைத்தான் நம்மாழ்வார் கேட்கிறார். ’ட்ராக்டர் வந்து சாணி போடாதுடா, மூத்திரம் பெய்யாதுடா, வைக்கோலும் திங்காது…டீசலாக்குடிக்கும்.’ எங்க வயலுக்குத் தேவையான உரத்தை நாங்க சேமச்சிக்கிடுவம். அந்த மாடு வைக்கோலக் கொஞ்சம் பிடிச்சி, கீழ செதறிப்போட்டுத்தான் சாப்பிடும். அதுக்கு மேலயே படுத்துக்கிடும். அதுக்கு மேலயே மூத்திரம் பெய்யும். காலைல எந்திருச்சவுடனே, அந்த மாட்டை மாத்திக்கட்டிட்டு, அந்த சாணி மூத்திரமும் வைக்கோலுமா, ஒழுக ஒழுக நாங்க சும்பபோம். ஆறுமாசம் கழிஞ்சு பார்த்தீங்கன்னா, கீழே வெட்டினீங்கன்னா, அது ப்ளம் கேக் மாதிரி இருக்கும். அடில போட்ட சாணி உரமும், இலைதழைகளும் இதுவும் சேர்ந்து..அதுக்குள்ள பலாக்கொட்டை சைஸ்க்கு புழு இருக்கும்.
கண்ணன்: சாணிப் புழு.
நாஞ்சில் நாடன்: சாணிப்புழு. இதை சுற்றிலும் பறவைக் கூட்டமா வந்து உட்கார்ந்திருக்கும். இந்தப் புழுவை சாப்பிடறதுக்காக. இந்த உரம் எங்களுக்கு அடிப்படை உரம். என்னுடைய ஞாபகத்துல, அம்பது வருஷத்துக்கு முன்னாடிதான் முதல்முதல் நாங்க fertiliser use பண்ணினோம். வயல் வரப்போரத்துல வேம்பு நிற்கும், மஞ்சணக்கு நிற்கும், வாகை நிற்கும், புங்கு நிற்கும்…ஒரு வருஷத்துக்கு ஒருமுறை சேத்துல உழுகிறபோது, நடவுக்கு முதல்நாள் வயல மொழிக்கி, லெவல் பண்ண அப்புறம், அந்தத் தழையை முழுசா வெட்டி மிதிச்சிடுவோம். அதுக்கு மேல நடுவோம். நடவு முடிஞ்சு அடுத்தமுறை உழுகிறோமில்லையா, அப்பநாங்க சேறில்லாம உழுவோம். அதுக்கு நாங்க பொடிப்பருவம்னு சொல்வோம். சேறில்லாம உழறபோது, எங்க அப்பா ஏர் ஓட்றார்னா, அவருக்குப் பின்னாடியே நான் நடப்பேன். ஏன்னா, தோலு, இலையெல்லாம் சீரணம் ஆகி, கம்பு மாத்திரம் கிடக்கும். அந்தக் கம்பப் பொறுக்கி மூணு மாசத்துக்கு எரிபொருளாப் பயன்படுத்துவோம். ஆத்துல பெருவெள்ளம் வந்தா, நானெல்லாம்…எனக்கு நல்லா நீச்சல் தெரியும்…இவ்வளவு ஆழத்துல நின்னு, ஆத்துல, இலைதழைகள், தேங்காய் தென்னை மடலு, மரம் தடியெல்லாங்கூட அடிச்சுட்டு வரும்…காட்டாறு இல்லையா…அதப்புடிச்சு கரையேத்தி வைச்சுட்டம்னா, ஒரு மூணு மாசத்துக்கு விறகு.
சுரேஷ்: உங்க ஊர்ல பழையாறு, இல்லையா?
நாஞ்சில் நாடன்: ஆமா, பழையாறு. இப்ப, கொட்டாங்குச்சினு சொல்றாங்கில்லையா, சிரட்டை…அத என்ன செய்யறதுன்னு தெரியுமா எனக்கு…தேங்காய் மூடியை என்ன செய்யறதுன்னு தெரியல…தென்னை மடல என்ன செய்யறுதுன்னு தெரியல…முன்னாடி வீட்ல நம்முடைய நெல்லை நாமே பொகக்கணும்…அதுக்கு இதெல்லாம் பயன்படுத்துவோம். எங்க வீட்ல நாங்க என்ன பண்றோம்னா – நாங்க நாஞ்சில் நாட்டுக்காரங்க, எங்களுக்குத் தேங்காய்ச் செலவு அதிகம்…எப்படியும் மாசத்துக்கு எங்களுக்கு ஒரு இருபத்தஞ்சு முப்பது தேங்காய் ஆயிடும்…அப்ப அறுபது தொட்டி…இந்த அறுபது தொட்டியையும் சேர்த்து வைச்சி, குட்டைல போடறதில்லை..கட்டிட வேலைக்கெல்லாம் பெண்கள் போறாங்கில்லையா…இது எரிபொருள் அவங்களுக்கு. இந்திய விவசாயத்திலேயே இந்த எரிபொருள நாம மறந்துட்டோம். கேஸ் உங்களுக்குத் தேவை. விவசாயிக்கு எதுக்கு கேஸ்? இத நான் பேசறபோது, இவன் பிற்போக்குவாதிங்கறாங்க. ‘உனக்கு மாத்திரந்தான் கேஸ் அனுபவிக்கக்கூடிய அதிகாரம் இருக்கா? அவன் கேஸ்ல சுவிட்ச் ஆன் பண்ணி தோசை சுடக்கூடாதா?’ நகரத்துல வேலைக்குப் போற டீச்சருடைய, பி.டபில்யூ.டி. க்ளார்க்கினுடைய வொர்க்கிங் ஹவர்ஸ் வேற, கிராமத்து பொண்ணினுடைய வேலைவிகுதி வேற. அவளுக்கு ஒரு பத்து நிமிசம் சமையலுக்கு அதிக நேரம் எடுத்துக்கொள்வதன்மூலம்…ஒரு நெரிசலுமில்லை..எந்த மஸ்டரிலும்போய் கையெழுத்துப்போட வேண்டாம்…இத நாம தப்பா தப்பா சொல்லிக்கொடுத்துட்டம். நாகரிகமயமாதல், விஞ்ஞானத்தப் பயன்படுத்திக்கொள்ளுதல், பயன்பாடு கருதித்தான். இங்க, மாம்பழம் எப்படி நறுக்கி சாப்டறதுன்னே தெரியாது…நகரத்தில் பிறந்த பிள்ளைங்களுக்கு…தோலோடு சேர்த்து நறுக்கி, இப்படி உருவி தூரப் போட்றுவாங்க..இத மாதிரி வருகிறபோது நமக்கு fuel consumption அதிகமாகுது. நான் ஏதோ ஒரு கட்டுரைல எழுதியிருக்கேன்…ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோயமுத்தூர்ல மாத்திரம், நாலாயிரம் தேங்காய் ஒடைச்சு வீணாப் போகுது. நான் ஒரு முறை ரோட்ல, தேங்காய் மூடி, இப்படிப் பிளந்து ரெண்டாக்கெடக்குது – பொறுக்கிட்டு வீட்டுக்குப் போயிட்டேன். அவங்க சத்தம் போடறாங்க. சும்மாதானே கிடக்கு. அடுத்த லாரி அதன் மேல ஏறப் போகுது. தேங்காய் அன்னிக்கு எட்டு ரூவா.
நல்ல நெல்லு 65கிலோ அரிசி அடிக்கும்…எழுவது கிலோ அரிசிகூட அடிக்கும். இது நல்ல அரிசி. இதுல கிடைக்கிற மற்ற விஷயங்கள், குருணை, ரெண்டா உடைஞ்ச அரிசி, நாலா ஒடைஞ்ச அரிசி, தவிடு, உமி, இதெல்லாம் பைப்ராடக்ட். வீட்ல கோழி வைச்சுருந்தா, குருணை கோழிக்கு உணவு. தவிடு மாட்டுக்குத் தொட்டில கலக்கறது. இதெல்லாம் சுத்தமா மறந்துட்டோம். இப்ப விவசாயி என்ன செய்யறான்னா, மொத்த நெல்லையும் அறுபத்தைஞ்சு கிலோ பேக்ல போட்டுத் தைச்சுட்டு, விலையைக் குடுத்துட்டு, கல்குருணை நீக்கப்பட்ட நயம் பொன்னி வெலைக்கு வாங்கிச் சாப்பிடறான். ஒரு நல்ல நெல்லு, நூறு கிலோ நெல்லு, ஆயிரத்திஐநூறு ரூபாய்ன்னா, அறுவத்தஞ்சு கிலோ அரிசிக்கு உங்க அடக்க வெலை எவ்வளவு? நீங்க திரும்பி வாங்கிட்டு வர்றபோது, நாற்பத்தைஞ்சு ரூபா கிலோவுக்கு வாங்கிட்டு வர்றீங்க. இடையில இருக்கக்கூடிய லாபங்களை, நம்ம பொருளாதாரம் கணக்கில எடுத்துக்கவே இல்ல. இது நம்மகிட்ட இருக்கிற பெரிய பிரச்சனை.
இதோ வந்திடறேன். தினமணி சப்ஸ்கிரிப்ஷனுக்கு வர்றாங்க.
சுரேஷ்: அவர் யார்ட்ட சப்ஸ்கிரிப்ஷன் வாங்கறார்னு தெரியுமா?
நாஞ்சில் நாடன்: இதுக்கு முன்னாடி ஒருத்தரு நாஞ்சில் நாடுங்கிறது எங்கிருக்குன்னு கேட்டார். மார்க்கெட்டிங்ல இருக்கவர். தினமணில என்னை பத்தி செய்திகள் prominentஆ போடறாங்க. எப்பவுமே. வைத்தியநாதனை எனக்கு ரொம்ப நல்லாத் தெரியும். இன்னிக்கு பேப்பர் பார்த்தியான்னு கேட்டார்னா, நான் வாங்கிறதில்லன்னு சொல்ல முடியாதில்ல.
சுரேஷ்: நாலு பேப்பர் வாங்கிறீங்க. படிக்க நேரமிருக்கா?
நாஞ்சில் நாடன்: காலைல எல்லாப் பேப்பரும் படிச்சிருவேன். எனக்கு சனி ஞாயிறெல்லாம் கிடையாதில்லையா. நான் இன்னிக்கு விரும்பினா வெளிய போவேன். விரும்பலைனா வீட்ல இருப்பேன். யாரும் கேட்க மாட்டாங்க. பெரிய வேலைங்கிறது டெலிபோன் அட்டென்ட் பண்றதுதான்.
கண்ணன்: writing patternனு ஏதாவது வைச்சிருக்கீங்களா? குறிப்பிட்ட நேரத்துல படிக்கிறது, எழுதுறதுன்னு. நிறைய எழுத்தாளர்கள் அது மாதிரி சொல்றாங்களே.
நாஞ்சில் நாடன்: இல்ல. அது ஒரு பந்தாவுக்கு. அப்படியெல்லாம் இல்ல. சா.கந்தசாமிகிட்ட கேட்டீங்கன்னா, என்னுடைய நாவலின் கடைசி வரியை நான் முதலிலேயே தீர்மானித்துவிடுவேன் என்பாரு. அப்படியெல்லாம் ஒரு எழுத்தாளர்னாலையும் தீர்மானிக்க முடியாது. எழுத ஆரம்பிக்கிற ஒரு நாவல்ங்கிறது எங்க கொண்டுபோய் நிறுத்தும்கிறதே உங்களுக்குத் தெரியாது. நிறையப்பேர் நாவல் எழுதுகிற போது ஒரு ஸ்கெட்ச் போட்டுப்பாங்க. கேரக்டர், சீன் இதுமாதிரி ஒரு அவுட்லைன் போட்டுப்பாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். எனக்கு அந்த பேட்டர்ன் கிடையாது. நான் என்ன issue எழுதப்போறேங்கிறத மனசுல யோசிப்பேன். சதுரங்கக் குதிரைகள் எடுத்தோட்டோம்னா, ஒருத்தனுக்கு நாற்பத்தைஞ்சு வயசாகுது…இன்னும் கல்யாணம் ஆகலை. எனக்கு இவ்வளவுதான் மேட்டரு. இது மனசுல ஊறிட்டே கிடக்கும். இதுக்கு ஒரு ரோல்மாடல் கேரக்டர் எல்லாம் கிடையாது. இதுல என்னுடைய அனுபவங்கள் எல்லாம் நான் சொல்ல முயற்சி பண்ணுவேன். அப்புறம் சில விஷயங்கள நான் ப்ரொஜக்ட் பண்ணிப் பார்ப்பேன். எனக்கே நாற்பத்தஞ்சு வயசில கல்யாணம் ஆகலைனா, என் உறவினர் வீட்ல, என் கொழுந்தியா வீட்ல எனக்கு என்ன வரவேற்பு கிடைக்கும். கல்யாண வீட்ல போயி, கல்யாணப் பொண்ணு மாப்பிள்ளைக்கு சந்தணம் பூசக்கூடக் கூப்பிட மாட்டாங்க. இப்படியெல்லாம் யோசிச்சுட்டுப் போறபோது, ரெண்டு மாசத்துல நமக்கு ஒரு தெளிவு வந்துடும். அப்ப எழுதத் தொடங்கிற ஒரு புள்ளி இருக்கு. அடுத்த சேப்டர்ல என்ன எழுதப்போறோம்னு நமக்குத் தெரியாது. அந்த மாதிரி நான் ப்ளான் பண்ணிக்கிறதில்லை. அடுத்த வரில என் தோள ஒருத்தர் வந்து தொடப்போறார்ங்கறதே எனக்குத் தெரியாது. டெக்னிக்கலா சில ஏரியாஸ் வொர்க் பண்ணுவேன். நீங்க சதுரங்க குதிரை படிச்சிருப்பீங்களா தெரியல.
சுரேஷ்: படிச்சிருக்கேன்.
நாஞ்சில் நாடன்: அதுல ஒரு கனவு சீன் ஒன்னு வைப்பேன். இதெல்லாம் டெக்னிக்கல் வொர்க். இத நான் எத்தனை வெர்ஷன் வேணா எழுதிப்பார்ப்பேன். கொஞ்சம் மிஸ்டிக்கா இருக்கணும். கொஞ்சம் நூதனமா இருக்கணும். இத ரீவொர்க் பண்ணிப் பார்ப்பேன். டைலாக் எல்லாமே ஒரு எழுத்தாளர்க்கு மனப்பாடமா வைச்சுட்டு எழுத முடியாது. One dialogue leads to the second dialogue. That leads to the third one. சண்டைப் போடப் போறாங்கன்னுதான் நான் தீர்மானிக்கிற விஷயம். இந்த ரெண்டு பேருக்கும் சண்டை நடக்கப் போகுது. அது என்ன காரணத்துனாலே சண்டை வரும்? அந்த சண்டை எங்க இழுத்துட்டுப் போகும்…ஒரு கேரக்டரை இங்க காலி பண்ணிறோம்னா காலி பண்ணிடலாம். பின்னாடி உங்க நாவலுக்குத் தேவையா இருப்பான்னா காலி பண்ண மாட்டோம். இதெல்லாம் ஓரளவுக்கு. மூணாவது, writing practice தான். நாற்பது வருஷமா எழுதறேன். ஒரு சென்டென்ஸ்(sentence) எங்க ஆரம்பிச்சாலும் எனக்கு அத முடிக்க முடியும். Subject, predicate இதெல்லாம் போட்டு ஒரு சென்டென்ஸ் ப்ளான் பண்றதில்ல. ‘பார்த்துக்கொண்டிருந்தபோது’னு ஒரு சென்டென்ஸ் ஆரம்பிப்போம். ‘புளிய மரம் காற்றில் சலசலத்து’னு ஆரம்பிப்போம். ‘கடைவாயில் எச்சில் ஒழுகியது’ னு ஆரம்பிப்போம். எப்படித் தொடங்கினாலும் I am able to finish that sentence. இதுல எனக்கு என்னுடைய வாசிப்பு உதவி பண்ணுது. தமிழைக் கையாள்வதில் அச்சமே கிடையாது. மற்ற கல்லூரிப் பேராசிரியர்கள் மாதிரி ஒரு திட்டவட்டமான மொழியைக் கையாளணும்னு ஒரு நெருக்கடி ஒரு க்ரியேட்டிவ் ரைட்டர்க்குக் கிடையாது. அவங்களுக்கு, ‘இப்படி சுட்டிச் செல்கிறார்’, ‘என்று எழுதிச் செல்கிறார்னு’ ஒவ்வொரு சென்டென்சும் கம்ப்ளீட்டா இருக்கணும். In creative writing, each sentence need not be a complete sentence. ரெண்டு புள்ளிவைச்சுட்டு நீங்க அடுத்தப் பாராவுக்குப் போயிடலாம். இந்த சுதந்திரம் க்ரியேட்டிவ் ரைட்டிங்ல உண்டு. சிறுகதை எழுதறோம்னா – நான் கையினாலேதான் எழுதுவேன். கம்ப்யூட்டர்ல அடிக்கறதில்லை – அறுபது முதல் எழுபது சதமானம் first draftல வந்துரும். அப்புறம், தூக்கி வீசிட்டு ஒரு ஏழு நாள் கழிச்சி மறுபடியும் படிச்சுப் பார்ப்பேன். கைல சிவப்புப் பேனா வைச்சுத்தான் படிச்சுப் பார்ப்பேன். கரெக்சன்ஸ் போடுவேன். சென்டென்ஸ் மாத்துவேன். அதக்கொண்டு போய் இங்க வைப்பேன். ஒரு ரெண்டு பாராகிராஃப் எக்ஸ்ட்ரா எழுதுவேன். இதப்பண்ணி வைச்சுட்டு, அடுத்த ட்ராப்ட் காப்பி பண்ண உட்கார்றேன் இல்லையா, அப்ப இன்னும் கொஞ்சம் சேன்ஜ் ஆகும். எப்பவுமே ஒரு பாராவுல ஒரு சொல்லைப் பயன்படுத்தினா, இன்னொருதடவை அந்த சொல்லைப் பயன்படுத்துறதத் தவிர்ப்பேன். மாற்றுச்சொல் போடமுடியுமான்னு யோசிப்பேன். ஒரே பொருளுக்கு. சொன்னான், சொன்னான், சொன்னான்னு எழுதினா சலிச்சுப் போயிருதில்லையா. இந்த சொன்னான்ங்கிற பெர்ஃபெக்சனோட முடியணுங்கிற அவசியமில்ல.
முதல் பாராவுல, நான் பஸ் நிலையம் நோக்கிப் போய்க்கொண்டிருந்தேன்னு எழுதனம்னா, வாசகனுக்குத் தெரியும்…நான்தான் போறேன்னுட்டு. வரிக்கு வரி நான் நான் நான்னு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன்னு சொல்றபோதே that implies நான். அப்ப அங்க இருக்கிற ‘நான்’ஐ கட் பண்ணிடுவேன். இத பயிற்சியின் மூலம் பிறக்கிற ஒரு விஷயம். நிறையப் படிச்சிகிட்டே இருக்கிறோம். விரும்பிப் படிக்கிறோம். ஆசைப்பட்டு படிக்கறோம். ஒரு சமய சந்தர்ப்பம் இல்லாம ஒரு, ஒரு coinage வந்து விழும். சமீபத்துல குங்குமத்துக்கு ஒரு தொடர் எழுதிட்டிருக்கிறேன். அந்த சேப்டரை முடிக்கப் போற சமயத்துல, இது மாதிரியான ஒரு தொடர் – ‘சகாயம் நடந்தது’ன்னு வைச்சுக்கங்க. அந்த சகாயம்கிற சொல் எனக்கு…நான் இப்படி அடுத்த சென்டென்ஸ் எழுதுவேன்…‘சகாயம் என்ற சொல் எனக்கு அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்துகிறது. அவருடைய குடும்பத்தினரை இறையருள் காக்கட்டும். காக்க காக்க கனகவேல் காக்க’ அப்படினு போட்டுக் கோடு போட்றுவேன். இதுல எனக்கு pre-planning கிடையாது. சகாயத்தை நான் சொல்ல வேண்டிய நெருக்கடியும் எனக்கு கிடையாது. நான் தீர்மானிக்கவும் கிடையாது. சகாயம்கிற சொல் என் thought processல ஏற்படுத்திட்டுப் போறதை மிஸ் பண்ண மாட்டேன். அது கட்டுரையா இருக்கிற காரணத்துனால ஒரு சுதந்திரம் இருக்கில்லையா. இத முந்தாநாள்தான் அனுப்பினேன். சகாயம்கிற சொல்…
கண்ணன்: கட்டுரைக்கும் சகாயத்துக்கு எந்த தொடர்பும் இல்லையா?
நாஞ்சில் நாடன்: ஒரு தொடர்பும் இல்லை. சில சமயம், சம்பந்தமில்லாம சில பாடல்வரிகள் ஞாபகத்துக்கு வரும். அனுமன் இலங்கையைப் பார்க்கிற போது, அணிநகர் கிடக்கை…அணிநகருடைய காவல் கோட்டம் இருக்கிறதில்லையா, காவல் அரண்…பார்த்த உடனே அவனுக்கு ஒன்னு தோணுது…கம்பன் என்ன சொல்றான்னா, கறங்குகால் புகா…கறங்குகின்ற – சுழல்கின்ற, கால்னா காற்று…கறங்குகால் புகா கதிரவன் ஒளிபுகா மறலி மறம் புகாது…மறலினா எமன்..இதுக்குத்தான் நமக்கு பொருள் வேணும். திறம்பு காலத்து யாவையும் சிதையினுஞ் சிதையா அறம் புகாது…திறம்பு காலம்னா பிரளய காலம். பிரளய காலத்துல எல்லாமே அழிஞ்சு போயிடும். அப்ப அழியாம நிற்கிறது அறம் ஒன்னுதான். அந்த அறமே புகாது. வானவர் புகாதுன்னு சொல்றது வம்பில்ல? இனிவானவர் புகார் என்கை வம்பே. அப்படின்னு பாட்டு முடியும். இதுல எனக்குத் தோன்ற இடத்துல…ஒரு காற்றச் சொல்றேன்னு வைச்சுக்கங்க…கறம்புகால் புகா கதிரவன் ஒளிபுகான்னு அடிச்சுட்டுப் போயிடுவேன். இது கம்பனை காப்பி பண்றது ஆகாது. கம்பன் எனக்காகத்தான விட்டுட்டுப் போயிருக்கான். அத நான் திரும்ப எடுத்தாள்றேன். கையாள்கிறேன். சிறுகதைக்குள்ள வருதா, கட்டுரைக்குள்ள வருதான்னெல்லாம் பெரிசா கவலைப்பட மாட்டேன்.
இங்கயே நக்கல் பண்ணனும்னு ஒரு ஐடியா வந்துருச்சுன்னா, வேற வகையா எழுதுவேன். கோவையைப் பற்றி எழுதும்போது, கோவைனா கோயமுத்தூருடைய சுருக்கம் இல்லைனுதான் தொடங்குவேன். கோவை என்பது கோவை இலக்கியம். நானூறு பாட்டு, அகத்துறை இலக்கியம், இதெல்லாம் சொல்லணும். இதுல எடக்குப் பண்ணனும்னு தோணுச்சுனா நம்ம மொழி வேற மாதிரி இருக்கும். சில சமயம் வம்புக்கு….இப்ப லா.ச.ரா எழுதுற எல்லா வார்த்தையும் எனக்குப் புரியவா செய்யுது…புத்ர வாசிக்கிறபோது எனக்கு 19 வயது…முதல் வாசிப்புல ஒன்னும் புரியல…ஆனா ரெண்டாவது வாசிப்புக்கான ஒரு தூண்டுதலை அந்த நாவல் எனக்குள்ள வைச்சிருந்தது…ஒரு அஞ்சு வருஷம் கழிச்சு ரெண்டாவது தடவை படிக்கிறேன்…இன்னொரு பத்து வருஷம் கழிச்சு மூணாவது தடவை படிக்கிறேன். அப்பத்தான் எனக்குப் புரியுது…புத்ரவுடைய central characterஏ தாய் வயிற்று சாபம்..இந்த விஷயம் புரியறதுக்கு எனக்கு மூணு வாசிப்பு….இத லா.ச.ரா. வெளிப்படையாப் பேசமாட்டார். எதுக்குப் பேசணும்…என்னுடைய தரத்துக்குப் படிக்க வர்றவன் என்கிட்ட வரட்டும்…இல்லைனா அங்கயே நின்னுக்கோ…உனக்கு எது செறிக்குமோ அத சாப்பிடு. எனக்கு ப்ரோட்டா டைஜஸ்ட் ஆகறதில்ல. So I don’t take it.
கண்ணன்: இந்த அணுகுமுறைல, குங்குமம், விகடன் மாதிரி பெரிய இதழ்கள்ல எழுதும்போது, அப்படி எழுதறதுக்கான சுதந்திரம் உங்களுக்கு கிடைக்கிறதா?
நாஞ்சில் நாடன்: நான் compromise பண்ணிக்கிறதில்லை. நான் எழுதுறேன்கிறது நான் எழுதறுதுதான். விகடன்க்கு எழுதினாலும் சரி, குங்குமத்துக்கு எழுதினாலும் சரி. ஆனா, என்ன பண்ணுவேன்னா, குங்குமத்துக்கு ஒரு தொடர் எழுதிகிட்டிருக்கிற போது, ரெண்டு chapter incidents base பண்ணி கொஞ்சம் சுவாரசியமான விஷயங்கள சொல்றேன்னா, ஒரு சாப்டர் சீரியசா இருக்கும். அவன் என்னைத் தொடர்ந்து வருகிற போது, சீரியசா இருந்தாக்கூடப் படிச்சிடுவான். அப்புறம் மறுபடியும் நான் ஒரு இன்சிடென்டுக்குப் போயிடுவேன். ஒரு வாரத்துக்கு முன்னால ஹோப் காலேஜ் சிக்னல்ல நின்னுட்டிருக்கேன்…பர்தா அணிந்த ஒரு பெண் க்ராஸ் பண்றா…டூ வீலர்ல, தகப்பனார் வண்டியோட்டறாரு – ஒரு பொம்பளப் புள்ள பின்னால உட்கார்ந்திருக்கா. அவ இவளை பாத்திமான்னு கூப்பிடறா…இவ திரும்பிப் பார்த்திட்டு…அவளுக்கும் இவள அடையாளம் தெரியும்…இவளுக்கும் தெரிஞ்சிருக்கு…சிக்னல் முடியற வரைக்கும் ரெண்டு பேரும் பேசறாங்க…இந்த பேச்சு நடந்திட்டிருக்கிற போது பாத்திமாவுடைய முக்காடு கழுத்துக்கு வந்திருது. இந்துப் பொண்ணு வண்டில உட்கார்ந்திருக்கா…அவளைப் பார்த்துட்டே இருக்கா…இந்துப்பெண் வண்டியில உட்கார்ந்துட்டே முக்காட எடுத்து அவளுக்குப் போடறா…நான் இவ்வளவுதான் சொல்லுவேன். இதுல நின்னு தத்துவம் பேச மாட்டேன். ஏன்னா அவங்க தோழிகள், ரெண்டு பேரும் சேர்ந்து படிச்சிருக்காங்க. இவளுக்கு அது முக்கியம்னு தெரியது. அவங்க மரபுல தலைல முக்காடு இல்லாம இருக்கிற இஸ்லாமியப் பெண், தான் கிட்டத்தட்ட ஆடையில்லாம இருக்கிற உணர்வப் பெறுகிறாள்ங்கிற அந்த உணர்வுக்கு அவள் மதிப்பு கொடுக்கிறா. இந்த மாதிரியான ஒரு இன்சிடென்டை ஏற்கனவே நான் குங்குமத்துல எழுதியாச்சு. வைசியாள் வீதி பஸ் ஸ்டாப்ல நின்னுட்டிருந்தேன். ஒரு இந்துப் பெண்…அடையாளங்களப் பார்த்தாத் தெரியுது. இளவயதுப் பெண்தான். ப்ரா ப்ளவுஸ்ல இருந்து நகர்ந்திருக்கு. இதப் பார்க்கிற வயசெல்லாம் நான் தாண்டியாச்சு. அந்த இடத்துல அதையும் பேசிடுவேன். ‘உம்ம வயதுல நீர் பொம்பளப்புள்ளைங்களுக்கு ப்ரா பார்த்துட்டு இருக்கீங்களன்னு கேட்பீங்க – அத தேடிப்பார்த்த காலமுண்டு. இப்ப காட்சிப்படுகிற காலம் எனக்கு.’ உடனே, ஒரு அஞ்சு நிமிஷத்துல, ஒரு இஸ்லாமியப் பெண்குழந்தை, காலேஜ்ல படிக்கிற குழந்தையா இருக்கும். பேக் போட்டுட்டு வந்து நிற்குது. இப்படித் திரும்பிப் பார்க்குது. இவளுடைய இடதுகைப்பட்டை வெளிய இருக்கு. உடனே அவ விரல விட்டு ப்ளவுச இழுத்து மூடுது. இத நான் பதிவு பண்ணியாச்சு. இத மாதிரி விஷயம் சொல்றபோது, இது எந்த வாசகனையும் சுவாரசியமா வாசிக்க வைக்கும். குங்குமம் வாசகனோ, தினகரன் வாசகனோ, அவன் சுவாரசியத்தோடு படிப்பான். ரெண்டு இது மாதிரிக் கொடுத்தேன்னா, மூணாவதுல நச்சுனு அடிச்சுடுவேன். அவன் இதை வாசிச்சு வந்ததுல இவர் ஏதோ சொல்லப்போறார்னு அவனே அதை முழுங்கியாகணும். சீரணம் ஆகுதோ ஆகாட்டியோ…மெல்ல சீரணம் ஆகும். நம்ம அதைப்பற்றிக் கவலைப் பட்டுட்டு இருக்க முடியாது. போன இதழில், வாழ்த்த வயதில்லை ஆகவே வணங்குகிறோம்ங்கிறத எடுத்துட்டேன். நான் எப்படித் தொடங்கிறேன்னா, ‘நமச்சிவாய வாழ்க, நாதன்தாள் வாழ்க, என்னெஞ்சில் நீங்காதான்தாள் வாழ்கனு மாணிக்கவாசகர் சிவபெருமானவிட மூத்தவர்னுட்டா வாழ்த்தறான். வாழ்த்துங்கிறது வியங்கோள் வினைமுற்று. ஒரு ஏவல் சொல் அது. வாழ்த்துவதற்கு வயசு வேண்டாம்பா. இப்படின்னு ஆரம்பிச்சுட்டு, மணற்கொள்ளைல ஊழல், இதுல ஊழல்னு ஊழல்க்குனு ஒரு பட்டியலே போடலாம். ஒரு அகராதி தொகுக்கலாம் போலிருக்கு.’ இதைக் குங்குமம் போடுவாங்கனு கூட நான் எதிர்பார்க்கல. அது ஒரு சீரயசான கட்டுரை. என்னுடைய ஏழாவது கட்டுரை.
சுரேஷ்: ஃபீட்பேக் வருதாங்க சார் இதுக்கெல்லாம்.
நாஞ்சில் நாடன்: நல்ல ஃபீட்பேக் வருது. கூப்பிட்டுச் சொல்றாங்களே. வேடிக்கையாச் சொன்னாங்க, ‘சார், எங்க TRP rating எகிறிட்டு இருக்கு’ன்னு. சும்மா நக்கல் பண்றாங்கன்னு எடுத்துகிட்டேன்.
(தொடரும்)
பகிர்ந்துகொள்ள,அச்செடுக்க
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
Related
About S i Sulthan
Phone: 9443182309
Nellai Eruvadi