நாஞ்சில் நாடன் படைப்புகளில் மொழிக்கூறு

Sivanantham Neelakandan

(நூலறிமுகம், இலக்கிய விமர்சனம், கட்டுரைகள், வரலாற்றாய்வு, மொழியாக்கம் ஆகியவற்றில் ஆர்வமுள்ள வாசகர். கரையும் தார்மீக எல்லைகள், சிங்கைத் தமிழ்ச் சமூகம் – வரலாறும் புனைவும் ஆகிய நூல்களின் ஆசிரியர்.)
‘பதாகை’ மின்னிதழ் 2015ஆம் ஆண்டு நாஞ்சில் நாடன் சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டது. அப்போது நாஞ்சில் எழுத்துகளில் மிகவும் பைத்தியமாக இருந்த காலம் என்பதால் இதழாசிரியர் என்னிடம் ஒரு கட்டுரை கேட்டபோது மகிழ்ச்சியுடன் எழுதிக்கொடுத்தேன். ஒருவிதமான உணர்ச்சிவசப்பட்ட மனநிலையில் எழுதியது என்பது இப்போது வாசிக்கும்போது சில இடங்களில் தெரிகிறது.
கீழே அக்கட்டுரை.
**
‘சூடிய பூ சூடற்க’ சிறுகதைத்தொகுப்பிற்கான சாகித்ய அகாதமி விருது (2010) இலக்கிய உலகில் வரவேற்கப்பட்டதும், ஊடகங்களில் கொண்டாடப்பட்டதும் அதன்வழியாக அவர்பெயர் இந்தத் தலைமுறை வாசகர்களைச் சென்றடைந்ததும் நாஞ்சில்நாடன் எழுத்துக்களின்மீது அதிக கவனம் ஈர்க்கப்பட முக்கியக் காரணங்களாக இருக்கக்கூடும். அவ்வகையில் சாகித்ய அகாதமி விருதுகள் ஓய்வுக்காலப் பலனாக இருப்பதாகக் குறைசொல்லப்பட்டாலும் அவை எழுத்தாளர்களின்  முகவரிகளாகவும் இருப்பதில் ஒரு வாசகனாக எனக்கு மகிழ்ச்சியே. சமீபகாலமாக அவரது படைப்புகள் மறுபதிப்புகள் காண்கின்றன. இந்த நிலையில் அவரது படைப்புகளின் மொழிக்கூறுகள் குறித்தது இக்கட்டுரை.
எட்டுவருடங்களுக்குமுன் தமிழில் புனைவு வாசிப்பது வெட்டிவேலை என்ற முன்முடிவுடன் அந்தப் பக்கமே திரும்பாமலிருந்தவனை ருசிகாட்டி அழைத்துவந்தது நாஞ்சில் நாடனின் ‘தலைகீழ்விகிதங்கள்’ நாவல். அதன் கதையமைப்பு அல்ல, மொழிதான் அத்தூண்டிலைப் போட்டது. அம்மொழி உந்தி இழுத்த வேகத்தில் அவரது மற்ற ஐந்து நாவல்களையும் விறுவிறுவென்று வாசிக்கவேண்டியதாயிற்று. பிறகு சிறுகதைகள், கட்டுரைகள் என்று தேடிப்பிடித்து வாசிக்கத் தொடங்கியது இன்று ‘கைம்மண்ணளவில்’ தொடர்ந்துகொண்டிருக்கிறது. எந்தச் சிந்தனையுமில்லாமல் வாசித்தவேகத்தில் கவர்ந்த அம்மொழியை அதில் எதுகவர்ந்தது என்று கண்டறியும் நோக்கில் ஆராய்ந்தபோது தட்டுப்பட்டவைகளைப் பார்க்கலாம்.
முதலாவதாக, சிறப்பான ஆனால் அனேகமாக மறைந்துவிட்ட கிராமத்துப் பேச்சுத்தமிழ்  வார்த்தைகள்.
அவ்வார்த்தைகளை வாசித்ததும் இதைப் பாட்டி பேசுகையில் கேட்டதுண்டே, இதைத் தாத்தா பயன்படுத்தியதுண்டே, எப்படி இதன் பயன்பாடு தேய்ந்தது என்று சிந்தனை முன்பின்னாக ஓட ஆரம்பித்து வாசிப்புத் தொடர்ச்சி அறுந்த அனுபவங்கள் ஒன்றல்ல, இரண்டல்ல.
‘சதுக்கப்பூதம் ஒன்னுதான் பாக்கி’ என்றவரியிலிருக்கும் ‘பாக்கி’ அங்கேயே வாசிப்பை நிறுத்தி அனுபவிக்கச்சொல்வது ஒருபக்கமென்றால் ‘நெல்லு காய்ச்சல் போறாது…சாவி ரொம்ப’ என்பதிலிருக்கும் சாவி வேறுவிதமான யோசனைகளைக் கிளப்பியது. இந்தச் ’சாவி’ தஞ்சாவூர்ப்பக்கம் கேட்டிருந்த ‘கருக்கா’யை நினைவூட்டியது. பிறகு என்றோ ஒரு நாளில் குறளை வாசித்துக்கொண்டிருக்கையில் ‘துனியும் புலவியும் இல்லாயின் காமம் கனியும் கருக்காயும் அற்று’ என்பதைப் படிக்க நேர்ந்தபோது அதில் கருக்காயைக் கண்டதும் அடைந்த காரணம்புரியாத மகிழ்ச்சிக்கு ஈடுசொல்லவியலாது. அம் மகிழ்ச்சிக்கான விதையைப் போட்டது நாஞ்சிலின் மொழி.
இந்தக் கருக்காயை இளநீர் என்ற பொருள்பட மலையாளத்திலும் நாஞ்சில் நாட்டிலும் வழங்கும் கருக்கு என்று நாஞ்சில் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார். ஆனால் இது சரியானபடி வளர்ந்து முற்றாமல் கருவிலேயே காயாகிவிட்ட எந்தக் காயையையும் குறிக்கும் பொதுச்சொல்லாக இருக்கலாம் என்பது என் ஊகம்.
‘காலம்பற எங்க போயிருந்த?’ என்ற அவர் வரி, நாம் இப்படித்தானே பேசிக்கொண்டிருந்தோம், எப்போது ‘காலம்பற’வை ‘காலைல’வாக மாற்றிக்கொண்டோம்? என்ற கேள்விகளைக் கொடுத்ததுண்டு. உடனடி விடைகள் இல்லாத இக்கேள்விகள் சிந்தனையைக் கிளறுபவை. தோது, வசக்கேடு, தணுப்பு, அனப்பு, செத்தை, நெரிபிரி (busy என்பதற்கு இணையான சொல்), திராணி, ஆஸ், அத்து என்று நீண்டுகொண்டுபோகும் இச்சொற்பட்டியல் நாஞ்சில் நாவல்களின் மொழிக்கொக்கிகள். தவறிப்பட்டுவிட்டால் வாசகர்கள் சிக்கிக்கொள்வது உறுதி.
இரண்டாவது, அவர் கதைகளில் ஊடும்பாவுமாக வரும் பழந்தமிழ்ப்பாடல் வரிகளும் குறிப்புணர்த்தும் மற்ற சொல்லாடல்களும்.
ஆயுள் காப்பீட்டு முகவர் ஒருவர் ஒரு பாலிசி எடுக்கவைப்பதற்காக என்னென்னவோ பேசியும் ஆள் வழிக்குவராததால் திருமூலரைத் துணைக்கழைத்து ‘இடப்பக்கம் இறை நொந்ததே என்றார்; கிடக்கப்படுத்தார் கிடந்தொழிந்தாரே’ என்பதை விளக்கிச் சொல்லும் காட்சி வாசித்தவர் மறக்கவே இயலாத இடம். இந்த எழுத்துச் சாமர்த்தியம் சாமான்யமானதல்ல. அதுதரும் இலக்கிய இன்பமும் குறைந்ததல்ல.
இன்னோரிடத்தில் “பூலிங்கத்தைப்பார்த்து கண்கள் நீர் மல்கியது. ‘புரந்தாற் கண் நீர்மல்க’ என்று சம்மந்தமில்லாமல் ஞாபகம் வந்தது” என்ற வரிகள் வாசகர் இது குறளாகத்தான் இருக்கவேண்டும் என்று ஊகித்துத் தேடிக்கண்டுபிடித்து அனுபவிக்க (குறள் எண் 780) வேண்டுமென்று திட்டமிட்டே விரிக்கப்பட்ட வலைதான். அதேவரியில் சம்’பந்த’ என்றெழுதாமல் பேச்சுக் கொச்சையான சம்’மந்த’ வந்திருப்பதையும் கவனிக்கலாம்.
இந்நுட்பங்களே நாஞ்சில் எழுத்துக்களிடம் காரணம்புரியாத நெருக்கத்தை நமக்கு உண்டாக்குபவை. ஒரு பெரியப்பா பாத்திரம் என்று நினைவு. அது ‘மீசையுள் ளாண்பிள்ளைச் சிங்கங்கள் என்கூட வெளியினில் வாருங்கள் காணும்’ என்று குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்களை நமக்கு அறிமுகம் செய்கிறது.
ஏதோ திருமந்திரம், திருக்குறள், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், அகம், புறம், சித்தர்பாடல்கள்தாம் என்றில்லாமல் ஓரிடத்தில் “அவர்தன் ‘மலைத்தோட்ட’ உரையைத் தொடங்கினார்” என்று பஞ்சாயத்து பேசத்தொடங்கும் ஒருவருக்காக எழுதுவது நாஞ்சிலுக்கு இருக்கும் விவிலியப் பயிற்சியையும் காட்டுகிறது. அவ்வகையில் இவர் அறிந்ததில் எதையும் கரப்பதில்லை, எழுத்துக்களில் தன்னை வெளிக்காட்டத் தயங்கிக் கரந்துறைவதுமில்லை.
ஆங்காங்கே இயல்பாகத் தெறிக்கும் இம்முத்துக்களில் பழமை மட்டுமேதானா  என்றால் அதுவும் இல்லை. ‘பின்னி முடிச்சிடம்மா, பிச்சிப்பூ சூட்டிடம்மா’ என்று கவிமணி தேசியவினாயகத்தை மேற்கோள் காட்டுவது முதல் ‘அதுல போயி என்ன கெடக்கு’ என்ற கண்மணி குணசேகரனின் சொல்லாட்சியைக் கடன்வாங்கி வாசகருக்குத் தருவதுவரை நவீன எழுத்துக்களும் பஞ்சமில்லாமல் பயின்று வருகின்றன. இந்த இடத்தில் இன்னொரு விஷயம். பேச்சுவழக்கிலிருக்கும் கொச்சைத் தமிழ் மொழியும், பழந்தமிழிலக்கிய மொழியும் சடார்சடாரென்று கலந்துங்கட்டியுமாக நுரைத்துக்கொண்டு வருவது ஒருவித மயக்கத்தைத் தருகிறது. நாஞ்சில் படைப்புகளின் மொழி அவ்வகையில் உயர்தர காக்டெயில் மொழி!
மூன்றாவதும் இறுதியானதுமாக அடுக்குவிவரச்சொற்கள். இச்சொற்களை நாஞ்சிலின் முத்திரை மொழிநடை எனலாம்.
ஒருமுறை தமிழறிஞர் மா.நன்னன் எவ்வெந்த இடங்களில் ‘முதலான, போன்ற, ஆகிய’ இவற்றைப் பயன்படுத்தவேண்டும் என்பதை விளக்கினார். சேரன் ‘முதலான’ மன்னர்கள் என்றோ, சேரன், சோழன் ‘போன்ற’ மன்னர்கள் என்றோ, சேரன், சோழன், பாண்டியன் ‘ஆகிய’ மன்னர்கள் என்றோ எழுதவேண்டுமென்பது அவர் செய்தி. ஆனால் நாஞ்சிலின் முத்திரை மொழிநடை இந்த விஷயங்களைப் பற்றிக் கவலைகொள்வதில்லை. Etc., என்று சுருக்கி எழுதப்படும் Etcetera என்ற வார்த்தையை இவர் அறிந்திருக்கவில்லையோ என்று சந்தேகம் வருமளவுக்கு அனைத்தையும் குறிப்பிடுவதே நாஞ்சிலின் அடுக்குவிவரச்சொற்கள்.
மத்தியப்பிரதேச ரயில் நிலையத்தில் நிற்பது போன்ற உணர்வைத் தரும் வகையில் எங்கும் ஒரே தெலி, தெல்கே, ஷிண்டே, ராணே, இன்னும் பிறர் என்று நாஞ்சில் எழுதுவதில்லை. மேலும் தொடர்ந்து
தெலி, தெல்கே, ஷிண்டே, ராணே, பால்கர், போர்லேகர், காம்ளி, காம்ளே, ஆம்பேகர், கார்பாரே, நட்கர்னி, குல்கர்னி, ஷிவ்தார்கர், மோரே, போக்ளே, பாண்டேகர், பண்டார்கர், ஆப்தே, மானே, அம்ராபூர்கர், பாலேகர், பாட்டில், பட்டேகர், பாட்கர் மற்றும் அவர்தம் பெண்டிர்…
என்றுதான் எழுதுவது வழக்கம். முதலில் வாசிக்கும் ஒருவருக்கு ஏன் விஷயத்துக்கு வராமல் இப்படி பட்டியல் போட்டுக்கொண்டே போகிறார் என்று தோன்றலாம், தோன்றும். ஆனால் சொல்லவந்ததை முழுமைசெய்துவிடும் எழுத்தாளனின் பொறுப்பும் அவற்றின்மீதான கவனமும் வாசகரை அசரச் செய்யும்போது அச்சலிப்பு அகன்று அடுத்தது என்ன வரிசை வருமோ என்ற ஆவல் பிறக்கும்.
சூடிய பூ சூடற்க-வைச் சொல்லி ஆரம்பித்த கட்டுரையை அதைச் சொல்லியே முடித்துவிடுவோம். அரசாங்க அலுவலகங்களில் பணியாளர்கள் பொறுப்பற்று நேரத்தை சொந்த விவகாரங்களுக்குச் செலவிடுவதைச் சொல்ல வருபவர் இவ்வாறு எழுதுகிறார்;
வங்கிக்கு, மருத்துவரைப் பார்க்க, காய்கனி வாங்க, தேநீர் அருந்த, சிற்றுண்டி தின்ன, சீட்டுப்பணம் கட்ட, ஆயுள்காப்பீட்டுத் தவணை கட்ட, தைக்கக் கொடுத்த துணிகள் வாங்க, பக்கத்து அலுவலக நண்பரிடம் உரையாட, சொந்த வீட்டுக் கொல்லையில் புதர் வெட்டும் செலவுக்கு கடன் கேட்டு விண்ணப்பம் கொடுத்தது அனுமதிக்கப்பட்டதா என்று மேல்விவரம் கேட்க, தன் சொந்தக் காரணங்களுக்காகப் பின்தொடரும் அரசியல் கட்சிக்கு வாக்கு சேகரிக்க…….
முடிவதில்லை இம்முத்திரை!
நாஞ்சிலின் மொழி என்றதும் முன்வந்து நின்றது இம்மூன்று கூறுகள். கொஞ்சம் ஆற அமர உட்கார்ந்து பார்த்தால் இன்னும் நிறைய அம்சங்கள் ஒளிந்துகிடக்கலாம் இம்மொழிக் காதலனின் எழுத்துக்களில். நாஞ்சில் என்ற சொல்லுக்குக் கலப்பை என்றொரு பொருளுமுண்டு. இந்த நாடன் சொல்லேர் உழவன் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.
***
சிவானந்தம் நீலகண்டன்
https://sivananthamneela.wordpress.com/2020/06/27/நாஞ்சில்-நாடன்-படைப்புகள/

 

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள் and tagged , , , , , , , . Bookmark the permalink.

1 Response to நாஞ்சில் நாடன் படைப்புகளில் மொழிக்கூறு

  1. செ. அன்புச்செல்வன் சொல்கிறார்:

    நான் உங்களளவுக்கு கட்டுரையாக எழுதமுடியவில்லை. ஆனால், நீங்கள் சொல்கிறீர்களே… நாஞ்சில் நாடனின் சொற்கொக்கிகள், அவற்றில் தவறி மாட்டிக்கொண்டவன்தான் நானும். இல்லாப்பொருளுக்குச் சொல்லேதுமில்லை என்று தொல்காப்பியத்தைத் துணைக்கழைத்துக்கொண்டு சொற்களை கோவையாக்கி எழுதும் திறம் நாம் வாழும் இந்தக்காலகட்டத்தில் எவருக்கும் இல்லை என்றால் மிகையே இல்லை. நாஞ்சில்நாட்டு வழக்கு மொழி மட்டுமல்ல, இருபது-முப்பது ஆண்டுகளாக கோவையில் இருப்பதால் கொங்கு வழக்கிலும் தேர்ந்தவர் என்பதை அவரின் எழுத்துகளின் மூலம் உணர்ந்திருக்கிறேன். குறிப்பாக, எந்தவொரு தலைப்பில் எழுதினாலும், ஒவ்வொன்றிலும் தனிச்சிறப்பாக சில அறச்சீற்றத்தை உணர்த்தும் வரிகள் நையாண்டியாக இருக்கும். அதை வாசிப்பதற்காகவே, நான் நாஞ்சில்நாடனின் பக்கத்துக்கு வருகிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s