பூலிங்கம் தான் வாழ தனது நியாங்களுடன்

தான் வாழ தனது நியாங்களுடன்
-இரா.சிவசித்து
எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பற்றிய நினைவு எனக்கு வரும் போதெல்லாம் அவருடைய “கதை எழுதுவதன் கதை” என்ற சிறுகதையில் வரும் நாஞ்சிலின் பிரத்யோகமான பாத்திரப்படைப்பான கும்பமுனிப் பாட்டாவின் வசனம் ஒன்று நினைவில் வந்தகலும். மூலத் தொந்தரவை பொறுத்துக் கொண்டு தனக்கு வந்த கடிதமொன்றைப் பிரிப்பார் பாட்டா. தீபாவளி மலருக்கு 1000 வார்த்தைக்கு மிகாமல் கதை ஒன்று வேண்டி வந்த கடிதம் அது. படித்த மாத்திரத்தில் கும்பமுனி சொல்வார்.
“தாயோளி பள்ளிக்கொடத்திலே வாத்தியாரா இருந்திருப்பான் போல…… மார்க் போடுதுக்கு கேள்வி கேக்கான்…… அவனுக்கு அம்மை எழுதுவா கதை ஆயிரம் வார்த்தை எண்ணிக் கணக்குப் பாத்து… சவம் சுட்ட செங்கலு பாரு, எண்ணி வரி வரியா அடுக்கதுக்கு?” நாட்டான் பகடியுடன் வரும் தார்மீக கோவம். படைப்பை வெட்டிக் கத்தரித்து முடமாக்கி, குழந்தைகள் மற்றும் மூப்பு எய்தோர் உண்ணும் பதத்தில் குலைய வடித்து, தட்டில் இட்டு வாசகனுக்குத் தின்னக் கொடுக்கும் படைப்பின் வீச்சு அறியாத இதழ்கள் மீதான கோவம். பகடியும், கோவமும் அவர் எழுத்தின் இரு முக்கிய கூறுகள்.
“படைப்பு என்பது உள்ளாடையின் உள்ளறையில் வைத்துப் பாதுகாத்துத் திரியும் ஒன்றல்ல என்பதால் களவாடிக் கொள்கிறார். எந்த நாணயமும் இன்றி” – “எட்டுத் திக்கும் மதயானை” நாவலின் பின்னட்டையில் நாஞ்சில் நாடன். நாஞ்சில் நாடன் நமக்கு அறிமுகப்படுத்துவது அவருடைய நிலம், உணவு, சொல் மட்டும் அல்ல! அவரது படைப்பின் வழியே வெளிப்படும் ஆண்களின் உலகத்தையும்தான். தலைகீழ் விகிதங்கள்ளின் சிவதாணு, என்பிலதனை வெயில் காயும்  நாவலின் சுடலையாண்டி, சதுரங்க குதிரை யின் நாராயணன். மாமிசப் படப்பு ன் கந்தையா, மிதவை யில் சண்முகம், எட்டுத் திக்கும் மதயானை நாவலில் பூலிங்கம் வரையில் அத்துணை ஆண்களும் நம்மிடம் ஒட்டியும், வெட்டியும் ஏதோ ஒரு புள்ளியில் துலக்கம் பொறுப்பவர்களே!
நாஞ்சிலின் சொல்வழக்கு தவிர்த்துப் படைப்புகளில் எடுத்தாளப்படும் அவருடைய கதைமொழி, கூர்ந்து கற்ற மரபிலக்கியம் வழி அவருக்குக் கைவரப்பெற்ற ஒன்று. கதைகளினூடே வந்து விழும் உவமைகளில் கம்பராமாயண வரிதுடங்கி தனிப்பாடல் திரட்டு வரை வந்து விழுவதை வாசகன் பார்க்க முடியும். இது நாஞ்சில் நாடனின் ஒட்டுமொத்தமான படைப்புகளின் மதிப்பீட்டைச் சொல்லும் நோக்கில் எழுதப்பட்டதல்ல. அதே சமயம் மேற்கூறியவற்றின் சாரமே ஒவ்வொரு படைப்பிலும் உயிர்பெற்றுத் தனித்துவம் பெறுகிறது. 1977யில் இல் இருந்து இன்றைய தேதி வரையில் எழுதிவரும் நாஞ்சில் நாடனுடைய, ஆறாவது நாவலான “எட்டுத் திக்கும் மதயானை” வெளியானது 1998 இல், இன்றோடு (2020 வரை) கணக்கிட்டுப் பார்த்தோமேயானால் 22 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்றும் நாஞ்சில் நாடன் எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்.
ஆனால் 1998 க்கு பின் நாவல் எழுதவில்லை. அதனுடைய பொருள் சேகரம் தீர்ந்துவிட்டதென்றோ , தூர் தட்டிவிட்டதென்றோ அல்ல. தமிழில் நலிந்து கொண்டிருக்கும் கட்டுரை இலக்கியத்திற்குத் தொடர்ந்து சொல்லாழி, எப்படிப் பாடுவேனோ, விசும்பின் துளி போன்ற படைப்புகள் மூலமாகத் தனது பங்களிப்பைத் தந்து கொண்டிருக்கிறார். ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்” தானே!
கிராமங்களில் “முடுக்குப்பட்டு ஓடுதல்” என்றோர் சொற்பிரயோகம் உண்டு. ஊர் கூடிப்பார்க்கும் பொது நடுவீதியில் விட்டு துணியுறுவப்படுவது போல அவமானம் ஒன்று ஏற்பட்டு, அதை மென்று சேமிக்க வழியற்று, உள்ளுக்குள் உழன்று மார்க்கம் தேடி, தெசவிதி கோலமாகத் தூரத் தொலைவு ஓடுவதற்கு அப்படிப் பெயர். “எட்டுத்திக்கும் மதயானை” நாவலின் நாயகன் பூலிங்கத்திற்கும் அப்படி ஒரு கதிதான் நேர்கிறது. அதுவும் செய்யாத ஒன்றுக்காக! அவன் சற்றும் எதிபார்க்காத நேரத்தில் நடக்கிறது தெய்வநாயகம்பிள்ளையும் அவர் கூட்டாளிகளும் சேர்ந்து பூலிங்கத்தின் மேல் நிகழ்த்தும் தாக்குதல். தெய்வநாயகம்பிள்ளையின் மகள் செண்பகத்திடம் சாதாரணமாக பூலிங்கம் பேசிய ஒரு வார்த்தைக்காக விழுகிற அடி அது. “கொசப்பய” தானே என்ற இளக்காரம். வெள்ளாளப் பொண்ணு கேக்குதோ” என்ற சாதியும். இரண்டும் சேர்ந்து விழுந்த அடியில் விதை வீங்கிப் போகிறது பூலிங்கத்திற்கு.
இயலாமை, கோவம், அவமானம் எல்லாம் உள்ளுக்குள் நெருப்பாக எரிய பூலிங்கம், தெய்வநாயகம்பிள்ளையின் வைக்கோல் படைப்புக்கு தீவைக்கிறான். விசயம் மெல்லக் கசிவதை உணர்கிறான். இனி ஓடுவது தவிர வழியில்லை என்றாகிறது.
உலகின் மிக அதிக அளவிலான வலைப்பின்னல் அமைப்பு கொண்ட நிறுவனங்களில் இந்திய ரயில்வேயும் ஒன்று. திசையறியாத ஓட்டத்திற்கு அதைவிட என்ன தேர்வு அப்போது. இரும்புப் பாதையின் வரைபடமொன்றை மேசைமேல் விரித்துப் பார்ப்பது போல குறுக்கும் நெடுக்குமாக சுழன்று ஓடுகிறது பூலிங்கத்தின் வாழ்க்கை . “பிழைத்தால் போதும்” என்ற குறைந்த பட்ச தேவையுடனே தான் ராய்ச்சூரில் ஐஸ்கிரீம் கப் விற்கிறான். யாரும் பிறக்கும்போது வெஞ்சினம் கொண்டு கூர்வாள் பிடித்து, குருதி பார்க்க வரம் கேட்டு வருவதில்லை. விழுகிறது அடி…! மாறி…. மாறி… பட்ட இடத்திலேயே! தாக்குதலுக்கு இல்லையென்றாலும் தற்காத்துக் கொள்வதற்காகவாவது ஏதாவது செய்தாக வேண்டுமே? கத்தி எடுக்கிறான் பூலிங்கம். “குத்தீருவயாடா நீ மாதர் சோத்” கேட்கிறது இளக்காரச்சிரிப்பொலிகள் நாலுபக்கமும். கண்முன் விரிகிறது அவமானத்திரை, தெய்வநாயகம்பிள்ளையின் சிரிப்பு முதல் வீங்கிய விதைகள் வரை நொடிப்பொழுதில் கண்முன் ஓடுகிறது காட்சிகளாக, சொன்னவன் அடிவயிற்றில் கத்தியைப் பாய்ச்சிவிட்டு பூலிங்கம் ஓடுகிறான். வசதிக்கு ஆசைப்பட்டு, தன்னை நம்பிய பாபியிடமே மாட்டிக்கொண்டு அங்கிருந்து அவமானத்தால் மறு ஓட்டம், சரக்கு வாங்கி மாற்றி அதில் ஒரு நாள் பிடிபட்டு அங்கிருந்து ஒரு ஓட்டம். பொட்டணம் மாற்றி அதைப் பறிகொடுத்து, அடிபட்டு அங்கிருந்தும் ஓட்டம். அடிக்கு மானப்பட்டு ஓடிய பூலிங்கம் இறுதியில் பம்பாய் வந்து சேரும் பொது “உசுரு எனக்கு மயிராச்சு” என்று சொல்லும் மனநிலையோடு இருக்கிறான்.
இடையில் ஒரு நாள் பம்பாயில் செண்பகத்தைத் தற்செயலாகப் பார்க்கிறான். தன்னால் ஏதோ ஒரு வகையில் அவள் வாழ்வின் மகிழ்ச்சி குலைத்துவிட்டதோ என்ற குற்ற உணர்வு கொள்கிறான். அவளுக்கு நெருக்கமாகிறான். தன் தற்போதைய கசப்பான வாழ்விலிருந்து வெளியேறி, பூலிங்கத்துடன் அவள் வந்து சேரும்போது நாவல் முடிகிறது.
நாவலுடைய பலம் அதனுடைய கதைக் கோர்வை, எதார்த்தத்தை விட்டு விலகாத சம்பவங்கள், நாவல் பயணிக்கும் புலம். பூலிங்கத்தின் அலைக்கழிப்பின் ஊடே விரியும் இந்தியாவின் வடபுலச்சித்திரம் வெறும் தகவல்களின் அடுக்கல்ல. நம் கண்முன் காட்சியாக விரியக் கூடியவையே. வழக்கமாக நாஞ்சில் நாடனின் கதைகளில் வெளிப்படும் ஆசிரியரின் குரல் இதிலும் வருகிறது என்றாலும் அவை விடுபட்டுத் தெரியவில்லை . வஞ்சம், சோகம், கோவம், பழி, இயலாமை, காமம், அன்பு, ஏக்கம் எனக் கூறுபோடும் எட்டு குணங்களில் அவதியுறும் பூலிங்கத்தின் குரலாகவே வருகின்றது.
அவரவர்களுக்கு அவரவர் கவலை, நம்மைத் தக்க வைத்துக்கொள்ளப் போடவேண்டியதிருக்கிறது 1000 நாடகங்கள். யோக்கியமாக இருந்தால் மட்டும் போதாது. நான் யோக்கியமாக இருக்கிறேன் எனக் காட்டிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற அபத்த நிதர்சனம். நாம் முந்த வேண்டும் இல்லையென்றால் எதிரி முந்தி விடுவான் என்ற சூழல் என அத்துணையும் பூலிங்கத்தின் மன மொழியாகவே நம்மை வந்தடைகிறது.
நாஞ்சில் நாடனின் எழுத்து ஆண்களுடைய உலகம் சார்ந்ததுதான் மறுக்கவில்லை. அதனுள் பெண்கள் இல்லாமல் எப்படி? முதலில் வரும் சுசீலா, அவளுக்கும் பூலிங்கத்திற்கும் தொடர்பு உண்டு. அவள் வயதில் மூத்தவள் திருமணமானவள். அவளே 1000 ரூபாய் கைப்பணம் கொடுத்து “எங்கயாவது போய் இரு” என்று பூலிங்கத்தை ஊரிலிருந்து அனுப்புகிறாள். பல வருடங்களுக்குப் பின் தான் கருவுற்றது பூலிங்கத்தால்தான் என்றும் உருகிச் சொல்கிறாள். பூலிங்கத்திற்கு ஊர் நினைவு வரும்போதெல்லாம் சுசீலா நினைவும் வந்து வாட்டுகிறது கூடவே அந்த குழந்தையின் நினைவும். ரெண்டாவது பெண் “கோமதி”. நாவலின் மிக அழுத்தமான பெண் பாத்திரமும் கூட கோமதிதான். கருமாயத்தில் அன்பும், காமமும் கசியக் கூடாதென்பது விதியா? இல்லையே! இருவருக்குமான உறவு உடல் வேட்கைக்காக நிகழ்வதல்ல! மலர்ந்த அன்பின் நீட்சியாகத்தான் நடந்தேறுகிறது. கணவனைப் பிரிந்து தன் மகளோடு வாழும் கோமதிக்கும், குடும்பத்தை விட்டு ஏங்கும் பூலிங்கத்திற்கும் அன்பு தாண்டிய முதல் கட்டத்தேவை என்ன வந்துவிடப் போகிறது. பூலிங்கம் கோமதியை தன்னோடேவே வந்து விடும்படி கேட்கிறான். உடைந்து மன்றாடுகிறான். பரதேசம் ஒன்றில் நிலையில்லாது ஓடிக்கிறங்கும் போது, உளச்சிக்களை ஒதுக்கி கொஞ்சம் இளைப்பாற, இணக்கமானதொரு தாய்மடி
கிடைத்தால் யாருக்குத் தான் ஆறுதல் அளிக்காது? அப்படிக் கிடைத்த ஆறுதல் காலத்தை நீட்டிக்க யாருக்குத்தான் மனம் அடித்துக் கொள்ளாது?
“புத்தி கெட்டுப் போயி பேசாத….. என் காலம் இப்பிடியே ஓடிரும். நீ வாழ வேண்டிய பையன் அந்த எண்ணத்தை எல்லாம் மாத்தீட்டு பொழைக்க வழியைப் பாரு. தூரா தொலைக்கு நடந்து போகச்சிலே இப்பிடியொரு மடத்திலே ரெண்டு நாள் தங்கிப்போன ஓர்மை மட்டும் இருந்தாப் போரும். மனசை அலையவிடப்புடாது” என்று பூலிங்கத்திற்கு கோமதி சொல்லும் பதில் நாவல் முடிந்த பின்னும் அவள் நினைவில் நம்மைச் சுழல வைக்கிறது. தன் வாழ்நாளில் ஒருமுறையேனும் கோமதியைப் பார்க்காத ஆண் நம்மில் எத்தனை பேர் பெரிதாக இருந்து விடப் போகிறார்கள்? “மேற்கில் வருணன், கிழக்கில் இந்திரன், வடக்கில் குபேரன், தெற்கில் எமதர்மன், தென் கிழக்கில் அக்னி, வடமேற்கில் வாயு, தென் மேற்கில் கணபதி, வடகிழக்கில் ஈசன்” என எட்டு திசைத் தெய்வமும் மதயானை உரு கொண்டு எதிர்த்தால் என்ன நேருமோ அதுவே பூலிங்கத்திற்கு நேர்கிறது. அந்த எதிர்ப்பின் ஊடே வாழ்வை நகர்த்த என்ன செய்ய வேண்டுமோ அதையே அவனும் செய்கிறான்.
“ஆழமும் நீளமும் அகலமும்
அளக்கக் காலம் வேண்டும்
அளந்த பின்பு ஓய்வாய் மண்ணில்
சாயவும் வேண்டும்”
என்ற நாஞ்சில் நாடனின் கவிதை வரிபோல பூலிங்கத்திற்கும் ஒரு நாள் ஓய்ந்து அமர ஒரு மண் வாய்க்கும். கொஞ்ச காலமெடுக்கும்.
நன்றி: http://kanali.in/ettuthikkum-madhayaanai-novel-review/

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி, பம்பாய் கதைகள் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to பூலிங்கம் தான் வாழ தனது நியாங்களுடன்

  1. வெங்கடாஜலபதி சொல்கிறார்:

    சிறப்பாக மிக சிறப்பாக விரிவான செரிவான சொல்லாடல் நன்றி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s